Search This Blog

Tuesday 30 May 2017

தேனி விழா அழைப்பிதழ்

கா.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதைப் போட்டி அழைப்பிதழ்


சவுந்தரி

ஜுன் 2017 செம்மலரில் வெளியானது

மேலும் கீழுமாக மல்லிகைப் பூக்களை அடுக்கி விறுவிறுப்பாக நுாலால் பிணைத்தாள் சவுந்தரி. இடையில் தட்டுப்பட்ட சுணைப்பான சிறு மல்லிகைக் குச்சி காப்பேறிய விரல்களை கடக்க முடியாமல் நழுவி விழுந்தது. நேற்று மொட்டுப்பூவாய் ஒதுங்கியவை. நீர் தெளித்து பதமாக்கி வைத்திருந்தாள். பூக்கள் மென்மையானவை என்று எந்த பூக்காரியும் சொல்வதில்லை.

பூக்காரி.. சொல்லிப் பார்த்துக் கொண்டாள் சவுந்தரி. பூக்கட்டுவது ஒன்றும் கேவலமான தொழில் அல்ல.. பூக்காரி.. வேலைக்காரி.. என்ற விளித்தல்தான் கொச்சையானது. பூக்காரம்மா.. என்று சொல்லலாம்.. அம்மா என்று விளிக்குமளவுக்கு இன்னும் வயது ஏற வேண்டும் வயது எத்தனை ஏறினாலும் பூ வியாபாரத்திற்கு முகத்தில் ஒரு களை.. தேஜஸ் தேவைப்படும்.. சவுந்தரிக்கு இருந்தது. அதில்தான் பிரபு மயங்கினான். இன்றும், பதினான்கு வயது சிறுவனான மகனும் அவளை மயக்கிக் கொண்டுதானிருக்கிறான் அவளின் உலகம் அதில் நிறைந்துக் கொண்டிருந்தது.. அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருந்தாள். அப்படிதான் எண்ணவும் வேண்டும். வேறு வழியில்லை.

Saturday 27 May 2017

மினமாட்டா

காக்கைச் சிறகினிலே, பிப்ரவரி 2017ல் வெளியானது




வானுார்தியின் வழி்யே சிறிதாகி கிடந்தது பூமி. சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் ரமேஷ். சிறுநீரக மருத்துவ நிபுணர். மகள் நிகிதா மனதை ஆக்ரமித்திருந்ததில் எதையும் ரசிக்க தோன்றவில்லை. மனைவி ஆர்த்தியின் மடியில் நினைவற்று கிடந்தாள் நிகிதா. மூன்று வயது. பத்து வருட தாம்பத்தியத்திற்கு பிறகு தாமதமாக ஜனித்த குழந்தை. மழலை மொழியில் உலகின் அத்தனை கேள்விகளையும் கேட்டு விடுவாள். இந்தியாவிலிருந்து கிளம்பும்போது இரண்டரை வயதிலிருந்தாள். கண்ணாடியின் வழியே தெரிந்த அதிசயங்களை மழலையால் கடத்திக் கொண்டு வந்தவள் இப்போது எவ்வித சலனமுமற்று தாயின் மடியில் கிடந்தாள்.

தீவு சுற்றுலா நிறைவடைய இன்னும் ஆறுமாதம் மீதமிருந்தது. அழகான தீவு அது. கடலும், காற்றும், உறைக்காத வெயிலும் நிறைவூட்டுபவையாக இருந்தன. கடலின் இடைவிடாத இரைச்சல் கூட கிளர்ச்சியூட்டுவதாக தோன்றியது. அடர் வனமாக இல்லையெனினும் பெயர் தெரியாத மரங்கள் ஆங்காங்கே நின்றிருந்தன. மற்ற ஜீவராசிகள் அதிகம் தென்படவில்லை. தனது தனித்திறமையால் மருத்துவராகி.. நகரின் பிரதான தனியார் மருத்துவமனையின் தலைமை பொறுப்பில் அமர்ந்திருந்தான். பரபரப்பான பதிமூன்று வருட வாழ்க்கையில் ரமேஷ’க்கு இந்த தனிமையின் சுவை சற்று கூடுதலாகவே பிடித்தது. நகருக்கு ஒருவராக பத்து மருத்துவர்களுக்கு இந்த அதிசய வாய்ப்பு கிட்டியிருந்தது. அனைவரும் வெவ்வேறு துறை வல்லுநர்கள். தீவில் முழுக்க முழுக்க இயல்பாக வாழ முடிந்ததில் எல்லோரும் நண்பர்களாகி விட்டனர். ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கவிருக்கும் பெருந்தொகையில் பல்நோக்கு மருத்துவமனை கட்டும் மெகா அளவிலான திட்டம் கூட வகுத்துக் கொண்டார்கள்.

Friday 26 May 2017

அழகிகள்

டிசம்பர் 2015 தாமரையில் வெளியானது

பெண்கள்.. தொலைக்காட்சியின் திரையெங்கும் பெண்கள்.. மிக மிக ஒடிசலான பெண்கள்.. மிக மிக குறைந்த உடையில் மிக அதிக ஒப்பனையில் மிக உயர்ந்த குதிகளைக் கொண்ட காலணிகளை அணிந்து கால்களை பின்னி பின்னி நடந்தார்கள். ஒயிலாக தனது பின்புறத்தை அசைப்பதற்கு எத்தனை நாட்கள் பயிற்சி தேவைப்பட்டதோ தெரியவில்லை. விருதுகளில் செதுக்கியிருக்கும் பெண்ணுருவங்கள் போல நெளிவாக.. நளினமாக.. யார் பெற்ற பெண்களோ..?. இது வெறும் ஒத்திகை நிகழ்ச்சிதான். அதையும் நேரலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். காமிராக்கள் அவ்வப்போது மொய்த்துக் கிடந்த கும்பலை ஊருடுவி, மீண்டும் அழகிகளில் நிலைத்தது. கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலுமே ஏதோ ஒருவகையில் அழகிப் போட்டி பற்றிய செய்திகள் ஓடிக் கொண்டேயிருந்தன. “எதெதுக்கு முன்னுரிம குடுக்கறதுன்னு வெவஸ்தயே கெடையாது இவனுங்களுக்கு.. கல்லா ரொம்புனா போதும்.. பார்த்தா தானே நீ காட்டுவே..“ பற்றிக் கொண்டு வந்தது கார்த்திகேயனுக்கு. பொட்டென்று தொலைக்காட்சியை அணைத்தான்.

மயூரநாதனிடம் உடனடியாக பகிர்ந்துக் கொண்டால்தான் தேவலை என்றிருந்தது அவனுக்கு. கரூர் டிவிஷனில் வேலை செய்பவன். ஒரே ரிங்தான் அடித்திருக்கும். மறுமுனை உடனே எடுக்கப்பட்டது. சொல்லி வைத்ததுப் போல மயூரநாதனும் அதையே ஆரம்பித்தான்.  

”உலக அழகி போட்டியெல்லாம் எப்படிப்பா போய்ட்டுருக்கு ஒங்க சென்னையில..?”

Wednesday 24 May 2017

கேசரி

அக்டோபர் 2015 செம்மலரில் வெளியான சிறுகதை





நெய் விளம்பரத்தி்ல் சொல்வதுப் போல மணல்மணலாய் ரவை. நெய்யின் உபயத்தில் கரண்டியில் சரித்துக் கொண்டு வரும் இலாவகம். உமிழ்நீர் சுரப்பிகளை துாண்டுவதற்கே உருவாக்கப்பட்டதுப் போன்ற ஆரஞ்சு வண்ணம். நெய்யில் பொன் முறுவலாகி பரவலாக சீராக வெட்டப்பட்ட கிடந்த முந்திரி துண்டுகள். சிறிய வெள்ளை நிற அலுமினிய வாணலியில் இருந்த ஆரஞ்ச் வண்ண கேசரி உண்ணும் ஆசையை உசுப்பி விட ஆவலோடு எடுக்கும் நேரத்தில் அலாரம் சத்தமிட்டது. கனவு என்று அவளின் மூளை உணர்த்தினாலும் ஆசை அடிமனதோடு ஒட்டிக் கொண்டது. அல்லது அடிமனதில் துாண்டப்பட்ட ஆசை கனவாக வெளிப்பட்டிருக்கிறது.

நேற்று மதியம் தொலைக்காட்சியின் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த அவளின் கணவர்  சமையல் நிகழ்ச்சி என்றதும் விரலைச் சொடுக்க தயங்கிய நொடியில் குளோஸப் காட்சியில் கேசரியை யாரோ செய்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனைவியிடம் ரிமோட்டை நீட்டியப்படி பிரம்பு நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார். விலாவாரியான ஒரு மணி நேர செய்தி இன்னும் ஒரு மணி நேரத்திற்கு அவருக்கு போதுமானதாக இருக்கும். கேசரியைப் போய் செய்யக் கற்றுத் தருகிறார்களே என்ற கேலியுணர்வுடன்தான் முதலில் பார்க்கத் தொடங்கினாள் அவள். வருடம் தவறாமல் மகளின் பிறந்தநாளுக்கு கேசரிதான் செய்வாள். மாப்பிள்ளையாக நெய் வடியும் கேசரியைச் சாப்பிட்டு சம்மதத்தைத் தெரிவித்து விட்டுப் போன கணவருக்கு இன்னமும் மச்சினன் வீடுகளில்  இலையில் முதலில் வந்து விழுவது கேசரிதான். சர்க்கரைக்கு பயந்து அவர்தான் தொடுவதில்லை. அந்த டிவிப் பெண் நெய்யில் வறுத்த முந்திரியைக் கொண்டு கேசரியை அலங்கரிக்கும் போது தான் இவளுக்கு கேசரி உண்ணும் ஆவல் பிறந்திருக்க வேண்டும்.

நெனப்பு

நவீன விருட்சம் நுாறாவது இதழில் (அக்டோபர் 2016) வெளியான சிறுகதை 

மகளுக்கு பொங்கல் சீருக்கான சாமான்களைக் கூட்டிக் கொண்டிருந்தாள் மரகதம். கரும்பங்கட்டு.. பச்சபயறு.. பச்சரிசி.. மண்டவெல்லம்.. வாழைத்தாரு.. கவுளி வெத்தலை... மஞ்சக்கொத்து.. எடுத்து வைத்தவைகளை வாய் விட்டு சொல்லிக் கொண்டாள். ஒன்று விடுபட்டாலும் சம்மந்தியம்மாளுக்கு கோபம் வந்து விடும். வயது அறுபதை கடந்து விட்டதில் ஒன்று நினைத்தால் ஒன்று மறந்து விடுகிறது.

“இன்னது இன்னதுன்னு ஒரேடியா சொல்லு.. காரு கௌம்பன பொறவு ஒண்ணொன்னா நெனச்சு நெனச்சு சொல்லுவோ..” முணுமுணுப்பாக சொன்னார் சின்னய்யா.

”ஆமா.. வேணும்ன்னுல்ல பண்றாவோ..” வேடு கட்டிய தலை மயிரைத் தட்டிப் போட்டு நுனியில் முடிந்துக் கொண்டாள்.

”காதெல்லாம் கூருதான் கெழவிக்கு..” சிரித்தார். நிலைமையை சமாளிக்கவுமான சிரிப்பு.

கோபித்துக் கொண்டவர்கள்

செப்டம்பர் 2015  சிலேட்டு இதழில் வெளியான சிறுகதை

உணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார் அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.

சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.

Tuesday 16 May 2017

பிரசவ வெளி

 டிசம்பர் 2014 தாமரையில் வெளியான சிறுகதை

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.  

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள்; தெளிவற்று தெரிpந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

ஆறாவது விரல்

செப்டம்பர் 2015 தாமரையில் வெளியானது

நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வெளிச்சம் பரப்பிய சூரியன் சாரலுக்கு வெட்கி எங்கோ நகர்ந்து விட கூரைகளற்றுப் போன உயர்மரங்களுக்கு கருமேகங்கள் மேற்புற கவசமிட்டன. காற்றுக்கும் அவனின் மேற்சட்டைக்குமானப் போராட்டத்தில் சட்டை விலகி காற்றுக்கு வழிவிட்டு உப்பலாகிப் போனது. சற்றே தொளதொளத்த முழுக்கால்சட்டை வம்புச் செய்யும் மனமின்றி காற்றின் போக்குக்கு தன்னை அனுசரித்துக். கொண்டதை படபடப்பாக வெளிப்படுத்தியது. சாரல் அடர்வாகி மழையானதில் காற்று ஈடுக்கொடுக்க முடியாமல் நகர்ந்து விட ஈரமான உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கியது

ஜீப்பை நோக்கி மெதுவாகவே நடந்தான் அவன். கியர்ராடில் ஒரு கையும் ஸ்டியரிங்கில் ஒரு கையுமாக வைத்தவனுக்கு கிளம்ப மனமின்றி போனதில் சாவியை திருகி இன்ஜினை அணைத்தான். கைகளைக் கட்டிக் கொண்டு ஆசுவாசமாக பார்வையை வெளியே செலுத்தினான். காட்டு ஓடை அது. நெல்லிக்கனிகளைச் சாக்குப்பையிலிருந்து சிதற விட்டதுப் போல கூழாங்கற்கள் விதவிதமாக அளவுகளில் ஓடையை நிரப்பியிருந்தன. மிக மெல்லிய ஓட்டத்தில் ஆழமற்று ஸ்படிகம் போல் தெளிந்திருந்தது ஓடை நீர். அதில் கண்ணாடியாய் தெரிந்த மணல் விரிப்பில் சிறு மீன்கள் அங்குமிங்கும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடின. கரிய சிறிய மீன்கள். கைக்கு அகப்பட விரும்புதில்லை. அவன் அமர்ந்திருந்த பாறை மழையில் நனைந்திருந்தது. கீழே ஒடுங்கலாகவும் மேலே பரந்துமிருந்த அந்தப் பாறை கால்களை தொங்க விட்டுக் கொண்டு  உட்கார ஏதுவாக இருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

வீடு

 மே 2016 தாமரையில் வெளியான சிறுகதை

யாருமற்ற வெளியில் இயங்குவது தனிச்சுகம்தான். வீட்டின் சலசலப்புகளற்ற மொட்டை மாடியில் வானத்தை பார்த்துப் படுத்திருப்பது அதனை ஓரளவு சாத்தியப்படுத்தியது. படர்ந்து கிடந்த வானவெளியில் சிதறியிருந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சமிக்கைச் செய்ய மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு ஜாலம் காட்டிய நிலவு மகிழ்ந்துப் போய் மதிமுகம் காட்டியதில் முழு வட்டம் பெற்றது. முழுமைப் பெற்ற இன்பத்தை நிலவு ஒளியாக்கிப் பரப்ப, பூமி விருப்பத்தோடு அதில் தன்னையும் இணைத்துக் கொண்டது. கண்களுக்கு நிறைவான நிலவொளி உலகியல் தொடர்புகளற்ற உறுத்தாத பயணத்தைச் சாத்தியப்படுத்தியதில் மனம் நிரம்பிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் குற்றம் புரியும் மனப்போக்கு கொண்டவர்களை நிலவொளியில் நனைய வைத்தால் குற்றமற்ற சமுதாயத்தை வளர்த்தெடுக்கலாம் என்பேன். மனத்தின் வெளிகள் திறந்துக் கொள்வது வாழும் போதே நிறைந்துப் போவதையொத்தது.

காடுகள் கூட மனவெளிகளுக்குள் ஊடுருவக் கூடியவைதான். துாரத்துக் காடுகள் பயமூட்டுபவை. விஷப்பூச்சிகளையும் கொடும் மிருகங்களையும் தன்னுள்ளேக் கொண்டவை. மரங்களாலும் கனிமவளங்களாலும் ஆக்கப்பட்டவை. மழைகளாலும் சேறுகளாலும் நிரம்பியவை. ஆனால் அண்மைக்காடு அமைதியானது. ஆர்ப்பரிப்பற்றது. புதிர்களை உள்ளடக்கியிருப்பது. ஏகாந்தத்தின் எல்லை வரை பயணிக்கும் உரிமைப் பெற்றது. விசித்திரங்களை.. வீரியங்களை தனக்குள் புதைத்து.. அவிழ்க்க முற்படுவோர்க்கு அகப்படமால் சுரந்துக் கொண்டே போவது.

மீட்சி

சிகரம் சிறுகதைப் போட்டியில் 2017ல் பரிசு பெற்ற சிறுகதை

போர் மேகங்கள் சூழ்ந்துடுச்சு..” சிரித்தான். அதெல்லாம் பொதுமக்களுக்கு. உண்மையில் போர் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அதைதான் கிண்டலடிக்கிறான் இந்த நிலையிலும்.

”அப்றம்.. நீங்க அடிச்சா நாங்க திருப்பி அடிக்க மாட்டோமா..? கோபமாக திருப்பிக் கேட்டான். சாகக்கிடக்கிறவனுக்கு நக்கல் ஒரு கேடு.. இவனை.. ஒரேயடியாக முடிக்கக் கூடாது. அணுஅணுவாக இரத்தம் சிந்தி சித்ரவதையோடு சாகணும்.

”உண்மையா சொல்லு.. என்ன பாத்தா உனக்கு அடிக்கணும்.. கொல்லணும்னு தோணுதா..” எங்கோ அடிப்பட்டு தெறித்து விழுந்திருக்கலாம். அதுவும் எல்லையை தாண்டி. பிழைத்தே எழுந்தாலும் இனி ஒருபோதும் அவன் தன் தாய் நாட்டை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டான்.

இரவு

தமுஎகச -போடி மாலன் 2016 போட்டியில் பரிசுப் பெற்ற கதை

பால் ஆடைக் கட்டிப் போயிருந்தது. ஒரு செயலை செய்வதற்கான எண்ணம் எழாமல் அதனைச் செய்யவே முடியாது போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. பால் குடிக்கத் எண்ணமில்லை என்பதை இத்தனை பெரிய வார்த்தைகளுக்குள் மனம் அடைத்ததை வெளியிலிருந்து பார்ப்பது போல கவனித்தாள். iகையிலெடுத்த டம்ளரை டீப்பாயில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி.. கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டோடு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி பூஜை.. புனஸ்காரம் என்ற ஆன்மீக தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன் இவர்களோடு தானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தாகி பத்து நிமிடங்களாகி இருந்தது.

மகளிர் தின விழாவில்..

ஜெ.ஜெ.கல்லுாரி புதுக்கோட்டையில் .8.3.2017


வளரும் படைப்பாளர் விருது

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் “வளரும் படைப்பாளர் விருது பெற்ற நிகழ்வு 25.02.2017


தஞ்சை வட்டார படைப்பிலக்கிய நுால் வெளியீடு

உலக தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “தஞ்சை வட்டார படைப்பிலக்கிய“ நுால் வெளியீட்டில்.. 26.11.2016


சக்கை நாவருக்கு விருது

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் “சக்கை“ நாவலுக்கு விருது வழங்கிய நிகழ்வு 12.11.2016


நாவல் வெளியீடு


எழுத்து பதிப்பகம் வாயிலாக எனது நாவல் “புனிதம்“ வெளியான போது 1.10.2016

“இரவு“ சிறுகதை தொகுப்பு முதல் பரிசு பெற்ற தருணத்தில்..

பாரதி கலை இலக்கிய பேரவை கம்பம் அமைப்பில் “இரவு“ சிறுகதை தொகுப்பு முதல் பரிசு பெற்ற தருணத்தில்.. 15.08.2016



பரிசு பெற்ற தருணம் 10.07.2016

தமுஎகச - போடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற தருணம் 10.07.2016


திருப்பர் தமிழ்ச்சங்க விழாவில்..

திருப்பர் தமிழ்ச்சங்க விழாவில் “சக்கை“ நாவல் விருது பெற்ற தருணம் 27.02.2016


கணையாழி பொன்விழாவில்

கணையாழி பொன்விழாவில் சிறந்த சிறுகதைக்கு பரிசு பெற்ற தருணத்தில் 27.06.2015


முதல் பரிசு பெற்ற நிகழ்வில்..

தமுஎகச - போடி மாலன் நினைவு சிறுகதை போட்டி 27.08.2014


சாகித்ய அகாடமி கூட்டத்தில்...

.28 மார்ச் 2014

முதல் பரிசு பெற்ற நிகழ்வில்..

தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதை போட்டி 2013ல் முதல் பரிசு பெற்ற நிகழ்வில்..



தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி

தினமணி -  நெய்வேலி புத்தகக் கண்காட்சி  2012 பரிசளிப்பு விழாவில்.. எனது முதல் கதை.. இரண்டாம் பரிசு


தமிழ்நாடு முற்போக்கு பன்முக மேடை நிகழ்வுகள்

No automatic alt text available.

முகநுாலிலிருந்து

பிழைப்புவாதிகளுக்கு எத்தனை முகங்கள்..? நேற்று ஒரு முகம் வெளிப்படுகிறது.. இன்னும் என்ன வேண்டும் தமிழக மக்களிடமிருந்து பிடுங்குவதற்கு.. முதுகெலும்பற்ற.. அதீத சுயநல போக்குடைய.. எந்த பொது பிரச்சனைக்கும் போராடாத.. குரல் கொடுக்காத.. தன்னிடமிருப்பதை கிள்ளிக் கூட கொடுக்கவியலாத ஒரு மனிதன் இன்று நம்மிடமிருந்து எடுக்க நினைப்பது எதை..? பணம்.. பகட்டு.. என திகட்ட திகட்ட அளித்து விட்டோம்.. இன்று அதிகாரத்தை எடுத்துக் கொள்ள விழைகிறார். ஆசை.. யாருகில்லை ஆசை..? அது நியாயமானதாக இருக்க வேண்டும்.. அந்த பெரியவரை போன்ற குழப்பவாதிகளுக்கு நாம் ஏற்கனவே கொட்டி கொடுத்து விட்டோம்.. இனியுமா..? ஞானம் என்பது நம்முள்ளிருந்து கிளைக்க வேண்டு்ம்.. நீ தேடு.. ஓடு.. ஆனால் எங்களை விட்டு விடு.. நாங்கள் ஏற்கனவே பலவீனப்பட்டுள்ளோம்

Thursday 11 May 2017

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலிருந்து

“மஞ்சுக்குட்டி“ சிறுகதைக் குறித்து..

லைச்செல்வியின் மஞ்சுக்குட்டி வழக்கமாக பெண்கள் எழுதும் குடும்பச்சித்திரத்தைஅல்லது பெண்ணியக் கொள்கைகளையோ நோக்கிச் செல்லாமல் சற்று அசாதாரணமான ஒரு வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு என்று நினைக்கிறேன். ஜி.நாகராஜன் முதல் இமயம் வரை எழுதிக்காட்டிய அடித்தள மக்களின் வாழ்க்கை. அங்கு செயல்படும் இச்சை,வன்முறை. அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாடு.
பலவகையிலும் இயல்பான மொழிநடையுடன் ,அயர்ச்சி தெரியாது எழுதப்பட்டுள்ளது இக்கதை .தமிழில் வழ்க்கமாக இத்தளத்தில் எழுதப்படும் கதைகளில் இருக்கும் வலிந்த சித்திரங்களும் இல்லை. சுப்ரபாரதிமணியன் பாவண்ணன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அடைந்த இயல்பான தொடக்கம்சரளமான உரையாடல்நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்கு சென்று மீண்டும் வருதல் என்னும் ஊசலாட்டம் ஆகியவை சிறப்பாக இக்கதையில் அமைந்துள்ளன்நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதையில் நிகழ்ந்துள்ளது

Wednesday 10 May 2017

முகநுால் பதிவிலிருந்து..

சாதியம் என்பது ஒரு  உயர்   மனோபாவம். நீ தாழ்ந்தவன்.. என்பதை வரையறுக்கவும், நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உறுதிப்படுத்தவும். எந்நாளும் இதன் தேவை குறையப் போவதில்லை. இதில் குளிர்காயும் அதிகாரமும் அதை பணம் பண்ணி விடும் வணிகமும் மக்கள் உணர வேண்டியவை. வெற்று உணர்ச்சிகளுள் நாம் அமிழிந்து கிடப்பதில் நம்மை அடக்கியாண்டு விடுகின்றன அனைத்துமே

இன்றைய இலக்கியம்


பத்திரிக்கைகள் இல்லையென்ற கவலை படைப்பாளிகளுக்கு இப்போதெல்லாம் இருப்பதில்லை. முன்பு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் நவீன காலம் சி.சு.செல்லப்பாவை போல “எழுத்தை“ சுமக்க விடுவதில்லை என்பது ஒரு ஆறுதல். சிறு.. பெருவென பத்திரிக்கைகளுக்கு குறைவில்லை. இணையமும் வந்து விட்டது. ஏதோ ஒன்றில் படைப்புகள் வெளியாகி விடுகிறது. ஆனால் அவையும் குழுச் சார்ந்ததே.

ஆழம் கதை குறித்து

அன்புள்ள கலைச்செல்வி அவர்களுக்கு.
வணக்கம். 

உங்களுடைய "ஆழம்" என்ற  சற்றே பெரிய சிறுகதை படித்தேன். நல்லதொரு கதை. ஒரு பொதுவான வழக்கமான பாராட்டு சொல்ல இதை நான் எழுதவில்லை என்பதை முன்பாகவே நட்புடன் சொல்லி விடுகிறேன். 

இது சாதாரண கருவைக் கொண்ட ஒரு கதைதான்.  ஆனால் எது இதை சராசரி கதை என்று தள்ளாமல் உயர்த்திப் பிடிக்கிறது என்றுதான் யோசித்தேன். வறிய குடும்பம் குடிப்பழக்கம் உள்ள கணவன் சொத்து இருந்தும் வறுமை எதிர்பாரா இழப்பு மரணம் போன்றவை ஒரு சம்பிரதாய சிறுகதைக்குள் வந்துவிடும் விஷயங்கள்.  ஆனால் இதை நீங்கள் சொல்லியிருக்கும் முறை இதற்கு வலு சேர்க்கிறது.  அந்த முறை கூட ஒரு உத்தியாக நின்றுபோகாமல் வேறு சில இதை படிக்க விரும்பும் கதையாக மாற்றி இருக்கிறது. 

Monday 8 May 2017

ஆழம்

இலக்கிய சிந்தனை 2016 கதைகளில் தெரிவு.. கணையாழியில் மாதம் ஒரு குறுநாவல் போட்டியில் வென்று ஜுன் 2016 கணையாழியில் வெளியானது.

அய்யோ.. அம்மா..“ வரலட்சுமியின் வாயிலிருந்து விட்டு விட்டு முனகல்கள் வந்துக் கொண்டிருந்தன. அதுவும் வெகு ஈனமான ஸ்வரத்தில். அண்ணியின் மடியில் தலை சாய்த்து துவண்டுக் கிடந்தாள் வரலட்சுமி. நேற்றிலிருந்து சாப்பிடாத பசி மயக்கமும் அதில் கலந்திருந்தது. வெயிலின் தகிப்பை மரத்தின் நிழல் சற்று போக்கிக் கொண்டிருந்தது.

கணவன் வீட்டு பூர்வீக நிலம் அது. இரண்டு ஏக்கர் பூமி. “நஞ்ச காடு ரெண்டு ஏக்கரு தேறும்.. ஒத்தப் பயதேன்.. பங்கு பாவனக்கு ஆளு கெடையாது.. வெள்ளாமகாரங்களுக்கு பவுனுதான் சொத்து.. முன்னபின்ன பாக்காம செஞ்சுப்புட்டீவன்னா காலத்துக்கும் ஓஞ்சுக் கெடக்கலாம்..“ அவளை பேசி முடிக்கும் அன்று நாச்சிமுத்துவின் தாய்மாமன் இப்படிதான் பேசினார்.

பிடித்தமானவள்


உயிரெழுத்து மார்ச் 2017ல் வெளியான சிறுகதை

தெரு சற்று விசாலமாகவே இருந்தது. வழி சொன்னவர்களெல்லாம் இந்த விசாலத்தை குறிப்பிடவில்லை. பெட்டிக்கடைக்காரர் மட்டும் பாதை மடிஞ்சு மடிஞ்சு போவும் தம்பி பொறத்தால கொஞ்சம் பெரிய தெருவா இருக்கும்.. பெட்டிக்கட கூட இருக்கும்.. என்றார். ஒருவேளை சிறு சிறு சந்துகள் அந்த தெருவை பெருசாக்கியதோ என்னவோ. நல்லவேளை தெருவின் பெயர் பெரியதாக எழுதப்பட்டிருந்தது.

”நாகவல்லின்னு ஒருத்தங்க.. அவங்க வீடு எங்க இருக்குங்க..” சுசூகி ஆக்சஸிலிருந்து கால்களை விரித்து தரையில் வைத்தப்படியே தெருவில் தள்ளு வண்டி வியாபாரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டான் ரஞ்சித். ஆன்ட்டி என்று சொல்ல முடியாது. அக்கா என்றால் மகிழ்வாள்.