Search This Blog

Wednesday, 10 January 2018

மையம்

டிசம்பர் 2017 சொல்வனம் இணைய இதழில் வெளியானது


கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன.
கடலையொட்டி அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப் பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் ஒரு பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை.. புனிதங்களை தவிர்த்து, கடலையும் அவரையும் தவிர வேறு யாருமற்ற தனிமை. அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதா.. அல்லது விதிக்ப்பட்டதை விருப்பமாக்கிக் கொண்டாரா என்பது அவருக்கே தெரியவில்லை.

தேவாலயத்தின் மணிக்கூண்டு ஒவ்வொரு மணி நேரத்தை தொடும்போதும் ஒலிக்கும் தேவவசனத்தை இப்போதே கேட்க வேண்டும் போல தோன்றியது அவருக்கு. “உன்னை விட்டு விலகுவதுமில்லை.. உன்னை கை விடுவதுமில்லை..“ அவரின் ஜீவன் இந்த தேவ வாக்கியத்திற்குள்தான் இனி வாழ வேண்டும். அதுவரை இங்கேயே அமர்ந்திருக்கத் தோன்றியது. அது இப்போதே ஒலிக்க வேண்டும் என்றும்.. இப்போது ஒலிக்க வேண்டாமே என்றும் ஒருமிக்க தோன்றியது.
அவரது அறையின் சாவி நீண்ட வராண்டாவிலிருக்கும் மேசையின் டிராயரில் கிடக்கும். அது மரியரோஸ்லினுக்கும் தெரியும். தன்னார்வ தொண்டர்கள் தேவாலயத்தை சுத்தப்படுத்தினாலும் அங்கிருக்கும் அறைகளையோ, வராண்டாவையோ சுத்தப்படுத்த ரோஸ்லின் வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. காலை ஆறு மணிக்கே வந்து விடுவாள். தேவாலயத்தின் பெரிய கேட்டின் சாவி அவளிடமும் இருக்கும். மதியம் வரை கூட நீடிக்காத பணியை மாலை ஐந்து வரை நீட்டித்துக் கொள்வாள். பெண்கள் உள்ளொடுங்கலாக வளர்க்கப்படுவதால் அவர்களுக்கு சுற்றி சுழல நான்கு சுவர்கள் கொண்ட மையம் தேவைப்படுகிறது.. ரோஸ்லினுக்கு அது கொஞ்சம் பெரிய சுவராக.. தேவாலய சுவராக உள்ளது என்பார் தாமஸ்.  புரிந்தோ புரியாமலோ ஆமோதிப்பாள் மரியரோஸ்லின்.
பவானிக்கும் மையம் என்ற ஒன்றிருந்தது. அது சிதிலமடைந்த கூரையாக இருந்தது. அவளுக்கு பெற்றோர்.. உடன்பிறப்புகள் யாருமில்லை என்பதை அறிந்திருந்தார் தாமஸ்ஃபிலிப். உறவினர்களின் முயற்சியால் அமையவிருந்த வாழ்க்கை கடைசி நேரத்தில் தட்டிப் போய் விட்டதாக ஒருமுறை சொல்லியிருக்கிறாள் ரோஸ்லின்.
”ரெண்டாந்தாரந்தான்.. அதுக்கென்ன.. ஊருல நாட்ல நடக்காததா.. பொசுக்குன்னு வேண்டாம்னு புடிவாதமா சொல்லிடுச்சு... எடுத்து சொல்ல ஆளில்ல.. பாவம் பச்ச சிசுவு ஃபாதர் அது.. கடசீகாலத்தில அதும் என்னமேரி ஓரியா கெடந்து சாவுணுமா..?” பேசிக் கொண்டே துாசி துரும்பை தட்டி விடுவாள். கடற்காற்று துாசியை பிசுக்காக்கியிருக்கும். தடுப்புகளற்ற வாராண்டாவில் துடைக்க துடைக்க துாசி கிளைத்துக் கொண்டேயிருக்கும்.
“படிச்சிருக்காங்களா..?” என்றார் தாமஸ் ஒருமுறை.
”ம்ம்.. பன்னெண்டு வரைக்கும் படிச்சிருக்காம்.. வெளியூர்ல கவுருமெண்ட் ஆஸ்டல்ல தங்கி படிச்சிருக்காப்பல.. மேக்கொண்டு படிக்க வைக்கிறேன்.. அப்டீ இப்டீன்னு சொல்லீட்டு கடசீல எல்லாரும் கைய விரிச்சிட்டாங்க..”
”தொணைக்கு..?” பார்த்ததில்லை என்றாலும் பச்சாதாபம் எழுந்தது.
”தொண என்ன தொணங்க.. சாதி சனத்தோடு ஒட்டுக்கா தானே அது வூடும் இருக்கு.. டவுன்ல ஏதோ கடயில வேல பாக்குதாம்..”
அந்த கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து கடினம்தான். பையன்கள் பாடு தேவலாம். கட்டட வேலைக்கு அழைத்துச் செல்லும் முதலாளிகள் லோடு ஏற்றும் அரைபாடி லாரியை ஊருக்குள் திருப்பி விட்டு அவர்களையும் அழைத்துக் கொள்ளலாம்.
பரட்..பரட்டென்று குப்பையை ஒதுக்கித் தள்ளுவாள்.  
”பொட்டப்புள்ளங்க நாலு எழுத்துப் படிச்சுடுதுங்களா... தலையில கல்லு மண்ணு துாக்கவும் மனசொப்பாது.. வௌக்குமாத்த புடிக்கவும் முடியாது.. ஏச்சுபேச்சு வாங்கீட்டுன்னாலும் கடைக்கண்ணிக்கு போவதான் பிரியப்படுதுங்க கொமருப்புள்ளங்க..”
”இதெல்லாம் ஒங்களுக்கெப்டீ தெரியும்..”
”அப்றம் என்னாங்க ஃபாதர்.. அம்பது வருசமா இங்கயேதானே கெடக்கேன்.. எனக்கென்ன குடும்பம்குட்டியா இருக்கு.. ஊருசனங்கதானே எல்லாம்..” என்பாள். ரோஸ்லீனைப் போல தாமசுக்கும் குடும்பம் இல்லை என்றாலும் வேதக்காரர்களை தவிர மீதியாட்கள் அவ்வளவாக அறிமுகமில்லை.
மதிய நேரங்களில் குடும்ப வாதைகளில் அகப்பட்டுக் கொண்ட நடுத்தர வயது பெண்ணைப் போல கடல் ஓலமிடுவதை அவரது அறையிலிருந்தே பார்க்க முடியும். அந்த ஓலம் வெயிலின் நிறத்தில் ஒளிர்வது போன்றிருக்கும். இந்திராணி வரும் நேரமும் அதுதான். வரும்போதே “மரியா..“ என்று குரல் எழுப்பிக் கொண்டே வருவாள். ”ஏய்.. ஃபாதரு உள்ளருக்காரு.. மெதுவா..” ஒரு சம்பிரதாயம் போல கையசைப்பாள் மரியரோஸ்லின். இந்திராணியும் சம்பிரதாயமாக பம்முவாள். ஆனால் பேச்சின் ஒலி குறைவதில்லை. பகல்கள் ஊராரின் கதைகளை தீவிரமாக அலசிக் கொண்டே நகரும். பரிதாபம்.. கோபம்.. பரவசம்.. என மாறி மாறி கிளம்பும் உணர்ச்சிகளின் இறுதியில் புதிய கதைகள் உருவாக்கப்படும். சில சமயம் தீர்ப்பும் எழுதப்படும். நல்ல விஷயங்களும் அவ்வப்போது நடந்து விடலாம். அதில் ஒன்றுதான் தட்டச்சு.. சுருக்கெழுத்து கற்று தர ஏற்பாடானதும்.
இந்திராணி முதலில் அவளின் இளைய மகளுக்காகதான் தாமஸ்ஃபிலிப்பை அணுகினாள்.  
”ஃபாதர் மனசு வைக்கணும்.. எங்க மகளோட பிரிசன் அவள வுட்டுட்டு ஓடிப் போயிட்டான்.. கைல ரெண்டு மக்க அதுக்கு.. யேசு சேவ செய்றமேரி எங்காளுங்க கோவில்ல எந்த வழமையும் கெடையாதுங்க ஃபாதர்..”
முதலில் நான்கு தட்டச்சு இயந்திரங்கள் வாங்கினார். “கம்யூட்டர் காலத்தில..?“ இழுவையான கேள்விக்கு பிறகுதான் ஃபண்ட் சேங்ஷன் ஆனது. காலை ஆறு மணியிலிருந்தே இளம் பிள்ளைகள் வந்து விடும். அக்கம்பக்கம் கிராமத்துக்கும் விஷயம் தெரிய வந்ததில் ஆளுக்கொரு மணி நேரம் கணக்கு வைத்து அடித்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. அரசாங்க தேர்வில் இரண்டு பேருக்கு டைப்பிஸ்ட் வேலைக் கிடைத்ததும் தாமஸுக்கு நல்ல திருப்தி. என்றோ படித்துக் கொண்ட தட்டச்சுப் பழக்கம் இன்று மற்றவர்களுக்கு கைக்கொடுப்பதை இறைப்பணியைத் தாண்டி கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொண்டார். சுருக்கெழுத்தும் சொல்லி தர ஆர்வம் கொண்டார். பிள்ளைகளுக்கும் ஆர்வம்தான். பிறகு  ராபர்டையும் செந்திலையும் தவிர்த்து ஆண் பிள்ளைகள் “புரியில..“ என்று நெத்தாக நின்று போயினர். ராபர்டையும் அவன் அம்மாதான் இழுத்து வந்துக் கொண்டிருந்தாள். சுருக்கெழுத்து வகுப்பு முடியும் வரை தேவாலயத்தின் நீண்ட படிக்கட்டுகளி்ல் அமர்ந்திருப்பாள். தாமஸின்  ஓங்கிய குரலில் “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்..“ என்று டிக்டேஷன் தொடங்கும் போது இன்னும் அரை மணி நேரத்தில் வகுப்பு முடிந்து விடும் என்பது தெரியும் அவளுக்கு.
புரியாமலில்லை. தனக்கென்ன ஆயிற்று என்பதில் தாமசுக்கு தெளிவான புரிதலிருந்தது. ஒருவேளை பூமி சூழல்வதற்கான மையம் இதிலிருந்துதான் விரிகிறதோ..? கைகள் இரண்டையும் பின்னுக்கு நீட்டி, அதன் பலத்தில் உடலை சாய்த்து கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டார். வலது கால் கட்டை விரல் வீங்கியிருந்தது.. அதிலிருந்து இரத்தம் வழிந்துக் காய்ந்துக் கிடந்தது. பார்வை வெறித்திருந்தது. கடலின் சலனங்கள் கண்களுக்கு காட்சிகளாக மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன. கவனம் அல்ல.. கவனமின்னையே இங்கு பிரதானம்.
இத்தனைப் பெரிய நீரையும் நிலத்தையும் மலையையும் மடுவையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் சுழற்றும் பூமி எத்தனை அதிசயமானது..? பூமி நிற்காமல் சூழலுவதால்தான் இவை கலக்காமல் இருக்கின்றனவாம். அதெல்லாம் அறிவியல். அது தேவையில்லை. ஒன்றுமில்லா வெளிக்குள் அன்பு.. கோபம்.. வெறுப்பு.. நட்பு.. காதல்.. காமம் இவையெல்லாம் எப்படி தோன்றியிருக்கும்..? அதற்கான ஸ்திரம் எதுவாக இருக்கும்..? தேடியலைந்தவர்கள் ஆளுக்கொரு அனுபவம் பெற்றாலும் அனைத்தும் ஒரு புள்ளியில்தானே கோர்த்து கிடக்கின்றன. அதன் மீது எழும் உணர்வுகள்தான் லௌகீகத்தை தீர்மானிக்கின்றன. அறவிழுமியங்கள் அதை கட்டுக்குள் கொண்டு வருகின்றன. பூமி சுழன்று சுழன்று காலத்தை முன்னகர்த்தும் போது விழுமியங்களும் அதற்கேற்ப மாறி விடுமா..? மாற்றம் பரிசீலனைக்குரியவையா.. அல்லது மாறாத மையமா..?
சுருக்கெழுத்தை ஆர்வமாக கற்றுக் கொண்வர்களில் பவானியும் ஒருத்தி. “இங்கிலீசெல்லாம் ஒண்ணும் புரிய மாட்டேங்கு.. நா போவுல போ..” ராபாட்டுக்கு பிறகு ஒரே ஆண்மகனாக வந்துக் கொண்டிருந்த செந்திலும் நின்றுக் கொண்ட போது பவானி சுருக்கெழுத்தில் கீழ்நிலை வகுப்பை முடித்திருந்தாள்.
“ஃப்தாரய்யா... நீங்க சொல்லிக் குடுக்கறத நோட்டு வாங்கி வச்சுக்கிட்டு வீட்ல குச்சி குச்சியா எழுதி பளவிக்கிட்டு ஒக்காந்திருக்கு அந்த புள்ள.. கேட்டமுண்ணா எழுதி பளவுனாதான் பரிச்சயில பாசாவ முடியுங்குது.. அதுக்காண்டி பாத்துக்கிட்டிருந்த வேலயும் வுட்டுப்புடுச்சு.. அய்யா வேதக்கோயில்ல எதாச்சும் வேலப் போட்டு குடுத்து மாசம் இம்புட்டுன்னு குடுத்தா பாவம் பொளச்சிக்குங்க..” பவானியின் மீது இந்திராணிக்கு பரிதாபமிருந்தது.
இந்த யோசனை தனக்கு ஏன் தோன்றாமல் போனது என்று நினைத்துக் கொண்டார் தாமஸ்.  கடிதங்களை தட்டச்சு செய்வது.. விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது என்று என்றாவது ஒருநாள்தான் வேலையிருக்கும். அதை தாமசே பார்த்துக் கொள்ள முடியும்.  ஆனாலும் உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்துக் கொடுத்தார். அதற்கான கடிதத்தையும் அவர் சொல்ல சொல்ல, பவானி சுருக்கெழுத்தில் குறி்த்துக் கொண்டு தெளிவாக தட்டச்சு செய்திருந்தாள். அந்த பிழையில்லாத கடிதத்தை வாங்கிக் கொண்ட போதுதான் தாமஸ்ஃபிலிப் அவளை கவனித்தார். நீண்ட மூக்கு.. அடர்ந்த புருவம்.. உயரமான உருவம்.. ஒல்லியான தோற்றம். இளங்கருப்பில் லட்சணமான முகம். இருபத்தைந்துக்குள்ளிருக்கும் வயது. துறுதுறுப்பான கண்கள்.. முடிகளடர்ந்த இமை.. மனதை நகர்த்தி விட்டு பேப்பருக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு “குட்.. நல்லா பண்ணியிருக்கீங்க..” என்றார்.
தாமஸ் போலவே பவானியும் அதிகம் பேசாத சுபாவத்தைக் கொண்டிருந்தாள். ”கூடமாட வீட்ல ஆளு அம்பு இருந்ததானே பேசி பளவியிருக்கும்..” என்பாள் இந்திராணி. தன்னைதான் ஜாடைமாடையாக சொல்கிறாளோ என்றிருக்கும் அவருக்கு.
”தாங்க்ஸ் ஃபாதர்..” என்றாள்.
அது தாங்க்ஸ் தாமஸ் என்பது போல கேட்டது. அவரை விட மூத்தவர்களுக்கு கூட அவர் ஃபாதர்தான். ஆசிரியராக மாறி தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தருகையிலும் அவர் ஃபாதர்தான். யாரும் தன்னை பெயரிட்டு அழைக்காதது குறித்து என்றைக்கும் எதுவுமாகவும் அவருக்கு தோன்றியதில்லை.
கடிதம் அனுப்பிய நான்காம் நாளே அவளுக்கு உதவிப் பணம் அளிப்பதற்கான அனுமதி கிடைத்து விட்டதாக மரியரோஸ்லீனிடம் சொன்னார். அது இந்திராணி மூலமாக பவானிக்கு தகவலாகக் கிடைத்தது. இத்தனைக்கும் தினமும் வகுப்புக்கு வருகிறவள்தான். அவளிடம் சொல்வதற்கு வெட்கமா.. தயக்கமா.. எதுவென்று புரியவில்லை. இருந்தாலும் உதவித்தொகைக்கான அனுமதி பெற குறைந்தது நான்கு மாதங்களாவது ஆகி விடும் என்பது மட்டும் அவருக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
வெயில் லேசாக எழும்பத் தொடங்கியிருந்தது. அந்நேரத்தில் இளம் தாய்மார்களை போல கடல் துறுதுறுப்பாக அலைகளை அள்ளி வீசும். பெண்கள் இப்படிதான் இயங்குவார்கள் போல. அப்படி இயங்கினால்தான் வாழும் நாட்களுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை அவர்களால் முடிக்க இயலும் என்று தோன்றும். இப்போது அவருக்கு எதுவுமே தோன்றவில்லை. கடுக்கத் தொடங்கிய வெயில் கூட அவருக்கு உறைக்கவில்லை.
மரியரோஸ்லினின் குரல்தான் அவரை கலைத்தது.
”ஃபாதர்..” அவள் குரலில் பதற்றமிருந்தது. காலையில் துப்புரவு பணிக்காக வந்தபோது ஃபாதர் அறையில் இல்லாதது அத்தனை பிசகில்லை. பிறகும் வராமல் போகவே, தேடிக் கொண்டு வந்திருந்தாள்.
வருகிறேன் என்பது போலவும் “ஃபாதர்“ என்ற விளிப்புக்கு பதிலளிப்பது போலவும் மையமாக தலையசைத்தார் தாமஸ். நடமாட்டமற்ற கடற்கரை தாயற்ற குழந்தையை போலிருந்தது.  அலைகள் கூட தாயின் வரவுக்காக கைகளை நீட்டிக் கொண்டு ஆர்வமாக முன்னேறுவதும் தாயற்ற நிலையில் ஏங்கி அழுது பின்னோக்கி நகர்வதுமாக இருந்தன.
”டிபன் வாங்கி வச்சிடவா ஃபாதர்..?”
”இல்ல.. வேணாம்..”
”சாப்டீங்களா ஃபாதர்..”
”இல்ல..” தலையசைத்தார்.
”புள்ளங்க டைப் கிளாசுக்கு வத்துடும்..”
எந்த நேரத்திலும் வகுப்பு கெடக்கூடாது என்பதில் ஃபாதர் தீர்மானமாக இருப்பது அவளுக்கு தெரியும்.
”பருச்ச நெருங்கீடுச்சு..”
மரியரோஸ்லீனுக்கு கற்பூர புத்தி. படிப்பறிவு இல்லையென்றாலும் சூழ்நிலைகளை வைத்தே நடப்பை உத்தேசமாக அறிந்துக் கொள்ள இயலும். அந்த தன்மையில்தான் ஊரை பற்றிய கிசுகிசுப்புகள் அவளிடம் வற்றாமல் இருந்துக் கொண்டேயிருந்தன. சம்பளத்துக்குதான் என்றாலும் தேவாலய ஊழியம் செய்வதால் அவளே அவளுக்கான சலுகைகளை எடுத்துக் கொள்வாள். ஒருவேளை ரோஸ்லீன் எதையாவது உணர்ந்திருப்பாளோ..? எண்ணமே அடிவயிற்றை பிடித்து இறுக்கியது. கடலலைகள் அடங்காமல் எழும்பிக் கொண்டேயிருந்தன.  இந்த தேவாலயத்திற்கு தொண்டுழியம் செய்ய வந்தவர்களில் யாராவது இப்படி மனம் துடித்திருப்பார்களா..?
”அய்யய்யே.. இப்டியெல்லாம் நெனப்பே வரக் கூடாது.. அதான் ஐதீகம்..”
”ஐதீகமா.. இதென்ன புது வார்த்த..?”
”புதுசா பழசாங்கறதா இப்ப விவாதம்..? காலங்காலமா நடந்துட்டு வர்றது.. மீற முடியாதது..”
”அப்ப வரலாறுன்னுதானே சொல்லுணும்..”
”வரலாறுங்கறது வெத்து நிகழ்வுகள்தான்.. ஐதீகங்கறது நீ சொல்றியே விழுமியம்.. அந்த விழுமியங்கள நிகழ்வுகளோட இணைச்சு மறு ஆக்கம் செய்து கிடைக்கற பக்குவம்..”
”அப்போ அது கற்பனையா..? கற்பனைன்னா மீறல்கள் சாத்தியம்தானே..”
”இல்ல.. மீறக்கூடாதுங்கறதுக்காக ஏற்பட்ட கற்பனை.. நீ சொல்றியே மையம்.. பூமி சுத்தறதுக்கான மத்திய விசை.. உயிர்கள் இயங்கறதுக்கான சென்டர் பாயிண்ட்.. இதெல்லாம் அததோட புள்ளியிலிருந்து மீறிடுச்சுன்னா என்ன நடக்கும்..”
கடல் விறுவிறுப்பாக உள்ளே வந்து தாமஸை குளிப்பாட்டி விட்டு நகர்ந்தது. எழுந்துக் கொண்டார். யாரோ அருகிலிருக்கிறார்கள் என்பது போல உணர்ந்தது  மாயை அல்ல. உள்ளிருக்கும் தேவன்தான் எனக்கு அறிவுறுத்துகிறான். மீறல் சாத்தியமல்ல. சாத்தியமே அல்ல. உறங்க வேண்டும் போலிருந்தது. நேற்றிரவே இங்கு வந்திருந்தார். வலதுக்கால் கட்டை விரல் கருங்கல்லில் பலமாக இடித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.  வலி ஆறுதல். வலி நல்லது. வலி கவனத்தை குவிப்பது. அழியப்போகும் உடல்.. தீயிட்டால் பொசுங்கி விடும் உடல்.. நீர் மிகுதியில் மூழ்கி விடும் உடல்.. அது இத்தனை வீரியமாகவும் எழ முடியுமா..? இந்த உடல் அத்தனை மனவலிமையையும் வென்று விட கூடியதுதானா..? உடலின் தேவைக்கேற்ப மூளை தந்திரங்களை வடிவமைத்துக் கொள்ளுமா..? இதற்கு அவரது மூளை மட்டும் என்ன விதிவிலக்கா..? அதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.
”ஷார்ட்ஹேண்ட் எக்ஸாம்க்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு.. நைட் ஏழு மணிக்கு மேல நா ஃப்ரீதான். உங்களுக்கு கிளாஸ்க்கு வர முடிஞ்சா எனக்கு டிக்டேஷன் கொடுக்கறதுல ஆட்சேபனை இல்ல..” கால்மணி நேரத்தில் எடுக்கப்பட்ட குறிப்புகளை ஆங்கிலத்தில் விரிவாக்கம் செய்ய ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.
”டிரான்ஸ்கிரிப்ஷன கூட வீட்ல பண்ணிக்கங்க.. ரெண்டு டிக்டேஷன் மட்டும் போட்டுடுறேன்..” வகுப்பில் மொத்தமே மூன்று மாணவிகள்தான்.
”ஃபாதர்.. என்னால ஈவினிங் வர முடியாது..” தயக்கமாக சகாயமேரி சொல்ல, ரீட்டா “எனக்கும்“ என்பதை போல தாமஸை பார்த்தாள். அவர்கள் சொல்வதற்கு முன்பே தாமசுக்கு இது தெரிந்ததுதான். முகம் ஒருவித அப்பாவித்தனத்துக்குள் சென்றது. இது கூட மூளையின் தந்திரமானக் கட்டமைப்புதான். அதே பாவனையோடு பவானியின் பக்கம் திரும்பினார். வெந்தயக்கலர் மேல் சட்டை அவளுக்கு பாந்தமாக இருந்தது. முன்புறம் சற்றே துாக்கலாக்கி செய்திருந்த முடியலங்காரம் அவளுக்கு பொருத்தம்தான். அவளின் அழகிய நீண்ட விரல்கள் வெளிர்நீல நிற சுருக்கெழுத்து பென்சிலை கவ்வியிருந்தது.  வெளியே பறந்த மயிரை காதுக்குள் விட்டுக் கொண்டாள். கூராக்கப்பட்ட பென்சில் எங்காவது அவளை குத்தி விடுமோ என்று எழுந்த பதற்றம் தாமசுக்கு மிகவும் புதிது.
”வர்றேன் சார்..” என்றாள்.
மூளை அதன் தந்திரத்தை அதிகப்படுத்தியது.
”வேணும்னா யாரையாவது தொணைக்கு அழைச்சிட்டு வாங்களேன்..”
”யாரு ஃபாதர் இருக்கா தொணைக்கு வர்றதுக்கு..” இயல்பாகதான் சொன்னாள்.
”நான் இருக்கேன்.. நான் இருக்கேன்..” வாய் வழியாக வார்த்தைகள் வந்து விட்டதா என்று மூளைக்கே குழப்பம்தான். நல்லவேளை அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அதற்கு பிறகுதான் அவருக்குள் எல்லாமே தீவிரமானது. கன்னங்களில் அறைந்துக் கொண்டார். தேவனிடன் கையேந்தினார். மண்டியிட்டார். தேவன் ஒளிப் பொருந்தியவன். அகவொளி அளிப்பவன். அனைவரையும் காப்பவன். அறையின் கதவு சன்னல்களை சாத்தினார். அலையோசைகள் முற்றிலும் நின்றிருந்தன. ஆளரவம் அற்ற நிசப்தம். டிக்டேஷன் உரையை தவம் போல படித்தார். வழக்கத்தை விட குரல் உயர்ந்திருந்தது. அலைபேசியில் பதிவு செய்தார். இரண்டு டிக்டேஷன்களை பதிவாக்க அரைமணி நேரம் பிடித்தது. வராண்டாவிலிருந்த டேபிளின் மீது அலைபேசியை கிடத்தி, “அலைபேசியை இயக்கி குறிப்பெடுத்துக் கொள்ளவும்..’ என துண்டுச்சீட்டில் எழுதி அதனடியில் வைத்தார். எழுத்துகள் கோணல்மாணல்களாக இருந்தன. எப்போதும் இப்படி இருந்ததில்லை.
கடலும் தேவனை போல கருணை நிரம்பியது. கடலை நோக்கி விறுவிறுப்பாக நடந்தார். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு தீர்வு. தீர்வில்லாத நிகழ்வுகளும் உண்டு. சமீபமாக அவரின் வாதையும் அதுதான். ஆனால் தேவனால் எல்லாம் கைக் கூடி வரும். அந்த நம்பிக்கையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. மனம் முழுக்க வியாபித்த உணர்வை “தேவனே.. தேவனே.. என்ற உச்சரிப்பில் முக்காட்ட எண்ணினார். உச்சரிப்பின் ஒலியை முடிந்த மட்டும் கூடுதலாக்கினார். தேவனே. தேவனே.. தேவனே.. விறுவிறுப்பான நடையில் ஒலி குறைந்துக் கொண்டே வந்தது. அந்திக்கடல் ஆக்ரோஷம் கொண்ட தாயைப் போல தரையை ஓங்கியறைந்தது. பிறகு கதறியது. கரையெங்கும் இரத்தம் நுரையாக நுரைத்துக் கிடந்தது. அப்போதுதான் கால் பெருவிரல் அங்கிருந்த கல்லில் வலிமையாக மோதிக் கொண்டது. அதிலிருந்த வழிந்த இரத்தம் நுரையில் கலந்தது.
”மரியரோஸ்லீன்..” என்று குரல் கொடுத்தார்.
பதிலில்லை. நல்லவேளையாக கிளம்பியிருந்தாள்.
ஒலிப்பெருக்கியில் தேவ வசனம் ஒலித்தது.
‘உன்னை விட்டு விலகுவதுமில்லை.. உன்னை கை விடுவதுமில்லை..”
தேவனே.. தேவனே.. ஓங்கி குரலெடுத்து மண்டியிட்டார். தேவனே.. தேவனே.. தேவனே.. தேவனே.. சிலுவையிட்டுக் கொண்டார். பெருவிரல் வலிக்க தொடங்கியது.  உள்ளம் சில்லிட்டிருந்தது. கண்களில் நீர் பெருகி வழிந்தது.
அனிச்சையாக கழுத்தில் தொங்கும் அலைபேசியை கை துழாவியது. கிட்டத்தட்ட அரை நாளாக இங்குதானிருக்கிறார். இதுவரை அலைபேசியில் ஒரு அழைப்பும் வரவில்லை. யாரும் தேடவுமில்லை ஃபாதர்.. ஃபாதர் என மாணவர்கள் காட்டும் பிரியம் கூட மாயைதான் போலிருக்கிறது. கைப்பேசியை வராண்டாவின் மேசையில் வைத்து விட்டு வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அதில் நிறைய தவறிய அழைப்புகள் இருக்கலாம். யாராவது தேடியிருப்பார்கள். எண்ணமே மனதில் உற்சாகத்தை வரவழைத்தது. என்னை காணாமல் பதறியவர்களை அந்த அழைப்புகளின் எண்ணிக்கையை வைத்துக் கண்டுக் கொள்ளலாம்.
நிமிர்ந்து தேவாலயத்தின் சிலுவையை நோக்கினார். அது அன்னையின் கரங்களை ஒத்தது. தாயின் சூட்டுக்குள் உடலை பொதித்துக் கொள்ளலாம். நடையை எட்டிப் போட்டு நடந்தார்.

தவறிய அழைப்புகளைப் போல தவறிய எதிர்ப்பார்ப்புகள் அலைபேசியில் தெரிய வாய்ப்பில்லை. அப்படியொரு தொழில்நுட்பம் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் பவானியின் எண்ணங்களை ஃபாதர் தாமஸ்ஃபிலிப் கண்டுப்பிடித்திருக்கலாம்.  
                              ***

No comments:

Post a Comment