புனிதவதியின்
ஒட்டி வெதும்பிய தேகம் கடற்காற்றில் அடித்துச் செல்லாதவாறு நீரில் நனைந்த மணற்பரப்பு
அவள் கால்களை பிடித்து நிறுத்தியிருந்தது. கோடொன்றை வரைந்து அதனை நிமிர்ந்தியது போன்றும் ஒற்றை
பனைமரம் போன்றும் நின்றிருந்த அவளை கடல் எட்டிப் பிடிக்க முயல, அவளோ அதனிடம் எதையோ
பேசும் முனைப்போடும் அதேசமயம் அணுகவொட்டாத இயல்போடும் கைகளை கட்டியப்படி நின்றிருந்தாள்.
அவளுடைய உலர்ந்த முகத்தில் கீற்றுப் போல புன்னகை ஒட்டியிருந்தது. அறியும் ஆர்வம் மேலிட
முன்னேறி வந்த கடல் பேசாமடந்தையென நின்றிருந்தவளைக் கண்டு பொறுமையிழந்து சீறியது. இன்னும்
சிறிது நேரத்தில் ஆதவன் வேறு அழையாவிருந்தாளியென ஒளிந்துக்கொள்ள வந்து விடுவான். அவள்
படபடக்கும் கடலை இரசித்தவளாக நின்றிருந்தாள்.
புனிதவதியின்
பிறந்த ஊரான காரைவனத்திலும் இதே கடல்தான். ஆனால் அது பரபரப்புகளால் சூழப்பட்டிருக்கும்
கடல். அதன் கரையையொட்டி துறைமுகமும் அதனை மையப்படுத்திய ஏற்றுமதி இறக்குமதி வணிகமுமாக
கடற்கரை சாலை எந்நேரமும் அதகளப்பட்டுக் கொண்டிருக்கும். தவிரவும், வெளியூர் வியாபாரிகளுக்கான
தங்கும் விடுதிகளும் கடைகளும் மைதானத்திலிருக்கும் குதிரை இலாயங்களும் கரையையொட்டி
அமைந்த மீனவக்குடியிருப்புகளும் நெரிசலை கூட்டி விடும். அதற்கு தொடர்பற்றன போன்றிருக்கும்
உள்வீதிகள் வணிகர்களின் மாளிகைகளாலும் மாளிகைகள் செல்வத்தாலும் சிவபூசைகளாலும் நிரம்பியிருக்கும்.
அதிகாலையிலும் அந்திமாலையிலும் கோயில்கள், வீடுகள் எனவெங்கிலும் சிவமந்திரங்கள் ஒலிக்கத்
தொடங்கி விடும். அம்மாளிகைகளில் ஒன்றில்தான் புனிதவதி பிறந்து வளர்ந்திருந்தாள். உயரமும்
எடையும் ஒருங்கமைந்த அவளுடைய மாந்தளிர் வண்ண
மேனியில் செய்து
வைத்தன போன்றிருந்தன முகஅவயங்கள். செல்வத்திலும்
இளமையிலும் செழித்திருந்தது தேகம். அவள் பெருவியாபாரியும் பெருந்தனக்காரருமான தனதத்தனின்
ஒற்றை வாரிசு. அவருக்கு உள்ளுரோடு வெளியூரிலும் வணிகமிருக்க, அதன் பொருட்டு அவர் வெளியூரில்
தங்கி விட நேரிடும்போது தாயார் தர்மவதிதான் உள்ளுர் வணிகத்தை கவனித்துக் கொள்வார்.
காரைவனத்தில்
தன் மாளிகையின் மேல்மாடத்தில் அமர்ந்திருந்த அவளை கடல்தான் முதலில் நட்புக்கரம் நீட்டி
அழைத்தது. வழக்கம்போல கடற்கரைச் சாலையில் உற்சாக கூச்சலோடு விளையாடும் சிறுவர்களை அவள்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடல் அவளை நோக்கி ஒலியெழுப்பியது. அவளுடைய கவனத்தைக்
கவர அலைகளால் நடனமிட்டுக் காட்டியது. அவளும் பதிலுக்கு தாயார்களின் இடுப்பிலும் முதுகிலும்
அப்பிக் கிடக்கும் குழந்தைகளையும் ஒரு கையால் குழந்தைகளை அணைத்தப்படி மறுகையால் கரை
மணலில் மீன்களைப் பரத்தும் பெண்களையும் அந்தி நேரங்களில் தம் மகவுகளை தோள்களில் வழிய
விட்டு மகிழ்விக்கும் தந்தையர்களையும் பெற்றோர்களுடன் ஒட்டிக் கொண்டு வந்து விடும்
உமணக்குழந்தைகளையும் அதனிடம் காட்டுவாள். காலவோட்டத்தில் நட்பு இறுகியது. அவள் தன்
தனிமையை பகிர்ந்துக் கொண்டாள். பெற்றோருக்கு அவள் வரம் என்றாலும் தவம் என்பது வரம்
பெறும் வரை மட்டுமே மேற்கொள்ளப்படுவது. பேரலைச்சலுக்கு பிறகு கிடைத்த பாசுபதாஸ்திரத்தை
அர்ஜுனன் என்றாவது உபயோகித்திருப்பானா?
”மனிதர்கள் சுயநலமானவர்கள்”
என்றது கடல். பிறகு சுதாரித்துக் கொண்டு நீ விதிவிலக்கானவள் என்று சரணடைந்தது. அவள்
அதை கண்டுக்கொள்ளாதவள் போல காட்டிக் கொண்டு, “சரி சொல்லு” என்றாள். என்னுள்ளிருந்து
அள்ளியெடுத்த மீன்களை என்னை வடித்தெடுத்து பிரித்த உப்பைக் கொண்டு பக்குவப்படுத்தி
நான் நடமாடும் கரையில் உலர்த்தும் அவர்களை என்னவென்று அழைப்பது என்றது. அது அவர்களின்
வாழ்க்கையல்லவா? என்றாள். இப்போது அவள் சிறுமி அல்ல.
அப்படியானால்
என்னுடைய வாழ்வு எது? அதன் அர்த்தம் என்ன? காலங்காலமாக நான் பயணித்துக் கொண்டிருப்பதன்
நோக்கமென்ன? படபடத்த கடலுக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை. “தோழியே… நான் என்பது
எது? நீரா? நீரின் தொகையா? முழுமையை கடந்து எழும் வெளியா? பருவடிவுக்குள் அடங்கவியலா
ஆற்றலா? நாவாய்கள் செல்லும் என் நடுவுடலின் தத்தளிப்பா? நிலம் நோக்கி ஓடி வரும் பெருங்காதலா?
ஆவேசமாக நிலத்தை அறையும் பெருங்கோபமா? வளத்தை அள்ளிக் குவிக்கும் பெருங்கருணையா? பகல்
முழுதும் உழைத்த களைப்பில் அக்னி வடிய என்னை நோக்கி வரும் ஆதவக்குழந்தையை அள்ளிக் கொள்ளும்
வாஞ்சையா? ராட்சசமென பொங்கியெழும் பேரழிவா? எது என் முகம்? எவை என் விழைவு? பேரிரைச்சல்தான்
என் சொற்களா? அல்லது அவை ஏதுமற்று நீளும் வாழ்வின் வெறுமையில் எழும் அழுகையின் ஓலமா?
ஏமாற்றத்தின் கூச்சலா? அலைகளெனும் நாவை சுழற்றி வானெனும் மேலன்னத்தை தொட முயன்று தோற்று
சொற்களற்று தொய்ந்து கரையில் விழுவதுதான் என் வாழ்வா?”
அன்று தனது கேள்விகளுக்கு
விடையென பகர ஏதுமற்ற தவிப்பில் நின்றிருந்தவள் இன்று வார்த்தைகள் ததும்பி கிடந்தபோதும்
ஏதும் கூறாது நிற்கிறாள். கோபம் கொண்ட கடல் தோழியிடம் உறுமியது. “ம்ம்… உன்னைதான் இத்தனை
நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கிடந்தேன். உன் வரவை கண்டு மகிழ்ந்துப் போனேன். ஆனால்
நீயோ எதுவும் பேசாது ஏன் இப்படி மௌனம் காக்கிறாய்?” உறுமலாக தொடங்கி கெஞ்சலாக முடிந்தது
அதன் வார்த்தைகள். அவள் எதையும் கேளாதவளாக தன்னுள்ளிருந்து திரண்டெழுந்து தன் மீதே
விழும் அதன் அலைக்கரங்களை நொடியும் இமைக்காது நோக்கிக் கொண்டிருந்தாள். எழுவதும், மீள்வதும்..
மீள்வதும் எழுவதும்… எந்த நீர் முந்தையது… எது பிந்தையது… நண்பனே… நீ நீராலான பெருஞ்சுழியம்.
அவன் ஆடுவது அனல் தாண்டவமெனில் நீ ஆடுவது புனல் தாண்டவம்.
கடல் தணிந்தது.
“வா.. என்னருகே வா புனிதா…”
கணவன் பரமதத்தன்
கூட அவளை அப்படிதான் பிரியமாக அழைப்பான். புனிதவதியின் பெற்றோர்கள் தங்கள் ஒற்றை மகளை
பிரிய மனமில்லாது திருமணத்துக்கு பிறகு மகளோடு மருமகனையும் காரைவனத்துக்கு அழைத்து
வைத்துக் கொண்டனர். அப்போது அவள் உலகமே நறுமணங்களால் சூழப்பட்டிருந்தது. அவள் அதனை
அன்பெனும் துாரிகையால் தொட்டு தொட்டு வரைய, அது அவளும் கணவனுமென்றாகியது. ஆசையாக அழைத்த
அவனே ஒருநாள், புனிதவதி… உன் உயரம் என்னை உன்னிடமிருந்து விலக்குகிறது என்று கூறும்
வரை அவள் அப்படிதான் எண்ணிக் கொண்டாள்.. அடுத்தடுத்து அவளை தெய்வமென்றான். தான் பக்தனென்றான்.
தான் சாதாரணன் என்றான். அவளை அசாதாரணமாக்கினான். அவளுயரம் தான் எட்டமுடியா மலை முடி
என்றான். அவளுடன் ஒன்றிணைந்து வாழும் தகுதி
தனக்கில்லை என்று விலகியபோது அவள் பாரம் தாங்காது ஒடிந்து சாய்ந்தாள்.
அன்று தன்னிடம்
கதறியோடி வந்தவளை நெகிழ்ச்சியாக வருடிக் கொடுத்தது கடல். கண்ணீரும் கடல் நீரும் கலந்தன.
இருவரும் சொல்லிக் கொண்டனர். நம்முள்ளத்தின் ஓசைகளையும் வார்த்தைகளின் மௌனத்தையும்
எனக்கு நீயும் உனக்கு நானும் சொல்லிக் கொள்வோம். கேட்டுக் கொள்வோம். வா… மென்மையாக
அணைத்துக் கொண்டனர்.
ஆனால் ஒப்பந்தத்தை
முதலில் மீறியது கடல்தான். அதுதான் முதலில் அவளிடம் மௌனம் காத்தது. ஓசையற்ற அலைகள்
எங்ஙனம் சாத்தியம்? அவள் புறஒலிகளை இரத்து
செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப்
போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன
வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே.
அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று
பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை. பதற்றத்தோடு மாளிகையின் மாடத்திலிருந்து கீழிறங்கி
ஓடினாள்.
சாலைக்கு அவளை
கவனிப்பதை விட வேலைகள் பல இருந்தன. வணிகர்கள், கடைகள், பண்டங்கள், பேரங்கள், மது, புலால்,
பூசல் என அவரவர்க்கு ஆயிரம் அலுவல்கள். கரையோரங்களில் பண்டங்கள் ஏற்றி வந்த நாவாய்கள்
நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தன. பண்டகச்சாலைப் பணியாளர்கள் பண்டங்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக
மும்மரித்திருந்தனர். பண்டமேற்றி செல்லும் நாவாய்கள் மதுவருந்தி மயங்குவனபோல் நீரின்
ஓட்டத்தில் தள்ளாடிக் கொண்டே சென்றன. அவள் கரையெங்கும் அலைந்தாள், திரிந்தாள். அலையோசை
எங்கேனும் கேட்கிறதா? என் நண்பனே… ஏன் இத்தனை தவிப்புக் கொள்கிறாய்? எதற்காக குரலற்று
கொந்தளிக்கிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்? உன் ஒலி எங்கே போனது? என் தவிப்பறியாது விளையாடுகிறாயா?
நான் என்ன செய்வேன்?
உமணர்களின்
வண்டிகள் கடற்கரை மணலை அறுத்துக் கொண்டு முன்னோக்கி வர அவள் அனிச்சையாக நகர்ந்துக்
கொண்டாள். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மந்தியொன்று, உமணக்குழந்தையின் கையிலிருந்த கிலுகிலுப்பையை பிடுங்கிக் கொண்டு ஆட்ட, குழந்தை சத்தமின்றி அலற, உமட்டி அதன் தோளில் தட்டி
சமாதானப்படுத்த… முற்றிலும் ஒலிகளற்ற செயல்கள். ஓசைகளற்ற உலகு.
தொய்ந்து தளர்ந்து அமர்ந்தவளின் மனம்
தன்னுள் சிதறிக் கிடந்த வார்த்தைகளை ஒருங்குக் கூட்டியது.
சிவம்… சிவம்… சிவம்….
வண்ணங்கற்ற அவளது இருண்ட உலகில் செம்மையென ஊடுருவியது அவ்வொளிக்கீற்று. அவள் கருக்குழந்தையென அதில் அமர்ந்துக் கொண்டாள்.
“அவன் சிவன்… அப்பன்…” மகள் பினாத்தியபோது தர்மவதிக்குக் கோபம் வந்தது.
“அம்மா… உத்தமராய் வாழ்ந்தவர் கூட உலர்ந்து விழுந்து இறந்தால் உடலைக் கிடத்தி உறவினர்கள் கூடி பட்டமரம் அடுக்கித் தீயிட்டுக் கொளுத்தி விடுவர். வாழ்வு முடிந்து பிடி சாம்பலுக்குள் அடங்கும் முன் அவன் புகழை பாடவும் கேட்கவும் வேண்டும். உண்ணும் உணவும் அவனே… உடுக்கும் உடையும் அவனே. சுடலையும் அவன் வீடே.. பிணமெறித்த சாம்பலும் திருநீரே… அவனின்றி அடைக்கலம் வேறேது?”
“புனிதவதி... இப்படியே பேசிதான் இருக்கும் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு விட்டாய்”
அம்மா… என்னை பற்றி நீயே அறியாததை என் கணவர் அறிந்திருந்தார்”
“இல்லை புனிதா... அவர் உன்னை பித்தி என்று எண்ணி கொண்டு விட்டார். வணிகர்களால் வீட்டலுவல்களுக்கு நேரமொதுக்க முடியாது. நீ சிவனையே நினைத்துக் கொண்டிருந்தால் அவரை யார் கவனித்துக் கொள்வது? வீட்டலுவல்களை யார் பார்ப்பது? அதனால்தான் உன்னை நீங்கி பாண்டிய நாட்டுக்கு சென்று விட்டார்” தர்மவதியின் குரல் அழுகையில் கட்டிக் கொண்டது.
“சிவனை வணங்குவள் பித்தியா அம்மா?”
“அவனே பித்தன்தானே?” என்றவர் ”பித்தனோ… சி்த்தனோ? அவன் ஏன் இப்படி உன் வாழ்க்கையில் விளையாடி விட்டு சென்றான்? எங்கள் ஒற்றை மகளின் வாழ்க்கை இப்படிதானா முடிய வேண்டும்? மகளே… பாண்டிய நாட்டுக்கு சென்றிருக்கும் உன் அப்பா அங்கே உன் கணவனைக் கண்டு உன்னை வாழ வைக்குமாறு இறைஞ்சுவதாக கூறினார்” என்றார் வருத்தத்தோடு.
அவள் ஆச்சர்யமாக பார்த்தாள். “ஏன்
அம்மா? அவர் மறுமணம் செய்து மகவொன்றை ஈந்து அதற்கு புனிதவதி என்று என் பெயரை
வைத்து மறுவாழ்க்கைக்குள் நுழைந்து விட்டதை நாம் நேரிலேயே சென்று பார்த்து விட்டு
வந்த பிறகும் மீண்டும் ஏன் தந்தை அவரிடம் செல்ல வேண்டும்?”
“ஆண்களுக்கு தாரம் பலவென்றிருப்பது இயல்புதானே பெண்ணே. இளமையும் அதுவளிக்கும் யௌவனமும் மலர்வனம் போல் உன் மேனியில் பூத்துக் குலுங்குவதற்கு என்னடி அர்த்தமிருக்க முடியும்? மலர்கள் மகரந்தம் கொள்வது வண்டணையதானே?”
“நான் என்னிடமிருப்பதை அழகென்று உணரவில்லை அம்மா”
“ஆனால் உலகத்தின் கண்கள் வேறல்லவா புனிதவதி?”
ஆம். உணர்கிறேன் அம்மா. மனதோடு கூறிக் கொண்டாள் புனிதவதி. உருகிய உள்ளத்தை அதன் வழியே ஓட விட்டாள். மூவேளை உணவு தவிர்த்து ஒருவேளையாக்கி அதிலும் ருசி மறுத்தாள். சத்தான உணவு உண்டாக்கிய செழுமை ஒவ்வொன்றாக அவளுடலிலிருந்து நீங்கி மேனி கறுத்து கன்னம் வற்றி பற்கள் வெளிப்புறம் நீண்டு கண்கள் குழிகளுக்குள் இறங்கி பராமரிப்பற்ற முடி உதிர்ந்து வயதான தோற்றம் கொண்டபோது தர்மவதியின் பெற்ற வயிறு அதிர்ந்துப் போனது.
“மகளே… இது என்ன கோலமடி? நாங்கள் உயிரோடு பிணமாகி விட்டோம் மகளே. உறவினர்களெல்லாம் உன்னைப் பற்றி யாது சொல்கின்றனர் என்று நீ அறிகிலியோ?“
“அறிவேன் அம்மா. நானேதான் ஆடியில் என்னை நோக்கிக் கொள்கிறேனே… என் தோற்றத்தை பேய் என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள். அதற்காக நான் வருந்தவில்லை அம்மா. என் கணவனுக்காக இருத்தி வைத்த இவ்வுடல் அவர் நீங்கியதும் சதைகளற்று எலும்பென்றாவதில் தவறென்ன உள்ளது? என்னப்பன் ஈசனும் எலும்பை மாலையாக அணிந்த பேய்க்கோலம் கொண்டவன்தானே?”
பெற்றோரின் கண்ணீருக்கு முன் வாதிட வழியற்று அவள் நண்பனை நாடி வந்தாள். தன்னை ஆட்கொண்டவனை காண வேண்டி பயணம் கிளம்புவதாக சொன்னாள். “தோழியே… நானெருவன் இங்கிருப்பதை மறந்து விட்டாயா?” தழுதழுத்தது அதன் குரல். “நீயின்றி நான் மட்டும் எப்படி இங்கு…?” அதன் வார்த்தைகள் கண்ணீரில் சிக்கி தத்தளித்தன.
”மீளும் வழியறிந்து வருவேன். காத்திரு, அதுவரை பொறுத்திரு”
“என் பொறுமை வழிந்தோடினால்…”
“நம் நட்பு அர்த்தமற்றதாகி விடும். நம்பிக்கையே நட்பின் வேர்”
அவள் திரும்பிப் பாராது நடந்தாள். வழியில் மற்ற சமயங்களும் மந்திரங்களும் அதன் தந்திரங்களும் குறுக்கிட்டன.
“ஹா… யோகியாம்… யோகி… உங்கள் ஈசன் எங்களின் உள்ளொளியின் முன் நிற்கவியலாது சுடலையின் இருளுக்குள் உறைந்துக் கிடக்கிறான். அவனை போய் யோகி என்கிறீர்கள்” அந்த புத்தபிட்சு மழித்த தலையிலிருந்து விலகிய காவியுடுப்பை இழுத்து விட்டுக் கொண்டு அவளை ஏளனமாக நோக்கினார்.
“இருள் நிறைந்த மெய்மையின் பாதையில் திசைச் சுடரென வழிகாட்டும் சிவத்தை விட சிறந்த யோகி எவரென கூறுங்கள்” பிட்சுவை ஏறிட்ட அவளின் கருத்த நுதலில் சுடலைப்பொடி பளீரிட்டது.
“எங்களின் துாய்மை நெறிக் கண்டு அச்சம் கொள்ளும் மனதை வீண் சாமாதானங்கள் சொல்லி ஏமாற்றாதே பெண்ணே… அவன் யோகியல்ல… பித்தன். பிறையை எடுத்து தலையில் சூடிக் கொள்பவன். இடுகாட்டு சாம்பலை உடலில் பூசிக் கொள்பவன். இவனிடம் எந்த மெய்மையைக் காண ஓடோடுகிறாய்”
“எண்ணங்களால் மட்டுமே அறியப்படும் ஆழுள்ளத்தின் இருளுக்குள் நம்மை வழிகாட்ட எழும் தன்னுணர்வே அப்பிறைநிலவு என்பதை நீவீர் அறிய மாட்டீர். ஆ… இறைவனின் திருமார்பில் அணியப்பெற்ற பன்றி கொம்பையும் அவன் தலையில் சூடியிருக்கும் பிறை நிலவையும் வேறுப்படுத்தி அறிய இயலுமா அவன் நெஞ்சில் அணியென நெளியும் அரவத்துக்கு?”
“நிறுத்து உன் வாதத்தை. பிச்சையெடுத்துண்ணும் பேரெத்தனுக்கு வக்காலத்து வேறு” பின்னால் எழுந்த ஓசைக்கு செவிக்கொடுத்தாள். ”ஓ… சமணமுனியோ. சித்தனை எதிர்ப்பதிலாவது நீங்கள் இருவரும் சேர்ந்துக் கொள்கிறீர்களே… அவ்வகையில் மகிழ்ச்சி” என்றவள் மெதுவாக உதடு பிரித்து “நீவீர் செய்வதும் அதைதானே?” என்றாள்.
”ஆனால் ஏமாற்று வேலைகள் எங்களிடமில்லை”
“இதோ… பெருங்கடலின் நீர் முழுவதையும் கொட்டி நிரப்பினாலும் நிரம்பாத கபாலமான தன் பலிபாத்திரத்தை தாருக வனத்தில் முனிபத்தினியர் தம்முணர்விழந்து இட்ட சிறு பிச்சையால் நிறைத்துக் கொண்ட அவன் பேரன்பாளனா, பேரெத்தனா?” என்று பதில் வாதம் வைத்தபோதுதான் வாய் வார்த்தைகள் நேரத்தை செலவாக்கும் வீண் வேலைகள் என்றுணர்ந்தாள்.
என் அப்பனே… உன்னை பழிப்போர் மத்தியில் என்னை வாழும்படி செய்து விட்டாய். நான் அலைக்கழிகிறேன். அமைதியற்றிருக்கிறேன். நிறைவின்மை எனும் பீடத்தின் உச்சமேறி நின்று மிச்சமென இருக்கும் என்னை சொச்சமின்றி உண்டு கொண்டிருக்கிறேன். எந்தையே… என்னை மீட்டு உன்னடி சேர்த்துக் கொண்டு விடு” தடுமாறிய மனத்தை அள்ளித் திரட்டிக் கொண்டு கால்கள் ஒடிந்து விடுமளவுக்கு நடந்தாள். நதிகளும் மலைகளும் குன்றுகளும் சமவெளிகளும் பின்நகர்ந்தன. எங்கோ அவள் நண்பனின் சுவாசம். ஏக்கம் கொண்ட மனதோடு நின்றாள். குறுக்கிட்டது நண்பன்தான். அவனை அள்ளியெடுத்தபோது அது அழுகையென வழிந்தது. அவள் பதைக்க “சென்று வா பெண்ணே… காத்திருக்கிறேன். நீ மீள்வதும் என் மீட்சிக்கே” என்றது தோழமை.
“அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் உன்னை காண்கிறேன்” அவள் பேசத் தொடங்கினாள். கடல் குழந்தையென வந்து ஒட்டிக் கொண்டது.
மனம் தவிக்க கால்கள் இழுக்க… கால்கள் இழுக்க மனம் தவிக்க… இலக்கெது? வாழ்வெது? வாழ்வெது? இலக்கெது? விண்ணெது? மண்ணெது? கடலெது? மலையெது? தடுமாறிக் கொண்டே நடந்து வருபவளின் எதிரே வருபவன் அவனா? அவன்தானா எதிரில் வருபவன்? கங்கையை சடையிலும் திருக்கரத்தில் அனலையும் ஏந்தி இறுகக்கட்டிய ஆடையுடன் எரிவீசி நடனமாடும் ஒளிப்பொருந்திய நுதலையுடைய நமச்சிவாயனா என் எதிரில் நிற்பவன்? ஆம். அவனேதான் நின்றிருந்தான். அசையா விழிகளுடனும் திறக்கா அதரங்களுடனும் அவன் அவளை கருணைப் பொங்க நோக்கினான். ஆதியாய் நடுவாய் அளவிலாஅளவுமாகி சோதியாய் சுடராய் உணர்வுகளின் உணர்வுமாகி ஏகமாய் அநேகமாய் ஏகாதிபத்தியனாகி ஆணாகி பெண்ணாகி அனைத்துமாகி ஞானமாகி கருணையாகிய பேருரு கொண்ட என் தெய்வமே… நீயா இது? ஐயனே... அப்பனே... நான் யாது செய்ய வேண்டும். சொல்க.“ மெய் கூப்பி நின்றாள்.
செல்க. விரைக… நாடு, ஊர், வீடு, தந்தை, தாய்… அனைத்தினின்றும் பிடுங்கி வீசும் பெருவல்லமை கொண்ட உள்ளத்தின் விசைக்கு உன்னை அங்ஙனமே ஒப்பளித்திடுக. ஆதவன் தன் கதிர்களை அள்ளியெடுத்து தன்னிடமே வைத்துக் கொள்ள முடியாது. மரம் அதன் கனிகளை தானே ஏந்திக் கொண்டிருக்காது. உதிர்த்த சொல் நாவுக்குச் சொந்தமில்லை. நீ உன்னுடையவள் அல்ல. உடலென்பது உள்ளம் தொடவியலா ஆழத்தையும் அதன் முழுமையையும் கண்டறிய புலன்கள் சூடி அமர்ந்திருக்கும் சாதனம் மட்டுமே. மலர் மணத்தை விலக்கிவிடின் அதன் பெயரென்ன? கதிரவன் ஒளியை விலக்கிவிடின் அதன் நிலை என்ன?
ஒரு காலெடுக்கையில் மறுகால் துணை செய்தது. அவனை சுமப்பதால் கனத்த இதயம் நடக்க நடக்க இலகுவானது. கால்களில் சக்கரங்கள் முளைத்தன. தோள்களில் இறக்கைகள் தோன்றின. மேலது கீழது, தலையெது காலெது… நடந்துச் செல்க. கடந்துச் செல்க. ஆதியும் அந்தமும் அவனே. அனலும் புனலும் அவனே. கயிலையும் அவனே. கயிலையிலும் அவனே. பனி மலைகள் உருக்குலைக்கும். பாறைகள் உருள வைக்கும். பாம்புகள் மிரள வைக்கும். விலங்குகள் உயிர்க் குடிக்கும். பள்ளங்கள் சரிய வைக்கும் அச்சம், அருவருப்பை விலக்கு. ஐயத்தை நகர்த்து. எங்கும் அவனே. எதிலும் அவனே. பனிமலைகளும் அலைகளற்றக் கடல்களே. ஓசையற்ற அலைகள்… அசைவற்ற மலைகள்… ஆழியின் ஆழம். மலையின் முகடு… அது கருமை. இது வெண்மை… வெண்மை தகதகத்தது, வெள்ளி பொன்னாகியது. பொன் விண்ணாகியது.
“அம்மே….“ உடல் சொடுக்கி நின்றது. யாரழைத்தது? யாரை அழைத்தது? உள்ளம் சுழன்றது. தவித்தது. துடித்தது.. அவள் வேறொன்றாகினாள். கண்களை கூசச் செய்வது வெளியா… ஒளியா… அனலா… தெரிவது உருவா… அருவா… அருவுருவான திருவுருவா…? உள்ளம் மிரண்டது. திகைத்தது, பனிந்தது. உருகியது. வழிந்தது. கரைந்து ஒன்றென திரண்டது. ஈமவனம் பேரமைதியின் பேருச்சம். பிணத்தின் நிணம் வெடித்து நீர்ச் சிதற எலும்புகள் தெறித்துடைய பரவிய அனல், இன்மையில் எழுந்து முடிவிலியில் ஆடியது. தாவிப் பற்றி முளரியையும் கள்ளியையும் தீய்த்தது. எட்டி, இலவம், ஈசை, சூரை, காரை மரங்களை நாவால் தொட்டு மீண்டது. நீண்ட பல்லும் குழிந்த கண்களும் கொண்ட பேய்கள் கூடி எழுந்து ஈமத்தைச் சுற்றித் துணங்கை ஆடின.
செவ்வொளி எழுந்தபோது அவள் அந்தி நேரத்து கதிரவனோ என மனம் குழம்பி நின்றாள். கதிரவனும் குழம்பியது. அப்படியானால் அது அவன்தான். அன்று கண்ட அவனேதான். தழல் போன்று சிவந்த உடலில் சுடலைப்பொடியை பூசியிருந்தான். தலையோடுகளை எலும்புகளால் கோத்து மாலையாக்கி உந்தி வரை அணிந்திருந்தான். புலித்தோலாடையை இடையுடுத்தி நீண்டு தொங்கும் சடைகளை மேலுயர்த்தி சடாமகுடமாக்கி அதில் கொன்றையும் எருக்கனும் வன்னியும் பெய்த மலர்களைச் சூடியிருந்தான்.
அணங்கு காடெனும் அந்த நாட்டிய அரங்கு நடனத்துக்கு தயாரானது.
சச்சரி, கொக்கரி, தக்கை, தகுணி, துந்தபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழவு மொந்தையென இசைக்கருவிகள் இசை முழக்க, அவன் அசையத் தொடங்கினான். மனம் அசைய உணர்வு இசைய அனைத்தும் ஒன்றென திரண்டது. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என ஸ்வரங்களுடன் பண் கெழுமி எழ, இசைக்கேற்ப ஜதியாக கால் அசைந்தது. முத்திரையுடன் கை அசைந்தது. இசையும் நாட்டியமும் இணைந்தியங்க அவன் அணங்கு காட்டில் சுழன்றாடினான். சிவனாட சக்தியாட சகல தத்துவங்களும் ஆட, சதாசிவம் ஆட, உயிர்களுடன் ஒட்டி நிற்கும் சித்தம் ஆட, அசைவன அசையாதன ஆட உடலின் ஆதாரங்கள் ஆட நாவொலிகள் ஒன்றென திரண்டன. சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்..
கோட்டானோடு
ஆண்டலை பாட, ஆந்தை அதன் மேல் குதித்தோட பிணத்தோடு வைத்த பலிச்சோற்றை குறுநரி
எடுத்துக் கொண்டோட ஓங்கிய மூங்கில்களில் பற்றிய தீயில் பேய்கள் கூந்தலை உலர்த்தின.
மாயன் ஆட மலைமகள் காண ஈமவனமே அனலில் ஆடியது. அவன் கரங்கள் துடித்தன. கால்கள்
சீறின. தசைகள் துள்ளின. கைகளை
மேலுயர்த்தி ஒற்றைக்காலில் அனலென சுழன்றான் அவன். சடைமுடிக்கற்றைகள் அவன் உடலெங்கும் பிரிந்தாடியது. கூத்தனோடு
கூத்தாடிகளென நுண்பூதங்களும் பருப்பூதங்களும் புவனங்களும் அண்டங்களும் இணைந்துக் கொண்டன.
ஐம்பூதங்களிலும் பொறிகளிலும் புலன்களிலும் வேதங்களிலும்
ஆகமங்களிலும் காலங்களிலும் கலைகளிலும் ஊழியாகிய சங்காரத்திலும் கலந்து ஒன்றி ஆடும்
இறைவா... குவிந்த மனங்கள் பொங்கி எழுந்தன. சிவாய நமஹ.. சிவாய
நமஹ.. சிவாய நமஹ.. சிவாய நமஹ.. சிவசிவ சிவாய நமஹ. அவன் ஒட்டியும் ஒட்டாத பதத்தில் நின்றும் நிற்காத விரைவில் கடந்தும் கடக்காத
முடிந்தும் முடியாத முடிவற்ற பாதையில் உலகே ஒன்றென்றாகியும்
ஒன்றையொன்று கலந்து விடாததாகியும் சுழன்றான். இடதுகாலை நிலம் ஊன்றி வலதுகாலை வான் நோக்கி உயர்த்தினான். ஊர்த்துவன், பூரணன்.
நிலவும் பூரணத்திலிருந்தது.
அம்மையே…
கண்களோடு தலையும் சுழன்றது அவளுக்கு.
“அழைக்கிறேன், கேட்கவில்லையா?”
“அப்பனே..” சுழல்பவன் எவனோ அவனே அழைத்தவன். நிற்காத சுழற்சியில்
ஆதி எது? அந்தம் எது? அந்தம் எது? ஆதி எது? ஆதி எது? அந்தம் எது?
அவள் இறக்கி வைத்த பெருமிதத்தோடு நண்பனை நோக்கினாள்.
புரண்டு வந்த அலைநீர் எழும்பி வட்டமென சுழன்று, மீள, நீரில்
விழுந்தது.
“நண்பனே… உன் அலைநீரின் சுழற்சியில் தொடக்கம் எது இறுதி எது
என்பதை அறிவாயா நீ? உனது இந்த பெருநீர் தொகையின் முதலும் முடிவும் எதுவென அறிய
இயலுமா உன்னால்? வாழ்வும் அங்ஙனமே என்றான். அவனிலிருந்து கிளம்பி அவனில் சேர்வது. வேண்டுவதை
கேள் என்றான். அப்போது அவன் விழிகள் மோனத்திலிருந்தன”
அவள்
குழந்தை போல காலில் தவழ்ந்த நீரை கையில் ஏந்தியபோது அது நுரையென விரலிடுக்குகளில் எஞ்சியது.
“அறிவேன்
நண்பனே உன் ஆற்றாமையை. வேறெங்கிலும் நகரமாட்டாத நீ எங்ஙனம் அவனை நாடியோட முடியும்
என்றெண்ணுகிறாய்”
கடல்
கண்கொட்டாமல் அவளை நோக்கியது.
“தனிமையின் தாளாதுயரில் காலமற்று கரையில் அறைந்தலையும் உனக்கு
நிலத்திற்குள் பாய்ந்து விடும் ஆற்றல் இருக்கவில்லையா? அல்லது நகரும் வித்தையை நீ அறியாதவனா?
நண்பனே… பயணம் என்பது புறவுலகில்
நிகழ்வதல்ல. அது அகத்தின் உணர்தல். நீதி கேட்டு நிலம் நோக்கி ஓடி வர விழையாத உன்
மனமே அவன். அவனே சிவன். உன்னுள்ளேயே அவன். அவனன்றி எவன்?”
“கேள் நண்பனே… அனற்காட்டில் சிவந்தும் பனிமலையில் ஒளியுமென
திகழும் அவன் அம்மையே… என்ன வேண்டும், கேள்… என்றான். பிறவாமை வேண்டும்…
பிறப்புற்றால் உனை மறவாமை வேண்டும் என்றேன். அவன் சுழன்றாடுகையில் என்றென்றும் அவனடியின்
கீழிருக்க வேண்டும் என்றேன். தந்தேன் என்றான். யுகங்கள் நகர்வதும் வான் சுழல்வதும்
வானம் பெருகுவதும் வனம் நிறைவதும் மண் குளிர்வதும் உயிர்கள் உய்வதும் அவனாலான்றோ? அதனையறிந்து
அவனை உணர்ந்து கருக்குழந்தையென அவனுள் அமர்வதே பிறவிக்கடன். அதுவே மெய்மை… அதையே
உணர்த்தினான். அதுவே உரைக்கிறேன்” அவள் மகிழ்வோடு நீரையள்ளி முகத்தில் அறைந்துக்
கொண்டாள்.
முன்னகர்ந்து
நகர்ந்து கொஞ்சியது அலை. அதில் உற்சாகத்தோடு துள்ளி தெறித்தன மீன்கள்.
“உன்னுள்
உயிர்கள்… உயிர்கள்...” என்றாள்.
”ஆம்…
நிலத்திலும் உயிர்கள்”
”ஆம்…
உன்னால் காப்பாற்றப்படுபவை”
அவள்
குனிந்தமர்ந்தபோது கடல் அவளை அணைத்து முத்தமிட்டது. சிரிக்கும் வெண்பற்களென அதன் நுரைகள்
அவள் மேனியெங்கும் வழிந்தன.
***
