Search This Blog

Sunday 27 October 2019

பட்டாம்பூச்சி


பேசும்புதியசக்தி தீபாவளி மலர் 2019ல் வெளியான சிறுகதை

வானொலியில் உருகிய எஸ்பிபியின் குரலை துவைக்கும்கல்லிருந்து நகர்த்தி விட்டு அதில் துலக்கிபாத்திரங்களை கவிழ்த்து வைத்தேன். அப்பா கிணற்றடிக்கு வந்தபோது வானொலியை எடுத்து வந்து மறந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் பாடல்களை ராகமிட்டு பாடுவார். இப்போது கேட்பதோடு சரி. இப்போது அதுவும் குறைந்திருந்தது. நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைவதில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பாள் அம்மா. சிலசமயங்களில் இதொண்ணுதான் கொறச்ச.. என்பாள்.

மாமரத்தின் நிழலுக்கப்பால் வெயில் வெளுப்பாக வீசிக் கொண்டிருந்தது. சதுரவடிவ கிணற்றின் ஒரு மூலையில் சார்த்தியிருந்த விளக்குமாற்றை எடுத்து தேங்கியிருந்த சோப்பு நீரை கழுவித் தள்ளினேன். முன்பெல்லாம் கூட்டித்தள்ளுவதற்கு லதாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்துவிடும். நீர் செல்லும் பாதை சீராக சரியாமல், வெட்டுண்டது போல இறங்கியதில், நீர் அருவி போல வழிந்தோடியது. அருவிப்பாசனத்தில் செடிகளுக்கு பஞ்சமில்லை. துளசியைக் கிள்ளி வாயிலிட்டுக் கொண்டேன். உதிர்ந்துக்கிடந்த கனகாம்பரபூக்களை கிண்ணத்தில் சேகரித்தேன். வளர்ப்பு சேவல் உடலை நிமிர்த்தி கொண்டையை உயர்த்தி, பிறகு மீண்டும் மண்ணை கிளறத் தொடங்கியது. பூமியை துளைத்து சிறுசிறு புடைப்பாக மேலெழுந்த தக்காளி பாத்தியில் நிலம் அதிராதபடி நீரை தெளித்தேன். குண்டுமல்லியின் மணம் காற்றில் பரவியிருந்தது. பிரதான தெருவிலிருக்கும் பெரிய வீட்டை கடக்கும்போதெல்லாம் இதே மணத்தை அனுபவித்திருக்கிறேன். உண்மையில் நாசிக்கும் வாசனைக்கும் சம்பந்தமில்லையாம். மூளை அதை நாசி வழியே உணர்கிறதாம். பிரத்யேகங்கள் அதனதன் தொடர்புகளோடு  நினைவுகளாகி விடும் போல.




Sunday 20 October 2019

யுவனின் சிறுகதைகள் - ஒரு பார்வை

19.10.2019 மதுரையில் நடந்த யுவன் படைப்புலகம் குறித்த கருத்தரங்கில்..

இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்குஅந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ”  கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து வைத்துக் கொள்வோம்.

பொதுவாக மேலுள்ளம் புறவாழ்க்கையோடு எப்போதும் தொடர்பிலிருந்துக் கொண்டேயிருக்கும். கூடவே ஆழுள்ளம் அதுவாகவே இயங்கி கொண்டிருக்கும். இவ்விரண்டுக்குமான தொடர்புகளின் விகிதாச்சாரங்களே மனிதனின் குணாதிசயத்தை முடிவு செய்கிறது.  ஆழுள்ளத்தின் சன்னமான குரல்களை அழுத்தமானதான ஆக்கும் வகைப்பாட்டுள் ஒன்றுதான் எழுதிப்பார்ப்பது. ஆகவேதான் எழுத்து எதை சொல்ல வேண்டும், எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று வரையறைப்படுத்தப்படும்போது  எழுத்தாளரால் அதற்குள் இயங்க முடிவதில்லை. வரையறைக்குட்படும்போது அது ஆற்றொழுக்கானதாக இருந்து விடவும் முடியாது. ஒரு கருவை எழுத்தாக்கும்போது ஆழுள்ளம் மேலெழும்புகிறது. சொல்லப்போனால் கதைக்கான கருக்களை ஆழுள்ளமே முடிவு செய்கிறது. புறநிகழ்வுகள் நினைவுகளாக படியும்போது, ஆழுள்ளம் நமக்கு விருப்பமானவற்றை ஒருபுறமாக அடுக்கி வைத்துக் கொள்கிறது. நிறைவேறாத இவ்விருப்பங்கள் சிலசமயம் உக்கிரமாகவும் வெளிப்படுவதுண்டு. போலவே மறுவினையற்றும் முடிந்து விடுவதுமுண்டு. அதேசமயம் அடக்கவியலாத ஆதங்கம் கனவுகளாக வெளிப்படவும் வாய்ப்புண்டு.  ஆனால், கிருஷ்ணன் அவர்களுக்கு சட்.. யுவன் அவர்களுக்கு எழுத்தாக வெளிப்படுவதோடு நிறைவுக் கொள்ளாமல், கனவாகவும் அது தொடர்கிறது. அதையும் அவர் கதையாக்குகிறார்.
நிலவறைவாசி என்ற கதை என் மனதிற்கு நெருக்கமானது.  அதில் அண்ணனுக்கும் தம்பி சங்கரனுக்கும் வருட இடைவெளிகள் அதிகம். அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பு அண்ணனிடம் வந்து சேர்கிறது. இம்மாதிரியான வாழ்க்கைசூழல்கள் கதை நிகழும் காலக்கட்டத்தில் சாதாரணம்தான். பொதுவாக கொழுந்தனை மகனாக பாவிக்கநேரும்போது சில விஷயங்களில் மனைவி, கணவனுக்கு எதையாவது மூட்டி விட்டுக் கொண்டிருப்பதும் சதாரணம்தான். அவளை எதிர்ப்பதிலும் தவிர்ப்பதிலுமாக கணவன் தனக்குதானே அட்ஜெஸ்ட் செய்துக் கொள்வான்.  அதாவது தம்பியை வளர்ப்பதில் தன்னை தியாகியாகவும் அதீத அன்புக் கொண்டவனாகவும் கற்பனை செய்துக் கொள்ளும் மனம், அவனே அறியாமல், பொறுப்பின் ஆதங்கத்தை மனைவியின் வசைகளின் அல்லது ஒவ்வாவையின் வழி தீர்த்தும் கொள்கிறது. இந்த இடைவெளிக்குள் கொழுந்தன் வளர்ந்து விடுவான். சூழ்நிலைகளின் காரணமாக சற்று நகர்ந்தும் விடுவான். கணவனும் மனைவியுமாக தாங்கள் அவனை வளர்த்த கதைகளை பேசிபேசி மாய்ந்து வயதான காலத்தை சுவாரஸ்யப்படுத்திக் கொள்வார்கள். நிலவறைவாசியில் அண்ணனுக்கும் தம்பிக்கும் பதினெட்டு வயது வித்யாசம். தம்பியை வளர்க்கும் பொறுப்பு அண்ணனை பயமுறுத்துகிறது. தம்பிக்கும் இவனிடம் வளருவது சிரமம்தான். மனைவி எதிர்தரப்பினராக இல்லாமல், தம்பிக்கு வக்காலத்து வாங்குபவர். ஆக, பொறுப்பையும் சுமையையும் பேசி பேசி கரைத்து விட வாய்ப்பில்லை. திக்கற்றவர்க்கு கனவே துணை. கடமையுணர்வு பயமாக அழுத்த, மனைவியின் கூற்றிலுருக்கும் உண்மை குற்றவுணர்வாக தோன்ற, கனவு அதனை ஆற்றுப்படுத்துகிறது. கனவில், ஆழுள்ளம் தான் அடுக்கி வைத்தவைகளை கோர்த்துக் கொள்கிறது. அறை நண்பன் சிவகுருநாதனின் தியானம், கூடு விட்டு கூடு பாய்தல் போன்ற சிந்தனைகளுக்கு உட்பட்டோ எதிர்ப்பட்டோ நிற்கவில்லையெனினும், அடுத்த பிறவியில் தான் ஆந்தையாக பிறக்கவிருப்பதாக அவன் சொல்வதை ஆழுள்ளம் குறித்து வைத்துக் கொள்கிறது.  அண்டைவீட்டு மாமி மீது எழும் மெல்லிய காமம் அதனுடன் கலந்துபோக, கனவு, சிவகுருநாதனையும் மாமியையும் தம்பதிகளாக்கி விடுகிறது. அந்த தம்பதிகளை கனவில் காணும்போது மாமியின் உடல் மீது கொள்ளும் காமஉணர்வு பொறாமையாக மாறுகிறது. யுவன் இணைக்கும் புள்ளிகள் வடிவமாக ஒன்று சேர்வதாலேயே நிலவறைவாசி மனதிற்கு நெருக்கமானதாக தோன்றியிருக்கலாம்.
தாயம்மாப்பாட்டியின் நாற்பத்தோரு கதைகள் என்றொரு கதை. வருடங்களால் நிறை வாழ்க்கை வாழும் 86 வயது மனுஷி தாயம்மா. தனக்கு கிடைத்த அனுபவங்களை, தான் கடந்த வந்த வாழ்க்கையை, பதார்த்தத்தின் சுவையை உமிழ்நீருடன் உணர்ந்து கன்னக்குறட்டில் அடக்கிக் கொள்வது போல ஆழுள்ளத்தில் அடக்கிய அனுபவங்களை நாற்பத்தோரு கதைகளாக்கி பேரனுக்கு சொல்கிறாள். அதன்வழியே வாழ்க்கைச்சித்திரம் விரிந்தெழுகிறது. அதிர்வுகளற்ற சாதாரண வாழ்க்கைதான். அது கூட நினைத்துப்பார்க்கும்போது சமுத்திரத்தின் அலைகளை போல பேரோசை கொண்டதாக மாறுகிறது. மதம், சாதி, சமூகம், குடும்பம் என எல்லாவற்றிலிருந்து துண்டித்துக் கொண்டு மிஞ்சும் தனிமனிதர்கள் ஒவ்வொருவருமே சமுத்திரம்தான்போல. அக்கதைகளுள் ஒன்றில், அறுவடையை மேற்பார்வை பார்க்க வயக்காட்டுக்கு போகும் கணவருடன்  தாயம்மாவும் செல்கிறாள்.
”கிணற்றடி மேடையில் உட்கார்ந்து எதையாவது படிச்சிக்கிட்டிருப்பேன். ஒருதடவை ஏ.வி.ராமைய்யா எழுதின புஸ்தகம் ஒண்ணு. அதுல வத்தலக்குண்டு அப்டியே தத்ரூபமா வர்றது. ஒரு சஷணம் குழப்பமாயிடுத்து எனக்கு. நா இருக்கறது நெஜத்தோப்புலயா, ராமய்யா எழுதின தோப்பிலயா..“
இதேபோல நிசமா கனவா என்று குழப்பிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நமக்கும் வாய்த்துக் கொண்டேதானிருக்கிறது. ஒன்றுக்கொன்று நெருக்கமாக, ஒன்றோடொன்று பிணைந்துக் கொண்டு பிரிக்கவியலாத கனவுகளின் முடிச்சுதான் வாழ்க்கை. அல்லது வாழ்க்கையின் முடிச்சுதான் கனவு.
கனவுகளை போலவே, மனப்பிறழ்வுகளையும் யுவனின் கதையில் இயல்பாக கையாளப்படுகிறது. ஒளிவிலகல் அப்படியான ஒரு கதை. அதில் மனப்பிறழ்வு கொண்ட ஒருவனை அவனது மனைவி மனநல மருத்துவரின் அழைத்து வருகிறாள். இதுவும் கனவு சம்பந்தப்பட்டதுதான். அதுவும் தொடரும் போடப்பட்ட தொடர்கதைகள் போல விட்ட இடத்திலிருந்து தொடரும் கனவுகள். ராகவன் என்ற தன் பெயரே தன்னுடைய பெயரல்ல என்று நம்புமளவுக்கு கதாபாத்திரங்களால் கனவு நிரம்பி வழிகிறது. அந்த கனவுகளில் ஒன்றில் இவர் சுயம்வரத்துக்கு போகிறார். மருத்துவர் இதை ஏன் உன் மனைவியிடம் சொல்லக் கூடாது..? என்று கேட்க “எந்த பெண்ணாவது தன் கணவன் வேறு ஒரு பெண்ணை மணம் புரிந்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வாளா கூறுங்கள்..? என்கிறார். அதாவது மருத்துவரிடம் தன்னையுமறியாமல் ஒப்புக் கொடுக்கிறார். கனவுக்கும் சன்னதத்துக்கும் இடைப்பட்ட வெளி. காணுதலுக்கும் உணர்தலுக்குமான விலகல் அது. நான் சுயநினைவோடு இருக்கிறேன் என்று எண்ணுவது கூட சில சமயங்களில் பிரேமையாக இருக்குமோ என்று எண்ண வைத்து விடுகிறது.
“நச்சுப்பொய்கை“யில் தனக்குள் மீதுாறும் பெண்தன்மை கேலியாகப்படுவதற்காக வருந்திய மச்சக்காளை தற்கொலை செய்ய புறப்படுகிறான். வயிறார உண்டு புதுச்சட்டை அணிந்து, சைக்கிளை சுத்தபத்தமாக துடைத்து பெடலை மிதித்துக் கொண்டு தற்கொலைக்கு கிளம்புகிறான். வழியோரம் மரத்தடியில் கட்டப்பட்டிருந்த காராம்பசுவுக்கு குழை ஒடித்து போடுகிறான். கடுமையான வெயில் வேறு. தற்கொலைக்கு போகும் வழியில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று தோன்ற குங்கிலியச் சாமியார் மடத்துக்குள் நுழைகிறான். அங்கிருக்கும் சாமியாரிடம் தன் குறையை கூறி அழ, அவரோ ”நீ ஒன்றும் சொல்லாதே. சொல்ல சொல்ல துக்கம் கூடத்தான் செய்யும்“ என்று கூறி விட்டு தன் கதையை கூறுகிறார். வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர், தங்கையை பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரிடம் அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தை தாளமுடியாமல் வீட்டை விட்டு கிளம்பியவர். வழியில் ஒரு பரதேசியை கண்டுக் கொள்ள, பரதேசி தன் கதையை கூறுகிறார். காசிக்கு சென்று திரும்பும்போது ரயிலில் சந்திக்கும் தொழுநோயாளிகள் கூட்டம் தன்னை அருவறுக்க வைத்ததாகவும், அங்கு தொழுநோயாளி பெண்ணொருத்தியின் மார்பிலிருந்து சுரக்கும் அமிர்தம் மற்றோரு ஜீவனுக்கு உயிருட்டிக் கொண்டிருந்ததை ஒருவன் சுட்டிக் காட்டியதாகவும் அவன் மணிக்கட்டு வரை மட்டுமே கைகளை கொண்டிருந்தாகவும் கூறுகிறார். அவனுடன் ஒரு பெண்ணுமிருக்கிறாள். தன்னை அவர்களின் சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு கோருகிறார்.
கைகளற்ற அந்த மனிதர், சிறுவயதிலிருந்து வளர்த்தெடுத்த அண்ணியின் மீது இச்சை கொண்ட கதையை கூறுகிறார்.
நான் உன் தாயில்லையா ராமதாசா?” என்று அண்ணியின் கேள்வியில் வெகுண்டு, தன் கைகளை தானே அறுத்துக் கொள்கிறார். அவருடனிருக்கும் பெண்ணுக்கும் ஒரு கதையுண்டு. நிர்கதியான தருணமொன்றில் கைகளற்றவன் அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான்.
அவ்விருவரின் வீட்டில் இரவு படுத்துறங்க ஒருவன் வருகிறான். அவன் தனது மனைவியின் உடல் சார்ந்த தவிப்பையும் தேடலையும் கூறி வருந்துகிறான். பதற்றம் கொண்டவனாக அலையும் அவன் ஷெனாய் வாத்தியத்தின் இசையில் கட்டுண்டு போகிறான்.
“மனித குலத்தின் துக்கமனைத்தும் அவருடைய பத்து விரல்களில் புகுந்து ஒரு முழ நீளமேயிருந்த ஊதுகுழலுக்குள் பாய்ந்து குழலின் புனல்வாய்வழி சொட்டி ஆவியாவதை உணர்ந்தேன். எனக்கென்று பிரத்யேக துக்கம் ஏதும் கிடையாது என்றும் யாருடைய துக்கமுமே அவர்களுடையது அன்று..“ என்று தோன்றுகிறது அவனுக்கு.
அந்த முஸ்லிம் மேதை அயானலிகானை தனிமையில் சந்திக்கச் விழைகிறான். அவருக்கும் ஒரு கதையுண்டு. அது வேறு கதை. கிருஷ்ணரின் கதை. அவரின் அறைக்கு சென்று சந்திக்கும்போது அவர் யார் தம்பி நீ? என்கிறார். அவரிடன் அத்தனையும் கொட்டி விடலாம் என்று தோன்றுகிறது அவனுக்கு. அதே நேரம் சற்றுமுன்தானே எனக்கென்று துக்கம் ஏதுமில்லை என்று கண்டுப்பிடித்தேன் என்றும் நினைத்துக் கொள்கிறான். அவருடன் உடனிருக்கும் சரபேஸ்வரர் கோவில் பட்டர் மாயக்குளத்தில் மூழ்கிப் போன இளவல்களை மீட்கும் அனைவரும் அறிந்த தர்மனின் கதையை கூறுகிறார்.
/தர்மன் தான் விரும்பிய வரத்தைக் கேட்ட சப்த அதிர்வில்,அதுவரை நஞ்சாய் இருந்த பொய்கையின் நீர் குடிதண்ணீராய் மாறியதல்லவாஅந்த மந்திரக் கணம் அப்போதைய கணம் மட்டும்தானா,இல்லை கடந்து போகும் எல்லாக் கணங்களுமே மந்திர கணங்கள்தானா?/ என்று கதை முடியும்.
தத்ரூபமான கலைஞர்தான் யுவன். அவரின் அசரடிக்கும் படைப்பு இது. எது வலிமையற்றதோ, பலவீனமானதோ, சாத்தியங்களற்றதோ அதிலிருந்து சாத்தியங்கள் கிளைக்கின்றன. அவை சாதாரண தருணங்களை மந்திரக்கணங்களாக்குகின்றன.
யுவனின் கதைகள் சில சமயம் கதைகளா அல்லது சம்பவங்களா, அல்லது சம்பவங்களை ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக இட்டுக் கொண்டே செல்லும் உத்தியா..? அல்லது இயல்பாகவே அவ்வாறுதான் தோன்றுகிறதா..? என்றெல்லாம் எண்ண வைப்பதும் உண்டுதான். ஆனால் யுவனின் புனைவுத் தர்க்கங்கள், உண்மை என்ற ஒன்றை கரைத்து ஒன்றுமற்ற வெளியாக நிறைந்து விடுகின்றன. கதைகளுக்கு அவர் நேரிடையாக பெயர் போடுவது கூட உண்மை என்ற ஒன்று ஸ்தரத்தோடு இருக்கவே இயலாது என்பதன் குறியீடு போலவே தோன்றுகிறது.
கடல் கொண்ட நிலம் என்றொரு கதை. அதில் வரும் தொண்டுநகர் என்ற ஊர் மதுரையின் பூர்விக பகுதிகளில் ஒன்று. ஆங்கிலேயர் காலத்தில் அதன் பெயர் குறவன்சாவடி, சுதந்திரத்தையொட்டிய ஆண்டுகளில் பண்டிதபுரம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. ஒரே பகுதி மூன்று பெயர்களுக்கு மாறியதை பின்னணியாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது. பெயர் மாற்றத்திற்கான காரணங்களை ஆராய முற்படும்போது சந்தர்ப்பங்கள் எதேச்சையாக அமைந்துக் கொண்டே போவது சற்று நெருடலாக தோன்றினாலும் அது முக்கியமான கதைதான். ஒரே சம்பவம் அங்கு வாழ்ந்த உறுமிக்கலைஞரின் வார்த்தைகளிலும், ஓய்வுப் பெற்ற காவலதிகாரியின் பேச்சிலும் வெவ்வேறு விதமாக  வெளியாகிறது. “ராஜாங்கத்துக்கு எதிரா சதி பண்ணுனாங்கன்னு நாப்பதுகள்ல ஒரு பீப்பிக்காரனையும் கூத்தாடியையும் போலிஸ் கொன்னுடுச்சு.“ என்கிறார் அந்த அதிகாரி. அப்படியானால் எழுத்தாளர்களையெல்லாம் பிறகான காலங்களில் பைத்தியக்காரக்கூட்டம் என்று கூறுவார்களோ…?
வெளியேற்றம் சிறுகதையில் காதலியை விபத்தில் பலிக் கொடுத்து விடுகிறான் ஒருவன். தொடர்ந்து கிணற்றில் விழுந்துக் கிடக்கும் யாரோவொரு பிணம். தொடர்ந்த இரண்டு மரணங்களை எதிர்க்கொள்ளவியலாது எங்கோ கிளம்புகிறான். புகைவண்டியில் பயணத்தில், புரட்சிக்கார இளைஞன் ஒருவனை அவன் மனைவியின் கண்ணெதிரில் போலிஸ் அழைத்துக் கொண்டு போகிறது. பெரியவர் ஒருவர் தனது அனுபவங்களை கூறிக் கொண்டு வருகிறார். அனுபவத்துக்குள் அனுபவமாக, கேரளத்தில் அவரும் அவர் நண்பரும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு செல்லும் வழியில் யானையின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த சம்பவத்தை விவரிக்கிறார். அந்த நண்பர் அரசியல் கட்சி ஒன்றுக்கு நன்கொடை அளிக்காத காரணத்தால் பிறகு கொல்லப்பட்டு விட்டாராம். யானையிடமிருந்து தப்பி பிழைத்து சகஜமான பிறகு, “அந்த துர்கணத்தில் நீ எங்கே ஓடிப்போய் விட்டாய்..,?” என்று தன் நண்பனை அவர் வினவியதாகவும், அவர் மரணத்துக்கு முன் நட்பாவது ஒன்றாவது என்று விழுந்து விழுந்து சிரித்ததாகவும் அந்த பெரியவர் கூறுகிறார். அந்த பெரியவரின் கையிலிருந்து நழுவிய புத்தகத்திலிருக்கும் பத்து வரி கதைகளில் இளஞ்சீடரொருவர், மற்றொரு சீடரிடம் கொண்ட மனவிலகல் காரணமாக வெளியேறவிருப்பதாக குருவிடம் தெரிவிக்கிறான். குருவோ,”குருகுலத்தை விட்டு வெளியேறி எங்கே போவாய்? எல்லா இடமும் குருகுலம் என்பதை உணரவில்லையா நீ? என்கிறார்.  அவன் பயணத்தை ரத்து செய்து விடுவதாக கதை முடிகிறது.
அனுபவித்த தருணங்களும், அனுபவிக்க வாய்ப்பற்ற தருணங்களுமாக கருப்பும் வெளுப்பும் கலந்த கிரே வண்ணத்தால் அவரின் கதைகள் நிறைகின்றன. எழுத்தாளராக இருப்பதால் ஊருலகத்தில் பெரிய மதிப்பெல்லாம் இல்லை என்றாலும் எழுத்தாளர் எழுத்தாளராகவே இருப்பதற்கு இப்படியாக வாழ்ந்து விடும் தருணங்களின் சுவைகளுக்குள் சிக்கிக் கொள்வதுதான் என்று தோன்றுகிறது. அதனால்தான் யுவன் போகிறபோக்கில் சொல்வதுபோல கதைகளை சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கவிஞரின் பரிணமாக வளர்ச்சி அல்ல எழுத்தாளர் என்பது. கவிஞரின் சாயல்கள் உரைநடையில் தென்படுவதில்லை. சம்பிரதாயமான அறிமுகங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஒரே இழையை அடுத்தடுத்த கதைக்குள் கோர்த்து கொண்டே போவதுதான் இந்த கதைச்சொல்லியின் வழி என்கிறார்.
என்னுடைய கதையொன்றை வாசித்த ஒரு நண்பர் அதில் வரும் பாத்திரமொன்றுடன் என்னை சம்பந்தப்படுத்தி பேசிக் கொண்டே செல்ல, நீ என்னை முடிவு செய்யாதே என்பது போன்ற எரிச்சல் ஏற்பட்டது என் நினைவுக்கு வருகிறது. ஆனால், எழுத்தாளர் ஒருவரின் ஒட்டுமொத்த தொகுப்பை வாசித்து நிமிரும்போது, அதிலிருந்தே அவரை உருவாக்கிக் கொள்ள முடிகிறதுதான். இதிலும் யுவன் உருவாகிறார். கிருஷ்ணனாக, அதிலும் வசுதேவரை தேடும் கிருஷ்ணனாக. 
நச்சுப்பொய்கையில் வரும் அந்த ஷெனாய் வாத்தியகாரர் அயானலிகான் “எனக்கு ஆறு பையன் என்று சொன்னேனல்லவா.. அது தவறு. எனக்கு ஏழு பையன்கள். எழுபத்தைந்து வருடங்களாக அவனுக்காகதான் தினம் தவறாமல் அதிகாலையில் சாதகம் செய்கிறேன். ஜனங்களின் முன் கச்சேரி செய்கிறேன். அவன் பாலகிருஷ்ணன். சுருதியின் அமைதிக்குள் என் மனம் தஞ்சம் புகுந்ததுதும் அவன் வந்து என்னெதிரில் சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்வான். ஆயர்ப்பாடியில் குழந்தை அலைகிறானே என்று விசனப்பட்டு என்னோடயே இருந்து விடேன் என்றால் கேட்க மாட்டான்.. நீ சுருதி கூட்டு வருகிறேன் என்று சொல்லி விடுவான்“ என்பார்.
வசுதேவரும் கிருஷ்ணனை தேடிக் கொண்டுதானிருப்பார் என்பதை யுவன் உணர்ந்திருக்கிறார்.
அவருக்கு என் வாழ்த்துகள்.

Friday 4 October 2019

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்


இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..)  அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை, பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.)  

சொற்களின் பகடையாட்டம்.. யுவனின் படைப்புலகம்


இருள் (சிறுகதை)


தமிழினி மின்னிதழில் செப்டம்பர் 2019ல் வெளியான சிறுகதை

கானகத்தின் இடைவிடாத ஒலிகள்தான் உறக்கத்தை கலைத்தது என்றால் அது பொய்யாகி விடும். ஓலைப்பாயில் ஒருக்களித்திருந்த உடலை புரட்டிக் கொண்டேன். இருளும் கூடவே வந்தது. காற்று காட்டுபன்றியின் உறுமலாய் ஓலமிடுவதை புறஅசைவுகளில் உணர முடிந்தது. எழுந்து அமர்ந்துக் கொண்டேன். சுரைபுருடையிலிருந்த நீரை எக்குதப்பாக வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டதில் புரையேறிக் கொண்டது. மணிராசன் இருளில் அசைந்து வருவது ஒலிகளால் தெரிந்தது. அவன் நீட்டிய கஞ்சாத்துாள்களால் நிரப்பப்பட்ட பீடியை உதட்டில் பொருத்தி இழுக்கத் தொடங்கியபோது வேறு ஏதேனும் வேண்டுமா என்றான். வேண்டாமென்பதுபோல மௌனமாக இருந்தேன். காத்திருந்ததுபோல அவன் நகர்ந்து செல்வது தெரிந்தது. ஓலைப்பாய்க்கு கீழ் பரப்பப்பட்டிருந்த தருவைப்புல்லின் தைலவாடை திடீரென்று அதிகரித்து விட்டதுபோல உணர்ந்து, அதை தொண்டையை செருமி சமப்படுத்திக் கொண்டேன். பதினோரு பேர் என்பதால் நெருக்கலாகதான் படுத்திருந்தோம். மணிராசன் கட்டையைபோல கிடந்தான். உறங்கியிருக்க மாட்டான் என்று நினைத்தபோதே சிறு சன்னமான உறக்கவொலி அவனுள்ளிருந்து எழுந்தது. எங்களை பொறுத்தவரை உறக்கமும் விழிப்பும் உடனுக்குடன் சாத்தியப்படும். சமீபமாக அது என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தாலும், இன்று முழுவதுமாக தொலைந்திருந்தது.


Friday 27 September 2019

தி.ஜா வின் பாயாசம்



சாமநாதுவின் அண்ணன் மகன் சுப்பராயன். நல்ல புத்திசாலி. படிப்பு ஏறினாலும் செலவழிக்க பணமின்றி, படிப்பு முடிவதற்குள்ளாகவே ஊருக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அதேநேரம் சுப்பராயனுக்கு செய்தொழில் வசப்பட்டு விடுகிறது. சாமநாதுவின் மனைவி வாலாம்பாள். அவர்களுக்கு நாலைந்து பிள்ளைகள் உண்டு. ஆனால் யாரும் சுகப்படவில்லை. சுப்பராயனின் வாரிசுகளை கொண்டு கொடுத்த வகையில் ஏற்படும் சொந்தங்கள்.. அவரின் செல்வாக்கு.. அதனால் ஊருக்கு கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றையுமே வன்மத்தோடு பார்க்கும் சாமநாதுவின் மனதை நெருக்கமாக அறிந்துக் கொள்ளும் வாலாம்பாள் கிட்டத்தட்ட அவரின் மனச்சாட்சியாக பேசுகிறாள். அவருக்கே கூட தன்னுடைய இயல்பு பிடிக்காமல்தான் போகிறது. அதனால்தான் இறந்துபோன மனைவியை ராட்சச முண்ட.. சாவற வரைக்கும் நியாய புத்தி.. தர்ம புத்தி.. என்று திட்டுகிறார். சுப்பராயனின் மூன்றாவது மகளோடு ஒரே பந்தலில் திருமணமான தனது முப்பத்தோறு வயது மகளின் நார்மடிக்கட்டுக்குள்ளிருக்கும் இளம் முகம்.. அண்ணன் மகன் வீட்டு திருமணத்தில் எடுபிடியாக அலையும் மகனி்ன் நிலை என குமையும் மனம், கேட்பாரின்றி தடுப்பாறின்றி பாயாச கொப்பரைக்கு முன் வந்து நிற்கிறது.

கடந்தவைகளும் நிகழ்பவைகளுமாக கதை தன்னியில்பாக நகர்கிறது. ஒரு சொல்லோ சம்பவமோ மிகையில்லை. இசைக்கச்சேரி தொடங்கி விட்டது. சங்கதிகளில் பிசகில்லை. இத்தனைக்கும் கச்சேரி உச்சஸ்தாயிலேயே நடக்கிறது. நாம் கண்களை மூடி லயித்துக் கிடக்கிறோம். ஜதிகளில் பிசகில்லை. உச்சஸ்தாயிலேயே குரல் தன்னியில்பாக மாயாஜாலம் நிகழ்த்துகிறது, சுருதி பிறழவில்லை. இயல்பு.. எல்லாமே இயல்பு. அடக்கவியலாத உச்சக்கட்டத்தில் பொங்கி பிரவகித்து ஓடுகிறது வன்மம். முள்ளாய் குத்தும் பார்வையை எதிர்க்கொள்ளும் திராணியின்றி, செயலுக்கு நியாயம் கற்பிக்க, மனம் பறந்தலைகிறது. நாயன இசை வாலாம்பாளின் குரலையொத்தது. பௌதீகமாக நடமாடிக் கொண்டிருந்த வாலாம்பாளிடம் இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் நீ என் ஆம்படையாளா.. அண்ணனோட ஆம்படையாளான்னு தெரியில.. என்பார் சாமநாது. ஸ்துாலமாகி போன சரீரத்தின் குரல் நாயனமாக ஒலிக்கும்போது அவரால் எதுவும் செய்து விட முடியாது.



Sunday 1 September 2019

யுவன் சந்திரசேகரின் கானல்நதி குறித்து...



எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை கூடுதலாக்கியது.


Tuesday 20 August 2019

“இரவு“ சிறுகதை குறித்து அ.இராமசாமி (ஆகஸ்ட் 7,2019) உயிர்மையில் எழுதிய கட்டுரை

தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. 

Tuesday 30 July 2019

பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' குறித்த வாசிப்பனுவம்

ரமேஷ்சந்திரன் முடிந்தவரை நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரி. அவனின் மனைவி சுகன்யா. மகள் ப்ரியாவின் திடீர் இறப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அவன் அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அங்கு கோஷ் என்ற முதுநிலை பொறியாளரின் கடத்தலும், நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பெருஊழல் ஒன்றும், ரமேஷை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தான் கண்ட, கடந்த உண்மைகளை விபத்தில் அகப்பட்டு மருத்துவஓய்விலிருக்கும்போது புனைவாக்குகிறான். 
சாமானியனை பொறுத்தவரை சட்டம் என்பது வளைக்கவோ மாற்றவோ இயலாதது. கீழ்படிதலைதவிர வேறெதற்கும் உட்படாதது. ஆனால் அதிகாரமட்டத்தில் அது தன்போக்குக்கு வளைந்தும் நெளிந்தும் கலங்கிய நதியாக ஓடுகிறது. அங்கு நிலவும் அதிகாரபடிநிலையமைப்பை கருப்புஅங்கதத்தின் வழியே நாவல் அள்ளி வைக்கும்போது, சற்று பயமேற்படுகிறது. நாம் எவ்வகையில் ஆளப்படுகிறோம் என்பதும், ஆளப்படும் மக்களுக்கும் அதிகாரமையத்திற்குமான இடைவெளி கடக்கவியலாத பெருவெளி என்பதும் புரிகிறது. இப்பெருவெளி குறைந்துவிடாமலும் செல்வமும் அதிகாரமும் தம்மிடமிருந்து விலகி விடாமலும் பார்த்துக் கொள்வதும்தான் அதிகாரமட்டத்தின் தலையாய பிரச்சனை. மற்றபடி மக்கள் பிரச்சனைகளிலிருந்து  அது அந்நியப்பட்டே கிடக்கிறது என்பதை இந்நாவல் கூறுகிறது. காந்தி இதில் மையமாகவும் மர்மமாகவும் உடன் வருகிறார். 
வாசிப்புக்குகந்த எழுத்து நடையும், அந்நியமான சூழலும் படிப்பதற்கான ஆவலை துாண்டுகிறது.. ஆனால் உணர்ச்சிகளின் மீது அவை கட்டமைக்கப்படாததுபோல தோன்றுகிறது. உதாரணமாக ப்ரியாவின் மரணம் குறித்து ரமேஷ் உணரும் தருணங்கள் நாவல் அவ்வப்போது தொட்டுக் கொண்டாலும் அவை எந்த உள்ளார்ந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. அயல்நாட்டு மொழிப்பெயர்ப்புகளில் கூட கிடைத்துவிடும் ஒரு ஒட்டுதல்தன்மை இங்கு ஏற்படாதது, ஆழமற்று செல்வதால்கூட இருக்கலாம்.
அறம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை நீட்டியும் குறுக்கியுமாக தனிமனித நியாயங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம் நாம். இது எக்காலத்துக்கும் பொருந்துமென்றாலும் நவீனங்களின் வளர்ச்சி “அறக்கூறுகளை“ முகமறியாதவர்களிடம் கூட சென்று சேர்த்து விடுகிறது. பொதுவாக இவற்றை கண்டும் காணாமலும் விட்டு விடுகிறோம். தங்களை பாதிக்காதவரை அல்லது தங்களுக்கும் சிறிது ஈயப்படும் வரை எப்படியோ போகட்டும் என்று கையலாதவகையில் ஒதுங்கிக் கொள்கிறோம். சில சமயங்களில் நம் எல்லைக்குட்பட்டு கொதித்து அடங்கி, சமூகவலைத்தளங்களில் லட்சியவாதம் பேசுகிறோம். சிலர் மட்டும் இவற்றை போராட்டங்களாக கையிலெடுக்க துணிகின்றனர். சிலர் நாவல்கள் எழுதி தீர்த்துக் கொள்கின்றனர், கலங்கியநதியை போல.

Friday 19 July 2019

மஹ்ஷர்பெருவெளி - புனத்தில் குஞ்ஞப்துல்லா - வாசிப்பு அனுபவம்


அபூர்வமான தகவல்களும் தகவல் சார்ந்த புதுமைகளும் இல்லாவிடினும் அறிந்த விஷயங்களின் ஆழத்தை புதிய கோணங்களில் அணுகுவது ஒரு படைப்பின் மீதான ஆர்வத்தை உண்டாகி விடுகிறது. அடுத்து என்னவாக இருக்கும் என்ற ஆவலை தொடர்ச்சியாக அளிப்பதன் மூலம் வாசிப்பை சுவாரஸ்யமான தளத்திற்கு கொண்டு செல்லவும் முடியும். இறுகலானவற்றை மறுஆக்கம் செய்து இலகுவாக்கும்போது, வரலாறு என்று நம்முன்னே வைக்கப்படுபவை வேற்றுரு கொண்டு எழ வாய்ப்பு அமைகிறது. கம்யூனிசம் கேரளாவில் பரவியபோது பெருங்குடும்பங்களுக்கிடையே எழுந்த அச்சத்தையும் இந்நாவல் பதிவு செய்கிறது. எளிய, கொள்கைபிடிப்பு நிறைந்த, கோட்பாட்டாளர்களாக பொதுவுடமைவாதிகளை குறித்து வரையறுக்கப்பட்டிருக்கும் மனச்சித்திரங்கள், ஆரம்பக்காலத்தில் அணுகப்பட்ட விதத்தை நாவல் சொல்கிறது. வரலாற்றை இலக்கியத்தால் மட்டுமே முழுமையாக்க முடியும்.


பட்டு வியாபாரம் செய்வதற்காக யாக்கோபு, இஸ்மாயில், சக்காயி, சிமயோன் என்ற நான்கு சகோதரர்கள், ஏவலுக்கென மங்கோலியர்களையும் சைனாக்காரர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு கேரளம் வருகின்றனர்.

Sunday 30 June 2019

காஃப்காவின் நாய்க்குட்டி


தஞ்சை கூடல் இலக்கிய வட்டம் 29.6.2019 நடத்திய விழாவில்..

எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.
காய்தல்உவத்தலின்றி நிகழ்தருணங்களை கடந்து ஓரளவுக்கேனும் முழுமொத்த பார்வையோடு வாழ்வை அள்ளிக் கொண்டு விரிவாகும் இலக்கிய வகைமையை நாவல் என்று புரிந்துக் கொள்கிறேன். புதிதுபுதிதான வடிவ சாத்தியங்களை முயல்வதும் பிறிதொன்று அதை மிஞ்சுவதுமாக இருக்கும் இலக்கியச்சூழலில் நாவலை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்வதை தனிப்பட்ட வாசகரின் பொறுப்பாக கருதிக் கொள்ளலாம்.

Sunday 9 June 2019

படித்துறை

ஜுன் 2019 பதாகையில் வெளியான சிறுகதை


அது ஒரு படித்துறை. மண்டபத்தோடு கூடிய படித்துறை. அதில் படிகளும் மிகுந்திருந்தன. இத்தனை ஜபர்தஸ்துகள் இருந்தாலும் நதி என்னவோ நீரற்றுதான் இருந்தது. அவன் படியில் ஒரு காலும் நதியில் ஒருகாலுமாக கடைசி படிகளில் அமர்ந்திருந்தான். காற்று அளைந்தளைந்து நதியின் வடிவத்தை மணல் வரிகளாக மாற்றியிருந்தது. நீர் மிகுந்து ஓடும் காலம் என்ற ஒன்றிருந்தபோது நதி அத்தனை படிகளையும் கடந்து மண்டபத்தை எட்டிப் பார்த்து விடும்.  அமாவாசை, நீத்தோர் சடங்கு நேரங்களில் ஊற்று பறிக்கும்போது நீர் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் சமீபமாக இறந்தோரின் நல்லுாழ் என்ற சம்பிரதாயமாக மாறியிருந்தது. ஆனால் தர்ப்பணத்துக்கோ மற்றெதற்கோ, முன்னெச்சரிக்கையாக குடத்தில் நீரை எடுத்து வந்து விடுகின்றனர், நல்லோர் என்று கருதப்படுவோரின் உறவினர் உட்பட.


”டப டப டபன்ன இத்தனை படி எறங்கி வர்றதுக்காது ஆத்துல கொஞ்சம் தண்ணி இருந்திருக்கலாம்..” என்றாள் அவள். பேச்சொலி கேட்டு திரும்பியவன் அவளை கண்டதும் “வாங்க..“ என்றான்.

Wednesday 5 June 2019

தேர்தல் 2019


கடினமான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அதனை அடிப்படையிலிருந்தே அணுகுவதன் வழியாக கட்சியை பலப்படுத்துவதும், எதிரணியை தோற்கடிக்க செய்யும் உள்ளடி வேலைகளை மேற்கொள்ளுவதும், தமக்கு எதிராக வலுவான கூட்டணி அமையவிடாமல் பார்த்துக் கொள்வதுமான தெளிவான உத்திகளை கையாண்டு, இன்று பிரம்மாண்டமான அறுவடையை பாரதிய ஜனதா கட்சி அள்ளியெடுத்திருக்கிறது. இவையேதுகளிலும் அக்கறை செலுத்தாமலிருந்ததே காங்கிரஸின் பலமின்மைக்கு காரணமாக வைக்கலாம். புரையோடிபோன விஷயங்களை அது தொடுவதேயில்லை. மாபெரும் தேசத்தின் தேர்தல் அரசியலை அது மேம்போக்கான விஷயமாகவே, எதிர்க் கொண்டது போல தோன்றுகிறது. எதிர்கருத்தாளர்களை மாநிலம்தோறும் இணைக்கத் தவறியதும், ராகுலின் மீதிருந்த “பப்பு“ இமேஜை அவரே மாற்ற இயலாததுபோல நடந்துக் கொண்டதும், கட்சியின் மீதான நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியிருக்கலாம்.  தமிழக அளவில் பலம் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் இடதுசாரிகள் பலமிழந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிகள் அதிஅவசரமாக அவசியப்படுகிறார்கள். ஏனெனில் முதலாளித்துவம் எளிய மக்களுக்கானதல்ல. அதன் இறுதி என்பது உயிர்ப்பின் கடைசித்துளி வரை உறிஞ்சிக் கொள்வதே.  அதை கருத்திற்கொண்டு இடதுசாரிகள் காலத்திற்கேற்ப நெகிழ்வுகளோடு களமாடுவதே சிறப்பு.

தமிழகத்தை பொறுத்தவரை முக்கியமான இரண்டு தலைக்கட்டுகள் இல்லாத முதல் களம் இது. ஸ்டாலின் இறங்கி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் மட்டுமே பெற்றிருந்த திமுக, தேர்தல்களுக்கான இடைவெளியில் மக்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதில் காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கியமானது. ஸ்டாலின், முடிந்தவரை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசுகிறார். கருத்தியலின் அடிப்படையில், பிற கட்சியினருடனான அவரின் அணுகுமுறை தமிழக அரசியல் சூழலில் நல்லதொரு முன்னெடுப்பு. கலைஞரின் மகன் என்று இயல்பாகவே அமைந்த நல்வாய்ப்பை, தெளிவாக மீட்டெடுத்துக் கொண்டதற்கு, அவரை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. மத்திய மாநில எதிரி(ஆளும்) கட்சிகளின் மீதான வெறுப்பும் இங்கு ஓட்டுகளாக மாறியுள்ளன. சமான்யமான, ஓரளவு அரசியல் அறிவுக் கொண்டவர், தமிழக தேர்தல் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ அதுவாகவே முடிவுகளும் வந்துள்ளது ஆச்சர்யமான ஒற்றுமை. அதேநேரம், எதையும் யாரும் வெற்றிக்களிப்புடனோ அல்லது தோல்வி மனப்பான்மையுடனோ அணுகிவிட முடியாதளவுக்கு முடிவுகள் ஒருவித அமைதியை கடத்துவதும் உண்மை.


கணையாழி ஜுன் 2019ல் வெளியானது.

Friday 31 May 2019

குமுதம் தீராநதி நேர்காணல் ஜுன் 2019

1)         கலைச்செல்வியைப் பற்றிய அறிமுகம் குமுதம் தீராநதி வாசகர்களுக்காக..?


வாசிப்பின் வழியாகவே எழுத்துக்கு வந்தேன். மௌனித்திருப்பதையும், தனிமை நாடுவதையும் நான் விருப்பமாக கொண்டிருப்பதால், ஒருவேளை எழுதுவதை விரும்பியிருக்கலாம். எழுத தோன்றும் நேரங்களிலெல்லாம் எதையாவது எழுதுவதற்கு எனக்கென நோட்டுகளையும் காகிதங்களையும் மட்டுமே அப்போது கைக்கொண்டிருந்தேன். பிறகொரு சமயம், தினமணியில் சிறுகதை போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது.  அது 2012ஆம் வருடம். சம்பிரதாயமாக கரு, சம்பிரதாயமான தலைப்பையிட்டு அனுப்பி வைத்தபோது, அது இரண்டாம் பரிசுக்குரிய கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.  முதல் கதையே பரிசு பெற்றதும், நான் பிறந்து வளர்ந்த நெய்வேலி நகரில், எனக்கு அதற்கான பரிசு வழங்கப்பட்டதும் கொஞ்சம் நெகிழ்வுதான்.    பின்பு தொடர்ச்சியாக இதுவரை 104 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

நாவலை பொறுத்தவரை கல்லுடைக்கும் தொழிலாளிகளின் பிரச்சனைகளை மையப்படுத்திய “சக்கை“ என்பதுதான் என்னுடைய முதல் படைப்பு. அந்நேரம் ஆறேழு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். நாவல் எழுத தொடங்கியபோது கூட அதன் பிரசுரிப்பு சாத்தியம் குறித்து என்னிடம் எந்த முன்முடிவும் இருந்ததில்லை.  கணினிப்பிரதியாக திரு.வி.நா.சோமசுந்தரம் அவர்களிடம் இதை அளித்திருந்தேன். அவர் அதனை உடனடியாக இரா.காமராசு அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள, என்னஏதென்று புரிவதற்கு முன்பே, இந்நாவலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நாவலாக்கிக் கொடுக்க, இவ்வாறாகதான் நான் இலக்கியஉலகிற்குள் அறிமுகமானேன்.

தேடல்களில் தீராதவெளியில், இலக்கியத்தை நிரப்பிக் கொள்ள பிடித்திருக்கிறது.  இயல்பாக எழும் எண்ணங்களின் மீது என் எழுத்தை கட்டமைத்துக் கொள்கிறேன். அதை “இசங்களுக்குள்“ அடக்கி விடவோ, அடங்கி விடவோ விரும்புவதில்லை.  அதேசமயம், எப்படியானவற்றுள் என்னை அடக்கிக் கொள்வது என்ற திட்டமும் என்னிடமில்லை.

2)         தீராநதி: இது வரைவெளி வந்த நாவல்கள்?சிறுகதைகள்..?

சக்கை என்ற எனது முதல் நாவலைத் தொடர்ந்து புனிதம், அற்றைத்திங்கள் என்ற இரு நாவல்களும், வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி என்ற நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன.  பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தற்போது நாவல் ஒன்றும்  எழுதிக் கொண்டிருக்கிறேன்.

3)         தீராநதி: சக்கை என்கிற முதல் நாவல் வழியே அடிமட்ட தொழிலான கல் தொழிலை மையப்படுத்தி எழுதியிருக்கிறிங்க. நம் சமூக சூழலில் இத்தகு அடிநிலை தொழிலாளர்களின் நிலை மாறியுள்ளது என சொல்ல முடியுமா?

நம் சமூகம் சாதிகளால் ஆனது. மதம் இனம் என எல்லாவற்றிலும் பிளவுப்பட்டுக் கொண்டு போவதே, இந்நாளில், அதற்கான விருப்பமாக இருக்கிறது.  இதனடிப்படையில், இங்கு திட்டமிட்டும் எதேச்சையாகவும் கட்டமைக்கப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிநிலை தொழிலாளர்களின் நிலையை மாற்றி விடாமல், அந்நிலைப்பாட்டில் தொடர்ந்து இருத்தி வைக்கவே விரும்புகின்றன.

4)         தீராநதி: எந்த வகை இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகம்?

வாசிப்பை பொழுதைபோக்கும் பாணியில் என்னால் அணுக முடிவதில்லை. அது ஒருவித தேடல். தீராத்தவிப்பின் மாறா வெளிப்பாடு. தீவிர இலக்கியங்களையே வாசிக்க பிடித்திருக்கிறது.

5)         தீராநதி: பிரசவவெளி சிறுகதையில், பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அந்த பிரசவவெளி கதையில் கதையாசிரியர் வெளிப்படுத்திய பெண்ணியம் என்ன?

பிரசவவெளி சிறுகதையில் பெண் மொழி வெளிப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வைத்துள்ளனர்.. என்று நீங்கள் கூறுவதே எனக்கு செய்திதான். இச்செய்யுளில் பயின்று வரும் கருத்து யாது என்பது போன்ற கருத்துகள் உள்ளபடியே சோர்வளிக்கிறது.

இச்சமுதாயம் முழுக்கவும் ஆண்வயமானது. அது நிறைய இனங்களில், சுலபமானவற்றை தனக்கும், சுலபமல்லாதவற்றை பெண்களுக்குமாக பிரித்து வைத்து “சுமூகத்தீர்ப்பு“ வழங்கியுள்ளது. அவ்வாறான ஒதுக்கீடுகளை, அது மிகவும் தந்திரமாக செயல்படுத்துகிறது. சிலவற்றை அடக்குமுறையாலும், சிலவற்றை அதிகாரத்தாலும், சிலவற்றை அன்பாலும், சிலவற்றில் புனிதமேற்றியும் தம் ஒதுக்கீடுகளுக்கு நியாயம் கற்பிக்கிறது. அப்படியான ஒரு தீர்ப்புதான் தாய்மையின் மீது ஏற்றப்பட்ட புனிதமும். ‘தாய்மையடையாத பெண் முழுமையானவள் அல்ல. தாய்மை பெண்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் கொடை, தாய்மை தியாகவடிவானது’ என்றெல்லாம் அதன்மீது செய்யப்படும் செயற்கை ஜாலங்களை கடந்து பிரசவத்துக்கு பின்னிருக்கும் உடல் மற்றும் மனத்தின்பாடுகளை அக்கதை வெளிப்படுத்துகிறது.

6)         தீராநதி: அந்த கதையைப் பொறுத்தவரை பிரசவத்திற்கு பின்பான உறவுகளின் விசாரிப்புகளை பாசம் என நினைத்த சூழலை அப்படியே மாற்றி, அதுவும் பெண்களுக்கான உளவியலை சோதிக்கிறது என்ற நுட்பம் மிகவும் அருமை. குழந்தை கொடுக்க பால் இருக்கு இல்ல. இது வெறும் கரிசனையின் குரலாக மட்டும் இல்லாமல் பெண்ணின் மாண்பை குலைக்கும் கூறாக எப்படி வெளிப்படுத்தினிங்க?

பெண்ணின் மாண்பு என்ற பதமே பொய்யான கற்பிதம் என்கிறேன் நான். குழந்தை பெற்ற பெண், உடல்ரீதியாக கசங்கி போயிருப்பாள். மனரீதியாகவும் அவள் குழம்பிப் போக வாய்ப்புள்ளதாக மருத்துவம் கூறுகிறது. குழந்தை ஈன்றவுடன், அவளின் உடல் உபாதைகள் நின்று விடுவதில்லை. பிரசவவலி என்பது அந்த நேர வலியை மட்டுமல்ல.. பின்தொடரும் வலிகளையும் உட்படுத்தியதுதான். இவ்வுடலையும், சோர்ந்திருக்கும் மனதையும் சுமந்துக் கொண்டு, விருந்தினர்களுக்கு, குறிப்பாக கணவன் வீட்டை சேர்ந்தோருக்கு, புன்னகையாலாவது அவள் பதிலளிக்க வேண்டும். வழுக்கிக் கொண்டோடும் புத்தம்புது சிசுவுக்கு பாலுாட்ட வேண்டும். சொல்லப்போனால், யாதொன்றுமற்று, நம்மை மட்டுமே நம்பிக் கொண்டு வரும் அக்குழந்தையின் மீது  பாசத்தை விட அக்கறையும் பொறுப்புமே முதலில் தோன்றும். உறவுகள் சூழ்ந்திருக்கலாம். ஆனால், அசத்திப்போடும் உடலின் வலியை யாரும் வாங்கி விடுவதில்லை. பலவீனப்பட்ட இந்நிலையை “தாய்மை“ என்ற கட்டுக்குள் அடைக்கும்போது, இந்நோய்மைகளை மறுக்க  பெண்களுக்கென்று ஏதேனும் உரிமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தாய்மையை சினிமாக்கள் போல வேறேதும் இத்தனை கொச்சைப்படுத்தியதுமில்லை.

7)         தீராநதி: பிரசவம்   பெண்களை குடும்ப அடிமைத்தனத்தில் முடக்கி போடுகிறது என்கிற கூற்றை எழுத்தாளராக எப்படி பார்க்கிறிங்க கலைச்செல்வி?

இயற்கை அப்படியான ஒரு அமைப்பை பெண்களுக்கு அளித்திருப்பது பெரும் பிழையுமல்ல. அதே நேரம் கொண்டாட்டமுமல்ல. ஆனால், தாய்மையின் பொறுப்புகள் பெண்களை முடக்கிப்போடுவதென்னவோ உண்மைதான்.

8)         தீராநதி: பெண்களின் வாழ்க்கை வலிகளை, போராட்டங்களை ஆண் எழுத்தாளர்களால் பெண் மன நிலையோடு எழுதி விட முடியுமா?

இந்த கேள்வி நான் பெண் என்பதால் எழுப்பப்பட்டிருக்கலாம்.  சட்டென்று நிகழ்ந்து முடிந்து விடும் நிலையற்ற வாழ்வில் வலி என்பதை பெண்களோடு மட்டும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டியதில்லை. உலகம் பெண்களை சுற்றி மட்டுமே சுழலுவதுமில்லை. சொல்லப்போனால், வலி, போராட்டம் என்பது அவரவர் கொள்ளும் மனோபாவத்தை பொறுத்ததே.
என்னை பொறுத்தவரை எழுதுவதற்கான எத்தனையோ வெளிகள் இன்னும் தொடப்படாமலேயே காத்துக்கிடக்கின்றன. பெண் எழுதுகிறார் என்றால், அவர் பெண்களை குறித்தே எழுத வேண்டும் என்ற சமுதாயத்தின் பொதுபுத்தியை கடந்து விடவே விரும்புகிறேன். 
இலக்கியத்தை பொறுத்தவரை, உணர்வுரீதியாக உள்வாங்க முடிந்த எவரும் எதையும் எழுதலாம் என்றாலும், அனுபவரீதியாக, நீங்கள் குறிப்பிடும் வலிகளை குறித்து, பெண்கள் எழுதுவது ஒரு நுாலிழையளவுக்கு நுணுக்கமானதாக இருக்கலாம்.

9)         தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற வேறுபாடு தேவை தானா?

நிச்சயமாக தேவையில்லை. ஆனால், ஆண்கள் இதை துாக்கி சுமப்பது எரிச்சலுாட்டுகிறது. அவர்கள் யார் சட்டாம்பிள்ளைகள் என்றாலும், சமுதாயம் அவர்களையும் உள்ளடக்கியதுதானே? இலக்கியத்தை அவர்கள் பொதுமைப்படுத்துவதில்லை. படித்த நுால்களின் பட்டியல், எழுத்தாளர்களின் பட்டியல் என்று ஆளுக்காள் சமுதாய வலைத்தளங்கள் உட்பட கிடைக்குமிடமெங்கும் பட்டியலிட்டு பகிர்ந்து விடுகிறார்கள். தீவிரமாக எழுதித்தள்ளும் ஒருவர், என்னுடைய சிறுகதைத்தொகுப்பொன்றை தான் வாங்கியிருப்பதாகவும், அதை அவரது மனைவி வாசித்து விட்டு அது குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதாவது பெண்ணெழுத்து, ஆண்கள் வாசிக்க தகுதியற்றது என்ற முன்முடிவிலேயே அவர் இயக்கப்பட்டிருக்கிறார். தமிழ்ச்சூழலில், எழுத்தாளர்கள், விமர்சகர்களாகவும் ஆகி விடுவதுண்டு. இவர்கள் சுட்டும் எழுத்துக்காரர்கள், எவ்வகையிலாவது அவர் குழுவைச் சார்ந்தவராகவோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவராகவோ இருந்து விடவே அதிகம் வாய்ப்புள்ளது.  பெண் எழுத்து என்றாலும், பெண்ணாக இருப்பினும்.. இப்படியான அடைமொழிகளோடு அவர்களிடமிருந்து எழும் குரல்களை நான் வெறுக்கவே செய்கிறேன். இலக்கியம் ஒரு சார்புடையதன்று. அது எல்லா தளங்களிலும் இயங்க வேண்டியுள்ளது. அனாவசியமான கூச்சலும் அவசியமற்ற ஆரவாரமுமாக படைப்பாளிகள் இட்டுக் கொள்ளும் சண்டைகள் அவர்களின் படைப்பின் மீதான மதிப்பை குறைத்து விடுகிறது.

10)      தீராநதி: உடல்மொழியை தான் பெண்கள் தூக்கி எழுதுகிறார்கள் என்கிற விமர்சனத்தை என்ன சொல்லுறிங்க?

ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். அதேநேரம் தேவைதான் அளிப்பை நிர்ணயம் செய்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. பெண் தன் உடலை துறப்பது என்பது அவளுக்கு முன்னிறுக்கும் சவால். அதை எழுதி கடக்க எண்ணியதிலும் பிழையில்லை. அதேநேரம் இவை குறைந்து வருவதும் ஆறுதல்தான்.

11)      தீராநதி: கல்வித்தரத்திலும், பொருளாதார நிலையிலும் மேம்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சிக்கு போவதற்கான காரணம்?

தற்கொலை என்பதை பால்பேதத்தில் அணுக முடியாது. படித்த பெண்கள் தற்கொலை செய்துக்கொள்ள சமுதாயமும் முக்கிய காரணமே. கல்வியில் ஆணை விட உயர உயர செல்லும் பெண், திருமணம் என்ற அமைப்பின் மூலம் பலவீனப்பட்டுப் போகிறாள். பணிச்சூழலில், துடிப்பும் அறிவுமான பெண்களை, ஒழுக்க வளையத்துக்குள் அளவீடு செய்து பலவீனப்படுத்தும் நிகழ்வுகள் நிகழாத இடம் ஏதுமில்லை. நுாற்றாண்டுகளாக அடைப்பட்டிருந்த வெளி, சட்டென்று நுழையும் காற்றிலும் வெளிச்சத்திலும் தடுமாறி போவது இயல்பே. அத்தடுமாற்றத்தை தங்களின் பலவீனமாக உணரும் பெண்கள் தற்கொலையை தீர்வாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று கருதுகிறேன். அதேநேரம் இத்தடுமாற்றத்தின் இடைவெளிக்குள் அடிப்படைவாதம் புகுந்து விடும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.

12)      தீராநதி:விழிப்புணர்வுகளும், பகுத்தறிவுகளும் அதிகமாக வெளிப்படும் இக்கால சூழலில் தான் பெண்களுக்கான வன்முறைகளும் அதிகமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென தோன்றுகிறது?

மீண்டும் அந்த கற்பிதத்திற்கே வருகிறேன். விழிப்புணர்வு என்பது குறித்து சமுதாயத்தில் நிலவும் கருத்து சரியான புரிதலுடன் இருப்பதாக நான் கருதவில்லை. இது மிகவும் பிற்போக்கான, அடிப்படைவாதத்தையே முன்னெடுக்கிறது. உடல் குறித்த விழிப்பு, கற்பை பேணுவதில்தான் கரை சேருகிறது. ஆண் பிள்ளைகளை மதர்த்தப்போக்குடன் வளர்த்தெடுப்பதில், பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகமே. தாயோ, தமக்கையோ, தங்கையோ, காதலியோ, மனைவியோ, மகளோ யாராக இருப்பினும், பெண் உறவுகள் மீது ஆண் கொள்ளும் “பாதுகாத்தருளும்“ உணர்வின் நீட்சியே வன்முறைக்கானதும் கூட.  அறம்சார்ந்த விழுமியங்கள் சரிந்து வருவதில், பெண்களை மீண்டும் இருளறைக்கு அனுப்பி விடும் அபாயமும் கலந்திருக்கிறது.

13)      தீராநதி: திருவண்ணாமலையில் என் சிறகுகள் என்கிற பெண் எழுத்தாளர்களர்களின் கூட்டமைப்பு நிகழ்வு நடந்த போது, எழுத்தாளர் பரமேஸ்வரியோடு எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் பற்றி விமர்சனம் நிகழ்த்திய போதே ஜெயமோகனின் எழுத்து ப்ரியை என்பது உணர முடிந்தது. ஜெயமோகனின் எந்த படைப்பு கலைச்செல்வியை தொட்டது?

இலக்கியம் என்பது ஒரு அறிவார்ந்த தேடலும்தான். நம் தேடலோடு ஒத்திருக்கும் படைப்புகள் நம் மனதை நிறைப்பது ஒன்றும் புதிதல்ல. அவரின் “காடு“ வழியாகவே அவரை கண்டடைந்தேன். விரிந்து பரந்திருக்கும் அவரின் படைப்புவெளியில் நிறையவே என்னை கவர்ந்திருக்கின்றன.

தீராநதி: பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை கண்டமேனிக்கு விமர்சிக்கும் படைப்பாளர், பெண் எழுத்தாளர்களை ஜெயமோகன் மதிப்பதேயில்லை என்கிற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

ஆழமான நுட்பமான பெண் படைப்பாளுமைகளை பாராட்டவும் அவர் தயங்கியதில்லை.  ஆஷாபூர்ணாதேவியையும் குர்ரதுலைன்ஹைதரையும் அவர் வழியாகவே நான் கண்டடைந்தேன். மஹாசுவேதாதேவி மற்றும் நம் அம்பையின் சில படைப்புகளிலும் பெண்ணெழுத்துகளிலும் பிரச்சாரத்தொனி தென்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.  ஒடுக்கப்படும் வெளிகளை, வெளிச்சத்திலிடுவது என்பது காலத்தின் தேவை என்பதை யாரும் மறுக்கவியலாது.

14)      தீராநதி: சுதந்திரமான எழுத்தை வெளிப்படுத்துகிறேன் என சொல்ல முடியுமா?

தடைகள் இல்லாமலில்லை. ஆனால் இப்போதைக்கு, ஒரளவு சுதந்திரமாக செயல்படுகிறேன் என்றே கருதுகிறேன். 

15)      தீராநதி: இலக்கிய உலகில் பெண்களுக்கான பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை கலந்துக்கொண்ட நிகழ்வுகளிலிருந்து சொல்ல முடியுமா?

வாசிப்புப் போதாமை. அதிலிருந்துதான் எழுத்திற்கான போதாமை ஏற்படுவதாக தோன்றுகிறது. இங்கு இலக்கியம் என்பது குறுங்குழுக்களுக்குள் குறுகிக்கிடக்கிறது. குறுங்குழுவாசிகள் ஒருவரையொருவர் புகழ்ந்துத் தள்ளிக் கொள்கின்றனர்.  தெளிவான தீர்க்கமான விமர்சனம் என்ற ஏதொன்றும் பெரும்பாலும் இங்கிருப்பதாக தோன்றவில்லை. வேண்டப்பட்டவரின் படைப்பு, வேண்டப்படாத குழுவினை சேர்ந்த படைப்பு என்பதாகவே பெரும்பாலும் இங்குள்ள விமர்சனப்போக்கு அமைந்துள்ளது. சுயதம்பட்டங்கள், சுய விளம்பரங்கள் இவற்றின் வழியே தங்களை முன்னிறுத்துவதை விட, படைப்பின் வழியே முன்னிறுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

தீராநதி: கலைச்செல்வியின் படைப்புகள் எவையெல்லாம் கல்லூரித்தளங்களில் பாடப்புத்தகமாக அமைந்திருக்கிறது?

நேரு மெமோரியல் கல்லுாரி மற்றும் பிஷப்ஹீபர் கல்லுாரி, திருச்சியில் என் நாவல்கள் பொதுத்தமிழ் பிரிவில் பாடமாக்கப்பட்டுள்ளது.

தீராநதி: தற்போது வெளியான அற்றைத்திங்கள் நாவலின் மையம்?

வளரும் நாடுகளில் எதேச்சையாகவும், திட்டமிட்டும் அழிக்கப்படும் காட்டு வளங்களின் மீதிருக்கும் குறைந்தப்பட்ச அக்கறை கூட அங்கு வாழும் பழங்குடியினரின் மீது காட்டாத அதிகாரத்தின் அலட்சியத்தை மையப்படுத்துகிறது “அற்றைத்திங்கள்“.

தீராநதி: இலக்கியம் கொடுத்த விருதுகள்?

எனது “சக்கை“ நாவலுக்கு ‘தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற விருதும்’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும்’ கிடைத்தது. வலி சிறுகதைத்தொகுப்புக்கு ‘கவிதை உறவு’ பரிசும், இரவு சிறுகதைத்தொகுப்புக்கு ‘பாரதி கலை இலக்கிய பேரவை’ பரிசும், ‘நாங்கள் இலக்கியகம் அமைப்பின்’ பரிசும் கிடைத்தது. புனிதம் நாவலுக்கு ‘புதுக்கோட்டை புத்தகக்கண்காட்சி விருது’ கிடைக்கப்பெற்றது. தற்போது வெளியான மாயநதி தொகுப்புக்கு “தாழ்வாரம்“ அமைப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதளித்தது. கணையாழியில் சிறந்த சிறுகதைக்கான விருது, திருப்பூர் அரிமா சங்க விருது போன்ற விருதுகளோடு 2017 ஆண்டுக்கான இலக்கிய சிந்தனை விருதை கணையாழியில் வெளியான எனது சிறுகதை “அலங்காரம்“ பெற்றது. போடிமாலன் பரிசுப்போட்டியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் என் சிறுகதை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை வென்றது. கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012 இரண்டாம் பரிசு, தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2013ல் முதல் பரிசு, சிகரம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு மற்றும் பற்பல சிறுகதைக்களுக்காக பல பரிசுகளையும் பெற்றிருக்கிறேன்.

***

Tuesday 28 May 2019

தடம்

அதன் எல்லைகள் நீண்டு
கூர்மையான ஒற்றைக் கோடுகளாகின்றன
அதன் கற்றைகள் 
வீச்சம் கொண்டு பரவுகின்றன
ஆம். ஆணவத்தின் குணமே அதுதான்
அவை ஆளற்ற வெளி என்றுணராது
வெற்றிக் களிப்போடு முட்டி மோதுகின்றன
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்
அதன் தடம் வேறெங்கும் பதியவில்லை.