எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை
அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை குருச்சரண்தாஸ்
தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி
கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு
நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில்
இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன்.
பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு
என் குழப்பத்தை கூடுதலாக்கியது.
தனஞ்செய்முகர்ஜியின் பால்யம் கீழ்நடுத்தரவர்க்கத்தின்
பால்யம் போலதான். ஆனால் எங்கோவிருக்கும் வங்காள கிராமம் அது. தனஞ்செயலுக்கு ஒரு அண்ணனும்
தங்கையும் உண்டு. ரகசியமாக காதலையும் காமத்தையும் பரிமாறிக் கொள்ளும் கிராமப்புற வாஞ்சையுடன்
கூடிய பெற்றோர். தனஞ்செய்யின் சிறுவயதிலேயே அவனின் சங்கீதமேதமை தந்தைக்கு புரிந்து
விடுகிறது. மகனை விஷ்ணுகாந்த் ஸாஸ்த்திரியிடம் சங்கீதப்பயிற்சிக்கு சேர்க்கிறார். குரு சீடன் உறவு
தந்தை மகன் உறவாக மாறுவது, அண்ணன் சுப்ரதோ பலகாரக்கடைக்கு வேலைக்கு செல்வது, இவனது
சம்பாத்தியம் குடும்பத்துக்கு அவசியம் என்றாலும் மகனின் ஞானத்திற்கு முன்னுரிமை அளிக்கும்
குடும்பம், கடைக்குட்டியாக தங்கை அபர்ணா இவர்களோடு மனதிற்கு பிடித்தமான இந்துஸ்தானி
இசை பாடகனாக உருவாகி வரும் இளம்பருவத்தில் அவனுக்கு ஸரயு அறிமுகமாகிறாள். காமஉணர்வு
அவனுள் புகுந்துக் கொள்கிறது. ஏற்கனவே தாயுடனான தந்தையின் நெருக்கத்தை சிறுவனாக, தாய்
மட்டுமே உலகமாக, தாயின்றி இருப்பதை கற்பனை செய்யும்போதே வியர்ப்பவனாக இருக்கும் பாலப்பருவத்தில்
பார்த்திருக்கிறான். அவர்களின் கூடல், தாயை அவனிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. மித்தேலி
அத்தையின் நெருக்கம் எழுப்பும் உணர்வை காமத்தின் சிறு பிசிறலாக உணர்கிறான். ஸரயுதான்
காமத்தின் முழுபிம்பமாக காதல் என்ற அழகியலோடு அவனுக்குள் உறைந்துப்போகிறாள்.
கதைக்களம் அந்நியமண்ணிற்குள் நிகழ்வது
சுகமாகவே இருக்கிறது. சாஸ்திரிய சங்கீதத்தை அனுபவித்து ரசிக்கும் மனோபாவம் எல்லோருக்கும்
வாய்த்து விடுவதில்லை. திரையிசைப்பாடல்கள் அதனுள்ளிருந்துதான் எழுவது என்ற சேதியெல்லாம்
செய்திகள்தான். அதை உடலின் சகலபாகங்களும் கரைந்துருகும் (உண்மையான) பாவனைகளோடு அமர்ந்திருப்பவர்களை காணும்போது
அதில் ஏதோ ஒன்றிருப்பதை உணர முடிகிறது. ராகங்களாக வகைப்பிரித்து, அதை ஆலாபிக்கும்போதே
கண்டுணர்ந்து சிலிர்த்து, கண்களில் நீரைக் கொட்டி அவ்விசையை உயிரின் நாதமாக்கி கொள்பவர்களால்,
அவ்விசைக்காக உயிரையும் விட முடிவது சாத்தியமே. தனஞ்செய்க்கு வாய்த்த குரு அப்படியானவர்.
இசையை வணிகப்படுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை. தனஞ்செய்முகர்ஜிக்கு ஏற்கனவே காட்டிய
தடத்தின் வழியே இசையால் பயணிப்பதை விட, புதிதுபுதிதாக இசைநுணுக்கங்களை உருவாக்குவதும்
கிறங்குவதும் பிடித்தமாக இருக்கிறது. அவனுடைய வாழ்வில் ஒரேயொரு மேடையேறும் வாய்ப்பு
ஏற்படுகிறது. முன்னிறுக்கும் அத்தனையும் மறந்து அல்லது இசைக்குள் அனைத்தையும் அடக்கும்
அவனுக்கு வாய்த்த தோழன் குருச்சரண்தாஸ். அவன் மூலமாகதான் சென்னையில் மேடையேறும் வாய்ப்பை
கிடைக்கப் பெறுகிறான்.
குருச்சரண் பணவசதி நிறைந்த தபேலா
கலைஞன். அவர்களுக்கிடையேயான நட்பும் அது விரிந்து செல்லும் போக்கும் இசையாலேயே நிரப்பப்படுகிறது.
அங்கு ஸரயும் வருகிறாள். காஞ்சனாதேவியும் வருகிறார். லட்சணங்கள் பொருந்திய வழவழப்பான
மேனியையுடைய ஸரயுவின் மீதான காமமும் காதலும், குருச்சரணால் அறிமுகப்படுத்தப்படும் காஞ்சனாதேவியுடன்
ஏற்படும் காமத்தொடர்பால் எட்ட முடியவில்லை. ஸரயுவின் வாழ்வு நிம்மதியற்று போனதாக தெரியவரும்போது
குருச்சரண் “இது உண்மையில் உனக்கு சந்தோஷம்தரும் விஷயம்தானே…“ என்கிறான். ஆனால் உண்மையில்
தனஞ்செய்க்கு அது மகிழ்வை தரவில்லை. பிறகு “ஆள் பிடிக்கும் வாழ்வாக“ அவள் வாழ்வு மாறிப்போனதிலோ,
அவள் தனக்கென ஓரிடத்தை சேமித்து வைப்பதையும் பெரிய அதிர்வுகளோ விமர்சனங்களோ இல்லை.
அதீத உணர்ச்சியின் கொந்தளிப்புக் கூட ஸரயுவை இழுத்துக் கொண்டோடும் மனநிலையையோ, அவள்
கணவனை கொன்று பழித்தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தையோ அவனுக்கு ஏற்படுத்துவதில்லை. அதாவது
உயிரிலிருந்து எழும் நாதமாகவே சங்கீதத்தையும் ஸரயுவையும் அவன் கருதுகிறான். இது இரண்டுமே
அவன் திடமாக எண்ணியிருந்தால் சாத்தியப்பட்டிருக்கும் என்பதையும் அவன் உணர்கிறான். ஸரயுவின்
நினைவுகளிலிருந்து மீளவும் முடியவில்லை. மீண்டுவிடும் எண்ணமும் அவனுக்கில்லை. சங்கீதமும்
அப்படியே.
தனக்கு நெருக்கமான ஒவ்வொரு உயிரையும்
வேறொரு மிருகத்தின் சாந்நித்தியம் என்கிறான். அம்மா தானியமணிகள் பொறுக்கித் திரியும்
பெட்டைக்கோழி, அப்பா தனக்கென்று உயரம் எதையும் எட்டமுடியாத இரட்டைவால்குருவி. சுப்ரதோ,
குள்ளநரி. அபர்ணா, தரையில் உட்கார்ந்து கழுத்தை இடவலமாக திருப்பி கோணல்பார்வையுடன்
இரைதேடும் காகம், காஞ்சனாதேவி வேறொரு மிருகம் கொன்றுதின்று மிச்சம் வைத்த இரையை கிழித்து
உண்ணும் கழுதைப்புலி, குருச்சரண்தாஸ் தந்திரமான ஓட்டம் ஓடம் கீரிப்பிள்ளை, மித்தாலி
அத்தை, நெருப்பில் தலைகீழாக பாய்ந்து உயிரை விட்ட மணிப்புறதா, மைனாவதிபாட்டி ஜடாயுக்கிழவி
என்கிறான். தன்னை ஒலியையும் தனிமையையும் தின்று வாழும் புராணிகமிருகம் என்கிறான். ஸரயு
எதுவுமில்லாதவள், அவனை பொறுத்தவரை. அவள்மீது காமம் இருக்கிறது, காதல் இருக்கிறது. ஆனால்
அதை அப்படியே கையகப்படுத்திக் கொள்ளும் தீவிரம் இருப்பதில்லை. வழுவழுப்பான அவளுடல்
கணவனுக்குள் அகப்படுவதை எண்ணிப்பார்ப்பவனுக்கு, அதை குறித்து சொந்தம்கொண்டாடல் உணர்வு
எழுவதில்லை. பிறகு, நினைத்தால் ஸரயுவின் உடல் கிடைத்து விடும் என்ற தருணத்திலும் அதன்
மீது தீவிரத்தன்மை ஏற்படுவதில்லை.
ஆனால் அத்தீவிரம் அவனே உணராமல்
வெவ்வேறு வழிகளில் வெளிப்பட தொடங்குகிறது. தன்னை அரவணைத்துக் கொள்ளும் குருச்சரணின்
நட்பை மூர்க்கமாக விலக்குகிறான். கிறித்துவ கன்னியாஸ்திரியாக தன் தங்கையை பார்க்கும்போது
ஏற்படும் சிறிதான குற்றவுணர்வு அவனை பெற்றோரிடம் சேர்க்கிறது. அங்கு இறக்கும்தருவாயிலிருக்கும்
தந்தை, சூன்யம் பிடித்த வீடு, வயதான தாய் என்ற சூழல்களிலிருந்தும் தன்னிச்சையாக விடுபட்டுக்
கொள்கிறான். பால்யத்தில், அவன் பார்க்க நேர்ந்த நிர்வாண உடல், சுப்ரதோவின் மனைவியாக
இருக்கலாம் என்று கருதுகிறான். அவ்வுடலில் ஸரயு அவ்வளவாக பொருந்தவில்லை. காஞ்சனாதேவியை
தேடி வருகிறான். அவ்விடம் மூடப்படுகிறது. குருச்சரண்தாஸ், நண்பனை விலக்கி விடுகிறான்.
இறுதியாக அறிமுகமாகும் அஸ்லாம்கான் என்பவனின் ஜென் மனோபாவம், தனஞ்செயனை, அப்படியாக
வாழாமல் போனேமே என்று ஏங்க வைக்கிறது. ஏனெனில், அதுதான் அவனின் இயல்பு. அதை கலங்கலாக
உணருகிறான்.
ரயில்நிலையத்தில் பிச்சையெடுக்கும்
மூளைவளர்ச்சிக்குறைந்த பெண்ணின் வாளிப்பான உடல் கையாளப்பட்டு அநாதரவாக கிடக்கும்போது,
அவளை அள்ளியெடுத்து தன் புஜங்களில் படுக்க வைத்துக் கொள்கிறான். சொல்லப்போனால், இரவு
முழுவதும் அவன் பெண்ணுடன் கழித்த ஒரே இரவு அதுவாகதானிருக்கும். ஆனால், பெண்ணொருத்தியின் அருகாமைக்குள் இருந்ததற்கான எந்த உணர்வுமின்றி மறுநாள் விழிக்கிறான்.
தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட ஏதோவொன்றை
இருமியும் செருமியும் வெளியே கொண்டு வரும் உடலின் அனிச்சை செயலைபோல, மனதில் சிக்கிக்
கொண்ட மையத்தின் சுழற்சியை தன்னிலை மறக்கவைக்கும் மதுவின் போதையால் இதுநாள் வரை கடந்தவனுக்கு,
அன்று, அஸ்லாம்கானுடன் நேரத்தை கழிப்பது அதை விட போதையாக இருக்கிறது. ஏனெனில், அதுதான்
அவன். விஷ்ணுகாந்த் சாஸ்திரி, அவனை நான் அனுப்பியிருக்க கூடாது. இங்கிருந்து கிளம்ப
சொன்ன என் பேச்சை மீறியிருக்க வேண்டும் என்றவர் மீண்டும் கூறுகிறார்… ராட்சஷத்தை அடைத்து
வைக்க முடியாதுதானே..? என்கிறார். ஆம்.. அடைத்து வைக்க இயலாமல் அல்லாடும் அவனிடமிருந்து
உயிர் வரை அத்தனையும் தொலைந்து போகிறது.
யுவனின் எழுத்துநடையும், இசையின்
நுட்பம் குறித்த விவரிப்பும், தனஞ்செய்முகர்ஜி என்ற முழுக்கலைஞன் அவ்விசையை எப்படியாக
உட்கொண்டான் என்பது குறித்த களமுமாக நாவல் தொடங்கி, நகர்ந்து, முடிந்த அடுத்த இரண்டு
நாட்களுக்கு அந்நினைவு தவிர வேறேதும் நினைக்கத் தோன்றவில்லை எனக்கு. இது நல்லதொரு நாவலுக்கே
சாத்தியம்.
***
No comments:
Post a Comment