Search This Blog

Friday 28 July 2017

ஆழம்

கணையாழி இதழில் வெளியானது.. இலக்கிய சிந்தனை அமைப்பு தேர்ந்தெடுத்த 2016ன் பனிரெண்டு சிறுகதைகளுள் ஒன்று.
அய்யோ.. அம்மா..“ வரலட்சுமியின் வாயிலிருந்து விட்டு விட்டு முனகல்கள் வந்துக் கொண்டிருந்தன. அதுவும் வெகு ஈனமான ஸ்வரத்தில். அண்ணியின் மடியில் தலை சாய்த்து துவண்டுக் கிடந்தாள் வரலட்சுமி. நேற்றிலிருந்து சாப்பிடாத பசி மயக்கமும் அதில் கலந்திருந்தது. வெயிலின் தகிப்பை மரத்தின் நிழல் சற்று போக்கிக் கொண்டிருந்தது.

கணவன் வீட்டு பூர்வீக நிலம் அது. இரண்டு ஏக்கர் பூமி. “நஞ்ச காடு ரெண்டு ஏக்கரு தேறும்.. ஒத்தப் பயதேன்.. பங்கு பாவனக்கு ஆளு கெடையாது.. வெள்ளாமகாரங்களுக்கு பவுனுதான் சொத்து.. முன்னபின்ன பாக்காம செஞ்சுப்புட்டீவன்னா காலத்துக்கும் ஓஞ்சுக் கெடக்கலாம்..“ அவளை பேசி முடிக்கும் அன்று நாச்சிமுத்துவின் தாய்மாமன் இப்படிதான் பேசினார்.

”எ லெச்சுமி.. இத்த குடிடீ.. இந்தாடீ.. ஏய்..” மடியில் சரிந்துக் கிடந்த நாத்தியை எழுப்பினாள் அண்ணி. நேரம் மதியம் இரண்டை தொட்டிருந்தாலும் வெயிலின் உக்ரம் இன்னும் குறையவில்லை. “அய்யோ.. எம் மவன்..” அழுது அழுது சரிந்துக் கிடந்தவளை இப்போதுதான் மாமரத்தின் நிழலில் கைத்தாங்கலாக அழைத்து வந்து கிடத்தியிருந்தாள். ஊண்சத்து அத்தனையும் வடிந்தவள் போலக் கிடந்தாள் வரலட்சுமி. கலைந்துக் கிடந்த சேலை கரிய வயிற்றை அப்பட்டமாகக் காட்டியது. ஒட்டி உலர்ந்த மார்பு வெறும் துணிக் குவியலாக தெரிந்தது. முழங்காலுக்கு ஏறிக் கிடந்த பாவாடையில் பிசிறலாக நுால் பிரிந்துத் தொங்கியது. கரிய உடலில் மண் படிந்து கிடக்க துறுத்திக் கிடந்த சிறு கற்கள் உடலில் உறுத்துவது சிந்தையில் படியாமல் கிடந்தாள் வரலட்சுமி. ஏழிலும் ஐந்திலுமாக இருந்த மகள்கள் அவளின் கால் மாட்டில் ஒண்டிக் கிடந்தனர்.

Wednesday 19 July 2017

“இரவு“ குறித்து பாவண்ணன்

            
ஜுலை 2017 குமுதம் தீராநதியில் வந்த கட்டுரை

சமீப காலமாக பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி. அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கைவந்திருக்கிறது.

குடும்ப உறவுகள் சார்ந்த பரிவுமிக்க ஆய்வுநோக்கு கலைச்செல்வியின் கதைகளில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆய்வுகளும் அலசல்களும் படைப்புகளுக்குள் நிகழும்போது எழுதுகிறவர்களின் கட்டுப்பாட்டை மீறி சில விபத்துகள் இயற்கையாக நேர்ந்துவிடுவதுண்டு. உணர்ச்சி வேகத்தில் யாராவது ஒருவரை குற்றவாளியாக நிற்கவைத்துவிடுவது ஒரு விபத்து. உறவுகளை ஒட்டிய சார்புநிலைப் பார்வையோடு படைப்பின் எல்லைக்கு அப்பால் நின்று சில சொற்களை ஆவேசத்துடன் சொல்ல முனைவது இன்னொரு விபத்து. ஒருபுறம் மாறும் சமூகச் சூழல்கள் வழங்கும் நெருக்கடிகளுக்கும் மறுபுறம் மரபான உறவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் சமநிலையைக் கண்டடைவதற்கு மாறாக சமூகத்தையும் உறவுகளையும் சாடிச்சாடி சொற்களை இறைப்பதில் வேகமாக ஈடுபடுவது மற்றொரு விபத்து. இப்படி எந்த விபத்துகளிலும் அகப்பட்டுவிடாமல் உண்மையான விழைவோடும் அந்தந்தத் தருணங்களின் அழுத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் பார்வையோடும் உறவுகளை மதிப்பிட முனைகின்றன கலைச்செல்வியின் கதைகள்.

“பிக்“பாஸ் – சிறு கருத்து


  அந்தரங்கம் புனிதமானது என்கிறது வழக்கு. புனிதத்தை தொன்மமாக்குவது இயல்பு. ஆனால் அந்தரங்கத்தை தொன்மவகையறாவுக்குள் சேர விடுவதில்லை நாம். வேண்டுமென்றே சில ஓட்டைகளை அனுமதிக்கிறோம். ஏனெனில் அந்தரங்கத்துக்கு சுவாரஸ்யம் அதிகம். அதை தொன்மக்கட்டுக்குள் நுழைத்து விட்டால் அவிழ்க்க முடியாமல் போய் விடும். அந்தரங்கத்தை அவ்வப்போது தொட்டுக் கொண்டால் தானே வாழ்க்கை அர்த்தப்படும்

  சாமான்யர்களின் அந்தரங்கமே இத்தனை சுவாரஸ்யம் என்றால்.. புகழ் பெற்றவர்கள்.. அதுவும் சினிமாக்காரர்களின் அந்தரங்கம் எத்தனை சுவாரஸ்யமானது..? ஒருவகையில் நமது இயலாமையின் ஏக்கம் கூட இந்த அதீத சுவாரஸ்யத்தில் கோர்த்துக் கிடக்கலாம். நம்மால் இயலாத ஒன்றை.. ஆனால் மனம் ஆசைக் கொள்ளும் ஒன்றை.. அவர்கள் வெகு இயல்பாக பெற்று விடுவதற்கு, அவர்கள் தரும் கூலியாக அவர்களின் அந்தரங்களை வெளிச்சப்படுத்துவது நமக்கு பிடித்தமானதுதான்.. ஆகவே இது குறித்து நம்மிடம் குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. அதேநேரம் தங்களை பரிசோதனை எலிகளாக்கும் நம்மை, அவர்கள் சட்டை செய்து யோசிப்பார்களா.. என்பதை பிக்பாஸ் அனுமதித்தால் அவர்களிடம் கேட்கலாம்.

Monday 17 July 2017

'அற்றைதிங்கள்' நாவலின் முன்னுரை

தேடல்..

பழங்குடியினரை பற்றி எழுதும் முன் திட்டம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் காடுகள் மீது தீராக்காதல் உண்டு. காடும் காட்டை சார்ந்த வாழ்வும் எப்படியானதாக இருக்கும் என்ற ஆவலுண்டு. தேடல்களை  அதை நோக்கி நகர்த்தத் தொடங்கினேன்.  கானகம் என்பதே இயற்கை.. ரசிக்கத்தகுந்தது.. மழையும் மலையும் மரங்களுமானது.. விலங்குகளுக்கானது.. என்ற சமவெளி மக்களின் புரிதல்தான் எனக்கும். அங்கிருக்கும் மனிதர்கள் பற்றி எவ்வித உணர்வுகளுமற்றே இதுவரை கடந்திருந்தேன்.. வீரப்பன் வேட்டை.. வாச்சாத்தி சம்பவம்.. போன்ற பெரிய சம்பவங்களில் காடு பின்னகர்ந்திருக்கும். மான்..மயில் போன்றவற்றின் உயிரற்ற உடல்களை கிடத்தி அதனருகில் கால்களை மடித்து சம்மணமிட்டோ.. மடித்த கால்களின் மீது கைகளை நீட்டியோ அமர்ந்து வனத்துறையினருடன் போஸ் கொடுக்கும் பழங்குடியினரை தொலைக்காட்சி அல்லது பத்திரிக்கைகளின் வழியே நிமிடக்கணக்கில் மட்டுமே அறிமுகம் எனக்கு.

இயல்பாகதானிருந்து தொடக்கம்.

Saturday 1 July 2017

'இரவு' தொகுப்பு குறித்து திரு.பாவண்ணன்

தாய்மையின் முகங்கள்

சமீப காலமாக பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி. அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கை வந்திருக்கிறது.

குடும்ப உறவுகள் சார்ந்த பரிவுமிக்க ஆய்வுநோக்கு கலைச்செல்வியின் கதைகளில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆய்வுகளும் அலசல்களும் படைப்புகளுக்குள் நிகழும்போது எழுதுகிறவர்களின் கட்டுப்பாட்டை மீறி சில விபத்துகள் இயற்கையாக நேர்ந்துவிடுவதுண்டு. உணர்ச்சி வேகத்தில் யாராவது ஒருவரை குற்றவாளியாக நிற்கவைத்துவிடுவது ஒரு விபத்து. உறவுகளை ஒட்டிய சார்புநிலைப் பார்வையோடு படைப்பின் எல்லைக்கு அப்பால் நின்று சில சொற்களை ஆவேசத்துடன் சொல்ல முனைவது இன்னொரு விபத்து. ஒருபுறம் மாறும் சமூகச் சூழல்கள் வழங்கும் நெருக்கடிகளுக்கும் மறுபுறம் மரபான உறவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் சமநிலையைக் கண்டடைவதற்கு மாறாக சமூகத்தையும் உறவுகளையும் சாடிச்சாடி சொற்களை இறைப்பதில் வேகமாக ஈடுபடுவது மற்றொரு விபத்து. இப்படி எந்த விபத்துகளிலும் அகப்பட்டுவிடாமல் உண்மையான விழைவோடும் அந்தந்தத் தருணங்களின் அழுத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் பார்வையோடும் உறவுகளை மதிப்பிட முனைகின்றன கலைச்செல்வியின் கதைகள்.

அலங்காரம்

2017 க்கான இலக்கிய சிந்தனை விருதுப் பெற்றது.
கணையாழி ஜுலை 2017ல் வெளியானது






முடிசூட்டு விழாவுக்கு இலட்சக்கணக்கில் கூட்டம் சேர்ந்திருந்தாலும் இன்னும் வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. அனுமர் தங்கத்தாலான குடங்களில் முடிசூட்டு விழாவுக்கான தீர்த்தங்களை நிரப்பி, ஏந்திக் கொண்டு வந்தார். அவரின் மனம் அதிகப்படியான மகிழ்ச்சியில் ஊறிக் கிடந்தது. போர் முடிந்து விட்டது. இராவணனை வென்றாயிற்று. அன்னை சீதா மீட்கப்பட்டு விட்டார். அசோகவனத்திலிருந்து சீதாதேவி சிறை மீண்ட அன்றைய தினம் அவரின் நினைவிலாடியது. மறக்க முடியாத நாளல்லவா..? அந்த தினத்தை குறித்த எண்ணங்களே அவருக்கு மனம் நிறைய களிப்பையளித்தது. கூடுதல் களிப்பாக தன் இனிய இல்லாளை அழைத்து வரும் அற்புதமான பொறுப்பை அவரிடமல்லவோ அளித்திருந்தார் அவரின் இதய தெய்வம் இராமர்.



”அன்புள்ளவனே.. நீ சீதையிடம் சென்று இராவண வதத்தை தெரிவிப்பாயாக..” என்ற மொழிகளை கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதம் இன்னமும் குறையவில்லை அனுமருக்கு.

அசோகவனத்தில் வருத்தத்தில் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த அன்னையை வணங்கி அத்தனை பெரிய மகிழ்ச்சியை தெரிவிக்கும் நேரம் கனிந்து வந்தது.