Search This Blog

Thursday 1 August 2024

காந்தியும் அகிம்சையும்

 

நீங்கள் மனிதர் ஒருவரை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள்… நாங்கள் அவரை மகாத்மாவாக்கி உங்களிடம் திருப்பியளித்திருக்கிறோம்…

நாங்கள் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உங்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் நீங்கள் அவரை கொன்று விட்டீர்கள்…

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கூறுவது போலவும் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிரிட்டிஷார் உரைப்பது போலவுமிருக்கும் இக்கூற்றுகளின் பொருளை முழுமையாக உணராதவர்கள் கூட இதனை இயல்பாக பயன்படுத்துவார்கள். மேடை பேச்சுகளிலோ கட்டுரைகள் எழுதும்போதோ அவரை பற்றி ஏதுமறியாதவர்கள் கூட சொல் அலங்காரத்துக்காகவே பொருள் அலங்காரத்துக்காகவோ இதனை சேர்த்துக் கொள்வதுண்டு. அவரை உணர்ந்தவர்கள் இக்கூற்றுகள் அவரை மனிதருள் மேம்பட்டவராகவும் அவர் ஒரு புதையல் அல்லது பொக்கிஷம் போன்று சித்தரிக்கப்படுவதையும் அறிந்து பெருமிதம் கொள்ள முடியும்.

திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவர், சமூகத்தை சீர்திருத்த முனைந்தவர், சமயச் சிந்தனையாளர், பரிசோதனை முயற்சிகளை நம்பிக்கையோடு முன்னெடுத்தவர், கடினமான உழைப்பாளர், ஆச்சர்யகரமான நேர மேலாண்மை செய்பவர், கண்டிப்பான ஒழுக்கவாதி, சிக்கனவாதி, பக்தி மிக்க இந்து, சிறந்த ராம பக்தர்,  கீதையை உயிரெனக் கொண்டவர். அனாசக்தியோகம் என்று அதற்கு விளக்கவுரை எழுதியவர்.  தீர்க்கதரிசனம் நிறைந்தவர், போராட்டம் என்றாலே வன்முறைதான், போர் என்றாலே ஆயுதங்கள்தான் என்று நிலவிக் கொண்டிருந்த மனநிலைக்கு மத்தியில் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட போராட்ட முறையை கொண்டு வந்தவர். இன்னும் கூட நிறைய தலைப்புகளில் அவரை வகைமைப்படுத்தினாலும் ஒரு தீர்மானமான சட்டத்துக்குள் அடைத்து விட முடியாது.

அவர் முரண்களும் நம்பவியலாத பெருங்குணங்களும் கொண்டவர். சமணத்துறவியை போன்ற மனநிலையை கொண்டிருந்தார் என்றாலும் விஷய ஞானமிக்க தேர்ந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலேயே வசித்தவர் என்றாலும் சட்டென்று அனைத்தையும் துறந்து கிராமபுற வாழ்க்கையை நோக்கி திரும்புகிறார். தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமான வழக்கறிஞராக பெயரும் புகழும் பணமும் ஈட்டியவர், திடீரென்று பணம் சம்பாதிப்பதை நிறுத்திக் கொள்கிறார். கட்டுக்கோப்பான கூட்டுக் குடும்பத்தில் சமஸ்தான திவானின் மகனாக பிறந்த அவர் வீட்டை துறந்து ஆசிரமங்களை உருவாக்கி அதில் தன் குடும்பத்தாரோடு நாடு, இன, மத, சாதி பேதமற்று பன்தரப்பு மக்களுடன் வாழத் தளைப்படுகிறார். யாரை எதிர்க்கிறாரோ அவரிடம் துவேஷம் கொள்ளாதவர், தன்னை வெறுப்பவர்களிடமும் அன்பு பாராட்டுபவர்,  துறவு மனப்பான்மை கொண்டவர் என்றாலும் தனிமையையும் தவத்தையும் நாடி மலையடிவாரங்களுக்கோ காடுகளுக்கோ செல்லாதவர். பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தாலும் மனைவியை விட்டு இறுதி வரை விலகாதவர், தன் மீதான வழக்கு விசாரணையின்போது தான் செய்தது தார்மீகமாக சரியானது என்றாலும் சட்டத்தின்படி குற்றமாகும் என தண்டனையை இருகரம் நீட்டி வரவேற்றவர், தனக்கு தண்டனை விதித்த நீதிபதியையே கலங்கடித்தவர் என்பன போன்ற எத்தனையோ ஆச்சர்யங்கள் அவரிடமிருந்தன.

இந்த ஆச்சர்யங்கள் எதுவும் புனைவுக் கதையில் நடந்ததல்ல. இவை பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நுாற்றாண்டின் மையம் வரை நடந்த உண்மை நிகழ்வுகள். இவையெல்லாம் சமீபமாக நடந்திராமல் முன்னெப்போதோ நடந்திருந்தால் அவர் புனிதராக்கப்பட்டு கடவுளாக்கப்பட்டிருக்கலாம். அவரை பற்றிய சரித்திரத்தை தேவைக்கேற்ப பெருக்கியும் குறுக்கியும் திரித்தும் விரித்தும் புராணமாக்கியிருக்கலாம். தொன்மக்கதைகளை உருவாக்கியிருப்போம். கோயில்களை எழுப்பியிருப்போம். சிலையெடுத்து வணங்கியிருப்போம். காவியமாக்கி கதாகாலட்சேபம் செய்திருப்போம். அல்லது ஆட்சேபம் தெரிவித்து ஒதுக்கி வைத்து வழக்கொழிய வைத்திருப்போம். ஆனால் இவை எதற்கும் இடம் கொடுக்காத அந்த அகிம்சைவாதி உயிரும் உடலுமாக நம்மிடம் மிக சமீபத்தில்  வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்.

அவர் அகிம்சை, சத்தியம் என்ற இரண்டு கோட்பாடுகளின் மீதும் மிக தீவிரமான நம்பிக்கையும் அவற்றை கடைப்பிடிப்பதில் இறுதி வரை  மிக பிடிவாதமான உறுதியும் கொண்டிருந்தார். அகிம்சை என்பதை மிகுந்த அன்பு, அதிகளவு தயை என்று பொருள்படுத்துவதையே இறுதி வரையிலும் பொருட்படுத்துகிறார். அகிம்சை தத்துவம் மிக புனிதமானது, பழமையானது என்று கருதும் அவர் தன் வாழ்நாள் முழுக்கவும் அதை குறித்து ஓயாமல் பேசுகிறார், எழுதுகிறார், அறிவுறுத்துகிறார், அவற்றையே செயல்படுத்துகிறார். அவரது செயல்பாடுகள் குடும்ப அளவிலோ வீடளவிலோ இருப்பதன்று. அவர் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில், அதன் நாடுகளில் வாழ்ந்தவர். தனது கொள்கையை பின்பற்றி  தென்னாப்பிரிக்காவில் அதற்கான வெற்றியை அனுபவித்தவர், பிறகு இந்தியா திரும்புகிறார். அவர் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் எதிர்த்து போராட வேண்டியிருப்பது ஒரே எதிரியையே. அந்த எதிரியோ உலகெங்கிலும் பலவீனர்களை அடிமைப்படுத்தி அறமற்ற அரியணையை கம்பீரமென கருதி ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியம் என்று எண்ணிப் பார்க்கவியலாத பலசாலி. அவரோ, குஜராத்தில், போர்பந்தரில் பிறந்து இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, பிழைப்புக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற சாதாரணர். ஆனால் நுாற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, அவரின் அரசியல் களமாடலுக்கு பிறகு கிட்டத்தட்ட முப்பத்திரண்டு ஆண்டுகளில் அடிமைத்தளையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.

காந்தியடிகள் வலியுறுத்தும் அகிம்சையானது சத்தியத்தோடு பயமின்மையும் இணைந்தது. ஒரு சத்தியாகிரகி தெரிந்தே உடலாலும் மனதாலும் துன்பப்படும் முடிவை எடுக்கிறார் னில் அவர் கூறுவதை போல வாள் எடுப்பதை விட அகிம்சையை கடைப்பிடிப்பதற்குதான் அதிக வீரம் தேவைப்படுகிறது. அகிம்சையாளர் துன்பம் அனுபவிக்க தயாராக இருப்பாரே தவிர தனக்கு தீமை செய்தோரை துன்புறுத்த மாட்டார். துரத்தி வரும் தெருவோர நாயை கூட கல் என்ற சிறு ஆயுதத்தையாவது ஏந்திக் கொண்டுதான் நாம் சமாளிக்க பழகியிருக்கிறோம். உடல் பலத்தின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையை ஆயுதங்களின் கூர்மையில் நிலைநிறுத்துவது நம் இயல்பிலேயே கலந்திருக்கிறது. ஆனால் காந்தி எடுக்கும் ஆயுதம் அதற்கு நேரெதிரானது.  மிருகங்களுக்கு வன்முறை எப்படி ஒரு நியதியோ அங்ஙனமே மனிதர்களுக்கு அகிம்சை ஒரு நியதி. கடவுளை அறிவதும் அடைவதுமே மனிதனின் இயற்கையான சுபாவம்.  அது தீமை செய்பவர்களின் விருப்பத்துக்கு தாழ்ந்து பணிந்துப் போவதல்ல. மாறாக கொடியவனின் சக்திக்கு எதிராக ஒருவர் தனது முழு ஆன்மபலத்தையும் நிறுத்துவது என்கிறது அவர் வலியுறுத்தும் அகிம்சை.

வாள்வீச்சிலும் வன்முறையிலும் தேர்ந்தவர்கள் வலிந்தவர்களாக ஆள்வதும் மீதமானவர்கள் மெலிந்தவர்களாக அவர்களின் அடிப்பணிந்து கிடப்பதும் உலக வழக்கு என்றாகி விட்ட நிலையில் இவரின் அகிம்சையும் சத்தியமும் உலகிற்கு புதிதாகவும் புதிராகவும் சில சமயம் கேலிக்கூத்தாகவும் கூட இருந்தன. ஆனால் அவர் அதற்கான பதிலை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியிருந்தார். அவரின் பல்வேறு பரிமாணங்களுள் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்றொரு கோணமும் உண்டு என்றாலும் அவர் தன்னை இத்தனை துாரம் வழிநடத்தியும், தான் இத்தனை துாரம் வழிநடத்தியும் வந்த அகிம்சா தருமம் குறித்து தனியாக நுால் எதையும் எழுதவில்லை. தனக்கு பூரணமாக தெரியாத ஒன்று குறித்து எழுதுவது என்பது பூர்த்தியற்ற ஒன்றாகவே இருக்க முடியும் என்பது அவர் வாதம். ஆயினும் அகிம்சையின் வழியே சாத்தியமல்லாதவற்றை சாத்தியப்படுத்தியபோது 

அவர் கற்றதையும்  பெற்றதையும் போராட்டங்கள் உட்பட தனது வாழ்வியல் தருணங்களில் பொருத்திக் கொண்டதையும் அவரது வாழ்க்கையினுாடாக பயணிப்பதன் மூலம் நம்மால் அறிந்துக் கொள்ள முடியும். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது பொது வாழ்க்கையோடு ஒன்று கலந்தது. அவருக்கென்று தனியாக குடும்பம் இருந்தது என்றாலும் ரகசியங்களோ திரை மறைவுகளோ ஏதுமின்றி இறுதிவரை அவர் வெளிப்படையாகவே வாழ்ந்தார். சுயசரிதம் உட்பட அவர் தனது எங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகியவற்றோடு அவரை பற்றி எழுதப்பட்டவைகள், தென்னாப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த நாட்களின் அரசியல் நிகழ்வுகள், இந்திய விடுதலை போராட்டம், அந்நாளைய சமூக சீர்த்திருத்தம் போன்றவற்றை அறிய முற்படும்போதே அவருடைய வாழ்க்கை அமைதிச் சித்திரமாக துலங்கி எழுந்து விடும். அவரது அகிம்சையை அறிந்துக் கொள்ளும் சிறு முயற்சியே இந்நுாலை எழுதும் உத்வேகத்தை அளித்தது.

- காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும் என்ற எனது கட்டுரை நுாலிலிருந்து...


 

No comments:

Post a Comment