Search This Blog

Sunday 31 May 2020

பூச்செண்டு



அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும்  என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால்,நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல் என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது.   வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

Friday 22 May 2020

நிவாரணம்


பள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா கூறியபோது உடனே அனுமதிக் கொடுத்து விட்டு உணவுடப்பாவை எடுத்து மேசை மீது வைத்தார். அட்சயா புத்தகப்பயை முதுகில் சுமந்துக் கொண்டு நடந்து வெளியேறுவது தெரிய, பாவம்என்பதுபோல முணுமுணுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா கிளம்பி நின்றிருந்தாள். இவளை கண்டதும்சாப்டீயாடீ..” என்றாள். இருவரும் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினர். மதியவெயிலில் கண்களை சுருக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அம்மாவின் கையிலிருந்த நெகிழிப்பையில் அவர்கள் வினவக்கூடிய சான்றுகள், மற்றும் சான்றிதழும் இருந்தன. மதிய நேரமென்பதால் பேருந்தில் கூட்டநெரிசல் இல்லாமலிருந்தது. ரவிக்கையின் மேற்புறத்தில் கை விட்டு பணப்பையை எடுத்து, அதிலிருந்த தாளொன்றை உருவி கையால் தேய்த்து, நடத்துநரிடம் பேருந்துச்சீட்டு வாங்கிக் கொண்டாள்.