Search This Blog

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, 14 May 2023

யாவரும்.காம் ஏப்ரல் 2023 இணைய இதழில் வெளியானது.

னது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில் வேலைநிமித்தமோ வேறு எந்த நிமித்தமோ குடியேறி கொள்ளும் இடத்தையா? திருமணமாகி சென்று சேரும் ஊரையா? அவரவர் வாங்கும் திறனுக்கேற்ப கிடைக்கும் யாரோ ஒருவரின் முன்னாள் வயற்காடு அல்லது ஏதோ ஒரு ஊரின் முன்னாள் சுடுகாடு அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நீர்நிலை அல்லது ஏமாற்றி தலையில் சுமத்தப்பட்ட அரசாங்க புறம்போக்கு என்றிருக்கும் பூமியில் வீடு கட்டிக்கொண்டு காலம் முழுதும் கடனை சுமக்க வைக்கும் தற்போதைய வாழ்விடத்தையா? எதை நமது நிலமென்பது? உடைமை கொண்டதெல்லாம் பிடித்தமானதாகி விடப்போவதில்லை. உரிமை இல்லாததன் மீது பிரியம் வராது என்பதை சொல்வதற்குமில்லை.

Wednesday, 23 June 2021

மகாத்மா காந்தியின் பதினேழு தொகுப்பு நுால்களில் முதலாவதான தென்னப்பிரிக்க சத்தியாகிரகம் நுாலில் பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ள “தென்னாப்பிரிக்கா பற்றி காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள்“ என்ற சிறுத்தலைப்பிலான உபத்தொகுப்பு குறித்த நுால் அறிமுகம்.

 


இந்நுால் பொது புரிதல்களின் வழியாக அல்லது சாதாரண வாசிப்பில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்த ஒரு மேலோட்டமான சித்திரத்தை நமக்களிக்கும். அதே சமயம்தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்“ என்ற காந்தியடிகள் எழுதிய நுாலை வாசித்த பிறகோ அல்லது அவரை ஓரளவுக்கு அணுகியபிறகோ இத்தொகுப்பை வாசித்தால் காந்தி மகாத்மாவாகும் தருணங்களை அணுகி நுகர முடியும். அந்த வகையில் இந்த தொகுப்பு மிக முக்கியமானது.

காந்தியடிகளின் எழுத்துகள், உரைகள் அனைத்தையும் திரு.தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட காந்தி நுால் வெளியீட்டுக் கழகம் 1957ல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நுால்களின் சிறப்பு இதன் மொழிப்பெயர்ப்பும் அடிக்குறிப்பும் என சொல்லலாம். மொழிப்பெயர்ப்பு செய்து கிட்டத்தட்ட 64 வருடங்களை கடந்த பிறகும் வாசிப்பதற்கு தடைகள் ஏற்படுத்தாத நவீன புனைவுமொழி புழங்குவதில் சிரமமேற்படுத்துவதில்லை. இந்நுாலை திரு.இரா.வேங்கடராஜுலு அவர்கள் மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டாவதாக சம்பங்கள், பெயர்கள், இடங்கள், அது தொடர்பான நிகழ்வுகள் என எதுவாக இருப்பினும் அடிக்குறிப்பில் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மொழிப்பெயர்ப்புக்கிணையான உழைப்பு கோருபவை. காந்தியக் கொள்கைகளின் மீதான பிடிப்பம் ஆர்வமுமின்றி இத்தனை பெரிய பணியை செய்து விட முடியாது. ஆனால் இத்தகைய அளப்பறிய கூட்டு உழைப்பை ஒரு தனி மனிதர் கோருகிறார் எனில், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பரிமாணத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

அவர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்திய விதம், ஐரோப்பியர்கள் மீது அவர் கொண்டுள்ள பார்வை, சத்தியாகிரக போராட்டம் பிறந்த விதம், சாத்விக போராட்டத்தின் த்துவமும் அனுபவமும், கொள்கையில் உறுதிக் கொள்வது, மகனுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள், ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து விட்டு அந்த அவசரநிலையிலும் அதனை பதிந்து வைத்த விதம், சத்தியாகிரக போராட்டத்தில் தமிழரின் பங்கு, அவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாக்களின்போது அவரது உரை என பரவலான பார்வையை அளிக்கும் நோக்கோடு இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். 

1896 அக்டோபர் 14 அன்று முதன்முதலாக காந்தி முதன்முறையாக மதராஸ் வருகிறார். அக்டோபர் 26 பச்சையப்பாஸ் ஹாலில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மதராஸ் மகாணத்தின் தலைநகராகவும் அந்த பிராந்தியத்தின் வணிக, அரசியல் மையமாகவும் விளங்கிய மதராஸ்தான் நேட்டால் பிணைத்தொழிலாளர்கள் பலருக்கும் சொந்த ஊர் என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை. 


தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒரு லட்சம் பிரிட்டிஷ் இந்தியர்கள் சார்பாக நான் உங்களிடம் முறையிட்டுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.. 

1) 

Monday, 10 August 2020

ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவல் குறித்து.

 

இலக்கியப்படைப்பென்பது வாழ்வை கண் முன்பாக வைப்பதல்ல. அதன் அடிப்படைகளை ஆராய்ந்து அதன் போக்கோடு சென்று திரண்டவைகளை திரட்டி நேர்மையாக முன்னிறுத்துவதே என்பதை சொல்லும் சித்திரமே விஷ்ணுபுரம்.

அரசியல் மற்றும் அதிகார ஆசைக்கொண்டோரின் தந்திரத்தால் உருவாகிறது விஷ்ணுபுரம் என்னும் நகரம். இரும்புதாது கலந்த பாறைகளின் வழியே ஊறி வரும் சோனா ஆற்றின் அக்னி நிறத்தையொத்த அக்னிதத்தன் என்ற வேதபண்டிதன் வடக்கிலிருந்து அங்கு வந்து சேர்கிறான். சித்திரபீடசபை என்ற ஞானசபையில்  அக்னிதத்தன் விவாதம் புரிந்து வென்றதில் அங்கு வைதீகம் ஆட்சியாகிறது. அப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் விஷ்ணுபுரத்தை பொறுத்தவரை மன்னர் என்பவரெல்லாம் இந்திய குடியரசின் ஜனாதிபதியை போன்றவர்தாம். அங்கிருக்கும் சிலையை விஷ்ணுவாக மாற்றி பிரம்மாண்ட கோபுரங்களையும் சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறது வைதீகம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவிலிருந்து தொடங்கி எல்லாமே பிரம்மாண்டம்தான். விஷ்ணுவின் சிலை அறுநுாறு கோல் நீளம் கொண்டு முகவாசல், உந்திவாசல், பாதவாசல் என்று மூன்று வாசல்களை கொண்ட கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்திருக்கிறது. அப்பிரம்மாண்ட கருவறையின் திறக்கப்படும் வாசல்களுக்கேற்ப அங்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பாதவாசல் திறக்கப்பட்டு சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறும்  ஸ்ரீபாத திருவிழா காலம்தான் நாவலின் முதற்பாகம்.

Friday, 9 November 2018

கற்பின் நீட்சி (கட்டுரை)

“குறி“ அக்டோபர் - டிசம்பர் 2018 இதழில் வெளியானது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தொலைக்காட்சி நடிகை ஒருவரின் காதலரான(?) ஒருவர் எரிவாயு ஊற்றி தன்னை எரித்துக் கொண்டு மாய்ந்து போனார். திரைப்பட உதவி இயக்குநர் என்று அறியப்படும் அவருக்கு சமூகம் கொடுத்த முகவரி “நடிகையின் காதலன்“ என்று.

Thursday, 30 November 2017

மலைக்கோட்டை மாவட்ட இலக்கியம்

கணையாழி டிசம்பர் 2017 இதழில்..

மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, நாகரிகமும் உருவாகிறது. அறத்திற்கான விழுமியங்கள் நாகரிக வாழ்வை கட்டமைக்கிறது. இவ்விழுமியங்களை உருவாக்குவது இலக்கியம் எனலாம்.. இச்சைகளுக்கும் அறத்துக்குமான போராட்டத்தை வாழ்க்கை எனலாம். அதேசமயம் விழுமியங்கள் பண்பாட்டு சிக்கலுக்குள் அடைப்பட்டு போகும்போது இலக்கியம் அதன் கட்டற்ற தன்மைக்குள் ஒழுங்கமையாது போய் விடும் அபாயமும் உண்டு.

Tuesday, 28 November 2017

“ஆழத்தின் “அறம்“

குறி நவம்பர் 2017ல் வெளியானது.

ஆழம் என்றொரு சிறுகதை. 2016ல் எழுதினேன். மூடப்படாத ஆழ்த்துளை கிணற்றையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பிணைப்பாக்கி எழுதிய கதை. கணையாழி இதழில் சிறந்த குறுநாவல் வரிசையில் ஜுன் 2016ல் இக்கதை வெளியானது. பின்னர் அது எனது “இரவு“ என்ற சிறுகதை தொகுப்பில் (2016 என்சிபிஹெச் வெளியீடு) இடம் பெற்றது. இந்த தொகுப்பு பரவலான கவனத்தையும் மூன்று விருதுகளையும் பெற்ற தொகுப்பு.  மேலும் இக்கதை இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக தொகுக்கப்பட்டு கடந்த 2017 ஏப்ரலில் வெளியானது. மேலும் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பாக்கி வெளியிடப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஆழம்  என்ற இச்சிறுகதை இடம் பெற்றதோடு இத்தொகுப்பின் பெயரும் ‘ஆழம்’தான். என் சிறுகதையின் பெயரையே தலைப்பாக்கி, கடந்த 2016ல் இத்தொகுப்பு வெளியானது.

அறம் என்ற திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் அதன் கதைக் குறித்து  நிறைய நண்பர்கள் அலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். இது உங்களின் ஆழம் கதையை ஒத்து அமைந்துள்ளது என்றனர். எனக்கும் அவ்வாறே தோன்றியது. மேற்கண்ட “ஆழம்“ கதைகளின் வெளியீடுகளை விவரித்து, எனது “பிளாக்“ல் பதிவிட்டிருந்த அக்கதையின் இணைப்பையும் சுட்டி, என் முகநுால் பக்கத்தில் என் ஆதங்கத்தைப் பகிர்ந்திருந்தேன்.

Saturday, 9 September 2017

எதற்காக எழுதுகிறேன்..

பதாகை இணையஇதழில் ஜுன் 2016 வெளியான கட்டுரை..

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

பெண் எனப்படுபவள் யாரெனில்..

பேசும்புதியசக்தி மார்ச் 2017ல் வெளியானக் கட்டுரை

சமீபகாலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம் எங்கள் அலுவலகத்திலும் கொண்டாடப்படுகிறது.. அதே விமரிசையோடு.. அதன் அத்தனை அசட்டுத்தனங்களோடும் கூட.. அன்றைய நாள் முழுக்கவும் கும்மாளமும் குதுாகலமும்தான். ஆண்களுக்கு அங்கு முற்றுமுழுக்க தடா. ஒரே விதமான ஆடை.. (பெண்கள் தினம் செவ்வாய்.. வெள்ளி கிழமைகளில் வந்து விட்டால்.. ‘செவ்வா..வெள்ளி உடுத்தற புடவைல கொஞ்சமாச்சும் சரிகை இருக்கணும்..’)அணிகலன்கள்.. உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மதிய உணவு.. போதாக்குறைக்கு போட்டிகள்.. பேட்டிகள் என்றெல்லாம் களைக்கட்டும். உயர் பெண் அலுவலர்கள் தாங்கள் இந்நிலையை அடைவதற்கு காரணமாக இருந்த தகப்பனைக்கும் இன்று குழந்தை பராமரிப்பு.. குடும்ப பராமரிப்பில் அனுசரிப்பாக இருக்கும் கணவனுக்கும் கண்ணோரம் நீர் கோர்க்க தழுதழுப்பான குரலில் நன்றி தெரிவிப்பார்கள். இந்நேரத்தில் பிரச்சனைக்குரிய அலுவலக கோப்புகளை நீட்டினால் உடன் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. யாரும் இதுவரை முயன்றதாக தெரியவில்லை. சென்ற ஆண்டும் கோலப்போட்டி.. பாட்டுப் போட்டி.. நடனம் என களைக் கட்டியது எங்கள் மினி அரங்கம். அதில் ஒப்பனை போட்டி என்றொரு போட்டி.. அதுதான் பெண்மையின் அதிஉச்சம் என சொல்லலாம். இதில் கலந்துக் கொண்ட பெண் அலுவலர்களுக்கு தனித்தனியே ஒப்பனைப் பெட்டி கொடுக்கப்பட, ஒப்பனை செய்து கொள்ள பெண் அலுவலர்கள் உற்சாகமாக முன் வந்தனர். அரை மணி அனுமதிக்கப்படும் அதற்குள் முகம் மற்றும் தலை அலங்காரம் செய்து விடுவதுதான் போட்டி. கோலப்போட்டியின் கலர் பொடிகள் ரங்கோலியாக  முகத்தில் படிந்ததை மேக்கப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று ஜட்ஜம்மா சொன்னது தனிக்கதை. மருந்துக்கும் இலக்கியம்.. வாசிப்பு என்ற தளங்களுக்கு யாரும் நகரவில்லை என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை கொண்டாட்ட மனப்போக்குக்குள் சிந்தனையான விஷயங்களை அனுமதிக்க வேண்டாம் என்று நேர்மறையாகயும் எண்ணிக் கொள்ளலாம்.

Wednesday, 19 July 2017

“பிக்“பாஸ் – சிறு கருத்து


  அந்தரங்கம் புனிதமானது என்கிறது வழக்கு. புனிதத்தை தொன்மமாக்குவது இயல்பு. ஆனால் அந்தரங்கத்தை தொன்மவகையறாவுக்குள் சேர விடுவதில்லை நாம். வேண்டுமென்றே சில ஓட்டைகளை அனுமதிக்கிறோம். ஏனெனில் அந்தரங்கத்துக்கு சுவாரஸ்யம் அதிகம். அதை தொன்மக்கட்டுக்குள் நுழைத்து விட்டால் அவிழ்க்க முடியாமல் போய் விடும். அந்தரங்கத்தை அவ்வப்போது தொட்டுக் கொண்டால் தானே வாழ்க்கை அர்த்தப்படும்

  சாமான்யர்களின் அந்தரங்கமே இத்தனை சுவாரஸ்யம் என்றால்.. புகழ் பெற்றவர்கள்.. அதுவும் சினிமாக்காரர்களின் அந்தரங்கம் எத்தனை சுவாரஸ்யமானது..? ஒருவகையில் நமது இயலாமையின் ஏக்கம் கூட இந்த அதீத சுவாரஸ்யத்தில் கோர்த்துக் கிடக்கலாம். நம்மால் இயலாத ஒன்றை.. ஆனால் மனம் ஆசைக் கொள்ளும் ஒன்றை.. அவர்கள் வெகு இயல்பாக பெற்று விடுவதற்கு, அவர்கள் தரும் கூலியாக அவர்களின் அந்தரங்களை வெளிச்சப்படுத்துவது நமக்கு பிடித்தமானதுதான்.. ஆகவே இது குறித்து நம்மிடம் குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. அதேநேரம் தங்களை பரிசோதனை எலிகளாக்கும் நம்மை, அவர்கள் சட்டை செய்து யோசிப்பார்களா.. என்பதை பிக்பாஸ் அனுமதித்தால் அவர்களிடம் கேட்கலாம்.

Wednesday, 10 May 2017

இன்றைய இலக்கியம்


பத்திரிக்கைகள் இல்லையென்ற கவலை படைப்பாளிகளுக்கு இப்போதெல்லாம் இருப்பதில்லை. முன்பு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் நவீன காலம் சி.சு.செல்லப்பாவை போல “எழுத்தை“ சுமக்க விடுவதில்லை என்பது ஒரு ஆறுதல். சிறு.. பெருவென பத்திரிக்கைகளுக்கு குறைவில்லை. இணையமும் வந்து விட்டது. ஏதோ ஒன்றில் படைப்புகள் வெளியாகி விடுகிறது. ஆனால் அவையும் குழுச் சார்ந்ததே.

Sunday, 7 May 2017

தமிழ் சூழலில் எழுத்தாளர்கள்

தமிழ் சூழலில் எழுத்தாளர்கள்

தொடர் வாசிப்பும் ரசனையும் ஓரு வாசகனை எழுத்தாளனாக மாற்றி விடுகிறது என்றே தோன்றுகிறது. எழுத தொடங்கும் வாசகரும் எழுத்துக்கான தமிழ் சமுதாய சூழலையும்.. அங்கீகாரத்தையும் உணர்ந்தே இருப்பார். அதையும் மீறி எழுதுவதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் இலக்கியத்தின் மீதான ஈர்ப்பே. இப்படியான உலகம் இல்லாமலும் இருந்து விடலாம்தான். தமிழ் சூழலில் அது எந்த வகையிலும் பாதிப்பிற்குள்ளாக்காதுதான். ஆனால் வாசிப்பும், எழுத்தும் ஒரு கட்டத்தில் உயிர்ப்பாக மாறி விடுவதால் இலக்கியம், தேடல் கொண்டோரை தேடிக் கொண்டே இருக்க வைக்கிறது.