அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில்
ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த
இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய
நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின்
முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான அலங்கரிப்பில்
சிறப்பாக ஒளியூட்டப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் படங்கள் இருந்த சட்டகங்களிலெல்லாம்
தேசியக்கொடிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய பிரதிநிதிகள்
அடங்கிய அரசியலமைப்புச் சபையின் விசேஷக்கூட்டத்திற்கு முன்னதாக இரவு பதினோரு மணிக்கு
வந்தேமாதரம் பாடலுடன், சுதந்திரப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு
செலுத்தப்பட்ட இரண்டு நிமிட அஞ்சலிக்கு பிறகு விழா தொடங்கியிருந்தது. பாடலுக்கும் கொடி வழங்கலுக்குமிடையே நடந்த சொற்பொழிவுகளின் இறுதியில் சுதந்திர
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உணா்ச்சிப்பூர்வமாகவும் சொல்நயம்
மிக்கதாகவுமான உரையாற்றினார்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பும் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வு
நடந்திருந்தது. அது தேசியவாதிகளின் கனவுகளுக்கு தீவிர வேகம்
கொடுப்பதோடு பிரிட்டிஷாரை அதிகாரத்தை கைவிட வற்புறுத்தும் நோக்கில் சுயராஜ்ஜியம் அல்லது
முழுமையான சுதந்திரம் என்ற
கோரிக்கையை முன் வைத்து லாகூரில் நடைப்பெற்ற காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அம்மாநாட்டில்தான் நேரு, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அறிவுத்திறனும் நாவன்மையும் அந்நிய விவகாரங்கள் குறித்த ஞானமும்
இளைஞர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தன.