Search This Blog

Showing posts with label காந்தி கட்டுரைகள். Show all posts
Showing posts with label காந்தி கட்டுரைகள். Show all posts

Thursday, 1 August 2024

சுதந்திரத்திற்கு பின் திரு.காந்தி

 


இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மிக மோசமான நிகழ்வுகளை கண்ணுற்று அதிர்ந்துப் போயினர். இது… இது… இரண்டாம் உலகப்போரில் நாங்கள் கண்டதை விட இது மிகவும் மோசமானது… மிக மோசமானது… என்றனர் அதிர்ச்சி விலகாமல்.

இரு நாடுகளிலும் தப்பியோடுதல் அதிகரித்த போது எல்லைப்பகுதிகளில் ரயில் பெட்டிகளில் கூட்டம் கூட்டமாய் வந்த அகதிகள்தான் தாக்குதலின் முக்கிய இலக்குகள் ஆயினர். ரயில் பாதைகள் பெயர்க்கப்பட்டு வண்டிகள் கவிழ்க்கப்பட்டு உயிர்கள் எடுக்கப்பட்டன. ரயில்கள் நிலையங்களில் நின்ற போதோ அல்லது வன்முறை கும்பல் அபாய சங்கிலியை இழுத்து வெட்டவெளிகளில் ரயில்களை நிறுத்தியோ உயிர்களை பிணங்களாக்கி அதே ரயில்களில் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் சுன்னத் செய்யப்பட்டவர்களும் பாகிஸ்தானில் சுன்னத் செய்யப்படாதவர்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். பெண்களின் நிலையோ கூறத்தக்கதாக கூட இருக்கவில்லை. மதத்தின் மூடாக்குகளுக்குள் குழந்தைகளின் மரணக் கதறல்கள் தேய்ந்துப் போயின. ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் பெட்டிகளின் கதவுகள் வழியாக ரத்தம் வழிந்தது.

அவர் சந்தேகப்பட்டு பின் சந்தோஷப்பட்ட கல்கத்தாவின் அமைதியின் மீதும் கல்லெறியப்பட்டிருந்தது. தலைநகர் டில்லியிலும் அதே நிலைமையே. கடும் குளிர் வாட்டி வதைத்த டிசம்பர் மாதத்தின் பின்னாள் ஒன்றில் அவர் வருத்தத்தில் தோய்ந்தெடுத்த வார்த்தைகளை வேதனையின் வலியிலிருந்து பிரசவிக்கிறார்.

காந்தியும் அகிம்சையும்

 

நீங்கள் மனிதர் ஒருவரை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள்… நாங்கள் அவரை மகாத்மாவாக்கி உங்களிடம் திருப்பியளித்திருக்கிறோம்…

நாங்கள் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உங்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் நீங்கள் அவரை கொன்று விட்டீர்கள்…

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கூறுவது போலவும் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிரிட்டிஷார் உரைப்பது போலவுமிருக்கும் இக்கூற்றுகளின் பொருளை முழுமையாக உணராதவர்கள் கூட இதனை இயல்பாக பயன்படுத்துவார்கள். மேடை பேச்சுகளிலோ கட்டுரைகள் எழுதும்போதோ அவரை பற்றி ஏதுமறியாதவர்கள் கூட சொல் அலங்காரத்துக்காகவே பொருள் அலங்காரத்துக்காகவோ இதனை சேர்த்துக் கொள்வதுண்டு. அவரை உணர்ந்தவர்கள் இக்கூற்றுகள் அவரை மனிதருள் மேம்பட்டவராகவும் அவர் ஒரு புதையல் அல்லது பொக்கிஷம் போன்று சித்தரிக்கப்படுவதையும் அறிந்து பெருமிதம் கொள்ள முடியும்.

Friday, 24 February 2023

இந்திய சுயராஜ்ஜியம் – சாமான்யப் பார்வையில்

 



அன்று 1909 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் மத்திய நாளான பதினாறாம் தேதி. தென்னாப்பிரிக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய சங்கத்தின் பொதுக்கூட்டம் ஃபோர்ட்ஸ்பர்க் மசூதிக்கு வெளியே அவசரமாக கூடியது. அதன் அவசரத்திற்கு பின்னிருந்தது களையப்பட வேண்டிய அவசரச் சட்டம். அது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரானது. அங்கு இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரிட்டிஷ் அரசு முனைப்புடனிருந்தது. முதற்கட்டமாக, அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் கை ரேகை பதிந்து உரிமைச்சீட்டு வாங்க வேண்டுமென்றும் அதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அச்சட்டம் வலியுறுத்தவிருந்தது. சுமார் 1500 இந்தியர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில், லண்டன் இம்பீரியல் அரசாங்கத்திடம் இச்சட்டத்தின் நியாயமின்மை குறித்து முறையிட தீர்மானிக்கப்பட்டது. இதற்கென சங்கத்தின் சார்பாக துாதுக்குழு ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்பவும் முடிவு செய்தது. அக்குழுவில் காந்தியும் ஹாஜி ஹபீப் என்பவரும் இடம் பெற்றிருந்தனர்.

தென்னாப்பிரிக்கா பற்றி மகாத்மா காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள் – ஒரு பார்வை



அவர் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லது பொருளாதார தேவைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார். ஆனால் 1896 ஆம் ஆண்டின் மத்தியில் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தது அவருடைய சொந்த நோக்கத்திற்காக மட்டுமல்ல. இந்தியா வந்த அவரை தென்னாப்பிரிக்கா மீண்டும் அழைக்கிறது, அதுவும் அவசரமாக. அவரும் அதை சிரமேற்கொண்டு தென்னாப்பிரிக்கா புறப்படுகிறார். அவரின்றி ஏதும் இயங்காது என்று தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கருத, அவர்தான் எல்லாவற்றையும் துாண்டி விடுகிறார் என்று தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்கள் எண்ண, இவற்றை குறித்து பெரும்பாலும் ஏதுமறியாத சுமார் எண்ணுாறு இந்தியர்கள் கோர்லண்ட் மற்றும் நாடேரி என்ற பெயர்களைக் கொண்ட இரு கப்பல்களில் அவருடன் பயணித்து தென்னாப்பிரிக்காவின் நேட்டால் துறைமுகத்துக்கு சென்று சேர்கின்றனர். அவர்களுள் முதன்முதலாக தன் கணவனின் கரம் பற்றிக் கொண்டு கிளம்பிய இளம் மனைவி கஸ்துாரும் அடக்கம். அந்த இளம் தம்பதிகள் அவர்களது சொந்த மகன்கள் இருவரோடு அக்காள் மகனையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்

காந்திய தொகுப்பு நுால்கள் பதினேழில் முதல் தொகுப்பில் வெளியான தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் நுால் குறித்து சிறுபார்வை



மெலிந்தத் தோற்றம் என்றாலும் பலகைப் போன்று அகன்ற தோள்கள், லேசாக பருத்த மூக்கு, பற்களற்ற பொக்கை வாய், சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் உள்ளொளி பொருந்தியக் கண்கள், சற்றே பெரிய காதுகள். வழுக்கையான தலை என்பதால் காது வரை நீண்டு முழு வடிவம் காட்டி நிற்கும் முட்டை வடிவக் கண்ணாடி, சராசரி இந்தியரின் பொருளாதார நிலையை உணர்த்தும் கதரினாலான நிரந்தர அரையாடை என தன் பின் நாளைய தோற்றத்துக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்துடன்தான் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். பிறகு அவர் வாழ்வில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட வாழ்வு என்று பிரித்தறியவியலாத நிலைக்கு சென்றிருந்தது. 

Sunday, 5 February 2023

சியமந்தகம்: ஜெயமோகன் 60 நுாலில் வெளியான கட்டுரை

என்றைக்கும் காந்தி –  எழுத்தாளர் ஜெயமோகனின் 'இன்றைய காந்தி’ நுால் குறித்த ஒரு விமர்சனப்பார்வை 



மோகன்தாஸ்காந்தி
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நுாற்றாண்டின் மத்திமம் வரைக்கும் தனது வேறுபட்ட ஆன்மீக அரசியல் அணுகுமுறையின் மூலம் அடைந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகெங்கும் அறியப்பட்டவர். போற்றல்களும் துாற்றல்களும் நிறைந்த அவரது வாழ்க்கையில், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்க்கைக்கு பிறகும் அவரவர் புரிதல்களுக்கேற்ப அவருக்கான சித்திரத்தை உலகம் வரைந்துக் கொண்டேயிருந்தாலும், எல்லா கோடுகளுமே ஓவியத்தின் தத்ரூபத்தை அல்லது ஜீவனை விளக்கி விடுவதில்லை.