Search This Blog

Sunday 18 June 2017

தஞ்சை ஹரிணி

பெரியாயி சிறுகதை குறித்து தஞ்சை ஹரிணியின் விமர்சனம்
வாசிப்புத் தொடங்கிய காலந்தொட்டு மண்சார்ந்த கதைகள் நிரம்பப் பிடிக்கும். அதன் இயல்புத் தன்மையை நாம் சித்திரிப்பு செய்யமுடியாது. அனுபவிக்கலாம். அனுபவித்ததை அப்படியே சொல்லலாம். இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது இயல்பான உரையாடலில் தொடங்கி இயல்பாகவே முடியுமென்றாலும் அது மனத்தைக் கசிய வைக்கும். இன்றைக்கும் இப்படித்தான் கிராமத்தின் மண்மனிதர்களின் வாழ்வியல் இருக்கிறது எனும்போது நாம் முழுமையாக நிறைவுபெற்ற மானுட சமுகத்தினை அடையவில்லை என்பது உறுத்தும்.
உறவுகளை அழைக்கிற சுகத்தைப் பற்றி தனியொரு கதை எழுதலாம். பெரியம்மா. சின்னம்மா. ஆத்தா, அம்மாயி, அப்பாயி, தாத்தா, சித்தி, அத்தே, சின்னாயி, பெரியாயி இப்படி அழைப்பதில் இழையும் அன்னியோன்யம் கொடுக்கும் சுகத்தை சிறுகதை போன்ற இலக்கியப் படைப்பில் குறைவற அனுபவிக்கலாம்.
இந்த வாரக் கல்கியில் கலைச்செல்வியின் பெரியாயி சிறுகதை வந்திருக்கிறது. கதை முழுக்க வலியிழைகிறது.

Saturday 17 June 2017

விழாவில்.. 17.06.2017

“நாங்கள் இலக்கியகம்“ இலக்கிய அமைப்பு “இரவு“ சிறுகதைத் தொகுப்புக்கு இரண்டாவது பரிசு பெற்ற நிகழ்வு.




பெரியாயி

17.06.2017 கல்கியில் வெளியான சிறுகதை

“நாதாறி மக்க..  இங்கிட்டு கால வக்காதன்னா கேக்றாளுவளா.. பொசக்கெட்ட பொம்பள.. கேடுகெட்டவ வவுத்துல பொதாரு மொளயாம நெல்லா மொளயும்.. எவன் ஏறுவான்னு தெறந்து போடற செம்மங்க..” சக்களத்தியின் மகளை கரித்துக் கொட்டினாள் பெரியாயி. வயது எழுபதை நெருங்கினாலும் வாழ்க்கையை தொலைத்து விட்ட கோபம் இன்னும் வீரியமாகவே இருந்ததில் சத்தத்திற்கு குறைவில்லை. இத்தனைக்கும் நேற்று முழுக்கவும் நீராகாரம்தான் ஆகாரம்.   

கணவன் மாரியப்பன் இவளுக்கு தாய்மாமனும் கூட. கணக்குக்கு நாலு மாமன்கள் அவளுக்கு. பெரியாயியின் வயசுக்கு நான்காவது மாமனே கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் அவள் இரண்டாவது மாமனைதான் கட்டுவேன் என்று பிடிவாதமாக நின்று விட்டாள். பதினாறு வருட வித்யாசம் இருவருக்கும். அவர்களின் அன்னியோன்யத்தில் வயது மறைந்து போய் விடும், அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். நான்குமே குறை பிரசவத்தில் போய் விட, வெறுத்து வந்தது மாரியப்பனுக்கு. ”நான் இங்ஙனயே சுத்திட்டு கெடந்தா ஒனக்குந் தொந்தரவு.. எனக்கும் மனசாவல.. வெளிநாடு போயிட்டு வந்தா வைத்தியத்துக்கு காசுன்னா சேரும்..” என்றான். பெரியாயிக்கும் அது சரியாகதான் தோன்றியது. “இதெல்லாம் பெரிய வைத்தியம்மா.. ஒன் கர்ப்பப்பை வெயிட் தாங்க மாட்டேங்குது.. தனியார் ஆஸ்பத்திரின்னா ஒழுங்கா கவனிப்பாங்க.. இங்க ஒனக்கு தோது வாய்க்காது..” விவசாய காய்கறிகளை பெற்றுக் கொண்ட நன்றியில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸம்மா வேறு அறிவுரை வழங்கியிருந்தாள்.

Friday 16 June 2017

இரவு - விமர்சனம்

இரவு சிறுகதை தொகுப்பு குறித்த கரன்கார்க்கி அவர்களின் விமர்சனம் “புத்தகம்பேசுது 2016 செப்டம்பர் இதழில்.
வாழ்வின் அழகை. அதன் மகிழ்வை.. துள்ளல் எள்ளலென மனிதத் துயரை, புழுக்கத்தை.. சக மனிதருடனான நுட்பமான உள்ளடக்கத்தை ஒரு கவிதையிலோ புதினத்திலோ சொல்வதை விட சிக்கலான ஒன்றாக சிறுகதையைக் கருத இடமுள்ளது. கருத்தும், அழகும் மொழியுமென செறவாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னை தற்காத்துக் கொண்டு வீச்சோடு பாய வேண்டும் என்கிற கட்டுகள் நிறைந்த சிறுகதையில் நளினமாக – அதே நேரம் சுருக்கென தைக்கும் தையல் வித்தையை எழுத்தாளர் கலைச் செல்வி கற்றுத் தேர்ந்துள்ளார். இது அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ‘‘சக்கை’’ என்ற புதினமும் எழுதியுள்ளார்.

அண்டனுார் சுரா

“நெனப்பு“ சிறுகதை குறித்து

இன்றைய சிறுகதை ஊடகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கால் ஊன்றிருக்கும் எழுத்தாளர் இவர். இவர் பெண்பால் எழுத்தாளர்கள் பெண்ணிய வாழ்வியல் கூறுகளை மட்டுமே ஆழ , அகலத்துடன் எழுதுவார்கள் என்கிற சூத்திரப் பின்னலை கத்தரிக்கும் படியான எழுத்து இவருடையது. எல்லாருக்குள்ளும் இருக்கும் பசியைப் போல எல்லாருக்குமான எழுத்து இவருடையது. மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உணர்வுகளையும் இவரது கதைகள் உரக்கப் பேசக்கூடியது. இவரது சமீப சிறுகதைத் தொகுப்புஇரவு’. அதிலொரு கதை நெனப்பு.

அண்ணன் தங்கை இருவருக்கிடையில் படரும் பாசம், இடையில் மெல்லிய விரிசல், இருவரின் தரப்பிலும் ஆழப்படியும் ஏக்கம், ஏதேனும் ஒரு தருணத்தில் இருவரும் ஒன்று சேர மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் இக்கதை தன் பரப்பை விரித்துச்செல்லும். இக்கதையை வாசிக்கையில் அவரவர் உடன்பிறப்புகள் ஒரு கணம் நினைவிற்கு வந்து ஆழ்மனதை தரைத்தட்டவே செய்யும்

Wednesday 7 June 2017

தேனீ சீருடையான்

அன்புத் தோழர் கலைச் செல்வி அவர்களுக்கு வணக்கம்.
தங்களின்சவுந்தரி வாசித்தேன். அனுபவப் போக்கும் தத்துவ நோக்கம் பதியமிட்டுள்ள நல்ல படைப்பு.
பூக்கள் மென்மையானவை என்று எந்தப் பூக்காரியும் சொல்வதில்லை என்ற வாசகம் அனுபவ வெளிப்பாடு. எல்லாக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பூவை மென்மையின் குறியீடாகவே உச்சரித்து வந்துள்ளனர். பழைய பாடல்களிலோ நவீன படைப்புக்களிலோ பூ ஒரு வன்பொருள் என வாசித்ததாக ஞாபகம் இல்லை. பூக்கட்டும் சவுந்தரியிடமிருந்துதான் இத்தகைய சொல்லாடல் வரமுடியும். நீங்கள் ஓர் அரசு ஊழியராக இருந்தும் கூட ஒரு பூக்காரியின் கரடு தட்டிய விரல்களை அறிந்து வைத்ததிருப்பது சிறப்பு. வாழ்க்கையை வாசித்து உள்வாங்குபவரே நல்ல எழுத்தாளர் என்ற வரையறையை நீங்கள் நிறைவு செய்திருக்கிறீர்கள்.