பதாகை ஆகஸ்ட் 2018ல் வெளியான சிறுகதை
அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு
ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும்
சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய்
கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.
நிற்காமல் வழிந்த நீரை துடைக்க முயலாமல் நடந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவில்
குடிசையின் உச்சிகள் தெரியத் தொடங்கின. இது அவனுக்கு புதிய ஊர் அல்ல. அடிவாரத்திலிருந்து
சிறிதளவே உயரத்திலிருந்த இந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் அவன் வகுப்பில் படித்திருக்கிறார்கள்.
இப்போது .இறந்துக் கிடக்கும் அவனுடைய அம்மா இங்கு கத்தரி வற்றலும், அப்பளமும், உப்பு
மாங்காயும் கொண்டு வருவாள். அதற்கீடாக பண்டமோ, பணமோ வாங்கிக் கொண்டு திரும்புவாள்.
சோனியாய் திரியும் நாய்கள், சாணம் மொழுகிய களங்கள்.. கால்நடைகள்… வளர்ப்புச் செடிகளை
தொடர்ந்து குடிசைகள் தென்படத் தொடங்கின. தபால்களை கொடுக்கவும் சேகரிக்கவுமாக சென்ற
அவனது அப்பா இப்போது இங்குதானிருக்கிறார் என்று திடீரென்று அதீதமாக நம்பத் தொடங்கினான்.
அந்த நம்பிக்கையின் முடிவில் ஆற்றுப்படுத்த முடியாத அழுகை வந்தது. அவரை பார்த்து
விட்டால் போதும் என்று மனதார எண்ணினான்.
கண்ணீரும்கம்பலையுமாக
நின்ற அவனை பார்த்ததும் அந்த ஊர் பதறிப் போனது.
நிறுத்தவியலாத அழுகையோடு அவர்களிடம் தகவலை சொன்னான். “அடப்பாவீ..
நல்லாருந்த பொம்பளைக்கு என்னாச்சு திடுப்புன்னு..” என்று அங்கலாய்த்தது. இவன் ஒரே பிள்ளை
என்று தெரிந்துக் கொண்டதில், “இந்தப் புள்ளக்கு ஒரு வழிய காட்டி வுடாம அப்படியென்ன
அவசரமாம்..“ என்று பரிதவித்தது. அப்பா நேற்று மதியமே கிளம்பி விட்டதாக வருத்தம்
தெரிவித்தது,
”நா கௌம்பறேன்..” என்றவனை நிறுத்தி, “ஒங்கப்பா தபாலு மட்டுமா கொண்டாருவாரு..
நாட்டுல.. தேசத்தில நடக்கற நல்லதுகெட்டத அவரு வாயால கேட்டாதானே கேட்டாப்பல இருக்கும்..
மனுசன் இனிம ஒடஞ்சில்ல போயிடுவாரு..” என்று விட்டு சோற்றையள்ளி இலையில் வைத்தது. அவன்
தீவிரமாக மறுத்து அழுதான்.
”தம்பி.. அவுத்தால மல கொஞ்சம் செங்கூத்தா போவும்.. பாத்துக்க.. வேணும்னா யாரவாது
அனுப்பி வுடவா ஒத்தாசக்கு..” தவிப்பாய் உபசரித்தார்கள். அதையும் மறுத்து விட்டு கிளம்பினான்.
மலையேற்றம் அத்தனை
புதிதில்லை என்றாலும் ஏற ஏற மலை உயர்ந்துக் கொண்டே செல்வது போலிருந்தது. அதுவும் அவர்கள் கூறியது போல செங்குத்தான பாதையாக இருந்தது.
இதற்கு மேல் அவனுக்கு எல்லாமே புதிது. தன்னையும் அழைத்துச் செல்லுமாறு அம்மா சிலதடவை
கேட்டிருக்கிறாள். அப்பா பாசக்காரர்தான். ஆனால் பணியில் இடையூறுகள் வருவதை விரும்புவதில்லை.
அவரை இப்போதே பார்த்து கதறி அழ வேண்டும் என்ற தோன்றியது. அந்த எண்ணமே அவனுக்கு நடப்பதற்கான
தீவிரத்தை கொடுத்தது. கீழிருந்து பார்க்கும்போது இரட்டை மலைகளாக தெரிந்தவை மேலேறியதும்
அடுக்குகளாய் பிரிந்துக் கிடந்தன. ஆயினும் ஆட்களின் நடமாட்டம் தெம்பளித்தது. போக்குமனிதர்கள்
அலுத்து களைத்திருந்த அவனுக்கு நீரோடையை கைக்காட்டினர். கைகளை குவித்து நீரை
ஏந்தி முகத்தில் அடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அள்ளிப் பருகினான். பாதை மடிந்து திரும்பி ஊர்களை அடையாளம் காட்டியது.
சிறு சமவெளிப் பரப்பு அது. குடியிருப்புகள் அடர்வாக பரவியிருந்தன.
அப்பாவை அங்கு
நன்றாகவே தெரிந்திருந்தது. சேதியை கேள்விப்பட்டதும் அவர்கள், மிகுந்த
கரிசனம் கொண்டார்கள். சிறிதுநாட்களுக்கு
தபால்களை தாங்களே வந்து வாங்கிக் கொள்வதாகவும் சொன்னார்கள். மேலே முன்னேறியபோது மலையடுக்குகள் பாதை குழப்பத்தை ஏற்படுத்தின. அவர்கள் மேல் நோக்கி
சுட்டியது எந்த மலையடுக்கை என புரியாமல் அங்கேயே நின்றபோதுதான் கால்களின் வலியை உணரத்
தொடங்கினான். இத்தனை மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு கால்களை தவிர
வேறு பொது போக்குவரத்து ஏதுமில்லை என்பதும் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இங்கெல்லாம் அதிகபட்சம் மாலை நான்கு மணிக்கு மேல் பாதுகாப்பில்லை
என்பார் அப்பா. அதற்குள் அவரை பிடித்து விட வேண்டுமே என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது.
அவன் இன்று விழித்த நேரமே சரியில்லை. இல்லையெனில், இத்தனை பெரிய துரதிர்ஷ்டம் அவனுக்கு
வாய்த்திருக்காது. அவனும் அப்பாவும் அம்மாவுமாக இருந்த அன்பான கூடு இன்று சிதைந்திருந்தது.
அதை இந்த நொடி வரை அப்பாவுக்கு தெரிவிக்க முடியவில்லை. அப்பா அருகில் இருந்திருந்தால்
அம்மா இறந்திருக்க மாட்டாள் என்று தோன்றியது. அம்மாவும் இதே எண்ணத்தோடுதான் இறந்திருக்க
வேண்டும் கால்போன பாதையில் நடந்தாலும் நல்லவேளையாக அது சரியானதாக இருந்தது. அப்பா அங்கு
வரவேயில்லை என்றார்கள். அவன் பதறியதைக் கண்டு தபால்கள் ஏதுமில்லாத நாட்களில் அவர் ஊருக்குள்
வராமல் செல்வது வாடிக்கையான ஒன்றுதான் என்றார்கள்.
அவன் வந்த விஷயத்தை
சொன்னதும் “எப்போது..“ என்று அதிர்ந்தார்கள். “இன்று அதிகாலை..“ என்றான். அதற்குள்
அவர்களுள் ஒருவன் சரிவின் மறுப்பக்கத்திலிருக்கும் குடியிருப்புகளில் அவரின் இருப்பு
தென்படுகிறதா என்று பார்த்து விட்டு வருவதாக புறப்பட்டிருந்தான். அவர் நிச்சயம் இங்கிருந்து
கிளம்பியிருக்கக் கூடும் என்று ஊகப்பட்டார்கள். அதையே அங்கு சென்று வந்தவனும் ஊர்ஜிதப்படுத்தினான்.
இதற்கு மேல்
இங்கு நடமாடுவது அத்தனை நல்லதல்ல என்று வற்புறுத்தினார்கள்.
அவர் தபால்களோடு
எப்போது கிளம்பினார் என்று அக்கறையாக விசாரித்தனர். செவ்வாய்கிழமை காலையில் என்றான்.
திங்களன்று அம்மாவுக்கு துணிதுவைக்கும் சோப்புகளும், இரும்பு வாணலியும் வாங்கி வந்தார்.
பிறகு பொட்டுக்கடலையை மறந்து விட்டதாக அவள் நாக்கைக் கடிக்கவும், மீண்டும் சைக்கிளை
எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவன் ஓடை நீரில் விளையாடிக் களைத்து ஊற வைத்த
பருப்புப் போல உப்பி.. வெளிறி.. திரும்பியிருந்தான். அவன் பொறுப்பற்று போனதற்கு அவர்
செல்லம் கொடுத்து வளர்த்ததுதான் காரணம் என்று வழக்கம் போல அம்மா குற்றச்சாட்டை வீச..
அவர் “இன்னொருக்கா மந்திரிச்சு கயிறு கட்டுனா தானா சரியாப் போயிடும்..“ என்றார் சமாதானமாக.
“ம்க்கும்..“ என்றாள் அம்மா அசுவாரஸ்யமாக. ”தோட்டத்தில மாங்கா செங்காயா வுளுந்துக்
கெடந்துச்சு.. எடுத்தாந்து புட்டில போட்டு வச்சிருக்கேன் பாரு.. பச்சடி வச்சா நல்லாருக்கும்..”
என்றார் சேறு அப்பிய கால்களை மூங்கில் காலோரம் கழுவிக் கொண்டே. அவரிருக்கும் நாட்களில்
வீட்டில் சமையல் தடபுடலாகவே இருக்கும்.
செவ்வாய்க்கிழமை
காலையில் கிளம்பினால் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுவார். அம்மா புதன்கிழமை
இவனுக்காக கோழி வாங்கி வருவாள். அதில் காலும் தலையும் மட்டுமே அவளுக்கு. அப்பா எப்போதும்
கோழி சாப்பிடுவதில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி குழம்பு தின்ற கையோடு, சந்தைக்கு
தேவைப்படும் காய்களை வயலில் அறுத்து கட்டி எடுத்து வருவார்.
இரவு முழுவதும் பனி மூடிய நிலவொளியில்
மலை குளிர்ந்துக் கிடந்தது. பதியாட்கள் கேப்பைக்கூழும்,
கீரையுமாக அவனை உண்ண வைத்தனர். பழக்கமின்மையால்,
ஊடுருவிய குளிருக்கு அவர்கள் அளித்த போர்வை கால்வாசிக் கூட காணவில்லை. ஆயினும் நடையலுப்பு
கண்களை அசத்தியது. அவன் கண்விழித்த நேரத்தில் பளிச்சென்று பகல் புலர்ந்திருந்தது. முப்புறமும்
கரும்பாறைகள் உயர்ந்து நிற்க, இயல்பாக தோன்றிய ஓடைப்பள்ளத்தில் உடலை சுத்தப்படுத்திக்
கொண்டான். கேழ்வரகு ரொட்டியும் பானகமும் கொடுத்தனர். கிளம்பும்போது இலையில் கட்டிய
புட்டுமாவை நீட்டினர்.
பசுமையாக படர்ந்திருந்த வனம் அமைதியாக
அவனுடன் வரத் தொடங்கியது. மரங்களின் இடைவெளிக்குள் சூரியன் அவனை பாதுகாப்பாக செலுத்திக்
கொண்டிருந்தது. கொடிகள் கூட அனாயசமான புஷ்டியோடு மரங்களோடு எழும்பி நின்று விழுதுகள்
போல தொங்கிக் கிடந்தன. சில இடங்களி்ல் தரையே தெரியாத
அளவுக்கு செத்தைகள்
அடர்ந்திருந்தன. சரிவில் மரங்கள் அடர்ந்திருந்தன.
பாதை செங்குத்தாக மேலேறி சென்றது.
பெண்கள் குழுவொன்று பொதுபொதுப்பான ஈரமண் ஒட்டிய கிழங்குகளுடனும்
கீரைக்கத்தைகளுடனும் எதிர்புற சரிவிலிருந்து மேட்டுக்கு ஏறிக் கொண்டிருந்தது. காற்று
சற்றே வேகம் கூட்டி சுழன்றதில், துாரத்தில் எங்கோ மரக்கிளை முறித்து விழும் சத்தம்
கேட்க, அவன் திடுக்கிட்டுப் போனான். “ஒங்க
பின்னுக்குதான் வர்றோம்.. பயந்துக்க வேணாம்..” என்றார்கள் அந்தப் பெண்கள்.
சிறு
வெட்கத்தோடு நடந்தான். நட்டு வைத்த துடைப்பங்களாக ஈச்சம் புற்கள் வழியெங்கும்
பரவிக் கிடந்தன. பெண்கள் சீமாறு புல் அறுத்துக் கொண்டிருந்தனர். இடையில் ஓடையொன்று குறுக்கிட்டது.
அதன் கரையெங்கும் கோரைகள் ஆளுயுரத்திற்கு முளைத்துக் கிடந்தன. தாழ்ந்து
படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க... அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும்
மரங்களுக்குமிடையே பாலம் கட்டின. குரங்குகளின் குதியாட்டத்தில் சருகு இலைகள்
ஓடைக்குள் உதிர்ந்துக் கிடந்தன. ஓடை நீரை அள்ளியடுத்து பருகினான். நல்ல சுவையான
நீர். அவனின் பிம்பம் நீரில் விழுந்திருந்தது. “அவருக்கு இவ்ளோ பெரிய பையனா..“
நேற்றிரவு அவர்கள் இவனைக்கண்டு ஆச்சர்யப்பட்டதை எண்ணிக் கொண்டான். ஈரம் செறிந்த
கரையில் படர்ந்திருந்த புற்கள் அவன் காலடியில் மசிந்து, பிறகு திமிர்த்து
நிமிர்ந்தன.
தொலைவிலிருந்த கிராமங்கள் அருகே வரத் தொடங்கியிருந்தன. அவை
எல்லாவற்றிலிருந்தும் அப்பா
நழுவிச் சென்றிருந்தார். மலைச்சரிவில் சற்றே ஏறி, அடுத்திருக்கும் தாழ்வான சமவெளி கிராமங்களை
முடித்துக் கொண்டு, கீழிறங்க வேண்டியதுதான். கீழிறங்கும்போது பாதைக் குழப்பம் வராது.
அதிக நேரமும் தேவைப்படாது என்றார்கள். அடிவாரத்திலிருந்து இரண்டு மணி நேர பேருந்து
பயணத்திலிருந்தது அவனது கிராமம். அவர்கள் அளித்த கருப்பட்டி காபியை அங்கிருந்த கல்லின்
மீது அமர்ந்து அருந்தினான். களியும் கீரை பிரட்டலையும் இலையில் ஏந்தி வந்த பெண் அழகாக
இருந்தாள்.
சூரியன்
மரங்களுக்கிடையே பம்மி பம்மி நகர்ந்தது. மதிய நேரத்து வெயில் என்றாலும் குளிர்ந்த
உடலுக்கு இதமாக இருந்தது. சரிவிலிருந்த குடியிருப்பின் தலைபாகங்கள் தெரிய
தொடங்கின. அவர்கள் பேச்சிலிருந்து அப்பாவுக்கு தகவல் எட்டியிருப்பதை ஊகிக்க
முடிந்தது. அவனுக்கு தாகம் எடுத்தது. நீர் வேண்டுமென்றான். அவர்கள் குடுவையில் அளித்த நீரை அருந்தினான். குடுவையைப்
பெற்றுக் கொண்ட பெண் அம்மாவுக்கு என்னாச்சு.. என்றாள் கிசுகிசுப்பாக. பொங்கிய அழுயையோடு
“நெஞ்சு வலில செத்துட்டாங்க..“ என்றான் சிதறலாக. அவள் காலைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த
சிறுவன் எதற்கோ சிணுங்கினான். அவள் தின்பண்டத்தை சிறுவனிடம் நீட்ட அவன் அழுகையை நிறுத்தி
விட்டு சாப்பிட ஆரம்பித்தான். சிறுவனின் வலதுக்கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிறக் கயிறு
லேசாக பிரிந்துத் தொங்கியது.
அடிவாரம் நெருங்குவதை நடமாட்டத்திலிருந்து புரிந்துக்
கொண்டான். ஆண்களும் பெண்களும் ஏதோ நிமித்தம் அலைந்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள்
எல்லோரையும் விட அப்பா மட்டுமே கடும் சவாலான வேலை பார்ப்பதாக தோன்றியது. போலவே, அப்பா
எல்லோருக்கும் அறிமுகமானவர். அதேநேரம் பழக்கப்படாத தனது கால்களே இரண்டு நாட்களுக்குள்
பயணத்தை முடித்துக் கொண்டபோது அப்பாவுக்கு நான்கு நாட்கள் தேவைப்படுவது கொஞ்சம் வியப்பையும்
அளித்தது.
இறக்கம் சரசரத்து அவனை அடிவாரத்தில்
சேர்த்திருந்தது. அங்கும் அப்பா அறிமுகமாகிதானிருந்தார். சொல்லப்போனால் அவன் கொண்டு
வந்த சேதியை அவர்களும் கேள்வியுற்றிருந்தனர். ”நாங்கதான்
அவர காரு புடிச்சு அனுப்பி வச்சோம்.. நீங்க அவர தேடிக்கிட்டு வாரது தெரியாது
தம்பி..” என்றார் அங்கிருந்த ஓட்டல்காரர் ஒருவர்.
”காரு
புடிச்சார்ரோம் தம்பி.. செத்த ஒக்காருங்க..” உள்ளே அழைத்துச் சென்றார்.
”சாப்டுக்கங்க
தம்பி.. சடங்குசாத்திரமெல்லாம் முடிஞ்சு சாப்பாட்ல கை வைக்க ரொம்ப நேரமாயிடும்..” பரோட்டாவை
பிய்த்து வைத்து குருமாவை ஊற்றினார். “நல்ல மனுசன்.. ஒங்கம்மாவுக்குதான் குடுத்து
வைக்கல..” என்று வருத்தப்பட்டார். அதற்குள் கார் வந்திருந்தது. அவனும் சாப்பிட்டு
முடித்திருந்தான்.
”எலைய
அப்டியே வச்சிட்டு கைய கழுவிக்கங்க தம்பீ.. காரு வந்துருச்சு..” டிரம்மிலிருந்த
நீரை முகர்ந்து ஊற்றினார். வலது கையில்
கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிற்றை இயல்பாக பின்னுக்கு தள்ளி விட்டுக் கொண்டபோது, அப்பா
தபால் பட்டுவாடாவை வேண்டுமென்றே நான்கு நாட்களுக்கு இழுப்பதாக தோன்றியது அவனுக்கு.
இவன்
வீடு திரும்பியபோது அப்பா சடலத்தின் வலப்பக்கத்தில் குனிந்தபடி அழுதுக்
கொண்டிருந்தார். இவன் சடலத்தின் இடதுபுறம் சென்று நின்றுக் கொண்டான்.
No comments:
Post a Comment