Search This Blog

Monday 10 August 2020

ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவல் குறித்து.

 

இலக்கியப்படைப்பென்பது வாழ்வை கண் முன்பாக வைப்பதல்ல. அதன் அடிப்படைகளை ஆராய்ந்து அதன் போக்கோடு சென்று திரண்டவைகளை திரட்டி நேர்மையாக முன்னிறுத்துவதே என்பதை சொல்லும் சித்திரமே விஷ்ணுபுரம்.

அரசியல் மற்றும் அதிகார ஆசைக்கொண்டோரின் தந்திரத்தால் உருவாகிறது விஷ்ணுபுரம் என்னும் நகரம். இரும்புதாது கலந்த பாறைகளின் வழியே ஊறி வரும் சோனா ஆற்றின் அக்னி நிறத்தையொத்த அக்னிதத்தன் என்ற வேதபண்டிதன் வடக்கிலிருந்து அங்கு வந்து சேர்கிறான். சித்திரபீடசபை என்ற ஞானசபையில்  அக்னிதத்தன் விவாதம் புரிந்து வென்றதில் அங்கு வைதீகம் ஆட்சியாகிறது. அப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் விஷ்ணுபுரத்தை பொறுத்தவரை மன்னர் என்பவரெல்லாம் இந்திய குடியரசின் ஜனாதிபதியை போன்றவர்தாம். அங்கிருக்கும் சிலையை விஷ்ணுவாக மாற்றி பிரம்மாண்ட கோபுரங்களையும் சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறது வைதீகம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவிலிருந்து தொடங்கி எல்லாமே பிரம்மாண்டம்தான். விஷ்ணுவின் சிலை அறுநுாறு கோல் நீளம் கொண்டு முகவாசல், உந்திவாசல், பாதவாசல் என்று மூன்று வாசல்களை கொண்ட கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்திருக்கிறது. அப்பிரம்மாண்ட கருவறையின் திறக்கப்படும் வாசல்களுக்கேற்ப அங்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பாதவாசல் திறக்கப்பட்டு சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறும்  ஸ்ரீபாத திருவிழா காலம்தான் நாவலின் முதற்பாகம்.

Sunday 9 August 2020

நீரோசை

 

ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்ல தொடங்கியது. நதியில் ததும்பிய நீர் சீரான தாளத்தில் க்ளக்.. க்ளக்.. என படகை அறைந்து எதையோ சொல்லிக் கொண்டே வந்தது. பரிசல்களும் சுற்றுலா படகுகளும் சோம்பேறித்தனமாக நகர, நான் அமர்ந்திருந்த பயணியர் படகு இரைச்சலையும் புகையையும் கக்கியபடி வேகமாக முன்னேறியது. முன்னேற்றம் என்பதே இலக்கு என்ற ஒன்றிருக்கும்போதுதான் அர்த்தப்படும். அதுவும் ஒரேமாதிரியான இலக்கு. பரிசலில் ஒற்றையாளாய் அமர்ந்து பயணிப்பவனுக்கும் எருமைப்பாலில் தயாரான இனிப்புபேடாவை மரத்தேக்கரண்டியில் அள்ளியுண்டபடி சுற்றுலா படகில் அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கும் ஒரேமாதிரியான நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. நான் பரிசலில் ஏறியிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன். துடுப்பு போடாமல் நீரின் சுழலோடு பரிசலில் சுற்றிசுழல்வதாக எண்ணிக் கொள்வதே பரவசமாக இருந்தது. மூங்கிலை வளைத்து கூடாரமாக்கி அதன் மீது பாய்கூரையிட்டு வெயிலை மறைத்த இயந்திரப்படகுகள் இரைச்சலும் புகையுமாக நீரை பீய்ச்சிக் கொண்டு பயணிகளோடு கங்கையை அளைந்தன.

Wednesday 1 July 2020

ஓடிப்போகிறவள்


தோட்டத்து முள்ளங்கி ஒரு கொதிக்கே பச்சைத்தண்ணீராக வெந்திருந்தது. இரவுக்கும் சேர்ந்து குழம்பை கூட்டி வைத்திருந்தாள். பெருங்காயம் போட்டு தாளித்தபோதுசோறு வச்சிட்டீயாடீ..” என்றாள் கலாராணி. “எல்லாம் வச்சாச்சு..” பழக்கத்தில் வந்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டும்.. வடிச்சு வுட்டுருக்கேன்..“ என்றாள். திண்ணையில் படுத்துக்கிடந்த செல்வராசுஎம்மா.. செயந்தீம்மா..“ என்றான். “ம்ம்.. சொல்லு..” சோற்றை வடிப்பானையிலிருந்து நிமிர்த்திக் கொண்டே பேசினாள் ஜெயந்தி.

பாலிருந்தா டீ போட்டு கொண்டாய்யா.. வாயெல்லாம் வறண்டு போச்சு..” வேலைவெட்டி என்று பிரத்யேகமாக எதுவும் வைத்துக் கொள்வதில்லை. பரம்பரையாக ஒதுங்கிய ஐந்து ஏக்கரை இரண்டாக்கி அதையும் குத்தகைக்கு விட்டிருந்தான்.

ஜெயந்தி ஏற்கனவே கொடியடுப்பில் பாலை ஏற்றியிருந்தாள்.


Monday 22 June 2020

அன்னை


அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாரளமாக புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்த்து. திரைசீலையை இழுத்து விட்டுக் கொண்டு வெளியே பார்வையை செலுத்தினாள். மணி ஏழை தாண்டியிருக்கலாம். மனம் பதறினாலும், அதுவே எழுந்துக் கொள்ளலை தடுத்தது. எட்டுமணிக்கு வீட்டு வேலைக்கு ஆள் வந்து விடும். அதற்குள் சமைத்து விடலாம். இல்லையென்றாலும் ஒற்றையாளுக்கு என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது..? அலைபேசி வழியே அலுவலகத்திற்கு மதியஉணவை தருவித்துக் கொள்ளலாம். மின்னேற்றியிலிருந்து அலைபேசியை உருவி எடுத்தபோதுதான் அது ஒலித்தது. மூத்தசகோதரனினிடமிருந்து. இந்நாள்வரை அவனிடமிருந்து வந்த அழைப்புகளை ஒரு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். பொதுவாக அதையே அவன் இயல்பாக்கியிருந்தான். அவ்விடைவெளிகளை அடைக்கும் பொறுப்பை அம்மாவே ஏற்றுக் கொண்டிருந்தாள், ஓராண்டுக்கு முன்பு வரை.  மின்னுாட்டத்திலிருந்து அகற்றியபோது அழைப்பொலி முடிந்து, பிறகு மீண்டும் ஒலித்தது. பேச்சுவார்த்தைகள் அற்று போன நீண்ட கொடுந்தனிமைக்கு பிறகு வரும் முதல் அழைப்பு. அந்நீண்ட இடைவெளியில் அவளின் தீண்டப்படாத அழைப்புகள் அவன் அலைபேசியிலிருந்து எங்கோ ஓடி மறைந்திருக்கலாம்.


ஹலோ என்பதற்கு பதிலாகசொல்லுண்ணா..“ என்றாள்.

Sunday 31 May 2020

பூச்செண்டு



அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும்  என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால்,நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல் என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது.   வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

Friday 22 May 2020

நிவாரணம்


பள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா கூறியபோது உடனே அனுமதிக் கொடுத்து விட்டு உணவுடப்பாவை எடுத்து மேசை மீது வைத்தார். அட்சயா புத்தகப்பயை முதுகில் சுமந்துக் கொண்டு நடந்து வெளியேறுவது தெரிய, பாவம்என்பதுபோல முணுமுணுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா கிளம்பி நின்றிருந்தாள். இவளை கண்டதும்சாப்டீயாடீ..” என்றாள். இருவரும் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினர். மதியவெயிலில் கண்களை சுருக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அம்மாவின் கையிலிருந்த நெகிழிப்பையில் அவர்கள் வினவக்கூடிய சான்றுகள், மற்றும் சான்றிதழும் இருந்தன. மதிய நேரமென்பதால் பேருந்தில் கூட்டநெரிசல் இல்லாமலிருந்தது. ரவிக்கையின் மேற்புறத்தில் கை விட்டு பணப்பையை எடுத்து, அதிலிருந்த தாளொன்றை உருவி கையால் தேய்த்து, நடத்துநரிடம் பேருந்துச்சீட்டு வாங்கிக் கொண்டாள்.





Monday 17 February 2020

16.2.20 தஞ்சை இலக்கியக்கூடலி்ல் நடைப்பெற்ற சி.எம்.முத்துவின் படைப்புலகில், அவரின் “மிராசு“ நாவல் குறித்து.

சி.எம்.முத்துவின் மிராசு

ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் மீண்டும் பேசத்துாண்டுவது இலக்கியம் ஏன்? எதற்காக? என்பது குறித்துதான். அரங்குக்கு வெளியே தஞ்சை சுறுசுறுப்பாக மந்தமாக இளகுவாக எரிச்சலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இடைவிடாத பயணத்திலிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிகிறது. அலுவலகம் எதன்பொருட்டோ விடுமுறையிலும் இயங்குகிறது. இதிலெ்லாம் தற்சமயத்துக்கு அக்கறையின்றி எதன்பொருட்டோ நாம் இருபது பேராவது புறவுலகை விட்டு தனித்து இயங்க இங்கு கூடியிருக்கிறோம். இலக்கியக்கூட்டங்கள் குறித்து கேள்விப்படுபவர்கள் கூட  இது உப்புக்காகுமா..? புளிக்காகுமா..? என்று நம்மை நகர்த்தி விட்டு ஓடி மறைகிறார்கள். பிறகேன் இலக்கியம்? ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் நிகழ் வாழ்வுக்கும் மேலதிகமான விரிந்த வாழ்வை இங்கே வாழ முடிகிறது. அதனை மொழியின் வழியே புனைந்தளிக்கும் மயக்கம்தான் இலக்கியம். அதுதான் நம்மை கடத்திக் கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறது. இலக்கியம் புனைவு மட்டுமல்ல. அது கற்பனையை கொண்டு போடப்பட்ட அறிவுக்கான பாதை. இங்கு பலரின் அனுபவங்களை இலக்கியத்தின் வழி ஒருவரே அடைந்து விடலாம். நிகழ்ந்த வாழ்க்கையிலிருந்து நிகழவிருக்கும் வாழ்க்கைக்கு இலக்கியத்தில் ஏறி சென்று விடலாம். அதுதான் போதை. அதுதான் அதன் பாதை.அந்த பாதையில்தான் சி.எம்.முத்துவும் பயணிக்கிறார்.