“குறி“ மே-ஜுன் 2018 சிற்றிதழில் வெளியான சிறுகதை
இடைப்பட்ட
ஐந்து வருடம் என்பது நீண்ட நெடுங்காலமல்ல என்னைப் பொறுத்தவரை. ஆனால் இம்முறை எனக்கு
ஆர்வமிருந்தது. ஒருவேளை பணத்தால் ஆகும் பயனெல்லாம் ஓரளவு அனுபவித்த பிறகு ஏற்படும்
சலிப்பான மனநிலைக்கு இதை ஒரு மாற்றாகக் கருதியிருக்கலாம். அதோடு கோவிந்தின் புலம்பல்
வேறு. என்ன சொன்னாலும் அவர்களின் தலை ஆமோதிப்பாகவே அசைகிறதாம்.
இதைக்
கேட்பதற்கு உங்களுக்குப் புதுமையாக இருக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் உணர்ந்தேன்.
இப்படி ஒரு கிராமத்தை நான் பார்த்ததேயில்லை என்றேன். இத்தனைக்கும் பள்ளி நாட்களில்
எனக்கு நன்கு அறிமுகமான கிராமம்தான் அது. கோவிந்த் என் இளமைக்கால வகுப்புத் தோழன்.
என் அப்பாவின் பணி, பிறகு என் அயல்நாட்டு பணி இவையெல்லாம் என்னை அவனிடமிருந்து முற்றிலும்
பிரித்து விட, ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவழியாக நாங்கள் ஒருவரையொருவர் மீட்டுக்கொண்டோம்.
மீட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியப்
பயணங்கள் சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருந்த நேரமது. சிறுவயதுத் தோழமை பயமறியாத ஆர்வத்துடனும்,
கொச்சையான கோபதாபத்துடனும் ஆர்ப்பாட்டமான எதிர்பார்ப்பு அல்லது எதிர்பார்ப்பற்று கட்டமைக்கப்படுவதால்
யாதார்த்தம் தொலையும் வயதுகளில் பால்ய தோழமை மீதிருக்கும் பிரேமை கூடி விடுகிறது. அதுவே பயணத்திற்கு ஒருவித ஈர்ப்பை கொடுத்தது. இரண்டு
முழு நாட்களை அவனுடன் ஒதுக்கிக் கொண்டேன். அவனும் ஏமாற்றவில்லை. இரு பிள்ளைகளுக்குத்
தகப்பனாக, கிராமப் பஞ்சாயத்தின் தலைவனாக, தாட்டியமான ஆகிருதியுடன் வாய் நிறையப் பல்லாக
என்னை கட்டிக் கொண்டான். அவனின் மனைவியும் வாய் நிறைய வரவேற்றார். கணவனைப் போலவே அவரும்
நீள அகலங்கள் நிறைந்தவராக இருந்தார். குனிந்தால் நிமிரவெல்லாம் முடியாது. இருவருக்கும்
நிறைய அன்னியோன்யம் இருந்தது. மனைவியைக் கேட்காமல் அவன் தும்மக் கூட விரும்ப மாட்டான்
என்று தோன்றியது.
வசதிகளுக்குச்
சற்றும் குறைவில்லாத நவீனமான வீடு. மனைவி வழியில் ஆதரவு இருப்பதை உணர முடிந்தது. குறிப்பாக
மைத்துனர்களின் ஆதரவு. உள்ளுர்தானாம் அவர்களும்.
”எப்டி
இந்தக் கிராமத்திலயே செட்டில் ஆவுணும்னு ஒனக்குத் தோணுச்சு...” நாட்டை விட்டே கிளம்பிவிட்டத்
தொனியெல்லாம் இல்லாமல் கேட்டேன்.
”முப்பது
வருஷத்துக்கப்பறம் நீ வருவே... ஒனக்குக் காட்டலாம்னுதான்...”.
”ஏய்...
வௌயாடாதப்பா... நான் சீரியஸா கேக்கறன்...”
”நெலபுலம்...
வீடுவாசல்னு ஏகப்பட்டது கெடக்கு... எதை விடுறது... எதை பிடிக்கறதுன்னு தெரியில... அதான்
இங்கயே செட்டிலாயிட்டேன்...”
பரவாயில்லை.
நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறான்.
சாப்பாட்டுக்குப்
பிறகு வாஷ்பேசினைத் தவிர்த்துக் கொல்லைப்புறம் சென்றேன். கோவிந்தும் கூடவே வந்து, குனிந்து
குழாயைத் திறந்துவிட்டான். என் சங்கோஜத்தை உணர்ந்துகொண்டு ”எப்பா... வெளிநாட்லேர்ந்து
வர்ற... ஒனக்கு மரியாதை செய்யறத விட வேறென்ன வேல எனக்கு...?” என்றான். அவன் நீட்டிய
துண்டில் கைககளைத் துடைத்துக்கொண்டேன். கொல்லை பெரியதாக இருந்தது. ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
பார்ப்பதற்கு வெளியூர் ஆட்களை போல... சொல்லப்போனால் வெளி மாநில ஆட்களைப் போன்றிருந்தனர்.
திண்ணை
சோஃபா போடுமளவுக்கு அகலமாக இருந்தது. நான் தெருவைப் பார்த்து அமர, கோவிந்து என்னைப்
பார்த்து அமர்ந்துகொண்டான். தெரு நீண்டு நிழல் கவிழ்ந்திருந்தது. குறிப்பிட்ட இடைவெளியில்
மரங்கள் அடம்பலாக படர்ந்திருந்தன. பெயர் தெரியாத வித்யாசமான மரங்கள். மரமாகவே எங்கோ
வாங்கி நட்டதாகச் சொன்னான். அதனடியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கூடிக் கிடந்தனர்.
மௌனம் பேசும் திறந்த கதவுகளும் இடைவிடாது உரையாடும் கணினியுமாக காலம் தள்ளுபவர்களுக்கு
இந்தக் காட்சி நிச்சயம் பொறாமையைத் துாண்டும். கூடவே புதுமையாகவும் இருந்தது.
”ஊர்ல
எதும் விசேஷமா... எல்லாம் ஒண்ணு கூடி ஒக்காந்திருக்காங்க...?”
”ஆமா...
நல்ல நெழல்ல...” என்றான் சம்பந்தமின்றி.
”வேல
நேரத்தில இப்டி ஓய்வா ஒக்கார்றதை இப்பதான் பாக்கறேன்...” ஆச்சர்யமாக இருந்தது.
”அதுக்காக...?
நம்ம மனுசங்கள நாமளே வேல வாங்கறதா...?”
எனக்கு
உண்மையிலுமே புரியவில்லை.
”நீ ஏன்
வேல வாங்கற... அவங்கவங்க நெலத்திலதான வேல செய்றாங்க...”
”இல்லப்பா...
நெலமெல்லாத்தையும் நா வாங்கீட்டேன்...”
”ஏய்...
ஒனக்கேது அவ்ளோ பணம்...?” சட்டென்று வெளிவந்த வார்த்தைகள் நல்லவேளையாக அவனைக் காயப்படுத்தவில்லை.
”வாங்கீட்டேன்னா
வாங்கீட்டேன்னு இல்ல... ஆனா எல்லாம் என்னோட கட்டுப்பாட்லதான் இருக்கு...”
”குத்தகைக்கு
எடுத்திட்டீயா...”
”குத்தகைன்னு
சொல்ல முடியாது... ஆனா இந்த நெலத்து மேல இவங்களுக்கு உரிமையில்லேன்னு வச்சிக்கயேன்...
எங்க கிராமத்த உலக அளவுல முன்மாதிரி கிராமமா மாத்திக் காட்றேன்னு சொல்லிதான் பஞ்சாயத்து
எலக்ஷன்ல ஓட்டே கேட்டேன்...”
”அதெல்லாம்
சரி... அதுக்குன்னு நிலத்தையெல்லாமா எழுதிக் குடுப்பாங்க...”
அதற்குள்
அவன் மனைவி குளிர்பானத்தை நீட்ட வேண்டாமென்று மறுத்தேன்.
”நல்லாயிருக்குங்கண்ணா
குடிங்க...” என்றாள்.
”போதும்மா...
நானும் அங்கயிருந்துதானே வர்றன்... சலிச்சுப் போச்சு... நம்பூருக்கு வந்துட்டோம்னா
எளநீ மோரு இதுக்கெல்லாம்தான் நாக்கு தேடுது...” என்றேன்.
”வெளிநாட்டுக்காரங்க
எதை விரும்புவாங்கன்னு எனக்கு தெரியும்ண்ணா... அதான் வெளியூருக்கு ஆளனுப்பி எளநீ வாங்கீட்டு
வரச் சொல்லிருக்கேன்... இந்தாங்க... அதுவரைக்கும் இந்த மோரைக் குடிங்க...” என்றாள்.
அவளுடைய
பேச்சு கொஞ்சம் குழப்பியது. அதற்குள் மோர் வந்துவிட, ஆர்வமாக வாங்கிக் கொண்டேன். இஞ்சி,
பச்சைமிளகாய் அரிந்து போட்டுத் தாளித்த மோர். கிளர்ந்தெழுந்த அம்மாவின் நினைவை மோரை
ஊற்றிப் பின்தள்ளினேன். ஆனால் மோர் உள்ளே இறங்காமல் தடுமாற ”டேஸ்ட் கொஞ்சம் வேற மாதிரி
இருக்கேம்மா...” என்றேன்.
”இது
ஆட்டுப்பால் மோருண்ணா...”
”காந்தி
மாதிரி...” கண் சிமிட்டிச் சிரித்தவன் ”ஆடுங்களோட எண்ணிக்கை பெருகிப் போச்சுப்பா...
இவ்ளோ பாலையும் குட்டிங்களோடு சேர்ந்து நாங்களும் குடிச்சாதான் தீரும் போலருக்கு...”
என்று பெரிதாகச் சிரித்தான்.
”ஏன்...
திருவிழாவுக்கு நேர்ந்து விட்டிருக்கீங்களா...?”
“அப்டியில்ல...
ஆட்டுக்கறி சாப்டக் கூடாதுன்னு தடை போட்டுருக்கேன்ல...”
ஆட்டுக்கு
நோய்நொடி அண்டியிருக்குமோ... தலைவர்தான்... அதுக்குன்னு இப்டியெல்லாம் கூடவா தடை போடுவாங்க...
சத்தியமாகக் குழப்பமாக இருந்தது.
”ஆட்டுக்கறி
சாப்பிடறது நம்ப மரபிலயே இல்ல தெரியுமா... இப்போ குந்தேலாபாகவி காவியத்தை எடுத்துக்கோ...
இல்ல மனஸ்வியோமனோ புராணத்தை எடுத்துக்க... இல்ல லதனோவிவதனு புராணத்தைத்தான் படிச்சுப் பாரு... ஆடுதான் நம்ம
செல்வம்... நம்ம தெய்வம் தெளிவா சொல்லீருக்காங்க...”
”அப்டியா...
எனக்கு இதப் பத்தி சுத்தமா நாலெட்ஜ் இல்ல...” ஏதோ ஓர் உணர்வு ஏற்பட்டது. அது குற்றவுணர்வு
போல தோன்றவில்லை.
”சரி
விடு... வெளிநாட்டு ஆளு... எல்லாம் மறந்திருக்கும்... நம்ப மதத்தை நாமளே கடைப்பிடிக்கலேன்னா
எப்டீ...”
”ஆனா
உங்கூர்ல எல்லா மதத்தாளுங்களும் இருக்காங்களே...”
”எந்த
மதமா இருந்தா என்ன...? எல்லாம் மனுசங்கதானே... ஆனா இதுக்கெல்லாம் ஆரம்பத்தில பயங்கரமா
எதிர்ப்பு இருந்துச்சு தெரியுமா...”
”அப்றம்
எப்டி சமாளிச்சே...”
”நான்
செய்யப்போற சீர்த்திருத்ததுக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாதுன்னு நல்லவேளயா முன்னாடியே
எழுதி வாங்கி ரிஜிஸ்டரும் பண்ணி வச்சிட்டேன். சத்தியத்துக்கு கட்டுப்படுலேன்னாலும்
சட்டத்துக்காவது கட்டுப்பட்டாவணுமில்ல...”
”அதுக்குன்னு...?
அவங்கவங்களுக்குன்னு ஒரு சடங்கு சம்பிரதாயம் இருக்கில்ல...”
”ஆனா
எல்லாம் ஒரே கிராமத்திலதானே இருக்கோம்... தனித்தனியாவா சட்டம் போட முடியும்...”
இவன்
சொல்வது நியாயம் போலத்தான் தோன்றியது.
“சரி...
போலாமா...” என்றான்.
உற்சாகம்
தொற்றிக் கொள்ள எழுந்தேன்.
வீடுகள்
வெறிச்சிட்டிருக்க, மரங்களும் மரத்தடி மனிதர்களுமான காட்சிகள் புதிதாக தோன்றினாலும்
ரசிக்கத்தக்கதாகவே இருந்தன. தெருவில் ஆடுகளின் நடமாட்டம் அதிகமிருந்தது. கோவிந்துவின்
வீட்டு பூஜையறையில் கூட ஆட்டுத் தலையுடன் கூடிய அம்மன் படத்தைப் பார்த்தேன். மருக்கையம்மன்
என்றான் பயபக்தியோடு. தெருவின் முக்கத்தில்... வயல்களின் நடுவே ஏதோ பாலம் கட்டியதுபோல
ஒரு கான்கிரீட் பிரிவினை. அடப்பாவீ... மதங்களை ஒன்றிணைத்தவன் இன்னும் சாதியையே தாண்டவில்லையே...?
நல்லவேளையாக
இது சாதிச் சுவர் இல்லையாம். பின் எதற்காம்...? சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை ஆலைகளுக்கு
எடுத்துச் செல்லும் பெரும் நிலத்தடிக் குழாய்கள் இந்தக் கிராமத்தின் வழியே செல்வதாகச்
சொன்னான். அதற்கான வரியை கிராமப் பஞ்சாயத்தில் ஆலை நிர்வாகம் செலுத்தி விடுவதாகவும்
கூறினான். சரி... அதற்கேன் கான்கிரீட் கட்டுமானம்...? தண்ணீர் பற்றாக்குறையால் கிராமத்தாரே
அந்த நீரைத் திருடுகிறார்களாம். அவர்களின் நேர்மையற்ற செயலைத் தடுப்பதற்காகவே இந்த
ஏற்பாடு என்றான். நிலங்களில் கட்டுமானம் ஏற்பட்டுவிட்ட பிறகு பயிர் விளைவிப்பது எப்படி...
என்றதற்கு அதற்கென்ன அவசியம் என்றான்.
”உலோக
அரிசி... உலோகக் காய்கறி தயாரிக்க ஏற்பாடு பண்ணியாச்சு... நெல்லுக்கு ஆகற தண்ணீல பாதி
இருந்தா போதும்... உழைப்பும் மிச்சம்...”
மாடு
கட்டிப் போரடித்தும் மாளாமல் யானையை துணைக்கழைத்ததாகப் படித்திருக்கிறேன்... காடே மறைந்துகொண்டிருக்கும்போது
யானைக்கு எங்கே போவது...? நீருக்குத்தான் எங்கே போவது...? அதை விட நல்ல திருப்பமாக
காலங்காலமாய் உழைத்த மக்கள் நிழலோட்டமாய் அமர்ந்திருக்கிறார்கள்.
”எங்க
கிராமத்தோட தரத்தை உலக அளவுல கொண்டு போறதுலதான் இப்போ என்னோட முழு ஈடுபாடும்... இங்கருக்க
மண்ணுல கனிமவளம் இருக்குன்னு ஒரு ஃபைண்டிங் இருக்கு... அதான் இங்க மைனிங் பண்றது சம்பந்தமா
அரசாங்கத்தில ஆள வச்சி மூவ் பண்ணிட்டிருக்கேன்... அது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னு வையி...
எங்க மக்களைக் கையில பிடிக்க முடியாது பாத்துக்க...”
பெருமிதத்தோடு
பேசிக்கொண்டேயிருந்தான்.
”இப்பல்லாம்
படிச்சவங்களுக்கு எங்கப்பா வேல கெடக்குது... அதான் ஸ்கூல் படிப்புக்கு பதிலா தேசிய
மொழிய இலவசமா கத்துக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்... தாய்மொழிய தவுத்து இன்னொரு மொழி
கத்துக்கிட்டாபிலயும் ஆச்சு... நாளபின்ன வடக்குப் பக்கம் போனாலும் இது ஒபயோகமாவும்
இருக்கும்... ”
இதெல்லாம்
எதற்கு... அல்லது இவை எத்தனை துாரம் செல்லுபடியாகும்... எதிர்ப்புகள் வந்ததா என்று
தோன்றியதையெல்லாம் அடக்கிக் கொண்டேன். எழுதி வாங்கி விட்டேன் என்பான் பதிலுக்கு.
”நா செஞ்சுக்கிட்டிருக்க
சீர்த்திருத்தத்தைப் புரிஞ்சுக்காம தாயா புள்ளையா பழகுனவங்க கூட போராட்டமெல்லாம் பண்ண
ஆரம்பிச்சுட்டாங்க... எப்படி அடக்கறதுன்னு மொதல்ல தடுமாறி போயிட்டேன்... எரியறத இழுத்தா
கொதிக்கறது தானா அடங்கியாவணும்... அவங்கள்ட்ட பொழங்கீட்டிருக்க பணத்தைத் தடை செஞ்சுட்டோம்னு
வையி... அதைத் தவிர வேறெதயும் யோசிக்க மாட்டாங்கள்ள...”
எப்டி
இப்படியெல்லாம் யோசிக்கிறான்...?
”அவங்கள்ட்ட
இருக்கற காசு பணம் எதையும் இனிம பொழங்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன்... மாசாமாசம் அவங்களுக்குத்
தேவையான சாமான்கள வாங்கிக் குடுக்கற பொறுப்பை என் மச்சானுங்க பாத்துக்கிட்டாங்க. மேஞ்செலவுக்கு
குடும்பத்தில இருக்கற எண்ணிக்கைய வச்சு பணமா குடுத்தோம்... உழைப்பேயில்லாம சும்மா ஒக்காந்திருக்கவங்களுக்கு
இதே அதிகம்தான்... ஆனாலும் நம்மாளுங்கள நாமளே துாக்கி விடலேன்னா எப்டீ...?”
“இதுக்கெல்லாம்
பஞ்சாயத்துல வர்ற வருமானம் போதுமா...?” என்றேன்.
”அதுக்குத்தான்
நெறைய ஏற்பாடு பண்ணியிருக்கேனே... நா கொடுக்கற பணத்தில பாதிய வரியா பிடித்தம் செஞ்சுக்குவேன்.
மீதி பணத்தில பத்து சதவிதம் பஞ்சாயத்தில டெபாசிட் பண்ணீடணும்...”
”பண்லேன்னா...?”
”அதுக்கும்
வரி உண்டுங்கறதால கட்டாயமா டெபாசிட் பண்ணீடுவாங்க...”
பற்றாக்குறையால்
டெபாசிட் பண்ண முடியாமல் போனால் அதற்கும் வரி போடுவது எப்படி... குழப்பமாக இருந்தது.
ஒருவேளை நான்தான் தவறோ...?
”இதுல
சில சலுகையும் இருக்கு... அவங்கவங்களுக்கு ஒதுக்கியிருக்க ரேஷனை வெளியில வித்து பணமாக்கறது
முழுக்கவும் அவங்களோட தனிப்பட்ட உரிமை... அதுல நா தலையிடறதில்ல... ஒரே ஒரு விஷயத்தில
மட்டும் கட்டுப்பாடு... அதும் அவங்க நல்லதுக்காகதான்... தங்களுக்கு தேவையான எல்லாத்தையும்
ஆன்லைன்ல மட்டும்தான் பர்சேஸ் பண்ணனும்னு சொல்லீட்டேன்... இதனால இங்க இருக்கவங்க எல்லாருக்குமே
ஆன்லைன் மார்க்கெட்டிங் தெரியும்னா பாத்துக்கயேன்... ஆன்லைன் டிரேடிங்க்கு வரியும்
ரொம்பக் கொறவுதான்...” கண்கள் பெருமிதத்தில் மின்னியது கோவிந்துக்கு.
எனக்கு
அவன் சொல்வது புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது. ஏதோ நல்லது நடந்தால் சரி
என்று கிளம்பி விட்டேன்.
ஐந்தாண்டுகளுக்குப்
பிறகு மீண்டும் இந்திய வாசம். அவனுடைய கிராமத்தை நோக்கிய பயணம். உள்ளாட்சி அமைப்புகள்
மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அதே பிரதிநிதிகளுடன் செயல்பட
அரசு ஆணையிட்டுருப்பதால் தொடர்ந்து தலைவராக நீடிப்பதாக முன்பே கூறியிருந்தான்.
கோவிந்தும்
அவன் மனைவியும் ரயிலடிக்கே வந்திருந்தனர். இருவரும் முன்பை விட அன்பாக... முன்பை விட
கூடுதல் எடையுடன்... பெருந்தனக்காரத் தோற்றத்துடன்... முகம் மலர்ந்து வரவேற்றனர். காரில்
குளிரூட்டியை குறைக்கச் சொல்லி, சன்னல்களை சிறிது உயர்த்தினேன். வழியெங்கும் முன்பு
போலவே மக்கள் மரத்தடிகளில் இருந்தனர். சிலர் உடல்களில் பெருங்காயங்கள் இருந்தன. சிலருக்கு
நடமாட முடியாத அளவுக்கு உடல் உபாதைகளிருந்தது தெரிந்தது. அவர்கள் தங்களுக்குள் கூச்சலாகப்
பேசிக்கொண்டனர். கோவிந்தை ஏறிட்டேன். இதெல்லாம் அவர்களுக்குள்ளான சண்டையில் ஏற்படுவது...
அதிலெல்லாம் தான் தலையிடுவதில்லை என்றான். அவர்களுக்குள் எப்படியோ தெரியாது... ஆனால்
நான் என்ன சொன்னாலும் அவர்களின் தலை ஆமோதித்துக் கொண்டேயிருக்கிறது என்றான் மீண்டும்.
அப்படியானால்
நீ மீண்டும் அவர்களை வயலில் உழுவதற்கு ஏற்பாடு செய்யேன்... என்றேன்.
சீர்த்திருத்தம்
முடிந்த வயல்களை அவர்களிடமே கொடுத்து விட்டேனே என்றான். அதுவும் உண்மைதான். வயல்களில்
கான்கிரீட் கட்டுமானங்கள் தென்படவில்லை. சுரங்கம் தோண்டியிருப்பதன் அடையாளமாக மாபெரும்
பள்ளங்கள் கைவிடப்பட்ட தொனியில் தென்பட்டன. கனிமவளம் அத்தனை ஆழமாக இல்லாததால் நாலைந்து
வருடங்களுக்குள் வேலை முடிந்து விட்டதாக வருத்தப்பட்டான்.
வேறு
ஏதேனும் நல்ல திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். இதை மக்களிடம் கூறி
விட்டாயா... என்றேன். என்ன சொன்னாலும்தான் அவர்களின் தலை ஆமோதித்துக் கொண்டேயிருக்கிறதே
என்றான்.
பணம்
கொடுப்பதை நிறுத்திப் பாரேன் என்று சொல்லத் தோன்றியது. ஆனால் என் வார்த்தைகளில் எனக்கே
ஆர்வமில்லை. ஒருவேளை அதையும் குறைத்திருப்பான். அல்லது நிறுத்தியிருப்பான்.
‘நான்
அடுத்த முறை வரும்போதும் இவர்கள் மரத்தடிகளில்தான் அமர்ந்திருக்கப் போகிறார்கள். இப்போதைக்
காட்டிலும் இன்னமும் மெலிந்தவர்களாக... என்று தோன்றியது. ஒருவேளை அவர்கள் உயிருடன்
இருந்தால்... என்றும் தோன்றியது.
***
No comments:
Post a Comment