Search This Blog

Wednesday 19 December 2018

எழுத்தாளர் பாவண்ணன் - “மாயநதி“ குறித்து.

அன்புள்ள கலைச்செல்வி

வணக்கம். 


நேற்றும் முந்தாநாளுமாக இரு தினங்களில் ’மாயநதி’ தொகுதியை தொடர்ச்சியாக உட்கார்ந்து படித்துமுடித்தேன். மனிதர்களை மிக்நெருக்கத்திலிருந்து எடுத்த படங்களின் தொகுப்பைப் புரட்டிய உணர்வை அடைந்தேன். ஈரமில்லாமல் இரக்கமில்லாமல் கருணையில்லாமல் மாறி தன்னை நிறுவ முனையும் மனிதர்கள் ஒருபுறமாகவும் இயலாமையோடும் இல்லாமையோடும் வதைபட்டு வாழ்வின் விளிம்பில் மரணத்துக்கு அருகில் தவித்துப் புலம்பும் மனிதர்கள் மற்றொருபுறமாகவும் நிறைந்திருக்க, இரண்டுக்குமிடையே உங்கள் மாயநதி ஓடுவதாக ஒருகணம் தோன்றியது. பெரும்பாலான கதைகளில் வறுமைச்சித்திரங்கள் மிகமிக இயல்பாக இருக்கின்றன. நம்பகத்தன்மை மிக்க உரையாடல்கள் அத்தகு சித்திரங்களுக்கு வலிமையளிக்கின்றன.

Thursday 13 December 2018

'அற்றைத்திங்கள்' நாவல் குறித்து எழுத்தாளர் பா.கண்மணி

கலை,

அற்றைத்திங்கள் படித்துவிட்டேன்! தலைப்பே மயக்குகிறது. இப்படியொரு சமூக உணர்வுள்ள நிகழ்காலப் பிரச்சினையைப் பேசும் நாவல் தமிழில்-அதுவும் பெண் எழுத்தாளரால்! கர்வமாக இருக்கிறது .


எவ்வளவு தகவல்கள்-அறிந்துகொள்ள! பிரச்சார நெடியடிக்காதவண்ணம் காடு தன் வாசத்தைக் கதைநெடுகப் பரப்பியிருக்கிறது. காட்டை இதுவரை கண்டிராத நான்  காட்டிற்குப் போய்வந்ததாக  உணர்ந்தேன் .அதை நேசிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.தைரியமான ,சுவாரசியமான,மனதை ஆற்றாமைக்கு உட்படுத்தும்  அரிய நாவல். தமிழகத்தில்(இந்தியா முழுதும்தான் ) இப்போது நடக்கும் கொடுமைகளை சமரசமின்றித்  தோலுரித்துக் காண்பிக்கிறது நாவல்-அதுவும் மிகையே இல்லாமல்.

'அற்றைத்திங்கள்' நாவல் குறித்து லோகமாதேவி

அன்பின் கலை
அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.,
நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம்அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று   


'மாயநதி' சிறுகதைத் தொகுப்பு குறித்து லோகமாதேவி

அன்பின் கலை நலமா!

 நேற்று இரவு இறங்கியது மாய நதியில், இப்பொழுதுதான் மனதும் உடலும் ஈரமாக குளிர்ந்து கரையேறி இருக்கிறேன் அருமையான கதைகள் அம்பையின் முன்னுரையை விட உங்களின்  தன்னுரை மிகவும் அருமையாக இருந்தது. இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளிலும் ஒன்றே ஒன்றை மட்டும் நான் அகநாழிகையில் முன்பே வாசித்திருக்கிறேன்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரம்.அருமணிகள் நிறைந்த ஒரு அபூர்வ ஆபரணம் போலிருந்தது தொகுப்பு முழுவதும் கதைகள் அனைத்துமே,  விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியே பேசுகிறது கம்பராமாயணக்கதையையும் மாயதியில் மூழ்கி இருக்கும் ஒருவ்னயும்  தவிர.




மாயநதி தொகுப்பு குறித்து சிவமணியன் அவர்களின் விமர்சனக்கட்டுரை

ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ ,  அதன் உள்ளடக்கம்,  வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது.
இந்த தொகுப்பின் கதைகளை,   வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி,  கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு  ஈர மண்ணில் ஊன்றச் செய்த,   கதைகள்  ஒரு வகையாகவும்,  எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த  பிற வகைகளாகவும்  பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத  முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’. 



Tuesday 4 December 2018

முடிவிலி (சிறுகதை)




வலிமையான சிறைக்கம்பிகளுக்கு பின் அவன் பகுதிபகுதியாக நின்றிருந்தான். பின்புறம் நீண்டிருந்த வாராண்டாவில் ஒளியின்மை அழுக்கு போல சூழ்ந்திருந்தது. உடலை ஒருக்களித்து வலதுக்கையின் விரல்களால் மிக லேசாக கம்பியை பற்றிக் கொண்டிருந்தான். அவன் கூரான மூக்கும் சிறிய கண்களும் முகம் முழுக்க தாடியுமாக இருந்தான். தாடை முன்புறம் சற்றே நின்றிருந்தது. அவனுடைய முப்பத்தேழு வயதை மீறி மயிர் நரைத்திருந்தது.