லோத்ர மரங்கள்
நிரம்பிய அந்த மலைச்சரிவின் கிழக்கிலிருந்த அப்பெரும்பாறை அச்சரிவை சற்றே மேலெழுப்பி
உள்நோக்கி வளைத்து குகையொன்றை உருவாக்கியிருந்தது. தவமுனிவர்கள் தங்கவில்லையெனில் அதில்
ஏதேனும் மிருகங்கள் வந்து அடையலாம். அருகிலிருந்த நீரோடை தெளிவான நீரோடு அதிக சலனங்களற்று
நகர்ந்துக் கொண்டிருக்க, அதன் ஒரு மருங்கில் நின்றுக் கொண்டிருந்த பெருமரங்களில் அதன்
உயரத்துக்கே கொடிகள் மேலேறி கீழே விழுதுகளென தொங்கின. வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்த
செடிகள் ஆற்றில் ஒரு வேரும் சேற்றில் ஒரு வேருமாக பரவியிருந்தன. புதர்கள் பூத்திருந்தன.
குகையையொட்டி வேதமுனி ஒருவரின் தவச்சாலையும் சரிவுகளில் ஆங்காங்கே சீடர்களின் குடில்களும்
பரவியிருந்தன. நீர்விளிம்பில் அதன் யாகசாலை அமைந்திருக்க அதன் எதிர்புறம் வனம் அடர்ந்திருந்தது.
குடிலின் மேற்கிலிருந்த அதிக புழக்கமற்ற பாதை அருகாமை சிற்றுார்களை நோக்கி மண்வரிகளாக
ஓடிக் கொண்டிருக்க பொழுதிணைவை வரவேற்பது போல காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
சுஜாதை பசிய சரிவினுாடே
நகர்ந்து வந்த அந்த துவாரடையை பெரிதாக எழாத ஆர்வத்தோடு நோக்கினாள். வனத்தின் தாழ்ந்த
கிளைகளுக்குள் நிழலும் வெயிலுமாக அந்த மனிதரை உருவம் செய்த அந்தி சூரியன் சற்றே மேல்
நகர்ந்து அவர் கண்களில் பளீரிட்டபோது அவளுக்கு மின்னல் வெட்டியது போலிருந்தது. கீரை
கொய்துக் கொண்டிருந்தவள் உறைந்து நின்று விட அவர் அழகிய சிலையொன்று அமைதியாக செல்வது
போல நடந்துக் கொண்டிருந்தார். கைகள் முழங்கால்கள் வரை நீண்டுத் தொங்கின. ஆர்ப்பாட்டமான
அசைவுகளற்ற உடல். தேவையான தொலைவுக்கு மேல் செல்லாத பார்வை, அளவெடுத்தது போன்ற பாதப்பதிவுகள்.
வேகமானதா மெதுவானதா என்றுணரவியலாது பதுமை போன்ற நடை. இது அவர்தானா… அவரேதானா… அல்லது
அவரை பற்றி கோசலம் முதல் மகதம் வரை பேசப்படுவதால் நினைவுகளை இழுத்து தேக்கி அன்று கண்ட
அவ்வுருவை நினைவில் பதித்துக் கொண்டதன் விளைவா? மனம் குழம்பி மீள்வதற்குள் உடல் அவரை
நோக்கி நகர்ந்திருந்தது.
கால்கள் நிற்க
தலையை மட்டும் திருப்பி பார்த்தார்.
“சுஜாதை…?” குரல்
சற்றே சந்தேகத்தோடு இழுப்பட்டது.
“ஆம்…. நீங்கள்…
நீங்கள்… அவர்தானே?”
“ஆமாம்… உருவேலா
வனத்தில் நீ பார்த்த அதே மனிதன்தான்” அவர் மெலிதாக புன்னகைத்தார். பொலிவோடிருந்தது
முகம். ஆனால் அன்று அவர் தோள் வறண்டு வயிறு ஒடுங்கி நிறம் மங்கி புஜங்களும் முதுகும்
உடலுக்குள் அமிழ்ந்து சூம்பிய கால்களுடன் இருந்தார். கன்னங்கள் ஒடுங்கி கண்கள் குழிகளுக்குள்
ஒளிந்திருந்தன. ஆனால் அவை அசாதாரணமானவை. அதையே அவள் அறிவு பொத்தி வைத்திருந்தது.
“நான்… நான்…
இங்கே… உ… உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை. ஆனால் ஆனா… உங்களை நான் மறக்கவேயில்லை”
வியப்பில் அவளுக்கு வாய் குழறியது.
“எப்படி அடையாளம்
கண்டுக் கொண்டாய்?”
“உங்கள் கண்கள்.
அவைதான் நீங்கள் யாரென்றது. அன்று உங்கள் உடலில் ஜீவனோடு இருந்தவை அவை மட்டும்தான்.
ஆனால் அமைதியற்றிருந்தன. அது சோர்வில்லை. தேடல் என்று நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை”
அவள் இயல்புக்கு திரும்பியிருந்தாள்.
“நல்லவேளை… தேடல்
என்று எண்ணியிருந்தால் அன்று எனக்கு பால் பாயசம் கிடைத்திருக்காது. நானும் இந்நேரம்
இருந்திருக்க மாட்டேன்” அழகாக புன்னகைத்தார்.
“தர்மராஜரே… இப்போதும்
அது கிடைக்கலாம், நீங்கள் கொஞ்சம் பொறுத்திருந்தால். வீடு சற்று தொலைவில் தான் உள்ளது”
அவள் தான் வைத்திருந்த கொய்த கீரைகள் நிரம்பிய மரக்கூடையை கீழே வைத்து விட்டு அவரை
நோக்க, “போதும் சுஜாதை. நீ அன்று கொடுத்ததே போதும். பசி என்னை எந்நேரமும் விழுங்கி
விடலாம் என்ற நிலையில் நீ அளித்தது உணவல்ல. உயிர்”
அவள் சற்றே நெகிழ்ந்தவளாக
நின்றிருந்தபோது அவர், வா… வந்து அமர்ந்துக் கொள்” என்றபடியே அங்கிருந்த பாறையில் அமர்ந்துக்
கொண்டார்.
“அய்யா… நீங்கள்
தனியாகவா வந்தீர்கள்?” அவள் எதிரிலிருந்த ஒற்றைப் பாறையில் அமர்ந்துக் கொண்டாள். சூரியன்
அவர்களை சரிவாக நோக்கியது.
“இல்லையம்மா.
உடன் வந்தவர்கள் அருகாமை கிராமங்களுக்கு உணவு பெற்று வர சென்றிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு
முன்பு வந்தோம். அதோ அங்கே பர்ணசாலை அமைத்து
தங்கியிருக்கிறோம். கோசல தேசத்தை நோக்கிச் செல்ல உத்தேசம். பயணத்தின் நடுவே
இந்த இளைப்பாறலை முடித்து விட்டு இரண்டு நாட்களில் கிளம்பலாம் என்று திட்டம்”
“சரிதான். துவராடையோடு
நிறைய பேர் வனங்களிலும் நகரங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதை நானும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.
சிராவஸ்தியிலும் ராஜகிருகத்திலும் இப்போது உங்களை பற்றியே பேச்சாக இருக்கிறது என்கிறார்
என் கணவர். அவர் மகத ராஜ்ஜியத்தின் படைக்கலத்தலைவர். மன்னர் பிம்பிசாரர் எடுக்கும்
பேச்செல்லாம் உங்களில் தொடங்கி உங்களிலேயே முடிவடைகிறதாம். என்றாவது ஒருநாள் உங்களை
சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன். அது நடந்தேறி விட்டது”
”நல்லது பெண்ணே…
நீ சேனாநிகமம் கிராமத்தை சேர்ந்தவள் அல்லவா? இங்கு எப்படி வந்தாய்”
“ஆஷாட மாதத்தில்
நடக்கும் திருவிழாவிற்காக என் உறவினர் இல்லத்துக்கு வந்தேன். அப்படியே இப்பெருவாய்ப்பையும்
அனுபவிக்கிறேன்”
”ஆகா… நான் பாக்கியவான்”
“நானும்தான்”
என்றவள் “அன்று நைரஞ்சரை நதிக்கரையில் உருவேலா வனத்தில் எலும்பும்தோலுமாக உங்களை சந்தித்தபோது
அஜபால விருட்சத்தில் உறையும் யட்சதேவதை என்றே நினைத்துக் கொண்டேன். பிறகெப்போதோ அவர்
சாக்கிய தேசத்து இளவரசர் என்றார்கள். அன்று நம்ப முடியவில்லை. இன்று துவராடை உடுத்தியிருந்தாலும்
உங்களை இளவரசராக பொருத்திக் கொள்வதில் எனக்கு மறுப்பேதுமில்லை ஐயனே” மென்மையாக சிரித்தாள்.
“தோற்றத்தில்
என்னவிருக்கிறது? உள்ளம்தானே அதை நிர்ணயிக்கிறது. சரிதான். இப்போது உன் மகன் வளர்ந்து
விட்டிருப்பானே?”
“ஆமாமாம்… அவன்
உங்களை சந்திக்கும் முன் நான் உங்களை சந்தித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
உங்களை கண்டால் அரசர்களும் தாய்மார்களும் தங்கள் மகன்களை ஒளித்து வைத்துக் கொள்கிறார்களாம்.
நீங்கள் அவர்களை துறவியாக்கி அழைத்துச் சென்று விடுகிறீர்களாம். ஆனால் நான் ஒளித்து
வைக்கப் போவதில்லை. ஒருவேளை என் மகன் உங்களுடன் செல்வதாக கிளம்பி விட்டால் அவன் செல்லுமிடம்
எப்படிப்பட்டது என்று நான் அறிய வேண்டுமல்லவா?”
“அப்படியானால்
நானும் உன் கேள்விகளுக்கு தயாராகி விட்டேன் சுஜாதை. ஒருவகையில் நீ என் தாயாருக்கு சமமானவள்.
பெற்றவளை பார்த்தறியேன். கௌதமிதாய் என்னை வளர்த்தார்கள். நீ உயிர்க் கொடுத்தாய்”
“அத்தனை பெரிய
வார்த்தை வேண்டாம் கௌதமரே. நானில்லை என்றால் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டி வருபவர்களோ
சுள்ளி பொறுக்க வருபவர்களோ கூட தாங்கள் எடுத்து வந்திருக்கும் உணவையோ அங்கிருக்கும்
பழங்களையோ உங்களுக்கு அளித்திருக்க முடியும்”
““நீ நேர்மையானவள்
சுஜாதை”
“நீங்களும்தான்.
கபிலவஸ்துவின் இளவரசர் ஏன் அங்கிருந்து நீங்கினார் என்பதை அறிய நான் ஒருமுறை உங்கள்
கபிலவஸ்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து மீளவே மனமில்லை. மலைமுடிகளைப் போல உயரங்கொண்ட
தேவதாரு மரங்களின் அண்டையில் தாயின் கதகதப்புக்குள் பாதுகாப்பாக வாழும் கோழிக்குஞ்சாய்
இருக்கிறது உங்கள் கபிலவஸ்து. ரோகிணி ஆறு நிலங்களை பசுமையாக்கி வயிறை குளிர வைத்து
விடுகிறது. இனிய தட்பவெப்பம் வேறு. மன்னரின் சீராட்சி. மக்களுக்கு என்ன கவலை? அதனால்தான்
விழாக்களை உருவாக்கி கொண்டாடிக் கொண்டே இருக்கிறீர்கள் போலும். அதிகாலையில் பனிமலையின்
தங்கசிகரங்களை பார்த்தபடியே துயிலெழலாம். அதுவே அந்தியில் சிவந்தும் இரவில் இருளுக்குள்
வரையப்பட்ட கரிய ஓவியமெனவும் திகழ, பனிமலையின் இனிய குளிர்மையில் உறங்கி எழுவதில் எது
உங்களை பிரச்சனைக்குள்ளாக்கியது மாதவரே? அதிலும் நீங்கள் இளவரசர் வேறு. நீங்கள் நினைத்தால்
அடைய முடியாததென்று என்ன இருந்து விட முடியும்?”
“அடையக் கூடியது
என்று நீ எதை சொல்கிறாய் சுஜாதை? அரசதிகாரமும் அடிமை மக்களுமா? பட்டாடைகளும் பருவப்பெண்களுமா?
அல்லது அருசுவை உணவும் பகட்டு வாழ்வுமா?” குரலை உயர்த்தாது வார்த்தைகளை பிசிறின்றி
அழுத்தமாக உச்சரித்தார்.
“அதுதானே இங்கு
எல்லோருடைய பிரார்த்தனைகளாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது அய்யனே”
“அம்மா… என்றாவது
ஒருநாள் அதிகாரம் நீங்கி விடலாம். பகட்டு வாழ்வு முடிந்து விடலாம். பருவப்பெண்கள் முதிர்ச்சிக்
கொள்வர். அடிமை மக்கள் கிளர்ந்தெழுவர். இவையனைத்தையும் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்
இப்போது அனைத்தும் இழந்தோர்களாகி விடுவர் அல்லவா? இழப்பது துயர் என்றால் பெறுவதும்
துயரே”
“அய்யா… அதுதானே
இயற்கை. நீங்கள் மனித சமுதாயத்தின் துக்கம் அனைத்தையும் அகற்றி விட வழி தேடுகிறீர்கள்.
அது எந்த காலத்திலும் எவராலும் இயலாத செயல். முள் ஏன் கூராக இருக்கிறது? பாகல் ஏன்
கசக்கிறது? அவை அதனதன் இயற்கை. தானாக அமைந்தவை. மேலும் இவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து
அதன் நிவாரணத்துக்கான வழிமுறைகளை சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷகம், மீமாம்ஸை, வேதாந்தம்
போன்ற எத்தனையோ சிந்தனைகளும் அவர்களின் தத்துவங்களும் பேசுகின்றனவே? பூரணகஸ்யபரின்
அக்கிரிய வாதம், மக்கலிகோசாலனின் நியதிவாதம், சஞ்சய பேலட்ட புத்தனின் விட்சேப வாதம்,
நிகண்டநாதரின் சாதுர்யாம சம்வரவாதம் அஜிதகேச சம்பலனின் உத்தேசவாதம், பார்சுவமுனிவரின்
கைவல்யம் என சிந்தனைப்பள்ளிகளுக்கு இங்கு குறைவுண்டா என்ன? தவிரவும் இது குறித்து ஞானதர்க்கங்களும்
மேலெழும்பல்களும் நாடெங்கிலும் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கின்றன. இவை அனைத்தையும்
விட்டுவிட்டு நீங்கள் வேறு ஒரு பாதைக்கு இட்டுச் சென்றால் எதை கடைப்பிடிப்பது என்று
மக்கள் குழம்பி விட மாட்டார்களா? அதிலும் வேத மதம் அரசர்களின் பேராதரவு பெற்றிருக்கிறது.
அதன் வேள்விகளையும் சடங்குகளையும் கடைப்பிடிக்காத அரசர்கள் யார் இருக்கின்றனர் இங்கு?”
“ஆனால் அவை மனிதனின்
துயரை போக்கி விடவில்லையே. காமம், பேராசை, வெறுப்பு, துவேஷம் போன்ற இருள்மைகளெல்லாம்
மனதிலிருந்து நீங்காமல் மந்திர தந்திரங்கள், யாகங்கள், உயிர்ப்பலிகள், பிரார்த்தனைகள்
செய்வதால் துயரம் நீங்கி விடுமா? பாவங்களை பரிகாரங்களால் போக்கி விட முடியும் என்ற
போதனை சரியானதுதானா? இவையெல்லாம் நிலையற்ற ஒன்றை நோக்கி செய்யப்படும் திறனற்ற வழிமுறைகள்
என்றே சொல்வேன் நான்”
“ஆனால் அவர்கள்
இன்பமாகதானே வாழுகிறார்கள். நீங்களும் உங்கள் பிக்குகளும்தான் நிலையான வாழிடமின்றி
வண்ணமயமான உடுப்புகளின்றி உணவை கூட இரந்துப் பெற்று உண்ணும் துன்பம் அடைகிறீர்கள்”
”சுஜாதை… நீ கூறும்
அந்த இன்பம் எல்லோருக்கும் பேதமின்றி கிடைக்கிறதா? அடுக்கி வைக்கப்பட்ட ஆசைகளே இங்கு
பிரார்த்தனைகளாக உள்ளன. சிலர் பவித்திரமான உணவினால் புண்ணியம் கிடைத்து விடும் என்கின்றனர்.
அப்படியானால் மான்களே புண்ணியமூர்த்திகள். பாம்புகளை போல காற்றை உள்வாங்கி நாள்கணக்கில்
பட்டினி கிடந்தும் தகிக்கும் அனலிலும் கழுத்தளவு குளிர்ந்த நீரில் மூச்சடக்கி நின்றும்
தவம் செய்கின்றனர். நீருள் மூழ்குவதால் சுவர்க்கம் கிட்டும் என்றால் மீன்களும் தவளைகளும்
சொர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? சடைமுடி தாங்கி வேத கோஷங்களுடன் மந்திர பாராயணம்
செய்வதும் ஓமத்தீ வளர்த்து வழிபாடு நிகழ்த்துவதும் நீரை தெளிப்பதால் மனிதனோ இடமோ புனிதமாகி
விடுவதாக நம்புவதும் எந்த துயரை போக்குவதற்காக?
“புனிதரே… நியமங்கள்
சொல்வது அதைதானே?”
“அதைதான் தவறு
என்கிறேன். அண்டம், பேரண்டம் என்றெல்லாம் சிந்தனை விரிவுக் கொண்டவர்களால் மனிதர்களுக்குள்
எப்படி பேதமிட முடிகிறது? பெரும்சக்தி ஒன்று இருக்கிறது என்று நம்பும்போது அதன் முன்
அனைவரும் ஒருசேர மண்டியிடுவதுதானே சரியான வழிமுறையாக இருக்க முடியும்? ஆனால் வேதமந்திரங்கள்
பாமரனின் காதில் விழுவதே பாவம் என்றல்லவா சொல்லப்படுகிறது? பரிகாரம் என்ற பெயரில் கொலை
வேள்விகளை நடத்துவதென்பது பிள்ளையைக் கொன்று கறி சமைத்து அதன் பெற்றோரை அழைத்து விருந்து
வைப்பதற்கு ஈடானது. பிராணிகளின் உதிரத்தால் யாரும் பரிசுத்தராக முடியாது. அப்படியானால்
கடவுள் என்பவர் யாகங்களில் தரப்படும் கறிச்சோற்றுக்காக காத்துக் கிடக்கும் கையாலாகாதவரா?
அல்லது இது போன்ற வேள்விகளை அனுமதிக்கும் கருணையற்றவரா?”
“கடவுளின் விருப்பத்தை
நீங்கள் அறிந்துக் கொண்டீர்களா புனிதரே?”
“ஒருபோதும் அறியமுடியாத
ஒருவரைப் பற்றி யார்தான் அறிந்திருப்பது? ஆனால் இது குறித்து இங்கு வீண்வாதம் புரிந்து
ஒருவரையொருவர் கொல்லவும் சித்தமாக இருக்கிறார்கள். விந்தைதான். பரிபூரணமான கடவுள் நமக்குத்
தெரிந்த எதனுடனும் தொடர்பு கொள்ள முடியாத ஒன்று என்றால், அந்த ஒன்றைப் புரிந்து கொள்வது
எங்ஙனம்? உலகில் உள்ள எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவையே. தொடர்புபடுத்த முடியாத
எதுவுமே உலகில் இல்லை”
அவர் அவள் அளித்த
சுரைக்குடுவையிலிருந்த நீரை எடுத்துப் பருகினார். அவர் அதனை கையிலேந்திய விதமும் அருந்திய
பாங்கும் அரசக்குலமாந்தர்க்கே உரிய கம்பீரமான தோரணையென தோன்ற அது அவரறியாது அவருள்ளிருக்கும்
பிறப்பின் பதிவு என்றெண்ணிக் கொண்டாள்.
“சுஜாதை. தேன்
மிகவும் இனிப்பானதுதான். ஆனால் அது மற்றவரிடமிருந்து அபகரித்த சேமிப்பல்லவா? அதை விட
ஆற்றில் ஓடும் நீர் அதிக இனிப்பானது. பரிகாரங்களையே இன்பம் என மயங்கி அதிலேயே அமிழ்ந்து
போவதால் நமக்கு தேட வேண்டிய உண்மை இன்பம் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய் விடுகிறது.
அழுக்கு அழுக்கைப் போக்காது. உலகம் முழுவதையும் வென்ற மன்னனுக்கும் தங்குவதற்கு ஒரு
அறை இருந்தால் போதுமல்லவா?”
“அய்யா… இப்படியே
போனால் நீங்கள் நிறைய எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்”
“மானுடசமுதாயம்
எதிர் கொள்ளும் துன்பங்கள்தான் என் எதிரிகளே தவிர, மானுடர் யாருமல்லர் அம்மா”
“சோதரரே… அப்படியானால்
யசோதரை உங்களுக்கு எதிரி இல்லையா?”
அதன் நுணுக்கத்தை
புரிந்துக் கொண்டவராக “தீப்பற்றி எரியும் வீட்டிலிருந்து வெளியேற எண்ணுவது தவறா? என்னால்
இருக்க முடியவில்லை சுஜாதை. போதும்… போதும்… புறப்படு. விழித்துக் கொள் தெளிவு கொள்.
நிலையற்ற அழிந்து போகிற ஐம்புல இன்ப சுகங்களில் மூழ்கி விடாதே. காலம் வீணாகிறது. நிலையாமை
உணர்ந்து நிலையான இன்பம் நாடு. எழு. விழி, விலகு, நட.. என நெருப்பாய் எரிந்தது என்
நெஞ்சம். அதன் மீது பட்டுத்துணிகளைப் போர்த்தி என்ன பயன்? பிறப்பின் மறுமுனை இறப்பு.
பிணி, பசி, மூப்பு, துன்பம் இவைதான் வாழ்க்கை. எல்லா பொருள்களும் மாறி விடுகின்றன.
அழிவை நோக்கி விரைந்து செல்கின்றன. காமக்கனலில் கருகும் சருகு தான் உடல். அது ஆற்றங்கரையோரம்
வளரும் மரம் போன்றது. கணந்தோறும் அலையடிக்கும் நீர் அதன் வேரிலுள்ள மண்ணை கரைந்துக்
கொண்டிருக்கிறது. உடல் மரணம் என்ற பறவை வாழும்
கூடு. புல் நுனி மேல் அமர்ந்திருக்கும் நீர். நிலையற்ற இவ்வாழ்வில் ஆசையில் அமிழ்வதும்
இன்பத்தில் நாட்டம் கொள்வதும் அறிவுடையோருக்கு ஏற்ற செயல் அல்ல”
“ஆனால் இங்கு
அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு ததாகதரே. மாமுனிவர் வசிஷ்டர் அகஷ்மாலாவை போகித்து கபிங்க்லாதனை
பெறுகிறார். மாமன்னர் யயாதி, முதுமை எய்தி உடல் தளர்ந்த பின்பும் அப்ஸர மங்கை விஸ்வாகியை
மோகிக்கவில்லையா? மனைவியைக் கூடினால் மரணம் வரும் என்று தெரிந்தும் மாத்ரியின் அழகில்
பாண்டு மயங்கிப் போகிறாரே?”
“மிக உயர்ந்தவர்கள்
கூட இன்ப ஆசைக்கு இரையானவர்களே என்று நீ கூறுகிறாய். ஆனால் அவர்களும் இறுதியில் அடைந்தது
அழிவைத்தானே? நான் உலகியல் நோக்கை இகழவில்லை சுஜாதை. உலகம் நிலையற்றது என்ற உண்மை என்
நினைவிலிருப்பதால் இதில் என் மனம் இன்பம் காணவில்லை என்கிறேன்”
சூரியன் மேற்கு
நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. உடலைத் தழுவிய இதமான காற்றை அனுபவிப்பவர் போல அவர்
கண்களை மூடி அமர்ந்திருக்க, அவளே பேச்சை முன்னெடுத்தாள்.
“கௌதமரே… இந்த காற்று உங்களுக்கு புதிதல்ல. கபிலவஸ்துவை போல இங்கும் சாகவிருட்சங்கள்
அதிகம். அதனை தொட்டு எழும் இந்த காற்றை நீங்கள் இயற்கையாகவே விரும்புகிறீர்கள்”
”சுஜாதை… ஒன்றறிவாயா?
போர்க்களத்தில் ஆயிரம் பேரை வெல்வதை விட தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதென்பது
மிகவும் கடினமானது”
“புரிகிறது புத்தரே…
ஒழுக்கவிதிகளில் இத்தனை கண்டிப்பு காட்டும் நீங்கள் அடுத்தவர் நலன் மீது கருநிழலென
கவிய உங்களை அனுமதிக்கலாமா? நீங்கள் திருமணத்தை மறுத்திருக்கலாம். அல்லது மணமான பின்
உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருக்கலாம். குறைந்தபட்சம் உங்கள் மனைவியை சிறிதுசிறிதாக
உங்களின் இந்த பிரிவுக்கு பக்குவப்படுத்திவிட்டு காலம் கனிந்ததும் வெளியேறியிருக்கலாம்.
நாமறியாது மரணம் வந்து தழுவுவதை போல அறிந்து ஒரு துயரை நீங்கள் நிகழ்த்தி விட்டு போனது
துரோகம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?”
சற்று மௌனித்து
விட்டு பேசினார். “சுஜாதை… வேள்விச்சாலையிலிருந்து அரணியை எடுத்து வந்து ஈர விறகில்
தீ உண்டாக்க முயன்றால் அதில் தீ தோன்றுமா? அல்லது நன்கு காய்ந்த விறகின் மீது அரணி
கடைந்து அனல் கறந்தெடுத்து மூட்டினால் அது பற்றிக் கொள்ளுமா? விறகின் ஈரம் தான் உடலின்
காமம்”
வானில் பெரும்
பறவையென தோற்றம் உண்டாக்கி பறந்துச் சென்ற பறவைக் கூட்டத்தில் ஏதோவொன்று விலகி விட
உருவம் சிதைந்து அது இணைந்தபின் மீண்டும் உருக் கொண்டு பறந்து கண்களிலிருந்து விலகிச்
சென்றது.
“கூடு அடைய செல்கின்றன
அவை” என்றாள் அவள் எதையோ சொல்லி வைப்பது போல.
“உன் கேள்விகள்
முடிந்து விட்டதா சுஜாதை? எதை யார் கூறியிருப்பினும் எதுவொன்றும் புனிதமல்ல. தங்கத்தை
நெருப்பிலிட்டு பார்ப்பதுபோல அதனை உன் அறிவென்னும் நெருப்பிலிட்டு பகுத்தறிந்த பின்னரே
ஏற்றுக் கொள். ஏனெனில் அறியாமையே அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை”
சற்று நேரம் நிலவிய
மௌனம் இடைவெளியொன்றை உருவாக்க அவர் எழுந்து பர்ணசாலைக்கு செல்ல எத்தனித்தார். சுஜாதையும்
அவருடன் இணைந்துக் கொள்ள விவாதம் இயல்பாக தொடர்ந்தது.
“சரத்காலத்தில்
வயல்களில் தானியக்கதிர்கள் முற்றியிருக்கும்போது உழவன் அவற்றை பறவைகள் அண்டாமல் விரட்டுகிறான்.
கவன்கல் அடித்து கொன்றும் விடுகிறான். போலவே, நானும் காமம், ஆசாபாசம், உலகப்பற்று,
பகைமை உணர்வு, பிறரை துன்புறுத்தும் எண்ணம் போன்றவை என்மனதில் எழாமல் விழிப்புடன் பார்த்துக்
கொள்கிறேன்”
“ஆனால் நீங்கள்
இப்போது உங்கள் மகனையும் விட்டு வைக்கவில்லையே”
“அவன் வாரிசாக
தன் பங்கை கேட்டான். நான் எதைக் கொண்டுள்ளேனோ அதை தானே அவனுக்கு அளிக்க முடியும்? நான்
என்ற அகங்காரத்தை அகற்றாததாலேயே நாம் பந்தங்களில் சிக்கி உழல்கிறோம்”
“ஆன்ம தத்துவத்தை
நீங்கள் மறுக்கிறீர்களா அய்யனே?”
“ஒரு மனிதனானவன்
அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக
இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு
அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது.
மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும்
அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில்
அவ்வாறு பிரிக்க முடியாது. உதாரணமாக நெருப்பில் உள்ள வெப்பத்தை நாம் கருத்தால் பிரித்து
உணரலாம். நடைமுறையில் அப்படி வேறுபடுத்தல் முடியாது. ஆன்மதத்துவமோ குணங்களை பிரித்து
விட்டு பொருளைத் தனியே விட்டு விடலாம் என்கிறது”
“நீங்கள் கூட
தான் காண முடியாத பலனைக் கருதி கண்முன் கிடைக்கும் பயனைக் கைவிட்டு வந்தீர்கள். இது
குறித்து என்றாவது அச்சம் கொண்டதுண்டா?”
”நான் அச்சத்தை
விட்டு என்றோ விலகி விட்டேன் அம்மா. வனங்களில் தனித்து தவமிருந்த காலங்களில் சதுர்த்தசி,
பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி ஆகிய தினங்களின் இரவுகள் கொடிய அச்சமுண்டாக்குபவையாக இருந்தன.
அந்நாளில்தான் துர்தேவதை உபாசனைகள், உயிர்பலி வழிபாடுகளெல்லாம் அங்கு நடக்கும். மரத்தினடியிலும்
மயானபூமியிலும் இரவுகளை கழிக்கும்போது ஒரு இலையோ உலர்ந்த குச்சியோ விழுமோசை கூட பயமுறுத்தும்.
மானோ, குழிமுயலோ அசைவது கூட அச்சமூட்டும். நான் மனதிற்குள்ளேயே, பய அரக்கனை காணவும்
வெல்லவுமே இங்கே வந்துள்ளேன் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வேன். அச்சத்தை வெல்லாதவனால்
அருந்தவங்கள் புரிய முடியாது அல்லவா?”
அவர் சுலபமாக
நடந்தார். பர்ணசாலை வந்திருந்தது.
“மாதவரே… இந்த
பர்ணசாலையை எப்படி அமைத்தீர்கள்?”
“இது சிறுகுடிசை
பெண்ணே… நிழல் தங்கலுக்காக எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். மரத்தோடு இணைத்து
குச்சிகளை நட்டு அங்கே வளர்ந்து கிடக்கும் கொடிகளை அதன் மீது போட்டு விட்டால் போதும்.
தங்கிக் கொள்ள ஏதுவாகிவிடும்.”
“பிறகேன் நகர்புறங்களில்
பிக்குகளுக்காக பெரியளவில் விஹாரைகள் கட்டப்படுகின்றன? நாளையே உங்களை அதில் கடவுளாக்கி
அதில் வேதமந்திரம் கூட ஒலிக்கலாம் அல்லவா?”
“ம்ம்… பெண்கள்
நன்றாக சிந்திக்கத் தெரிந்தவர்கள்”
“அதனால்தான் கேள்விகளும்
எழுகின்றன. மாதவரே… செல்லுமிடமெங்கிலும் இளைஞர்களையும் சிறுவர்களையும் உங்கள் நெறிக்கு
கவர்ந்திழுத்துக் கொள்ளும் உங்களுக்கு அவர்களின் பெற்றோரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும்
என்று தோன்றவில்லையா? அல்லது உங்கள் தகப்பனார் பட்ட துயரை நீங்கள் எல்லா தந்தையருக்கும்
பரவலாக்கும் எண்ணம் கொண்டு விட்டீரா?”
“அம்மா… தவறுகளும்
சரிகளும் மத்திம பார்வைக்குட்பட்டவை. அதை தனிப்பட்ட பார்வை முடிவு செய்து விடாது” அவர்
குடிலின் உள்ளே மெலிதாக எரிந்துக் கொண்டிருந்த விளக்கை துாண்டி விட்டு விட்டு அதன்
தாழ்ந்த வாயிலுக்கேற்ப தலையை குனிந்தவாறு வெளியே வந்தார்.
“பெண்ணே… உன்னை
போலவே மற்றொரு பெண்ணும் நினைவுக் கொள்ளத்தக்கவள். அன்று உடலை வருத்திக் கொள்வதன் மூலம்
ஞானம் பெற்று விடலாம் என்று உபவாச முறைகளை கடைப்பிடித்து உயிரறும் நிலையில் இருந்தேன்.
உருவேலா வனத்தில் உருவில்லாமல் போய் விடுவேனோ என்று தவிப்பும் தத்தளிப்பும் கொண்டேன்.
எழவும் சக்தியற்றிருந்தது தேகம். அந்த கணத்தில்தான் அந்த தேவகீதம் ஒலித்தது. அது அவ்வழியே
வந்த பாணர்குல பெண்ணொருத்தியின் பாடல்.
கட்டாதே… கட்டாதே…
யாழின் நரம்பை வலிந்து கட்டாதே
நரம்பு இற்றுப்
போனால் இசை அற்றுப் போகுமடி…
கட்டாதே.. கட்டாதே…
யாழின் நரம்பை மெலிந்து கட்டாதே
நரம்பு விடைத்து
இயங்காவிட்டால்
இசை அற்றுப் போகுமடி
தோழி
சமன் செய்து முடுக்கிய
நரம்பினில்
சுருதி கூட்டி
மீட்டிட,
இனிய நாதம் பிறக்குமடி
தோழி
யாழினை வாங்கி, நரம்பணைவாய்
யாழின் தந்தியை அதிகம் முடுக்கினால் அறுந்து விடும். தந்தி மிகவும் தளர்ந்தால், நாதமெழாது. வலிவும் மெலிவுமின்றி சமமாக முடுக்கப்படும் தந்திக்கம்பியில்தான் இனிய நாதத்தை எழுப்ப முடியும். இது யாழின் இசை நுட்பம் மட்டுமல்ல. மானுட சரீரத்தின் வாழ்க்கை நுட்பமும் கூட என்பதை அவளிடமிருந்தே அறிந்துக் கொண்டேன். உடலுக்கு உணவு ஈனும் முடிவு செய்தேன். பிறகே உன்னை சந்தித்ததும் நீ அளித்த பாயசத்தை பருகி உயிர் மீண்டதும்” குடிலின் வாசலில் அமர்ந்திருந்த அவரின் தலையை சுற்றிலும் விளக்கொளி சூழ்ந்திருக்க, அதன் நடுவே அவர் பரவசமான உதடுகளோடு பேசினார்.
பந்தலில் வேயப்பட்ட கொடிகளில் பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. காற்று தழுவும்போது அது சுகந்தமெழுப்பியது.
“பொழுது இருட்டி
விட்டதல்லவா?” அவள் கிளம்ப வேண்டியது நினைவுக்கு வந்தவராக கேட்டார். குனிந்ததால்
“சூரியன் சென்று விட்டால் என்ன அய்யனே? மேலே பாருங்கள். ஆஷாட மாதத்து முழுநிலவு. பேதங்களெல்லாம் மனிதர்களுக்குதான். நிலவுக்கு இல்லை. நம்மை போல தத்துவங்கள், சாத்திரங்கள், நியமங்களும் அதற்கில்லை. அதனால்தான் நிலவு தன்னொளியை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வழங்குகிறது. புனிதரே… நீங்கள் கொள்ளும் ஆண் பெண் பேதங்களெல்லாம் கூட அதற்கு கிடையாது”
அவர் அவளை நிமிர்ந்து
நோக்கினார்.
“ஆம் சாக்கியரே…
பெண்கள் நன்றாக சிந்திக்கிறீர்கள் என்கிறீர்கள். பாணத்தி ஒருவளின் கானம் உங்களுக்கு
உண்மையை உணர்த்தியது என்கிறீர்கள். ஆனால் உங்கள் சங்கத்தில் பெண்களுக்கு ஏன் இடமிருப்பதில்லை?”
“சுஜாதை… திடசித்தம்
குன்றும்போது மனிதன் எந்த தவறையும் செய்யத் துணிந்து விடுகிறான். அதற்கு நியாயமும் அவனால் கற்பித்து விட முடியும்” என்றவர்
சற்று நிதானித்து “உனக்கு புரிகிறதல்லவா?” என்றார். “பெண்களும் ஆண்களும் சேர்ந்திருக்கும்
அமைப்பை புறச்சமயிகளால் எளிதாக குறை கூறி விடவும் முடியும்”
“ததாகாதரே… பண்படாத
மானுட உள்ளத்தின் பலவீனத்தை பெண்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் வென்று விட முடியும் என்று
எண்ணுகிறீர்களா? அச்சமறுத்தவர் எதைக் கண்டு அஞ்சுகிறீர்கள்?”
காற்றில் தீபச்சுடர்
படபடத்தது.
தொலைவிலெழுந்த
வெளிச்சப்புள்ளிகள் அருகருகே நகர்ந்து வந்தபோது அவை பிக்குகள் என்றாயின. அவர்கள் ஏந்திய
விளக்கும் எடுத்து வரும் உணவுமாக பர்ணசாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கிளம்ப எத்தனித்து
தன்னிடம் விடை கோரி நின்ற சுஜாதைக்கு அவர் தலையைசைப்பால் விடைக் கொடுக்க அவள் கீரைக்கூடையை
எடுத்துக் கொண்டு சரிவில் இறங்கி கிராமத்தை நோக்கி நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.
ஆஷாடமாதத்து முழுநிலவு
மேலே தவழ்ந்துக் கொண்டிருந்தது. அவர் நோக்கிக் கொண்டிருந்தார். அவர் விழிகள் மூடியிருந்தன.
***
நவம்பர் 2026 காலச்சுவடு
No comments:
Post a Comment