Search This Blog

Tuesday 28 November 2017

“ஆழத்தின் “அறம்“

குறி நவம்பர் 2017ல் வெளியானது.

ஆழம் என்றொரு சிறுகதை. 2016ல் எழுதினேன். மூடப்படாத ஆழ்த்துளை கிணற்றையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பிணைப்பாக்கி எழுதிய கதை. கணையாழி இதழில் சிறந்த குறுநாவல் வரிசையில் ஜுன் 2016ல் இக்கதை வெளியானது. பின்னர் அது எனது “இரவு“ என்ற சிறுகதை தொகுப்பில் (2016 என்சிபிஹெச் வெளியீடு) இடம் பெற்றது. இந்த தொகுப்பு பரவலான கவனத்தையும் மூன்று விருதுகளையும் பெற்ற தொகுப்பு.  மேலும் இக்கதை இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக தொகுக்கப்பட்டு கடந்த 2017 ஏப்ரலில் வெளியானது. மேலும் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பாக்கி வெளியிடப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஆழம்  என்ற இச்சிறுகதை இடம் பெற்றதோடு இத்தொகுப்பின் பெயரும் ‘ஆழம்’தான். என் சிறுகதையின் பெயரையே தலைப்பாக்கி, கடந்த 2016ல் இத்தொகுப்பு வெளியானது.

அறம் என்ற திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் அதன் கதைக் குறித்து  நிறைய நண்பர்கள் அலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். இது உங்களின் ஆழம் கதையை ஒத்து அமைந்துள்ளது என்றனர். எனக்கும் அவ்வாறே தோன்றியது. மேற்கண்ட “ஆழம்“ கதைகளின் வெளியீடுகளை விவரித்து, எனது “பிளாக்“ல் பதிவிட்டிருந்த அக்கதையின் இணைப்பையும் சுட்டி, என் முகநுால் பக்கத்தில் என் ஆதங்கத்தைப் பகிர்ந்திருந்தேன்.



அப்பதிவுக்கு பின்னுாட்டங்கள் வந்தன. எனக்கு ஆதரவான பின்னுாட்டம் இட்டு விட்டோ அல்லது இடாமலோ என் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட பேசியவர்களில் சிலர் இரண்டு கதைகளின் கருவும் ஒன்றே என்றனர். சிலர் கரு ஒன்று.. ஆனால் பார்வை வேறு. உங்கள் கதை ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையை பறிக் கொடுத்த தாயின் பார்வையிலிருந்து. பார்க்கப்பட்டது. “அறம்“ அரசு உயரதிகாரியின் பார்வையிலிருந்து படமாக்கப்பட்டிருந்தது என்றனர். என் சிறுகதை “ஆழம்“ சிறுகதைக்கான தகுதிகளோடு எழுதப்பட்டிருப்பதாக நான் நம்புவதை போல “அறம்“ திரைப்படமும் திரைமொழிக்கான அத்தனை தகுதிகளோடு வெகு சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது என்பதையும் நம்புகிறேன்.

இப்படத்தின் இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு விவாதத்தை இரு முன்னணி இயக்குநர்களுடன் முன்னெடுத்திருந்த விபரத்தை நானும் அறிந்திருந்தேன். ஆக, படைப்பாளியின் “வலி“ உணர்ந்தவர்தான் அவரும். தவிர, அறம் படத்திற்கான கதை என்னுடைய கதையல்ல.. என்ற அவரது சமீபத்து மேடைப் பேச்சையும் கேட்டிருந்தேன். கதைக்கான கரு அல்லது “ஐடியா“ அவருடையதல்ல என்பதையே அவரும் கூறுகிறார். ஆக, கதைக்கான “கரு“ அல்லது “மையத்தை“ கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய கதையிலிருந்து எடுத்திருக்கலாம் என்பது சாத்தியப்படக் கூடிய நிகழ்வுதான். பொதுவாக படைப்புகளில், கருவை மையமாக்கி, அதனை மேலதிக தன்மைகளுடன் விவரிக்க முடியும். அதேபோல காட்சியமைப்பை மாற்றி அக்கருவிற்கான நியாயத்தை கூடுதலாக்கவும் இயலும். எது எப்படியாயினும் அவை “கரு“ என்ற மைய நிலையையே சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். இம்மையத்தை பற்றியே நான் பேசுவது. இதையே முகநுாலிலும் பகிர்ந்திருந்தேன். சிலர் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து விடுவது நாடெங்கிலும் நடக்கும் நிகழ்வுதானே.. என்றும் கூறியிருந்தனர்.

மக்களுக்காக படைக்கப்படும் இலக்கியம் என்பது நாடெங்கும் நடக்கும் நிகழ்வுகளை புனைவுக்குள்.. இலக்கியத்தின் கூறுகளுக்குள், அதனதன் இலக்கணத்தோடு ஐக்கியப்படுத்தி கலையாக்குவது என்றே கருதுகிறேன். (நிகழ்வை அப்படியே எழுதும் போது அது கட்டுரையாகிறது). இப்புனைவை எதனோடு ஒன்றிணைக்கிறோமோ.. அல்லது எது நுாலிழை போல் ஊடாடிக் கொண்டு படைப்பாளியால் மையப்படுத்தப்படுகிறதோ அந்த துல்லியம் மற்றொரு படைப்பில் எடுத்தாளப்படும்போது அந்நிகழ்வை பிறிதொருவரின் படைப்பை.. கற்பனையை.. மற்றொருவர் தனதாக்கிக் கொள்ள முயல்வதாகவே எண்ண முடியும்.

பணத்துக்காகவும் பெயருக்காவும் இது போன்ற புகழ்பெற்ற விஷயங்களை தனதாக்கிக் கொள்ளும் மனபோக்கு சிலருக்கு இருப்பதாக ஒருவர் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டு, எனக்கு தீர்ப்பு வாசித்ததையும் கவனித்தேன். வாசிப்பு என் வாழ்வோடு ஒட்டியது என்றாலும், எழுத்து ஆறு வருடங்களாக மட்டுமே என் வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தது.  இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று நாவல்களும், பல கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இவையனைத்திலும் பொதுவாக “அறம்“ என்பதே எனது கருத்தாக்கமாக கொண்டுள்ளதை என் படைப்புகளை வாசிப்போருக்கு புரிந்துக் கொள்ள இயலும். மேலும் எனது தனிப்பட்ட வாழ்விலும் இதை கடைப்பிடிப்பதை என் நண்பர்கள் நன்கறிவார்கள். என் படைப்புகள் வழியே எனக்கு கிடைக்கும் புகழ் எனக்கு போதுமானது. புகழ் பெற்ற பத்திரிக்கை ஒன்று, இது குறித்த எனது கருத்தை அறிய  தொடர்ந்து அணுகிக் கொண்டிருக்கின்றனர். புகழ் வேண்டியிருப்பின், அப்பத்திரிக்கையில் நான் இது பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கலாம். என் நோக்கம் அதுவன்று. வேறொருவரின் உழைப்பின் மீதோ.. அவர் பெற்ற புகழின் மீதோ.. ஏறியமர்ந்துக் கொள்ளும் நோக்கம் கூட “அறமற்ற நிலைப்பாடே“ அது எனக்கு உடன்பாடற்றது. என்னை அறிந்தவர்களுக்கு பொருளாதாரரீதியாகவும் நான் அறிமுகமே. இவை தன்னியல்பாகவே தன்னிறைவாக உள்ளதை நான் உணருகிறேன்.

புகழ் என்பது புற உலகை சார்ந்தது என்றே கருதுகிறேன். அகம் அதீத ஒளியுடையது. அது குகையின் அந்தகாரத்தை போல இருளானது. கடலின் தீரா அலைகளைப் போன்று ஓசையற்றது. பாலைவனத்தின் வெயில் போன்று குளிர்வானது. அக “ஒளி“க்கு லயங்கள் கூட உண்டு. அவை நீண்டு நீண்டு இனிய வலியை கொடுக்கின்றன. புற உலகின் வெளிச்ச முனைகளுக்கு இவை முற்றிலும் ஒவ்வாதது. அகத்தின் அதீதங்களுக்குள் என்னை தொலைத்துக் கொள்ளும் அல்லது மீட்டெடுக்கும் துழாவலில், ஊரார் புகழில் என்னை இறுத்தி வைத்துக் கொள்ளும் எண்ணம் கூட எனக்கு எரிச்சலுாட்டுகிறது.  

தோழர் ஒருவர் ஆழம்.. அறம் குறித்து அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தனது தலைப்பை ஒருவர் எடுத்துக் கொண்டார் என்றும் தனது நாவலின் தொடக்கத்தை தன் திரைப்படத்தின் தொடக்கக்காட்சிக்கு ஒருவர் வைத்துக் கொண்டார் என்றும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தன்னிலை விளக்கம் பெற்றுக் கொண்டேன் என்றும் கூறினார். மேலும் அறம் குறித்து, என் தரப்பில் நியாயமிருப்பதாகவும் கூறினார். ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் “அறம்“ படத்திற்கு வெளியிலிருந்து கதையை எடுத்தாள வேண்டிய அவசியமில்லை என்று முகநுாலில் பதிவு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து சாதகமாகவும் பாதகமாகவும் நிறைய கருத்துக்கள் வந்தன. முக்கியமான என் நண்பர்களாகிய பல தோழர்கள் இது குறித்து பலத்த மௌனம் சாதித்தனர். இது ஒன்றும் குறையல்ல என்றாலும் வருங்காலங்களில் நான் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிக்காட்டுதலாக இதைக் கொள்ளலாம்.

சமூகத்தின் அனைத்து நெறிகளிலும் சமத்துவம் வேண்டும் என்பதை என் படைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை என் எழுத்தை வாசிப்பவர்கள் உணர முடியும். (இந்த இடத்தில் சமத்துவம் என்பதை பெண்ணிய நோக்கில் சிந்திக்க வேண்டாம்). இலக்கியத்திலும் அந்த சமத்துவம் தேவைதானே..? உலக முழுதையும் ஆக்கிரமிக்க தளைப்பட்ட ஐரோப்பிய காலனியாதிக்க மோகத்தின் துர்பலன்களில் ஒரு நற்பலனாக ஆங்கிலம்.. ப்ரெஞ்சு மொழிகளின் வழியே மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளின் மூலம் இலக்கியம் உலகமயமாகி விட்ட நிலையில், இலக்கியத்திற்கு நாடு கிடையாது. மொழி கிடையாது. பண்பாடு கிடையாது. எந்த குறுகிய சிக்கலுக்குள்ளும் அது மாட்டிக் கொள்வதில்லை. போலவே, இலககியத்துக்கு மதம் கிடையாது.. இனம் கிடையாது.. சாதியும் கிடையாது. எவ்வழியில் இதைதான் நிறுவுகிறேனோ அவ்வழியில் புரிந்துக் கொள்வதுதானே “அறம்“..?  

நியாயங்கள் அதுவாகவே தன்னை நிறுவிக் கொள்ளும்.


***

No comments:

Post a Comment