Search This Blog

Thursday 1 August 2024

சுதந்திரத்திற்கு பின் திரு.காந்தி

 


இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மிக மோசமான நிகழ்வுகளை கண்ணுற்று அதிர்ந்துப் போயினர். இது… இது… இரண்டாம் உலகப்போரில் நாங்கள் கண்டதை விட இது மிகவும் மோசமானது… மிக மோசமானது… என்றனர் அதிர்ச்சி விலகாமல்.

இரு நாடுகளிலும் தப்பியோடுதல் அதிகரித்த போது எல்லைப்பகுதிகளில் ரயில் பெட்டிகளில் கூட்டம் கூட்டமாய் வந்த அகதிகள்தான் தாக்குதலின் முக்கிய இலக்குகள் ஆயினர். ரயில் பாதைகள் பெயர்க்கப்பட்டு வண்டிகள் கவிழ்க்கப்பட்டு உயிர்கள் எடுக்கப்பட்டன. ரயில்கள் நிலையங்களில் நின்ற போதோ அல்லது வன்முறை கும்பல் அபாய சங்கிலியை இழுத்து வெட்டவெளிகளில் ரயில்களை நிறுத்தியோ உயிர்களை பிணங்களாக்கி அதே ரயில்களில் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் சுன்னத் செய்யப்பட்டவர்களும் பாகிஸ்தானில் சுன்னத் செய்யப்படாதவர்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். பெண்களின் நிலையோ கூறத்தக்கதாக கூட இருக்கவில்லை. மதத்தின் மூடாக்குகளுக்குள் குழந்தைகளின் மரணக் கதறல்கள் தேய்ந்துப் போயின. ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் பெட்டிகளின் கதவுகள் வழியாக ரத்தம் வழிந்தது.

அவர் சந்தேகப்பட்டு பின் சந்தோஷப்பட்ட கல்கத்தாவின் அமைதியின் மீதும் கல்லெறியப்பட்டிருந்தது. தலைநகர் டில்லியிலும் அதே நிலைமையே. கடும் குளிர் வாட்டி வதைத்த டிசம்பர் மாதத்தின் பின்னாள் ஒன்றில் அவர் வருத்தத்தில் தோய்ந்தெடுத்த வார்த்தைகளை வேதனையின் வலியிலிருந்து பிரசவிக்கிறார்.

நான் மிகவும் கஷ்டமான காலத்தை அனுபவித்து வருகிறேன். எனக்கு ஓய்வெடுப்பதற்கு நேரமே இல்லை. வகுப்புவாத மோதலுக்கு சாமானியர்கள் காரணமல்ல. விரல் விட்டு எண்ணத்தக்க சிலர் இவற்றுக்கு பின்னே இருக்கின்றனர். கடலே தீப்பற்றி எரிந்தால் அதனை யாரால் அணைக்க முடியும்? பொய்மை மிகப் பெரிய அளவில் பரவி விட்டது. அது எங்கே முடியும் என்று யாராலும் கூற முடியாது.. இந்த உலகில் எனது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை அறிவேன். நான் போன பிறகு நான் கூறியவையெல்லாம் சரி என்பதை உணர்வீர்கள்.

ராஷ்டிரீய சுயம் சேவக் சங் பற்றி பல விஷயங்களை நான் கேள்விப்படுகிறேன். இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்களுக்கெல்லாம் அந்த அமைப்பே காரணம் என்றும் கேள்விப்பட்டேன். மக்கள் கருத்து என்பது ஆயிரம் வாள்களை விட வலிமையானது என்பதை நாம் மறக்க வேண்டாம். கொலைவெறித் தாண்டவங்களை நடத்துவதன் மூலம் இந்து மதத்தை நாம் பாதுகாக்க முடியாது. எதுவும் செய்யாமல் சும்மா இருந்து எதிர்ப்பினை தெரிவிக்கும் முறையைக் கடைப்பிடித்தால் அதற்காக கடுமையான ஒரு விலையை நாம் அளிக்க வேண்டியிருக்கும். நாசரேத்தை சேர்ந்த ஏசு துணிச்சலுடனும் வீரத்துடனும் முழுமையான ஞானத்துடனும் போராட்டம் நடத்தினார். ஆனால் அது பலவீனமானவரின் எதிர்ப்பு என்று ஐரோப்பா தவறான முறையில் மதிப்பிட்டது. விவிலிய நுாலில் புதிய ஏற்பாட்டை நான் படித்த போது அதில் ஏசுவைக் குறித்து எத்தகைய செயலின்மையையோ பலவீனத்தையோ நான் காணவில்லை. டால்ஸ்டாய் எழுதிய ஹார்மனி ஆஃப் தி காஸ்பல்ஸ் என்ற நுாலையும் அது போன்ற அவரது பிற நுால்களையும் வாசித்தபோது எனக்கு அதன் பொருள் மேலும் விளங்கியது. எனது சொந்த அனுபவத்தைப் பற்றி குறிப்பிடும்போது செயலற்ற எதிர்ப்பு முறையின் மூலம்தான் நாங்கள் சுதந்திரம் பெற்றோம் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் எங்களை அறியாமல் செய்த தவறுக்கான கடுமையான விலையை தினமும் அனுபவித்து வருகிறோம். நாங்கள் செய்த தவறு என்பதை விட செயலற்ற எதிர்ப்பு முறையை அகிம்சை வழியிலான எதிர்ப்பு என்று கருதும் தவறை செய்வதவன் நானே. நான் அந்த தவறைச் செய்யாமலிருந்திருந்தால் இன்று காணப்படக்கூடிய சிறுமைப்படுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்க முடியும்.

இந்து மதத்தை பாகாப்பதற்காக இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை விரோதிகளாக நடத்தக் கூடாது. இதே விதி முஸ்லிம்களுக்கும் பொருந்தும். முஸ்லிம்களை மட்டுமே சகித்துக் கொள்வோம் என்ற நிலையை அவர்கள் கைக்கொண்டால் இஸ்லாமிய மதம் அழிந்து போகும். கிறிஸ்துவ மதத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கு கூட இது பொருந்தும். ஏனெனில் மதங்கள் அனைத்தும் நேர்மையையும் நட்புறவையும் போதிப்பன. முப்பதாண்டுகளாக இங்கு நடைபெற்று வரும் அகிம்சை வழிப் போராட்டத்திலிருந்து முஸ்லிம்கள் ஏதாவது புரிந்து கொண்டிருந்தார்களானால் இந்திய ஒன்றியத்தில் சிறுபான்மை மக்களாக தாங்கள் இருப்பதாகக் கருதி கவலைப்படக் கூடாது. பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களாக இருப்பவர்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதையும் உணர வேண்டும். நபிகள் நாயகத்தை பின்பற்றியவர்கள் மெக்காவில் சிறுபான்மைப் பிரிவினராக இருந்த காலம் தான் இஸ்லாத்தின் மிகச் சிறந்த காலம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சுதந்திரம் கிடைத்து கிட்டத்தட்ட நான்கு மாத ஆட்சிக்காலத்திற்கு பிற்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் கலந்துக் கொண்ட அலகாபாத் பல்கலைக்கழக விழாவில், நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் அதனையடைந்த பின் நாம் ரத்தமும் கண்ணீரும் கலந்த நீரில் கால் நனைத்து செல்ல வேண்டியிருக்கிறது என்று தன் வருத்தத்தை பதிவு செய்து விட்டு தன் உரையை தொடங்குகிறார்.

நமது தேசத்தை இருள் சூழ்ந்தது. மதிகெட்ட மனிதர்களாக மக்கள் மாறிப் போனார்கள். கொடுமைக்கு மேல் கொடுமை சூழ்ந்து கொண்டது. திடீரென்று சூனியமான நிலை ஏற்பட்டு வெளிச்சம் என்பதே இல்லாதது போன்ற தோற்றம் உருவாகியது. ஆனால் அப்போது பிரகாசிக்கும் சுடரொளியொன்று மட்டும் தொடர்ந்து மின்னி வந்தது. சுற்றிலும் இருளடைந்து கிடந்த பகுதிகளில் தனது ஒளியைப் பரப்பியது. அந்த துாய்மையான சுடரொளியைக் கண்ட பிறகுதான் வலிமையும் நம்பிக்கையும் நமக்குத் திரும்ப வந்தது. இங்கேதான் இந்தியாவின் ஆன்மா இருந்தது. வலிமையானதாக மாசு மருவற்றதாக தற்போது நிலவும் கலவரங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அது திகழ்ந்தது. இந்த மாதங்களில் மகாத்மா நம்மிடையே இருப்பதன் பொருளை உங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? அவர் இந்தியாவுக்கு ஆற்றிய மகத்தான பணிகளை நாம் அறிவோம். கடந்த ஐம்பதாண்டுகளாக விடுதலை லட்சியத்திற்காக அவர் ஆற்றிய அரும் பணிகளை நாம் அறிவோம். ஆனால் கடந்த நான்கு மாதங்களில் அவர் ஆற்றிய பணியை விட உயர்ந்த பணியாக அவரது வேறு எந்தப் பணியும் இருக்க முடியாது. அனைத்தும் கரைந்து விடும் நிலையிருந்தும் அவர் பாறையை போன்ற லட்சிய உறுதியுடன் இருந்தார். அனைவருக்கும் உண்மை ஒளியைக் காட்டும் கலங்கரை விளக்காக திகழ்ந்தார். அவரது மெல்லிய உறுதியான குரல் மக்கள் தொகை எழுப்பிய ஆரவாரக் கூச்சலையும் தாண்டி மேலே உயர்ந்து ஒலித்தது. சரியான முயற்சிக்கான பாதையைச் சுட்டிக் காட்டியது. இந்த சுடரொளி தந்த வெளிச்சம் காரணமாக நாம் இந்தியா மற்றும் அதன் மக்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்கிறோம் என்றார். கூட்டம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

டில்லி பதற்றமாக இருந்தது. ஆனால் வகுப்புவாத படுகொலைகள் நின்று போயிருந்தன. சுதந்திர இந்தியாவின் தலைநகரில் அமைதி நீடிப்பது ஆயுதபலத்தினால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது, தான் பயிற்றுவித்து பாதுகாத்த ஆன்மீக பலத்தினால் அல்ல என்பதை காந்தியும் அறிந்திருந்தார்.

கல்கத்தாவில் எத்தனை சாதனை செய்திருந்தாலும் முஸ்லிம் முகாம்களில் அவருக்கு பல நேரங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. கடவுளின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்துப் போய் விடுங்கள். ஆனால் அன்பை இழந்து விடாதீர்கள் என்ற அவரின் செய்திகளை முஸ்லிம்கள் எள்ளி நகையாடினர். பழைய கோட்டை முகாமுக்கு பாதுகாவலர்கள் யாருமின்றி அவர் சென்ற போது முஸ்லிம் அகதிகள் கும்பலொன்று அவரது காரைச் சூழ்ந்து கொண்டு அவரை சபித்தது. சிலர் அதன் கதவை இழுத்துத் திறந்தனர். மனம் கலங்காத அவர் காரிலிருந்து வெளியே வந்து அவர்கள் மத்தியில் சென்றார்.

“இந்து முஸ்லிம் சீக்கியர் கிறித்துவரிடையே எனக்கு வேறுபாடு இல்லை. அனைவரும் சமமே” அவரது மெலிதான ஆனால் உறுதியானக் குரல் முஸ்லிம்களிடம் கோபத்தை வரவழைத்தது. அதேசமயம் முஸ்லிம்களின் மீதான காந்தியின் இரக்கம், துன்பத்துக்கும் துயரத்துக்கும் மதமில்லை என்ற அவரின் வற்புறுத்தல், முஸ்லீம்களின் காயங்களும் இந்துக்களின் காயங்களை் போல் கடுமையானவைதான் என்ற அவரின் போதனைகள் இந்துக்கள் பலரின் இதயத்தை அவருக்கு எதிராக மாற்றியிருந்தது.

ராஷ்டிரீய சுயம் சேவக் சங் என்ற இயக்கம் சிந்து நதி உருவாகும் இடத்திலிருந்து பர்மாவின் கிழக்குப் பகுதி வரையிலும் திபெத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலுமான மகத்தான இந்து சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று தீவிர விழைவுக் கொண்டிருந்தது. அதற்கு தடையாக நின்றுக் கொண்டிருக்கும் காந்தியையும் அவரது அனைத்துப் பணிகளையும் அவர்கள் முற்றிலும் வெறுத்தனர். அவரை இந்து மதத்தின் பரம வைரி என்றனர். அவர்களின் பார்வையில் அகிம்சை கொள்கை என்பது கோழையின் தத்துவம். இதனால் இந்துக்களின் ஆற்றலும் செயல்திறனும் வலிமையான குணமும் கெட்டுப் போய் விட்டது என்பதே. அவர்களுடைய இலட்சியத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரிடம் சகோதரத்துவமும் சகிப்பும் கொள்ள வேண்டும் என்று காந்தியின் போதனைக்கெல்லாம் இடமேயில்லை. இறுதி வரை இந்தியப் பிரிவினையை எதிர்த்து வந்த காந்தியே இந்தியப்பிரிவினைக்கு முழு பொறுப்பு என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தனது இறந்த உடலின் மீதுதான் இந்தியா பிரிக்கப்படும் என்று காந்தி சொன்ன பசப்பு வார்த்தைகள் கலாவதியாகி விட்டன. இந்தியா பிரிக்கப்பட்டு விட்டது, ஆனால் காந்தி இன்னும் வாழ்கிறார். இந்து அகதிகள் பட்டினி கிடக்கும்போது அவர்களை அடக்கி ஒடுக்கும் முஸ்லீம்களை  பாதுகாத்து வருகிறார். கற்பழிக்கப்படுவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்துப் பெண்கள் கிணறுகளுக்கும் விழுந்து சாகிறார்கள். ஆனால் காந்தி சொல்கிறார், பலியாவதில் தான் வெற்றி இருக்கிறது என்று. இந்த முட்டாள்தனத்தை எத்தனை காலம்தான் இதனை பொறுத்துக் கொள்ள முடியும்? அந்த அமைப்பு அவர் மீது சீறிக் கொண்டிருந்தது.

காந்திஜி அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவர், இந்தியா என்பது இந்துக்களின் தாயகம் என்பதைப் போலவே அது முஸ்லிம்களின் தாயகமும் ஆகும். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கோட்பாடும் இதுவே. இங்கு நடந்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதப் பிரச்சனைகளுக்கு முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையே காரணம் என்றாலும் லீக் இழைத்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தண்டிக்கப்படுவது நியாயமற்ற செயல் என்றார். இந்தியாவிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிர்ப்பந்தத்தின் காரணமாக அவர்கள் விட்டுச் சென்ற உடைமைகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கவும் அவற்றை அமைதியான முறையில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் செய்யும் குற்றங்களை நாமும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறு செயல்பட்டதன் மூலம் அவர்களின் மோசமான நடைமுறைகளை நாம் நியாயப்படுத்தி விட்டோம். அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற நோக்கத்துடன் நாம் செயல்படக் கூடாது. ஆத்திரமூட்டல்களை எதிர் கொள்ளும்போது அமைதியாக மவுனமாக உறுதியாக செயல்படும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் நமது வலிமை அதிகரிக்கும்.

ஆட்சி அதிகாரத்திடம் அவர், “பாகிஸ்தான் நடந்துக் கொள்ளும் முறையை அப்படியே நீங்களும் கண்மூடித்தனமாக பின்பற்றினால் எத்தகைய தார்மீக அடிப்படையில் உங்களுடைய நிலைப்பாட்டை எடுப்பீர்கள்? அகிம்சை வழியை உறுதியுடன் பற்றி நிற்பவர்கள் என்ற உங்களுடைய கொள்கை என்ன ஆகும்? நிகழ்ந்தவை அனைத்தையும் நீங்கள் அங்கீகரித்து விட்டால்  காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளையும் பண்பு நலன்களையுமே மாற்றியமைத்திட வேண்டியிருக்கும். இதுதான் உங்கள் முன்னேயுள்ள அடிப்படையான பிரச்சனை. இதனைச் சரியான முறையில் சந்திக்கும் வரை உங்கள் முன்னே உள்ள வேறு எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது” என்றார். உணர்ச்சி வசப்பட்டு தனது கொள்கையின் மீது தான் வைத்திருக்கும் விசுவாசத்திலிருந்து நழுவி விடும் மனிதரல்ல அவர். மக்கள் பாதுகாப்புக்கு தனக்கேயுரிய கொள்கை நிலையை அவர் அமல்படுத்துகிறார். மனிதர்களிடையே சகோதரத்துவம் நிலவ வைக்கும் நம்பிக்கை அது.

அவரை பொறுத்தவரை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை, கராச்சியிலிருந்து திப்ரூகர் வரை வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த மண்ணின் மீது சமமான உரிமையுண்டு. பெரும்பான்மையினர்க்குதான் இங்கே இடமுண்டு, சிறுபான்மை பிரிவு மக்கள் ஒடுக்கப்படுவார்கள் என்றோ அவமதிக்கப்படுவார்கள் என்றோ யாரும் கூற முடியாது. எனவே முஸ்லிம்களை விரட்டியடிக்க முயலும் எவரும் டில்லியின் முதல் விரோதிகள், இந்தியாவின் முதல் விரோதிகள். இத்தகைய பேரிடர் நிகழாத வண்ணம் தடுக்க ஒவ்வொரு இந்தியனும் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் துாய்மையுடன் இருக்க வேண்டும் என்கிறார். தனது சுய துாய்மையை நிரூபணம் செய்ய அவரது உள்ளுணர்வு உண்ணாவிரதம் செய்யக் கோருகிறது. அவர் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது வாழ்க்கையின் கடைசி உண்ணாவிரதத்தை இறப்பதற்கு பதினெட்டு நாட்களுக்கு முன்பு தொடங்குகிறார். இந்த முறை அவர் முன் வைத்த நிபந்தனைகள் வெறுப்பையும் இகழ்வையும் அவர் மீது சேறு போல அள்ளி வீசியது. அவர்களின் முன்னாள் மகாத்மா, முஸ்லிம்களின் இடங்களை அவற்றுக்கு உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்கிறார். முஸ்லிம்களின் வீடுகளிலும் மசூதிகளிலும் தங்கிக் கொண்ட இந்துக்கள் இப்போது அதை காலி செய்து விட்டு மீண்டும் வசதிகளற்ற முகாம்களுக்கு திரும்பி கடும் குளிரிலும் பனியிலும் அல்லற்பட வேண்டுமாம். எல்லாவற்றையும் விட பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய 55 கோடி ருபாயை உடனடியாக கொடுத்து விட வேண்டும் என்பது அவரது நிபந்தனையில் நேரு, பட்டேல் உட்பட அமைச்சரவையே ஆட்டம் கண்டுப் போனது.

எல்லைபுற மாகாணத்திலிருந்து வந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் கும்பலொன்று, “காந்தியே… போதுமானளவுக்கு நீங்கள் எங்களுக்கு தொல்லைக் கொடுத்து விட்டீர்கள். எங்களை முற்றிலும் அழித்து விட்டீர்கள். எங்களைத் தனித்து விடுங்கள். இமயமலைக்கு சென்று விடுங்கள்”

காந்தியை நிலைக்குலைய செய்யும் வார்த்தைகள் அவை. பிர்லா மாளிகையின் வெளியே கோஷங்கள் ஒலித்தன. என்ன நடக்கிறது” என்றார் காந்தி. உண்ணாவிரதம் அவரை படுக்க வைத்திருந்தது. “அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” “கோஷமிடுகிறார்களோ?” “ஆமாம்..” “அவர்கள் என்ன சொல்கிறார்கள்” “காந்தி இறக்கட்டும்” பியாரிலால் தயங்கியப்படியே பதிலளித்தார்.

ஆனால் அந்த நிலை அப்படியே நீடிக்கவில்லை. சகோதரத்துவம், இந்து முஸ்லிம் ஒற்றுமை, காந்தியைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடனும் எழுப்பிய குரல்களுடனும் அனைத்துப் பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள மைதானங்களில் மக்கள் கூட்டம் மொய்த்தது. பொது பிரார்த்தனைக் கூட்டங்களில் ஆயிரங்கணக்கானோர் கூடி அவர் உரை நிகழ்த்த வேண்டினார்கள். இதுவரை அக்கறையற்றிருந்த டில்லியிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. அவருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. குடியிருப்புகள், கடைவீதிகள், பொதுவிடங்களிலும் கூடிய மக்கள் கூட்டம் காந்தி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றது.

இந்தியா இந்துக்களுக்காக மட்டும், பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவையும் பாகிஸ்தானையும் சீரமைப்பது சிக்கலானதுதான். ஆனால் சிலவற்றில் நாம் மனம் வைத்தால் அது நிச்சயம் நடக்கும் என்பது அவரது நிலைப்பாடு.

காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் அணுகுமுறையை ஒதுக்கி வைத்து விட்டு இந்த நிதியை அளிப்பது குறித்து பரிசீலிக்க முடியாது என்பது அரசின் நிலைப்பாடு. காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைந்து விட்ட நிலையில் காஷ்மீருக்குள் ஆக்கிரமிப்பாளர்களை அனுப்பி வைத்த பாகிஸ்தான் அரசு, இந்த நிதியை விடுவித்தால் அதனையும் நமக்கு எதிராக திருப்பி விட்டு விடும் வாய்ப்புள்ளது என்றார் பட்டேல்.

“ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவது ஒரு பொறுப்புள்ள அமைச்சரவைக்கு அழகல்ல. மூடத்தனம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் நம்முடைய சிறந்த பிரதிநிதிகள் அறிவுடன் செயல்பட்டு அரசு என்ற கப்பல் உடைந்து நொறுங்கி விடாமல் காப்பாற்ற வேண்டாமா?” என்றார் காந்தி.

இது அரசியல் அச்சுறுத்தல். இந்துக்களை அழித்தொழிப்பவர்களிடம் சரணடையச் செய்யும் செயல். இந்திய அரசியலிருந்து காந்தி பலவந்தமாக அகற்றப்பட வேண்டும். ஆம். அதுதான் சரி என்றது அந்த இயக்கம்.

வேறு வழியின்றி  இந்திய அரசாங்கம் காந்தியடிகளின் வேண்டுதலுக்கு இணங்கி வந்தது.

உண்ணாவிரதத்தின் மூலம் தனது நாட்டு மக்களை அவர்களுக்கான வகுத்தப் பாதையில் மீண்டும் திருப்ப முடிந்திருக்கிறது என்ற வகையில் காந்திக்கு மகிழ்ச்சி. இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கலப்படமற்ற ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகும். இது பாகிஸ்தான் அரசாங்கத்தை கவுரவமான இடத்தில் வைக்கும். இந்த நிலைப்பாடு காஷ்மீர் பிரச்சனை மட்டுமின்றி இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளின் மீதும் ஒரு கவுரவமான உடன்பாடு எட்ட வழி வகுக்கும் என்றார் அவர்.

அவர் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கான உத்தரவு ஜின்னாவிடமிருந்து வர வேண்டும். காந்தியின் இந்திய வருகைக்கு முன் ஜின்னா காங்கிரஸில் மிக முக்கியமான இடத்தில் இருந்தார். காந்தியை போல அவருமே வெளிநாட்டில் வக்கீல் படிப்பை முடித்து விட்டு வந்த பாரிஸ்டர். ஆனால் காந்தியை போல வக்கில் தொழிலில் விலைப்போகாதவர் அல்ல. மிக சாதாரண இஸ்லாம் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வழக்கறிஞர் தொழிலாலும் திறன் மிக்க தனது ஆளுமையாலும் நாட்டின் மீதுக் கொண்ட பற்றினாலும் பொருளாதாரத்திலும் புகழிலும் மிகப் பெரிய உச்சத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். ருட்டி என்ற பார்ஸி இனத்தை சேர்ந்த பெரும் செல்வந்தரின் மிக இளம் வயது மகளை மணம் முடித்து பெண் குழந்தையொன்றுக்கு தகப்பனாகியிருந்தார். இல்லற வாழ்க்கையை போலவே தனது அரசியல் வாழ்க்கையிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்திருக்க வேண்டிய நிலையில்தான் காந்தி என்ற தந்திரக்காரர் அவர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஜின்னா, காந்தியை, தந்திரம் மிகுந்த இந்து நரி என்றே குறிப்பிட்டிருக்கிறார். காந்திக்கு எதிராக கல்லாக இறுகிப் போயிருந்த அந்த பிரிவினைவாதியின் மனதை, காந்தி தனது நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை அளிக்க வைத்ததும்  முஸ்லீம் மக்களுக்காக தன்னையே வருத்திக் கொண்டதும் லேசாக இளக வைக்க, உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத அந்த கொலைக்கார இரும்பு மனிதர் லேசான தலையசைப்பின் மூலம் காந்தி தனது நாட்டிற்கு வருவதற்கு இசைவளித்தார்.

ஆனால் எல்லாம் முடிந்திருந்தது. அது ஜனவரி மாதத்தின் இறுதிக்கு முந்தைய முப்பதாம் தேதியின் மாலை தினம். அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு ஜனவரி 26 ஆம் தேதி அதே பிர்லா மாளிகையின் புல்வெளியில் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது அவர் மீது குண்டு வீசப்பட்டது. குறி தவறியிருந்த அந்த குண்டு அவர் பேசிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எழுபது அடி தொலைவில் வெடித்திருந்தது. அதன் பிறகு எழுந்த சலசலப்புக்கு பிறகு காந்தி சிறிதும் பதற்றமின்றி தன் உரையைத் தொடர்கிறார். அஞ்சி நடுங்கிய சுசீலா நய்யரிடம், “பிரார்த்தனையின்போது இறப்பதை விட வேறெந்த சிறந்த மரணத்தை நீ விரும்புகிறாய்?” என்றார்.

ஜனவரி 25 ஆம் தேதியன்று அவர் எழுதிய கடிதமொன்றில், நான் ராமனின் சேவகன். அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நிறைவேற்றுனே். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக் கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருளுவானானால் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தில் வெற்றிப் பெற்றவனாவேன். நான் அவற்றை மனப்பூர்வமான முறையில் பின் தொடர்ந்திருந்தால், கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால், அத்தகைய மரணத்தை கடவுள் எனக்கு கட்டாயம் அளிப்பார். யாராவது ஒருவன் என்னை கொல்வானானால் அந்த கொலையாளியின் மீது எத்தகைய கோபமும் எனக்கு ஏற்படக்கூடாது. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே நான் மரணடைய வேண்டும் என்று எழுதியிருந்தார்.

அவர் எப்போதோ எழுதிய கட்டுரையில், அகிம்சையே சத்தியத்தின் ஆன்மா. அது இல்லாத மனிதர் வெறும் மிருகமே. சத்தியத்தை நாடுகிறவர் அதை தேடுவதில் இதையெல்லாம் உணர்வார். கொலைக்காரனுக்கு முன் அகிம்சை பலிக்காது என்று சொல்வது தவறு. அவனிடம் அகிம்சையை கொண்டு பரிசோதிப்பது என்பது தன்னையே அழித்துக் கொள்ள முற்படுவது என்றாலும் அதுவே அகிம்சைக்கு சரியான பரிட்சை. கொல்லப்படுவதை அனுமதிப்பது மட்டுமே அகிம்சையாகி விடாது. தாம் கொல்லப்படும்போது கொலைக்காரன் மீது கோபமோ தாபமோ கொள்ளாமல் அவனை மன்னித்து விடும்படி கடவுளிடம் கோருபவரே உண்மையில் அகிம்சையை அனுசரிப்பவர் ஆவார். இயேசு கிறிஸ்து இவ்விதமே செய்தார் என்று சரித்திரம் கூறுகிறது. அவர் கூறினாராம், தாங்கள் செய்யும் பிழையை அவர்கள் உணரவில்லை பிதாவே... அவர்களை மன்னியும் என்று.  நான் இன்னும் அப்படிப்பட்ட உச்சநிலையை அடைந்து விடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

1894 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று காந்தி தனது நாட்குறிப்பில், தனது நண்பர்களான மெத்தடிஸ்ட் தம்பதிகள் இருவரை பற்றி எழுதியிருந்தார். தான் சைவ உணவு முறை பற்றியும் புத்தமதம் பற்றியும் பேசுவது அந்த தம்பதிகளுக்கு பிடிக்கவில்லை என்றும்  இதனால் தங்கள் குழந்தைகள் வீணாகி விடுமோ என்று பயந்து  அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் கூறி விட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அதாவது காந்தி, புத்தரை கிறிஸ்துவுக்கு சமமாக வைப்பது அவர்களுக்கு பிடிக்காமலிருந்தது. ஆனால் இன்று காந்தியடிகளே புத்தருக்கும் கிறிஸ்துவுக்கும் சமமான மகாத்மாவாக மாறி விட்டதை அத்தம்பதிகள் உயிரோடிருந்தால் உணர்ந்திருப்பார்கள். 

அவர் தன் வாழ்க்கையில் ராமநாமத்துக்கு அடுத்தபடியாக அதிகம் உச்சரித்த சொல் கஸ்துார்’ அல்ல.  ‘அகிம்சை’… ஆம்… அப்படிதான் இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கவும் முடியும். 

அவரது ராமரும் ஆம்… அப்படியே ஆகுக… என்று ஆசிர்வதித்திருந்தார்.

 

***

 

No comments:

Post a Comment