Search This Blog

Wednesday 25 April 2018

அவை ஊளையிடுகின்றன

ஏப்ரல் 2018 தடம் இதழில் வெளியான சிறுகதை


சுவரின் மறுபக்கம் அவை உறும தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால் அந்த ஒலியே அவளை மருள வைத்தது. கைகள் இரண்டையும் மடித்து உடலை குறுக்கி சுவரோரமாக பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்று விடலாம். ஆனால் அது வெகு சில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறி விடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பது போலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டி பார்க்கும்போது யாதும் தட்டுப்படுவதில்லை. ஆனால் அது கூட வெகு சில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படிதானோ.. சுவற்றோடு காதை நெருக்கி வைத்துக் கொண்டாள். இல்லை.. அவை நடமாடுகின்றன. அவளை கண்காணிப்பதற்கு தோதான இடத்தை தேடி அங்குமிங்கும் அலைகின்றன.  விறுக்கென்று அடி வயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

அவளை கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படிதான் உருவப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து தான் கண்காணிப்பில் இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். உறுமல்கள் சன்னமாக கூடின. பிறகு குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு அடக்க முடியாததாகி விடும். நாலைந்து.. இல்லையில்லை.. ஏழெட்டு இருக்கலாம்.. அடர் கருப்பில்.. அல்லது திட்டுதிட்டான கருப்பில்.. வெளிர் செம்மண் நிறத்தில்.. நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும்.. தாட்டியமாகவும்.. இடைவிடாது குலைக்கும் சுபாவத்துடனும் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுதானிருந்தது. ஆனாலும் உளுத்துப் போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்கு பாதுகாப்பு.. வீடு அவளுக்கு பாதுகாப்பு.. வீடு என்றாலே பாதுகாப்புதானே.. அதுவும் நிறைந்த வீடென்றால்.. கணவன்.. மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்ட தொடங்கியபோது அகல கால் வைக்கிறோமோ..? அவளுக்கு பயம் வந்தது. கணவன் சொன்னான்.. “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்கு பயம் வந்தது.. ”மூணு பயலுவன்னு ஆயிடுச்சு.. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூம்பா தடுத்ததுட்டா நல்லாருக்கும்..” அவள் சொன்னாள். “நல்லாதான் இருக்கும்..” ஆமோதித்தான். இரட்டை கட்டு வீடோ.. முற்றம் வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும் முன்கூடம்.. சமையலுக்கு ஒன்று.. பத்தாயம் வைக்க ஒன்று.. படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளை புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும்.. விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாட்கள் கடந்தபோது அந்த தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை.. அல்லது யாரும் உணரவில்லை. 



ஆழமான பரவல்


மார்ச் 2018 தளம் இதழில் வெளியான சிறுகதை

சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன் போல அவ்வப்போது கேரட் பொறியலையும், வெண்டைக்காய் வதக்கலையும் தொட்டுக் கொண்டான். வாழைக்காய் வறுவலை சட்டை செய்யாமல் இடதுக்கையால் குழம்பை சோற்றில் ஊற்றிக் கொண்டே குப்புறக்கிடந்த கத்திரிக்காயோடு சோற்றை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான்.



கதிர் அப்போது சிறுவனாக இருந்தான். கிட்டத்தட்ட குண்டானில் இருந்த முழுச்சாப்பாட்டையும் முடித்த போதும் வயிறு வலித்தது அவனுக்கு.. ஆனால் பரவலாக வலிக்கவில்லை. வயிற்றின் ஆழத்தில் வலி. அதுதான் தொடக்கம். அதை அப்படியே விட்டுவிட்டால் பரவலாகி விடும். நழுவும் டவுசரால் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டாலும் வலி நிற்காது. வலி வரும்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புரிய முடிந்தாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் போதவில்லை. தங்கை எதற்கோ அடம் பிடித்து அழ, அவள் தட்டிலிருந்த சோற்றை சாப்பிடும் எண்ணத்தோடு அருகே சென்று.. பிறகு அம்மாவின் எரிச்சல் பார்வைக்கு பயந்து விலகி ஓடினான். எங்கு ஓடினாலும் வயிறும் கூடவே வந்து விடுகிறது. பள்ளியில் இருக்கும் போது.. விளையாடும்போது.. ஏன் துாங்கும்போது கூட வயிறு அவனை விலக்குவதில்லை.

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.



வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி  மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது.


தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.  காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால்  சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்..  உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.

பிரியாணி


கணையாழி ஜனவரி 2018ல் வெளியானது.

கண்களை திறக்க முடியவில்லை அவளால். ஆனாலும் மூடிய இமைக்குள் விழிகள் எதையோ தேடுவது போல அவ்வப்போது நழுவி ஓடி நின்றன.  அக்கம்பக்கத்து அஞ்சலம் அத்தை.. மரகதம் பெரீம்மா.. மாரியம்மா அக்கா.. கெங்கா சின்னம்மா.. எல்லோரும் அவளை எழுப்பி உட்கார வைத்து காபி கொடுப்பது நிஜமாக நடப்பது போலவே இருக்கிறது. ஒருமுறை சைக்கிளில் அடிப்பட்டு பேச்சு மூச்சின்றி கிடந்தபோது அப்படிதான் எழுப்பி உட்கார வைத்தனர். ஆனால் இப்போது வாயில் காபியும் இல்லை. அருகிலும் யாருமில்லை. ஏதேதோ நினைவுகள் மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தன.



என்றுமில்லாத திருநாளாக அவளின் எண்ணவோட்டங்களில் அம்மாவும் இருந்தாள். அவளை இடுப்பில் துாக்கிக் கொள்ள முயன்றாள்.. ஆனால் பதிமூன்று வயது பெண்ணான இவளால்தான் இடுப்பில் ஏறிக் கொள்ள இயலவில்லை. கால்கள் நீண்டு விட்டன. தரையை தொட்டு விடுமோ..? சிரிப்பு வந்தது. அவளுக்கு எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். சென்ற வருடம் பெரியவளான தருணத்தில் ‘பொசுக்குபொசுக்குன்னு பொட்டச்சிக்கு என்னாடீ சிரிப்பு..’ என்றாள் திண்ணைக் கிழவி ஒருத்தி. “இனிம சிரிச்சன்னா வாய் மேலயே போடுவன்..“ கனகாக்கா விளையாட்டாக கையை ஓங்க அப்போதும் சிரிப்பு பொங்கி வந்தது அவளுக்கு. இடுப்பிலிருந்து கால்கள் வழிந்து தரையை தொடுவதை நினைத்தபோதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பதற்கு வாயை விரிக்க முனைந்தபோது கன்னங்கள் தீப்பிடித்தது போல் எரிந்தன. “ம்மா..“ தன்னையுமறியாமல் அனத்தினாள். மிக சன்னமான ஒலி. கிழிந்து கிடக்கும் வாயிலிருந்து அவ்வளவு ஒலியே அதிகம்தான்.