Search This Blog

Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Monday, 15 July 2024

தேவனாம்பிய பியதசி

May 2024 வல்லினம் இணைய இதழில் பிரசுரமானது.

‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது. நீங்கள் எந்தளவுக்கு அதன் சாரத்தை உள் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப உங்களிடம் மாற்றங்கள் நடக்கும். அதற்கு நானே சாட்சி“ 



ரூப்நாத்தில் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டிருந்த கணவர் அசோகரின் செய்தியை வரிவரியாக வாசித்தார் ராணி வேதிதாதேவி. சமஸ்கிருதத்தோடு பாலியிலும் பிராகிருத மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது. சக்ரவர்த்திக்கு ரூப்நாத்தில் மட்டுமல்லாது பேரரசெங்கும் தனது செய்திகளை பாறைகள், ஸ்துாபிகள், கம்பங்களில் செதுக்கும் வழக்கமிருந்தது. அது அவர் நாட்டு மக்களுக்கும் நாளைய வரலாறுக்கும் விடுக்கும் செய்தி என்று சொல்லிக் கொண்டனர். உஜ்ஜையினிக்கு அருகிலிருக்கும் ரூப்நாத்துக்கு ராணி அன்று நேரிலேயே சென்றிருந்தார். களிறென மதர்த்து நின்றிருந்த அப்பாறை நேர்த்தியுடன் வடிவாக்கப்பட்டிருக்க, அதில் எழுத்துகள் புத்தம்புதியனவாய் செதுக்கப்பட்டிருந்தன.  தேவனாம்பிய பியதஸி… என்று தொடங்கியிருந்த எழுத்துகளின் வரி வடிவின் மீது ராணி வேதிதாதேவி தன் விரல்களைக் கொண்டு வருடினார். தேவனாம்பிய பியதஸி… (கடவுளுக்கு பிரியமானவர்) வாய் விட்டு சொல்லிக் கொண்டார். இப்போதெல்லாம் அவர் கணவர் தனக்கு தானே அப்படிதான் விளித்துக் கொள்கிறாராம். அவர் கடவுளுக்கு மட்டும் பிரியமானவர் அல்ல. எனக்குமே.. அவருக்குமே நான் பிரியமானவள்தான். ஆம்.. அதைதான் அவர் குறிப்பிடுகிறார். இவை எழுத்துகளல்ல. என் கணவரி்ன் மனம்… அவரின் குரல்… அவரின் உணர்வு… அவர் என்னிடம் தன்னை அறிவிக்கிறார். அவர் என்னுடன் உரையாடுகிறார். ஆம்… இவையெல்லாம் எனக்கான செய்தியே…  துள்ளிய மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசித்தார். 

அக்னி பர்வதம்

வனம் மே 2024 




படுத்துக் கொண்டேயிருப்பது பெரும் பாரமாக தோன்ற அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள். வெளியே வெயில் வெளிர்மஞ்சள் பந்தலிட்டிருந்தது. நாரத்தை மரம் அண்டையாக தோன்ற அவள் அதன் உதிரியான நிழலுக்குள் வந்தாள். மாமரத்திலிருந்து வீசிய புளிப்புக் காற்று நாசிக்குள் ஏறியதில் நாக்கு கூசுவது போலிருந்தது. அவைப் பழுத்தாலும் கூட பட்சிகளுக்கு மட்டுமே உகந்தவையாக இருக்கும். அணிலொன்று வாலைத் துாக்கிக் கொண்டு கொய்யா மரத்தில் ஏறியது. அருகிலிருந்த ஓலைக்கூரையால் வேயப்பட்ட நீர்ப்பந்தலில் சிறுமியொருத்தி பானை மோரை முகர்ந்து குடித்தாள். வீட்டின் முன்புற கட்டுமானத்தில் வேய்ந்திருந்த சிவந்த ஓட்டின் மீது எட்டி மரம் படுத்து கிடந்தது. சுவருக்கும் கல் பாவிய நடைபாதைக்குமிடையிலிருந்த சிறு மண்பரப்பில் புளியமரக்கன்று வளர்ந்திருந்தது. அதன் இளங்கொம்பை மென்மையாக வளைத்து பிடித்தபடி வீட்டை புதிதாகப் பார்ப்பது போல பார்த்தாள் அவள். கல்கத்தாவில் அவளிருக்கும் வீடு இதில் பத்தில் ஒரு பங்குக் கூட இருக்காது. இந்த வீட்டிற்கு வயது முன்னுாறு இருக்குமா? பெருக கட்டி பெருகி வாழும் இது எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்? அய்யோ வீட்டை இது என்கிறேனே.. அதற்காக இவர் என்று சொல்ல முடியுமா..? அல்லது இவளா? எது சரி…? எதுவாக இருந்தாலும் நேரத்திற்கேற்ப சுருங்கி விரியும் இந்த வீட்டுக்கு நிச்சயம் உயிரும் உணர்வும் இருக்கதான் வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடும்போது அவர்களை அணைத்துக் கொள்வதுபோல வீடு சிறியதாகி விடும். காலையிலிருந்து புகைந்துக் கொண்டிருக்கும் அடுப்பு சமைத்தனுப்பும் பண்டங்களை ஆண்களுக்கு பரிமாறி விட்டு மீதமிருப்பதை உண்டு விட்டு பெண்களும், உண்ட களைப்பில் ஆண்களும் ஆளுக்கொரு பக்கம் ஒண்டிக் கொள்ளும் மதிய நேரங்களில் வீடு பெரியதாகி விடும். விஷேச நாட்களிலோ விருந்தாளிகளின் இறைச்சலுக்குள் வீடு தன்னை குறுக்கிக் கொண்டு விடும். எது எப்படியிருந்தாலும் நாலப்பாட்டு தறவாட்டுக்கென்றிருக்கும் அந்தஸ்தும் மரியாதையும் வெளியுலகில் குறைவதேயில்லை.    

Sunday, 14 July 2024

ஆடல்

April 10, 2021 Solvanam E-magazine, காந்தியை சுமப்பவர்கள் - காந்திய கதைத்தொகுப்பு, மொழிமாற்றம் செய்யப்பட்டு கன்னட தொகுப்பு, மற்றும் கன்னட பத்திரிக்கை மற்றும் தெலுங்குப் பத்திரிக்கை 




டெல்லி நகரின் அந்த மாலை நேரம், பகல் நேரத்தில் தலைக்காட்டிய வெதுவெதுப்பு மறைந்து குளிருக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. யமுனை நதியை தொட்டு மேலெழுந்தக் காற்று நகரை மேலும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. சற்று முன்பு வரையிலும் தெய்வீகத்தை உணர வைத்துக் கொண்டிருந்த பிரார்த்தனைக்கான மேடை இப்போது தன் புனிதத்தைத் தொலைத்திருந்தது. இசைக்கருவிகள் இசைப்பாரும் கேட்போருமின்றி கிடக்க, ஒலித்தக்குரல்களில் பதற்றமும் அழுகையும் தொற்றியிருந்தன. நடைப்பாதையை அடுத்திருந்த புல்வெளிகள் நடந்த துயரை ஏந்திக் கொண்டு நகரும் வழியின்றி திகைத்திருந்தன. தலைக்கு மேலாக கவிழ்ந்திருந்த நீலவானத்தில் சிறு மேகக்கூட்டமொன்று திட்டாகக் குவிந்திருந்தது. 

“மோகன்.. உங்களால எழுந்திரிக்க முடியும். முயற்சி செஞ்சுப் பாருங்க 

“நிச்சயமா… நிச்சயமா முயற்சி செய்வேன் கஸ்துார். எல்லோரும் என்னை சுத்தி நிற்பதையும் பதறுவதையும் உணர்றேன். நான் இப்பவே பிரார்த்தனை மேடைக்கு போயாகணும். இல்லேன்னா அவங்க எல்லோரோட நேரமும் வீணாப்போயிடும் 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

மே 2023 வல்லினம் இணைய இதழில் வெளியானது  




இது இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வமான கடைசி விடியல். கடைசி விழிப்பும் கூட. விடியல் வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். விழிப்பு என்பது உறங்கினால் மட்டும்தானே சாத்தியம்? அவரால் படுத்த நிலையிலேயே உடலின் பாரத்தை உணர முடிந்தது. குளிரூட்டியையும் மின்விசிறியும் மீறி லேசாக வியர்ப்பது போலிருந்தது. அவர் படுத்தவாறே அறையை ஆராய்வதுபோல பார்வையை சுழற்றினார். இரவு விளக்கின் ஒளியில் அறை வெண்ணிற போர்வை கொண்டு மூடியது போலிருந்தது. அதை அறை என்பதை விட வீடு எனலாம். அதன் விசாலத்துக்கு ஈடு கட்டுவது போல உயரமான கூரை. டில்லியின் அதீத வெப்பத்தையும் குளிரையும் தன்னுள் அதிகம் ஈர்த்துக் கொள்ளாவண்ணம் மரப்பேனல்களால் மூடப்பட்ட சுவர்கள், உயர்ந்து அகன்ற தனது தேகத்தில் திரைசீலைகளை அணிந்திருந்த சன்னல்கள், மர அலமாரிகள், ரேக்குகள், அலங்காரப்பொருட்கள், ஓவியங்கள், வெள்ளியாலான புழங்குப் பொருட்கள்… போதும்… போதும்… அவர் கண்களை மூடி காட்சிகளை மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய தனிப்பட்ட உடமைகள் பெரும்பான்மையாக இல்லை. அவையெல்லாம் தயாராக எடுத்து வைக்கப்பட்டு விட்டன. இனி பயணம் மட்டுமே மிச்சம். 

Thursday, 20 April 2023

ருட்டியாகிய நான்…

 'தமிழ்வெளி' ஏப்ரல் 2023 வெளியீடு



ருட்டி வெகு உரிமையாக படுக்கையில் தன்னருகே சாய்ந்து கொண்ட ஷப்புர்ஜியின் மெத்தென்ற கழுத்தை மிக மென்மையாக வருடினாள். அது கழுத்தை மேலும் வாகாக்கி கொண்டு அவளின் இளஞ்சூடான ஸ்பரிசத்தில் மெய்மறந்து கொண்டிருந்தது. கோபத்தோடு தங்களையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த ஃபிடோவை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “கமான் ஃபிடோ…” என்றபோது காத்திருந்தது போல அவளிடம் ஓடி வந்தது. அவளிடம் யார் முதலில் செல்வது என்ற ஆர்லெட்டுக்கும் ஃபிடோவுக்குமான வழக்கமான சண்டையில் ஆர்லெட் வழக்கமற்று தோற்க, அந்த எரிச்சலில் அவள் காலடியில் படுத்துக் கொண்டு மீசைக்குள்ளிருந்த தன் அரும்பு வாயை திறந்து மியாவ்... என்றது ஆர்லெட்.

Sunday, 5 February 2023

'அவள்' - சிறுகதை 2012ல் அமுதசுரபியில் வெளியான கதை



வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே அரசாணை எண் கிடைக்குமா? மேலதிகாரியின் அறைக்குள் சென்ற பெண் அலுவலர் எப்போது வெளியே வந்தார்? அதிரஅதிர கவலைப்படும் அலுவலக பணிக்குள் எங்குமே ஒட்டாத அவள் நிலை.

மனம் நழுவி நழுவி காலை நேரத்திற்கே சென்றது.

Sunday, 13 June 2021

மிலியின் சகோதரன்

 

அன்று மோகன்தாஸ் காந்தியை கைது செய்திருந்தார்கள். 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன.  பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொண்டார்.

 

டிரான்ஸ்வால் அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஏசியாட்டிக் அவசரச்சட்டத்தின்படி அங்கு வசிக்கும் இந்தியர்கள் அரசாங்கத்திடம் புதிதாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பதிவுச்சான்றிதழை எந்நேரமும் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும்  பதிவுச்சான்றிதழ் இல்லாதவர்கள் கைது செய்யப்படவோ டிரான்ஸ்வாலுக்கு வெளியே அனுப்பப்படவோ வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எதிராக செப்டம்பர் 11 ஆம் தேதி எம்பயர் தியேட்டரில் தெளிவான, தீவிரமாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், அவரசச்சட்டத்தின் கசப்பான, கொடுங்கோலான பிரிட்டிஷ் இயல்புகளுக்கு மாறான உத்தரவுகளுக்கு கீழ்படிவதை விட டிரான்ஸ்வாலிலிருந்த ஒவ்வொரு இந்தியரும் சிறைவாசத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் நடந்த தொடர் போராட்டம் மோகன்தாஸுக்கு ஏராளமான ஆதரவாளர்களையும் சிறை தண்டனையும் பெற்று தந்திருந்தது. 

Sunday, 9 August 2020

நீரோசை

 

ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்ல தொடங்கியது. நதியில் ததும்பிய நீர் சீரான தாளத்தில் க்ளக்.. க்ளக்.. என படகை அறைந்து எதையோ சொல்லிக் கொண்டே வந்தது. பரிசல்களும் சுற்றுலா படகுகளும் சோம்பேறித்தனமாக நகர, நான் அமர்ந்திருந்த பயணியர் படகு இரைச்சலையும் புகையையும் கக்கியபடி வேகமாக முன்னேறியது. முன்னேற்றம் என்பதே இலக்கு என்ற ஒன்றிருக்கும்போதுதான் அர்த்தப்படும். அதுவும் ஒரேமாதிரியான இலக்கு. பரிசலில் ஒற்றையாளாய் அமர்ந்து பயணிப்பவனுக்கும் எருமைப்பாலில் தயாரான இனிப்புபேடாவை மரத்தேக்கரண்டியில் அள்ளியுண்டபடி சுற்றுலா படகில் அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கும் ஒரேமாதிரியான நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. நான் பரிசலில் ஏறியிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன். துடுப்பு போடாமல் நீரின் சுழலோடு பரிசலில் சுற்றிசுழல்வதாக எண்ணிக் கொள்வதே பரவசமாக இருந்தது. மூங்கிலை வளைத்து கூடாரமாக்கி அதன் மீது பாய்கூரையிட்டு வெயிலை மறைத்த இயந்திரப்படகுகள் இரைச்சலும் புகையுமாக நீரை பீய்ச்சிக் கொண்டு பயணிகளோடு கங்கையை அளைந்தன.

Wednesday, 1 July 2020

ஓடிப்போகிறவள்


தோட்டத்து முள்ளங்கி ஒரு கொதிக்கே பச்சைத்தண்ணீராக வெந்திருந்தது. இரவுக்கும் சேர்ந்து குழம்பை கூட்டி வைத்திருந்தாள். பெருங்காயம் போட்டு தாளித்தபோதுசோறு வச்சிட்டீயாடீ..” என்றாள் கலாராணி. “எல்லாம் வச்சாச்சு..” பழக்கத்தில் வந்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டும்.. வடிச்சு வுட்டுருக்கேன்..“ என்றாள். திண்ணையில் படுத்துக்கிடந்த செல்வராசுஎம்மா.. செயந்தீம்மா..“ என்றான். “ம்ம்.. சொல்லு..” சோற்றை வடிப்பானையிலிருந்து நிமிர்த்திக் கொண்டே பேசினாள் ஜெயந்தி.

பாலிருந்தா டீ போட்டு கொண்டாய்யா.. வாயெல்லாம் வறண்டு போச்சு..” வேலைவெட்டி என்று பிரத்யேகமாக எதுவும் வைத்துக் கொள்வதில்லை. பரம்பரையாக ஒதுங்கிய ஐந்து ஏக்கரை இரண்டாக்கி அதையும் குத்தகைக்கு விட்டிருந்தான்.

ஜெயந்தி ஏற்கனவே கொடியடுப்பில் பாலை ஏற்றியிருந்தாள்.


Monday, 22 June 2020

அன்னை


அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாரளமாக புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்த்து. திரைசீலையை இழுத்து விட்டுக் கொண்டு வெளியே பார்வையை செலுத்தினாள். மணி ஏழை தாண்டியிருக்கலாம். மனம் பதறினாலும், அதுவே எழுந்துக் கொள்ளலை தடுத்தது. எட்டுமணிக்கு வீட்டு வேலைக்கு ஆள் வந்து விடும். அதற்குள் சமைத்து விடலாம். இல்லையென்றாலும் ஒற்றையாளுக்கு என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது..? அலைபேசி வழியே அலுவலகத்திற்கு மதியஉணவை தருவித்துக் கொள்ளலாம். மின்னேற்றியிலிருந்து அலைபேசியை உருவி எடுத்தபோதுதான் அது ஒலித்தது. மூத்தசகோதரனினிடமிருந்து. இந்நாள்வரை அவனிடமிருந்து வந்த அழைப்புகளை ஒரு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். பொதுவாக அதையே அவன் இயல்பாக்கியிருந்தான். அவ்விடைவெளிகளை அடைக்கும் பொறுப்பை அம்மாவே ஏற்றுக் கொண்டிருந்தாள், ஓராண்டுக்கு முன்பு வரை.  மின்னுாட்டத்திலிருந்து அகற்றியபோது அழைப்பொலி முடிந்து, பிறகு மீண்டும் ஒலித்தது. பேச்சுவார்த்தைகள் அற்று போன நீண்ட கொடுந்தனிமைக்கு பிறகு வரும் முதல் அழைப்பு. அந்நீண்ட இடைவெளியில் அவளின் தீண்டப்படாத அழைப்புகள் அவன் அலைபேசியிலிருந்து எங்கோ ஓடி மறைந்திருக்கலாம்.


ஹலோ என்பதற்கு பதிலாகசொல்லுண்ணா..“ என்றாள்.

Sunday, 31 May 2020

பூச்செண்டு



அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும்  என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால்,நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல் என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது.   வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

Friday, 22 May 2020

நிவாரணம்


பள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா கூறியபோது உடனே அனுமதிக் கொடுத்து விட்டு உணவுடப்பாவை எடுத்து மேசை மீது வைத்தார். அட்சயா புத்தகப்பயை முதுகில் சுமந்துக் கொண்டு நடந்து வெளியேறுவது தெரிய, பாவம்என்பதுபோல முணுமுணுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா கிளம்பி நின்றிருந்தாள். இவளை கண்டதும்சாப்டீயாடீ..” என்றாள். இருவரும் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினர். மதியவெயிலில் கண்களை சுருக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அம்மாவின் கையிலிருந்த நெகிழிப்பையில் அவர்கள் வினவக்கூடிய சான்றுகள், மற்றும் சான்றிதழும் இருந்தன. மதிய நேரமென்பதால் பேருந்தில் கூட்டநெரிசல் இல்லாமலிருந்தது. ரவிக்கையின் மேற்புறத்தில் கை விட்டு பணப்பையை எடுத்து, அதிலிருந்த தாளொன்றை உருவி கையால் தேய்த்து, நடத்துநரிடம் பேருந்துச்சீட்டு வாங்கிக் கொண்டாள்.