Search This Blog

Sunday 27 October 2019

பட்டாம்பூச்சி


பேசும்புதியசக்தி தீபாவளி மலர் 2019ல் வெளியான சிறுகதை

வானொலியில் உருகிய எஸ்பிபியின் குரலை துவைக்கும்கல்லிருந்து நகர்த்தி விட்டு அதில் துலக்கிபாத்திரங்களை கவிழ்த்து வைத்தேன். அப்பா கிணற்றடிக்கு வந்தபோது வானொலியை எடுத்து வந்து மறந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் பாடல்களை ராகமிட்டு பாடுவார். இப்போது கேட்பதோடு சரி. இப்போது அதுவும் குறைந்திருந்தது. நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைவதில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பாள் அம்மா. சிலசமயங்களில் இதொண்ணுதான் கொறச்ச.. என்பாள்.

மாமரத்தின் நிழலுக்கப்பால் வெயில் வெளுப்பாக வீசிக் கொண்டிருந்தது. சதுரவடிவ கிணற்றின் ஒரு மூலையில் சார்த்தியிருந்த விளக்குமாற்றை எடுத்து தேங்கியிருந்த சோப்பு நீரை கழுவித் தள்ளினேன். முன்பெல்லாம் கூட்டித்தள்ளுவதற்கு லதாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்துவிடும். நீர் செல்லும் பாதை சீராக சரியாமல், வெட்டுண்டது போல இறங்கியதில், நீர் அருவி போல வழிந்தோடியது. அருவிப்பாசனத்தில் செடிகளுக்கு பஞ்சமில்லை. துளசியைக் கிள்ளி வாயிலிட்டுக் கொண்டேன். உதிர்ந்துக்கிடந்த கனகாம்பரபூக்களை கிண்ணத்தில் சேகரித்தேன். வளர்ப்பு சேவல் உடலை நிமிர்த்தி கொண்டையை உயர்த்தி, பிறகு மீண்டும் மண்ணை கிளறத் தொடங்கியது. பூமியை துளைத்து சிறுசிறு புடைப்பாக மேலெழுந்த தக்காளி பாத்தியில் நிலம் அதிராதபடி நீரை தெளித்தேன். குண்டுமல்லியின் மணம் காற்றில் பரவியிருந்தது. பிரதான தெருவிலிருக்கும் பெரிய வீட்டை கடக்கும்போதெல்லாம் இதே மணத்தை அனுபவித்திருக்கிறேன். உண்மையில் நாசிக்கும் வாசனைக்கும் சம்பந்தமில்லையாம். மூளை அதை நாசி வழியே உணர்கிறதாம். பிரத்யேகங்கள் அதனதன் தொடர்புகளோடு  நினைவுகளாகி விடும் போல.




வானெலி பெட்டியை கையில் எடுத்துக் கொண்டேன். அப்பாவை போல லதாவுக்கும் பாடல்கள் கேட்பதில் விருப்பமிருக்கும். ஒருவருட இடைவெளியில் எனக்கு முந்தி பிறந்தவள். எங்களுடையது அரைகுறை நகரம்தான் என்றாலும் மந்திரியின் செல்வாக்கில் இங்கு மகளிர்கல்லுாரி தொடங்கப்பட, எங்கள் வயதிலுள்ள எல்லோருமே பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லுாரிக்கு செல்லத் துவங்கினோம். அப்பா இருசக்கரமோட்டார் வாகனங்களின் பழுதுநீக்கும் கடை சொந்தமாக வைத்திருந்தாலும், எங்களுக்கென்று மோட்டார்வாகனம் ஏதும் வாங்கி தந்ததில்லை. எங்கள் இருவருக்கும் சேர்ந்து ஒரே மிதிவண்டி வேறு. ஒருவர் அழுத்த, ஒருவர் அமருவதுமாக கல்லுாரிக்கு செல்வோம். வகுப்பு முடிந்ததும் நான் பட்டாம்பூச்சியாகி விடுவேன். மிதிவண்டி நிறுத்தத்துக்கு செல்லும்போதே சாலையோரம் எங்களுக்காக திட்டுதிட்டாக காத்திருக்கும் இளைஞர் கும்பலின் மீது என் சிறகின் வண்ணங்கள் ஒட்டிக் கொள்ளும். சிறகுகளை அசைக்கும்போது வண்ணங்கள் சிதையாமல் பார்த்துக் கொள்வேன். அப்பாவுக்கு சாப்பாடு கொண்டுபோகும் நாட்களும் கொண்டாட்டமானவைதான். கடைபையன்ஓடி வந்து பையை வாங்கி கொள்வான். அங்கிருக்கும் இளைஞர்களின் கண்கள் முழுக்க என்னையே பார்த்துக் கொண்டிருக்கக்கூடும். அப்பா எங்கோ தரையில் அமர்ந்து எதாவது ஒரு வண்டியை பிரித்துக் கொண்டே “சரி.. கௌம்பு..“ என்பார் அப்பா. நான் காதில் வாங்காதவள்போல அங்கிருக்கும் மேசையின் உள்ளறையை இழுத்துப் பார்ப்பதுபோல ஏதோவொரு வேலையில் மும்முரமாக ஈடுபடுவேன். அப்பா துப்பட்டாவை சரியாக போட்டிருக்கிறேனா என சோதித்தப்படி நீ கௌம்புங்கறேன்ல.. என்பார் யாருக்கும் காதில்விழாதபடி. நான் அவரிடம் குறும்பாகவும் கொஞ்சலாகவும் பேசும்போது என் குரலிலிருக்கும் செயற்கையை நானே அப்பட்டமாக உணர்ந்தாலும் அவை உறுத்தவதில்லை. படபடக்கும் சிறகுகளில் அவை படியவா போகிறது?

“வேகமா மிதிக்க மாட்ட..?” அதட்டுவாள் லதா. தடதடத்து ஓட்டும்போது மிதிவண்டி மணியை விடாது ஒலிக்கச் செய்வேன். லதா கர்மசிரத்தையாக என்னடீ..? என்பாள். “சனியன்புடிச்சவன்.. வச்ச கண்ணெடுக்காம நம்பளயே பாத்துத் தொலயிறான்..” என்பேன். ”வுட்டுத்தொல..” என்பாள்.

ஆண்களிடம் தொலைவது அழகுதான். மெத்தென்ற உணர்வுகளின் மடியில் அழகாக வீற்றிருக்கும் அதை கனவு என்றுதான் குறிப்பிட வேண்டும். உறக்கம், விழிப்பு என்ற நிலைப்பாடுகளுக்குள் பொருந்திவராத கனவு. அதிலும் சில குறுக்கீடுகள்  இருந்தன. எங்கள் வீடு வரைக்கும் வந்து, அதையும் கடந்து செல்லும் வசந்தி, விழிக்குள் இடும் மை பளிச்சென்று வெளியே தெரியக்கூடிய நிறத்திலிருப்பாள். எக்கி எக்கி சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது அவளுக்கு பின்னால் ஒரு கூட்டம் கிளம்பும். படிப்பெல்லாம் என்னளவு கூட கிடையாது. ஆளும் வளரல.. அறிவும் வளரல என்று வகுப்பில் திட்டு வாங்குவாள். ஆனால் மாரெல்லாம் நன்றாக வளர்ந்திருந்தது. இப்போது நானும் உடலை முன்னுக்குத் தள்ளி பெடலை அழுத்த பழகிக் கொண்டேன்.

எண்ணிக்கையே பத்துக்குள்தான் இருக்கும். அதற்கே தோட்டமெங்கும் குண்டுமல்லியின் மணம் பரவியிருந்தது. கோழிக்குஞ்சுகளை கவிழ்த்து வைத்திருந்த கூடையின் மீது  பாதுகாப்பாக செங்கல்லை துாக்கி வைத்து விட்டு கொல்லைக்கதவின் வழியே முற்றத்துக்கு வந்தேன். உள்பாவாடை ஈரம் நைட்டியில் ஒட்டிக்கொண்டதில் நடக்கும்போது கால்கள் பின்னியது. முற்றத்திலிருந்த பித்தளை செம்பில், பித்தளை அண்டாவிலிருந்த நீரை முகர்ந்து கால்களை கழுவிக் கொண்டபோதுதான் துணிகளை காயப்போடாமல் வந்து விட்டது ஞாபகத்துக்கு வந்தது. மீண்டும் கால்களை மண்ணில் எடுத்து வைக்க அலுப்பு தோன்ற, வானொலியை முற்றத்திலிருக்கும் அதற்கான இடத்தில் வைத்து விட்டு, ஈரக்கால்களை சாக்கில் துடைத்துக் கொண்டேன்.

அம்மா அடுப்படியில் டீ வைத்துக் கொண்டிருந்தாள். பதினோரு மணி டீ. கொஞ்சம் தண்ணீராக, ஏலக்காய் தட்டிப் போட்டு போடுவாள். மூவருக்குமே முழு டம்ளர் அளவுக்கு டீ வேண்டும். அதற்கென்றே ஒரு உருளி இருக்கும். பாலும் நீருமாக கலந்து, டீத்துாளைக் கொட்டி கொதிக்க வைத்தால் போதும். உருளியில் டீ பொங்கி பொங்கி உருளிக்குள்ளேயே அடங்கி விடும். லதா இங்கிருக்கும்வரை இது அவளின் வேலையாக இருந்தது. சமையல் தவிர்த்து எல்லா வேலையையும் அம்மா பகிர்ந்து விட்டிருந்தாள்.

சமையலறையில் அப்பாவின் குரல் கேட்டது.  மதிய உணவு நேரத்திற்கு வருபவர் இன்று சீக்கிரமாக வந்திருந்தார். நான் முற்றத்துக்குள் நுழைவதை கூட கவனிக்காமல் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அசிரத்தையாக கேட்டபோதுதான், அந்த முக்கியமான சேதி காதில் விழுந்தது.

கேசவன் என்னை பெண் கேட்டானாம்.

”எந்த மூஞ்ச வச்சிட்டு கேக்றாங்களாம்..?” அம்மாவின் குரலில் முன்பிருந்த ஆவேசமெல்லாம் இல்லை. அக்காவின் இறப்பின்போது அள்ளி விட்ட சாபங்களையெல்லாம் சமீபநாட்களாக மூப்போ அலுப்போ ஏதோவொன்று வென்றிருந்தது. குரலில் ஆச்சர்யமிருந்தது.

”எனக்கே ஆச்ரியந்தான்.. மொதல்ல எவனோ நக்கல் பண்றான்னு நெனச்சிட்டேன்.. பொறவு மாப்ளையே ஃபோனை வாங்கி பேசினாப்பல.. மாமா.. நா வேணிய கட்டிக்கலாம்னு நெனக்கிறேன்.. ஒங்களுக்கு சம்மதமான்னாரு..” நேற்று வரை மறந்தும் கூட மாப்பிள்ளை என்று இவர் சொல்லவில்லை. மாமா என்று அவர் அழைக்கவில்லை. இந்த சேதிக்கேட்டுதான் அப்பா போட்டதுபோட்டபடி வந்திருக்க வேண்டும். அப்பாவுக்கு அம்மாவின் வார்த்தைகள் முக்கியம்.

”அவருக்கு என்ன பதில் குடுத்தீங்க..?” ஒலி குறைத்துக் கேட்டாள்.

”ஒன்ன கலந்துக்காம என்னான்னு பதில் குடுக்க… அதுக்குள்ள அவரே நீங்க சரீன்னா அண்ணனை கூட்டீக்கிட்டு வீட்டுக்கு வரேன் அப்டீங்கிறாரு..” அம்மா இறந்துவிட்டதால் அண்ணனை அழைத்துக் கொள்கிறார் போல.

கேசவனை கடைசியாக நீதிமன்றத்தில் வைத்து பார்த்தேன்.

அவர் லதாவை பெண் கேட்டு வந்தபோது வீடு உற்சாகமும் எதிர்ப்பார்ப்புமாக அவரை வரவேற்றது. அந்தகாலத்து வீடு. நிழலோட்டமாகவும் காற்றோட்டமாகவும் உள்ளடங்கலாக இருந்த திண்ணைக்கும் சிமிண்ட் பால் வழவழப்போடு தடிமனான ராஜநிலையோடு கூடிய பட்டாசாலைக்குமிடையே அப்பா, தளரா உடலோடு ஓடி ஓடி உபசரித்தார். அம்மாவுக்கும் படபடப்பு அடங்கவில்லை. ”மூத்தவரு கல்யாணம் ஆயி வெளியூர்ல இருக்காப்பல.. இப்பத்திக்கு அம்மாவும் புள்ளயுந்தான்… சொந்த வீடு வேற..” தெரிந்த விஷயத்தையே லதாவுக்காக மீண்டுமொருமுறை சொன்னாள்.

“அந்தம்மாவுக்கும் ஒண்ணும் முடியில… சுகர் முந்நுாத்தம்பது எகிறிடுச்சாம்.. எலயில தேங்காமுட்டாயி வச்சவொடனே எடுத்துடுங்க.. அம்மா சாப்ட மாட்டாங்கன்னு மாப்ள பையன் பதர்னதை கவனிச்சீல்ல..”

நானும் கவனித்தேன். லதா தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தாள். ”நல்லா பாத்துக்கடீ.. ஒங்கக்காரி ஒன்னைதான் யோசனை கேப்பா..” பங்காளிகளுக்கு பிரித்து விட்டதுபோக வாலோடியாய் எஞ்சிய சமையலறையில் அம்மா மெலிசாக சொன்னாள். கேசவன் நல்ல உயரத்திலிருந்தான். அதற்கேற்ப உடல் அகலமாக விரிந்திருந்தது. பரந்த மார்பில் நெகிழும் பெண்ணை கவ்வி அணைத்துக் கொள்ளும் நீண்ட கைகளை முழுக்கைச்சட்டைக்குள் திணித்திருந்தான். தெரிந்த உடல்பாகங்களில் முடி பரவிக்கிடந்தது. விரல்களுக்குள் மிக்ஸரை அள்ளிக் கொண்ட விதம் கூட அழகுதான். எழுந்து நின்று விடைப்பெற்றுக் கொண்டபோது அவர் பார்வை சுழற்றலில் நானும் அகப்பட்டுக் கொண்டேன். அவன் உடலிலிருந்து எழுந்த வாசனைதிரவியத்தின் மல்லிகை மணம் கூடத்தை நிறைத்தது.

அவர்கள் கிளம்பியபிறகும் அம்மா பரபரப்பாகவே இருந்தாள். இந்த சம்மந்தம் நல்லபடியாக திருமணத்தில் முடிய வேண்டுமே என்றிருந்தது அவளுக்கு. தன்னுடைய பிசாத்துப்படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காது என்பதை உணராது வேலைக்கு போயே தீருவேன் என்ற லதாவின் பிடிவாதம் அவளை பயமுறுத்தியிருக்க வேண்டும்.

“அவங்களுக்கு எல்லா கடமையும் முடிஞ்சிடுச்சு… ஒங்கள நீங்க பாத்துக்கிட்டா போதும்…”

லதா பதில்பேசாமல் போர்வையை கழுத்துவரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள்.
“எட்டிப்புடிச்சாப்பல வீடு.. அப்பப்போ ஓடி ஒடியார வசதியா இருக்கும்… கமிட்மெண்ட்டும் ஒண்ணும் பெருசாயில்ல…” அம்மா சொன்னதை அப்பா வழிமொழிந்தார்.

”எங்கம்மாவுக்கு ஸ்வீட் வைக்காதீங்க.. காபில சக்கரை போடாதீங்கன்னு வாய்க்குவாய் அம்மாவை தாங்கறவரு, பின்னால என்னை எப்படி கவனிச்சுக்குவாராம்…?” என்றாள் லதா.

“எல்லா பயலுங்களும் கல்யாணத்துக்கு முன்னாடி அப்டிதான் இருப்பாங்க.. நான் ஒங்கம்மாவ படுத்தாதபாடா..?” என்றார் அப்பா.

”ஒங்க பேச்ச வுடுங்க..” என்றாள் லதா.

அம்மா கேசவனின் நிறைகளை பற்றியும், லதா அவரின் குறைகளை பற்றியும் பேசிக் கொண்டிருந்த அந்த காலைவேளையில் நான் கண்களை இறுக மூடிப் கிடந்தேன். கனவுகள் பட்டாம்பூச்சிகளாக உருபெற்றிருந்தன. தயக்கமற்ற நாணமற்ற கனவுகள். முகமற்ற ஆணுடல்களில் பெண்ணுடல்கள் நெகிழ்ந்துக் கிடந்தன. இதில் ஆச்சர்யம் என்னவெனில், அப்பெண்ணுடல்களில் ஒட்டிக்கிடந்த உடுப்புகள் என் உடுப்புகளையொத்திருந்தன.

அம்மா என்னை தட்டி எழுப்பினாள். திறந்திருந்த சன்னலின்வழியே அறைக்குள் அதிகாலை வெளிச்சம் படரத்தொடங்கியது. பட்டாசாலை சிறியதென்றாலும் நால்வரும் அங்கேயே உறங்குவதுதான் வழக்கம். மாப்பிள்ளைகள் வந்த பிறகு உள்ளறைக்கு குளிரூட்டி போட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அப்பா. என் கணவன் என்னை தொடும்போது விலகி ஓடி அவனுக்கு போக்குக்காட்டி ரசிப்பதற்கு ஏற்ப உள்ளறை சற்று விசாலமானதுதான். என்னை இழுத்துப்பிடித்து கட்டிலுக்கு அழைத்துச் செல்வான்.

“சரி.. ஒம்பேச்சுக்கே வர்றோம்.. சுகர்கார பொம்பள.. எவ்ளோ நாளு தாங்கும்.. அப்றம் பொண்டாட்டியதானே நத்தியாவுணும்…”

அந்த சுகர்கார பொம்பளை அத்தனை லேசான ஆளில்லை என்பது கல்யாணத்துக்கு பிறகுதான் தெரிந்தது. லதாவின் மீது கண்டுபிடித்த அத்தனை குற்றத்துக்கும் பின்னணியில், மகனை விட்டுக் கொடுக்க விரும்பாத அவளின் மூர்க்கத்தனம் தெரிந்தபோது, அதை எதையிட்டு நிரப்புவது என்று தெரியாமல் குழம்பி மீண்டும் அதையே சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். என் திருமணத்துக்கு பிறகு, தங்களின் கடைசிகாலம்வரை லதாவையும் மாப்பிள்ளையையும் தங்களோடு வைத்துக் கொள்ள அவர்களுக்கு விருப்பமிருந்தது. ஆனால் லதாவுக்குதான் கடைசிகாலம் வாலிபத்திலேயே வாய்த்து விட்டது.
 
“டீ சூடு ஆறிட போவுது.. வேணியகூப்டு குடு…” என்றார் அப்பா.

அத்தனை சூட்டையும் உடம்பில் ஏற்றிக் கொண்டு லதா இறந்து போனாள். சமையலறையில் தீ வைத்துக் கொண்டாள். நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக நடக்கும் இந்த நாட்களில் எனக்கு வரன்கள் வருவதும் பிறகு ஏதோ காரணங்களுக்காக தள்ளிப்போவதுமாக இருந்தன. முன்பெல்லாம் கேசவனை குற்றம்சாட்டிய அம்மா, இப்போது லதாவும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறாள். 

”கொல்லைல நாலு பாத்தரம் கெடந்துச்சு.. வெளக்கி எடுத்தாரேன்னு போனா.. வந்து குடிப்பா...“ நான் முற்றத்திலிருப்பதை கூட உணராமல் பேச்சில் ஆழ்ந்திருந்தனர். டீ, டீ என்பதாலேயே குடிக்கத் துாண்டுகிறது. டம்ளருக்குள் நிறைந்துக்கிடப்பதை எவ்வித முன்அனுமானமுமின்றி பார்க்கும்போது அது வெறும்திரவம்தான்.

”வேணிக்கிட்ட பேசிப்பாக்குணும்…” என்றார் அப்பா சன்னமாக.

நாங்கள் இருவருமே வேண்டாம் வேண்டாமென்று, வேண்டாம் வேண்டாமென்று சன்னமாக மிக சன்னமாகவே சொல்லிக் கொள்வோம்.

”மூத்தது மூளைக்கெட்டு போவும்னு நெனச்சுக்கூட பாக்லீங்க.. …” அம்மாவுக்கு லதாவின் நினைப்பு வந்திருக்க வேண்டும். மிக மிக விசனமாக பேசினாள். நான் அன்று வாசனைதிரவியத்தின் மல்லிகை மணத்தை நீரில் கரைத்தபோது என் உடலெங்கும் வண்ணச்சிறகுகள் முளைத்திருந்தன. சன்னமானதையெல்லாம் கேட்கும் திறன் இருப்பவர்களுக்கு மூளையற்றா போய் விடும்…?

அம்மா டீயை வடிக்கட்டி நுரைபொங்க ஆற்றி டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும். ”நீங்களே வேணீட்ட பேசுங்க…” என்றாள் கிசுகிசுப்பாக.

அவர்கள் என்னிடமும் கேசவனின் சாதகங்களை அடுக்கலாம். ஆனால் என்னிடம் கனவேதும் மீதமில்லை என்று சொல்லி விட வேண்டும்.

***





No comments:

Post a Comment