Search This Blog

Sunday, 31 May 2020

பூச்செண்டு



அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும்  என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால்,நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல் என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது.   வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

அவனும் வீட்டுறைவில்தான் சிக்கியிருந்தான். ஆனால் சிக்கியபோது அவன் விடுதி ஒன்றின் அறையிலிருந்தான்அது அலுவல் சார்ந்த பயணம். இரண்டு நாள் கருத்தரங்கிற்காக திருச்சியிலிருந்து பெங்களுரூ வந்திருந்தான். ஒருநாள் ஊரடங்கு ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டு கருத்தரங்கு இரத்தாகி, பயண வழிகளும் அடைக்கப்பட்டபோது அவனோடு சேர்ந்து திருச்சியிலிருந்த அவளும் பரிதவித்துப் போனாள். இருவரும் வாட்ஸ்ஆப்பின் காணொலி அழைப்பின் வழியாக பேசி பேசி அதை சரிக்கட்ட முனைந்தனர் சஞ்சு எங்கருக்கா..”அவளா..? ஜம்முன்னு என் மேல எப்டி துாங்றா பாரேன்..” காமிராவை கீழிறக்கிக் காட்டினாள். சஞ்சு மல்லாந்திருந்த அவள் வயிற்றின் மீது, உடலை உப்பலாக்கி கழுத்தை வளைத்து உடலில் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. சஞ்சு காக்கடைல் பறவையாக இருக்குமாறு இப்பிறவியில் பணிக்கப்பட்டிருந்தது.

பொறாமையா இருக்கு..” என்றான். அவளை நோக்கி ஏந்திக் கொள்வது போல கைகளை நீட்டினான். இரவுகளில், தன்னிரு கைகளையும் ஏந்தி அவளை வாங்கி நெஞ்சில் சாத்திக் கொள்வான். அவள் தலையை நிமிர்த்தி அவன் விழிகளை தன் விழிகளால் துழாவுவாள். காமம் கொண்ட அவ்விழிகள் தன்னளவில் சிறுத்திருக்கும். அவளுடைய புற அசைவுகளை அனிச்சையாக எதிர்க் கொள்ளும் அவனுடல், அவளை வீழ்த்துவதிலேயே தொடர்ந்து விழையும். “என் அசைவுகளை உணரு..” என்பாள் உடல்வழியே. “அதுனாலதானே ஒன்னை இறுக்கக் கட்டிக்கிறேன்..” என்பான் செயல்வழியே.   நான் விழைவதை நீ விழைவதும், நீ விழைவதை நான் விழைவதுமே பொருந்துகின்ற காமம். ஆழம்  தீண்டுவதே காமத்தின் நிறைவு. நுகர்தலே பூக்களுக்கு மணம் உண்டாக்குகிறது.

அந்த வியாதிக்கு காரணமான அந்த நுண்கிருமியை பெரிதாக்கியபோது அது அழகிய பூச்செண்டுபோலிருந்தது. வல்லரசுகள் உருவாக்கியிருந்த வலிமைக் கொண்டவர்கள், வலிமையிழந்தவர்கள் என்ற உலகின் இரு பிரிவுகளை குறுகிய காலத்தில் அக்கொடியநோய் ஒருங்கிணைத்து அனைத்து காதுகளிலும் அப்பூச்செண்டை சொருகி வைத்திருந்தது.

ஊரடங்கும் வீட்டடங்கும் நீட்டிப்பானபோது அவனுக்கான விடுதி செலவை இனி ஏற்றுக் கொள்ளவியலாதென நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அந்நேரம் விடுதியும் மூடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்தது. “இப்படியெல்லாம் நடக்கும்னு ரெண்டுநாளுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தாகூட நா அங்கேர்ந்து கௌம்பியிருக்க மாட்டேன்டா.. நீயும் தனியா அங்க கஷ்டப்பட்டிருக்க மாட்டே..என்றான் தன்னிரக்கத்தோடு.

யெஸ்வெஜிடபிள் கெடைக்கலே மளிகை கெடைக்கலேன்னு ஊரே லோலோன்னு அலையுதுஇங்க சமைச்சு வச்ச சாப்பாட்ட சாப்பிட ஆளில்லஎன் ஒருத்திக்காக சமைச்சு நானே சாப்டறதெல்லாம் ஒலக போர்டா சாமி..

அதுக்காக சாப்டாம இருந்துடாதே.. நானெல்லாம் இங்க சாப்டறது ஒண்ணுதான் வேலைன்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. நேரங்கெடைக்கும்போது ஏடிஎம்ல கொஞ்சம் பணத்த எடுத்து கைசெலவுக்கு வச்சிக்க.. எல்லாத்தையும் லிக்விட்டா வச்சுக்க முடியாது பாத்துக்க..

போதும்.. போதும்.. போரடிக்காத..

அதுசரி.. ஒனக்கு இருக்க வீடிருக்கு.. வெளாட சஞ்சு இருக்கா.. நாந்தான் ரொம்ப பாவம்

பொலம்பாத.. எதாது ஒரு வழி கெடைக்காமய போவும்சஞ்சுவை நோக்கி அலைபேசியை திருப்ப அவன் திரைவழியாக அதனை கொஞ்சினான். அது தன் சிறிய அலகைக் கொண்டு திரையை கொத்தியது. அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டுஇன்னைக்கு நீ ரொம்ப அழகாருக்கே..என்றான். இரவுகளில் அடிக்கடி இதை கூறியிருக்கிறான். அவள் சிரித்துக் கொண்டாள். மனைவியின் அழகென்பது அலங்கரிக்கப்பட்ட கோபுரவாயில். கோட்டைக்குள் நுழைந்ததும் கோபுரம் விலகி பின்னே சென்று விடுகிறது. தரிசனம் என்பது கருவறை சிலையை காண்பதல்ல. அதிலுறையும் இறையை கண்டெடுப்பதே. இறை தான் நிறை. அது எடுத்தபிறகும் குறையாது, கொடுத்த பிறகும் மாறாது. மற்றொருவரில் தானாக, தன்னில் மற்றொருவராக. தானென ஏதும் மிஞ்சாததாக.

நவீன உலகம் திகைத்து வியர்த்து அப்பூச்செண்டின் முன் கைக்கட்டி வாய் புதைத்து நின்றது. இத்தனைக்கும் அப்பூச்செண்டு பல இலட்சம் கோடிகளை செலவிடும் அளவுக்கு வல்லமை படைத்த இராணுவம் கொண்ட நாட்டையோ படைபலத்தையோ ஆயுதபலமென்று எதையுமோ கொண்டிருக்கவில்லை. வீடுகள், வீடுகளாகவே இருப்பதால் அவற்றை பதுங்குக்குழிகள் என்று மக்கள் கருதாமலிருக்கலாம். கனவு கண்டு விழித்ததும் எல்லாம் கடந்து விடும் என்பது போல அவர்கள் பகல்களில் உறங்கத் தொடங்கினர். கண்விழித்தபிறகும் சிலருக்கு நடக்கும் நிகழ்வுகள் உண்மைதானா? என்ற சந்தேகமிருந்தது.  இலக்கியவாதிகள், இதனை மிக சிறந்த அறிவியல் கதை என்றெண்ணிக் கொண்டு கண்ணுறங்கினர். விழித்தெழுந்த பிறகு, அதையே கருவாக்கி, கதைகள் புனைந்து தங்களுக்குள் படித்துக் கொண்டனர். அது குறித்து காரசாரமாக விமர்சனங்கள் கூட எழுந்தது. எழுத்தை பார்த்து விமர்சனம் செய்யுங்கள், எழுத்தாளர்களை கருதிக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சிலர் பொங்கியெழுந்தனர். அவர்கள் வேற்றுலகவாசிகள் என்பதால் அவர்களை கழித்து விட்டு மீதி உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. சினிமாவிரும்பிகள் ஹாலிவுட் இயக்குநர்கள் இந்த பூச்செண்டை விட மிக அதிகமாக கற்பனை செய்யும் திறன் படைத்தவர்கள் என இறுமாந்து அதனை தாம் பார்த்த படங்களின் வழியே நிறுவ முயன்றனர். இவர்களையும் கழித்து விட்டு, மீத மனிதர்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டிருக்க, வெளியுலகில் பொது கட்டுமானங்களும் போக்குவரத்து சாதனங்களும் ஆள்வோரின்றி அயர்ந்துக் கிடந்தன. அதை கண்டு திகைத்த பறவைகள் முதலில் திசை தடுமாறின. பின் மீண்டபோது அவை தாங்கள் இழந்துவிட்ட மர்மதேசங்களை அடையாளம் கண்டன. இயற்கையோ கலைப்பாரின்றி பெருகி வழிந்தது.
அவளுக்கு பெங்களுரிலிருக்கும் தன் தோழியின் நினைவு வர அன்றிரவே அவளிடம் வாட்ஸ்ஆப்பில் என்ன பண்றே..?” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருக்க, அத்தருணத்திலேயே அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “ஏய்.. இன்னுமா துாங்கல..?” என்றாள் ஆச்சர்யமாக. “இப்பல்லாந்தான் எப்ப வேணும்னாலும் துாங்கலாம்.. எப்ப வேணும்னாலும் எந்திரிக்கலாம்எப்போ வேணும்னாலும் சமைக்கலாம்.. எப்போ வேணும்னாலும் சாப்டுலாம்னு ஆயிடுச்சே.. நேரத்துக்கு துாங்கி என்ன பண்ணப்போறே.. ஆனா இது கூட நல்லாதான் இருக்குநா காலைல அஞ்சு மணிக்குதான் துாங்க ஆரம்பிப்பேன்.. இப்போ மணி ஒண்ணுதானே..” என்றாள்.
ஒங்காளு..?”
ம்க்கும்.. அவரு வெளிநாட்ல மாட்டிக்கிட்டாரு..” என்றாள்.
அடிப்பாவீ.. அங்கயும் அதே கதைதானா..? எங்காளு ஒங்கூர்ல மாட்டிக்கிட்டாரு.. ஹோட்டல்லாம் குளோஸ் பண்ணீட்டா அவரு கதி அதோகதிதான்…”
ஏய் இங்கொருத்தி இருக்கேங்கிறத மறந்துட்டீயா..” என்றாள்.
மறக்காத்துனாலதானே ஒனக்கு போன் பண்ணேன்.. அப்டீன்னா காலைல அவர வர சொல்லுட்டுமா..,” என்றாள். “இதென்னடீ கேள்வீ..?” என்று தோழி கோபம் கொண்டாள்.
அவனை அப்போதே எழுப்பி சொன்னபோது முன்னபின்ன தெரியா வீட்ல நா எப்படி தங்கறது..? என்றான். “ஒனக்குதான் தெரியாது.. எனக்கு அவள சின்னதுலேர்ந்தே தெரியும்.. சாதாரண நாள்ல யோசிக்க வேண்டியதெல்லாம் இப்போ யோசிச்சுட்டிருக்காத.. அத்தனாம்பெரிய வீட்ல அவளும் அவங்கம்மா மட்டுந்தான்நீ போயி தங்கறதால அவங்களுக்கு எந்த எடஞ்சலுமில்ல புரியுதா..?” என்றாள். “போறேன், வேற வழி..” “ஏய்.. ரொம்ப அலுத்துக்காதஒரு வாரந்தானே கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கடா…” என்றாள். கிருமியின் பரவல் அப்போது கட்டுக்குள் இருப்பதாகதான் சொல்லப்பட்டது. அடுத்தநாள் அறையை காலி செய்து விட்டு தோழியின் வீட்டுக்கு சென்று விட்டதாக தகவலளித்தான்.
உலகெங்கிலும் அந்த பூச்செண்டு தன் மகரந்தத்தை பரப்பிக் கொண்டிருக்க, மக்கள் தங்கள் வாழ்க்கையின் மீது எவ்வித அவநம்பிக்கையுமற்று அன்றாடங்களை கழித்துக் கொண்டிருந்தனர். எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தனர். அவள் கூட சஞ்சுவுக்கு மருந்தகத்தில் சொல்லி பேர்ட்ஸ் ஸ்பெஷல் வைட்டமின் டானிக்கை வரவழைத்து ஸ்டாக் வைத்துக் கொண்டாள். “ஒனக்கொரு சஞ்சு மாதிரி எனக்கொரு அம்மா..” என்றாள் தோழி. ஆனால் நடையுடை இல்லாத அம்மா. போட்டது போட்டப்படி கிடக்கும் அம்மா. “நீ செய்றது ரொம்ப பெரிய உதவீடீ.. எல்லாம் சரியானபிறகு ஒருநாளு அங்க வந்து ஒங்கம்மாவ பாத்துட்டு வரணும்…” என்றாள்.
சஞ்சு அவள் வலது கையில் ஏறி வலதுத்தோளில் அமர்ந்துக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று கத்தியது. பசியாக இருக்க வேண்டும். தானியமணிகளை சிறுத்தட்டில் கொட்டி நீட்ட, அது பட்பட்டென்று சத்தமிடும் அலகோடு அவற்றை கொத்தியது. அதில் தெறித்த மணிகள் அவள் நைட்டியில் தரையிலும் விழுந்தது. விரலை நீட்டியதும் சஞ்சு அதில் ஏறிக் கொள்ள அதை கட்டிலில் இறக்கி விட்டுவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து வந்தாள். சஞ்சு அதில் மூக்கை நுழைத்து ஒரு கொத்துகொத்தி விட்டு தலையை அண்ணாந்து நீரை பருகியது. அவனிடமிருந்து காணொலி அழைப்பு வர, நெட்டுக்குத்தலாக வைத்திருந்த தலையணையில் உடலை சரிவாக்கி அமர்ந்து, அலைபேசியை இயக்கியதும் சஞ்சு தத்தி தத்தி நடந்து வந்து நைட்டியை அலகால் கொத்தி பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு மேலெழும்பி, அவள் மார்பிலேறிக் கொண்டது. நைட்டியின் பட்டனை வாயில் வைத்துக் கொண்டு அது கடித்து திருக, “ஏய்.. வாயில போயிட போவுது..” என்று அதட்டியவாறு சஞ்சுவை வயிற்றுக்கு நகர்த்தி விட்டு ம்.. சொல்லு..” என்றாள். அவள் நகர்த்த நகர்த்த சஞ்சு மேலும் முனைப்போடு மேலேறியது. அதை கண்ணெடுக்காது பார்த்தவன் நான் சஞ்சுவை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றான். அவள் தலையை சாய்த்து சிரித்தாள். ஆட்டம் எதுவாக இருப்பினும், தோற்றவர்கள் வெற்றி பெறும் முனைப்பும், வென்றவர்கள் தோல்வி நேரிடுமோ என்ற தவிப்பும் கொள்வதாலேயே ஆட்டம் தொடர்ந்து களத்திலேயே இருக்க நேரிடுகிறது. அவன் எதோ பேசியபோது அவள் ஏதோ பதிலுறுத்தாள். இருமுனைகளும் ஒன்றையொன்று கவ்வி விலகி அமுதையோ நஞ்சையோ பரிமாறிக் கொள்ளும் நிறைவின் வழியாகதான் ஆட்டம் களைக்கட்டுகிறது. ஆனால் ஆட்டத்தின் மையம் ஒன்றேஒன்றாகதானிருக்க முடியும். மையமென்பது உணரப்படுபவை, உணர்த்துபவையல்ல. நிறைவென்பதே யோகம். அது உடலிருந்து மனதிற்கு எழுவதா..? அல்லது மனம் கொண்ட நிறைவை உடல் சுகிக்கிறதா? எதுவாயினும் முகம் ஆடியை போன்று செயல்பட்டு விடும்.  
அந்த தொற்றுக்கிருமி அந்நாட்டின் ஆராய்ச்சிக்கூடத்தின் வழியே உருவாக்கப்பட்டது என்று வல்லரசு அந்நாட்டை சுட்டிக்காட்டி குறை கூறியது. ஏனெனில், அந்நாடுதான் இந்நோய் பரவலின் ஆதாரம். நோயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துாரம் உலகின் கண்களிலிருந்து மறைத்து விட்டு, மறைக்கவியலாத காலக்கட்டத்தில்தான் இந்நோய்  குறித்து உலகிற்கு அறிவித்தது என்றும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவியலாது உலகு செயலிழந்து நிற்பதற்கு அந்நாடே காரணம் என்றும் வல்லரசு கடுஞ்சொல்லாடியது.  வல்லரசு, வல்லரசாகவே நீடிக்க அதற்கு மேலதிக தொழிற்நுட்பமும், விற்பனைக்கான சந்தையும், பணியாற்றுவதற்கான ஆட்களும் தேவைப்படுகின்றன. அது தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கேற்ப நோய்களையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாடு, வல்லரசை குத்திக் காட்டியது.
சஞ்சு மெல்லிய விசிலொலி எழுப்பிக் கொண்டே மூடியிருந்த சன்னலின் கம்பியிலேறி விளையாடியது. அதன் நீண்டிருக்கும் கொண்டை மயிர்கள் காற்றில் வளைந்தாடின. “எப்போதான் அங்க வருவேன்னு இருக்குஎன்றான். ”புரியுதுஎன்றாள் சிரிப்புடன். “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? அவன்  கண்கள் காமத்தில் சிறுத்திருந்தன. அந்நியரொருவர் வீட்டில் மூன்று வேளையும் உட்கார்ந்து உண்ணுவது சங்கடம் உண்டாக்கும் செயல் என்று பேச்சை மாற்றினான். “அதுக்கென்ன செய்றது? கொஞ்சம் அனுசரிச்சுக்கோ. பே பண்றேன்கிண்றேன்னு எதாது சொல்லி வச்சிராதே. நா என்ன பிஜியா நடத்துறேன்னு அவ கோச்சுக்குவா.” அவளும் அவன் பேச்சை ஏற்றுக் கொண்டவள்போல பதிலளித்தாள். தீவிரநிலையிலிருந்து மீள்வதென்பது அதை எளியப்பேச்சுகளால் கடத்து விடுதலேயாகும்.
அன்றைய கனவில்,  பெண்ணென பெருகி வந்து தான் கையளித்ததை அவன் உணர்ந்து அறிவதே ஆட்டத்தின் வெற்றி என்றாள். அவனோ அதை அவளே உணர்த்த வேண்டுமென்பதாக புரிந்துக் கொண்டான். இரவு இருளாகி அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவள் அசடு வழியுது.. போய் தொடச்சுக்க..” என்பாள் கேலியாக.
அடுத்துவந்த நாட்களும் உலகின் தலையெழுத்தில் மோசமான நாட்களாகவே மாறிக் கொண்டிருந்தன. தொற்றுக்கு மாற்றுமில்லை. மருந்துமில்லை. புழங்கும் கைகளை, நடக்கும் கால்களை, அருகருகே நிற்கும் உடல்களை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்றனர். யாரும் யார் வீடுகளுக்கும் செல்வதில்லை. விலங்குகள் பம்மி பதுங்கி தலை நீட்டின. விரட்டுவோர் யாருமின்றி திகைத்து, பின் தங்கள் பூர்வபூமியை உணர்ந்து, அலையலையாக வெளிவரத் தொடங்க, அதனை மனிதர்கள் பதுங்கியிருந்தபடியே நேரிடையாகவும் காமிரா கண்களின் வழியாகவும் பார்த்தனர். தலைவர்கள் தங்கள் நாடுகள் சுற்றும் அபிலாஷைகளை ஒதுக்கி விட்டு, நிலைமையை கவனிக்கத் தொடங்கினர். முன்பின் அனுபவமின்மையால் செய்வதறியாது குழம்பி, யாருக்கும் புரியாத கட்டளைகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது மட்டுமே எல்லோருக்கும் புரிந்திருந்தது.
அய்யோஇதென்ன கூத்து…? நீ எப்போதான் வருவே…?” என்று திடுக்கிட்டாள் அவள்.
ஆண்டு பலன்களை கணித்து தந்த நிமித்திகர்களையும், சோதிடர்களையும் ஒருசாரார் தேடிக் கொண்டிருக்க, கடவுளர்கள் மனித தொந்தரவின்றி பூட்டிய கதவுகளுக்குள் மோனநிலையில் ஆழ்ந்திருந்தனர்.  அறம் பிறழ்வதே கலியுக அறமென கொண்டு இயங்கிய உலகிற்கு அத்தனை விரைவாக தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை.  முகக்கவச ஊழல், கிருமிநாசினி ஊழல், கையுறை ஊழல் என தொற்று தொடங்கிய அன்றே ஊழல்களும் தொடங்கியிருந்தன. அரசு, இடநகர்தலுக்கென வகுத்து வைத்த காரணிகளான உடல் நலமின்மை, இறப்பு, பிறப்பு, ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் போன்றவற்றுக்கான செயற்கை சான்றிதழ்களை  சரளமாக உற்பத்தி செய்துக் கொண்டிருந்த ஊழ்வணிகத்தின் துணைக்கொண்டு அவன் நகரமுனைந்தபோது, அவன் அலுவலகம் பெங்களுரூவில் முடிக்க வேண்டிய சில பணிகளை அவனிடம் ஏவியதாக அவளிடம் கூறி வருந்தினான்.
பொய்யான காரணங்களோடு மக்கள் நகர்ந்துக் கொண்டிருப்பது பூச்செண்டிற்கு பூச்செண்டு கொடுத்து அழைக்கும் செயல் என்று ஆளும்கட்சிக்கு எதிராக, முகக்கவசமிட்ட முகங்களோடு எதிர்கட்சி வழக்குத் தொடுக்க, நீதிமன்றம், இனி இடநகர்வு அனுமதி பெற வேண்டுமெனில், பிறர் குறுக்கீடின்றி, சம்பந்தப்பட்ட இரு முனையமும் சேர்ந்தாற்போல் இசைவு தெரிவிக்க வேண்டுமென்று ஆணையிட்டது. அதற்கேற்ப விண்ணப்பப்படிவம் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டது. மேலும் இடநகர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ச்சே.. மூவ் ஆகறதுக்கு நல்ல சான்ஸ் கெடைச்சுது.. அப்டி என்னதான் ஒங்க கம்பெனிக்கு அர்ஜென்ட் வொர்க்கோ தலைபோற வொர்க்..? செரி வுடு.. கவர்மெண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுட்டும்மொதவேலையா மைகிரேஷன் பாஸ் அப்ளை பண்ணிட்றேன்.. நீ அக்செப்ட் குடுத்துடு..“ என்றாள் அவனிடம்.
ரொம்ப வருத்தமாருக்குடீ ஒங்க ரெண்டுபேரையும் நெனச்சாஇத்தன நாள் கழிச்சு கௌம்பும்போது இந்த வேலைய முடிச்சிட்டு வா.. அந்த வேலைய முடிச்சிட்டு வான்னு சொன்னா என் அர்த்தம்..” என்று தோழியும் வருந்தினாள்.  
வல்லரசு, வைரஸ்களின் பல்வேறு உருமாறுதல்கள் குறித்து அந்நாட்டில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவ்வுருமாற்ற கிருமிகள் அங்கேயே பாதுகாக்கப்படுவதாகவும் அப்படி பாதுகாக்கப்பட்டு வந்த கிருமிகளில் ஒன்றுதான் இப்பூச்செண்டு என்றும்  இம்மாதிரியான பூச்செண்டுகள் அங்கு நிறைய உண்டு என்றும் அந்நாட்டின் மீது மேலும் குற்றச்சாட்டை எடுத்து வைத்தது. இந்தியாவில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மக்களே விரும்பாத நிலையில், பாதிப்புகளும் பலிகளும் உயர்ந்துக் கொண்டிருந்தாலும்  பொருளாதார சீர்க்கேடுகளை சரிசெய்யும்விதமாக அத்தியாவசியங்களுக்கு தளர்வு அளிக்கும் முடிவுகளையும் இடநகர்வுக்கான தளர்வுகளையும் அரசாங்கம் வெளியிட்டது.
அவள் விறுவிறுப்பாக மடிக்கணினியை எடுத்து, அவன் வருகைக்கான இணைய அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கினாள். சஞ்சு க்விக்.. க்விக்.. என கத்தியது. அதனை அதற்கான சிறு ஊஞ்சலில் ஏற்றி விட, அங்கும் கத்தியது. மேசையின் இழுப்பறை, கொடிக்கயிறு, சன்னல் கம்பிகள் என அதன் விருப்ப இடங்களிலெல்லாம் விட்டபோதும் அது விடாமல் கத்தியது. அதற்கொரு துணை வாங்க வேண்டும். அதற்கு முதலில் வெளியுலக நிலைமை சகஜமாக வேண்டும். அந்நேரம் அவன் காணொலி அழைப்பில் முகம் காட்டினான். “ஹாய்..” என்றான். “பாஸ் அப்ளை பண்ணிட்டுருக்கேன்.. நீ அக்செப்ட் மட்டும் குடுத்துடு..” என்றாள். சஞ்சு மடிக்கணினியில் ஏறி அதன் உச்சியில் நின்றுக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று சத்தமிட்டது. “சஞ்சுவ கூண்டுல விட்டுட்டு நானே லைனுக்கு வர்றேன்..” அவன் இணைப்பை துண்டித்து விட்டு சஞ்சுவை கூண்டில் விட்டபோதுதான் அவன் முகம் பொலிந்து வழிந்திருந்தது சிந்தையிலேறியது. ஒருவேளை அலுவலகமே அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுமோ..? ஒருவேளைஒருவேளைபடபடப்போடு அவனை அழைக்க, அது எடுப்பாரின்றி அடித்து ஓய்ந்தது. மீதமிருந்த ஆன்லைன் விண்ணப்பதை பூர்த்தி செய்து விட்டு, ‘இருதரப்பார் விருப்பம் என்ற இடத்தில் அழுத்தியபோது  அது சுழன்று உள்ளே சென்று, பின் அவனின் மௌனத்தை காரணம்காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியது.
பிறகெப்போதோ நிரூபணமாகும் ரகசியம், அது ரகசியம் என்பதனாலேயே கசிந்திருந்தது. வல்லரசும் அது கைக்காட்டும் நாடுமிணைந்து உலக மொத்த வர்த்தகத்தையும் தங்கள் காலடியில் அமர்த்திக் கொள்ளும் நடவடிக்கையின் பொய்த்த வடிவம்தான் அந்த பூச்செண்டு என்பதும் அவ்விரு நாடுகளும் உலகிற்கு பெருந்துரோகம் இழைத்து விட்டதென்றும், அவை எத்திட்டத்தையும் எக்காலமும் கைவிடப்போவதில்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதென்பது வெற்று திசைதிருப்பல்களே என்பதும் அறிவுஜீவிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
சஞ்சு விடாமல் க்வீக்.. க்வீக்.. என்று கத்திக் கொண்டிருந்தது.
***

 ஜுன் 2020 பதாகையில் வெளியான சிறுகதை





No comments:

Post a Comment