Search This Blog

Wednesday, 6 December 2017

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது - என்னுரை


இந்த நுாலுக்கான முன்னுரையை எழுதத் தொடங்கும்போதே, இலக்கியம் ஏன்..? அதற்கும் எனக்குமான புரிதல் என்ன..? என்ற சுய அலசலுக்குள் மனம் செல்கிறது. ஏன் எழுதுகிறேன்..?
ஏன்.. எதற்காக..? என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். உயர்கல்விக்கு பிறகு  பணிப்புரிவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வு.. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.


இதற்கிடையே திருமணம் நடைபெற்றது. பணியும் தொடர்ந்தது. எவ்வித விருப்பமும் அற்று பணிக்குச் சென்றேன், பணியாற்ற. என் நேரமோ நாட்களோ எனக்கானதல்ல என்ற நிலை வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அடைந்தது போன்ற உணர்வை அளித்தது. பெரும்பாலும் விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை சிறிது காலத்திலேயே எடுத்து முடித்திருந்தேன். பிறகு குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதுமில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்வதற்கான ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். புத்தகக் கண்காட்சியில் பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல்.. கோலம்.. ரைம்ஸ்.. புத்தகங்களையும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதைஅல்லது என் மனம் தேடுவதை.. புரியாமலேயே நான் உணர்ந்துக் கொண்டிருந்தேன். மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. எதுவும் முழுமையடையாமல் இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் தொட்டதெற்கெல்லாம் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. 



அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், .சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், .மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் இது குறித்து பகிரவோ பேசவோ ஆளற்ற வெறுமை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. அல்லது தோன்றியதை எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்ததுஅந்த நேரத்தில், தினமணி - நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த கதையை அனுப்பி பார்ப்போமே.. என்று தோன்றியது. அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசும், பாராட்டும் கிடைத்தது. செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது.

சரி எழுதினேன்.. பிரசுரமானது.. எத்தனை பேர் படித்தார்கள்..?
படித்திருந்தார்கள். அடுத்தடுத்து எழுதிய இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு நான் எழுதிய “வலி“ என்ற சிறுகதை அதே தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2013 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தது. ஆனால் இந்தமுறை சுப்ரமணியன் என்று என் தந்தையின் பெயரை புனைப்பெயராக்கியிருந்தேன். ஆனால் விழாவில் என்னை அடையாளம் கண்டுக் கொண்ட தினமணி ஆசிரியர் அச்சிறுகதையை என் பெயரிலேயே பிரசுரித்தார். கூடவே எனது அலைபேசி.. முகவரி இவைகளையும் வெளியிட்டிருந்தார். கதை வெளியானதை தொடர்ந்து, இரண்டு நாட்கள் இடைவிடாத தொலைபேசி அழைப்புகள். தாய் மகனுக்கான பாசப்பிணைப்பு பற்றிய கதை அது. மகன்கள் கண்ணீருடன் பேசினர்.  நிறைய கடிதங்களும் வந்தன. மனம் நிறைந்து விட்டதா..? தேடல் குறைந்து விட்டதா..?
சிற்றிதழ்களுக்கு கதைகள் எழுதி அனுப்பினேன். கணையாழி, உயிரெழுத்து போன்ற பத்திரிக்கைகள் என் கதைகளை வெளியிட்டன.
“என்னோட கதைங்க.. இப்படி... இந்த பத்திரிக்கையில வெளியாயிருக்கு பாருங்க..”
”படமெல்லாம் நீங்களே போடுவீங்களா..?”
”அதெல்லாம் இல்லைங்க.. நாங்க அனுப்பி வைப்போம்.. நல்லாருந்தா பிரசுரம் பண்ணுவாங்க..”
”அப்ப ஒங்க கதை நல்லாயிருக்குங்கிறீங்க.. சரி.. எவ்ளோ குடுப்பாங்க..”
தமிழ் சூழலில் ஒரு எழுத்தாளர் எழுதி வாழ்ந்து விட முடியாது. பிறகெதற்கு எழுத்து..?
எழுத்து என்பதை ஒரு பெருமிதத்தின் வெளிப்பாடாக உணர்ந்தேன்.
பெருமிதம் எதிலிருந்து எழுகிறது..? திருப்தியின் மூலமா..? இந்த உணர்வு தவறா.. சரியா.. தவறெனில் ஏன் தவறு.. சரியெனில் ஏன் சரி.. இது எப்படி முடிவாகிறது..? கோபம்.. வெறுப்பு.. அன்பு.. போன்ற உணர்வுகள் ஏன் தோன்றுகின்றன..? ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்து கிளம்பும் இவ்வுணர்வுகளுக்கு மையம் என்ற ஒன்றிருக்க வேண்டுமே.. அவைதானே விழுமியங்கள். அவை பரிசீலனைக்குரியவையா.. அல்லது அவ்வாறே கடைப்பிடிக்கப்பட வேண்டியவையா..? இந்த சிந்தனைக்குள்தான் இலக்கியம் வருகிறது.
சரி.. இலக்கியம் என்பது என்ன..?
மனிதனின் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்க்கையை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, அறம் என்ற மையத்தை நோக்கி விழுமியங்கள் கட்டமைக்கப்பட்டு, நாகரீகம் உருவாகிறது. இவ்விழுமியங்களை உருவாக்குவதும் அல்லது மறுஆக்கம் செய்வதும்தானே இலக்கியம்.
தமிழ் சூழலைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை வணிக எழுத்து கட்டி ஆண்டது. அது குடும்பம்.. பாசம்.. நட்பு.. காதல்.. தேசம்.. மொழி.. என சமூகத்தின் எல்லா கூறுகளையும் பேசியது. முக்கியமாக இவ்வெழுத்து பண்பாட்டின் வேர்களை ஸ்திரப்படுத்தியது. அதேநேரம் அந்தரங்க தேடல்.. ஆழ்மனவெழுச்சியின் வழியே கண்டெடுக்கப்பட்ட படைப்புகள் பொது வாசக தளத்தை எட்டவேயில்லை. ஏனெனில் தன்னிச்சையான தேடலின் வழியே கண்டடையும் இப் படைப்புகளை இயல்பான ரசனைக்குள் அடக்க இயலாது. அதற்கு ஆர்வமும் தன்னுணர்வும் கொஞ்சம் பயிற்சியும் தேவை.
என்னை பொறுத்தவரையிலும் என்னை, எனக்கான தேடல்களுடன் விருப்பு வெறுப்பின்றி நான் அணுகியதை இலக்கியமாக உணர்ந்தேன். இந்த உணர்வின் வழியே, எழுத்தாளர் அறிவுரையாளராக.. விரிவுரையாளராக மாறி விடக் கூடாது என்பதும், அங்ஙனம் மாறி விடும்போது இலக்கியத்தின் கட்டற்ற தன்மை பாழ்பட்டுப் போய் விடும் என்ற எண்ணமும் தோன்றியது. போலவே, இலக்கியத்துக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரமோ, தீர்மானிக்கும் அதிகாரமோ வாய்க்கக் கூடாது. ஏனெனில் இலக்கியத்தின் தீராத வெளியினை இவ்வதிகாரம் குறிப்பிட்ட  சட்டகத்திற்குள் அமிழ்த்தி விடும். பிறகு அவை சார்பு நிலைக்கு தள்ளப்பட்டு விடும். உலகெங்கையும் வளைத்து விட முனைந்த ஐரோப்பிய காலனியாதிக்க மோகத்தின் காரணமாக இலக்கியம் உலயமயமானது. அவை ஒற்றைத்தன்மைக்குள்.. ஒருவித குறியீட்டு மொழிக்குள் புரிந்துக் கொள்ளப்பட்ட பிறகு, அவற்றை பண்பாட்டு விழுமியங்களுக்குள் அடக்கவியலாது என்றே தோன்றுகிறது. 

சமகால யதார்த்தத்தை முன் வைக்கும் படைப்புகள் அதற்கான சூழல்கள் மாறி விடும்போது நீர்த்து விடுகின்றன. சமகால யதார்த்தத்திலிருந்து என்றுமிருக்கும் அறச்சீறல்களை.. விவேகங்களை நோக்கி மானிட உண்மையை பேசும் படைப்புகள் நல்லதொரு கலைப்படைப்பாக மாறி விடுகின்றன. அதற்கானதொரு முயற்சியில் ஈடுபடவே மனம் விழைகிறது.   
பெரும் வாசிப்பின் ஊடாகவே, மனம் எழுத்தை மீட்டெடுக்கிறது என்று தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் வாசிப்பை விட என் மனம் அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது என்பதை இப்போது நினைத்தாலும் கூச்சமேற்படுகிறது. எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்க தொடங்கியபோது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது.
ஒரு கதையொன்று நினைவுக்கு வருகிறது.
சிறைப்பட்ட ஒரு ஓவியனின் கடைசி விருப்பமாக அவனுக்கு சாயமும் துாரிகையும் வழங்கப்படுகிறது. ஒளியற்ற அந்த சிறை அறையில் எதை வரைந்து விட முடியும்.. என்று இளக்காரம் அம்மன்னனுக்கு. சிறிது நாட்கள் கடந்தன. அந்த அறையிலிருந்து வெளிச்சம் வரத் தொடங்க, உணவளிக்கும் சிறு துளை வழியாக எட்டிப் பார்த்தான் மன்னன். அங்கே ஒளிப்பொருந்திய நீலவானத்தின் நடுவே ஓவியன் நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. எந்த ஆயுதமுமின்றி சுவரை எப்படி இடித்தான் என்ற அதிர்ச்சியோடு மன்னன் கதவை திறக்கிறான். அப்போதுதான் அது நிஜ வானமல்ல.. ஓவியம் என்று புரிகிறது. இளக்காரம் வழிந்தோட “இந்த ஓவியம் வெறும் கற்பனைதானே.. இது என்ன செய்து விட போகிறது உன்னை.” என்கிறான்.
”இந்த கற்பனை என்னை விடுதலை செய்யும் மன்னா..”


கற்பனை அவனுக்கு ஒளிப்பொருந்திய வானை அடையாளம் காட்டியது. அந்த கற்பனையில் ஏறி அவன் தப்பிச் சென்று விட்டான்.
இலக்கியத்தின் மனோன்னதம் இதுதான். அது இருளை கரைத்து வெளியை, ஒளியால் நிறைக்கிறது.


ஆகவேதான் எழுதுகிறேன்.
குடும்பம் துணை நிற்கிறது. ஆகையாலும் எழுதுகிறேன்.
இச்சிறுகதைத் தொகுப்பை நுாலாக்கி வெளியிட்ட வாசக சாலை அமைப்புக்கும், அதில் தேனீக்களாய் இயங்கும் நண்பர்களுக்கும், நண்பர் கார்த்திகேயன் வெங்கட்ராமன் அவர்களுக்கும் என் இனிய நன்றி.

No comments:

Post a Comment