Search This Blog

Thursday 10 May 2018

ராசாத்தியும் கலாராணியும்


சிறப்பு சிறுகதை - பேசும்புதியசக்தி மே 2018

திருவிழாவைப்போலக் கிணற்றைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் மூன்று குடத்துக்கு மேல் எடுக்க முடியாது. தொங்கிக்கொண்டிருக்கும் சகடைகளில் கையோடு கொண்டுசெல்லும் கயிற்றை நுழைத்து குடத்தோடு இறுக்கிக் கட்டி நீரை இறைத்துக்கொள்ள வேண்டும். நீரின் மட்டம் இறங்கிக்கொண்டே போனதில் தாம்புக்கயிறு அறுத்து மரகதத்துக்கு உள்ளங்கைத் தோல் உரிந்துகிடந்தது.

”நா ஒண்ணுக்கும் ஒபயோகமத்து போயிட்டன்ல்ல மரவதம்....” தன்னிரக்கம் கவிந்தது கந்தசாமியின் பேச்சில். கிராமமே நீரைத் தேடிக் குடும்பமாக அலையும்போது ஒற்றையாளாய் மனைவி தடுமாறிப்போவது அவருக்கு வருத்தமாக இருந்தது.   எழுந்து நடமாட முடியாத உபாதை அவருக்கு. இப்போது நினைவும் மாறிக்கொண்டே போகிறது காலக்கணக்கு தெரியாமல். நேற்றுதான் திருமணம் முடிந்ததுபோல இடைப்பட்ட நாற்பது வருடத்தை திடீரென மறந்து விடுவார்... கொல்லைல அடிப்பைப்பு சத்தம் கேக்குது... யாருன்னு பாரு என்பார். எது புரிகிறதோ இல்லையோ மனைவிக்கு உதவ முடியாமல் முடங்கிப்போனது புரிந்திருந்தது.  சென்ற வாரம் சலீம்பாய் வந்தது இப்போது நினைவிலிருக்கலாம்... அல்லது இல்லாது போகலாம். ஆனால் சலீம்பாயை அடையாளம் தெரிந்திருந்தது. கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தபடியே அவரை நோக்கிக் கழியைச் சுழற்றியடித்திருந்தார்.


”அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா தொணப்பாத... நீ ஒளைக்காம பொளைக்காமதான் நா ஆளாயிட்டனாக்கும்...” கணவனிடம் பேச நேரமின்றி இடுப்பில் ஒன்றும் கைகளில் மூன்றுமாகக் குடங்களை அள்ளிக்கொண்டு நடந்தாள் மரகதம். அறுபது வயதிற்கான தேகம் பாதையற்ற பாதையில் தடுமாறியது. வெயில் வேறு மிரட்டியது. ராசாத்தியும் கலாராணியும் இருந்திருந்தால் இந்நேரம் பின்னோடு வந்திருக்கலாம். மொச்சுமொச்சென்று வாயில் எதையாவது அசைபோட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் இரண்டுக்கும். அடர்ந்த கருத்த உடல் அவைகளுக்கு. ராசாத்தியின் வாலோரம் சிறு வெள்ளை ஒட்டியிருக்கும். கலாராணிக்கு காது மடலுக்குப் பின் பொட்டுப் போன்ற வெள்ளைப் புள்ளியிருக்கும். மற்றபடி வித்யாசமில்லை.


”வாத்தே... கொடத்த வருசல வச்சீட்டீல்ல... இங்குட்டால வந்து குந்து... எம்புட்டு நேரம் வெயில்ல நிப்பே...” என்றாள் அங்கிருந்த ஒருத்தி.

”ஆளுக்கொண்ணா புடிச்சிட்டு நவுந்தா கூட மறுசுத்துக்கு ரெண்டு கொடம் புடிச்சிக்கலாம்... வெக்கை தாங்கலடீ...” முந்தானையை அவிழ்ந்து கழுத்து... மார்புப் பகுதிகளைத் துடைத்துக்கொண்டாள் மரகதம்.

”மாமனும் நீயும் மட்டுந்தானே... ஒரு நா தண்ணீ வேணாம்னுதான் வுட்டுக் குடுக்கறது...” விளையாட்டும் தீவிரமுமாகப் பேசினாள் அந்தப் பெண்.

”ஆமாண்டீ... இப்டி அலயிணும்னு வேண்டுதலு பாரு... குளிக்க வாய்க்காம அந்த மனுசன் கெடந்து தவியாத் தவிக்கிறாப்பல... இன்னிக்கு மிஞ்சும்... நாளைக்கு மிஞ்சும் நானும் பாக்றேன்... திங்க பேள கூட தண்ணீ காண மாட்டேங்குது... என்னத்த பண்ணச் சொல்ற...” குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டாள். வாச்சிவாச்சியான கைகளை முட்டியின் மீது வைத்துக்கொண்டாள். பேச்சு பேச்சாக இருந்தாலும் கண்கள் அவ்வப்போது குடத்தை பார்த்துக்கொண்டுதானிருந்தன. கொஞ்சம் அசந்திருந்தாலும் குடத்தை நகர்த்தி வைத்துவிடும் அபாயமுண்டு. ஜென்ம பகையை உருவாக்குமளவுக்கு சண்டையும் சச்சரவுகளும் கிணற்றடியில் சகஜப்பட்டுப் போயிருந்தது.

கந்தசாமி அவளின் அத்தை மகன்தான். நான்கு ஏக்கர் நிலமும் கூரைக்கட்டு வீடும் சொந்தமாக இருந்தது அவர்களுக்கு. நல்லவேளையாக அதைப் பங்கிட்டுக்கொள்ள மேலதிக வாரிசில்லை. அகலம் அதிகமில்லாத நீள்வாக்கான வீடு அது. மண் தரை சாண மொழுவலில் பசேலென்றிருக்கும். முன்கூடம்... அதையடுத்து வாளோடியாய் இரண்டு சிறு அறைகள். முன்னுத்தி அறையில் பத்தாயமிருக்கும். அதற்கடுத்ததில் தனக்குச் சீதனமாகக் கிடைத்த பச்சை நிறத் தகரப் பெட்டியில் சேலைகள் அடுக்கி வைத்திருப்பாள் மரகதம். கொடியில் கந்தசாமியின் நாலு முழ வேட்டி இரண்டொன்றும் மேல்சட்டையும் தொங்கிக்கொண்டிருக்கும். விருந்து விழாவுக்கென எட்டுமுழ வேட்டியொன்றும் உள்ளிருக்கும் செய்தித்தாளை நீக்காத சலவை மடிப்போடு கூடிய அரைக்கைச் சட்டையையும் தகரப் பெட்டியில் கணவனுக்குப் பத்திரப்படுத்தியிருப்பாள் மரகதம். அடுத்திருந்தது அடுப்படி. பின்னாலிருக்கும் அடிபம்ப் நீர் வரத்தின்றித் துருவேறிக் கிடந்தது. அதைச் சுற்றிலும் காரை பெயர்ந்த தரை. அதையொட்டி ஒழுங்கைக்குப் போகவியலாத நேரங்களில் ஒதுங்குவதற்காக ஏற்படுத்திய சிறு தடுப்பில் கீற்று பெயரளவில் ஒட்டிக்கிடந்தது...

ஐந்தாவதாகப் பிறந்தவள் மரகதம். மூத்தது நான்கும் ஆண் வாரிசுகளாகப் போனதில் மரகதத்துக்குத் தகப்பனிடம் செல்வாக்கு அதிகம்.  ”எப்பா... அத்த வூட்ல ஆயும் மவனும் தவுத்துப் பேச ஆளுங்க கெடையாது... சுடுகாடா கெடக்கும்... கன்டிசனா எங்குட்டிங்கள எனக்குக் குடுத்துரு...” திருமணம் கூடியதுமே தகப்பனிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். மந்தையாடுகளில் நான்கு குட்டிகள் ஒன்றும் பெரிய விஷயமில்லை தகப்பனுக்கு.

கந்தசாமியை வயக்காட்டிலேயே கிடக்கச் சொன்னாலும் கிடப்பான். பாத்தி பறிக்க... களையெடுக்க... அறுக்க... பிடிக்கவென வயக்காட்டு வேலைகள் அத்தனையும் அத்துப்படி. கணவன் வரப்பு வெட்டும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்க பிடிக்கும் மரகதத்துக்கு. இரும்பை நுணுக்கமாக வெட்டி அடித்து நீட்டிய குறுங்கொல்லும் மரத்தின் நீளத்தை சற்றுக் கூடுதலாக வைத்த நெடுந்தச்சுமாக தனக்குத் தோதான மண்வெட்டிக்காக இரண்டு நாளானாலும் வெளியூரில் தங்கியிருப்பான். மரத்துக்கும் இரும்புக்குமிடையே சிறு இடைவெளி இருந்தாலும் வேலை செய்யும் நேக்கில் கண்டுபிடித்துவிட முடியும் அவனால். பருத்தி... உளுந்து... மக்காச்சோளம் என வயக்காட்டை விளைச்சலாகவே வைத்துக் கொள்வது குறித்து மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.

”ம்க்கும்... யாருட்ட... ஆட்டுப்புளுக்கைய அடியொரமா போட்டா வௌயாத பூமி கூட மணியா வௌஞ்சிடும்...” கணவனை வம்புக்கிழுப்பாள்.

”போய் புருசனோட ஒண்ணடிமண்ணடியா கெடப்பாளா... எப்பப் பாரு ஆட்டப் புடிச்சிக்கிட்டே...“ அத்தை அலுத்துக் கொள்வாள்.

”நாலு ஆட்டுக்கே இப்டி அலுத்துக்கறத்தே... எங்கப்பன்ட்ட எம்புட்டு ஆடுங்க இருக்கு பாத்தில்ல... ஆடு மேய்க்கப் போவும்பொது எங்கம்மா இடுப்ப வுட்டு என்னைக் கீழயே எறக்கி வுடாதாம்...”

”அட... ஏம் புள்ள...” என்பான் கந்தசாமி.

”ஏனா... அவங்கப்பன்ட்ட ஆடுங்க ஆயிரத்து கொறையாது... பச்சப்புள்ளய மேச்சக்காட்ல எறக்கி வுட்டா அதுங்க மிதிச்சிடாது...?”

அத்தையின் வார்த்தையில் கிண்டலிருப்பது புரிந்து விடும் மரகதத்துக்கு.

”ஏன்... இல்லையா பின்ன...?”

”ஆமாண்டீ... நானுல்லாம் பாக்காம எடுக்காமதான் ஒனக்கு ஒங்கொப்பன் வந்துட்டானா...? மூக்கொழுவிப் பயல எம்புட்டு நாளு இடுப்புல துாக்கி வச்சிட்டு அலைஞ்சிருக்கேன்...”

அன்பும் ஆதரவுமான அத்தைக்குப் பிள்ளை ஒன்று பெற்றுக்கொடுக்கவில்லையே எனத் தவிப்பிருந்தாலும் ஆடுகள் ஒன்றுக்குப் பத்தாய்ப் பெருகிப்போனதில் பெரிய குறையாகத் தோன்றவில்லை. அதன் பிறகுதான் கந்தசாமியின் வீடு “ஆட்டுக்காரங்க வீடாகிப்“ போனது. சுத்தக் கறுப்பு... செவலை நிறக் கிடாரிகள் வேண்டுதலுக்குத் தேவைப்படும் என்பதால் அத்தை கிடாரிக் குட்டிகளை வளர்க்கப் பிரியப்படுவாள்.

“எத்தே... சின்னய்யன் கோயில்ல நம்ம கெடாவத்தான் பலி போட்டுருக்காவ...” என்பாள் மரகதம் உடைந்தக் குரலில்.

”பொறவு... அதுக்குதானே வாங்கீட்டுப் போனவுக...”

”எல்லாஞ்சரிதேன்... அத கங்காணாம எங்காது கொண்டுட்டு போயிருக்கலாமில்ல... காதுக்குச் சேதி வர்றாப்பலயா ஆட்டப் புடிச்சுக் குடுப்பே...” மருமகள் அழுதது தாங்கவில்லை மாமியாருக்கு.

”செரிடீ... நா இனிம ஒன் வளப்புல தலயிடுல...” விலகிக்கொண்டாள்.

ஆடுகளைக் குளிப்பாட்டுவது... வேட்டித் துணியால் மூக்கைச் சுத்தப்படுத்துவது... பழைய லாரி டயரை குறுக்காக வெட்டி அதில் தீவனம் தயாரித்துப் போடுவதுமாக இருப்பாள். சாப்பாட்டுத் துாக்கோடு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டுக் கிளம்பினால் திரும்பி வரும்போது வெயில் தாழ்ந்துவிடும். முள்ளுமுருங்கை இலையைக் கிள்ளி எடுத்து அதில் எலுமிச்சை ஊறுகாயை வைத்துக் கொண்டு ஆட்டில் ஒரு கண்ணும்... சோற்றில் ஒரு கண்ணுமாக உண்பது மரகதத்துக்குப் பிடித்தமானதாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருப்பாள். சென்ற வாரம் சலீம்பாயிடம் விலை பேசிய ஆடுகளுக்குக் கூட ராசாத்தி... கலாராணி என்று பெயரிட்டிருந்தாள். விவசாயம் அழிந்ததில் ஒவ்வொன்றாகக் கைவிட்டுப்போன ஆடுகளில் மீதமிருந்தவை அவையிரண்டும்தான்.




”மரவதம்... ஆட்டுட்டி கத்தீட்டே கெடக்கு... என்னான்னு பாரேன்...” என்றார் கந்தசாமி. குடத்தை உள்ளறையில் இறக்கி வைத்தவளிடம்.

”ம்க்கும். ஆட்டுட்டீ கத்துது... நீ பாத்தே...” இயலாமை எரிச்சலாக வெடித்தது. 

”த்தாச்சீ... த்தாச்சீ...” வாசலில் நின்றபடியே குரல் கொடுத்தாள் சோலை. பக்கத்து வீட்டுப் பெண்.

”என்னா ள்ள...”

”இன்னீக்கு தண்ணீ அம்புட்டுதானாம்... இனிம எடுக்கக் கூடாதுன்னு சொல்லீட்டாவ... நீ தேவல்லாம அலயாத... அத சொல்லாமின்னுதேன் வந்தேன்...”

வருவாய்த் துறை அதிகாரியின் வீட்டில் தோட்டப் பணியாளராக இருக்கிறான் சோலையின் கணவன். அங்குமிங்குமாக எப்படியோ கோடையை விரட்டி விட முடியும் அவளால்.

“பாவத்த... இன்னிக்காது ஒன் மாமன குளிக்க ஊத்துணும் நெனச்சேன்டீ... வெக்கை... வெக்கைன்னு ரவைக்குத் துாங்கறதே இல்ல அந்த மனுசன்... சனியன்புடிச்ச ஆம்பளைக்கு எதுமே அமைஞ்சு தொலயாது…”

”ஏத்தாச்சி... மாமன ஏசுற... அது என்னா பண்ணும் பாவம்...”

”ஆமா... ஏசறேன்... வந்துட்டா மத்துசம் பண்ண...” சோலை கொண்டு வந்த காலிக் குடங்களை எடுத்துக்கொண்டாள்.

”ஆட்டுக்குத் தண்ணீ தெவிக்குதாக்கும்... மொனவிட்டே கெடக்கு பாரு...” கணவனின் குரல் நிறுத்தியது அவளை.

”சும்மா தொணப்பாதேங்கிறன்ல்ல... நா பாத்துக்கறேன்...”

எத்தனை அடக்கினாலும் ராசாத்தியும் கலாராணியும் மனசுக்குள் வந்துகொண்டேயிருந்தார்கள் அவளுக்கு. கணவன் வேறு அதை அடிக்கடி ஞாபகமூட்டுவது கோபமேற்படுத்தியது. பின்கட்டு வழியாக நழுவி முன்பக்கம் வந்தாள். ஆடுகளின்றி கட்டுக்கழி மட்டும் நட்டுக்குத்தாய் நின்றது. அவிழ்த்து விட்டால் இரண்டும் நெஞ்சின் மீது கால்களை வைத்து ஏறிக்கொள்ள அலையும். வருமானத்துக்கு வேறு வழியில்லை. அழக்கூடாது என்ற உறுதி குலைவது போலிருக்க, கால்களைச் சாக்கில் துடைத்துக்கொண்டு உள்ளுக்குள் நுழைய எத்தனித்தாள். 

”ஏத்தாச்சீ... ஆடுங்க நெனப்பு வந்துடுச்சா...” சோலை அங்கிருந்தே குரல் கொடுக்க அதைத் தவிர்க்க நினைத்து ”அதெல்லாம் ஒண்ணுமில்ல. நா ரெண்டு வா அள்ளிப் போட்டுக்கறேன்... வவுறு கொல்லுது...” விருட்டென்னு நகர்ந்துகொண்டாள்.

யாரும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் எல்லோருக்கும் தண்ணீர் குறித்த ஒரு திட்டமிருந்தது. அது அந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயின் கசிவிடத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும். ”கொல்லிலே போறவ... இம்புட்டு நேரம் எத்தாச்சீ... எத்தாச்சீன்னு கெடந்தவ தண்ணீயெடுக்க போறேன் ஒரு வாருத்த சொன்னாளா பாரு...” சோலையைக் குரோதமாகப் பார்த்தாள் மரகதம். ஒரு குடம் நிரம்ப அரை மணி நேரமாவது பிடிக்கும். “எளசெல்லாம் முந்திக்குச்சுன்னா பழசெல்லாம் சாவ வேண்டிதுதான்...” கும்பலாக இருந்த காலிக்குடங்கள்  மலைப்பை ஏற்படுத்தின.

”தேவான... தாத்தாரு ஒண்டியமா கெடக்காருடீ... செத்த நவுந்தீன்னா அப்பாயீ கொஞ்சம் புடிச்சிட்டுப் போயிடுவேன்...” என்றாள் கெஞ்சலாக.

”அய்யய்யோ... எங்கம்மா வையும்ப்பாயீ...” ஒழுகும் நீரை பாட்டிலில் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டே பேசினாள் அந்தச் சிறுமி. பங்காளி வழியில் பேத்தி முறையாக வேண்டும்.

”மாமன வையிற... அப்றம் உருவுறே...” என்றாள் சோலை.

‘நா மட்டும் இங்க வாரேன்னு இந்தப் புள்ளக்கிட்ட சொல்லீட்டா வந்தேன்... தண்ணீய பொறுத்தளவுல யாரும் யாருக்கும் ஒறவில்ல...’ மனம் இடித்ததில் சோலை மீதிருந்த கோபம் மாறியிருந்தது.

”அந்தாள வுட்டா வேற நாதீ... கருவாட்டுக் கொழம்பு வேணும்னாப்பல... செகன் கடயில இல்லன்னுட்டான்... டவுனு வரைக்கும் ஒடியாந்துட்டு வந்தேன்... இந்தக் கொடத்தைச் செத்தப் புடீடுயம்மா... சாவிய முடிஞ்சிக்கிறேன்...”  கணவனை நம்ப முடியாது. சில சமயம் தவழ்ந்தே கூட வெளியே வந்து விடுவார். செங்குத்தான படி அவரைத் தடுமாற வைத்துவிடும். வீட்டை வெளிப்புறமாகப் பூட்டியிருந்தாள்.

”வெளிய கொண்டாந்து ஒக்கார வையீன்னு நேத்தெல்லாம் பொலம்பா பொலம்பித் தள்ளுது பாவம்... பொட்டச்சீ எனக்கு அம்மாஞ்சொம துாக்க வாய்க்குமா...?” சாவியை முந்தியில் இறுக்க முடிந்து, இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

”ஊரெல்லாம் சுத்தித் திரிஞ்ச காலு... ஒரு பக்குட்டா ஒக்காருன்னு ஒக்காருமாத்தாச்சீ... எனக்கு ஒரு கொரலு குடுக்கிலாமில்ல...”

”கொரலு குடுத்து...? தண்ணீக்கு அலயற அலச்சலே பேயலச்சலா கெடக்கு... இதுல இது வேறயாடீ... எங்களமேரி கெழடுக்கட்டைங்கள்ளாம் போய்ச் சேந்துட்டா ஒங்களுக்காது நெறக்க தண்ணீ கெடைக்கும்...”

”ம்க்கும்... மாமேன்மேரி நீயும் எதாது ஔறிட்டுதான் கெட...” என்றவள் ”ஆட்ட வித்ததுக்கு மாமன் ஒண்ணுஞ் சொல்லலியா...” என்றாள். காத்திருக்கும் நேரங்களை பேசித்தான் கரைக்க வேண்டும்.

”மனுசன் வெசனப்படும்னு நாந்தான் அதுகிட்ட எதும் சொல்லல... ஆனா சலீமுபாய் வந்ததுல கொஞ்சம் நெருடத்தட்டிப் போச்சு ஒன் மாமனுக்கு... அந்தாளு மேல குச்சிய ஓங்கிப்புட்டாருங்கிறேன்...”

”ஒனக்கு அவுசரத்தாச்சீ... வெல பேசி வுட்டுட்ட...”

”வச்சுக்கிட்டு...? வச்சுக்கிட்டு என்னாடீ செய்ட்டும்... வருமானத்துக்கு வளியெங்க...? கண்ணுக்கெட்டுனாப்பல மேய்ச்சக்காடே காங்கல... வய வௌஞ்சாவாது தீவனம் மிஞ்சும். இருக்கற வெக்கைக்கு ஒரு கொடம் தண்ணிய ரொப்பி வச்சாலும் அதுங்க ரெண்டுமே உறிஞ்சிடுதுங்க.... நமக்கெல்லாம் வாயிருக்கு... பொலம்பி ஆத்திக்கிறோம்... அதுங்க என்ன பண்ணுங்க... ராப்பகலா மேமேமேன்னு கெடந்துச்சுங்க... பாக்க சயிக்கில...”

”ரெண்டையும் களிச்சு வுட்டுட்ட... மிச்சப் பொளப்பு...?”

”பொளக்கவரைக்கும் பொளக்கறது... முடியாட்டீ வெசத்தை வாங்கி காதுல ஊத்தீட்டு வயக்காட்டுல படுத்தற வேண்டியதுதான்...”

”வேண்டாதெல்லாம் பேசுவே நீயீ...”

பேச்சு வெயிலையும் பகையையும் தணித்தது. அரைக் குடமளவுக்கு நீர் கிடைத்ததே பெரும்பாடுதான். மரகதத்துக்கு தெரிந்தே அங்கிருந்த குளம் வற்றிக் கூளமாகிப் போனது. முன்பெல்லாம் குளம் வற்றும் நாட்களில் அங்கு தேங்கியிருக்கும் வண்டலை வயலுக்கு உரமாக்கியது நினைவுக்கு வந்தது. ஓங்குதாங்காக இருப்பார் கந்தசாமி. மாட்டுவண்டியில் வண்டல் ஏற்றி வரும் கணவனைக் கண் நிறையப் பார்க்கப் பிடிக்கும் மரகதத்துக்கு. வண்டலெடுக்கும் உரிமை அரசாங்கத்திடம் சென்ற பிறகு யாரோரோ வந்து அள்ளிக்கொண்டு போயினர். தடுக்கவும் முடியவில்லை... எடுக்கவும் முடியவில்லை.

”பாவீப் பயலுங்க... வாழவும் வுடாம சாவவும் வுடாம வயித்தல அடிக்கிறாங்க... யாருதான் இந்தச் சட்டமெல்லாம் போடுவானுங்களோ...” கண்ணில் வழிந்த நீர் தலையணையை நனைத்தாலும்,, உருண்டை உருண்டையாக எண்ணெய்ப் பிசுக்கேறிய தலையணையால் ஈரத்தை உள்வாங்க முடியவில்லை. ராசாத்தியும் கலாராணியும் உசுரோட இருக்குங்களா...?  நினைப்பே திடுக்கென்றிருந்தது. விடிந்ததும் ஒரு எட்டு சலீம்பாய் கடைக்குப் போகவேண்டும். நீண்டுகொண்டேயிருந்த இரவு அவஸ்தையாக இருந்தது அவளுக்கு.

”மரவதம்... தண்ணீ தாரீயா...?”

”இன்னும் துாங்கிலியா நீ…?”

”மேலுக்குக் காந்துது... வெக்க தாங்கல... குளிச்சா தேவல...”

”வெடிகாலல ஊத்துக்குப் போய் தண்ணீ கொண்டாரேன்... செத்தப் பொறுத்துக்க...” மரகதம் கொடுத்த நீரை மடமடவென்று குடித்தார் கந்தசாமி.

”பொளப்புதளப்பு இப்டியாவும்னு நா கனா கூட காங்கில மரவதம்...” என்றார் புலம்பலாய்.

”எல்லாத்துக்கும் உண்டானது நமக்கும்... நீ பொலம்பறதால என்னாவ போவுது... பேசாம கண்ண மூடிக்கிட்டு படு....”

”ஆட்டுட்டி ரெண்டையும் காணாம்...” விடாக்கண்டனாய் கேட்டார்.

”எல்லாம் கட்டிக் கெடக்கு... காலைல பேசிக்கிலாம்... நீ துாங்கு...”

”வெடியறாப்பல இருக்கு... இந்நேரம் மொய்மொய்யுங்குமே ரெண்டும்...” என்றார் மறுபடியும்.

”... ...”

”அதுங்க இருந்தா நீ நின்ன எடம் தரிப்பியா...?”

ஏதோ சந்தேகத்தில்தான் அவர் திரும்பத் திரும்பக் கேட்கிறார் என்பது புரிந்ததில் பதிலேதும் சொல்லவில்லை மரகதம். கணக்குக்கு ஆடுகளை அவிழ்த்துக் கொடுத்து ஏழெட்டு நாட்களாகியிருந்தன. இன்னும் சலீம்பாய் காசு கொடுக்கவில்லை. “யாரோ ஒத்தரு பொறந்தநாளாம்... இன்னிக்குக் கசாப்புப் பண்ணக்கூடாதாமே... கொஞ்சம் பொறுத்துக்கம்மா... வர்ற நாத்திக்கௌம பணம் கொண்டாந்துர்றேன்...” என்றிருந்தார்.

ஆக கலாராணியும் ராசாத்தியும் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. “விக்கறதுக்கு தோது வாய்க்காதுங்க பாய்ன்னு ரெண்டையும் அவுத்து கொண்டாந்துடுணும்...’ நினைப்பே மனத்தை லேசாக்கியது. ‘அவுத்து கொண்டாந்து... அதுங்களும் பசியும்பட்டினியுமா லோலுபடவா...? அந்த எளவுக்கு அதுங்க ஒரேமுட்டா செத்தே போவலாம்...‘ என்றது ஒரு மனம். ‘செத்துடுலாந்தா... அதுக்குன்னு தாஞ்சாவு வந்து சாவமா வெட்டுப்பட்டா சாவணும்...“ கழுத்திலிருந்த சங்கிலி உறுத்தியது. ஆட்டுக்குட்டிகள் ஆறை நுாறாக்கியதில் பெருகிய நகைகள் இவை. வெள்ளாமையின்றிப் போனதில் நகர்ந்தவை போக மிஞ்சியது இது ஒன்றுதான்.

உறக்கமும் நினைப்புமாக நகர்ந்தது இரவு.



இன்றைக்காவது கணவனுக்குத் தலைக்கு ஊற்றிவிட வேண்டும். அலுப்புத் தீர்ந்த களிப்பில் அசந்து உறங்குவார். புலம்பல் குறையும். கலாராணியும் ராசாத்தியும் இங்கில்லை என்ற உண்மையை அதன்பிறகுதான் சொல்ல முடியும். பாயைச் சுருட்டிச் சுவரோரம் வைத்தாள். கந்தசாமி உறங்கிக்கொண்டிருந்தார். சத்தம் ஏற்படுத்தாமல் அடி மேல் அடி வைத்து நகர்ந்து காலிக் குடங்கள் இரண்டும்  அகப்பையும் எடுத்துக் கொண்டாள். நீர் மோள்வதற்காகவே பிரத்யேகமாக செய்யப்பட்ட அகப்பை அது. நீளமான பைப்பில் கைப்பிடியும் நுனியில் நல்ல வடிவான பெரிய கொட்டாங்கச்சியுமாக இருந்தது அந்த அகப்பை. ஆற்றங்கரையை நோக்கி எட்டு வைத்து விரைசலாக நடந்தாள். விடியற்காலை காற்று உடலுக்கு இதமாக இருந்தது.

ஆறு வற்றிப் போய்க் கிடந்தாலும் மணலில் ஊற்றுப் பறிக்கையில், அதிர்ஷ்டமிருந்தால் நீர் கிடைக்கும். சிறு பள்ளத்திலிருக்கும் நீரை அகப்பையில் எடுத்து துளித்துளியாகக் குடத்தில் சேர்க்க வேண்டும். மணல் சரித்து விடும். உட்கார தோது வாய்க்காது.  கை மாறாமல் எடுப்பதால் வலியில் கை துவண்டுபோகும். இறுதியில் ஒரு குடம் நீர் அரைக் குடமாக தெளிந்து நின்றாலும், நீரைப் பார்க்கும்போதே பட்டப்பாடனைத்தும் மறந்து போகும்.

இருள் இன்னும் விலகவில்லை. மணல் ஊற்றில் இரண்டொருவர் ஆங்காங்கே நீர் சேகரித்துக்கொண்டிருந்தனர். நல்லவேளையாக யாரோ பறித்து வைத்த பள்ளம் ஒன்றில் கொஞ்சம் நீரிருந்தது. கால்களை விரித்து மணலில் நன்கு ஊன்றி வைத்து உட்கார்ந்தாள் மரகதம். எப்படியும் ஒரு குடம் தேற்றி விடலாம் என்ற நம்பிக்கையே மகிழ்ச்சியாக இருந்தது. அகப்பையை எடுத்துக்கொண்டாள். நீரை எடுத்து ஊற்றுவதற்கு தோதாகக் குடத்தை நகர்த்தி வைத்துக்கொண்டாள்.

அகப்பையின் நீண்ட கைப்பிடியைக் குழிக்குள் விட்டு நீரையள்ளினாள். அதனைக் குடத்தில் சரித்த போது குடத்தின் கீழே ஒண்டியிருந்த சிறு கட்டுவிரியன் குட்டியொன்று தொந்தரவான கோபத்தில் நெளிந்தபடியே அவளின் காலை நோக்கி முன்னேறி வர... மணலில் மின்னி நெளிந்த பாம்பை முதலில் கவனிக்கவில்லை மரகதம். நீரை அள்ளியூற்றும் மும்முரத்திலிருந்தாள். பின்னும் காலை ஏதோ உறுத்த அசிரத்தையாய்க் குனிந்தாள். சரிகையாய் நெளிந்த சிறு பாம்பைக் கண்டதும் பதறி எழுந்த அவளால் சுதாரிக்க இயலவில்லை. மணல் சரித்து விட எக்குத்தப்பாக அந்தச் சிறு பள்ளத்தில் விழுந்தாள். விஷத்தை வெளிப்படுத்திய திருப்தியில் நெளிந்தோடியது அந்தச் சிறுபாம்பு. அந்நேரம்தான் சலீம்பாய்க்குப் பெரியளவில் பிரியாணி ஆர்டர் வந்திருந்தது.

இன்று குளித்து விடலாம் என்ற எண்ணமே உறக்கத்தைக் கலைக்க, உற்சாகமாகக் கண்விழித்தார் கந்தசாமி.

***
 மே 2018 பேசும்புதியசக்தி – சிறப்பு சிறுகதை


No comments:

Post a Comment