Search This Blog

Monday 17 February 2020

16.2.20 தஞ்சை இலக்கியக்கூடலி்ல் நடைப்பெற்ற சி.எம்.முத்துவின் படைப்புலகில், அவரின் “மிராசு“ நாவல் குறித்து.

சி.எம்.முத்துவின் மிராசு

ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் மீண்டும் பேசத்துாண்டுவது இலக்கியம் ஏன்? எதற்காக? என்பது குறித்துதான். அரங்குக்கு வெளியே தஞ்சை சுறுசுறுப்பாக மந்தமாக இளகுவாக எரிச்சலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இடைவிடாத பயணத்திலிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிகிறது. அலுவலகம் எதன்பொருட்டோ விடுமுறையிலும் இயங்குகிறது. இதிலெ்லாம் தற்சமயத்துக்கு அக்கறையின்றி எதன்பொருட்டோ நாம் இருபது பேராவது புறவுலகை விட்டு தனித்து இயங்க இங்கு கூடியிருக்கிறோம். இலக்கியக்கூட்டங்கள் குறித்து கேள்விப்படுபவர்கள் கூட  இது உப்புக்காகுமா..? புளிக்காகுமா..? என்று நம்மை நகர்த்தி விட்டு ஓடி மறைகிறார்கள். பிறகேன் இலக்கியம்? ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் நிகழ் வாழ்வுக்கும் மேலதிகமான விரிந்த வாழ்வை இங்கே வாழ முடிகிறது. அதனை மொழியின் வழியே புனைந்தளிக்கும் மயக்கம்தான் இலக்கியம். அதுதான் நம்மை கடத்திக் கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறது. இலக்கியம் புனைவு மட்டுமல்ல. அது கற்பனையை கொண்டு போடப்பட்ட அறிவுக்கான பாதை. இங்கு பலரின் அனுபவங்களை இலக்கியத்தின் வழி ஒருவரே அடைந்து விடலாம். நிகழ்ந்த வாழ்க்கையிலிருந்து நிகழவிருக்கும் வாழ்க்கைக்கு இலக்கியத்தில் ஏறி சென்று விடலாம். அதுதான் போதை. அதுதான் அதன் பாதை.அந்த பாதையில்தான் சி.எம்.முத்துவும் பயணிக்கிறார்.