Search This Blog

Tuesday 28 February 2023

ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாவல் குறித்து

இலக்கிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் விமர்சனக் கட்டுரை



மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே......

கலைச்செல்வி திருச்சியில் அரசுப் பணியில் இருப்பவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் வெளியாகியுள்ளன. வேறொரு நாவலுக்குக் காந்தி குறித்த தகவல்கள் சேகரித்தபோது, ,காந்தி இவரை சிக்கென பற்றிக்கொண்டதால் உருவான முழுநாவல் இது.

kristin Hannahவின் Masterpiece ஆன Nightingaleக்கும் இந்த நாவலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே, வேறு நூலுக்கான ஆராய்ச்சியின் போது கிடைக்கும் தகவல்கள், புதிய நாவலுக்கு தூண்டுகோலாக அமைவது. Historical fiction எழுதுவது என்பது எளிதான விசயமல்ல. அதுவும் இந்தியா போன்ற Dataவில் குறைபாடு கொண்ட தேசத்தில் சரித்திர நாவல்கள் என்பது எப்போதுமே சவால் தான்.

கூடு

எழுத்தாளர் அம்பை அவர்களின் விமர்சனக்கட்டுரை 



Life and Forests, Rivers and Hoopoe Birds

Title: Koodu&PiraKadhaigal(Nest& Other Stories)

Author: Kalaiselvi Publisher: Yaavarum Publishers, ChennaiYear: 2021

No. of Pages: 160 Price: Rs.190 

This is the fifth short story collection of Kalaiselvi whose stories delve deep into the inner minds of people to bring out the complex lives they live through spoken words and through silences. Taking the stories on non-linear paths often through forests which become a metaphor in her stories to depict the unpredictability and complexity of human relationships, Kalaiselvi has arrived at a unique style of storytelling. Many of her stories end with hidden doors for the readers to go through and see beyond the stories.  This sixth collection of stories is no exception. 

கூடு

இலக்கிய விமர்சகர் திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் “கூடு' சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கட்டுரை.

சக்கை,புனிதம்,அற்றைத்திங்கள் என்ற நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு "கூடு"



கூடு காடுறை மக்களின் கதை. மகாஸ்வேதா தேவியின் கதைகளின் நீட்சி. அவனுக்கு பெயர் இல்லை. சிறுவன் வலிமைமிகு வாலிபன் ஆகிறான். பின் தலைவனுமாகிறான். காடு குறித்த பல தகவல்கள் தாண்டி இந்த மொழிநடை காட்டுக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. ஆணாத்தி பெண்ணாத்தி பற்றிய ஒருபத்தி விவரிப்பில் சோகம் உங்கள் மீதும் கவிந்து கொள்கிறது. கையறு நிலையை கதைசொல்லி அவன் கையிலிருந்து வாசிக்கும் உங்கள் கைக்கு மாற்றிவிடுகிறான்.

Friday 24 February 2023

இந்திய சுயராஜ்ஜியம் – சாமான்யப் பார்வையில்

 



அன்று 1909 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் மத்திய நாளான பதினாறாம் தேதி. தென்னாப்பிரிக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய சங்கத்தின் பொதுக்கூட்டம் ஃபோர்ட்ஸ்பர்க் மசூதிக்கு வெளியே அவசரமாக கூடியது. அதன் அவசரத்திற்கு பின்னிருந்தது களையப்பட வேண்டிய அவசரச் சட்டம். அது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரானது. அங்கு இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரிட்டிஷ் அரசு முனைப்புடனிருந்தது. முதற்கட்டமாக, அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் கை ரேகை பதிந்து உரிமைச்சீட்டு வாங்க வேண்டுமென்றும் அதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அச்சட்டம் வலியுறுத்தவிருந்தது. சுமார் 1500 இந்தியர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில், லண்டன் இம்பீரியல் அரசாங்கத்திடம் இச்சட்டத்தின் நியாயமின்மை குறித்து முறையிட தீர்மானிக்கப்பட்டது. இதற்கென சங்கத்தின் சார்பாக துாதுக்குழு ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்பவும் முடிவு செய்தது. அக்குழுவில் காந்தியும் ஹாஜி ஹபீப் என்பவரும் இடம் பெற்றிருந்தனர்.

தென்னாப்பிரிக்கா பற்றி மகாத்மா காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள் – ஒரு பார்வை



அவர் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லது பொருளாதார தேவைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார். ஆனால் 1896 ஆம் ஆண்டின் மத்தியில் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தது அவருடைய சொந்த நோக்கத்திற்காக மட்டுமல்ல. இந்தியா வந்த அவரை தென்னாப்பிரிக்கா மீண்டும் அழைக்கிறது, அதுவும் அவசரமாக. அவரும் அதை சிரமேற்கொண்டு தென்னாப்பிரிக்கா புறப்படுகிறார். அவரின்றி ஏதும் இயங்காது என்று தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கருத, அவர்தான் எல்லாவற்றையும் துாண்டி விடுகிறார் என்று தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்கள் எண்ண, இவற்றை குறித்து பெரும்பாலும் ஏதுமறியாத சுமார் எண்ணுாறு இந்தியர்கள் கோர்லண்ட் மற்றும் நாடேரி என்ற பெயர்களைக் கொண்ட இரு கப்பல்களில் அவருடன் பயணித்து தென்னாப்பிரிக்காவின் நேட்டால் துறைமுகத்துக்கு சென்று சேர்கின்றனர். அவர்களுள் முதன்முதலாக தன் கணவனின் கரம் பற்றிக் கொண்டு கிளம்பிய இளம் மனைவி கஸ்துாரும் அடக்கம். அந்த இளம் தம்பதிகள் அவர்களது சொந்த மகன்கள் இருவரோடு அக்காள் மகனையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்

காந்திய தொகுப்பு நுால்கள் பதினேழில் முதல் தொகுப்பில் வெளியான தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் நுால் குறித்து சிறுபார்வை



மெலிந்தத் தோற்றம் என்றாலும் பலகைப் போன்று அகன்ற தோள்கள், லேசாக பருத்த மூக்கு, பற்களற்ற பொக்கை வாய், சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் உள்ளொளி பொருந்தியக் கண்கள், சற்றே பெரிய காதுகள். வழுக்கையான தலை என்பதால் காது வரை நீண்டு முழு வடிவம் காட்டி நிற்கும் முட்டை வடிவக் கண்ணாடி, சராசரி இந்தியரின் பொருளாதார நிலையை உணர்த்தும் கதரினாலான நிரந்தர அரையாடை என தன் பின் நாளைய தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்துடன்தான் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். பிறகு அவர் வாழ்வில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட வாழ்வு என்று பிரித்தறியவியலாத நிலைக்கு சென்றிருந்தது. 

Monday 6 February 2023

இலக்கியத்தில் நான்...

 


இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுத வருவேன் என்றோ “எழுத்தாளர்என்ற அடையாள முன்னொட்டு என் பெயருக்கு முன்பாக எழுதிக் கொள்ள முடியுமென்றோ யாராவது கூறியிருந்தால் அதனை அப்போது நம்பியிருக்க மாட்டேன். நான் கேட்டமுதல் எழுத்தாளர் எனில், அது ரா.கி.ரங்கராஜன் அவர்களைதான். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்களுக்கு அவர் ஏதோ சொந்தமாம் என்று என் தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதை தாண்டி அவரை பார்த்ததெல்லாம் கிடையாதுபோலவே, என் தாயார் தனது சிறுவயதில் எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறுவார்திருச்சி, தென்னுாரிலிருந்தது அவர்கள் வீடு. அவர் வயதையொத்த சிறுமிகளோடு தெருவில் விளையாட செல்லும்போது முன்னறையில் மேசையில் எழுதுஅட்டையை வைத்து எதையோ எழுதிக் கொண்டிருப்பாராம் என்று அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன். 

சொல்வனம் மின்னிதழில் வெளியான நேர்காணல்

 1.ஹரிலால் நாவல் எழுத உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது?

சமீபத்தில் யாவரும் பதிப்பகத்தின் வழியாக வெளியான எனது ‘ஆலகாலம் என்ற நாவலில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அந்நாவல் சங்ககாலத்திலிருந்து சமகாலம் வரை பயணித்திருந்தது. அதில் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை எழுதியபோது அதில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அதற்காக காந்தியடிகள் எழுதிய நுால்கள், காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட நுால்கள் என ஏராளமானவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. அதன் ஊடாக காந்தியை நான் உணரத் தொடங்கினேன். அது என்னை உள்ளிழுத்து போடவே, அந்த புள்ளியில் ஆலகாலத்தை நிறுத்தி விட்டு காந்திய சிறுகதைகளை எழுத தொடங்கினேன். காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழிப்பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக  வெளிப்பட்டபோது  சிறுகதைக்குள் அடங்கவியலாததாக  இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன். அப்போது கொரோனா பாதிப்பிலிருந்ததால் நேரம் ஓரளவு என் கைக்குள் இருந்தது. இரண்டு மாதக் காலத்திற்குள் அது நாவலென உருமாறியபோது மீண்டும் நிறைவுப் பெறாததொரு தொனி அதனுள்ளிருந்தது. இப்போது இந்நாவலி்ன் இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Sunday 5 February 2023

சியமந்தகம்: ஜெயமோகன் 60 நுாலில் வெளியான கட்டுரை

என்றைக்கும் காந்தி –  எழுத்தாளர் ஜெயமோகனின் 'இன்றைய காந்தி’ நுால் குறித்த ஒரு விமர்சனப்பார்வை 



மோகன்தாஸ்காந்தி
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நுாற்றாண்டின் மத்திமம் வரைக்கும் தனது வேறுபட்ட ஆன்மீக அரசியல் அணுகுமுறையின் மூலம் அடைந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகெங்கும் அறியப்பட்டவர். போற்றல்களும் துாற்றல்களும் நிறைந்த அவரது வாழ்க்கையில், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்க்கைக்கு பிறகும் அவரவர் புரிதல்களுக்கேற்ப அவருக்கான சித்திரத்தை உலகம் வரைந்துக் கொண்டேயிருந்தாலும், எல்லா கோடுகளுமே ஓவியத்தின் தத்ரூபத்தை அல்லது ஜீவனை விளக்கி விடுவதில்லை. 

எனது நுால்கள்

 


'அவள்' - சிறுகதை 2012ல் அமுதசுரபியில் வெளியான கதை



வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே அரசாணை எண் கிடைக்குமா? மேலதிகாரியின் அறைக்குள் சென்ற பெண் அலுவலர் எப்போது வெளியே வந்தார்? அதிரஅதிர கவலைப்படும் அலுவலக பணிக்குள் எங்குமே ஒட்டாத அவள் நிலை.

மனம் நழுவி நழுவி காலை நேரத்திற்கே சென்றது.

Saturday 4 February 2023

தேய்புரி பழங்கயிறு - பாவண்ணன் முன்னுரை

 



காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 09.01.1915 அன்று திரும்பி வந்தார்.கோகலேயின் சொல்லை ஏற்று இந்திய மக்களைப் புரிந்துகொள்வதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.பிறகு அவுரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்ப்ராணுக்குச் சென்று போராட்டத்தைத் தொடங்கினார்.அகிம்சைவழியிலான அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்தை ஒரு புதுமையான அணுகுமுறையாக நாடே உற்று நோக்கியது.மெல்ல மெல்ல அந்த அணுகுமுறைக்கு ஆதரவு பெருகியது.

எதிர்ப்பைக்கூட அமைதியான வழியில் வலிமையோடு முன்வைக்கமுடியும் என்பதை அவர் ஒருங்கிணைத்த ஒத்துழையாமை இயக்கம் உலகுக்கு உணர்த்தியது.அவருடைய போராட்டமுறைக்கு நாடெங்கும் ஆதரவு பெருகியது.ஆதரவுக்கு இணையாக மக்களிடையில் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது.அவருடைய மதநல்லிணக்கப்பார்வையை மதத்துக்கு எதிரான ஒன்றாக குற்றம் சுமத்தும் சூழல் உருவானது.கடைசிக்கட்டத்தில் மதங்களின் அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியபோது, மதக்கலவரங்கள் பெருகின.

பல ஆண்டு காலமாக கனவு கண்ட விடுதலை கண்ணுக்கெதிரில் நிஜமென 15.08.1947 அன்று நிகழ்ந்த தருணத்தில், அதைக் கொண்டாடும் மனநிலையில் காந்தியடிகள் இல்லை.கலவரங்களில் சிக்கி சின்னாபின்னமான பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் மக்களிடையில் அமைதி திரும்புவதற்காகப் பாடுபட்டார்.கெடுவாய்ப்பாக, ஓர் இடத்தில் அமைதி திரும்பியபோது இன்னொரு இடத்தில் கலவரம் வெடித்தது.அந்த இடத்தில் அலைந்து திரிந்து அமைதியை நிலைநாட்டியபோது மற்றொரு இடத்தில் அமைதி குலைந்தது.இவ்வாறாக உடல்நலம் குன்றிய தன் இறுதிக்காலத்தில் அமைதியை நிலைநாட்ட காந்தியடிகள் அங்குமிங்கும் அலைந்து முயற்சி செய்தபடியே இருந்தார்.30.01.1948 அன்று பிரார்த்தனைக்கூடத்துக்கு நடந்து செல்லும் வழியில் இந்து மத ஆதரவாளன் ஒருவனுடைய துப்பாக்கிக்குண்டுக்கு காந்தியடிகள் பலியானார்.

தேய்புரி பழங்கயிறு

 காந்தி எனும் உணர்வு



காந்தியடிகளின் வாழ்க்கையை புனைவாக்கும் எந்த திட்டமுமின்றி உருவானதுதான் இந்த நாவல். அவருடைய நான்கு மகன்களின் மூத்தவரான ஹரிலால் காந்தியை பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது அதனை  சிறுகதையாக்க வேண்டும் என்றுதான் முதலில் எண்ணினேன். ஆனால் அது தன்னைதானே நாவலென்று உருவாக்கிக் கொண்டது இனிய ஆச்சர்யம். 

காந்தியடிகள் தனி வாழ்வும் பொது வாழ்வும் ஒன்றாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் என்பதாலும் நாட்டின் மிகப் பெரிய நிகழ்வுக்கு காரணமானவர் என்பதாலும் அவருடைய வரலாற்றை புனைவாக்கும்போது அது சமூக அரசியல் போராட்டங்களோடு  இணைந்தவொன்றாகவே அமைந்து விடும். அவர் பற்றற்றவர், கடமையை செய்... பலனை எதிர்ப்பார்க்காதே என்ற கீதையின் தத்துவத்தை வாழ்க்கையாக வாழ்ந்தவர், ஆன்மீக அரசியலை முன்னெடுத்தவர், வெவ்வேறு மதங்களாயினும் அவை பயணிக்கும் பாதை வேறு வேறு எனினும் சேருமிடம் ஒன்றே என்பதை உணர்ந்தவர், சத்தியமே கடவுள் என்று நம்பியவர், உண்மை, சத்தியம், அகிம்சை என்ற மூன்று ஆயுதங்களைக் கொண்டு அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாநோம்பு, ஒத்துழையாமை என்ற வழிமுறைகளால் உலக வரலாற்றில் புது அத்தியாயத்தை எழுதிச் சென்றது.  ஒரு கிறித்துவரை விட ஏசுவின் கொள்கையை அதிகம் உணர்ந்தவராக, இஸ்லாம் மதத்தவரை வார்த்தைகளால் மட்டுமல்ல, தன் இறுதி வரை வாழ்க்கையாலும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டவராக, பிரிட்டிஷாரை கூட எதிரியாக கருதாது, கருத்து நிலையில் எதிர் நிலையில் நிற்பவர் என்ற தெளிவுக் கொண்டவராக வாழ்ந்தவர் அவர். 

அவரின் விசேடங்கள் உள்நாட்டவரையும் வெளிநாட்டவரையும் கவர்ந்திழுத்தது. அவர் செய்வனவெல்லாம் செய்திகளாயின. அவர் செல்லும் இடங்களெல்லாம் நாட்டின் மையங்கள் என்றாகின. அதே சமயம் அவரின் கருத்துகள் மத பழமைவாதிகளை கோபம் கொள்ள வைத்தது. மகாத்மா என்றும் ‘பாப்பு என்றும் அழைக்கப்பட்ட அவர், தான் வாழும் காலத்திலேயே தன் மீதான அவதுாறுகளையும் சந்தித்தார். ஆனால் அவர் போற்றுதலையும் துாற்றுதலையும் சமமாகவே பாவித்தார். தன் மீதான வழிப்பாட்டு மனநிலையை அவர் அனுமதிக்கவேயில்லை. மகாத்மா என்ற பதம் கூட அவருக்கு சுமையானதுதான். இறுதியில் தான் கட்டி காத்த அகிம்சை என்ற பேராயுதம் தன் கண்ணெதிரே நிர்மூலமாகி இந்துக்களும் முஸ்லிம்களும் இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையை அடைந்து இலட்சக்கணக்காக உயிர்கள் பலியாகி நாடு துண்டாடப்பட்டு, சுதந்திரம் கிடைக்கப் பெற்றபோது அவர் அதிகாரம் என்ற மையத்திலிருந்து முற்றிலும் விலகி கல்கத்தாவின் தெருக்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி அலைந்துக் கொண்டிருந்தார். 

இத்தனைக்கும் மத்தியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, மனைவி மற்றும் நான்கு மகன்களை கொண்டதாக இருந்தது. அவரது அசாதாரணங்களை இயல்பாக்கிக் கொண்ட மீதி ஐவரை போன்று அவரது மூத்த மகன் ஹரிலாலால் இருக்க முடியவில்லை. அதே சமயம் தந்தையின் மீதான உரிமையும் பாசமும் அவரிடமிருந்து அவரை விலகவும் விடவில்லை. அதே நிலைமைதான் தந்தைக்கும். தந்தைக்கும் தனயனுக்குமிடையிலான இப்போராட்டம் அந்த வீட்டின் ஒரே பெண் உறுப்பினரான கஸ்துாரை இறப்பு வரைக்குமே நிம்மதி இழக்க வைத்திருந்தது. 

தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மகன் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கட்டுப்பாடற்றவராகி விடுகிறார். இறப்பு வரைக்கும் தொடரும் இந்த உள்ளே வெளியே ஆட்டத்தின் புனைவே இந்நாவல். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதற்கு முன்பு வரையிலான நிகழ்வுகளுக்கான புனைவு ஹரிலால் S/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயரில் நாவலாக சென்றாண்டு (ஜனவரி 2021) வெளியானது. இந்நாவலை அதன் தொடர்ச்சி எனலாம். ஆனால் இரண்டும் புனைவுப் பாத்திரங்களின் தொடர்ச்சியற்ற, முழுக்கவும் இந்திய மண்ணில் நடைபெற்ற நிகழ்வுகளை கொண்ட இரு வேறு நாவல்கள். பொதுவாக கதாபாத்திரங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றம் செய்துக்கொள்ளும் உரிமை புனைவில் உண்டு. ஆனால் இந்நுாலை பொறுத்தவரை வெகு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் புனைவில் கூட காணாத உண்மை அந்த மனிதரிடம் இருந்தது. அதனாலேயே இந்த நாவல் எனக்கு நெருக்கமென்றாகிறது. 


ஹரிலால் த/பெ மோகன்லால் கரம்சந்த் காந்தி நாவல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன்

எங்கள் அலுவலகத்தில் சதாசிவராவ் என்பவர் வேலை செய்துவந்தார். அவருடைய அப்பாவின் பெயர் சாம்பசிவராவ். அவர் சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றவர். ஒரு காலத்தில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சதாசிவராவுக்கு ஏழு வயது. மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து சிறைச்சாலையில் கைதிகள் சந்திப்பு நேரத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் அம்மாவோடு சதாசிவராவும் வருவார். அம்மாவிடம் பேசுவதைவிட சிறுவனான அவரிடம்தான் அவர் அதிக நேரம் பேசுவது வழக்கம்.

ஒருநாள் சாம்பசிவராவுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் அவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை. அங்கிருந்து வார்தா ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்ட வேறொரு குழுவுடன் ஆர்வத்தோடு சேர்ந்துகொண்டார். பிறகு அங்கிருந்தும் புறப்பட்டு வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். அடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மறைந்துவிட்ட செய்திமட்டுமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. குடும்பத்தினரை அவர் சந்திக்கவே இல்லை.

வீட்டிலிருக்கும்போது கதைசொல்லி பாட்டு பாடி சிரிக்கவைத்த கணங்களும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலிருந்தபடி பெயர்சொல்லி அழைத்து புன்னகைத்த கணங்களும் மட்டுமே அப்பாவின் நினைவுகளாக சதாசிவராவின் நெஞ்சில் நிறைந்திருந்தன. ஆனால் அவருக்கு தன் அப்பாவின் மேல் எவ்விதமான கசப்புணர்வும் இல்லை. தாத்தாவின் பராமரிப்பும் அம்மாவின் உழைப்பும் அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்றனஅவர் கண்ணும் கருத்துமாகப் படித்து பட்டம் வாங்கி அரசு வேலையில் அமர்ந்தார். அப்பாவின் நினைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அப்பாவை நினைக்கும்போதெல்லாம் பெங்களூரு சிறைச்சாலைதான் அவர் மனத்தில் விரிந்து நின்றது. அதற்காகவே அவர் பெங்களூருக்கு மாற்றல் பெற்று வந்தார்.