கணையாழி இலக்கியப் போட்டி 2017ல் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்ற கதை.. பிப்ரவரி 2017 கணையாழியில் வெளியானது
வீடு நெட்டுக்கும் திண்ணை ஓடியிருந்தது. ஓடு
வேயப்பட்ட கூரை. மரத்தாலான துாண்கள் கூரையை தாங்கி நின்றன. சிமிண்ட் பால்
திண்ணைக்கு வழவழப்பை கூட்டியிருந்தது. திண்ணையின் இடது ஓரத்தில் ஹாலோபிளாக் கற்களை
படுக்கையாக கிடத்தி விறகுகள் அடுக்கியிருந்தனர். பின்தாழ்வாரத்தில் சமையலெனில் கொல்லைபுறமாகவும்
வந்து உருவிக் கொள்ளலாம். விறகுதுாள்களும் துாசியும் சிமிண்ட் கோடுகளால் உருவான
தாயக்கட்டங்களை மறைத்திருந்தன. வலது திண்ணையில் விரித்தே கிடந்த ஈஸிசேரின் துணி, சட்டகத்தோடு
சேருமிடத்தில் நைந்திருந்தது. சட்டகத்தின் துருவும் அதற்கு காரணமாக இருக்கலாம். வீட்டிலிருக்கும்
நேரங்கள் ராமசாமிக்கு பெரும்பாலும் திண்ணையிலேயே கழிந்து விடும். இரவு சாப்பாட்டுக்கு
பிறகு வயக்காட்டுக்கு கிளம்பினால் மறுநாள் மதிய சாப்பாட்டுக்குதான் வீட்டுக்கு
வருவார், சாயங்காலத்தில்.
இருள் பரவிக் கொண்டிருந்தது. ”கும்பா எடுத்து
வைக்கிட்டுமா..” முன்னுக்கிருந்த பட்டாசாலையிலிருந்து குரல் கொடுத்தாள் அஞ்சலை.
”நாளியாச்சுன்னா எடுத்து வையீ..” என்றார். அவரும் வர மாட்டார். இப்போதைக்கு அஞ்சலையும்
எடுத்து வைக்க மாட்டாள். இருந்தாலும் சம்பிரதாயமான அழைப்பு அது. திண்ணையில் அவரின்
இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளவாக இருக்கலாம். வெளியே செல்வதையும் வீட்டிலிருப்பதையும்
எப்போதுமே சொல்லிக் கொள்ளும் வழக்கமில்லை அவருக்கு.
திண்ணை நல்ல உயரமிருந்தது. கோத்திருந்த கால்களை
விடுவித்துக் கொண்டு குதித்து இறங்கினார் ராமசாமி. பட்டாச்சாலை நீள அகலமாக இருந்தாலும்
பந்தாயம் அதில் பாதியை அடைத்துக் கொள்ளும். அதன் அண்டைக்குள் அடுக்குப் பானைகள்
சுவரில் சாய்க்கப்பட்டிருந்தது. ஒன்று
மேல் ஒன்றாக ஏழெட்டு பானைகள்.. புளி… அடைமாங்காய்.. எலுமிச்சை ஊறுகாய்.. உப்பு கிடராங்கா..
என அவசரத்துக்கு எடுத்து வாயில் போட்டுக் கொள்ள ஏதுவாக.
மொச்சையை உரித்துக் கொண்டிருந்தவள், துண்டை
உதறிப் போடும் சத்தத்தில் எழுந்துக் கொண்டாள். ”ஒக்காருங்க.. எடுத்து வக்கறன்..” காலங்காலமாக
ஒரு வசனம்தான். மாறுவதில்லை. ”ம்ம்ம்..” ஒற்றையாய் முனகி விட்டு முற்றத்துக்கு
சென்றார்.
அஞ்சலைக்கு ஒல்லியான தேகம்தான். என்றாலும் ஒரே
மாதிரியாக அமர்ந்திருந்ததில் கால்கள் பிடித்துக் கொண்டன. மடியிலிருந்த சிதறிய
ரெண்டொரு மொச்சைப் பருப்புகளை பொறுக்கி காகித கூழ் புட்டியில் போட்டாள். உரித்த தோலை
அள்ளி வீட்டுக்கு வெளியே பதித்திருந்த கழுநீர் தொட்டியில் போட்டு விட்டு கால்களை சாக்கில்
அழுத்த துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கணவர் காத்திருக்கும் படபடப்பு
வேலையில் தெரிந்தது. பட்டாசாலைக்கும் முற்றத்துக்கும் இடையிலிருந்த வராண்டாவில்
தடுக்கை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ராமசாமி
”தோ.. வந்துட்டேன்..”. முற்றத்திலிருந்த பித்தளை
அண்டாவில் நீரை முகர்ந்து கைகளை கழுவிக் கொண்டாள். சோற்றுப் பானையை நிமிர்த்தி
அருகிலிருந்த பிரிமனையில் வைத்தாள். இரண்டு பேருக்கு மட்டுமே என்பதால் முற்றத்தின்
ஓரு ஓரத்தில் சோறாக்கிக் கொள்வாள்.
துலக்கி கவிழ்த்திருந்த பித்தளைக் கும்பாவில் அன்னத்தட்டு
நிறைய சோற்றை அள்ளி கணவரிடம் வைத்தாள். அடி கனத்து, குழியாக.. நொடிக்காத கால்களைக்
கொண்ட பித்தளைக் கும்பா புளியின் நேசத்தில் பளபளத்திருந்தது. சூடான புழுங்கலரிசி
சோற்று வாசம் முகத்தில் அப்ப, பதமாக வெந்திருந்த பருக்கையை வெற்றாக வாயிலிட்டுக்
கொண்டார் ராமசாமி. வருத்தமோ.. துக்கமோ வயிற்றுக்கு சோறிடுவது ஒரு கடமை போல
அனிச்சையாக நடக்கும். எப்போதும் தவறுவதில்லை.
”சளி புடிச்சாப்பல இருக்குன்னு ரசங்கூட்டி
வச்சேன்..”
”வேணாம்.. கொழம்பு கொண்டா..” மூங்கில் கூடையில்
கவிழ்த்திருந்த சில்வர் கிண்ணியில் குழம்பை முகர்ந்து ஊற்றிக் கொண்டாள்.
சட்டியிலிருந்த குழம்பு கொடியடுப்பு சூட்டில் வெதுவெதுப்பாக இருந்தது. கத்திரியும்
மொச்சையும் போட்ட புளிக்குழம்பு. காயோடு அள்ளி சோற்றில் ஊற்றினாள். ”காயி போதும்..
அள்ளி வைக்காத..” என்றார். சோற்றுக்கும்பா குட்டிப் போட்டது போல அச்சு அசல் ஒரே
மாதிரியாக.. அளவில் மட்டும் சிறியதாக இருந்தது ‘கடிச்சிக்கா கும்பா’. தரையில்
பரப்பிக் கிடந்த சின்ன வெங்காயங்களில் நாலைந்து எடுத்து நகக்கண்ணால் படபடவென
உரித்து கும்பாவில் இட்டு அவரிடம் நகர்த்தினாள்.
”பெரிசுட்டருந்து போனு எதும் வந்துச்சா..”
என்றாள்.
“இல்ல..“ தலையை மட்டும் அசைத்தார். சாப்பாடு
மௌனமாக உள்ளிறங்கியது. கலகலப்பான பேச்சிருக்காது அவரிடம்.
”ஊமச்சி வூட்ல முருங்கைகா இருந்தா
குடுத்தனுப்புத்தாச்சினாளுவே.. வயக்காட்டு போற தாவல ஒரு நீட்டு நீட்டீட்டு
போறீயளா..?”
”ம்ம்..”
பின்கட்டு தாழ்வாரத்தை ஒட்டியிருந்தது முருங்கை
மரம். கீற்று கூரையும் அரைக்கட்டு சுவருமாக அடுப்படியாகியிருந்தது தாழ்வாரம்.
அகலவாக்கில் போடப்பட்ட மண் அடுப்பு சாண மொழுகலில் பசேலென்றிருந்தது. பச்சரிசி
கோலத்தில் எறும்புகள் மையமிட்டிருந்தன. மகள்கள் வரும் நாட்களில் சமையல் இங்கு
ஜரூர் படும். பின்கட்டு நிலைக்கும் கூரைக்கட்டுக்குமான வாசற்படி இறங்க வாகின்றி அநியாயத்திற்கு
தாழ்ந்திருந்தது. கதவு நிலையை கைக்கு ஆதரவாக பிடித்துக் கொண்டு கீழிறிங்கினாள்
அஞ்சலை. அறுபது வயதிற்கான தள்ளாமை இருக்கதான் செய்தது. புழங்கும் நீரில் பாகலும்
புடலையும் பந்தலில் ஏற்றி விட்டிருந்தாள். சாட்டையாய் தொங்கிய முருங்கைக்காயை
தாரளமாகவே பறிந்துக் கொண்டாள். “புள்ளப் பெத்த வூடு.. பொரிச்ச கொழம்பு வக்கணும்..
என்பது நினைவுக்கு வர வெகு இளசாக நாலைந்து காய்களை பறித்துக் கொண்டாள். புடலையை கூடவே பறித்தாள்.
காய்களோடு உள்ளே நுழையும்போது முற்றத்தில்
நின்றபடி ஈரக்கையை தோள் துண்டில் துடைத்துக் கொண்டிருந்தார் ராமசாமி். கர்ணனுக்கு
கவசக்குண்டலம் போல அவருக்கு துண்டு. சின்ன வயதில் இருவரும் ஓடி விளையாடிய முற்றம்.
ராமசாமிக்கு அப்பாய் வீடு. அஞ்சலைக்கு அம்மாச்சி வீடு. இப்போது இருப்பது போல ராமசாமி
அத்தனை பதவிசு கிடையாது. கல்லாங்கா விளையாடும் போது கல்லை ஒளித்து வைப்பதும்
பாண்டியாட்டத்தில் சில்லிக் கல்லை காலால் எத்தி விட்டு நகர்வதும் சூடு கொட்டையை
உரசி எதிர்பாராத நேரத்தில் சூடிழுப்பதுமாக எப்போதும் வம்புடனேயே இருப்பான்.
திருமணம் கூட இதே முற்றத்தில்தான் நடந்தது.
நிறை நாழி நெல்லை முந்தியில் ஏந்திக் கொண்டு முற்றத்தின் வலது ஓரமாக ஜோடித்து
வைத்திருந்த மணவறைக்குள் வலதுகாலை எடுத்து வைத்தாள் அஞ்சலை. தை மாதம் அது. வீடு
முழுக்க புது நெல் வாசம். நிறை நெல் பரப்பி, ஜமுக்காளம் விரித்திருந்த மனையில் குனிந்து
அமர்ந்து தழைய தழைய தாலிக் கட்டிக் கொண்ட போது ‘போடா கொரங்கு..’ ‘ராமசாமி..கூமசாமி..’
கணவனாகிப் போனான். தோட்டத்து பசுமஞ்சள்
வாசம் கழுத்தில் அப்பிக் கொண்டது போல இரவுகள் அவனுடன் அப்பிப் போனதில் உடலெங்கும்
கதம்ப வாசம். அடுக்கடுக்காக மூன்று பெண் பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகி
விட்டது. மகள்களை சொந்தத்தில் கொடுத்திருந்தாலும் மூத்தவளாலும் இளைய மகளாலும்
பிடுங்கு கொஞ்சம் அதிகம்தான். மாமனாரின் ஆறு ஏக்கர் நிலமும் தனக்கே சேர
வேண்டுமென்ற வகைத்தொகை இல்லாத எண்ணம் அந்த இரண்டு மருமகன்களுக்குமே உண்டு.
ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை உருவி
இடது கையை நுழைத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார். பின்னோடே அஞ்சலையும் நடந்தாள். ”எப்போ
வேணுமாம்..” மனம் அதற்குள்ளேயே இருந்ததால் வார்த்தைகளால் விளக்க
தேவையிருப்பதில்லை.வலதுக் கையை சட்டைக்குள் நுழைத்து உடலை சமன்படுத்தி
கீழிறிருந்து பட்டனை போட்டுக் கொண்டே வந்தார். மேல் இரண்டு பட்டன்கள் எப்போதும்
போடுவதில்லை.
”இப்ப குடுத்தா கூட தான் வாங்கீக்குவாங்க..
நமக்கு தோது வேணாமா..?”
”அத வுடு.. பய எப்ப வெளிநாடு போவுணுமாம்..”
”இந்த மாச கடசீலன்னு சொன்னா.. பெத்தவனுக்கு
புள்ளைய வளக்க தோது வாய்க்காதா.. அத கொண்டா இத கொண்டான்னு பொளுதன்னிக்கும்..
இப்டியெல்லாம் வளத்தா நாய்பேய் கூட புள்ள வளத்துடும்..” சலித்துக் கொண்டாள்.
சலவை வேட்டி சட்டையோடு எடுபுடி.. கைத்தடி என
அரசியல் ஆட்களை தொற்றிக் கொண்டு திரியும் மூத்த மருமகனின் போக்கு ராமசாமிக்கும்
அஞ்சலைக்கு பிடிப்பதில்லை. மகன் வெளிநாடு செல்ல
வேண்டுமாம். அதற்கு இரண்டு லட்சம் தேவைப்படும் என்று மூத்த மகள் ஒரு வாரமாக பாடம்
படித்துக் கொண்டிருந்தாள்.
ராமசாமி பதிலேதும் பேசவில்லை. மூத்தவளின் மூத்த
வாரிசு. ஒரு தலைமுறையாக ஆண் வாரிசு விளையாடாத வீட்டில் முதல் பேரனாக பிறந்தவன்.
போட்ட இடத்தில் துணியை நனைக்கும் மகள்களையே பார்த்தவர்களுக்கு, குழந்தை எங்கோ
படுத்திருக்க, எங்கோ துணி நனைத்து விடும் பேரன் புது உலகமாகவே தெரிந்தான். மூன்று
மகள்களின் வழியே எட்டு பேர பிள்ளைகள் இருந்தாலும் மூத்த பேரன் மாணிக்கத்துக்கு
கூடுதல் செல்லமும் சலுகையும் இயல்பாகவே இருந்தது.
“வெறுசால்லாம் எனக்கு தர வேணாம்.. எனக்குன்னு
பங்குபாவனை பிரியும்போது கழிச்சுக்கறதுதான்..” நிமிடத்துக்கு ஒருமுறை போன் போட்டு பெரிய
மனசுக்காரி போல பேசினாள் பெரியவள். திருமணத்தின் போது பத்து பவுன் வந்தாலே ஆச்சு
என்று கறார் காட்டிய மாமியாரிடமிருந்து இப்படி சூழ்ச்சியாக பேச கற்றிருக்கலாம். அதற்கு
குறைவாக போட ராமசாமிக்கும் வெட்கமாகதான் இருந்தது. அறுபது பவுனிருக்கும்.. கணக்கு
வழக்கில்லை.. அஞ்சலைக்கு போட்டனுப்பியது. அதை பத்திரப்படுத்தியிருந்தால் மூன்று
பெண்களுக்கும் நிரவியிருக்கலாம். “வொழவுக்காரன் பொளப்ப நம்பி என்னாத்த..“ வெளிறி
போனது மனம்.
”அத்தாச்சி குடுத்து வுட்டுச்சா..?” வயக்காட்டுக்கு
போகும் வழியில் ஊமைச்சி வீட்டு பெண்ணே நினைவுப்படுத்தி காய்களை வாங்கிக் கொண்டது.
ஐந்து நிமிட நடை துாரத்திலிருந்தது வயக்காடு. சட்டையை
கழற்றி மோட்டார் ரூமிலிருந்த கொடியில் வீசினார். கொடியில் பழந்துணிகள்.. வாழை
நார்.. கயிறு.. என ஏதேதோ தொங்கிக் கொண்டிருந்தது. கனகாம்பரம் பூக்கள் காற்றில்
பறந்து கிடந்தன. அஞ்சலை பறித்து வைத்து விட்டு எடுக்க மறந்திருப்பாள். கயிற்று
கட்டிலின் ஓரமாக தண்ணீர் பானையும் டம்ளரும் இருந்தது. பழைய லாந்தர் கூடாய்
தொங்கிக் கொண்டிருந்தது. ஒயரின் நுனியில் தொங்கிய மின்விசையை அழுத்த, குண்டு பல்பு
ஒளிர்ந்து மஞ்சள் வெளிச்சம் காட்டியது.. வலது ஓரமாக மோட்டார் விசுவாச நாய்க்குட்டியாக பம்மிக்
கிடந்தது. அதில் ஆயுத பூசையன்று சூட்டிய வாடிய கதம்பத் துண்டோடு துாசியும் துருவும் மண்டியிருந்தது.
நடுநாயகமாக கிடந்தது கயிற்றுக்கட்டில். அதன் தொய்வை பழைய சமுக்காளத்தை போட்டு ஈடுக்கட்டியிருந்தார்.
பள்ளத்துக்குள் முதுகு விழுந்து வலியெடுத்து விடுகிறது. இறுகலான தலையணையும் அதன்
மீது மடித்தவாகில் கம்பளியும் இருந்தது. கொசுவர்த்தி சுருளின் சாம்பலை காலால்
எத்தி விட்டு விட்டு கதவில்லாத.. அறை போலிருந்த கட்டடத்திலிருந்து வெளியே வந்தார்.
அவரின் நடைக்கு வரப்பிலிருந்த புற்கள் மசிந்து
மசிந்து நிமிர்ந்தது. நிலவு ஒளிப்பாய்ச்சிக் கொண்டிருந்தது. ‘இந்த போவம் ஏமாத்தாம
இருக்கணும்..’ அவர் எண்ணத்தை அவரே நம்பவில்லை. பூமி வெடிப்புக் காட்ட தொடங்குது..
வய ஏமாத்திப்புடுச்சுன்னா தலையெடுப்பு கஸ்டந்தான்.. பேரன் காசு கேக்றான்.. சின்னவ
மக சமயற நேரம்.. பட்டுசீல சாங்கியம் செய்ணும்.. அதுங்குள்ள மூத்தது வேற எதாது
இளுத்து கொண்டாராம இருக்கணும்.. நடுள்ளது எதிலும் பட்டுக்காம ஒதுங்கி கெடக்கு..
எப்டி இருக்கோ.. என்ன பாழோ..? அஞ்சலைக்கும் நடுவுள்ளவள் மீது வாஞ்சையாக இருக்கும்.
”வாயுள்ள புள்ள பொளக்கும்பாவ.. இந்த நடுள்ளது என்னமா இருக்குன்ணே தெர்ல.. போய் ஒரு
எட்டு பாத்துட்டு வர்லாம் வாரீங்களா..?” என்பாள்
”ஆமா.. வயக்காரன் பொழப்ப புரியாதவளாட்டம் பேசற…
அந்த களுதையாது போனு பண்ணி வெசாரிக்குதா..? நல்லாருக்கேன்னு வார போற மக்கட்டவாது
சேதி சொல்லி வுடுளாமில்ல..” என்பார்.
”என்னத்த சொன்னா.. இத சொல்றதுக்கு.. கொறை அம்புட்டையும்
மனசுக்குள்ள பொதச்சுக்கிட்டு கெடக்கா.. பாவம்.. அமதியான புள்ளய பொதாருக்குள்ள
தள்ளி வுட்டமேரி வுட்டுட்டோம். கைக்கும்
இல்லாம வாயிக்கும் இல்லாம என்னா பாடு படுதோ.. இந்த எடம் வேணாம்னேன்.. நம்ப பேச்ச
கேக்கறதாரு.. வெள்ளையும் சொள்ளையுமா வந்துட்டாலே ஆம்பளன்னு முடுவு பண்ணீற்றது.. அப்பன்
சொல்றாங்கன்னு மறு வாருத்த பேசாம கட்டிக்கிட்டா.. காலன் வந்தா நாம போயி
சேந்துருவோம்.. அந்த புள்ளதான் பாவம்..”
”ஏன்.. ஒன் கண்ண கட்டி காட்டுல வீசீட்டாவளா..?
அந்த எடம் வேணாம்னு ஒத்தைக்கு நின்னுருக்குணும்.. ஒம் பேச்ச மீறி செஞ்சுடுவமா..
பொட்டச்சிங்க புத்தியே பின் புத்திதான்.. முன்ன வர மாட்டாளுவ.. அப்றம்
நொன்னாலதான்.. நொன்னாலதான்னு பெலாக்கணம் வக்கறது..” கடுப்படித்தார். மனைவியை அடக்கி
விட்டாலும் அவருக்கும் நியாயம் தெரிந்திருந்தது. கல்யாணம் காட்சி என்று எங்கு
கண்டாலும் ”புள்ளங்களுக்கு செலவுக்கு வச்சுக்க..” என்று மடிப்பாக நோட்டை நடுள்ளவளின்
கையில் அழுத்துவார். வரவர அதற்கும் வழியில்லாமல் போகிறது.
காலில் தட்டுப்பட்ட மண்வெட்டி அறுத்துக்
கொண்டிருந்த மனதை நிதானத்துக்கு இழுக்க.. ‘அண்டை வெட்டீட்டு அப்டியே போட்டுட்டன்
போலருக்கு..’ நகர்த்தி மரத்தோரம் சாய்த்து வைத்தார்.
ஆனால் இந்த போகம் ஆரம்பித்திலிருந்தே நல்ல
சகுனங்களும் கூடி வந்திருந்தன. புதிதாக வைத்த தென்னம்பிள்ளையில் பாளை வெடித்து பூ
வைத்திருந்தது. அங்கேயே அடுப்புக் கூட்டி பொங்கல் வைத்தாள் அஞ்சலை. சூடம் காட்டி உடைத்த
தேங்காயில் பூ விழுந்திருந்தது. மழையும் கூடி வந்ததில், மனித உழைப்பை உழுத பூமி
பொதபொதப்பாக காட்டியது. “இந்த மொற கேரளக்காரனுங்க பைனான்சுல வாங்குன பணத்த
அடச்சிடுலாம்..“ நம்பிக்கையோடுதான் இருந்தார்.
அதே நம்பிக்கையில்தான் நாத்து நடவுக்கு ஆள்
சொல்லியனுப்பியிருந்தார். இப்போதெல்லாம் விவசாயக் கூலிக்கு ஆள் கிடைப்பது அரிது.
வழக்கமான கூலியாட்கள் என்றால் நம்பி விடலாம். இல்லையென்றால் வடைக்கும் டீக்கும்
அலையும் நேரத்தில் ஆண்கள் டாஸ்மாக்கு கிளம்பினாலும் கிளம்பி விடுவார்கள்.
பெண்களும் நடுநடுவே உட்கார தோது பார்க்கிறார்கள். நுாறு நாள் வேலை திட்டத்தில்
பழகிக் கொண்டது. ராமசாமிக்கு அதிகமாக கோபம் வராது. ‘இவங்கள அல்லக்கட்டி நாத்து
வுடுறதே பெரும்பாடுதான்..’ அவரையும் மீறிதான் அன்று சத்தம் எழுப்பினார்..
”இதொண்ணும் ஏரி வெட்ற வேலல்ல.. இல்லாததுக்கு கணக்கு காட்ட.. கூலிக்கு பளுதாயி
போச்சுன்னா சும்மா வுடுவீயளா..?”
நினைவுகளை நீக்கி நெல் அடம்பியிருந்த வயலை
வெற்றாக பார்த்தார். பயிர் நட்டு நாற்பது நாட்களாகியிருந்தது. வெள்ளாமையாகி
வூட்டுக்கு வந்தாதான் நெசம்.. கடவுளே.. நல்ல மனுசந்தான் அந்த மருந்து கடை ஆளு..
மனுச டாக்டரு மாதிரி.. மாட்டு டாக்டர் மாதிரி.. பயிரு டாக்டர்.. வயக்காட்ட வந்து
பாத்து மருந்து குடுத்துட்டு போனாரு.. அதுவும் கடனுக்கு.. அவரு கடனெல்லாம் கந்து
வட்டி ரேஞ்சுக்குன்னு சொல்லிக்கிறாவோ.. என்னன்னு தெரியில.. ஆறு ஏக்கர் நெலத்து மேல
எத்தனை சொமயதான் ஏத்தறது.. மனுசங்க பண்ண வேண்டிய அம்புட்டு வேலயும் முடிச்சாச்சு..
இப்டியே வுட்டா நெலம் பாளம் பாளமாக போயி பயிர் காஞ்சுடும்.. இனிம டேம்காரனும்
மகமாயிந்தான் மனசு வக்கணும்..“ வாய் விட்டு புலம்பினார். “இந்த வேண்டாத பொழப்ப
நம்பளோடு முளுவிப்புடுணும்.. மாணிக்கம் பயல வெளிநாட்டுக்கு அனுப்பறதுதான் சரி..
பொறுப்புக் கெட்ட அப்பனுக்கு பொறந்த பய.. கைத்துாக்கி வுட்டாதான் தாவல..”
புலம்பலோடு புலம்பலாக முடிவும் எடுத்துக் கொண்டார்..
”என்ன மாமா வெசனா குந்தியிருக்க..?” விசாரித்தபடியே
படலை திறந்தான் சோமன். பக்கத்துக்காட்டுக்காரன். மச்சினன் முறையாக வேண்டும்.
“குடியானவனுக்கு வெசனம் சொல்லீட்டா வரும்.. பொழப்பு
நெனச்சுதான் பொங்கி கெடக்கேன்.. பெருசு பொறந்தாவுல வூடு கட்ட வாச்சுது.. இப்ப அந்த
புள்ளயே வூட்ட தொடச்சிடுணும் போல..”
”இப்ப என்ன வேணுமாம்.. ஒன் பெரிய மருமானுக்கு..?”
”ம்ம்.. என்ன வேணாம்பான்.. மவன் பாரீனு போவுணுமாம்..
ரெண்டு லச்சம் பணம் கொண்டாங்கறான்.. வச்சீட்டா வஞ்சன பண்றன்.. பயிரு
எந்திரிக்கக்குள்ள உயிரு போயிருது.. ரெண்டு வருசமாச்சு.. அடமானம் வச்சத மூட்ட
முடியில.. அது இருந்தா கூட இந்தான்னு குடுத்துருவேன்..”
”வெவசாய வூட்ல அடமானத்துக்குன்னு இருக்கற ஒத்த பொருள்
பொம்பளையாளுங்க களுத்து சங்கிலிதான்..அதயும் குடுப்பேங்கிற..”
”வேற என்னத்த பண்றது..? மூணும் பொட்டப்புள்ளீவளாயிடுச்சே..
மருமவன் மவனா வருவான்னு நாம ஒண்ணு நெனக்கோம்.. ஆம்பளப்பய இல்லாத சொத்து..
ஆளுக்கொரு கையி அள்ளுலாம்னு அவனுங்க வேற கணக்கு போடுறானுங்க.. அதுக்காவ பேரப்பயல
வுட்டுற முடியாது.. அப்பன்தான் நாதாறியாபுட்டான்.. இவனாது வௌங்கி வர்ணும்.. அதான் வோசனையாருக்கு..”
”அதெல்லாம் சரியாப்புடும்.. நீ மனச கெடுத்துக்காத..
ஒன்ன வுட்டா அக்காளுக்கு ஆரு இருக்கா.. மரம் வெச்சவன் தண்ணீ ஊத்தாமயா போவான்..?”
”ஊத்துவான்.. ஊத்துவான்..
சொன்னவன் கைல சிக்குனா வௌக்குமாறு பிஞ்சு போவும்..”
”மாமா.. துாளு.. வெசனத்துல
கூட விட்டடிக்கிற..” வாய் விட்டு சிரித்தான். ”செரி..நீ படு.. நா கௌம்பறன்..”
”படல மூடி வுட்டு போய்யா..
மாடு நொழஞ்சுடும்..”
கயிற்றுக்கட்டில் அவரை
உள் வாங்கிக் கொண்டாலும் துாக்கம் அத்தனை லேசில் அணுகவில்லை. வெள்ளி முளைத்ததை கூட
கண்டதாக ஞாபகம். வெயில் முகத்தில் சுள்ளிட்டது தெரியாமல் உடம்பு அசந்திருந்தது.
போன் அழைத்தது. அனிச்சையாக
காதில் வைத்து அலோ என்றார். குரல் கரகரத்திருந்தது.
”ஏம்ப்பா.. மேலுக்கு முடியிலயா.?”
பெரிய மகள்தான் அழைத்திருந்தாள்.
”இல்லய்யா.. நல்லாதான்
இருக்கன்.. நீ எப்படி ஆயி இருக்க..?”
”என்னத்த நல்லாருக்கன்..
எப்ப பாரு பெரச்சனதான்.. அப்பனுக்கும் மவனுக்கும் நடுல கெடந்து நா அல்லாடுறன்.. நீ
எப்டில்லாம் வளத்தே.. சீப்பட்டு கெடக்கன்ப்பா..”
எழுந்து உட்கார்ந்துக்
கொண்டார். ”ஏன் ஆயி.. ரொம்ப பெசகா..?” குரல் கனிந்திருந்தது.
”என்னத்த சொல்ல.. மனசொண்ணும் நல்லால்லப்பா..
வெள்ளிக்கெழமை காலைல மொத வண்டில வாரேன்.. அம்மாட்ட சொல்லிடு..”
“சரி
ஆயீ.. மாமா வருதுல்ல ஒங்கோட..”
”இன்னும்
சின்னப்புள்ள பாரு.. மாணிக்கந்தான் தாத்தார பாக்கணும்.. நானும் வாரேன்னா..”
”வருட்டும்..
வருட்டும்.. சின்னது கண்ணுக்குள்ளயே நிக்குதாயீ..” பதினான்கு வயது பேத்தியின்
பேச்சு அவரை சுண்டியிழுக்கும். அவரின் மீசையை இழுப்பதும் தோள் துண்டை உருவுவதுமாக
விளையாட்டு பெண்ணாக இருப்பாள்.
”ப்பா..
அவளயும் கூட்டியாந்துட்டா அவருக்கு சோறாக்கி போட ஆளு..?”
”செரி..
பதனமா வந்து சேரு.. ஒங்காயிட்ட சொல்றன்..” அலைபேசியை வேட்டியில் முடிந்துக்
கொண்டார். நல்லவேளை.. மருமகன் வரவில்லை. “பொண்ணொடுத்த வீடுன்னா செய்முறை வந்துட்டே
இருக்குணும்னு பதிஞ்சு வச்சிருப்பாராக்கும்..” என்பாள் அஞ்சலை. சென்ற முறை உறையில்
மூடிக் கிடந்த இலவச கிரைண்டரில் மூத்தவளின் கண் ஓடியது. கணவன் சொல்லியனுப்பி
இருப்பான்.
”ஒன்
தங்கச்சிங்கள ஒரு வாருத்த கேட்டுக்கறண்டீ..” என்றாள் அஞ்சலை.
”ஆமா..
நீ அங்குட்டும் இங்குட்டும் பணத்த பொரட்டி வாங்குனது பாரு.. எலவசமா வந்தத ஏளு
பேருட்ட கேளேன்..” தாயை நக்கலடித்தாள்.
ஆனால் அஞ்சலை சொன்னது போல சின்னவள் கோபப்பட அவளுக்கு மிக்சியை துாக்கி
கொடுத்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ”நீங்க ரெண்டு பேருந்தா இந்த வூட்ல
பொறந்தவளுங்க பாரு..” முனகிக் கொண்டாள்.
”இது
பரவால்லடீ.. வெவசாய வூட்ல பந்தாயத்த குடுன்னு வெறும்பய கூட கேக்க மாட்டான்..” இந்த
முறை ராமசாமிக்கும் கோபம் வந்தது.
”ஆமா..
மூணு போவம் வௌஞ்சு பந்தாயத்த ரொப்பிப்புட்டுதான் மத்த வேலை..”
அவன்
சொன்னதும் உண்மைதானே என்று எண்ணிக் கொண்டார்.
சென்ற முறையும் இதே
நிலைமைதான். மத்திய அரசு ஆய்வுக் குழுவை அனுப்பியது. ஐந்து லட்சம் ஏக்கர்
குறுவை சாகுபடியும் ஏறத்தாழ பதினைந்து லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் வறட்சியால்
அழிந்து போனதாக அறிக்கை வெளியிட்டது அந்த குழு. ஆனால் வறட்சி நிவாரணம் எதுவும்
வழங்கப்படுவதாக அறிவிப்பு எதும் வரவில்லை. கடன் தலைக்கேறியதில் மூன்று விவசாயிகள்
தற்கொலை செய்துக் கொண்ட பிறகு தான் விவசாய சங்கம் போராட்டத்தை அறிவித்தது. விவசாய
கடனை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மணலுக்குள் உடல் வரை புதைத்துக்
கொள்வது.. தலையை மொட்டையடித்துக் கொள்வது.. நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வது..
நெல் செடியை பாடையில் துாக்கிப் போவது.. என போராட்டங்கள் நுாதனமாக இருந்ததில்
ராமசாமிக்கு கலந்துக் கொள்ள விருப்பமில்லாமல் போனது. ஆனால் ஊர்வலத்தில் முழுக்கவும் கலந்துக் கொண்டார்.
‘மத்திய அரசு கண்டுக்கலேன்னாலும் மாநில அரசு கண்டுக்கும்..’ என்றார்கள். ”பேங்கு
கடன தள்ளுபடி பண்ணுலாம்னு இருக்காங்களாம்..’ “ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு நேர்மாறான
ஆளுங்ககிறதால ஒருத்தன் வேணாம்னா ஒருத்தன் வீ்ம்புக்குன்ன செஞ்சுடுவான்..’. என்று
கூட சொன்னார்கள். கடைசியில் யாராவது எட்டிப் பார்க்க மாட்டார்களா என
தவுதாயப்பட்டார்கள். கடைசியில் மொட்டை போட்ட காசும், பானை வாங்கின காசும்
போக்குவரத்து செலவோடு செலவு கணக்கில் ஏற்றி விட்டு மழையை பார்த்ததும் புது
நம்பிக்கையில் முகம் பூரித்தார்கள்.
சொல்லியது போல வெள்ளிக்கிழமை முதல் வண்டிக்கு
வந்து சேர்ந்தாள் மூத்தவள். கூடவே மருமகனும் வந்திருந்தான்.
“மாணிக்கம் வர்ல..” என்றார் ஆதங்கமாய்.
”எம்மெல்ஏ ஆபிசு வரைக்கும் அனுப்பி வுட்டேன்.”
என்றான் மருமகன் முந்திக் கொண்டு. வீடு தங்குவதில்லை அவன். வேம்படி கோவில்
திட்டில் மாப்பிள்ளை கித்தாய்ப்பில் உட்கார்ந்துக் கொண்டால் விட்ட தொட்ட கதை
முழுக்க காதுக்கு வந்து விடும்.
”பாப்பளாயாது கூட்டுட்டு வந்துருக்கலாமில்ல..”
என்றாள் அஞ்சலை.
வயக்காட்டு பக்கம் நழுவியவரை ”எப்பா நாளு
நெருங்கிடுச்சு.. எதாது தேருமா இல்ல.. பையன அப்டியே தெராட்டுல வுட்டுருலாமான்னு
கோவப்படுறாருப்பா..” என்றாள் மூத்தவள்.
”ஒன்னை தெராட்டுல வுட்டாதாம்மா தப்பு.. ஒம் பயல
நீங்கதான பாத்துக்குணும்..“ வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டார்
ராமசாமி. ஆனால் அஞ்சலையால் அப்படி இருக்க இயலவில்லை.
”ஏ.. வந்ததும் வராததுமான அந்த மனுசன
நொம்பெடுக்கற.. மொதல்ல சோத்தை தின்னு.. அப்றம் பேசிக்குவம்..”
”ம்க்கும்.. அப்றம் மட்டும் முடிஞ்சு
வச்சிருக்கியாக்கும்..”
”தெரியுதுல்ல.. அப்றம் ஏந்தாயீ அந்த மனுசன
நொச்சுற..?”
”எம்மா.. நா என்னம்மா செய்யிட்டும்.. எதாது
சொன்னா இவரு ஒன் பங்குபாவனைய பிரிச்சுட்டு வாடீன்னு கத்துறாரு..
”இந்த வாட்டீ எல்லாம் சரியா போவும்ணு
நெனச்சம்மா.. நெனச்சதெல்லாம் நடந்துருச்சின்னா சாமிய என்னா சேதிங்க மாட்டோம்..?”
என்றார் தன்மையாக.
”நல்லா பேசறப்பா.. வெளையாத நெலத்து மேல போடற
காச தான் ஒன் பேரப்பயலுக்கு குடுங்கறன்.. இல்லையா.. ஒண்ணும் கதைக்காவலேன்னு
வித்துப்புட்டு மூணா பங்கு போட்டு குடுத்துடு.. இம்புட்டுதான்னு தெரிஞ்சுட்டா
நாங்களும் வர தாவல்ல பாரு..”
”குடுத்துட்டு..? அப்பாரும் நானும் கோயிலாண்ட
குந்திக்கவா..?” என்றாள் அஞ்சலை வெடுக்கென்று.
”ஒனக்கென்னம்மா கடலுமேரி வீடு இருக்கு.. அதையா
வித்து தான்னு சொல்றன்.. மளிய சாமான் ஒருத்தி.. பாலு பட்டது ஒருத்தி.. சீல..
வேட்டி ஒருத்தின்னு வாங்கீயாந்துட்டா ஒங்க ரெண்டு பேரு காலமும் ஓடற ஓட்டம்..”
”எல்லாம் வாங்கறமுட்டும் எம்புட்டும் பேசுவிய..
ஊரொலவத்துல நடக்காததா..? இந்தாங்க.. கல்லுக்குண்டாட்டம் ஒக்காந்து கெடக்கீய.. இவ
பேசறதெல்லாம் நெறஞ்ச வூட்ல பேசற பேச்சாக்கும்..”
பேச்சு மும்மரிப்பில் மருமகன் வந்ததை யாரும்
கவனிக்கவில்லை.
”இவ்ளோ நேரம் நீங்க பேசுனீங்க.. நா குறுக்க
வர்ல.. தகப்பனும் மவளுக்கும் நடக்கற பெரச்சனையில நா என்னா பஞ்சாயத்துன்னு
நெனச்சன்.. இந்த வூட்டு மனை பூர்வீக சொத்து. கேசுகீசுன்னு எறங்கினா தாத்தேன்
சொத்து பேரப்புள்ளுவளுக்குதான்னு தீருப்பாவும்.. வாழ்ற பயலுக்கு வழி சொல்லுங்கன்னா
காடு போற காலத்துல ஒங்க பொழப்ப பத்தியே பேசுறீயளே.. இதுக்கு மேல நா என்ன சொல்ல..”
கைலியை டப்பாகட்டாகக் கட்டிக் கொண்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
திடீரென்று எழுந்த அலறல் எல்லோரையும் ஒருமிக்க
ஸ்தம்பிக்க வைத்தது. வீடுகள் பரபரப்பாகி தெருவுக்கு வந்து, சிதறி அலறலை நோக்கி
ஓடின. பஞ்சவர்ணத்தின் வீட்டிலிருந்துதான் மரண ஓலம். அவள் கணவன் அறைக்கதவை மூடிக்
கொண்டு துாக்கில் தொங்கியிருந்தார். அவருக்கு பத்து ஏக்கர் இருந்தது சொந்தமாக.
கல்யாணப் பத்திரிக்கைகளில் ‘தங்கள் நல்வரவை நாடும்..’ என்ற வரிசையில் தன்
பெயருக்கு பக்கத்தில் மிராசுதார் என்று போடாவிட்டால் சட்டையை கோர்த்துக் கொள்ளும்
ரகம் அவர். பத்து ஏக்கரிலும் ஒரு வித பிடிவாதத்தோடு வெள்ளாமை செய்திருந்தார்.
தொடர்ந்து இரண்டு வருடங்களாகவே நிறைய அடி. “பாதி காட்ட தருசா போடுலாமில்ல..”
ராமசாமி கூட சொல்லியிருந்தார். ”நம்பிக்கதானே வாழ்க்கை..” என்றார் சிரித்தப்படி.
அந்த சிரிப்பை கடன் துடைத்து எடுத்திருந்தது.
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குழுமி விட்டனர்
விவசாயிகள். ”இவ்ளோ தண்ணீ இருந்தாதான் திறக்கலாம்னு நாம்ஸ் இருக்கு.. இப்ப இருக்கற
டேம் கெபாசிட்டிக்கு தண்ணிய திறக்க
முடியாதுங்க.. குடித்தண்ணீக்கே பத்தாது.. இதுல இர்ரிகேஷனுக்கு எப்படி கொடுக்கறது..
அப்டியே திறந்தாலும் கடும் வறட்சிங்கிறதால தண்ணீ உங்க பக்கம் வர்றதுக்குள்ள பூமி
இழுத்துக்கும்.. எவாப்ரேஷன் லாசும் அதிகமா இருக்கும்.. எதுக்கும் மனுவை
கொடுத்திட்டு போங்க.. கவர்மெண்ட்டுக்கு அனுப்பி வைக்கறேன்.. ஆனா இருக்கற நிலமைக்கு
தண்ணி திறக்கறதுக்கு ரெகமண்ட் பண்ண முடியாது..” கை விரித்து விட்டார் அந்த
அதிகாரி.
கீழதட்டை உள் மடக்கி விம்மி வெதும்பி
வெடித்தழும் குழந்தை போல நிலம் நீருக்காக வெம்மி வெதும்பி வெடிக்க ஆரம்பித்தன.
கயிற்றுக்கட்டிலை தாண்டி வயலுக்குள் இறங்க கால்கள் நடுங்கின அவருக்கு.
நெற்பயிர்கள் நடுவுள்ளவள் போல வாயில்லாத பிள்ளைகளாக உயிரை பிடித்துக் கொண்டு இவரைப்
பார்த்தன. “எதாவது செஞ்சிட முடியாதா..?“ பார்வையை மங்கலாக்கியது கண்ணீர்.
அன்று காலையிலேயே இரண்டு நல்ல செய்திகளை வந்தன.
முதல் செய்தி பேரனின் வெளிநாட்டுப் பயணம் ஒரு மாதம் தள்ளி போயிருப்பதாக மூத்தவளிடமிருந்து
வந்தது. இரண்டாவதாக மகள் சமைந்து விட்டதாக மூன்றாவது மகளிடமிருந்து சேதி வந்தது..
எதிர்பார்த்ததுதான் என்பதால் முன்னேற்பாடாக முக்கால் பவுன் மோதிரத்தை விற்று
விடுவது என்று யோசித்து வைத்திருந்தாள் அஞ்சலை. அப்பா வாங்கிக் கொடுத்தது. மூத்தவள்
பிறந்த போது பேத்திக்கு இடுப்பு.. கால்களை வெள்ளியால் நிரப்பி விட்டவர்,
கஸ்டப்பட்டு சொமந்து பெத்தெடுத்தவ நீ.. ஒனக்கு என்ன வேணும்னு சொல்லு தாயீ..
மகளிடம் அவர் கரைந்துருகிய போது அஞ்சலையும் கணவனுக்காக கரைந்துருகினான்.
”எனக்குதான் வேணுங்கறத குடுத்தீட்டீயளேப்பா.. இந்த மனுசனுக்கு மண்டையாட்டம் ஒரு
மோதிரம் போட்டு வுடுங்க.. கண்ணாலத்து வாங்குனது நெளிஞ்சு போச்சு..” என்றாள். இதற்கு
மேல் மோதிரத்தை காப்பாற்ற முடியாது என்பது அவளுக்கு தெரியும்.
சடங்கு வீட்டில் கூட விவசாயம்தான் பேச்சாக
இருந்தது
”மலயிலயும் வெயில்லயும் மக்கா மனுச
தவுதாயப்படுதுவோ.. ஆரு காணுறேங்கிறாவோ.. எல்லாத்துக்கும் பதவி மேல ஆச.. காசு மேல
ஆச.. அடிமை சனமா வச்சிருந்தாதானே ஆண்டைகளா ஆவ முடியும்.. எப்ப கேட்டாலும் டெல்லிக்கு
கடுதாசி எழுதியிருக்கேன்.. பேச்சு வார்த்த பண்றேன்னு.. ஆவற பாதை ஒண்ணும் காங்கல..”
”என்ன மசிரு பேச்சு வார்த்த.. நீ அடிக்கற மாரி
அடீ.. நா அழுவுறமேரி அழுவுறதா.. ஏக்கனவேதான் தொண்ணுறாம் வருசம் தீர்ப்பாயம்
அமைச்சாங்களே.. திரும்ப என்ன எழவுக்கு நீங்களே பேசி தீத்துக்கங்ன்னு சொல்லுதுவொ.. நீதி
நாயமெல்லாம் செத்து போச்சுய்யா..”
”அதான் மானங்கூட கண்ணு தொறக்கல..”
”நீ வேற பங்காளீ.. மல பெய்யதான் பெய்யுது.. அத
சேத்து வக்கறதாவுல வூடா கட்டி அடுக்கிட்டா தண்ணீ எங்ஙன நொம்பும்..? ஒரு விசியம்
சொல்லுட்டுமா.. ஏதோ ஒரு ஊர்ல கோர்ட்டு ஆபிசே ஓடைக்குள்ளதான் கட்டியிருக்காவளாம்..”
”ஏளைபாளைக்கு ஒரு நாயம்.. அவிங்களுக்கு ஒரு
நாயந்தான்.. நமக்கு பட்டாவ கொண்டா.. சிட்டாவ கொண்டா.. அடங்கல கொண்டான்னு புடுங்கி
திங்கிறானுவளே.. அம்புட்டு ஆபிசர்ட்டயும் கையெளுத்துகாலெழுத்து வாங்கங்குள்ள
தலையெளுத்து அந்து போயிடும்.. அவனுங்களுக்கு இதெல்லாம் ஒண்ணு கெடையாதாமா..?”
”ஆனா ஒண்ணு.. ஆளு கணக்கெல்லாம் படைச்சவனுக்கு கெடையாது..
போன மார்களில பட்டணத்துல வெள்ளம் வந்தப்ப அதோட வாவு வளியில கெடந்த அம்புட்டையும்
வாரிக்கிட்டுல்ல போச்சு.. அங்ஙன கட்டடம்.. வூடு கட்ட அனுமதி குடுத்தது ஆரு..
அதுக்கு பதிலா அங்க தண்ணீய தேக்கி வச்சிருந்தமுன்னா அவங்க பொழப்பு வரைக்கும்
பாத்துக்கலாமில்ல..”
”நம்ம பக்கிட்டு மட்டும் என்னா ஆத்துக்கும்
காவாய்க்கும் பஞ்சமாக்கும்.. எல்லாத்தையும் கந்தவகோலம் பண்ணீ வச்சுட்டானுங்க..
டேம் தண்ணீ கடைமடைக்கு வாரதுக்குள்ள முடிஞ்சுப் போவுது.. வெள்ளமா வந்துச்சுன்னா
வேஷ்டா சமுத்தரத்துல சேருது.. கேக்கறதுக்கு ஆளு ஆரு..? தொறக்கற வாயெல்லாம் பணங்காச
குடுத்து அடைச்சிடுறது.. இல்லேன்னா அதிகாரத்த காட்டி பயங்காட்டறது.. ஆச்சி
பண்றதுங்களுக்கு கொஞ்சம் மனசாச்சி இருந்தால்ல தாவல..”
”அதான் வந்து குறிப்பெடுத்துட்டு
போயிருக்காவல்ல..”
”ம்க்கும்.. வருசாவருசந்தான்
குருப்பெடுக்கிறானுங்க.. ஆளும்பேருமாக ஜீப்பு காருல வந்து எறங்கிறாங்க..
உள்ளதெல்லாம் சொல்றோம்.. காதுல வாங்கறாங்க.. அம்பா பேசுறாங்க.. சிரிக்கிறாங்க.. கட்டங்கடசில
நம்ம பொழப்புதான் சிரிச்சு போவுது..”
”இந்த வாட்டீ எலக்சனு வருதுல்ல.. எதாவது
செய்வாங்க..”
கருகின நம்பிக்கை எங்கோ முளை விட பேச்சடங்கிப்
போனது.
ஆனாலும் நம்பிக்கையின் மீது நம்பிக்கையின்றி அந்த
பக்கத்து விவசாயி ஒருவர் காதில் விஷத்தை ஊற்றிக் கொண்டு நிலத்தில் படுத்து விட, அந்த
இழவை தண்டும் சாக்கில் வந்த மூத்தவள் ”ப்பா.. நாளு நழுவிடுச்சுன்னு நறுவுசா
வுட்டுறாதே.. முடிஞ்சா பாரு.. இல்லேன்னா வித்துப்புடு.. டபுள் மடங்கு லாவம்
வரும்.. கடசிகாலத்துல கடங்கிடன் இல்லாம நிம்மதியா இருக்குலாம்..” என்றாள். தாயும் தகப்பனும் பேச திராணியில்லாத நிலையில்
அடித்து பேசி விட்ட திருப்தி இருந்தது அவளுக்கு.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுவரை பத்து பேர்
தற்கொலை முடிவை நாடியிருந்தனர். அதில் இருவர் கணவன் மனைவி.
நிருபர் நீட்டிய மைக்கில் அரசாங்க அலுவலகம் அதே
பாட்டையே பாடியது.
”சென்ட்ரல் கவர்மெண்ட்டுக்கு டிரொளட் டீம்
ரிப்போர்ட்ஸ் சப்மிட் பண்ணிருக்கு.. நம்ம ஸ்டேட் கவர்மெண்ட்டும் சில ரெக்வெஸ்ட்
வச்சிருக்காங்க.. அதெல்லாம் பாலிசி மேட்டர்.. உள்ள நொழய முடியாது.. நம்ம
பண்றதெல்லாம் பண்ணியாச்சு.. இனிமே முடிவு அவங்க கைலதான்..”
வறட்சி நிவாரணம் தவிர்த்து தொலைக்காட்சியில்
எல்லா செய்திகளையும் அறிவித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் இறந்து போன விவசாயக்
குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் நிதி உதவி வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது.
தற்கொலை செய்துக் கொண்ட பத்து பேரில் எட்டு பேர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பஞ்சவர்ணத்தின் குடும்பமும் இதில் அடக்கம். கணவனும்
மனைவியுமாக இறந்து போனது குடும்ப தகராறினால் என அரசு அக்குடும்பத்துக்கு நிவாரணம்
வழங்க மறுத்து விட, ஊர்காரர்களுக்கு அலமலப்பாக இருந்தது. ”கழிச்சல்ல போறவனுங்க..
வெவசாயம் அளிஞ்சு போச்சுன்னு அந்த பொம்பள பொலம்பா பொலம்பி புருசங்காரனோட சேந்து
வெசம் குடிச்சது ஊருக்கே தெரியும்.. இப்டி வவுத்துல அடிக்கிறானுவளே..” அஞ்சலையும்
புலம்பினாள்.
“ஒங்கெரகமா.. எங்கெரகமா.. இன்னிக்கு அடிமட்டமா
கெடக்கோம்.. பெத்ததுங்க கூட போய் சேந்துடுச்சுங்க.. நீதான் அறுவத்தெட்டு வருசமா
என் வவுத்து பசிய ஆத்தியிருக்க.. ஒனக்கு நா பதிலுக்கு ஒண்ணுமே செய்யல சாமி..
ஒண்ணுமே செய்யல.. தவுச்ச வாய்க்கு தண்ணீ தராத இந்த நன்னிக் கெட்ட பயல
மன்னிச்சுடுய்யா..“ பயிர்களை கட்டிக் கொண்டு வாய் விட்டு கதறினார் ராமசாமி.
”எங்க வூட்டுக்காரரு சொல்றதுதான் நல்ல முடுவா
இருக்கும்னு நெனக்கிறேன்.. நீங்க சரீன்னா நாளைக்கே ஆள கூட்டீட்டு வர்றேன்னு
சொல்றாருப்பா..” என்றாள் மூத்தவள். இதில் சின்ன சகலையும் கூட்டு. இந்த முறை
நடுவுள்ளவனும் வந்திருந்தான். சின்னவன் அழைத்து வந்திருக்கலாம். ”பாப்பா
நல்லாருக்கா மாப்ளே.. கூட்டியாந்துருக்கலாமே..” நடுவுள்ளவனிடம் விசாரித்தார்
ராமசாமி.
”எங்க வாரது மாமா.. புள்ளீவ பள்ளியோடம்
போயிருக்குதுங்க.. எங்கம்மாளால ஒண்ணுஞ் செய்ய வாய்க்காது.. பொறவு வாரேன்னுச்சு..”
என்றான் நடுவுள்ளவன்.
”ஆளுங்க முழிச்சுக்கிட்டா வெலைய இறக்கிடுவான்..”
என்றான் சின்ன மருமகன் காரியத்தில் கண்ணாய்..
”அதுசரிங்க மாப்ள..” என்றார் மையமாய். திண்ணையிலிருந்து
இறங்கி வாசலுக்கு வந்தார். உட்கார்ந்த இடத்தில் கொத்தாக விழுந்து கிடந்தது துண்டு.
அந்தி கவிழ்ந்து இருள் புழக்கத்திற்கு வந்தது. ”அஞ்சல..” அழைத்துக் கொண்டே பட்டாச்சாலைக்கு
வந்தார்.
அஞ்சலை முற்றத்து வராண்டாவிலிருந்த உறியில் தொங்கிக்
கொண்டிருந்த அதிசர துாக்கை உருவி கொண்டிருந்தாள். மாப்பிள்ளைகளுக்காக சுட்டு அடுக்கியிருந்த
அதிரசம். காரச்சேவும் நெறித்து வைத்திருந்தாள். வீட்டு மாப்ளங்களுக்கு வெத்து காபி
தண்ணிய நீட்டுனா நல்லாவா இருக்கும்.. ரெண்டு பலவாரம் பச்சணம் வச்சு நீட்ட வேணாமா..
என்பாள்.
”அஞ்சல.. வயக்காட்டுக்கு கௌம்பறன்..”
அதிரசம் துாக்கோடு நிமிர்ந்தவளின் கண்கள் ஒரு
சிறுநேரம் கணவனின் கண்களோடு உரசி மீண்டது.
”சாப்புடாமா..?”
”வயிறு மந்துன்னு கெடக்கு.. கௌம்பறேன்..”
கணவனை பார்த்துக் கொண்டே நின்றாள் அஞ்சலை. நீர்
திரையிட்டு உருவம் மசமசத்தது.
விறுவிறுவென்று தெருவில் இறங்கி நடந்தார்
ராமசாமி.
***
No comments:
Post a Comment