இலக்கியம்,
சமுதாயத்திலிருந்து தன்னை வேறாக நிறுத்தி அறங்களை அலசுகிறது. ஆழ்மன அடுக்குகளை துழாவியெடுத்து
கூறுகளாக்கி அடையாளப்படுத்துகிறது அல்லது நம்மை நம்மிடமே அறிமுகப்படுத்துகிறது. சிறுகதை..
கவிதை.. நாவல்.. என எவ்வடிவிலோ சமுதாயத்தின் போக்கினை சுவாரஸ்யமான ஆவணமாக்குகின்றது.
வலியோ.. வாழ்வோ நிதர்சனத்தை பேசும் போது அது அறமுமாகிறது.
பொதுவாக,
பாலின பேதம் ஒரு தட்டையான சமுதாயத்தையே உருவாக்குகிறது. எங்கள் வீட்டு மீன் தொட்டியில்
புதிதாக மேலும் சில மீன்கள் வாங்கி விட ஆசைப்பட்டோம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் மீன்களின் பெயர் தெரியவில்லை. சில இனங்கள் சண்டையிடும் என்றார் கடைக்காரர். கடைசியில் சாத்வீகமான சிறு மீன்கள் ஆறு வாங்கி தொட்டியில் விட்டோம். ஒவ்வொன்றாக குறைந்து (அதாவது பெரிய மீன்களால் உண்ணப்பட்டு..) அடுத்த நாள் புது மீன்களில் இரண்டு மட்டுமே மீதமிருந்தன. வேறு தொட்டி.. மோட்டார் வாங்க நேரமில்லை. மீதமிரண்டு மீன்களும் பெரிய மீன்களும் ஒரே தொட்டியில்.. எப்போது என்ன நடக்கும் என்று அறியாமல் உற்சாகமாக தனது ஆரஞ்சு நிற மேனியுடன் துள்ளலாக நீந்தியது சிறு மீன்கள் இரண்டும். சமுதாயத்தில் ஆண்களோடு பெண்களும் வாழ்வதை போல.. ஒரே வித்தியாசம்.. மீன்களுக்கு அதன் கையறு நிலை புரிந்திருக்காது. கொடுத்து வைத்தவை.
மனித
உடல் குறித்து அறிவியல் ஆயிரம் உண்மைகளை நம் முன் வைக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஆணுடலுக்குதான்.
பெண்களின் உடல் பல்வகை தொன்மங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசைகளற்றது.. அல்லது ஆண்
வரையறுத்த எல்லைகளுக்குள் தன்னை வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவது. இதன் கட்டுகள்
மிக அழுத்தமானவை. இனம், மதம் சார்ந்து இறுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டவை. குடும்பத்தின்
தரத்தை நிர்ணயிக்கும் வல்லமை பெற்றவை. சிலுவைகள் சுமக்க பழக்கப்படுத்தப்பட்டவை. சிறு
அசைவுகள் கூட கண்காணிப்புக்குட்பட்டவை. சிறு மீறல் கூட வன்மமாக அணுகப்படுபவை. காலங்காலமாக
தொட்டு தொடரும் பராம்பரிய பெட்டகத்துக்குள் வைக்கப்பட்டு திறப்பானை கண்காணாது எங்கோ
எறிந்து விட்டவை.
திறப்பான்கள்
எங்கோ ஒழிந்துப் போகட்டும்.. தேடுவது வீண் வேலை. உணர்தலும் புரிதலும் மட்டுமே இழந்தவற்றை
மீட்டெடுக்கும் வழியாக முன் நிற்கிறது. வலிந்து திணிக்கப்பட்டவைகளை மீளுருவாக்கம் செய்தலை
விட உள்ளிருக்கும் இயல்பான போக்கிற்கு நம்மை ஒப்புக் கொடுத்தல் கூட சமுதாயத்தின் போக்கை
மாற்ற வல்லதே.
எனது
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதி சிறப்பித்து என் இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும்
துணை நிற்கும் இலக்கிய விமர்சகர் திரு.வி.ந.சோமசுந்தரம் அவர்களுக்கு நன்றி. நன்றி என்ற
ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி விட முடியாது என்றாலும் வேறு வழியின்றி நன்றி என்றே முடிக்கிறேன்.
ஆணோ பெண்ணோ
குடும்பம் என்பது அழகான பாதுகாப்பு பெட்டகம். எனக்கு வாய்க்கப்பெற்றதும் அப்படியான
ஒரு பெட்டகமே. ஆதரவான கணவருக்கும் அருமையான இரு மகள்களுக்கும் நான் மகிழும் போதெல்லாம்
மகிழ்ந்து எழுதும் போதெல்லாம் படித்து நான் சொல்லும் கருத்துகளையே என்னிடம் வழிமொழிந்து
சிறு குழுந்தையாக மகிழும் என் பெற்றோருக்கும் என் அன்பு.
எனது
“புனிதம்“ என்ற இந்நாவலை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுத்து நல்ல முறையில் பிரசுரித்து
எனது எழுத்துக்கு உரிய கௌரவம் அளிக்கும் “எழுத்து“ பதிப்பகத்தாருக்கு எனது இதயப்பூர்வமான
நன்றிகள்.
No comments:
Post a Comment