Search This Blog

Wednesday 25 April 2018

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.



வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி  மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது.


தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.  காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால்  சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்..  உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.


சித்ராவின் கோபத்துக்கு பின்னிருக்கும் நியாயம் காடாக அடர்ந்து பரந்திருந்தது. அதன் பெரிய உடலுக்கு.. அதன் பழக்கவழக்கங்களுக்கு.. அதன் சுதந்திரப் போக்குக்கு.. அதன் தனிமை விருப்பத்துக்கு.. ஏற்ற தாரளமான பரப்பு. உயிரியல் பூங்காவின் மொத்த பரப்பும் சித்ராவுக்கே போதாது. மலையடுக்குகள் பனித்திரைக்குள் வரையப்பட்ட கோட்டோவியங்களாய் தெரிந்தன. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. நான் நிற்கும் இந்த இடம் கூட அவை போன்றதொரு சிகரமாகதான் இருக்க வேண்டும். அங்கு பொசிய பொசிய அண்டிக் கிடக்கும் பசுமை இங்கேயும் இருந்திருக்கும். பின்புறமாக திரும்பிக் குடிலைப் பார்த்தேன். ஐந்து நட்சத்திர விடுதி போல அத்தனை பெரியது.. அத்தனை நவீனமானது.. இத்தனை நவீனங்களையும் இங்கு சேர்க்க எத்தனை இயற்கை செலவாகியிருக்கும்..? நான் பணியில் சேர்ந்த போதுதான் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தாள். பார்த்தபார்வைக்கே அவளை பிடித்திருந்தது. ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய என்னுடைய சூழல் சித்ராவின் சூழலை ஒத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

காட்டைப் போல சீதாவின் மூர்க்கமும் சமாளிக்க இயலாத பெருவெளிதான்.. பார்வையாளர்கள் சிலரை ரத்தக்காயப்படுத்தியிருக்கிறாள். இவள் மரணத்துக்கு சிபாரிசு செய்த கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருந்தேன்.. செய்தாக வேண்டிய நெருக்கடி. நான் திரும்பவதற்குள் சித்ரா இல்லாமல் போகலாம். குடிலுக்குள் வர மறுத்து திறந்தவெளியில் தலையை திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்த அந்த கம்பீரமான தோற்றம்தான் இறுதியானதாக இருக்கலாம். இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மரண தண்டனைக்கு நாள் குறித்தாகி விட்டது. தேவைப்பட்டால் ஆட்களை வரவழைத்துக் கொள்வதாக சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டேன்.

அதேசமயம் இங்கு வர வேண்டிய தேவையும் இருந்தது. இல்லையெனில் அத்தனை சுலபமாக அனுமதி கிடைத்து விடாது. நாளை காலையிலிருந்து வேலை துவங்க வேண்டும். வேலை என்ன வேலை.. புலியை கண்டுப்பிடிக்கும் வேலைதான். இந்த காட்டில் புலியின் தடம் தென்படுகிறதாம்.. நாட்டில் மனிதத்தடம் தென்படுகிறாம் என்று புலிகளெல்லாம் இப்படி ரூம் போட்டு யோசிக்குமோ..? அது கிடக்கட்டும்.. செயற்கைக் கோள் காமிராவைக் கூட ஏமாற்ற முடியுமா..? ஏமாற்றியிருக்கிறது ஒரு ஒற்றைப் புலி.. அப்படிதான் சொல்கிறார்கள்.. புலியின் தடத்தை கண்டதாக சொன்னவர்கள். அவர்கள் சுரங்கக்கூலிகள். வெறும் கூலிகள் மட்டுமல்ல.. இங்கிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகள் என்பதால் நிச்சயம் நம்பிதான் ஆக வேண்டும். நம்பியதால்தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.

”சார்.. சாப்பாடு எடுத்து வச்சிறவா…?” பின்னால் திரும்பினேன். குடிலின் பணியாள். உயர்த்தி பொருத்திய தொப்பி.. நேர்த்தியான உடைகள்..  கையுறை.. ஷு அணிந்த கால்கள் என சுத்தபத்தமான மனிதராக தெரிந்தார்.

”பத்து நிமிஷம் கழிச்சு வர்றேனே..” என்றேன்.



சித்ராவுக்கு பிறந்த மூன்று குட்டிகளில் சீத்தாவும் பன்னீரும் துறுதுறுப்பானவை. மாயா பிறந்த ஒரு மாதத்தில் இறந்துப் போனாள். வளர வளர பன்னீரை விட சீத்தாவிடம் துறுதுறுப்பும் துடிப்பும் அதிகம் தெரிந்தது.என் மடியிலும் தொடையிலும்  நிமிண்டி விளையாடும்போது அவற்றின் உடல்பலத்தை என்னால் உணர முடிந்தது. சீத்தாவும் பன்னீரும் உணவுரீதியாக தாயை அண்டவிடாமல் பழக்கப்படுத்தப்பட்டது கூட இந்த மரண தண்டனையின் தொடக்கமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டேன். டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை அங்கிருந்த ஒருவர் சிநேகமாக நீட்ட.. தயக்கமாக வாங்கிக் கொண்டேன். அறிமுகத்தொனியில் சிரித்தார். மேற்கொண்டு நகரவியலாத என் மௌனம் அவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேலும் அவரை  சங்கடப்படுத்தாமல் என்னை விடுவித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். தனிமைதான்.. படுக்கையறை உட்பட எல்லா இடங்களுமே தனிமைதான். விரும்பி அமைத்துக் கொண்டேனா.. அல்லது அதுவாக அமைந்து விட்டதா.. ஏதோ ஒன்று.. தனிமையும் மௌனமும் எனக்கு பிடித்துப் போனது.. மலையடுக்குகளில்  உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். சித்ராவால் என்னை உணர முடிவது போல. அவள் உணர்வதை என்னாலும் உணர முடியும். அவளுக்கு என் அன்பு தெரியும்... சித்ரா.. என்ற அழைப்புக்கு ஸ்ஸ்ஸ்.. என ஒலிக் கொடுப்பாள். என் அதட்டல் தெரியும்.. என் கடிந்துக் கொள்ளல் தெரியும்.. அடைப்பட்டிருக்கும் கம்பியில் முட்டி என் கவனத்தை கலைக்கும் அவள் கோபம் எனக்கும் புரியும். மெல்ல மெல்ல தணிந்து தெளியும்போது நான் செல்லக் கோபத்தில் நகர்ந்துக் கொள்ள மூச்சுக்காற்றின் சீறலை எச்சிலாக தெறித்து என்னை சமாதானப்படுத்துவாள். எனக்குதான் தெரியவில்லை.. இனி சித்ரா இல்லாத நாட்களை எப்படி கடத்துவது என.

”என்ன சார்.. மனுஷன்ட்ட பேசற மாதிரி புலிக்கிட்ட பேசுறீங்க.. அதுக்கென்ன தமிழா தெரியப் போவுது..?” என்றார் உயிரியல் பூங்கா ஊழியர்.

”ஏன் தெரியாது.. நல்லா தெரியும்..” என்றேன்.

இன்டர்காம் ஒலியில் கலைந்து எழுந்தேன். ”லிக்கர் எதும் வேணுமா சார்..”

”ம்ம்..” யோசித்தேன்.. “இல்ல.. வேணாம்..“

நிச்சயம் உறக்கம் வரப் போவதில்லை. எழுந்து வெளியே வந்தேன். செயற்கை குளிரூட்டியை விட இயற்கை அதிகமாக குளிர்ந்து கிடந்தது. கம்பளியை போர்த்திக் கொண்டேன். இந்த இடத்தில் முன்பு யானைகள் கூட்டமாக வலசை வந்திருக்கலாம். காட்டுப்பன்றிகளும்.. கரடிகளும் மான்களும்.. அவற்றோடு இணக்கமாக பழங்குடிகளும் வாழ்ந்திருக்கலாம். ஏன்.. சித்ராவும் அவள் குடும்பமும் கூட இங்கு உலவியிருக்கலாம். காட்டின் வேட்கை தணியாத நேரங்களில் அறைக்குள் நுழைய பிடிவாதம் காட்டுவாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் மூர்க்கத்தை விட குழப்பமே மிகுந்து தெரியும். ஏதிலி வாழ்க்கை ஏற்படுத்தியக் குழப்பம். அந்தக் குழப்பத்தில்தான் இரண்டு மனித உயிரை காவு வாங்கியிருந்தாள். அதற்காக விதிக்கப்பட்டதுதான் இந்த மரண தண்டனை.


காட்டையும் விலங்குகளையும் தவிர்த்து மனிதர்கள் உறங்கத்தில் கிறங்கியிருந்தனர். லான், சிறு விளக்கு ஒளியில் வெகு சுத்தமாக தெரிந்தது. தடித்த கண்ணாடி சன்னல்களின் வேலைப்பாடுகள் வெளிப்புறக்காட்சியை முற்றிலும் மறைத்திருந்தன. கதவை திறக்க முயல, காவலாளி விழித்துக் கொண்ட பிறகு திடுக்கிட்டுப் போனார். அவரிடம் சமாதானமாக சிரித்தேன்.
”சார்.. நைட்ல வெளிய போறது பாதுகாப்பில்லைங்க..” என்றார் நன்றாக விழித்துக் கொண்டு.

”இத்தன தடுப்ப மீறி என்ன நொழஞ்சுடும்..? ஸ்வெட்டரை வேன்ல வச்சிட்டு வந்துட்டேன்..  எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றபடி நடந்தேன்.

வேனிலிருந்து கீழே இறங்கியபோது தான் காவலாளி எனக்கு காவலாக நிற்பதை கவனித்தேன்.
”ஸ்வெட்டருங்க..” என்றார் ஞாபகம் படுத்தும்தொனியில்.

அதை சட்டை செய்யாதவனாக ”அய்யோ.. சாரி.. நீங்க நிக்கறத கவனிக்கல..” என்றேன்.

என் எண்ணத்தை புரிந்தவர் போல ”சில பேரு இப்டிதான் ராத்திரி நேரத்து காட்டை பாக்க விரும்புவாங்க.. வியூ பாயிண்ட்க்கு போலாமா சார்..” என்றார்.

உடனே சம்மதித்தேன். அருகிலிருந்த கூம்ப வடிவ சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார். உட்புறமாக அமைக்கப்பட்ட சுழலும் படிகளின் வழியே மேலேறினோம். உயரம் கூட கூட அகலம் குறுகிக் கொண்டே வந்து வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானத்திற்குள் எங்களை சேர்த்தது. இரண்டு ஆள் நிற்பதற்கேற்ப அகலத்தில் கட்டுமானம் வெளிப்பகுதியில் விரிந்து, சற்றே நெருக்கமான இரும்புக் கம்பிக்குள் அடைப்பட்டிருந்தது.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றக்குமான கண்ணாடிக் கதவு. காலடியில் சிறுஒளியை எழுப்பிய மின் விளக்கு என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடில்.

மலைக்காற்று கடும் குளிராக தோன்றியது. பகலில் தெரிந்த காட்சிகள் இரவில் புதிது போலிருந்தன. வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காணுமிடங்கெங்கும் பரவியிருந்த இருள் கண்களுக்கு பழகத் தொடங்க, வனம் புலப்படத் தொடங்கியது. நகரத்து இருளைப் போல வனத்தின் இருள் அமைதியானதல்ல. ஆனால் ஆழமானது. காற்றின் வீச்சுக்கும் நீரோடையின் சலசலப்புக்கும் பக்கவாத்தியம் போல சீவிடுகளின் ஒலி.. அது மௌனத்தின் ஒலி.  காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பான வனத்தின் இருள்.. விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் ஒளி.. அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி பரவ.. கண்களை நிறைந்துக் கொண்டே வந்த ஒரு தருணத்தில்.. ஒரு சரிவில்.. ஒளி வெள்ளமென வீச.. திடுக்கிட்டுப் போனோன்.

”அந்த பக்கம் பூரா மைன்ஸ்தான் சார்..” என்றார் காவலாளி என் பார்வையை உணர்ந்து.

அந்த ஒளியில் காடு நகர்ந்து விட, அதன் வழியே செயற்கை வழித்தடங்கள் புலப்பட.. இருளை ஒளி வென்று விட்டது. இந்த ஒளியின் சுவடுகள் தனிமையின் சுகத்தை கலைத்துப் போட்டு விடும். அங்கிருந்த விலங்குகள்.. தாவரங்கள்.. பூச்சிகளின் வாழ்வை குலைத்துப் போட்டு விடும். கனிமவளம் மனிதவளத்தை மேம்படுத்தியதில் வெளிச்சத்தில் இருளை தொலைத்த அவலம்.

சித்ராவை மயக்க ஊசி செலுத்தி வலியில்லாமல் சுட்டுக் கொல்வார்களாம். எதிர்க்கவோ.. பேசவோ எங்களுக்கே உரிமையில்லாத போது காட்டின் குரலை ஓயாமல் கர்ஜித்துக் காட்டும் சித்ராவுக்கு வாழும் தகுதியற்றுப் போவதொன்றும் ஆச்சர்யமல்ல.. அவள் தலைப்புச் செய்தியான நாளுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதே காரணம்தான் முன்பு பழங்குடிகளுக்கும் சொல்லப்பட்டதாக ஞாபகம். பழங்குடிகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று. பிறகு புலிகளும் பூங்காக்களுக்கு இறக்கி விடப்பட்டன. கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்போது சொல்வதற்கு காரணங்கள் நிறையவே இருந்தன.  புலிகள் அடிக்கடி சமவெளிக்கு வந்து விடுகின்றன என்றார்கள். மொட்டைத்தலையிலிருந்து வழிந்தோடுதல் இயல்புதானே.. சரி.. ஏதோ ஒன்று.. புலி-மனித மோதலால் புலிகள் கொல்லப்பட்டு விடுகின்றன என்றார்கள். பழங்குடிகள் இறக்கிவிடப்பட்ட பிறகு தனித்திருந்த புலிகளுக்கு காட்டின் நடப்பைச் சொல்ல ஆங்கிலம் தெரியாமல் போனது சுரங்க அதிபர்களுக்கு வசதிதான்.

அறைக்கு வந்ததோ உறங்கியதோ அனிச்சையாக நடந்திருக்கலாம். துாங்கியது எப்போதென்றே தெரியவில்லை.. விழிப்பு வரும்போதுதான் துாங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். திரைசீலைக்கப்பால் வெளிப்புறக்காட்சிகள் பளிச்சென்றிருந்தன. தேநீரை ஏந்திக் கொண்டு வந்தவரிடம் கட்டஞ்சாயா கிடைக்குமா என்றேன். உடனே கொண்டு வந்தார். சுடுநீர் குடிப்பது போல ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு முறை ஊற்றிக் குடித்தேன். மனம் சற்றே நிதானப்பட, அறையை காலி செய்து சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

இளங்காலை பயணம் உள்ளப்படியே உவகையை ஏற்படுத்த, வாயைக் குவித்து ஒலியுண்டாக்கினேன். கூடவே ஒலித்தது பறவையின் குரலொன்று. வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினேன். அடர்வற்ற காடு மனித சஞ்சாரத்தை வெளிப்படுத்தியது. இடையே குறுக்கிட்ட சுரங்கத்திற்கான பாதை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல தோதாக அகலமாகவும் அதிகாரிகளை அழைத்துச் செல்ல வசதியாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் இடுப்பளவு கான்கிரீட் தடுப்பு. அதுவுமே அகலம் கூடியதாக இருந்தது.

முன்பெல்லாம் வனத்துறைக்கு செல்வாக்கு அதிகம்.. பழங்குடி மக்களிடம் அவர்களுக்கு அதிகாரமும் அதிகமாகதான் இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறானோ இல்லையோ மயிலையும் மானையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வனத்துறை ஆட்களுக்கு பஞ்சமிருக்காது.. வனத்துறை நண்பரொருவர் மயில் கறியை பிரியமாக உண்பதை பார்த்திருக்கிறேன்.  நமக்கென்ன..? வனத்துறையினர் பாடு.. அறநிலையத்துறையினர் பாடு.. என்று நினைத்துக் கொள்வேன். இப்போது வனத்துறை ப்ளுகிராஸ் போல ஆகி விட்டது. சினிமாவில் எந்த விலங்குகளையும் வதைக்கவில்லை என்ற கிளியரன்ஸ் சான்றிதழுக்கு நிறைய தொகை வாங்குவதாக கேள்வி. மேல் வரும்படி குறைந்து விட்டதால் இப்படியெல்லாம் இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள் போல.

வனம் ஏறி இறங்கி அடர்வுக்குள் செல்ல பாதை ஒழுங்கற்று.. நேர்த்தியற்று நெளிந்துக் கிடந்தது. தொடப்படாத காடுகள் தாவரங்களால் வழிந்துக் கிடந்தன.  கனிம வேலை தொடங்கும் வரை அதற்கு அனுமதியுண்டு. ஆங்காங்கே ரெட் அலர்ட் போடப்பட்டிருந்த பாதையில் திரும்பினேன். இவை முன்னாள் பதிகளாக இருக்கலாம். நகரில் வாழ்ந்துக் கெட்ட வீடுகள் கான்கிரீட் பாழ்களாக கிடப்பது போல பதிகளின் குடியிருப்புகள் வீடாக உருவம் தாங்கி நிற்கவில்லை என்றாலும் மறைந்து போன வாழ்விடத்தின் வாசம் முற்றிலுமாக அகலவில்லை.

”ஏன் சார்.. சாவுதான் தீர்வா..? கூண்டுக்குள்ளயே அடச்சு போட்டுடுலாம்ல..” கையெழுத்து இடும் முன் ஈனஸ்வரத்தில் கேட்டேன். எனக்கு தெரியும்.. அவர்களின் பயம் சித்ராவின் மீதல்ல.. சித்ராவுக்குள் பொதிந்திருந்த காட்டின் மீதான பயம்.. சித்ராவை நீடிக்க விட்டாலோ.. குட்டிகளுடன் நெருங்கி பழக அனுமதித்தாலோ உள்ளிருக்கும் காட்டை வெளியே எடுத்து விடலாம் என்ற பயம். அதிலும் சீத்தாவுக்கு தாயைப் போன்று மூர்க்கமும் பிடிவாதமும் அதிகம். இத்தனை பெரிய வனத்தில் ஒற்றைப் புலிக் கூட இருக்கக் கூடாது என்ற முடிவின் பின்னிருப்பதும் பயம்தான். பூண்டோடு அழிக்க சொல்லும் வன்மம். புலியை பூனையாக்க வேண்டும். கோவில் யானை போல பூங்காப் புலி.

கானகம் அடர்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தது. பாதை அருகிக் கொண்டே வந்தது. அவர்கள் குறிப்பிட்ட பகுதி இதுதான் என உறுதி செய்துக் கொண்டேன். தோதான இடம் பார்த்து வண்டியை நிறுத்தி இன்ஜினை அணைத்தேன். பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டேன். இன்னும் சிதையாத காடு. மலைச்சரிவுக்கும் பள்ளத்தாக்குக்குமிடையே நீரோடை ஒன்று வளைந்து நெளிந்து ஓடியது. உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. சரிகையை அவிழ்த்து விட்டது போல் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவியிருந்தன. ஏற ஏற மலையின் உயரம் குறைந்துக் கொண்டே வருவதை போல மேகங்களும் கரைந்து உருமாறிக் கொண்டே இருந்தன. பாதையின் ஓரமாக பெரிய மரமொன்று வேரோடு விழுந்து கிடந்தது.  நீர்வீழ்ச்சி நுரைத்து வழிந்தது. மரங்களில் ஆங்காங்கே பைகளை கட்டித் தொங்க விட்டது போல தேன்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கீழே இறங்குவது என்பது முட்டாள்தனமான துணிச்சல் என்பது எனக்கும் தெரியும். ஒற்றைப்புலி மிகுந்த ஆக்ரோஷம் கொண்டிருக்கலாம். தனக்கான உணவு உறுதியான பின்.. நட்பைத் தேடிக்  களைத்திருக்கும். பகை கூட அகப்படாத தனிமை குழப்பத்தை உண்டுப் பண்ணியிருக்கும். அதுவே மூர்க்கத்தை முட்டிக் கிளப்பி விடும். புகைப்படத்தில் காட்டப்பட்ட அதன் தடத்திலிருந்த ஆவேசம் அதைதான் சொன்னது. நவீனங்களின் துணையோடு அதை பிடித்து விடுவது சுலபம்தான். பிறகு.. பிறகென்ன பிறகு..  உயிரியில் பூங்காவில் புலியின் நீள அகலங்களில் மற்றுமொரு பூனை உலாவித் திரியும். ஒற்றைப்புலியின் உடனடித் தேவை துணை.. துணை மட்டுமே. உணவோ.. இணையோ.. அடுத்தக் கட்டம்தான். இனத்தோடு இனம் துணையாகும்போதுதான் தன்னுள்ளிருந்து தான் மீள இயலும்.

வாகனத்தின் பின்கதவை திறந்தேன். பாதிக்குமேல் தெளிந்திருந்த மயக்கத்தின் ஊடே என்னை விழித்துப் பார்த்தது அது. விரிந்த அதன் கண்களின் ஒளி ஒரு கணம் சித்ராவை ஞாபகப்படுத்த சிலிர்த்து அடங்கினேன். அதன் வலது பாதத்தில் லேசாக தட்டினேன். தட்டினால் எழுந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தில் முடிந்தவரை விசும்பி எழுந்தது. என் மேலுடலை முன் தள்ளி கைகளை காற்றில்  அசைத்தேன். புரிந்துக் கொண்டது. திறந்திருந்த கதவின் வழியே வெளியே பாய்ந்தது.
அதன் கால்களை பஞ்சுப்பொதிகள் போல வனம் தாங்கிக் கொள்ள இடுப்பை அசைத்து அசைத்து நகர்ந்து நகர்ந்து.. என்னை விட்டு விலகி விலகி..

“சீத்தா..“ கதவை மூடிக் கொண்டு வெடித்து அழுதேன்.
***


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்கள் புளொக்கிலிருந்த கதைகளில் ‘சித்திராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தலைப்பில் ஒரு வித்தியாசம் தெரிய அதை முதலில் படித்துப்பார்த்தேன். அருமையான படைப்பு, அநேகமாக பெண் எழுத்தாளர்களால் தொடப்படாத பிரதேசங்களும் விஷயங்களும். சிறந்த மொழி ஆளுமையும் விபரிப்பும்.
    இங்கே நீங்கள் ‘சீவிடு’ என்று குறிப்பிடுவது ‘ சிள்வண்டை’த்தான் (Cicada)என நினைக்கிறேன். கதையில் புவியியல் அடையாளங்கள் இல்லாமையால் எந்நாட்டாட்டவரும் தமதேயெனப்பொருத்திப் பார்க்கக்கூடிய சித்திரம். தொடருங்கள் கலைச்செல்வி.

    ReplyDelete