Search This Blog

Wednesday 6 December 2017

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது - என்னுரை


இந்த நுாலுக்கான முன்னுரையை எழுதத் தொடங்கும்போதே, இலக்கியம் ஏன்..? அதற்கும் எனக்குமான புரிதல் என்ன..? என்ற சுய அலசலுக்குள் மனம் செல்கிறது. ஏன் எழுதுகிறேன்..?
ஏன்.. எதற்காக..? என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். உயர்கல்விக்கு பிறகு  பணிப்புரிவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வு.. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

Thursday 30 November 2017

மலைக்கோட்டை மாவட்ட இலக்கியம்

கணையாழி டிசம்பர் 2017 இதழில்..

மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, நாகரிகமும் உருவாகிறது. அறத்திற்கான விழுமியங்கள் நாகரிக வாழ்வை கட்டமைக்கிறது. இவ்விழுமியங்களை உருவாக்குவது இலக்கியம் எனலாம்.. இச்சைகளுக்கும் அறத்துக்குமான போராட்டத்தை வாழ்க்கை எனலாம். அதேசமயம் விழுமியங்கள் பண்பாட்டு சிக்கலுக்குள் அடைப்பட்டு போகும்போது இலக்கியம் அதன் கட்டற்ற தன்மைக்குள் ஒழுங்கமையாது போய் விடும் அபாயமும் உண்டு.

சிறுகதைத் தொகுப்புகள்


“வலி“ சிறுகதைத் தொகுப்பு
காவ்யா பதிப்பகம் 2014

இரவு சிறுகதைத் தொகுப்பு
NCBH PUBLICATION
2016
வாசகசாலை பதிப்பகம்
23.12.2017

தொகுப்புகளில் வெளியான பரிசுப் பெற்ற கதைகள்


வானதி விருது 2017 பெற்ற சிறுகதைகள் தொகுப்பு
இவள பிடிக்கல.. என்ற எனது கதையின் பெயரில்



சென்னையர் கதைகளில் பரிசுக் கதையாக..
கிழக்கு பதிப்பகம் 2017

வே.சபாநாயகர் நினைவு சிறுகதைப் போட்டியில்
வென்ற கதைத் தொகுப்பில்..
2017

இலக்கிய சிந்தனை 2016 கதைத்தொகுப்பில்..
வானதி பதிப்பகம் 2016


உலகத்தமிழ் பண்பாட்டு மையத்தின்
“தஞ்சை வட்டாரப் படைப்பிலக்கியத்தில்“
2016

ஆழம் என்ற எனது கதையின் பெயரில் அமைந்த தொகுப்பாக..
பாரதி செல்லம்மா பதிப்பகம் 2016


விவசாயக் கையேடு
2015


சிறுகதை திறனாய்வில் என் கதையும்..
வசந்தா பதிப்பகம் 2015







Tuesday 28 November 2017

“ஆழத்தின் “அறம்“

குறி நவம்பர் 2017ல் வெளியானது.

ஆழம் என்றொரு சிறுகதை. 2016ல் எழுதினேன். மூடப்படாத ஆழ்த்துளை கிணற்றையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பிணைப்பாக்கி எழுதிய கதை. கணையாழி இதழில் சிறந்த குறுநாவல் வரிசையில் ஜுன் 2016ல் இக்கதை வெளியானது. பின்னர் அது எனது “இரவு“ என்ற சிறுகதை தொகுப்பில் (2016 என்சிபிஹெச் வெளியீடு) இடம் பெற்றது. இந்த தொகுப்பு பரவலான கவனத்தையும் மூன்று விருதுகளையும் பெற்ற தொகுப்பு.  மேலும் இக்கதை இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக தொகுக்கப்பட்டு கடந்த 2017 ஏப்ரலில் வெளியானது. மேலும் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பாக்கி வெளியிடப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஆழம்  என்ற இச்சிறுகதை இடம் பெற்றதோடு இத்தொகுப்பின் பெயரும் ‘ஆழம்’தான். என் சிறுகதையின் பெயரையே தலைப்பாக்கி, கடந்த 2016ல் இத்தொகுப்பு வெளியானது.

அறம் என்ற திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் அதன் கதைக் குறித்து  நிறைய நண்பர்கள் அலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். இது உங்களின் ஆழம் கதையை ஒத்து அமைந்துள்ளது என்றனர். எனக்கும் அவ்வாறே தோன்றியது. மேற்கண்ட “ஆழம்“ கதைகளின் வெளியீடுகளை விவரித்து, எனது “பிளாக்“ல் பதிவிட்டிருந்த அக்கதையின் இணைப்பையும் சுட்டி, என் முகநுால் பக்கத்தில் என் ஆதங்கத்தைப் பகிர்ந்திருந்தேன்.

Thursday 23 November 2017

வானதி நாவல்ஸ் விருது விழா 2 12 2017



சாகித்யஅகாடமி புத்தக வாரவிழாவில்.. 20.11.2017






“இரவு“ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து வாசகசாலை அமைப்பின் கதையாடல்.. 11.11.2017


“அற்றைத்திங்கள்“ தமுஎகச விமர்சனக் கூட்ட நிகழ்வில் 21.10.2017



போடி மாலன் சிறுகதைப் போட்டி நிகழ்வில் 15.10.2017

இயக்குநர் சசி, ச.தமிழ்ச்செல்வன், காமுத்துரை, தேனிசீருடையான், உமர்ஃபரூக், சிவக்குமார் முத்தைய்யா, கலை இலக்கியா மற்றும் தோழர்களுடன்..

அற்றைத் திங்கள் வெளியீடு 30.07.2017




ஓசை

போடிமாலன் சிறுகதைப் போட்டி 2017ல் பரிசு பெற்றக்கதை
நவம்பர் 2017ல் செம்மலரில் வெளியானது.


குத்த வைத்த கால்களை கைகளால் கட்டிக் கொண்டு அதில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தேன். என் கணவன் மிகுந்த பலசாலி என்று உணர்ந்த தருணம் ஒன்றிலும் இவ்விதமாகதான் அமர்ந்திருந்தேன். அமர்ந்தவாக்கில் அவர் என்னை அப்படியே உயரே துாக்கி ஏந்த.. நான் விழுந்து விடும் பயத்தில் கால்களை உதற முயல.. ம்ஹும்.. அவரின் பிடியிலிருந்து என்னால் விலக இயலவில்லை. உயரே.. உயரே.. துாக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று விட்டார். என் பயமெல்லாம். விலகியோட.. சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த நாட்கள் அவை.

Tuesday 3 October 2017

“புனிதம்“ நாவலுக்கான “என்னுரையிலிருந்து..“

இலக்கியம், சமுதாயத்திலிருந்து தன்னை வேறாக நிறுத்தி அறங்களை அலசுகிறது. ஆழ்மன அடுக்குகளை துழாவியெடுத்து கூறுகளாக்கி அடையாளப்படுத்துகிறது அல்லது நம்மை நம்மிடமே அறிமுகப்படுத்துகிறது. சிறுகதை.. கவிதை.. நாவல்.. என எவ்வடிவிலோ சமுதாயத்தின் போக்கினை சுவாரஸ்யமான ஆவணமாக்குகின்றது. வலியோ.. வாழ்வோ நிதர்சனத்தை பேசும் போது அது அறமுமாகிறது.

“இரவு“ சிறுகதைத் தொகுப்பிற்கு “என்னுரை“


சிறுகதைகள் எதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டு விரிகின்றன. விரிதலின் கோணம் அருகி ஒரு அரிய தருணத்தில் சட்டென்று அப்புள்ளியிலிருந்து விலகி விடுகின்றன. பிறகு அதனை ஏந்திக் கொள்வது வாசக மனம்தான்.

மனிதர்களுள் உலாவும் கதைகள் தான் எத்தனை விதமானவை..? புரியவியலாத போக்குடைய மனம் என்ற எண்ணங்களின் தோன்றலை யாராலுமே கணிக்க முடிவதில்லை. அதன் வடிவும், போக்கும் எந்த நீட்சிக்குள் அடக்கவியலாதது. அகத்தின் ஆழமானது பல விசித்திரமான நிலைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

Friday 22 September 2017

நாவல்கள்


யாவரும் பதிப்பகம் 2017
எழுத்துப் பதிப்பகம் 2016
NCBH பதிப்பகம் 2015

Thursday 21 September 2017

புகார்

குறி சிற்றிதழ் ஜுலை - செப்டம்பர் 2017ல் வெளியான சிறுகதை

‘மணமேடு’.. பேருந்தின் விரைவோடு தேசிய நெடுஞ்சாலையின் பெயர் பலகையில் கண்ணில் அகப்பட்டு நழுவியோடியது ஊர்.. மணமேடு.. “அட..இங்கதான் இருக்கா இந்த ஊரு..”  எஸ். கதிரேசன்.. B/o பூங்கோதை, பிரதான வீதி.. மணமேடு அஞ்சல்.. மணமேடு.. இந்த முகவரி எனக்கு மனப்பாடம். ஒன்றா இரண்டா எத்தனை புகார் மனுக்கள் அந்த முகவரியிலிருந்து..? எல்லாமே பதிவஞ்சலில். புகார் மனுவுக்கு பதில் எழுத வேண்டியது என் இருக்கைக்கான பணி. பொதுவாக பதில்கள் “நடவடிக்கை எடுக்கப்படும்… சம்பந்தப்பட்டவரிடம் பதில் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..“ என்பது மாதிரியான டெம்ப்ளேட் வகையறாதான்.  ஆனால் கதிரேசன் விடாக்கண்டர். அந்த பதிலிலிருந்து கூட எதாவது கேள்வியை கண்டுப்பிடித்து விடுவார்.



திரும்பி போகும்போது அந்த பெட்டிஷன் பார்ட்டியை’ ஒரு எட்டு பார்த்து விட்டு போகலாமா என்று திடீரென தோன்றியது. இது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம்தான். என் இருக்கைக்கே தேடி வருபவர்களை கூட நான் உபசரிப்பதெல்லாம் கிடையாது. “தபால் அனுப்பியிருக்கேன்.. பாத்துக்கங்க..“ என்று எதையாவது வெட்டி விட்டு பேசி விடுவேன். கதிரேசனின் புகார் கொஞ்சம் வித்யாசமாக இருக்க போக இந்த ஆர்வம் எழுந்திருக்கலாம். பூங்கோதை என்றொரு தங்கை அவருக்கு. போர்முனையில் புகைப்படம் எடுத்தாராம். அவரை யாரோ நாசப்படுத்தி கொன்று விட்டார்களாம். புகைப்படங்களும் கையாடலாகி விட்டனவாம். அதற்கான நியாயம் வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம்.

Friday 15 September 2017

அற்றைத்திங்கள் குறித்து தஞ்சை ஹரணி..

என்றைக்குமான தொடரும் வலிகளைப் பிரசவிக்கும் அற்றைத் திங்கள்

             எழுத்தாளர் கலைச்செல்வி அவர்களை எனக்கு அவரின் படைப்புகளின் வழியாகவே அறிமுகம். குறிப்பாகப் பெரியாயி என்கிற கதையொன்றின் அதீத ஈர்ப்பின் காரணமாக அவரது எழுத்துகளின்மேல் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஒன்றின் விளைவாகவே வாசிக்கத் தொடங்கினேன். அவரின் கணையாழி சிறுகதையொன்று குறித்த விமர்சனத்தை  எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் தஞ்சைக் கூடலில் வாசித்தேன். அலங்காரம் எனும் அக்கதை சீதையின் வனவாசம் பற்றிய வேறு பரிமாணத்தைத் தருவதாகும். அதன்வழியாகவே அவரின் மூன்று படைப்புகள் என்னை வந்து சேர்ந்தன. இரவு எனும் சிறுகதைத்தொகுப்பு மற்றும் அவரின் இரண்டாவது, மூன்றாவது நாவல்கள் புனிதம் மற்றும் அற்றைத்திங்கள்.

Thursday 14 September 2017

எங்க ஊர்ல..



ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ”நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ்பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்..“ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சின்தடிக் புடவையும் அதனுடன் இணைந்த சின்தடிக் ரவிக்கையும் அணிந்துக் கொண்டனர். பெரிய பெரிய பூக்களை கொண்ட புடவைகள் புகைப்படத்தில் திருத்தமாக பதிவாகும் என்பதில் நிறைய நம்பிக்கையிருந்தது அவர்களுக்கு. சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரம் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில்லை. குட்டியும் குளுவாணிகளுமாக சந்தடியாக கிடந்தது அந்த வேம்படி.

Tuesday 12 September 2017

நேர்காணல் ஒன்றில்..


      பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தாங்கள் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு நாவல் சிறுகதைகள் எழுதி வருகின்றீர்கள். தாங்கள் எழுத தொடங்கியது எப்போது? முதல் படைப்பு சிறுகதையா.. நாவலா..?

பொதுப்பணித்துறை பணி என்பது எனது படிப்பிற்கான பணி. இலக்கியமோ எனக்கு வாழ்விற்கான ஆதாரம் என்று தோன்றுகிறது. சிறு வயது முதற்கொண்டு வாசிப்பில் ஆர்வம் உண்டு. என் தந்தையார் வழி வந்த ஆர்வம். அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அத்தருணத்தில் எனக்கு அறிமுகமானவைகள் அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி போன்றன. ஆனாலும் நுாலகங்கள் மூலமாக நுால் வாசிப்பு தீவிரப்பட்டது. திருமணம், அரசுப்பணி, குழந்தைகள் என்ற சூழலுக்குள் அல்லது சுழலுக்குள் சிக்கி மீண்ட போது காலம் பத்து வருடங்களை நகர்த்தியிருந்தது. மீண்டும் வாசிப்பு. இம்முறை வாசிப்பு பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்தது. சிற்றிதழ்கள் நிறைய வாசிக்கத் தொடங்கினேன். அதன் மூலமாக அயல் நாட்டு இலக்கியங்கள் அறிமுகமாயின.

தொடர்ந்த வாசிப்பும் ஏகாந்தமான தனிமை உணர்வும் என்னை எழுத்துக்குள் செலுத்தியது எனலாம். கதை எழுதும் நோக்கமென்று இல்லாமல் ஒருமுறை கணினியில் நான் அனுபவித்த.. கேள்விப்பட்ட.. விஷயங்களை கோர்வையாக்கி எழுதினேன். அது தானாகவே கதை போன்று வடிவெடுத்திருந்தது. ஒரு பெண்ணின் காத்திருப்பு அது. அல்லது சமுதாயம் பெண்ணின் மீது திணித்துள்ள பொதி எனவும் கொள்ளலாம். வைதேகி காத்திருந்தாள் என்று பெயரிட்டேன். அப்போது தினமணியில் சிறுகதை போட்டி அறிவிப்பு வந்திருந்தது. நடந்த ஆண்டு 2012. நெய்வேலி புத்தகக்கண்காட்சியும் தினமணி நாளிதழும் இணைந்து நடத்தும் போட்டி அது. இக்கதையை அந்த போட்டிக்கு அனுப்பி வைத்தேன். இரண்டாவது பரிசு கிடைத்தது. என் முதல் கதையே பரிசு பெற்றது ஒரு நிறைவு என்றால் பரிசு பெறும் நிகழ்வு என் பிறந்த ஊரான நெய்வேலியில் நடைப்பெற்றது மற்றுமொரு நிறைவு.

Saturday 9 September 2017

எதற்காக எழுதுகிறேன்..

பதாகை இணையஇதழில் ஜுன் 2016 வெளியான கட்டுரை..

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

பெண் எனப்படுபவள் யாரெனில்..

பேசும்புதியசக்தி மார்ச் 2017ல் வெளியானக் கட்டுரை

சமீபகாலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம் எங்கள் அலுவலகத்திலும் கொண்டாடப்படுகிறது.. அதே விமரிசையோடு.. அதன் அத்தனை அசட்டுத்தனங்களோடும் கூட.. அன்றைய நாள் முழுக்கவும் கும்மாளமும் குதுாகலமும்தான். ஆண்களுக்கு அங்கு முற்றுமுழுக்க தடா. ஒரே விதமான ஆடை.. (பெண்கள் தினம் செவ்வாய்.. வெள்ளி கிழமைகளில் வந்து விட்டால்.. ‘செவ்வா..வெள்ளி உடுத்தற புடவைல கொஞ்சமாச்சும் சரிகை இருக்கணும்..’)அணிகலன்கள்.. உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மதிய உணவு.. போதாக்குறைக்கு போட்டிகள்.. பேட்டிகள் என்றெல்லாம் களைக்கட்டும். உயர் பெண் அலுவலர்கள் தாங்கள் இந்நிலையை அடைவதற்கு காரணமாக இருந்த தகப்பனைக்கும் இன்று குழந்தை பராமரிப்பு.. குடும்ப பராமரிப்பில் அனுசரிப்பாக இருக்கும் கணவனுக்கும் கண்ணோரம் நீர் கோர்க்க தழுதழுப்பான குரலில் நன்றி தெரிவிப்பார்கள். இந்நேரத்தில் பிரச்சனைக்குரிய அலுவலக கோப்புகளை நீட்டினால் உடன் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. யாரும் இதுவரை முயன்றதாக தெரியவில்லை. சென்ற ஆண்டும் கோலப்போட்டி.. பாட்டுப் போட்டி.. நடனம் என களைக் கட்டியது எங்கள் மினி அரங்கம். அதில் ஒப்பனை போட்டி என்றொரு போட்டி.. அதுதான் பெண்மையின் அதிஉச்சம் என சொல்லலாம். இதில் கலந்துக் கொண்ட பெண் அலுவலர்களுக்கு தனித்தனியே ஒப்பனைப் பெட்டி கொடுக்கப்பட, ஒப்பனை செய்து கொள்ள பெண் அலுவலர்கள் உற்சாகமாக முன் வந்தனர். அரை மணி அனுமதிக்கப்படும் அதற்குள் முகம் மற்றும் தலை அலங்காரம் செய்து விடுவதுதான் போட்டி. கோலப்போட்டியின் கலர் பொடிகள் ரங்கோலியாக  முகத்தில் படிந்ததை மேக்கப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று ஜட்ஜம்மா சொன்னது தனிக்கதை. மருந்துக்கும் இலக்கியம்.. வாசிப்பு என்ற தளங்களுக்கு யாரும் நகரவில்லை என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை கொண்டாட்ட மனப்போக்குக்குள் சிந்தனையான விஷயங்களை அனுமதிக்க வேண்டாம் என்று நேர்மறையாகயும் எண்ணிக் கொள்ளலாம்.

Wednesday 6 September 2017

கட்டுக்கழுத்தியம்மா

உயிரெழுத்து செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.



பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கியிருந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனிதனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னையில் கொட்டிய போது அவர் வாய் தாமாகவே முணுமுணுத்துக் கொண்டது.
ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ
ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ
ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ

Tuesday 29 August 2017

அம்சம் பாட்டி

காக்கை சிறகினிலே செப்டம்பர் 2017 இதழில் வெளியான சிறுகதை




”கட்டிலெல்லாம் சொகுசுதான்.. என்னவோ பேர் சொன்னாளே.. இந்த மெத்தைக்கு.. கலாவோ என்னவோ… எங்க சுத்துனாலும் அவ பேர்லதான் நிக்குது.. ஒங்க தாத்தன் நல்ல நெறக்க கலையரசின்னு கூப்டுவாரு.. நா கலரசிம்பேன்..” வாய் நிற்காமல் பேசும் அம்சம் பாட்டிக்கு.

”பாட்டி அது கலால்ல.. கர்லான் மெத்தை..” கலாவின் பேரப்பிள்ளை திருத்தி சொல்லிக் கொடுத்தாலும் அம்சத்துக்கு அது கலாதான். 

”எதோ ஒண்ணுடீ குட்டீ..” கண்களை இடுக்கி முகத்தின் வரிகளுக்கிடையே சிரிப்பாள் அம்சம்பாட்டி. இளமை மீதமிருந்த நாற்பதுகளின் தொடக்கத்தில் பாட்டியான போது கொஞ்சம் நெருடலாகதான் இருந்தது அம்சத்துக்கு. பிறகு ஆணில் இரண்டும் பெண்ணில் இரண்டுமான கலையரசியின் வாரிசுகள் அவளை சூழ்ந்துக் கொள்ள மதிமயங்கிதான் போனாள்.

Tuesday 22 August 2017

வீடு

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டி 2017ல் 3வது பரிசுப் பெற்றக் சிறுகதை


நாளை எல்லோரும் ஒன்று கூடுவதாக பேச்சு. ஞாயிறு அல்லவா. வனமாலாவுக்கு ஞாயிறும் ஒன்றுதான் திங்களும் ஒன்றுதான். மாலைக்கு மேல்தான் நாஷ்டா கடை மளமளப்பாக நகரும். நாஷ்டா கடையே  நகரும் கடைதான். தட்டு வண்டி டிபன் கடை.. முன்பெல்லாம் இட்லிக்கான அரிசி.. உளுந்தை கடையில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொள்வாள். வீட்டுக்கு பக்கத்திலேயே அரவை இருந்தது. அதற்கெல்லாம் இங்கு வசதியில்லை. இட்லி மாவாக வாங்கிக் கொள்ள வேண்டும்.  எல்லாவற்றையும் விட்டு விட்டு நாளை மீட்டிங் செல்ல வேண்டும். அப்போதுதான் துாங்கி எழுவதற்காவது ஒரு வீடு கிடைக்கலாம்.

சென்னை தினம் - கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்

வெற்றி பெற்ற சிறுகதைகள்:

எம்டன் செல்வரத்தினம், ஸ்ரீதர் நாராயணன் - முதல் பரிசு - 7.500 ரூ
காம தகனம், செம்பூர் ஜெயராஜ் - இரண்டாம் பரிசு - 3.000 ரூ
வீடு, கலைச்செல்வி - மூன்றாம் பரிசு - 1,500 ரூ

ரூ 750 பரிசு பெறும் கதைகள்:

பிட்டு, அபுல்கலாம் ஆசாத்
உப்பு அரசியல், தம்பி கூர்மதியன்
பாலாவிற்காக..., அரவிந்த் சச்சிதானந்தம்
வெள்ளம், டேவி. சாம் ஆசீர்
காட்டுக்கு வெளியே ஒரு வீடு, ஏ.ஏ. ஹெச். கே. கோரி
மெர்லின் மரினா, முகுந்த் நாகராஜன்
ஓட்டம், வல்லபா ஶ்ரீநிவாசன்
முகம், எஸ்.எஸ்.ராகேஷ் குமார்
மட்ராஸ், ஏ.சந்திர சேகர்
அசுவத்தாமா, ந.பானுமதி
கற்பாந்தம், பாஸ்டன் பாலா
அடைக்கும் தாழ், பார்கவி சந்திரசேகரன்
மார்ஷல் ரோடு, தங்க.ஜெய்சக்திவேல்


Monday 21 August 2017

தளம் ஆகஸ்ட் 2017ல் வெளியான “இவள பிடிக்கல..“ கதைக்கு தோழர் கண்மணிராசாவின் விமர்சனம்

தளம் இதழ் எண் 17&18 ல் வந்துள்ள கலைச்செல்வியின் 
"இவள பிடிக்கல..." சிறுகதை வெகுசிறப்பாக வந்துள்ளது.இக்கதையை நிச்சயமாக ஒரு ஆணினால் எழுதமுடியாது.வாடகைத் தாயாக இருக்கநேர்ந்த ஒரு ஏழைப்பெண்ணின் மனம் படும்பாட்டை வலியோடு பதிவுசெய்யும் கதை.ஆனால்....அப்பெண்ணின் கணவன் வார்த்தைகளிலயே இத்துயரத்தை பதிவிட்டுள்ளார்.குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு பத்துமாதம் கழித்து வந்தவளிடம் இவளின் வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஒட்டாமல் அந்நியமாய் பார்க்கின்றன.இந்த வேதனையோடு பெற்றவுடன் தூக்கிக்கொடுத்துவிட்டு வந்த பிஞ்சின் நினைவும் மனதில் பாரமேற்ற தனககுள்ளே அழுது மருகுகிறாள்.கணவனுக்கோ வேறுவேறான சந்தேகங்கள்.....எல்லாவற்றையும் நுட்பமாக கணவனின் வாயினாலேயே கதையாட வைத்துள்ளார்...
நாம் புரிந்துகொள்ளமுடியாத பெண்மனதை தன் கதைகளின் பதிவுசெய்வதில் கனலச்செல்வி வாகைசூடுகிறார்.
வாழ்த்துக்கள் தோழர்.

கல்கி 27.08.2017ல் “அற்றைத்திங்கள்“ நாவல் குறித்து வெளியான விமர்சனம்


அற்றைத் திங்கள் - நாவல் அறிமுகக் கூட்டம், இக்சா மையம், சென்னை, நாள் 19.08.2017


Wednesday 16 August 2017

கீர்த்தியின் அப்பா

அகநாழிகை ஆகஸ்ட் 2017ல் வெளியான சிறுகதை


அத்தனை சுலபமாக தனக்கு குணமாகி விடும் என்று தோன்றவில்லை அவருக்கு. பாவம் வேலைக்கு செல்லும் மகளின் பாடுதான் திண்டாட்டமாக போய் விட்டது. சதா நச்சரிப்பு இருந்துக் கொண்டே இருக்கும் வேலை அவளுக்கு. வீட்டிற்கு வந்தோம்.. நிம்மதியாக வேறு வேலைகளில் ஈடுபடுவோம் என்றிருக்க முடிவதில்லை. ஒன்றுமில்லாத விஷயத்தை இவள்தான் பெரிதுப்படுத்திக் கொள்கிறாளோ என்று தோன்றியதுண்டு. மனைவி உயிருடன் இருக்கும் வரை அவளிடம் இதை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவர் சொல்வதற்காக ஆமோதிப்பது போல தலையாட்டுவாள் மனைவி. வேறொரு பக்கம் போய் முணுமுணுத்திருக்கலாம். ஒருமுறை ஓயாமல் அடித்த மகளின் கைபேசியை இவர் எடுக்க போக “நேரமாச்சுன்னா பொறுப்பில்லாம அப்டியே ஓடிடுவீங்களா..? பொம்பளங்கன்னா எப்பவும் சலுகைதான்.. அதை வேலையில காட்டணும்..” கோபமாக யாரோ பேசினார்கள். இப்படியான இரண்டொரு சந்தர்ப்பங்களை இப்போதுதான் நினைக்க தோன்றுகிறது.

Saturday 12 August 2017

இவள பிடிக்கல..

ஆகஸ்ட் 2017 தளம் இதழில் வெளியான சிறுகதை



திரும்பி வந்ததுலேர்ந்தே எம் பொண்டாட்டீ சரியா இல்ல.. போறதுக்கு மின்னாடி நாஸ்டா கடையில பெருக்கி துடைக்கிற வேலை பாத்துச்சு.... சரி.. போயாச்சு.. வந்தாச்சு.. பழையப்படி வேலைக்கு போவ வேண்டியதுதானே... இன்னிக்கு போறேன்.. நாளைக்கு போறேன்னு தாக்காட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தங்கிறேன்... தெனக்கூலிக்காரங்களுக்கு வேலைக்கு போனதான காசு.. மணி ஒம்போதாச்சு.. இன்னிக்கும் போறாப்பல தெரில.... இந்த லட்சணத்துல இவளுக்கு வீட்டு வேலைக்கு பண்ணயம் அடிக்குணுமாம் நானு.. போடீ மசிறு.. நீயாச்சு.. ஒன் தண்ணீயுமாச்சுன்னு கொடத்த துாக்கி கெடாசீட்டு போலாம்னுதான் தோணுது.. ஆனா நா அப்படிப்பட்டவன் கெடையாது.. வந்த கோவத்தை அடக்கிக்கிட்டேன்.
”எப்பா.. புத்தவ பையி கிளிஞ்சு போச்சுன்னு சொல்றேன்ல..” என் பெரிய பொட்டை.. எட்டு வயசிருக்கும்னு நெனக்கேன்.. அதிகாரம் துாள் பறக்கும்.. அதும் அவங்கம்மா நடுவுல காணலேங்கவும் எங்கிட்ட ரொம்ப எடுப்பாதான் அலையுது.. என்ன பண்றது.. பெத்த புள்ளையாச்சே.. அதட்டி ஒரு வார்த்தை பேசுனமுன்னா கண்ணு கலங்கீடுது..
”ஒங்கம்மாட்ட கேளு போ..” ன்னு வெரட்டுனேன்.

Thursday 10 August 2017

அற்றைத்திங்கள் விமர்சனக்கூட்டம்

யாவரும் நிகழ்வு - 45
தலைமை : கே.என்.சிவராமன்
வாழ்த்துரை :
சீராளன் ஜெயந்தன் 
பாக்கியம் சங்கர்
கணபதி சுப்ரமணியன்
நூல் குறித்துப் பேசுபவர்கள்
கனவு ராட்டினம் குறித்து – கிருஷ்ணமூர்த்தி
அற்றைத் திங்கள் குறித்து – நாச்சியாள் சுகந்தி
வெட்டாட்டம் குறித்து கவிதைக்காரன் இளங்கோ
ஏற்புரை:
ஷான், மாதவன் & கலைச்செல்வி
தொகுப்பு : வேல்கண்ணன்
ஒருங்கிணைப்பு : யாவரும்.காம்
நாள் 19/08/2017 ; நேரம் : 05.30 மணி
இடம் : இக்சா மையம் சென்னை

அகநாழிகை ஆகஸ்ட் 2017

அகநாழிகை (ஆகஸ்ட் 2017)
சிறுகதைகள்
-------------------
1. கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
2. மாயம் - ஜீ.முருகன்
3. துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ் ராஜ்
4. கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
5. தற்செயலாய்ப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன். வாசுதேவன்
6. மிக ரகசிய இயக்கம் - தர்மு பிரசாத்
கட்டுரைகள்
------------------
1. விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப் பழக்குதல் - இளங்கோ
2. இரண்டு கவிகள் இரண்டு விதம் - லஷ்மி மணிவண்ணன்
3. உண்மையும் மகத்தான உண்மையும் - ஜீவ கரிகாலன்
4. காற்று வழி மனிதர்களும் கரையும் மனங்களும் - பி.என்.எஸ்.பாண்டியன் (அப்பணசாமி எழுதிய ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ நாவலை முன்வைத்து)
5. ரகசியங்களோடு வாழ்ந்து மறைந்தவர்கள் - சிவானந்தம் நீலகண்டன் (சீ.முத்துசாமி எழுதிய ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து)
6. கவனத்தை ஈர்க்கும் நுண்வரலாற்று ஆவணம் - துலாஞ்சன் விவேகானந்தன் (க.சபாரெத்தினம், சோ.பிரசாத் எழுதிய ‘ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
7. வாசிப்புக்குச் சவாலான பிரதி - தேவகாந்தன் (சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘விடம்பனம்’ நாவலை முன்வைத்து)
கவிதைகள்
-----------------
சஹானா
சாந்தி மாரியப்பன்
சுபா செந்தில்குமார்
பாம்பாட்டிச் சித்தன்
கடங்கநேரியான்
நேர்காணல்
-----------------
“உலகம் சுருங்கிக்கொண்டு வருகிறது; நாம் பிரிந்து போய்க்கிடக்கிறோம்”
- சித்துராஜ் பொன்ராஜ்
சந்திப்பு: பொன். வாசுதேவன்
அஞ்சலி
------------
அணில் அகன்ற முன்றில் ‘ம.அரங்கநாதன்’
- அஜயன் பாலா
**
விலை: ரூ.120
இதழைப் பெற:
99945 41010 | 70101 34189 | aganazhigai@gmail.com

Monday 7 August 2017

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

   என் செல்வராஜ்



இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி?மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறதுஇது இலக்கிய சிந்தனை அமைப்பின் 47 ஆவது ஆண்டு .இந்த பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும் 2017ஏப்ரல் 14 ல் சென்னையில் நடந்தது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படிமற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படிஎன்ற கதையை தேர்ந்தெடுத்தவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.அவரின் பன்னிரண்டு கதைகளைப்பற்றிய மதிப்புரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகள்

   1. நாலு ஜனம் - ஜி விஜய பத்மா -   ( கல்கி)

   2. புரிதல் - லலிதா ராம்         ( குமுதம் தீராநதி)

   3. ஆழம் - கலைச்செல்வி     ( கணையாழி )