Search This Blog

Sunday 30 June 2019

காஃப்காவின் நாய்க்குட்டி


தஞ்சை கூடல் இலக்கிய வட்டம் 29.6.2019 நடத்திய விழாவில்..

எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.
காய்தல்உவத்தலின்றி நிகழ்தருணங்களை கடந்து ஓரளவுக்கேனும் முழுமொத்த பார்வையோடு வாழ்வை அள்ளிக் கொண்டு விரிவாகும் இலக்கிய வகைமையை நாவல் என்று புரிந்துக் கொள்கிறேன். புதிதுபுதிதான வடிவ சாத்தியங்களை முயல்வதும் பிறிதொன்று அதை மிஞ்சுவதுமாக இருக்கும் இலக்கியச்சூழலில் நாவலை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்வதை தனிப்பட்ட வாசகரின் பொறுப்பாக கருதிக் கொள்ளலாம்.

Sunday 9 June 2019

படித்துறை

ஜுன் 2019 பதாகையில் வெளியான சிறுகதை


அது ஒரு படித்துறை. மண்டபத்தோடு கூடிய படித்துறை. அதில் படிகளும் மிகுந்திருந்தன. இத்தனை ஜபர்தஸ்துகள் இருந்தாலும் நதி என்னவோ நீரற்றுதான் இருந்தது. அவன் படியில் ஒரு காலும் நதியில் ஒருகாலுமாக கடைசி படிகளில் அமர்ந்திருந்தான். காற்று அளைந்தளைந்து நதியின் வடிவத்தை மணல் வரிகளாக மாற்றியிருந்தது. நீர் மிகுந்து ஓடும் காலம் என்ற ஒன்றிருந்தபோது நதி அத்தனை படிகளையும் கடந்து மண்டபத்தை எட்டிப் பார்த்து விடும்.  அமாவாசை, நீத்தோர் சடங்கு நேரங்களில் ஊற்று பறிக்கும்போது நீர் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் சமீபமாக இறந்தோரின் நல்லுாழ் என்ற சம்பிரதாயமாக மாறியிருந்தது. ஆனால் தர்ப்பணத்துக்கோ மற்றெதற்கோ, முன்னெச்சரிக்கையாக குடத்தில் நீரை எடுத்து வந்து விடுகின்றனர், நல்லோர் என்று கருதப்படுவோரின் உறவினர் உட்பட.


”டப டப டபன்ன இத்தனை படி எறங்கி வர்றதுக்காது ஆத்துல கொஞ்சம் தண்ணி இருந்திருக்கலாம்..” என்றாள் அவள். பேச்சொலி கேட்டு திரும்பியவன் அவளை கண்டதும் “வாங்க..“ என்றான்.

Wednesday 5 June 2019

தேர்தல் 2019


கடினமான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அதனை அடிப்படையிலிருந்தே அணுகுவதன் வழியாக கட்சியை பலப்படுத்துவதும், எதிரணியை தோற்கடிக்க செய்யும் உள்ளடி வேலைகளை மேற்கொள்ளுவதும், தமக்கு எதிராக வலுவான கூட்டணி அமையவிடாமல் பார்த்துக் கொள்வதுமான தெளிவான உத்திகளை கையாண்டு, இன்று பிரம்மாண்டமான அறுவடையை பாரதிய ஜனதா கட்சி அள்ளியெடுத்திருக்கிறது. இவையேதுகளிலும் அக்கறை செலுத்தாமலிருந்ததே காங்கிரஸின் பலமின்மைக்கு காரணமாக வைக்கலாம். புரையோடிபோன விஷயங்களை அது தொடுவதேயில்லை. மாபெரும் தேசத்தின் தேர்தல் அரசியலை அது மேம்போக்கான விஷயமாகவே, எதிர்க் கொண்டது போல தோன்றுகிறது. எதிர்கருத்தாளர்களை மாநிலம்தோறும் இணைக்கத் தவறியதும், ராகுலின் மீதிருந்த “பப்பு“ இமேஜை அவரே மாற்ற இயலாததுபோல நடந்துக் கொண்டதும், கட்சியின் மீதான நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியிருக்கலாம்.  தமிழக அளவில் பலம் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் இடதுசாரிகள் பலமிழந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிகள் அதிஅவசரமாக அவசியப்படுகிறார்கள். ஏனெனில் முதலாளித்துவம் எளிய மக்களுக்கானதல்ல. அதன் இறுதி என்பது உயிர்ப்பின் கடைசித்துளி வரை உறிஞ்சிக் கொள்வதே.  அதை கருத்திற்கொண்டு இடதுசாரிகள் காலத்திற்கேற்ப நெகிழ்வுகளோடு களமாடுவதே சிறப்பு.

தமிழகத்தை பொறுத்தவரை முக்கியமான இரண்டு தலைக்கட்டுகள் இல்லாத முதல் களம் இது. ஸ்டாலின் இறங்கி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் மட்டுமே பெற்றிருந்த திமுக, தேர்தல்களுக்கான இடைவெளியில் மக்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதில் காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கியமானது. ஸ்டாலின், முடிந்தவரை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசுகிறார். கருத்தியலின் அடிப்படையில், பிற கட்சியினருடனான அவரின் அணுகுமுறை தமிழக அரசியல் சூழலில் நல்லதொரு முன்னெடுப்பு. கலைஞரின் மகன் என்று இயல்பாகவே அமைந்த நல்வாய்ப்பை, தெளிவாக மீட்டெடுத்துக் கொண்டதற்கு, அவரை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. மத்திய மாநில எதிரி(ஆளும்) கட்சிகளின் மீதான வெறுப்பும் இங்கு ஓட்டுகளாக மாறியுள்ளன. சமான்யமான, ஓரளவு அரசியல் அறிவுக் கொண்டவர், தமிழக தேர்தல் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ அதுவாகவே முடிவுகளும் வந்துள்ளது ஆச்சர்யமான ஒற்றுமை. அதேநேரம், எதையும் யாரும் வெற்றிக்களிப்புடனோ அல்லது தோல்வி மனப்பான்மையுடனோ அணுகிவிட முடியாதளவுக்கு முடிவுகள் ஒருவித அமைதியை கடத்துவதும் உண்மை.


கணையாழி ஜுன் 2019ல் வெளியானது.