Search This Blog

Wednesday 25 April 2018

பிரியாணி


கணையாழி ஜனவரி 2018ல் வெளியானது.

கண்களை திறக்க முடியவில்லை அவளால். ஆனாலும் மூடிய இமைக்குள் விழிகள் எதையோ தேடுவது போல அவ்வப்போது நழுவி ஓடி நின்றன.  அக்கம்பக்கத்து அஞ்சலம் அத்தை.. மரகதம் பெரீம்மா.. மாரியம்மா அக்கா.. கெங்கா சின்னம்மா.. எல்லோரும் அவளை எழுப்பி உட்கார வைத்து காபி கொடுப்பது நிஜமாக நடப்பது போலவே இருக்கிறது. ஒருமுறை சைக்கிளில் அடிப்பட்டு பேச்சு மூச்சின்றி கிடந்தபோது அப்படிதான் எழுப்பி உட்கார வைத்தனர். ஆனால் இப்போது வாயில் காபியும் இல்லை. அருகிலும் யாருமில்லை. ஏதேதோ நினைவுகள் மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தன.



என்றுமில்லாத திருநாளாக அவளின் எண்ணவோட்டங்களில் அம்மாவும் இருந்தாள். அவளை இடுப்பில் துாக்கிக் கொள்ள முயன்றாள்.. ஆனால் பதிமூன்று வயது பெண்ணான இவளால்தான் இடுப்பில் ஏறிக் கொள்ள இயலவில்லை. கால்கள் நீண்டு விட்டன. தரையை தொட்டு விடுமோ..? சிரிப்பு வந்தது. அவளுக்கு எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். சென்ற வருடம் பெரியவளான தருணத்தில் ‘பொசுக்குபொசுக்குன்னு பொட்டச்சிக்கு என்னாடீ சிரிப்பு..’ என்றாள் திண்ணைக் கிழவி ஒருத்தி. “இனிம சிரிச்சன்னா வாய் மேலயே போடுவன்..“ கனகாக்கா விளையாட்டாக கையை ஓங்க அப்போதும் சிரிப்பு பொங்கி வந்தது அவளுக்கு. இடுப்பிலிருந்து கால்கள் வழிந்து தரையை தொடுவதை நினைத்தபோதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பதற்கு வாயை விரிக்க முனைந்தபோது கன்னங்கள் தீப்பிடித்தது போல் எரிந்தன. “ம்மா..“ தன்னையுமறியாமல் அனத்தினாள். மிக சன்னமான ஒலி. கிழிந்து கிடக்கும் வாயிலிருந்து அவ்வளவு ஒலியே அதிகம்தான்.


உடலை பிரயத்தனப்பட்டு ஜன்னல் திட்டோரம் நகர்த்தினாள். வலது கை அசைக்கவியலாது பிணம் போல கனத்துக் கிடந்தது. உடலெங்குமிருந்த இரத்தக்காயங்கள் ஈக்களுக்கு உற்சாகத்தை வரவழைத்திருந்தன. துணியில்லாத உடல் வேறு.. அதே நேரம் ஈக்களின் பிடுங்கலால்தான் சிறிதளவாவது உணர்வோடு இருக்க முடிந்தது அவளால். இடதுகையை நீட்டி தடவி.. தடவி.. அங்கிருந்த துணிச்சுருளை பற்றி இழுத்தாள். இரண்டு பழைய சுடிதார்கள்.. பாவாடை சட்டை ஒன்று.. இற்றுப் போன உள்ளாடைகள் இரண்டொன்று அடங்கிய சிறு துணி மூட்டை அது. அவள் தொடுகைக்காக காத்திருந்ததுபோல பொத்தென இடுப்புக்கு கீழே விழ, பீரிட்டு எழுந்த ரண வேதனையில் துடித்துப் போனாள்.

முதன்முறை அவன் வந்த போது யாரென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. இப்போதும் தெரியாதுதான். ஆனால் அந்த அனுபவம் அவளுக்கு பிடித்திருந்தது. அப்படிதான் எண்ணினாள். ஆனாலும் அவளுக்கு எண்ணங்கள் கோர்வையாக தோன்றுவதில்லை. அவளும் கோர்வையானவளாக இருப்பதில்லை. எப்போதிலிருந்து இப்படியானாள்.. அல்லது பிறவியே இப்படிதானா..? என்பதில் ஊராருக்கு சற்று குழப்பம்தான். முதலில் இறந்து போனது அவளது தந்தைதான். அப்போது அவளுக்கு இரண்டு வயதோ.. அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கலாம். அம்மாவின் முந்தானைக்குள் ஒடுங்குவதில்தான் அவளது மொத்த கவனமும். விட்டால் அண்ணன் இடத்தை பிடித்துக் கொண்டு விடுவான் என்ற பயமுமிருக்கலாம். அவனும் இவளை விட நாலைந்து வயதுதான் பெரியவன்.

கட்டுமான சாரம் சரிந்து விழுந்ததில் இரு சித்தாள் பெண்கள் நிகழ்விடத்திலேயே பலியாயினர் என்று செய்தித்தாளில் வெளியான பெட்டிச் செய்தியில் ராமக்கா என்று இவளின் தாயின் பெயரும் இருந்தது. ராமக்கா, கணவனுக்கு தலைதிவசம் செய்வதற்கு பணம் திரட்டிக் கொண்டிருந்த நேரம் அது. அதன் பிறகு. ‘ராமக்கா மவோ..’ என்று இவளை யாரேனும் விளித்தால் திரும்பி பார்க்க தெரிந்தது. பிறகு செயந்தி.. என்ற அவளின் பெயரும் பழக்கப்பட்டுப் போனது. கட்டடக்காரர்கள் பழிபாவத்துக்கு அஞ்சியோ.. அல்லது அக்குதொக்கு இல்லாத அடிமைக்கு ஆசைப்பட்டோ இவள் அண்ணனையும் அழைத்துக் கொண்டு சென்று விட, வீடும் இவளும் தனிமைப்பட்டு போயினர்.

தனிமை என்றாலும் ஒரேடியாக தனிமை இல்லை. ஒருவேளை தன்னுணர்வு கொண்டவளாக இருந்தால் ஊர் சற்று குரூரமாக அணுகியிருக்கலாம். செயந்தீ.. என்ற அழைப்புக்குள் நெக்குருகி சிரிக்கும் அவளை அத்தனை எளிதாக புறக்கணிக்க முடியாது அவர்களால். யார் பழக்கி விட்டாலும் வேலைகளை சுலபமாக பழகிக் கொள்ள முடிந்தது கூட அவள் மீது அக்கறைப்பட காரணமாக இருக்கலாம். அவளுக்கு கை மாறாமல் துணிகளை அலசி எடுக்கத் தெரியும். குவிந்து கிடக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ய அஞ்சுவதில்லை. அதே நேரம் சித்தன் போக்கு சிவன் போக்கு என போட்டது போட்டபடி கிளம்பினாலும் கிளம்பியதுதான். பழையதை பிழிந்து வைத்தாலும் அதிர்ந்து கேட்க தெரியாது. சாணத்தரையில் கையை தலைக்கு வைத்துக் கொண்டு வேலை செய்யும் வீடுகளிலேயே துாங்கி போய் விடுவாள். வீட்டுக்கு ஒதுக்கமான நாட்களில் மட்டும் இவளின் சிதிலமடைந்த வீட்டில் படுத்துக் கொள்ள வேண்டும். படுக்கை. துணைக்கு திண்ணைக்கிழவி வந்து விடுவாள்.


நினைவுகள் நழுவினாலும் ஈக்கள் மீண்டும் அவளுக்கு வலியை நினைவூட்டி விடுகின்றன. மல்லாந்திருந்த உடலை திருப்பிக் கொண்டாலாவது தேவலாம் என்றிருந்தது. விரிந்துக் கிடந்த கால்களை இணைக்க இயலாமல் வலியில் தகித்துக் கிடந்தது உடல் தெருவில் யாரோ நடமாடும் ஒலி. எழுந்துச் செல்ல மனம் பரபரத்தது.

”சுரேசுப்பயல கூட்டியான்னு சொல்லி வச்சிருந்தேன்.. ஆளயே காண்கில இந்த பொட்டச்சிய..” அமுதாக்காவின் குரல். இவளைதான் தேடுகிறாள். “அய்யய்யோ.. சுரேசு நா வருவேன்னு பள்ளியொடத்தில ஒக்காந்து கெடப்பானே..“  இவளுக்கும் பதட்டமாக இருந்தது.. மணி பார்க்க தெரியாது என்றாலும் பொழுதை ஒரு கணிப்பாக சொல்ல முடியும் அவளால். ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அப்படியே கிடந்ததில் நேரங்காலம் எதுவும் புரியவில்லை. 

“எக்கா இங்ஙன.. இங்ஙனதான் கெடக்கேன்..“ குரலெழுப்ப முயன்றாள். அது உளறலாக அவளுக்குள்ளேயே முடிந்துப் போனது. அவள் பேசுவதை, பொதுவாக, “ஏன்டீ.. ஔர்றே..” என்பார்கள் ஊரார்கள். அது விவரமற்ற பேச்சு என்பதை குறிக்கும். இந்த உளறல் வாய் குளறுவதை குறிக்கலாம். ஆனால் குரல் எழுப்பினால்தான் அவள் இங்கிருக்கிறாள் என்பதை உணர்த்த முடியும். அந்தமட்டும் அவளுக்கு புரிந்திருந்தது. இத்தனைக்கும் இது இவள் வீடுதான். வரிசையாக ஒரு ஒழுங்கமைவு இல்லாத நெருக்கமற்ற வீடுகளில் அவள் வீடும் ஒன்று. வீடு என்றால் வீடு போலிருக்காது. கதவு இருக்காது.. செல்லரித்த நிலைமாடம் மட்டுமிருக்கும். சாளரங்கள் கம்பிகளின்றி பெரு ஓட்டைகளாக காட்சித்தரும்.

அவன் வரும் நாட்களில் ஆளரவமற்ற நிலையும் அவள் வீட்டு மண் சுவர்களும் இருவருக்கும் வசதியாக இருந்தது. ஆமாம்.. இருவருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் திட்டமிட்டு வந்தான். அவள் திட்டமிடவில்லை என்றாலும் பிடித்தமில்லாமல் இல்லை. இன்றோடு நான்காவது முறை. ஒவ்வொரு முறையும் இதுபோன்றதொரு மதிய நேரத்தில்தான் வருவான். கிராமம் மொத்தமும் வயக்காட்டில் கிடக்கும் நேரம் அது. வயல் வேலை அவளுக்கு தோது வாய்க்காது. அதே நேரம் வீடுகளில் போட்டது போட்டபடி கிடக்கும் ஏனப்பானைகளை கழுவுவாள். மேய சென்றிருக்கும் மாடுகளின் கொட்டகையில் சாணங்களை வழித்து எருக்குழியில் கொட்டுவதும் துணிகளை துவைத்தெடுப்பதுமாக அவளுக்கு பொழுது நகரும். பசியெடுக்கும்போது சட்டியில் ஊறிக் கிடக்கும் சோற்றையும் ஊறுகாயோ பழங்குழம்போ யார் வீட்டிலிருந்தாலும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவாள்.

அவன் வரத் தொடங்கி இரண்டு மாதங்களாகியிருக்கலாம். முதலாவது தடவை வந்தபோது  அவள் கெங்காக்கா வீட்டு ஏனங்களை  கழுவிக் கொண்டிருந்தாள். படலுக்கு வெளியே அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கரளைகரளையான கைக்கால்கள். மாநிறத்திலிருந்தான். இருபத்தைந்து வயதிற்குள்ளிருக்கலாம். “ஆரு..” என்றாள். சிரிப்பும் கூடவே வந்தது.

”ஆருமில்ல.. சும்மாதான்..“ ஒப்புக்கு முனகினான். நகரவில்லை.

”சாப்டீயாண்ணே..” என்றாள் சகஜமாக.  வேற்று ஊர் ஆளாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

”நீ சாப்டீயா..”

”இல்ல..” பழஞ்சோற்றுச் சட்டியை சுட்டினாள்.

துணிகளை அலசி விட்டு நிமிர்ந்த போதும் அவன் அங்கேயே நின்றிருந்தான்.

”பசிக்குதா.. வர்றியாண்ண சாப்ட..” சட்டியை எடுத்து வைத்துக் கொண்டு அவள் அமர, துணிந்தவனாக படலை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

”அய்யே.. நாறுது..” என்றாள். குடித்திருந்தான். அவள் மீது படியும் தன் கண்களின் அலைச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான்.

”பிரியாணி வச்சிருக்கேன் சாப்டுறியா..”

ராவுத்தர் வீட்டு திருமணத்தில் இவளை பரிவாக கவனித்தார்கள். வேண்டும்.. வேண்டும் என்பது போன்ற ருசி. ஆனாலும் சட்டென்று ஒப்புக் கொள்ள மனமில்லை.

”வேணாண்ண.. நீ சாப்டு..”

”ரெண்டு பேரும் சாப்டுலாமா..?”

”இந்த சோத்த யாரு திம்பாங்களாம்.. அய்யய்யே..?” சிரித்தாள்.

பதிலுக்கு சிரிக்காமல் அவள் கையிலிருந்த சட்டியை பிடுங்கி கழுநீர் பானைக்குள் ஊற்றினான்.

”அண்ண.. வேணாம்.. வேணாம்..” பின்னாலேயே ஓடினாள்.

”கத்தாத.. வா அங்க போயி சாப்புடுலாம்..” அவள் கையை பிடித்துக் கொண்டு பரபரப்பாக நடந்தான். ”இங்கிலீசு கூல் புள்ளங்கள புடிச்சிட்டு போற மாதிரி புடிச்சிட்டு போற..“ களுக்கென்று சிரித்தாலும், மறுக்காமல் கூடவே நடந்தாள். அவள் வீடு அவனுக்கும் தெரிந்திருந்தது. நாலு பக்கமும் காரை உதிர்ந்த முக்கால் சுவர்.. ஓடு வேய்ந்த கூரையின் மூங்கில் கழிகள் மட்டுமே மிச்சமாகி கிடந்தன. சுவரோரமாக ஒண்டிக் கொண்டால் வெளிப்பார்வைக்கு தெரியாது. அவளை சுவரோரமாக கிடத்தி, அவனும் படுத்துக் கொண்டான். இவளுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. ஓடி விடலாம் போலிருந்தது. ஆனால் ஓ்ட விடாமல் அமுக்கிப் பிடித்தான். முன்புறமாக அவளை திருப்பி முத்தமிட்டான். நெருக்கிக் கொண்டான். அலுங்காமல் அவளை கையாளத் துவங்கினான். காரியத்துக்கிடையே பிரியாணி நினைவுக்கு வர “அண்ணே.. பிரியாணி..“ என்றாள்.

“இரு.. சாப்டுலாம்..“ செயலிலேயே குறியாக இருந்தான். இத்தனை இளம் உடல் அவனுக்கு புதிதாக இருந்திருக்கலாம்.

வேலையானதும் அவன் சட்டையை மாட்டிக் கொண்டு கொண்டு கிளம்ப, “பசிக்குது..“ என்றாள். பிரியாணி வாசம் அவளை இழுத்து்க கொண்டே இருந்தது.

”இந்தா..” ஓரமாக வைத்திருந்த நெகிழிப்பையை அவளிருந்த பக்கம் இழுத்துத் தள்ளினான்.

”ஒனக்கு..?” வழிந்து கிடந்த பாவாடையை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

அவள் பேச்சை காதில் வாங்காதவனாக “நா வந்துட்டு போனத யார்ட்டயும் சொல்லக்கூடாது.. புரியுதா.. அப்பதான் பிரியாணி வாங்கித் தருவேன்...” என்றான்.

”சரீண்ணே..” என்றாள். சிரித்தாள். உடல் ஒருவித மயக்கத்துக்குள் இருந்தது. பிரியாணியும் நல்ல ருசிதான்.

“செயந்தீ.. இந்தாடீ.. எங்க போயி தொலஞ்ச..“ முக்கு வீட்டு அத்தாச்சியின் குரல். அந்த அத்தாச்சிதான் அவளை ”இந்த மாசம் ஒக்கார்லயாடீ..” என்றவள்.

”தோ.. ஒக்காந்துட்டேன்..” அத்தாச்சி வீட்டு திண்ணையில் விளையாட்டாய் அமர, ”கூறுக்கெட்டவளே.. வூட்டுக்கு துாரம் ஆவுலயான்னே கேட்டேன்..” என்றாள்.

”ஆவுலயே..”.

”ஒனக்கு எல்லாம் வெளாட்டுதான்.. தனியா படுக்க பயந்துக்கிட்டு மறச்சுகிறச்சு வக்காதடீ.. சாமீ கண்ணக் குத்தீடும்..” பயமுறுத்தியிருந்தாள்.

அத்தாச்சியின் குரலுக்கு உசும்பி எழ முயன்று தோற்றதில் அழுகை வந்தது அவளுக்கு. பொதுவாக இவளின் அழுகை சத்தமாக இருக்கும்.. லேசில் அடங்காது. இன்று விசும்ப கூட இயலவில்லை. 

“எத்தாச்சி.. இங்குட்டு வாத்தாச்சீ.. நா உள்ளுக்குதான் கெடக்கேன்.. த்தாச்சீ..“ குரல் ஒலிக்கவேயில்லை.

”களுதை.. திண்ண கௌவிட்ட வளம அடிக்க போயிருக்கும்..“ அத்தாச்சியாக ஒரு முடிவுக்கு வந்து நகர்ந்து விட, தனிமை பயமுறுத்தியது அவளை. அந்த அண்ணன் மீது கோபம் வந்தது.

அந்த மதியத்துக்கு பிறகு இரண்டு முறை வந்திருக்கிறான். அவனை பார்த்ததுமே முகம் மலர்ந்து விடும் அவளுக்கு.

”பிரியாணி..?” என்றாள் “எல்லாம் வாங்கியாந்திருக்கேன்.. வந்து படு..” இரண்டாவது முறையே உரிமை பாராட்டினான். அவளுக்கும் உடம்பு பரபரப்பாகதான் இருந்தது. பொதுவாக உடுப்புகளின் மீது அவளுக்கு அதீத ஆர்வம் உண்டு. சுடிதாரின் மேற்சட்டை அணிந்து அதற்கு மேல் துப்பட்டாவை தாவணி போல சுற்றியிருப்பாள். கீழே பாவாடையை கட்டிக் கொள்வாள். கொடியில் புடவையோ.. கைலியோ எது கிடந்தாலும் உருவி மேலே போட்டுக் கொள்ள பிடிக்கும் அவளுக்கு. அவளின் இந்த பழக்கம் அவனுக்கு பொறுமைமீறலாக போய் விட, அவளை முரட்டுத்தனமாக கையாள தொடங்கினான்.

”அய்யே.. வலிக்குதுண்ணே..” சிணுங்கினாள். கத்த முற்பட்ட போது “பிரியாணி வேணுமா.. வேணாமா..“ என்றான் கோபமாக.

கிளம்பும்போது “துணிய போட்டுக்க மொதல்ல..” என்றான். பிறகு ”அடுத்தவாட்டி வர்றப்ப பரோட்டா வாங்கியார்றேன்..” என்றான்.

”இல்ல.. பிரியாணிதான் வேணும்..” மேற்சட்டையை தலை வழியாக உள்ளே இறக்கினாள்.
அவளின் தலை மூடிய வெற்றுடலை கிள்ளி விட்டு சொன்னான். ”செரி.. வாங்கியார்ரேன்.. ஆனா நா வந்ததை ஆருட்டயும் சொல்லக்குடாது.. புரிதா..”..” மிரட்டுவதுபோல சொன்னான்.
”சரீண்ணே..” என்றாள்.

இன்றும் அவனை பார்த்ததுமே அவளின் சுவைநரம்புகள் உசும்பி எழுந்தன. பிரியாணி பொட்டலத்துடன் அவன் முன்னே நடக்க, ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தாள். வழக்கமான இடத்தில்.. வழக்கம் போல அவள் ஒடுங்கி அமர.. அவன் எல்லா நாளையும் விட அதிக முரடனாகவும்.. அதிக பொறுமையற்றும் இருந்தான்.

தாக்கு பிடிக்க முடியாமல் ”அண்ணே.. வலிக்குது.. வுடு என்ன..” திமிறியவளின் வாயை பொத்தினான். மிரண்டு போன அவளின் பார்வையை கண்டு கையை விலக்கிக் கொண்டு “சத்தம் போடாதேன்னு சொல்றேல்ல..“ மென்மையாக சிரித்தான். அவளும் சிரித்தாள். “அவ்ளோதானே.. முடிஞ்சிருச்சா.. சாப்டுலாமா..” என்றாள்.

மீண்டும் முரட்டுத்தனமாக அவன் இயங்கத் தொடங்க, சமாளிக்க இயலாமல் தடுமாறியது அவளுடல். மூச்சு முட்டியது.. அலற எத்தனிக்க முயன்ற தருணத்தில்தான் அவர்களை கவனித்தாள். நிறைய அண்ணன்கள்..  ஒன்று.. இரண்டு.. மூன்று.. நான்கு வரை முதல் பார்வைக்கு தெரிந்தது. பிறகெல்லாம் அரைமயக்க நிலைதான்.. இப்போது வரை.

இரவுக்கான சமையல் பரபரப்பிலிருந்தது ஊர். சுரேசு.. சினேகா.. கனகா.. விசியா.. சீலா.. முருகன்.. எல்லோரும் தெருவில் விளையாடும் சத்தம் கேட்டது. விளையாடும் ஆவல் பொங்கியது அவளுக்கு. காய்ச்சல் வந்து கிடந்தபோது கூட உடம்பு இப்படி வலிக்கவில்லை. “இனிம பிரியாணியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம். இந்த வெளாட்டு புடிக்கலேன்னு அந்த அண்ணன்ட்ட கன்டிசனா சொல்லீருணும்..’ என்று எண்ணிக் கொண்டாள்.

அதுதான் அவள் கடைசியாக நினைத்துக் கொண்டது.

***

No comments:

Post a Comment