Search This Blog

Thursday 23 November 2017

ஓசை

போடிமாலன் சிறுகதைப் போட்டி 2017ல் பரிசு பெற்றக்கதை
நவம்பர் 2017ல் செம்மலரில் வெளியானது.


குத்த வைத்த கால்களை கைகளால் கட்டிக் கொண்டு அதில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தேன். என் கணவன் மிகுந்த பலசாலி என்று உணர்ந்த தருணம் ஒன்றிலும் இவ்விதமாகதான் அமர்ந்திருந்தேன். அமர்ந்தவாக்கில் அவர் என்னை அப்படியே உயரே துாக்கி ஏந்த.. நான் விழுந்து விடும் பயத்தில் கால்களை உதற முயல.. ம்ஹும்.. அவரின் பிடியிலிருந்து என்னால் விலக இயலவில்லை. உயரே.. உயரே.. துாக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று விட்டார். என் பயமெல்லாம். விலகியோட.. சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த நாட்கள் அவை.


உறக்கமே வரவில்லையா.. அல்லது விழித்துக் கொண்டே உறங்குகிறேனா..? காற்றில் ஆடிய திரைசீலை வழியே வானை பார்த்தேன். பொழுது நள்ளிரவை கடக்கவில்லை.  ஹா.. மனதின் சுமைகள் அத்தனையும் உடலில் இறங்குகிறது.. அவஸ்தையான உணர்வு இது. மனமும் உடலும் வலியில் நிரம்பிக் கிடக்கும் மயக்க நிலை. என் வாழ்வில் கடந்து சென்ற மிக துயரமான நொடிகளை மீண்டும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். மனதை விருப்பம் போல வளைத்துக் கொள்ளும் கலையை என் அனுபவங்கள் மூலம் கற்று கொண்டதாக எண்ணிக் கொண்டது தவறென்று புரிந்தது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே இப்படிதான் இருக்கிறேன்.. இம்மாதிரியான மனநிலை உடல் நலத்துக்கு உகந்ததல்ல.. ராகுலனை வளர்த்தெடுக்கும் பெருங்கடமை எனக்குள்ளது.

விடிந்ததும் அரசர் சுத்தோதனர் அந்தபுரம் வருவதாக கட்டியம் வந்திருந்தது. யூகிக்கக் கூடிய வருகைதான். மகன்.. அல்ல அல்ல.. புத்தர் கபிலவஸ்து வருவதையொட்டி அரசர் என்னை காண வருகிறார். துயரத்தின் சாயலே கவியாமல் வளர்த்த மகன் இன்று வளர்ந்து நிற்க, அரசரோ துயரத்தின் வடிவாகவே மாறி விட்டார். மகனுக்கு இவர் அறிமுகப்படுத்திய உலகில் அருவிகளுண்டு.. ஓடைகளுண்டு.. மயில்களுண்டு.. மான்களுண்டு.. சிறகடிப்பின் சிலிர்ப்பில் சுதந்திரத்தை சுவாசித்து அதை ஒலிகளால் நிரப்பும் பறவைகளுண்டு.. மொட்டுகள் அவிழ்ந்து, பூக்களை பிரசவித்த தருணங்கள் நறுமணமாகி சூழலை நிறைப்பதுண்டு.. கன்னியர் உண்டு.. பஞ்சமில்லாத அன்பு உண்டு.. அதே அன்பை மகனும் திகட்ட திகட்ட திருப்பியளித்தார். அதிலும் அவரையே சுவாசித்துக் கொண்டிருந்த எனக்கு கிடைத்த அன்பின் அடர்த்தி அளவிட முடியாததாக இருந்தது. 

ஏதோ ஓசை வர திரும்பி பார்த்தேன். பல்லியொன்று மஞ்சத்தினருகே குறி சொல்லிக் கொண்டிருந்தது. அதற்கும் அவரின் வருகை தெரிந்திருக்கலாம். மஞ்சம்தான்.. உயிர்ப்பற்ற மஞ்சம்.. உயர்ரக மரங்கள்.. வாசனை திரவியங்கள்.. பட்டு மெத்தை இவையெல்லாம் மஞ்சத்தை உயிர்ப்பிக்க இயலாது.. பட்டுமெத்தையில் உருண்டோடி கிடந்த உடல்களின் சங்கமம் என்பது ஆன்மாக்களின் இணைப்பு என்றுதான் எண்ணியிருந்தேன். இரண்டு உடல்களுக்கிடையே ஆன்மா ஒன்றாகும்போது, அதை பந்தம் என்று சொல்வது மிகவும் சிக்கலானது. அதே சமயம் அதை விளக்கவும் வார்த்தைகள் இல்லை. மொழி மிகவும் வறியது.

ஆற்றாமை பெருமூச்சாக எழ உறைந்திருந்த உடலை நகர்த்தி சாளரத்தின் அருகே சென்று திரைசீலையை விலக்கினேன். காற்றும் இருளும் ஒருசேர உள்ளே நுழைந்தன. மான்களோடும் ஓடை மீன்களோடும் துள்ளி விளையாடி களித்த காலம் ஒன்று என் வாழ்விலும் கடந்து போயிருந்தது. அந்த காலக்கட்டத்தில்  கலகலப்பான சிரிப்பொலிகளும் பேச்சொலிகளும் அறைகளின் சுவர்களெங்கும் எதிரொலித்து கிடந்தன. அலங்கார துாண்களின் பின் பதுமையாய் மறைந்துக் கொள்வதும் கணவனின் பொய்யான தேடலுக்கு பின் இழுத்து அணைக்கும் நிகழ்வுக்கென அடிக்கடி கொள்ளும் ஊடலுமான வாழ்வு இன்று முழுமையாக கரைந்து போயிருந்தது. அப்போதைய அமைதி கூட ரகசிய யௌவனத்தின் பூரிப்பில் விளைந்ததாகவே இருக்கும்.

கார்கால அரண்மணையின் சாளரங்களும் கதவுகளும் தரைக் கம்பளங்களும் எங்கள் இன்பத்தின் கதையை இன்னும் மறந்திருக்காது. வாடைக்காற்று உள்ளே நுழைந்து வருத்தாதவண்ணம் அமைக்கப்பட்ட மாளிகை என்பதால் எங்களின் ரகசியங்களும் அதனுள்ளேயே அடைந்து போயிருக்கலாம். அல்ல.. அல்ல.. அவ்வாறும் எண்ணி விட முடியாது.. தென்றல் காற்றுக்கு வழி விடும்  வேனிற்கால அரண்னையின் விசாலமான கதவுகள் எங்கள் இன்ப வாழ்வின் ரகசியங்களை கசியவா விட்டன..?

துயரங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து விடுகிறது.

குளியலாடும்போது குளத்து நீரில் நெளியும் என் உருவ எழில் என்னை கர்வம் கொள்ள வைக்கும். நிலைக் கொள்ளா பெருமையில் குளத்தை சுற்றி நான் ஓட.. என்னை சுற்றி அவர் துரத்த.. ச்சே.. இம்மாதிரியான தொடர் எண்ணங்களை களைய வேண்டும் எனில் முதலில் எனது எழிலை களைந்தெடுக்க வேண்டும். யௌவனத்தையோ.. அழகான அவயங்களையோ என்னால் எதுவும் செய்ய இயலாது. ஏன்.. உன் உயிரை கூட என்னால் மாய்த்துக் கொள்ள முடியாது.. இளவரசன் ராகுலனை வளர்த்து ஒப்படைக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதேநேரம் என் கூந்தலில் முகம் புதைத்து தன்னை மறந்தவரை.. அக்கூந்தலை மழித்துக் கொண்டுதான் தான் மறந்தாக வேண்டும்.. அலங்கார அணிகளோடு என்னை அணைத்துக் கொண்டவரின் எண்ணங்கள் என்னுள்ளிருந்து விலக வேண்டுமெனில் இந்த அலங்காரங்களை நிச்சயம் நான் துறந்தாக வேண்டும்.

இருளும் நிசப்தமும் மனதிற்கு தேவையாகதான் இருந்தது.. இருள் என் மனதை பிரதிபலிக்கலாம். ஆனால் நிசப்தம்..? என்னுள் சதா எழுந்து கொள்ளும் வாழ்வின் ஓசைகள்.. அதனை எப்படி அமைதிக்குள் அடக்குவது..? கொண்டதனைத்தையும் விலக்கி விட்டு துறவு கொள்வது வெற்று இறகை போல சுலபமானது. பளுவின்றி பறந்து விட முடியும். இறகில் ஒட்டிக் கிடக்கும் சதை துணுக்குகளாய் அவரது நினைவை ஏந்தி கிடக்கும் மனதிற்கு குருதி வாசனையை விட்டு விலகுவது அத்தனை சுலபமல்ல. மன்னருக்கும் இத்தகைய சங்கடங்களும் சோகங்களும் இருந்திருக்கும். நாடெங்கும் புத்தராக அறியப்படும் உயர்ஞானம் பெற்றவர்  தன் உதிரம்.. தன் வாரிசு.. என்பதை எக்காலத்திலும் அவர் மறக்க தயாராக இல்லை. எப்படியாயினும் துறவை களைந்து அரச பதவியை ஏற்றுக் கொள்வார் என்று நம்பிக்கையில்தானே மகனை வரவழைப்பது.

மிக மெல்லிய காலடித்தடங்கள் கேட்டன. வயதானவரின் காலடித்தடங்கள். அரண்மனை முழுவதும் உறக்கத்திலிருக்கிறது. காவலர்கள் கூட பின்னிரவு நேரத்தில் தங்களையுமறியாது கண்ணயர்வதுண்டு. என் கணவனி்ன் விலகலுக்கு பிறகு ஆடவரின் நடமாட்டம் எனில் அது ராகுலனுடையது மட்டுமே. இது முதியவரின் காலடியோசையல்லவா..? மன்னர் வருவதாக கூறியனுப்பியிருந்தாரே.. அவராக இருக்குமோ.. இந்நேரத்திலா.. அதுவும் பரிவாரங்களின்றி.. காலடியோசை நெருங்கி என் அறைக்கு வெளியே தயங்கி நின்றது. விளக்கின் ஒளியை துாண்டி நிழலாடும் உருவத்தை உற்று நோக்கினேன்.

மன்னர் சுத்தோதனர்தான்.. அதுவும் இந்நேரத்தில்.. பரிவாரங்களற்று.

”அப்பா..” என்றேன் நிச்சயப்படுத்திக் கொள்ளும் நோக்கில்.மகன் நீங்கிய பிறகு என்னை மகளாக்கிக் கொண்டு விட்டார்.

”ஆம் மகளே.. நான்தான்.. பதற்றம் என் உறக்கத்தை நீக்கி விட்டது.. நீயும் உறங்கியிருக்க மாட்டாய் என்று தோன்றியது.. ஆகவே தான் வந்தேன்.. என் எண்ணம் கூட சரியாகதான் உள்ளது.. நீ உறங்கவில்லையா யசோதரா..?”

”என் உறக்கம் என்றோ நீங்கி விட்டது அப்பா..”

”ஏனம்மா இப்படி கூறுகிறாய்..”

”உறக்கம் அதீத இழப்பை அளித்து விட்ட பிறகு நான் எச்சரிக்கையோடுதானே இருக்க வேண்டியிருக்கிறது அப்பா..”

”இந்த கிழ வயதில் என்னை நையப்புடைக்காதே மகளே..”


”என் நோக்கம் அதுவன்று.. தனிமையின் சுவர்கள் கட்டுக்குலைந்த நிலையில் திறந்துக் கொண்டோடும் மனதின் வெளிப்பாடு இது.. சொல்லப்போனால் அன்றைய கொடிய இரவில் கூட நான் முழுதாக உறங்கவில்லை அப்பா..  என் கரத்தை குழந்தையின் மீது படர விட்டுக் கொண்டு துயிலில் ஆழ்ந்திருந்தது உண்மைதான். ஆனால் தாய்மையின் குணம் யாது..? தன் மகவை சிறு பூ கூட சிதைத்து விடக் கூடாது என்ற ஆழ்மன சிந்தை கொண்டதல்லவா தாய்மை.. அவ்வாறிருக்க தகப்பனின் பார்வை என் மகன் மீது படருவதை அறியாதவளா நான்..? மகவோடு என்னையும் சேர்த்து அணைக்கட்டும் என்ற இன்பத் தருணத்துக்காகவல்லவா கண்களை மூடிக் காத்துக் கிடந்தேன். அவரின் தொடுகையின் இன்பத்தில் பிள்ளைப்பேற்றின் அவதிகளை கடக்கலாம் என்றல்லவா காத்துக் கிடந்தேன். வேலை நிமித்தம் அவ்வழியே வர நேர்ந்தவர் எங்களை விட்டு பிரிய இயலாமல் பார்வையால் தழுவி் செல்கிறாரோ என்ற கர்வம் அப்போது எனக்குள் மதர்த்து கிடக்க கண் மூடிக் காத்துக் கிடந்தேன் அப்பா..”

”மகளே.. நான் வந்தது வேறு நோக்கத்திற்கு. என் மகன் நாளை துறவை துறந்து விடுவானா.. இந்த அரசாட்சியை ஏற்றுக் கொள்வானா.. என் கிழப்பருவத்தை ஓய்வெடுத்து அனுபவிக்க அனுமதிப்பானா.. என் இறப்பை நிம்மதியோடு நான் எதிர்கொள்ள இடமளிப்பானா என்ற எண்ணங்கள் என்னை உறங்க விடவில்லையம்மா..”

”புரிகிறது அப்பா.. தாங்கள் பேச்சை திசை திருப்புவதன் நோக்கம் புரிகிறது. இம்மாதிரியான பேச்சுகள் கணவனிடமோ.. தோழியரிடமோதான் பேசப்பட வேண்டும் என்று நானும் அறிவேன். ஆனால் நான் எதையும் திட்டமிடவில்லை.. இறுக கட்டிக் கிடந்த மனம் இன்று தன்னிலையின்றி பொலபொலத்து கிடப்பதை தாங்கள் உணர மாட்டீர்கள்.. நாட்டை பற்றியும் தங்களை பற்றியுமான கவலை தங்களுக்கு. உலகை பற்றிய கவலை தங்களின் மகனுக்கு. என்னை பற்றிய கவலையை நானாவாது பட்டுக் கொள்கிறேனே..”

”புரிகிறது மகளே.. ஆனால் விதி வலியது அல்லவா..?”

”அதே விதிதான் தங்கள் மகனுக்கு நாடாளும் இச்சை இல்லை என்றது. ஆனால் தாங்கள் விதியின் போக்கில் வளைந்து கொடுக்கவில்லையே.. அவ்வளவு ஏன்..? இன்று வரையிலுமே அதை தகர்த்து விட முடியுமா என்றுதானே ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. மகனை திசைத்திருப்ப நீங்கள் வளர்த்த யாகத்தில் நானுமே ஒரு ஆகுதிதானே அப்பா.. ஆனால் எனக்கென்று வரும்போது வேறு பாடம் போதிக்கிறீர்களே..?”

நாடாளும் மன்னன் என் முன் தனது தவறை உணர்ந்து போல தலைக்கவிழ்ந்து அமர்ந்திருக்கிறார்.. அவரை வார்த்தைகளால் வதைப்பது குடிமக்கள் செய்யத்தகாதது என்பதை நான் அறிவேன். முன்திட்டமில்லாத வார்த்தைகள் அதன் கனம் உணராமல் வழுக்கிக் கொண்டு போகிறது என்று என்னால் உணர முடிந்தாலும் தடுக்க இயலவில்லை..

“அப்பா.. தங்கள் மகனாரின் துறவுக்கு அவரின் பிறவி நிலை ஒரு காரணமென்றாலும், இதில் தங்களின் பங்கும் கணிசமானதுதான்.. பிணி.. மூப்பு.. சாவு என்ற வாழ்க்கையின் அங்கங்களை அவரிடமிருந்து மறைத்து அவரை அத்துணை சுகபோகங்களோடு அரண்மனை சிறைக்குள் அடைத்து வைத்தீர்கள்.. அதீத சுகங்களின் நீட்சி என்பது துறவின் முதல்நிலை என்றே நான் கருதுகிறேன்..” 

“என் நிலையில் இருந்து பாரம்மா.. இத்தனை பெரிய அரசாட்சியும் மக்களும் அவனுக்காக காத்து கிடக்கும் போது அவனின் துறவு ஏற்புடையதா மகளே..” குரல் மிக தாழ்ந்து நெகிழ்ந்து ஒலித்தது.

”அப்பா.. அவ்வாறாயின் அவரையே நினைத்துருகி கிடக்கும் நானும் என் மகனும் தங்களின் கண்களுக்கு எதுவாகவும் தெரியவில்லையா.. தங்களின் விருப்பத்துக்காக பலியிடப்பட்ட உயிர் பொம்மைகளா நாங்கள்..?”

”ஏனம்மா என்னை குற்றம் சாட்டுகிறாய்.. நான் இவ்வாறு நடக்கும் என்றா கருதினேன்..?”

”கருதவில்லை.. ஆனால் நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள்.. சரி.. விட்டுவிடுவோம் அவற்றை.. துறவின் மீது பற்றுக் கொண்ட அவர் இங்கேயே அதை கடைப்பிடித்திருக்கலாம்.. ஆனால் என்னிலிருந்து பெற்றுக் கொண்டிருந்த இளமையின் பூரிப்பான சொர்க்கமும், என்  மகவின் கொள்ளைச் சிரிப்பும் தன்னை ஆக்ரமித்து விடக் கூடாது என்ற அச்சம் அவருக்கிருந்தது. துறவை நோக்கி உந்தப்பட்ட அவராலேயே இவற்றையெல்லாம் அருகில் வைத்துக் கொண்டு கடக்கவியலாது என்ற உணர்வு எழும்போது, சாதாரண லௌகீக பிறவியான நான் அவருடன் பேசி சிரித்து.. வாழ்ந்து களித்து… ஒளிந்து திரிந்த இடங்களோடு என்னை கடப்பது எத்தனை கடினம்..? இன்று உலகம் முழுவதும் பொழியும் தன் அன்பு மொத்தத்தையும் அன்று என் மீதல்லவா பொழிந்தார்..? அதே அரண்மனை.. அதே வசதிகள்.. அவரின் சாயலொத்த மகன்.. ஆனால் அவரற்ற நிலை.. இல்லற இன்பத்தின் எச்சில் படிந்த.. தீயாய் தகிக்கும் உடலோடு என் மிக நீண்ட வருங்காலத்தை கழித்தாக வேண்டும் என்ற மனநிலை எனக்கு எத்தனை பெரிய துயரை அளித்திருக்கும் என யாருமே உணரவில்லையே அப்பா..”

”வேறு என்ன வழி இருந்து விட போகிறது மகளே இதை தவிர்த்து..? தவிரவும் ராகுலன் என்ற ஒரு அரிய பொக்கிஷம் உன் கையிருப்பில்தானே உள்ளது..”

”இருக்கலாம் அப்பா.. என் பணிப்பெண்களின் பிள்ளைகள் கூட தகப்பனின் அருகாமை.. அரவணைப்பு.. அன்பில் ஊறி திளைத்து.. நொடிக்கொரு முறை தங்களின் தந்தையரை பற்றி என் மகனிடம் அளவளாவும் தருணங்கள், இது பொக்கிஷமல்ல.. பெரும் பாரம் என்பதை எனக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றன..”

”அய்யோ.. மகளே.. இவ்விதமான கூரிய மொழிகளை உதிர்க்காதே.. ராகுலன் இந்நாட்டின் வருங்கால அரசன் என்பது நினைவிருக்கட்டும்..” சற்றே கடுமை கோர்த்தக் குரலில் சொன்னார். மன்னரல்லவா..?

”ராகுலனுடன் எனக்கும் உறவிருக்கிறது அப்பா..”

”மன்னித்துக் கொள்ளம்மா.. உனது நிலைக்கு என்னிடம் வழியேதும் இல்லையே என்ற ஆற்றாமை எனக்கு.. இந்த கிழவனுக்கு உன்னை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இல்லை என்பதை புரிந்துக் கொள்ளம்மா.. சுய சமாதானமே உயர்ந்தது என கருதுகிறேன்..”

”எத்தனை சமாதானங்கள் செய்து கொள்வது அப்பா.. அவர் வேறு துணையை தேடி என்னை நீங்கவில்லை என்றா..? என்னை மட்டுமா துறந்தார் அரசபோகத்தையே அல்லவா துறந்தார் என்றா..? நல்லவேளை அவரின் நினைவாக ஒரு மகவை அளித்துச் சென்றார் என்றா..? பாரே போற்றும் துறவி என் மீது ஒரு காலத்தில் மிக்க அன்பு கொண்டிருந்தவர் என்றா..? இம்மாதிரியான நியாயங்களை தங்கள் மகன் நீங்கிய பிறகு பலமுறை என் மனதிற்கு எடுத்து சொல்லியருக்கிறேன். நான் உட்பட அவர் சம்பந்தப்பட்ட அனைத்தும் இங்கு உயிர்ப்போடிருக்க.. எங்கோ அலைந்துக் கொண்டிருக்கும் அவரை நாடியே அலையும் என் மனதிற்கு.. என் எண்ணங்களுக்கு.. எதை சொல்லியும் கடிவாளமிட இயலவில்லையே அப்பா..”

அசையாமல் அமர்ந்திருந்தார். ஒருவேளை கண்கள் பனித்திருக்கலாம். இருள் அவருக்கு வசதியாக இருந்தது. பாவம்.. தனது நிம்மதிக்காக என்னை தேடி வந்திருந்தார்.. நானோ, எனக்குள் வருடக்கணக்காக அடைந்து கிடந்த ஆதங்கம், கோபம்.. விரக்தி.. எரிச்சல்.. எல்லாவற்றையும் கொட்டி அவரை காயப்படுத்தி விட்டேன். எழுந்து அவரருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவர் மடியில் தலை பதித்தேன். இருவரும் அழுவது இருவருக்கும் புரிந்தது.

”அப்பா.. தங்களை கேள்விகளால் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல.. மன்னித்துக் கொள்ளுங்கள்..”

அவரை நிமிர்ந்து நோக்கினேன். இன்னும் குனிந்தே அமர்ந்திருந்தார்.

”அப்பா.. வருந்த வேண்டாம்.. மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் என்னால் என் தரப்பிலிருக்கும் தவறுகளையும் உணர முடிகிறது.. என் கணவனுடன் இணைந்து வாழ எண்ணும் என் ஆசையே என் துன்பத்திற்கு காரணம். உலகிற்கெல்லாம் வழிக்காட்டியான ஒருவரை என் கணவனாகவும் என் குழந்தைக்கு தகப்பனாகவும் வரித்துக் கொள்ள எண்ணும் என் சுயநலப்போக்கை விடுத்து நல்ல எண்ணங்களில் நம்பிக்கைக் கொண்டு வாய்மை ஒன்றையே ஆதாரமாக்கி கொள்வேன். இவையே நற்செயல்களுக்கும் நல்வாழ்க்கைக்கும் வித்திடுபவன என்பதை உணர்ந்து அதையே என் மகனுக்கும் போதிப்பேன். எனது இந்நன்முயற்சிக்கும் தியானம் போலும் என் அமைதியான எஞ்சிய வாழ்வுக்கும் தாங்கள்தான் அப்பா நற்சாட்சியாக இருக்கப் போகிறீர்கள்.

மன்னர் ஆமோதிப்பாக என் தலையை கோதினார். அதில் உள்ள நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.

காலை புலர தொடங்கியிருந்தது.

மன்னர் எழுந்துக் கொள்ள, நான் அவரிடம் ஆசிப் பெற்றுக் கொண்டேன்.
அரண்மணையின் பரபரப்பு அந்தபுரம் வரை எதிரொலித்துக் கிடந்தது. நாடெங்கும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கலாம். அந்தப்புரம் கூட அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகிழ்வின் இனிய அதிர்வுகள் துறவு பூண்டிருந்த சாக்கியதேசத்து இளவரசரின் வருகையை உலகெங்கும் தெரிவித்திருக்கலாம். அரசவை இந்நேரம் களைக்கட்டியிருக்கும். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. செல்ல மனமின்றி .நடப்பவற்றை உள்வாங்கியவாறு பதுமையாக என் அறையில் அமர்ந்திருந்தேன்.

காலடியோசைகள் அந்தபுரம் நோக்கி வர தொடங்க, என் கவனத்தை அதில் செலுத்தினேன்.

”சீடர்களே..” மிக துல்லியமான குரலொன்று.. ஆகா.. இந்த விளிப்பில்தான் எத்தனை அன்பு..?

”லௌகீகங்களை துறந்த என் துறவு வாழ்வின் செய்திகளை சுருக்கமாக இவ்வாறும் கூறலாம்.. சீடர்களே..”

மயிலிறகால் மனதை ஊடுருவும் குரல்.. இது எனக்கு மிகவும்.. ஆமாம்.. மிகவும் பழக்கப்பட்ட குரல்.. வெகு நிதானமாகவும் பூரணத்துவத்துடனும் ஒலித்ததில் சற்றே அந்நியப்பட்டிருந்தாலும் குரலில் வேறுபாடில்லை.

”சீடர்களே.. கேளுங்கள்.. ஆசைக் கொள்ளும் மனமே உலகின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம். நல்ல எண்ணங்களும் நன்னம்பிக்கையும் வாய்மை உரைக்கும் நற்செயல்களுமே நல்வாழ்க்கைக்கு போதுமானது.. ஆசைப்பெருகும் மனமல்ல. நன்முயற்சி, நற்சாட்சி, நல்லதியானத்தை கடைப்பிடித்து ஆசையை வெல்லும்போது மனம் துாய்மைக் கொள்கிறது சீடர்களே..”

குரலின் வழியே உலகின் ஒட்டுமொத்த அன்பையும் வரவழைத்து விடலாமோ..? முடிகிறதே.. அன்பு வழிந்தோடி.. குரலுக்கு புனிதம் சேர்க்க, என்னுடல் பக்தியில் சிலிர்த்தது.

”இச்செய்தி எங்கோ.. எங்கோ.. எங்கோ.. கேட்டது போலுள்ளதே..” வேதனையில் ஒலித்த மன்னர் சுத்தோதனரின் குரலை கேட்க முடிந்தது.

சில நொடிகளில் பேச்சொலி நின்றது. காலடியோசகைள் தவிர்த்து எங்கும் பரிபூரணமான அமைதி. அமைதி.. காலடியோசைகள் நெருங்கி வரத்தொடங்கின. இதோ.. இதோ.. கதவருகே வந்தே விட்டன. அதிலொன்று.. அதிலொன்று என் மனதிற்கு மிக மிக நெருக்கமானது... என் உயிரனைத்தையும் குறுக்கி அவ்வோசையின் மீது தான் ஏற்றி வைத்திருந்தேன். இவ்வோசையின் மீதான கற்பனை மிகுந்தெழும் நேரங்களில். நிஜம் போல தோன்றி.. பின் ஏமாந்து கிடந்தப் பொழுதுகள் கணக்கிலடங்காதவை. வருடங்கள் பல கடந்திருந்தாலும் மிக நுட்பமாக அவ்வோசையை என்னால் பிரித்தறிய முடிந்தது… அதே ஓசைதான்.. அதே ஓசைதான்..

ஆனால் இப்போது சலனங்களற்று செவிமடுக்க முடிந்தது. 



***

2 comments:

  1. (ஏன்.. உன் உயிரை கூட என்னால் மாய்த்துக் கொள்ள முடியாது..) இது சரிதானா ஏன்... என் உயிரை என்று தானே வர வேண்டும்..... இல்லை எனக்கு புரியவில்லையா? நன்றி..

    ReplyDelete