Search This Blog

Thursday 10 May 2018

ராசாத்தியும் கலாராணியும்


சிறப்பு சிறுகதை - பேசும்புதியசக்தி மே 2018

திருவிழாவைப்போலக் கிணற்றைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் மூன்று குடத்துக்கு மேல் எடுக்க முடியாது. தொங்கிக்கொண்டிருக்கும் சகடைகளில் கையோடு கொண்டுசெல்லும் கயிற்றை நுழைத்து குடத்தோடு இறுக்கிக் கட்டி நீரை இறைத்துக்கொள்ள வேண்டும். நீரின் மட்டம் இறங்கிக்கொண்டே போனதில் தாம்புக்கயிறு அறுத்து மரகதத்துக்கு உள்ளங்கைத் தோல் உரிந்துகிடந்தது.

”நா ஒண்ணுக்கும் ஒபயோகமத்து போயிட்டன்ல்ல மரவதம்....” தன்னிரக்கம் கவிந்தது கந்தசாமியின் பேச்சில். கிராமமே நீரைத் தேடிக் குடும்பமாக அலையும்போது ஒற்றையாளாய் மனைவி தடுமாறிப்போவது அவருக்கு வருத்தமாக இருந்தது.   எழுந்து நடமாட முடியாத உபாதை அவருக்கு. இப்போது நினைவும் மாறிக்கொண்டே போகிறது காலக்கணக்கு தெரியாமல். நேற்றுதான் திருமணம் முடிந்ததுபோல இடைப்பட்ட நாற்பது வருடத்தை திடீரென மறந்து விடுவார்... கொல்லைல அடிப்பைப்பு சத்தம் கேக்குது... யாருன்னு பாரு என்பார். எது புரிகிறதோ இல்லையோ மனைவிக்கு உதவ முடியாமல் முடங்கிப்போனது புரிந்திருந்தது.  சென்ற வாரம் சலீம்பாய் வந்தது இப்போது நினைவிலிருக்கலாம்... அல்லது இல்லாது போகலாம். ஆனால் சலீம்பாயை அடையாளம் தெரிந்திருந்தது. கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தபடியே அவரை நோக்கிக் கழியைச் சுழற்றியடித்திருந்தார்.


”அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா தொணப்பாத... நீ ஒளைக்காம பொளைக்காமதான் நா ஆளாயிட்டனாக்கும்...” கணவனிடம் பேச நேரமின்றி இடுப்பில் ஒன்றும் கைகளில் மூன்றுமாகக் குடங்களை அள்ளிக்கொண்டு நடந்தாள் மரகதம். அறுபது வயதிற்கான தேகம் பாதையற்ற பாதையில் தடுமாறியது. வெயில் வேறு மிரட்டியது. ராசாத்தியும் கலாராணியும் இருந்திருந்தால் இந்நேரம் பின்னோடு வந்திருக்கலாம். மொச்சுமொச்சென்று வாயில் எதையாவது அசைபோட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் இரண்டுக்கும். அடர்ந்த கருத்த உடல் அவைகளுக்கு. ராசாத்தியின் வாலோரம் சிறு வெள்ளை ஒட்டியிருக்கும். கலாராணிக்கு காது மடலுக்குப் பின் பொட்டுப் போன்ற வெள்ளைப் புள்ளியிருக்கும். மற்றபடி வித்யாசமில்லை.