Search This Blog

Showing posts with label முன்னுரைகள். Show all posts
Showing posts with label முன்னுரைகள். Show all posts

Wednesday, 6 December 2017

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது - என்னுரை


இந்த நுாலுக்கான முன்னுரையை எழுதத் தொடங்கும்போதே, இலக்கியம் ஏன்..? அதற்கும் எனக்குமான புரிதல் என்ன..? என்ற சுய அலசலுக்குள் மனம் செல்கிறது. ஏன் எழுதுகிறேன்..?
ஏன்.. எதற்காக..? என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். உயர்கல்விக்கு பிறகு  பணிப்புரிவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வு.. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

Tuesday, 3 October 2017

“புனிதம்“ நாவலுக்கான “என்னுரையிலிருந்து..“

இலக்கியம், சமுதாயத்திலிருந்து தன்னை வேறாக நிறுத்தி அறங்களை அலசுகிறது. ஆழ்மன அடுக்குகளை துழாவியெடுத்து கூறுகளாக்கி அடையாளப்படுத்துகிறது அல்லது நம்மை நம்மிடமே அறிமுகப்படுத்துகிறது. சிறுகதை.. கவிதை.. நாவல்.. என எவ்வடிவிலோ சமுதாயத்தின் போக்கினை சுவாரஸ்யமான ஆவணமாக்குகின்றது. வலியோ.. வாழ்வோ நிதர்சனத்தை பேசும் போது அது அறமுமாகிறது.

“இரவு“ சிறுகதைத் தொகுப்பிற்கு “என்னுரை“


சிறுகதைகள் எதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டு விரிகின்றன. விரிதலின் கோணம் அருகி ஒரு அரிய தருணத்தில் சட்டென்று அப்புள்ளியிலிருந்து விலகி விடுகின்றன. பிறகு அதனை ஏந்திக் கொள்வது வாசக மனம்தான்.

மனிதர்களுள் உலாவும் கதைகள் தான் எத்தனை விதமானவை..? புரியவியலாத போக்குடைய மனம் என்ற எண்ணங்களின் தோன்றலை யாராலுமே கணிக்க முடிவதில்லை. அதன் வடிவும், போக்கும் எந்த நீட்சிக்குள் அடக்கவியலாதது. அகத்தின் ஆழமானது பல விசித்திரமான நிலைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

Monday, 17 July 2017

'அற்றைதிங்கள்' நாவலின் முன்னுரை

தேடல்..

பழங்குடியினரை பற்றி எழுதும் முன் திட்டம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் காடுகள் மீது தீராக்காதல் உண்டு. காடும் காட்டை சார்ந்த வாழ்வும் எப்படியானதாக இருக்கும் என்ற ஆவலுண்டு. தேடல்களை  அதை நோக்கி நகர்த்தத் தொடங்கினேன்.  கானகம் என்பதே இயற்கை.. ரசிக்கத்தகுந்தது.. மழையும் மலையும் மரங்களுமானது.. விலங்குகளுக்கானது.. என்ற சமவெளி மக்களின் புரிதல்தான் எனக்கும். அங்கிருக்கும் மனிதர்கள் பற்றி எவ்வித உணர்வுகளுமற்றே இதுவரை கடந்திருந்தேன்.. வீரப்பன் வேட்டை.. வாச்சாத்தி சம்பவம்.. போன்ற பெரிய சம்பவங்களில் காடு பின்னகர்ந்திருக்கும். மான்..மயில் போன்றவற்றின் உயிரற்ற உடல்களை கிடத்தி அதனருகில் கால்களை மடித்து சம்மணமிட்டோ.. மடித்த கால்களின் மீது கைகளை நீட்டியோ அமர்ந்து வனத்துறையினருடன் போஸ் கொடுக்கும் பழங்குடியினரை தொலைக்காட்சி அல்லது பத்திரிக்கைகளின் வழியே நிமிடக்கணக்கில் மட்டுமே அறிமுகம் எனக்கு.

இயல்பாகதானிருந்து தொடக்கம்.