Search This Blog

Wednesday, 25 April 2018

ஆழமான பரவல்


மார்ச் 2018 தளம் இதழில் வெளியான சிறுகதை

சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன் போல அவ்வப்போது கேரட் பொறியலையும், வெண்டைக்காய் வதக்கலையும் தொட்டுக் கொண்டான். வாழைக்காய் வறுவலை சட்டை செய்யாமல் இடதுக்கையால் குழம்பை சோற்றில் ஊற்றிக் கொண்டே குப்புறக்கிடந்த கத்திரிக்காயோடு சோற்றை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான்.



கதிர் அப்போது சிறுவனாக இருந்தான். கிட்டத்தட்ட குண்டானில் இருந்த முழுச்சாப்பாட்டையும் முடித்த போதும் வயிறு வலித்தது அவனுக்கு.. ஆனால் பரவலாக வலிக்கவில்லை. வயிற்றின் ஆழத்தில் வலி. அதுதான் தொடக்கம். அதை அப்படியே விட்டுவிட்டால் பரவலாகி விடும். நழுவும் டவுசரால் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டாலும் வலி நிற்காது. வலி வரும்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புரிய முடிந்தாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் போதவில்லை. தங்கை எதற்கோ அடம் பிடித்து அழ, அவள் தட்டிலிருந்த சோற்றை சாப்பிடும் எண்ணத்தோடு அருகே சென்று.. பிறகு அம்மாவின் எரிச்சல் பார்வைக்கு பயந்து விலகி ஓடினான். எங்கு ஓடினாலும் வயிறும் கூடவே வந்து விடுகிறது. பள்ளியில் இருக்கும் போது.. விளையாடும்போது.. ஏன் துாங்கும்போது கூட வயிறு அவனை விலக்குவதில்லை.


அதை தவிர்த்து வெளியுலகில் அவனுக்கு குறைவில்லை. வயிற்று தொல்லை அவனை படுத்தி எடுத்தாலும் வேலைவெட்டியில் அவனை யாருமே குறை சொன்னதில்லை. அரசாங்க அலுவலகத்தில் தினக்கூலி பணியாளன். டீ..காபி வாங்கி வருவது.. கப் அண்ட் சாசர்களை கழுவுவது.. பியூன் வாஞ்சி கட்டளையிடும் வேலைகளை சிரமேற்கொண்டு செய்வது என எதிலும் குறையில்லை.

கதிரின்  விறுவிறுப்பாக நடையில் கழுத்தில் மாட்டித் தொங்க விடப்பட்ட செல்போன் குலுங்கி ஆடியது. அதிகம்போனால் அதில் பத்து பேருடைய எண்கள் சேமிப்பிலிருக்கும். வாஞ்சியிடமிருந்துதான் அடிக்கடி அழைப்பு வரும். டீக்கடையிலிருக்கும் போது.. சாப்பாடு வாங்க செல்லும்போது.. பேப்பர் வாங்கி வரும்போதெல்லாம்.. “கதிரு.. சீக்ரம்..“ “கதிரு சீக்ரம்..“ என்று அவசரப்படுத்துவான். ஞாயிற்றுக்கிழமைகளில் செல்போனுக்கு அதிகம் வேலையிருக்காது. எப்போதாவது குணா அழைப்பான். குணா ஆபிசர் வீட்டில் சமையல் வேலை செய்பவன். இன்று பகல் கடுக்கத் தொடங்கிய நேரத்தில் குணா அழைத்தான்.

”கதிரு.. எங்கருக்க..” குணா அழைத்தபோது திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கதிர். பொதுவாக விடுமுறை நாட்களில் அருகிலிருக்கும் பஞ்சவர்ணசாமி கோயிலிலேயே விழுந்துக் கிடப்பான். கூட்டத்துக்கும் உபயத்துக்கும் குறைவில்லாத கோவில். தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால் அம்மா அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட, அப்பாவுக்கு துணையாக இருக்க வேண்டிய நிர்பந்தம் கதிருக்கு.

”வீட்லதான் சார்..” குணாவை சார் என்றுதான் அழைப்பான். குணாவுக்கு முப்பத்துநாலோ.. ஐந்தோ வயதிருக்கும். எப்படியிருந்தாலும் கதிரை விட இரண்டொரு வயது இளையவனாகதான் இருப்பான்.

”ஒடனே கௌம்பி வர்றியா..”

உற்சாகமாக தலையசைத்தான். இதேபோல் இரண்டு முறை அழைத்திருக்கிறான். ஆபிசர் வீட்டுக்கு வருபவர்கள் வாங்கி வரும் பழங்கள்.. இனிப்புகள் எல்லாமே விலையுயர்ந்தவை. குணாவுக்கும் பெரிய மனசுதான்.

”கௌம்பி வர்றியா கதிரு..”

”வர்றன் சார்.. வர்றன் சார்..” என்றான் வார்த்தையாக.

அலுவலகத்தில் வைத்துதான் குணா பழக்கம். தலைமை அலுவலகம் என்பதால் கூட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. கேம்ப் இல்லாத நாட்களில் ஆபிசரை பார்க்க யாராவது வந்துக் கொண்டேயிருப்பார்கள்.  சில நேரங்களில் மதிய உணவுக்கு கூட வீட்டுக்கு செல்ல முடியாத நேர நெருக்கடி வந்து விடும் அவருக்கு. அப்போதெல்லாம் வாஞ்சி குணாவுக்கு போன் செய்து “சாருக்கு சாப்பாடு கொண்டாந்துடு..” என்பான். ஆபிஸ் கார் லஞ்ச் எடுப்பதற்காக வீட்டுக்கு போகும். ஆபிசர் குடியிருப்பும் அலுவலகமும் அருகருகில்தான் இருந்தன. சொல்லப்போனால் கதிரின் வீடும் அந்த பகுதியில்தான் இருந்தது. காரில் தோரணையாக அமர்ந்து வரும் குணாவை கதிருக்கு பிடிக்கும்.

ஆபிசரின் டிபன்கேரியருக்கு ஆபிசருக்குண்டான மரியாதை உண்டு. குணாவிடமிருந்து பவ்யமாக வாங்கிக் கொள்வான் கதிர். முதல் தளத்திலிருக்கும் சாப்பாட்டு அறையில் கொண்டு போய் சேர்ப்பிக்கும் வரை அதே பவ்யம் இருக்கும். பெரிய சைஸ் ஐந்து அடுக்கு கேரியர். கேரியரை பார்த்த முதல் தருணத்தில் ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு.




“கேரியருதான் பெருசு கதிரு.. அய்யா கொஞ்சந்தான் சாப்புடுவாரு..”

குணா சொல்வது உண்மைதான். டிபன்கேரியரில் பாதி சாப்பாடு மிச்சப்பட்டிருக்கும். அது கதிருக்கானது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருப்பான் குணா. சின்ன சின்ன கப் அன்ட் சாஸர்களை கழுவியே பழகிப் போயிருந்த கதிருக்கு அத்தனை பெரிய டிபன்கேரியரை கழுவுவது பெருமையாக இருந்தது. வட்ட வட்டமான அடுக்குகள்.. ஒன்றோடொன்று பொருந்துவதற்கேற்ப மடித்து விடப்பட்ட விளிம்பு.. கீழடுக்கில் உட்கார தோதாக பள்ளமாக்கப்பட்ட மேலடுக்கு.. கேரியரை தாங்கிக் கொள்ளும் நீளக்கம்பி.. பார்வைக்கே கவர்ந்திழுக்கும் பளபளப்பான சில்வர் வேறு. அதனை சுத்தம் செய்வதற்காகவே பிறப்பெடுத்தது போல எண்ணிக் கொள்வான்.

”சார் ஏன் இவ்ளோ கொஞ்சமா சாப்புடுறாரு..” என்பான் டிபன் கேரியரை பூட்டியக் கொண்டே.

”அவருக்குதான் சக்கர.. ரெத்தக்கொதிப்பெல்லாம் இருக்கில்ல.. அப்றம் சோத்தை தின்னு..? இப்பதான் என் வைத்தியத்தில கொஞ்சம் கன்ட்ரோல் ஆயிருக்கு.. திருப்பி. சோத்தை தின்னா ஏறிக்காதா..?” என்பான்.

”நீங்க டாக்டரா..?”

”ஆமா..”

ஒரு மருத்துவர் சமையல்வேலை பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு. உடம்பு சரியில்லாத நேரத்தில் தனக்கும் வைத்தியம் பார்க்க சொன்னான். குணாவின் வைத்தியம் புதுமையாக இருந்தது. கதிரின் கைகளை இறுக்கி மூடச் சொன்னான். பிறகு மூடிய விரல்களில் கலர் ஸ்கெட்ச்சில் மாறி மாறி புள்ளிகள் வைத்தான். கலர்தெரபியாம். உடம்பு சரியாகி விடும் என்றான். சென்றமுறை சளிப்பிடித்துக் கொண்டபோது கட்டை விரலில் ஆறேழு மிளகை வரிசையாக வைத்து டேப் போட்டு ஒட்டி விட்டான். சளியெல்லாம் சரியாப் போவும்.. என்றான். ஆனால் அதையும் மீறி காய்ச்சல் வந்து விட, உச்சந்தலை உட்பட அங்கங்கே ஊசியை சொருகினான். வலிக்கவுமில்லை.. ஆமாம் வலிக்கவுமில்லை. ஆபிசருக்கும் இதுபோலதான் செய்வதால்தான் சுகரும் பிரஷரும் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னான், கதிருக்கு புரியவில்லை. அதேநேரம் கேள்வியாக எதுவும் கேட்க தோன்றவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தை வீடுகள் கொண்டாடிக் கொண்டிருந்ததால் தெருவில் நடமாட்டம் அதிகமில்லை. கதிருக்கு உள்ளப்படியே நீளமான கால்கள். அதில் விறுவிறுப்பும் ஏறிக் கொள்ள பதினைந்து நிமிட நடையில் ஆபிசர் வீட்டை எட்டி விட்டான். காம்பவுண்டுக்குள் நுழையப்போகும் தருணத்தில் ஆபிசரின் கார் கதிரைக் கடந்து எதிர் திசையில் சென்றது.

”சார் இப்பதான் கௌம்புனாரு..“ கதிரைக் கண்டதும் குணா உற்சாகமானான்.

”தெரியும் சார்.. பாத்தேன்..”

”சாப்டீயா..”

வயிறு பரவலாக வலித்துக் கொண்டிருந்தது.

”சோறாக்கிட்டேன்.. சாப்டறதுக்குள்ள ஏதோ அவுசர வேலன்னு சார் கௌம்பீட்டாரு..”
”லீவு நாளுன்னா கூட வேலை இருக்குமா..“

”ஆபிசருக்குல்லாம் எல்லா நாளும் வேலயும் உண்டு.. அதுக்கேத்த காசும் உண்டுல்ல..” கண்ணடித்து கலகலவென்று சிரித்தான் குணா.

கதிருக்கு அதெல்லாம் புரிவதில்லை. வாஞ்சி எப்போதாவது கொடுக்கும் காசை அம்மாவிடம் கொடுத்து விடுவான். கூட்டம் நடக்கும் நாட்களில் வாஞ்சியின் தயவால் தீனி... காபி.. டீ கிடைத்து விடும். ஒருமுறை ஆபிசர் இவனை பார்த்து விளையாட்டாக சொன்னது ”புள்ளையாண்டன்..” என்று காதில் விழுந்தது கதிருக்கு.

வாஞ்சி விழுந்து விழுந்து சிரித்து விட்டு “சார் ஒன்னை புள்ளையாருங்கிறாரு.. ஒன் வயித்த பாரு..”என்றான்.

உப்பலாக தனித்து நீண்டிருந்த வயிற்றை தொட்டுக் கொண்டு இவனும் சிரித்தான். ”இந்த வயிறு மட்டும் இல்லேன்னா சூப்பரா இருக்கும் சார்.. வயத்திலதான் சார் எல்லா பிரச்சனயும்.. ஆனா வயிறுதான் சார் பெருமை.. அதான ஒடம்புல முக்கியம்..”
”போடா லுாசு..” என்று கிண்டலத்தான் வாஞ்சி.

”சரி.. கதிரு கொஞ்சம் வெளி வேல கெடக்கு..  நா கௌம்புட்டுமா..  ஆக்கி வச்சதெல்லாம் அப்டியே கெடக்கு.. சாப்டு செத்த நேரம் படுத்தீன்னா பறந்து வந்துடுறன்..” என்றான் குணா.

”நீங்க சாப்டீங்களா சார்..”

”நா வெளிய பாத்துக்கிறேன்.. பாத்து.. பத்ரம். கதவ தாப்பா போட்டுக்க.. நா வரவுட்டு கௌம்பிக்கலாம்.. வருட்டுமா..”  

ஆபிசரின் குடும்பம் வெளியூரில் இருக்கிறது. சமையலுக்கு தோதாக குணா கூடவே தங்கிக் கொண்டான். சமையலறையும், முன்கூடமும் புழங்கிக் கொள்ள அவனுக்கு அனுமதியுண்டு. மீதி அறையின் சாவிகள் ஆபிசரிடம் இருக்கும்.  

உண்டு முடித்து பிறகு தரையை சுத்தப்படுத்தினான் கதிர். முன்கதவை மூடி தாழிட்டான். வெளியில் வாட்ச்மேன் உண்டு. ஆபிசர் உபயோகிக்கிறாரோ இல்லையோ கொல்லைப்பகுதியில் செடிக் கொடிகளோடு  ஊஞ்சல்.. சறுக்கு.. சிமிண்ட் பெஞ்ச் என ஏக கோலாகலம். பூவரச மர நிழலிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் கைகளை கோர்த்து தலைக்கு அடியில் முட்டு கொடுத்து மல்லாந்து படுத்துக் கொண்டான். எறும்புக் கூட்டம் ஒன்று தொந்தரவான கோபத்தோடு அங்குமிங்கும் அலைந்து இவனையும் கடித்து வைக்க.. அதை கையால் தள்ளி நகர்த்தினான். மல்லாந்திருந்த உடலில் வயிறு மேடாக ஏறி இறங்கியது. தொங்கிக் கொண்டிருந்த செல்போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்ட நேரத்தில் அலைபேசி அடித்தது
.
”சம்பளத்தில கழிச்சுக்க சொல்லி ஆபிசர்ட்ட பணம் கேட்டுப் பாரேன் கதிரு..” என்றாள் அம்மா.

”அவரு ஊர்ல இல்லம்மா..”

”பெரிய காச்சலாருக்கும்னு சொல்றாங்கப்பா..”

”அதுக்கு நா என்ன செய்யிட்டும்..”

அலைபேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். கண்களை மூடி வலது கையை நெற்றியின் மீது படுக்கையாக்கிக் கொண்டான்.

தங்கச்சி பாவம்தான்.. ஆனா அதுக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. வயித்துவலியதான் காச்ச.. காச்சன்னு சொல்லுது.. நெறைய சோறாக்க சொல்லி சாப்பட வச்சா சரியாப் போயிடும்.. சின்ன வயதில் பாப்பாவும் இவனுமாக சோறு சமைத்து விளையாடியதை நினைத்துக் கொண்டான். இருவரும் சின்னதான மூன்று கற்களைக் கூட்டி அதில் நுழையுமளவுக்கான சின்ன சின்ன சுள்ளிகளை  விறகுகளாக்கிக் கொள்வார்கள். கொட்டாங்குச்சியில் இருக்கும் மண்தான் சோறு. பாதி விளையாட்டில் சோற்றை அள்ளி திங்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விடும். அம்மாவிடம் ஓடுவான். பல சமயங்களில் அம்மா வருத்தப்படும். சில சமயங்களில் “அதான் காலைல சாப்டுட்டீல்ல.. அப்றம் என்ன..?“ என்று கத்தும். ”ஆட்டுப்புளுக்க சம்பளத்தில ஒக்காந்து சாப்ட அம்பது பேராம்..” ஊரிலிருக்கும் மாமியார் குடும்பத்தை இழுத்து திட்டும்.

வயிற்றின் ஆழத்திலிருந்து வலி கிளம்புவது போலிருந்தது. இன்னும் கொஞ்சநேரத்தில் அது வயிறு முழுக்க பரவும். குழம்பும் பதார்த்தங்களும் இருந்தளவுக்கு சோறு அதிகமாக இல்லை. பதார்த்தங்களை அவன் அதிகம் விரும்புவதுமில்லை. மளமளவென்று அங்கிருந்த குழாயில் கைகளை ஏந்தி தண்ணீரை குடித்தான். இருந்தும் வயிற்றில் இடம் பாக்கியிருந்தது. அப்படிதான் தோன்றியது. “ஆனை வந்தாலும் அடங்காதுடா..“ என்பாள் அம்மா. ஆனாலும் சாப்பிடும்போது மற்றவர்களை போல “போதும் எழுந்திரி..“ என்று சொன்னதில்லை.

அம்மாவை தவிர யார் அவனை உட்கார வைத்து சோறிட்டிருக்கிறார்கள்..?  சித்தப்பா வீட்டுக்கு போன ஒரு சமயத்தில் சித்தி “போதும் எழுந்திரி..“ என்று சொல்லியிருக்கிறாள். “வவுறா.. வண்ணாஞ்சாலா..?“ என்று அத்தை திட்டியிருக்கிறாள். கல்யாண வீட்டில் இரண்டொரு முறை அப்பாவுடன் சென்றபோது யாரும் எழுந்திரிக்கச் சொல்லவில்லை. அதேபோல அந்த கோவிலில் அவனை உட்கார வைத்து சோறிட்டதை கதிரால் மறக்கவே முடியாது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா வேறு “இருமுடி காசுல சோத்துக்கும் சேத்துதான் வாங்கிக்குவாங்க.. நல்லா தின்னு.. தின்னு..“ என்று உசுப்பேற்றினார். அப்போது வேலையிலிருந்தார். அரசாங்க வேலைதான். ஆனால் கீழ்நிலை பதவி. அவரை பொறுத்தவரை கீழ்நிலை பதவியில் பியூன் பதவிகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அதிகாரியிடம் ஏச்சு..பேச்சுகள் கிடைத்தாலும் அதற்கேற்ப வருமானமும் இருக்கும். வெளியே ஜபர்தஸ்தும் காட்டிக் கொள்ளலாம்.. அதுவும் காசாக்கிக் கொள்ளக் கூடிய ஜபர்தஸ்து. ஆனால் இவர் வகிக்கும் பதவி எதற்கும் லாயக்கில்லை. சம்பளத்துக்கும் சேர்த்துதான். பியூன்களிடம் அன்பாகவும் பணிவாகவும் இருக்க பழகிக் கொண்டார். டீ காசாவாது மிஞ்சும்.. அந்த சகவாசத்தில்தான் இந்த கோயில் பழக்கமானது. இந்த கோயிலில் சிலையை விட  மனித உருவில் நடமாடும் சாமிக்குதான் பக்தர்கள் அதிகம். எப்போதும் கூட்டம் அலைமோதிக் கிடக்கும்.

எப்போது துாங்கினான் என தெரியவில்லை. தலைக்கு மேல் காகம் இடைவிடாமல் கத்த, விழிப்புத் தட்டியது. வாயில் வழிந்த எச்சிலை இடதுக்கையால் துடைத்துக் கொண்டான். துாக்கம் முழுமையாக விடுப்படவில்லை. அனிச்சையாக காகத்தை துரத்தும் சைகையில் கையை உயர்த்தினான். எழுந்து உட்கார்ந்துக் கொண்டான். சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தான். மணி மூன்றாகியிருந்தது. குணாவின் அழைப்பு தவறியிருந்தது. அப்படியே அழுத்தி மறு அழைப்பு செய்து துண்டித்தான். குணாதான் “நீ மிஸ்ட் கால் குடுத்தா போதும்..” என்று சொல்லியிருந்தான்.

”துாங்கீட்டீயா கதிரு..”

”ஆமா சார்..”

”கௌம்பிடாத.. வந்துடுறேன்..” என்றான். மெல்லியப் பேச்சுக்குரல் கேட்டது. பெண் குரலாக இருக்கலாம்.

”சரிங்க சார்..”

ஒருமுறை ஆபிசர் வெளியே போயிருந்த நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு குணா எங்கோ கிளம்பி போக, அந்த நேரம் ஆபிசர் வீட்டுக்கு திரும்பி விட வேலை பறிப்போகுமளவுக்கு, பிரச்சனையாகிப் போனது. குணாவுக்கு சமையல் வேலை கைக்கொடுத்ததோ இல்லையோ கலர்தெரபி கைக்கொடுக்க வேலை நீடித்துப் போனது.

”சார்.. நான் அஞ்சாப்பு படிக்கறப்ப செந்தில் தெனைக்கும் மதியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவான்.. ஒருநா என்னையும் கூட்டீட்டு போனான்.. பருப்பு போட்டு நெய் ஊத்தி அவுங்கம்மா சோறு போட்டாங்க.. நீங்க சமைக்கறமாதிரியே இருந்துச்சு அவங்க சமையலும்..” கதிரின் இம்மாதிரியான பேச்சுகள் அபத்தமாக தோன்றினாலும் அவனின் ஆபத்தில்லாத பேச்சுத்துணை குணாவுக்கு பிடித்திருந்தது.

”அப்டீன்னா என் சமயல் நல்லால்லேங்கிறியா..?”

”இல்ல சார்.. இல்ல சார்.. சூப்பரா சமக்கிறீங்க..”

பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை அப்படியே கதிரிடம் நீட்டினான்.

”எத்னாவது படிச்சிருக்க..”

”ஆறாவதோட நின்னாச்சு.. வீட்ல சண்டப் போட்டுட்டு எங்கப்பா காசு குடுக்க மாட்டேன்னு போயிட்டாரு.. அம்மா பிரைவேட் ஸ்கூல்ல ஆயா வேலைக்கு போச்சு.. அப்போல்லாம் இங்க பாருங்க.. இங்க பாருங்க சார்.. இப்டிதான் குனிஞ்சுக்கிட்டே நடப்பேன்..”

”ஏன்..?”

”வயித்துவலிதான்..”

வயிற்றுவலி பிரச்சனையோடு ஒண்ணுக்கு போக வேண்டும் என்ற உணர்வு வேறு. ஆனால் அது கொஞ்சம் வேறுமாதிரியான அவதி. அப்போது அவனுக்கு இருபத்தைந்திருக்கும். கனவு முழுக்க பெண்கள். அதுவும் துணியில்லாத உடல்களோடு. கனவில் கூட பயந்து வியர்த்து போய் கண்களை மூடிக் கொள்ளத் தோன்றும்.. ஆனாலும் திருட்டுத்தனமாக பார்ப்பான். உடனே “ஒண்ணுக்கு“ வருவது போலிருக்க, விழிப்பு வந்து விடும். சில சமயங்களில் பகலில் கூட அப்படியொரு உணர்வு வரும். ஆனால் அது வயிற்று வலியை விட தேவலாம். தீவிரமாக சாமி கும்பிட்டதி்ல்தான் படிபடியாக குறைந்து வருவதாக நம்பினான். இந்த சேதியை வெளியே சொல்லக் கூடாது என்ற சத்தியத்தோடு குணாவிடம் ஒருநாள் பகிர்ந்துக் கொண்டான்.

அந்த கோயிலில் செக்யூரிட்டியாக இருந்தபோது நிஜமாகவே ஒண்ணுக்கு வந்தாலும் அடக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.. கூட்டம்.. கூட்டம்.. எங்கும் பக்தர்கள் கூட்டம்.. ஒதுங்குவதற்கு சற்று துாரம் நடக்க வேண்டும். பணி நேரத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. தங்குவதற்காக கோவில் நிர்வாகம் ஒதுக்கியிருந்த இடத்திலும் அதே நிலைதான். அது முன்னாள் மாட்டுக் கொட்டகை.. நான்கு புறமும் தகரத்தால் தடுத்திருந்தனர். செங்கல் பதித்தத் தரை. பாய்.. தலையணை.. இரண்டு செட் துணிமணிகள்.. ஒரு கடப்பா கல் பதித்த அலமாரி. இவனைப் போல ஏழெட்டு பேர் அங்கிருந்தனர்.. சம்பளம் என்று ஏதுமில்லை. இவனுக்கு செலவுமில்லை. வருடத்திற்கு இரண்டு செட் துணிமணி கிடைத்து விடும். எப்போதும் அவனுக்கு வயிறுதான் பிரச்சனை. நான்கு மணிக்கே குளித்து தயாராகி விடுவான். அதுவரை முணுக்முணுக்கென்றிருந்த வயிறு காலை ஏழு மணிக்கெல்லாம் பெரியதாக ஓலமிடத் தொடங்கும். அந்நேரத்திலேயே பக்தர்கள் கூட்டம் நெருக்கியடிக்கத் தொடங்கியிருக்கும். அதட்டலாக பேசி வரிசையை சரிப்படுத்த அவனால் முடியாது. இருந்தாலும் கெஞ்சலாக சொல்வான்.. நெரிசலில் நழவ விடும் பொருள்களை எடுத்துத் தருவான். சில சமயம் அழும் குழந்தைக்கு பலுான் வாங்க தாய்மார்கள் இவனை பணிப்பதும் உண்டு. என்னயிருந்தாலும் வயிற்று தொந்தரவுக்கு முன் “ஒண்ணுக்கு“ போகும் தவிப்பு ஒன்றும் பெரிதில்லைதான். எட்டு மணிக்கு சூடாக டிபன் கிடைக்கும்.. இட்லி.. பொங்கல்.. சப்பாத்தி.. சில சமயங்களில் பூரி.. தின்ன தின்ன திகட்டுவதில்லை. அப்போது அப்பாவின் ஞாபகம் வந்துப் போகும். அவரால்தான் இந்த  வாய்ப்பு.

”தம்பி மாதிரி பக்தியான பசங்க கோயிலுக்கு தொண்டு செய்ய வந்தா நல்லாருக்கும்..” என்றனர் இருமுடி கட்டி வந்த தருணத்தில். அணுகுவது முன்பின் தெரியாத கோயில் நிர்வாகத்தினர் என்றாலும் இம்மாதிரியான நல்ல சகுனங்கள் காட்டுவது குடும்பத்துக்கு நல்லது என்பதால் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

”சாப்பாடு.. தங்கறதெல்லாம் ஃப்ரிதான்.. சம்பளம் மட்டும் கொஞ்சநாளுக்கு குடுக்க முடியாத நெலம..” என்றனர்.

”அய்யோ.. சாமி தொண்டுக்கு சம்பளம் எதுக்குங்க.. நாங்க குடுத்து வச்சிருக்கணும்..”

“நான் இங்கயே இருக்கம்ப்பா..” என்றான் கதிர் யாரும் கேட்காமலே.

”இல்லல்ல.. இருமுடி செலுத்துனா வீட்டுக்கு போயி மாலைய எறக்கி வக்கணும்.. அதான் முறை.. எறக்கி வச்சிட்டு அடுத்த பஸ்ச புடிச்சு ஒடியாந்துடு..” நுாறு ரூபாய் தாளை மடித்து கையில் வைக்க, அப்பாவும் இவனும் நெகிழ்ந்துப் போனார்கள். இவனுக்கு மதியம் உண்ட பாயாசம்.. வடை.. சாம்பார்.. கூட்டு.. எல்லாவற்றையும் மீண்டும் சாப்பிட வேண்டும் போலிருந்தது.

”இப்பதானே சாப்டே..” என்றார் அப்பா. ஆனாலும் பொரி வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய்க்கே கை நிறைந்த பாக்கெட். அங்கிருந்த இரண்டு வருடங்களும் வயிறு அதிக வேதனைக் கொடுத்ததில்லை. மதிய வேளையில் ஒரு மணிக்கு சாப்பாடு.. இருமுடி சாப்பாடு போல தடபுடலாக இல்லாவிட்டாலும், ஒரு பொறியலும், அப்பளமும் கட்டாயம் இருக்கும். சாப்பாட்டில் அளவு கிடையாது. இருந்தாலும் திரும்ப திரும்ப இவன் கேட்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. மதியத்துக்கும் இரவுக்குமான நீண்ட இடைவெளியை கடப்பது பெரிய சவாலாகவே இருந்தது. எட்டு மணிக்கு ஆவலாக இட்லியில் கை வைக்கும்போது “முன்னபின்ன தின்னதே இல்லியாடா நீ..” கிண்டலாக எரிச்சலை காட்டுவார்கள்.

அப்பாவுக்கு திடீரென கையும் காலும் இயக்கமற்று போக, இவனை அம்மா அழைத்துக் கொண்டாள். “அவருக்கு கை வர்லீன்னா நா என்னா பண்ணுட்டும்.. நா வர்ல போ..” என்றான் அம்மாவிடம் கோபமாக. ஆனால் அம்மா விடவில்லை. திரும்பி வந்தபோது தங்கச்சி பாப்பா அநியாயத்துக்கு மெலிந்திருந்தாள். எல்லோரும்தான். “ஒனக்கென்ன.. வயித்துக்கு சோறுக் கெடச்சா சொர்க்கம்தான்.. எங்க பாடு ஒனக்கெங்க புரியப்போவுது..” என்றாள் அம்மா எரிச்சலுடன். அப்பாவுக்கு சம்பாத்தியம் இல்லை. ஆஸ்பத்திரி செலவு வேறு.

இருட்டத் தொடங்கியிருந்தது. தோட்டத்தில் கொசுக்கள் அப்பிக் கொள்ள, எழுந்து வீட்டுக்குள் வந்தான். மளிகைக்கடையில் சரக்கு துாக்கும் வேலையில் இருந்த போது இத்தனை பிரச்சனை இல்லை. இவனின் சம்பளத்துக்கு பதிலாக அம்மா பலசரக்காக வாங்கிக் கொள்வாள். அப்போதுதான் பாப்பாவுக்கு திருமணமானது. பலசரக்குக் கடைக்காரர் கொஞ்சம் கடன் கொடுத்திருந்தார்.. ஆனால் திருமணக்கடன் அடைவதற்கு முன்பே தங்கை வீட்டிற்கு திரும்பி விட, எதிர்த்து நின்ற அம்மாவை “பேக்குங்களையா பெத்துப் போட்டுட்டு தெனாவட்டாவா பேசுற..?” மாப்பிள்ளை ஒருமையில் பேசும்போது இவனும் நின்றுக் கொண்டிருந்தான். அப்போது கூட வயிற்றில் வலி இருந்தது. வலி என்றால் முதலில் ஆழத்தில் இருக்கும். பிறகு மெல்லெழும்பி முன்னகரும். பிறகு வயிறெங்கும் பரவும். கவனம் முழுக்க வயிற்றிலேயே வைத்திருக்க வேண்டியிருக்கும்.

பிறகுதான் யாரோ சொல்லி இந்த அரசாங்க அலுவலகத்தில் எடுபுடி வேலை. “சீக்ரம் ரிடையர் ஆயி கோயில்ல ஒக்காந்துக்குணும்..” என்பான் வாஞ்சியிடம்.

”ஒனக்கென்ன ரிடையர்மெண்ட்..? எப்ப வேணும்னாலும் போயிட்டே இருக்க வேண்டியதுதான்..”

”கோவிலுன்னா சோத்துக்கு பிரச்சனை இல்ல.. அதான்..” என்றான் வாஞ்சி சொல்வதை காதில் வாங்காததுபோல.

”வீட்ல மத்தவங்கள்ளாம் இருக்காங்கள்ள..?”

”அம்மாப்பா செத்துருவாங்க.. தங்கச்சிக்கும் வயித்துவலி.. அதும் செத்துரும்.. எனக்கு யாரு சமைச்சுப் போடுவா..?”

”ஏயப்பா.. காரியக்கார லுாசு நீ.. சாவுறவரைக்கும் ப்ளான் பண்ணீட்டியே..”

மணி எட்டாகியிருந்தது. ”இன்னுமா வீட்டுக்கு போவுல.. தங்கச்சிய பெட்ல வச்சிட்டாங்கடா தம்பீ.. ஒங்கப்பாவ பொரட்டிப் போட கூட ஆளில்ல..”

”வர்றம்மா.. சார் வந்துருட்டும்..” என்றான் குணாவை நினைத்துக் கொண்டு.

”சார் வந்தார்ன்னா நெலமய சொல்லி பணம் கேளுப்பா..” என்றாள் அம்மா ஆபிசரை நினைத்துக் கொண்டு.

கதிருக்கும் கிளம்ப வேண்டும் என்றுதான் தோன்றியது. குணாவுக்கு போன் செய்தான்.

”சார்..” என்பதற்குள் குணா மறித்துப் பேசினான்.

”முக்குக்கடையில பரோட்டா வாங்கீட்டு வர்றன்.. நீ கௌம்பிடாத..”

வயிறு வலித்தது பரவலாக.

அம்மா மீண்டும் அழைத்தாள். அலைபேசியின் சத்தத்தை குறைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

***

No comments:

Post a Comment