Search This Blog

Tuesday 3 October 2017

“இரவு“ சிறுகதைத் தொகுப்பிற்கு “என்னுரை“


சிறுகதைகள் எதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டு விரிகின்றன. விரிதலின் கோணம் அருகி ஒரு அரிய தருணத்தில் சட்டென்று அப்புள்ளியிலிருந்து விலகி விடுகின்றன. பிறகு அதனை ஏந்திக் கொள்வது வாசக மனம்தான்.

மனிதர்களுள் உலாவும் கதைகள் தான் எத்தனை விதமானவை..? புரியவியலாத போக்குடைய மனம் என்ற எண்ணங்களின் தோன்றலை யாராலுமே கணிக்க முடிவதில்லை. அதன் வடிவும், போக்கும் எந்த நீட்சிக்குள் அடக்கவியலாதது. அகத்தின் ஆழமானது பல விசித்திரமான நிலைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.
இலக்கியம் அதனை முடிந்தவரை துழாவுகிறது. ஆனால் ஆழமான கடலில் இருக்கும் அதிசயங்கள் போல ஆழ் மனதின் ரகசியங்களும் இன்னும் பிடிபட மறுத்து போக்கு காட்டிக் கொண்டுதானிருக்கிறது. படைப்பாளிகளின் தேடலில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்டாலும் மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அது நழுவி கொண்டுதானிருக்கிறது. சொல்லித் தீராத விஷயங்களிலும் எட்டி பிடிக்கவியலாத மனோரகசியங்களிலும் எனக்கு தெரிந்தவரை சிலவற்றை உளவறிந்து சிறுகதைகளாக்கியிருக்கிறேன்.

பண்பாடு, சமுதாய சட்டகம் என வரையறுக்கப்பட்டு நகரும் புற வாழ்க்கை தனி மனித கட்டமைப்பை முடிவு செய்து விடுகின்றன. சாதகங்களில் பிரச்சனையில்லை. பாதகங்கள், சில சமயங்களில் நுணுக்கமாக தனி மனித வாழ்வை சிதைத்து விடுகின்றன. கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலையும் குளிர் நாட்களின் கடுங்குளிரையும் விமர்சனமின்றி ஏற்பது போல சமுதாயத்தின் நடைமுறைகளை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பழக்கத்திற்கு நாம் உள்ளாகி விட்டோம். நியாயங்களை கடப்பதுபோல நியாயமற்ற போக்குகளையும் மிக மெல்லிய தடுமாற்றங்களோடோ அல்லது அதுவுமற்றோ கடந்து வாழ கற்றுக் கொண்டோம். இது வெகு ஆபத்தான சமுதாயத்தை வளர்த்தெடுக்கும். இவ்வகையான போக்கினை சமுதாயத்தின் பார்வைக்கு முன்னிறுத்துவதும் இலக்கியத்தின் கடமைகளுள் ஒன்றே.

அகமும் புறமுமான தேடல்களை கதைகளாக்கியிருக்கிறேன். இதனை இதழ்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் வெளிக்கொண்டு வந்த நல்ல இதயங்களுக்கு எனது இதயத்திலிருந்து நன்றி சொல்வதுதான் முறையாக இருக்கும். ஊக்கமளிக்கும் குடும்ப உறவுகளுக்கு நிறையவே கடமைப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

வாசிக்கும் தருணங்களின் போது தோன்றும் எண்ணங்களை எழுத்தாக்கி அளித்தால் பேருதவியாக இருக்கும்.இந்த நுாலை வெளியிட உதவிய என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கவிஞர். திரு.சண்முகம் சரவணன் அவர்களுக்கும் என்.சி.பி.ஹெச். பதிப்பகத்தாருக்கும் ஆதரவு அளித்து மதிப்புரையும் அளித்த பேராசிரியர் முனைவர் திரு.இரா.காமராசு அவர்களுக்கும் இலக்கிய விமர்சகர் திரு.வீ.நா.சோமசுந்தரம் அவர்களுக்கும் என்  இதயப்பூர்வமான நன்றியை படைக்கின்றேன்.
அன்புடன்
கலைச்செல்வி.
21.03.2016

No comments:

Post a Comment