Search This Blog

Saturday, 30 June 2018

கனவு (சிறுகதை)

ஜுலை 2018 காலச்சுவடில் வெளியானது


அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்.. எங்கள் தாத்தாவிடம்.. அப்பாவிடம்.. பிறகு என்னிடமும். எல்லோருக்கும் வீடு வாசலெல்லாம் ஒரே இடம்தான்.. பரம்பரையாக வந்த வசதி அல்ல.. தாத்தா கையை ஊன்றி கர்ணம் அடித்திருந்தார். அப்பாவுக்கு சம்பாத்தியத்தில் அத்தனை சிலாக்கியம் இல்லை.
ஆனால் இருப்பதை காப்பாற்றி என்னிடம் ஒப்படைத்த போது பெரிய வீடும், விவசாய நிலங்களும், கால்நடைகளும் சொல்லிக் கொள்ளும்படி இருந்தன. எங்களின் பணியாட்கள் சொல்வார்கள்.. “எங்க சென்மம் இப்படியே இங்கயே கரஞ்சுடுணும் எசமான்..” என்று. எசமான் என்பது உங்களின் புரிதலுக்காக. அவர்கள் உடல்மொழியில் காட்டும் பணிவே எங்களை எசமானாக்கி விடும். ஆனாலும் நாங்கள் நிச்சயம் சர்வாதிகார எசமான் அல்ல என்பதை என்னால் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்ல முடியும்.. ஏனெனில் எனக்கு அதை யூகிப்பதற்கான வயதும் தகுதியும் வந்து நிறைய வருடங்கள் ஆகியிருந்தன.

தாத்தாவை பிரதியெடுத்தது போல நானும் சம்பாத்தியத்தில் விருப்பமுடையவனாக இருந்தேன். சொல்லப்போனால் என் கனவே அதுதான். மகிழ்ச்சியான கனவு. கனவு என்பதே எண்ணங்களின் தொகுப்புதானே.. எண்ணங்கள் மனதை மையமாக்கி எழுவதால், மனம்தான் கனவாகிறது என்பேன். அப்போதெல்லாம் என் எண்ணங்கள் வண்ணமயமாக இருந்தன. அதையொத்து கனவிலும் நினைவிலும் மகிழ்ச்சியாக இருந்தேன். 


பள்ளிப்படிப்பை முடித்த பிறகு விவசாயத்தி்ல் ஈடுபட முடிவு செய்தேன். வளமையான மண்ணும் நீரும் செழித்த நாடு எங்களுடையது. நவீனங்கள் அண்டாத கிராமத்து வாழ்க்கை என்றாலும் என் மனைவியை ஒருபோதும் அவ்வாறாக வைத்திருந்ததில்லை. நகரத்தில் இருப்பதை போல கட்டிலும், பஞ்சு மெத்தையும் சன்னமான சத்தத்தில் செயற்கை குளிரூட்டியுமாகதான் முதலில் அவளை புணர்ந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மகன்கள் பிறந்த பிறகும் எங்களுக்குள் ஈடுபாடு குறையாமல் இருந்ததற்கு இந்த வசதிகளும் ஒரு காரணமே. எங்கள் நிலங்களை போலவே என் மனைவி வளமையும் செழுமையுமானவள். கூடவே அழகானவளும் கூட. அன்று அவளின் அழகிய முகத்தை பார்க்க முடியவில்லை என்னால். ஆனால் பார்த்தே ஆக வேண்டும். என் பின்னந்தலையை காலால் எத்தி அவளை நோக்கி திருப்பி வைத்திருந்தான் அவன். அவனுக்கும் எனக்கும் எந்த ஜென்மத்தில் பகை இருந்திருக்கும்..? அவன் முகத்தைக் கூட சரியாக பார்த்திருக்கவில்லை. அதனாலென்ன..? அவர்கள் எல்லோருக்குமே ஒரேமாதிரியான முகங்கள்.. அவை இறுக்கமானவை. கொடுங்கனவை ஏந்தியவை

ஏன்.. எதற்கு.. என்னதிது.. என்று நீங்கள் பதறுவது புரிகிறது. இம்மாதிரியான கேள்விகளெல்லாம் எங்களுக்கு எழவே கூடாதாம். எழுந்தாலும் பதில் சொல்ல இங்கு யாருமில்லை. நேரிடையாகவே கேட்கிறேன்.. போர் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா..? தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியின் காற்றில் சோபாவின் குஷனுக்குள் அமிழ்ந்தபடி செய்தி சேனலின் இரு விளம்பரங்களுக்கு இடையே புகைமயமான மோதலையும் பெரும் பீரங்கிகளின் உருட்டலையும் தொலைக்காட்சியில் பார்ப்பதல்ல போர் என்பது.

அன்று நாங்கள் அறையில் பதுங்கியிருந்தோம். இப்போதெல்லாம் அப்படிதான் பதுங்கிக் கிடக்கிறோம். அத்தனை பெரிய வீட்டில், ஒரே ஒரு அறைக்குள்.. அதுவும் புழக்கமில்லாத அறைக்குள் துாசிகளால் மூச்சிழுக்க.. இழுக்க நானும் மனைவியும் இரண்டு மகன்களும் பயத்தில் உறைந்து கிடந்தோம். குண்டு விழும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பூமி அதிர்ந்தது. ஒவ்வொரு அதிர்வுக்கு இருக்கிறோமோ.. இல்லையோ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்…. ஆனால் அன்று நிச்சயம் இறந்து விடுவோம் என்று முழுமையாக நம்பினோம். நால்வரும் ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் போல.. அல்லது யாரோ எங்களை நாலாபுறமும் இழுப்பது போல இறுக்கமாக கட்டிக் கொண்டோம். உங்கள் ஊர்களில் இழவு விழுந்த வீடுகளில் இப்படி கட்டிக் கொண்டு அழுவார்கள் என்று தெரியும். ஆனால் நாங்கள் பிணமாவதற்காக இப்படி கட்டிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் உறங்க கிடைக்கும் வாய்ப்பை துர்கனவுகளே கலைத்துப் போட்டன. நம்பிக்கை பெரும் சுமையாகிப் போயிருந்தது.

இது எங்கிருந்து தொடங்கியது என்று நீங்கள் கேட்கலாம். காரணம் நீங்கள் உங்கள் சொந்த நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருப்பவராக இருக்கலாம். அப்படியானால் நீ..? வேற்று நாட்டில் வசித்தாயா..? என்பதுதானே உங்கள் கேள்வி. இல்லை.. அதுதான் எங்கள் நாடு.. பரம்பரையாக அங்குதான் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். பிறகு என்னதான் ஆயிற்று..? புரியவில்லை. திடீரென்று உங்களுக்கு இந்த மண் சொந்தமில்லை என்றார்கள். எப்படி.. ஏன்.. ஏன் சொந்தமில்லை. எங்களுக்குள் புகையாய் கிடந்த இனரீதியான பகையை பெருநெருப்பாக்கிய எங்கள் உள்நாட்டு அரசியலுக்கு நாங்கள் ஆகுதிகளாகி போவோம் என்று எப்போதுமே எனக்கு கனவுகள் வந்ததில்லை.

சிறுபான்மையனாக பிறந்தது அத்தனை பெரிய பிழை என்பதை உணர்ந்த அந்த முக்கியமான தினத்தில் எங்களுக்கு முன் தெரிவுகளே இல்லை. ஊரை விட்டு உடனே வெளியேற வேண்டுமாம். கெடு விதிக்கப்பட்டது. விதித்தது எனில் அது சட்டமா..? சட்டம் எனில் ஆட்சியதிகாரத்திற்கு எதிரியாகி போனோமா..? என்ன தவறிழைத்தோம் என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் எங்கோ ஓடிக் கொண்டிருந்தோம். யார் எதிரிகள்.. யாருக்கு அடங்க வேண்டும்.. யாரிடம் முறையிட வேண்டும்  என்பதெல்லாம் ஒன்றுமே விளங்கவில்லை. நவீன தகவல் தொடர்புகள் முழுக்கவும் செயலழித்து வைக்கப்பட்டிருந்ததால் உலகத்தின் தொடர்புகளிலிருந்து முற்றிலும்  விடுப்பட்டிருந்தோம். நாங்கள் நால்வரும் ஒருவரையொருவர் கோர்த்துக் கொண்டு ஓடினோம். சிறிய கால்களை கொண்ட என் மகன்களால் இந்த தொடர் ஓட்டத்துக்கு ஈடுக்கொடுக்க முடியவில்லை.

ராணுவ வண்டிகள் எங்களை அவசரப்படுத்தியது. அப்படியானால் சொந்த நாடே மக்களை வேட்டையாடுகிறதா..? இல்லை.. இல்லை.. ராணுவம், ஆட்சிக்கு எதிராக மாறி விட்டது என்றும் அதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள். ஏனாம்..? இருக்கும் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லையாம். சரி.. இப்படி கதியற்றவர்களாக திக்கற்று ஓடுவதுதான் பாதுகாப்பான ஆட்சியா..? யார் கேட்பது..? சொல்ல யாரிருந்தனர். கூடவே ஓடி வந்தவர்களில் சிலர் திடீரென்று பிணமாக சாய்ந்தார்கள். சாதுவான ஆண்கள் கூட பாலியில் வெறியோடு பிற பெண்களின் மீது பாய்வதை நீங்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டீர்கள். எனக்கு அந்த மாதிரியாக கனவுகள் கூட வந்ததில்லை. ஆனால் சமநிலை குறைந்த சமுதாயத்தில் இதையெல்லாம் குற்றமாக்க முடியாது என்பதை அறியுங்கள்.

சிறிய மகன் ஓடவியலாமல் சுருண்டு விழுகிறான் என்றுதான் முதலில் எண்ணினோம். பிறகுதான் அவன் முதுகில் சுடப்பட்டது தெரிந்தது. அந்த மரணத்தை சுதாரிப்பதற்குள் பெரிய மகனும் சிதைந்து விழ, இந்த முறை இரண்டு நிமிடத்திற்கு முன்பாக சேர்ந்திருந்த அனுபவத்தைக் கொண்டு அவன் இறப்பை யூகிக்க முடிந்தது. அவனின் பின்னங்கழுத்திலிருந்து பெருகிய இரத்தம் எங்கள் மண்ணில் கலந்து ஓடியது. கொடுத்து வைத்தவன். நாளை இவர்கள் வளர்ந்து தேசத்துரோகியாகி விடுவார்களாம். அப்படியானால் துப்பாக்கியை ஏந்தியபடி என் மகனின் பிணத்தை காலால் எத்தியவன் தேசத்தை காப்பாற்ற வந்திருக்கலாம். ஆனால் யாரிடமிருந்து..? எதிரி என் இனம் சாராதவனாக இருக்கலாம். அல்லது என் தேசத்தின் வளமாக இருக்கலாம். எதுவாயினும் தங்கள் கனவுகளுக்கான தடைகளை வேரறுக்க நினைப்பவர்கள். அதனால்தான் பிணங்களின் மீது நடப்பதிலோ அவற்றை உருவாக்குவதிலோ குற்றவுணர்வு கொள்வதில்லை. எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் மிஞ்சும் உயிரை அதிகார கால்களால் மிதித்து பிணங்களின் மீது குருட்டு ராஜ்ஜியம் செய்ய எண்ணுகிறார்கள்.

அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம் உங்களிடமிருந்து.. உங்களின் உயிரா..? அல்லது வாழ்வாதாரமா..? உஙகளின் கேள்வி புரிகிறது. அதை யோசிக்கவியலாத நொடித்துளிகளில் என் மனைவி என்னிடமிருந்து இழுத்துச் செல்லப்பட்டாள். என்னிடம் மிஞ்சியிருந்த ஒரே உறவு. அவளின் கதறலின் ஒலி என் காதுகளை நெரித்துக் கொண்டிருந்தது. அவள் கொடூரமாக புணரப்பட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை ஆண்கள் என்ற கணக்கு அவளுக்கும் இல்லை.. என்னிடமும் இல்லை.. ஏன்.. அவர்களுக்கும் இருந்திருக்காது.

 

சிலருக்கு அந்தநேரத்திலும் நல்ல அதிர்ஷ்டம் வாய்க்கலாம் கள்ளத்தோணி.. கள்ளப்படகு, கள்ளக்கப்பல், கள்ள விமானம் என எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவை எங்களை குற்றுயிரும் குலையுறுமாகவாவது காப்பாற்றுவதால் இவை எல்லாவற்றின் முன்பும் “நல்ல“ என்ற முன்னொட்டை சேர்த்துக் கொள்ளலாம். என் மனைவியின் உயிரற்ற வெற்றுடலை பார்க்க தைரியமற்று “நல்ல“ கப்பல் ஏறி விட்டேன்.

புரியாத பிரதேசங்களை எல்லாம் கடந்து கொண்டிருந்தோம் புரியாத மொழிகள் எங்கள் காதுகளை நிரப்பிக் கொண்டிருந்தன. கரையொதுங்கும் தேசங்களின் தொடர் நிராகரிப்புகள் எங்களின் கதறலைக் கூட்டியது. என் கனவுகளின் வழியே மனைவியும் மகன்களும் என்னை தொடர்ந்ததுதான் ஒரே ஆறுதல். ஆனால் அனைத்துமே துயரம் தோய்ந்த கனவுகள். என்னுடைய ரசனையான கனவுகளை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா..?

மழை சற்றே இளைப்பாறியிருந்த ஒரு மழைக்காலத்து மதியம் அது. மழையால் கட்டங்களே பாசியடர்ந்து போகும் பிரதேசம் எங்களுடையது. நீரி்ல் நனைந்த பசுமை அலையலையாய் படர்ந்து தோட்டமெங்கும் செழித்திருந்தது. படுக்கையாக தனது கிளைகளை விரித்திருந்த மாமரம் களைத்து கிடந்த பெரிய யானையை போலிருந்தது. சிறிதும் பெரிதுமாக மாம்பிஞ்சுகள்  உதிர்த்து விட்டது போல கீழே சிதறிக் கிடந்தன. சற்றே தள்ளியிருந்த பலாமரம் மழையினால் உள் வாங்கிய ஈரத்தை பார்த்துக்கோ.. என்பது போல பட்டையை உரித்துக் காட்டியது. அதன் தண்டுகளில் அடம்பலாக தொங்கிய பலாக்காய்கள் காற்றுக்கு வழி விட்டதில் நகர்ந்து போயிருந்தன. வெளிப்புற இலைகள் விலகியதில் உள்மரம் பசுமை காட்டியது. குத்தாக, சீராக விரிpந்திருந்த அன்னாசி செடியின் விசிறி இலைகள் இறுமாப்பாய் நிமிர்ந்திருக்க அதன் நடுவில் சிறு பிஞ்சொன்று குழைவாய் அமர்ந்திருந்தது. பூத்து உதிர்ந்து கிடந்த மலர்கள் காற்றை நறுமணமாக்கிக் கொண்டிருந்தன. 

நனைந்து போன பறவையொன்று தன் சிறகுகளை விரித்து படபடக்க அந்த துளிகள் என் மீது இளஞ்சாரலை துாவின. சிலிர்த்து நிமிர்ந்த நொடியில் அந்த பறவையும்  என்னை தலையை சாய்த்துப் பார்த்தது. என் மீது தெளித்த துளியொன்றின் பாதியை அதன் சிறகின் மீது கண்ட தருணத்தில் எனக்கும் சிறகுகள் தோன்றின. அது தன் சிறகை விசிறி விட்டு மேலே பறக்க.. பறக்க.. எனது சிறகுகளும் விரிந்தன. விரிந்த சிறகுகளின் வழியே காடு..மலை.. நதி.. ஆறுகளை கடக்கத் தொடங்கி விட்டேன். காட்டில் சீவிடுகளின் ஓசையை கேட்க முடிந்தது. மலையிடுக்குகளில் உறைந்துக் கிடக்கும் மௌனத்தை உணர முடிந்தது. நதிகளின் சிரிப்பொலியும் கடலின் புன்னகையும் சாரலாய் ஒலித்தன.

எங்கள் தோட்டம் உட்பட கிராமமே அழித்தொழிக்கப்பட்ட போது எழுந்த புழுதியில் அந்த பறவை சுழன்று சுழன்று எங்கோ சென்றிருக்கலாம்.  அல்லது குஞ்சுகளையும் குடும்பத்தையும் கூட்டையும் இழக்க விரும்பாமல் அங்கேயே மடிந்து விழுந்து இறந்திருக்கலாம். பிறகுதான் என் கனவுகளின் மீது அமிலம் வீசப்பட்டது.  கனவுகள் ஹிட்லரைப் போல சிலருக்குதான் இறந்த பிறகும் சாத்தியப்படுகிறது. என்ன இது அபத்தம் என்கிறீர்களா..? அப்படியெனில் உங்களுக்கு உலகம் புரியவில்லை என்றுதான் கூறுவேன். கேட்டுக் கொள்ளுங்கள்..  இன வெறுப்பும் அழிப்பும் அவருடைய கனவுதானே.. அதுதானே இன்று உலகெங்கும் பின்பற்றப்படுகிறது..?

நாட்டை அபகரிக்க திட்டம் வகுத்தவர்களுக்கு அதற்கான ஜோடனை காரணிகளை தேடுவது அகதிகள் முகாமில் இருப்பதை விட அத்தனை சிரமமான காரியமா என்ன..? அகதிகள் கூடாரம் என்பார்கள் இதை. ஆனால் மழையையும் வெயிலையும் அந்த கூடாரத்தால் தாக்கு பிடிக்க முடிவதில்லை. கரடுமுரடான தரைகள். நாற்றமெடுக்கும் சாக்கடை.. அடிப்படையான தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது. ஆனால் மூச்.. நாங்கள் எதுவும் பேசக் கூடாது. பேசவும் முடியாது. ஏனென்றால் இது எங்களின் நாடல்ல. அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறோம். அழுக்கு, குப்பை, எலிகள், நாய்கள், தொடர் இருமல் சத்தம், காய்ச்சல் முனகல் இவற்றோடு கடின வேலைகளும் செய்தாக வேண்டிய பகல் என்பதால் இந்த தொல்லைகள் இரவு உறக்கத்தை தடை செய்வதில்லை. ஆனால் உறக்கத்தில் கனவுகள் ஏதும் வருவதில்லை. எண்ணங்களே எழும்பாத போது கனவுகளுக்கு சாத்தியமில்லை என்று தெரிந்தும் கனவுகள் வர வேண்டுமென விரும்பினேன்.

வியர்வையில் நனைந்த உடையோடு தாய் பால் வீச்சத்துடன் இருப்பாள் அந்த பெண். சதா இருமலும் அழுகையுமாக அவளை ஒட்டிக் கொண்டு அவளுடைய குழந்தை. பெண் குழந்தை. ஒன்றரை வயதிருக்கலாம். எப்போதும் வாந்தியும் இருமலுமாக இருந்தது அந்த குழந்தை. ஒருவேளை அதற்கும் காசநோய் தொற்றியிருக்கலாம். தன் வயதையொத்த குழந்தைகளிடம் விளையாடுவதில்லை. அம்மாவின் .இடுப்பும் மடியும்தான் அதன் உலகம். முகாமி்ல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற நாகரிகமெல்லாம் கிடையாது. குளிப்பதற்கான வரிசையில் நிற்கும் நேரத்தில் உறங்கும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டுப் போவாள்.

தாய்.. தாய்.. என்று குறிப்பிடுவதால் அவளை பெரியவளாக கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள். என் வயதையொத்த தகப்பனின் ஆதரவுக்குள் இருக்க வேண்டிய வயதுதான் இருக்கும் அவளுக்கு. பெற்றால்தான் பிள்ளையா..? இந்த குழந்தையால் கனவுகளற்ற உறக்கம் கூட அவளுக்கு சரியாக வாய்ப்பதில்லை. அந்த குழந்தை இறந்து விட்டால் தேவலாம் என்று நினைத்தேன். துாக்கத்திற்கு இடைஞ்சல் என்று எண்ணுவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். சத்தியமாக அந்த குழந்தையின் மீது கொண்ட கருணையால் மட்டுமே எழுந்த எண்ணம். அப்படி பார்த்தால் நானும் அந்த குழந்தைக்கு இடைஞ்சல்தான். எனக்கான இடம் குறையும்போது அவள் தாய் அந்த குழந்தையை மடியிலிருந்து கீழிறக்கலாம். சளியும் வாந்தியும் துடைத்த கைகளை சற்றே கூடுதலாக நீர் விட்டு அலம்பலாம். எது எப்படியோ. அகதிகளின் மீது இவர்கள் காட்டும் கெடுபிடிகளுக்கு முன் இந்த கூடாரம் ஒன்றும் அத்தனை கொடுமையில்லை. நேற்று வரை நாங்களும் இயல்பாக வாழ்ந்தவர்கள்தான் என்ற எண்ணமே இப்போது எங்களிடம் இல்லை. ஆனால் இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக மாறி விடலாம் என்பதை மட்டும் உறுதியாக நம்பினோம்.

அவளுக்கு அந்த குழந்தையை தவிர்த்து வேறு உறவு இல்லாததால்தான் குழந்தைக்காக இத்தனை பிரயத்தனப்படுகிறாள் போலும். அன்று முகாம் மருத்துவரிடம் கெஞ்சி கதறி மகளுக்கு மருந்து மாத்திரைகள் எழுதி வாங்கிக் கொண்டாள்.  மாத்திரைகள் வாங்க அவளுக்கு பணம் தேவைப்படும். சேவை அமைப்பு ஒன்று வாங்கி வருவதாக வாக்களித்து ஒரு வாரம் கடந்து விட்டதாக சொல்லி வருந்தினாள். இனி குழந்தை தாங்காது என்று பலத்த சந்தேகம் இருந்தது அவளுக்கு. ஒருவன்தான் என்றார்கள்.. பிறகு மூன்றாகிப் போனது என்றபடி திரும்பி வந்தவளின் கைகளில் இருமலுக்கான மருந்து இருந்தது.  மற்றொரு கையால் என்னிடமிருந்த குழந்தையை பெற்றுக் கொண்ட போது அவள் கண்களில் தெரிந்த வெளிச்சம் மருந்துக்கான வழியை கண்டுக் கொண்டதற்காக இருக்கலாம் அல்லது குழந்தை பிழைத்து விடும் வாய்ப்புகள் கூடியிருப்பதாக நம்புவதாலும் ஏற்பட்டிருக்கலாம்.
அன்று முகாமில் தொலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன. எந்த செய்திகள் எங்களுக்கு காட்டப்பட வேண்டும் என்பதில் அரசியல் இருக்கிறது என்று நாங்கள் பேசிக் கொண்டோம். எங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் முடிந்த பிறகு ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டு விடும். விளையாட்டு, படிப்பு என்று எதையும் அறியாத புத்திளம் தலைமுறைக்கு இது மாபெரும் பொழுதுப்போக்கு. இத்தனைக்கும் அதில் காட்டப்படும் எந்த விஷயங்களும் அவர்களுக்கு புரியப் போவதில்லை. அந்த பெண்ணுக்கு அதை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை. இரவு நெருங்க நெருங்க அந்த குழந்தைக்கு இருமலும் வாந்தியும் அதிகரித்திருந்தது.
தொலைக்காட்சி செய்திகளை நான் நடந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். அதோ.. அதோ.. அவை எங்கள்(?) தேசத்து முகங்கள்.. கரடுமுரடாக காலில் தட்டுப்பட்டவைகளை  நகர்த்தி விட்டு ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் பார்க்கிறேன். சந்தேகமில்லை.. அவர்கள் எங்கள் தேசத்து ராணுவ உயரதிகாரிகள்தான். காதுகளை கூர்மையாக்கினேன். பூமியின் சுழற்சியையே மாற்றி எதிரிகளை அழித்தொழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை தாங்கள் அறிந்துக் கொண்டதாக பெருமிதத்துடன் அறிவித்துக் கொண்டிருந்தனர். தரையில் சிதறிக் கிடந்த உடல்களை காலால் எட்டி நகர்த்திய போதுதான் பார்த்தேன், அந்த உடல்களின் தலைகள் என் மகன்களை கொன்றவர்களை ஒத்திருந்தது. என் மனைவியை புணர்ந்தவர்கள் அங்கு பிணமாக கிடந்தனர். கோபத்தில் அந்த தலைகளை உதைத்தெறிந்து விட்டு மீண்டும் தொலைக்காட்சியை பார்த்தேன். ராணுவ உயரதிகாரிகள் இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் உலகையே தங்களுக்கு கீழ் கொண்டு வர முடியும் என்று பெருமிதப்பட்டனர். என் காலடியில் பிணங்கள் கூடிக் கொண்டே போயின. 
திடீரென்று காட்சிகள் உயர பறக்க தொடங்கின. உடல்களின் மீது காலை உந்தி எழுந்து நானும் பறக்கத் தொடங்கினேன். மேகங்கள் இடைமறித்து காட்சிகளை பனிப்படலங்களாக்கின. நானும் சளைக்கவில்லை. பறந்தலைந்த பிணங்களை சராமரியாக வீழ்த்தி கொண்டே காட்சிகளை பின்தொடர்ந்தேன்.  பனிப்படலத்தில் அவர்கள் தெளிவற்று இருந்தாலும், அவர்கள் வெகுவாக பதற்றமுறுவதை கவனித்தேன். மேகங்களும் எனக்கு ஆதரவாக பிணங்களை மோதி சிதைத்தப்படியே அலைந்தது. அந்த களேபரத்தில் அவர்கள் சிறிதுசிறிதாக கண்களிலிருந்து விலகி.. விலகி.. பிறகு மறைந்து போனார்கள். அலறல் ஒலி மட்டுமே மிஞ்சியது. 
அந்த பெண் ஓங்கி அழுததில் எனக்கு விழிப்பு வந்தது. அவள் குழந்தை இறந்து விட்டதாம். பாவம்.. இனியாவது அவளுக்கு விடுதலை கிடைக்கட்டும். 
அதன் பிறகு கனவுகள் குறித்த எந்த புகாரும் எனக்கு எழவில்லை.

***




4 comments:

  1. மனத்தைக கொன்ற கதை. அதிர்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா.. பகிர்வுக்கு நன்றி

      Delete
  2. Really shocking story. The story narrated in direct way.Appreciation to the writer Mrs. Kalaiselvi.

    Saravanan. Bahrain

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பருக்கு.

    ReplyDelete