மணல்வீடு செப்டம்பர் 2018 இதழில் வெளியானது.
பலகைபோல அகலமும் வார்த்தெடுத்தது
போன்ற பொலிவுமாக வரைவதற்கு தோதாக இருந்தது அந்த கருங்கல். வரைவது அவளுக்கு பிடித்தமானது.
சிமிண்ட்கல்லை கூராக்கி கருங்கற்களில் அவள் வரைந்த ஓவியங்கள் ஓடைக்கரையெங்கும் நிரம்பிக்
கிடந்தன. அவற்றில் பெரும்பான்மை மலை.. கிராமம்.. அவளின் வீடு.. அம்மா.. அம்மாவைப் பெற்ற
பாட்டி.. இரண்டு தம்பிகள் என்றிருக்கும். வரைவது எதுவாயினும் அவற்றின் முகப்போ, முகமோ
புசூருவை ஒத்திருக்கும்.
”அதென்ன புசூருன்னு பேரு வச்சிருக்க..”
என்றான் அவன்.
அவன் கண்களற்றவன். போலவே வீடுமற்றவன்.
தெருவின் மிச்சம்மீதிகளில் ஏற்பட்ட அறிமுகம். கிடைப்பது எதுவானாலும் அவளுக்கு அமிர்தம்தான்.
கிடைக்காதபோது ஆக்கிக் கொள்ளவும் தெரியும். புசூருவுக்கு கொஞ்சம் இரத்தவாடை வேண்டும்.
கண்களற்றவனின் சிபாரிசில் கறிக்கடையின் கழிவுகள் புசூருவுக்கு கிடைத்து விடும்.
”இது புசூரூதானே.. பூஸுக்குட்டிதானே..”
என்றாள்.
”நாய போயி பூஸுக்குட்டின்னு சொல்றே..”
அவனை அது அங்கீகரித்திருந்தது. வாசனை அந்நியமாக
தோன்றினால் குரைத்தே கொன்று விடும்.
”ம்ம்.. அதான் செல்லமா புசூரு..”
”செல்லம்ன்னா ஏன் கட்டிப் போடுறே..”
தாழ்வாக பரவிக்கிடந்த புதரிலிருந்து
கொடியை உருவி இழுத்தாள். அறுப்பட்டு கையோடு வந்த கொடியை உயர்த்தி துாக்கிப் பார்த்தாள்.
அது ஓராள் உயரமும் ஒரு கை நீளமுமாக இருந்தது. புசூருவின் நடமாட்டத்துக்கு இது போதுமானதாக
இருக்கும் என்பதில் திருப்தி ஏற்பட்டது. சரசரத்த இலைகளுக்கிடையே காலை வைத்து கொடியோடு
பின்னுக்கு நகர்ந்த போது புசூரு அவளுக்கு பின்னால் நின்றிருந்தது. அந்த புதரிலிருந்துதான்
ஒருநாள் சின்னஞ்சிறு குட்டியாக அது அசைந்து அசைந்து வந்திருந்தது.
”வந்த மாரியே போயிடுச்சுன்னா..?”
எதிர்க்கேள்வி போட்டாள்.
புசூரு இல்லாமல் அவளால் இருக்க
முடியாது. மட்டுமல்லாது நாய்கள் பிடிக்கப்படும் அவலத்தை அவள் ஒருமுறை கண்டிருக்கிறாள். நீளமானக் குச்சியின் முனையில் மாட்டி தொங்கவிடப்பட்ட
இரும்பு வளையத்துக்குள் சிக்கிக் கொண்ட நாய்களி்ன் வேதனை ஒலியையும் அவை வண்டியில் ஏற்றப்பட்டு
நெருக்கமான கம்பிக் கூண்டுக்குள் அடைக்கப்படும் போது எழுப்பும் அவல ஓலத்தையும் அவள்
கேட்டிருக்கிறாள் அது மலையிலிருக்கும் சிமிண்ட் ஆலை குவாரியில் போடப்படும் பெரும் வெடிச்சத்தத்தை
போல அவளை அலைக்கழிக்கும்.
”நீயும் புசூருவும் எங்க இருக்கீங்க...?”
அன்று அவன் குச்சியால் பூமியை தட்டி ஒலியுண்டாக்கிக் கொண்டே அவளை பின்தொடர்ந்த போது
அவள் மறுக்கவில்லை. அவள் யாரையும் விட்டு நகர்ந்தவளில்லை. மற்றெல்லாரும்தான் அவளை விட்டு
நகர்ந்து போயிருந்தனர்.
ஊரை விட்டு தள்ளி ஓடைக் கரையோரமாக
இருந்தது அவள் இருப்பிடம். ஊர் என்பது சிமிண்ட் ஆலை தொழிலாளர்களின் குடியிருப்பைக்
குறிப்பது. முன்பு பொட்டல்காடாக கிடந்த இடத்தை ஊராக்கியும், ஊரை பொட்டலாக்கியும் விட்டதில்
இப்போது அவளது குடிசை பொட்டல்காட்டில் இருந்தது. எப்போதோ அது குடிசை என்று பெயரில்
இருந்திருக்கலாம். இப்போது அது பிய்ந்தும் துார்ந்தும் போயிருந்தது. தரை கூட கல்லும்
மண்ணுமாகதான் கிடந்தது.. அந்த ஓடையைப் போல. அது மப்பும் மந்தாரமுமாக ஓடிய காலத்தில்
அதை கூழையாறு என்பார்கள். இப்போது எல்லாமே கோளாறாக போய் ஆலைக்கழிவுகளுக்கான இடமாக மாறிப்
போனது. சிங்காரம் எல்லோரையும் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டான். அவன் சிமிண்ட் ஆலைக்கு
தரகு வேலைப் பார்த்தவன். வேலை வாங்கித் தருவதாக கூறி வீட்டு பத்திரங்களை தந்திரமாக
கைப்பற்றியவன்.. பிறகு சிமெண்ட் குவாரியின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இந்த புதிய
லே-அவுட் அமைந்திருப்பதாக வழக்குத் தொடுத்து காலங்காலமாக வாழ்ந்த வந்த ஒட்டுமொத்த ஊரையும்
காலி செய்து வெளியேற்றியதில் அவனது பங்கு முக்கியமானது. அதில். வாழ வழியற்று செத்து
விழுந்தவர்களில் அவளது அம்மா.. பாட்டி.. தம்பிகள் எல்லோருமே அடங்கியிருந்தார்கள்.
மழை ஓடையில் கொஞ்சம் நீரை நிரப்பியிருந்தது.
எப்போதுமே அது அவளுக்கான நீரை தருவதில் குறை வைப்பதில்லை. அங்கிருந்த மெலிந்த வேப்பமரத்தில்
புசூருவை கட்டியிருப்பாள். வழுவழுத்த கல்லொன்றில் அவள் கால்களை நீட்டி அமர்ந்திருக்க
அவளின் மடி மீது மோவாயை பதித்திருந்தது புசூரு. குளிர்ந்து வீசிய மழைக்காற்று அவள்
அணிந்திருந்த பாவாடையில் துள்ளலாக அசைந்து, மேல்சட்டையின் சன்னமான கிழிசலுக்குள் புகுந்து
வெளியேறியது. குளிருக்கு அடக்கமாக புசூருவை அணைத்துக் கொண்டாள். சேலை அவளுக்கு பிடித்தமில்லையா
அல்லது பாவாடை சட்டையிலிருந்தே அவள் மாறவில்லையா என தெரியவில்லை. ஆனாலும் உடுப்பை மீறி
முகம் வயதின் மூப்பை காட்டியது. காற்று கலைத்த தலைமுடியை கையால் படிய வைத்துக் கொண்டாள்.
கை முழுக்கவும் எண்ணெய். பலகாரக்கடையில் மீதப்பட்ட எண்ணெய். வீணாகிப் போன பலகாரங்கள்
கூட அவளுக்கு போதும்.
“தண்ணீ ஓட்டத்தில கீழ இருக்கற
கல்லெல்லாம் பளிச்சுன்னு அப்டியே தெரியுது.. தோ.. அந்த சின்ன மேட்லேர்ந்து சரிவுக்கு
தண்ணி எப்படி வருது பாரேன்.. சுலபமா.. ஆனா நெதானம் போவாம.. இயற்கையா.. வரிவரியா.. தோ..
அங்க கெடக்கற கூழாங்கல்ல விலக்க முடியுமான்னு பாக்குது.. கல்லு ஒசந்துடுச்சு.. பெருசாயிடுச்சு..
அதை விலக்க முடியாது.. கல்லை முக்காட்ட வேண்டியதுதான்.. தண்ணீக்கு அதெல்லாம் தெரியாமயா
இருக்கும். எல்லாந்தெரியும். இல்லேன்ன்னா பூமில தண்ணீயும் தரயும் ஒண்ணா கலந்துடாதா..
இனிம கலந்துடும்.. எல்லாம் மாறிப் போச்சு.. எல்லாம் முழுவிப் போச்சு.. சாமான்.. செட்டு..
பண்டம்.. போக்குவரத்து.. எல்லாம் மனுசங்க செஞ்சது.. அப்டீன்னா பஸ்.. காருல்லாம்.. அதும்
மனுசங்க செஞ்சதுதான்.. இட்லியெல்லாம்..? அதும் அவந்தான கண்டுடிச்சான்.. சரி.. அந்த
சங்கு ஊதுற ஃபேக்ட்ரி.. அதும் பாழாப்போன மனுசன்தான் கண்டுப்புடிச்சான்.”
புசூரு அவள் பேசுவதை தலையை ஆட்டி
ஆமோதித்தது. அவள் அழுதபோது வாலை ஆட்டி சமாதானப்படுத்தியது. டக்.. டக்.. டக்..என்ற கண்களற்றவனின்
குச்சியோசைக்கு காதுகளை கூராக்கியது.
”யார்ட்ட பேசீட்டுருக்க..” என்றான்
கண்களற்றவன்.
”புசூருட்ட..” என்றாள்.
”நீ ஒண்ணும் லுாசில்ல.. வெவரங்கெட்டதுன்னு
வேண்ணா சொல்லாம்..”
அவளுக்கு அதில் மகிழ்ச்சிதான்.
”ஒன்ன வரையவா..?”
”ம்ம்..” அவனுக்கும் மகிழ்ச்சியாக
இருந்தது.
சிறு கல்லை உளியாக்கி அவன் முகத்தை
செதுக்கியிருந்தாள். ”அய்யோ.. என் மூக்கு இவ்ளோ நீளமாவா இருக்கு.. ஓட்டைப்பல்லு.. காது
ரொம்ப சின்னது.. ஏய்.. அது கண்ணு.. குத்திடாத.. அவன் விரலை பிடித்து ஒவ்வொன்றாக தொட்டுக்
காண்பித்த போது புசூரு சன்னமாக உறுமிக் காட்டியது.
அதன் ஈரநைப்பான மூக்கில் செல்லமாக
தட்டி ”ஏய்.. புசூரூ..” என்றாள்
”அவ்ளோ தானா நானு.. எங்காலுல்லாம்..”
அவனது கரடுமுரடான கால் அந்த கருங்கல்லை ஒத்திருந்தது. கால்களுக்கிடையே கடந்தபோது அவள்
கையை இறுக்கி நிறுத்தினான். புதிரை விடுவிக்கும் முனைப்பிலிருப்பவன் போல பேசினான்.
புதிர் அவிழ நெடுநாட்கள் தேவைப்படவில்லை.
“ஆங்.. என்ன மஜாவா..” என்றனர்
அவனது சகாக்கள். அவனுக்கு உண்மையிலுமே வெட்கம் வந்திருந்தது.
”அய்யே.. மூணு ஊருக்கு நாறுமே
அவமேல.. அந்த தண்ணீக்குள்ளயே எருமைமாடு கெணக்கா மொங்கியில்ல கெடக்கறா..”
அவன் எதையும் சட்டை செய்யவில்லை.
அன்று அவனுக்கு உயர்ந்த மலையை
பார்க்கும் ஆவல் எழுந்தது.
எடுத்துக் குத்துன மூக்கு மாதிரி
ஒசரமா.. பச்சை பசேல்னு மாரு.. மாராப்பு நனைய நனைய ததும்பி நிக்கற சனங்க.. பசேல்னு படிமானமா
வயிறு.. தொடையிலேர்ந்து இறங்கி வர்ற காலுங்க ரெண்டும்.. பெருசா.. பெருசுபெருசா மரங்க..
மலை எழும்ப எழும்ப அவளும் அதில் ஆழ்ந்துப் போனாள். சிறுவயதில் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறாள்.
அங்கிருந்த மக்களின் திருவிழாக் கொண்டாட்டத்தை கண்டிருக்கிறாள். திடீரென்று வானம் முன்னகர்ந்து
மலையை மறைத்து.. மறைத்து.. மேகம் விலகிய போது மலை கரைந்து சிறு குன்றாகியிருந்தது.
ஊரழிந்துப்போனதன் ஒற்றைச் சாட்சியாய் தேங்கி நிற்கும் அவளைப் போல மலை கரைந்ததன் அடையாளத்தை
குன்று சுமந்துக் கொண்டிருந்தது. அதில் ஓயாது ஒலிக்கும் சிமிண்ட் ஆலை குவாரிகளுக்கான
இயந்திரங்களின் ஓசை வேறு.
”எங்க போயிட்டே..” காற்றில் துழாவினான்.
அவன் கண்களுக்கு சிரிக்கும் திறன் இருந்தது. அது அவளுக்கு இலயிப்பை ஏற்படுத்தும். சட்டென்று
தொற்றிக் கொண்ட உற்சாகத்தில் அவனுக்கு கடலையும் அதி்ல் மடிந்து பெருகி வரும் அலையையும்
செதுக்கிக் காட்டினாள். புசூரு தொண்ணுாறு டிகிரி கோணத்தில் வாலை அங்குமிங்குமாக ஆட்டி
குதுாகலிக்க அதை இழுத்து அணைத்துக் கொண்டாள்
அன்று அவனுக்கு அம்மாவை பார்க்கும்
ஆசை வந்திருந்தது. அது அவளை தேடி வரும் ஆசையாகவும் இருக்கலாம்.
“எங்கம்மாள வரஞ்சு காட்டுறியா..”
”உங்கம்மாளா.. நா பாத்ததில்லயே..”
“நானுந்தா பாத்தத்தில்ல..” அவளை
நெருங்கி அமர்ந்தான். புசூரு எதற்கோ குரைக்க, கண்களற்றவன் அந்த ஒலியை அனுமானித்து அருகிலிருந்த
குச்சியை வீச, புசூரு அடிப்பட்டு அலறியது. அது வண்டியில் ஏற்றப்பட்ட நாய்களின் அவல
ஒலியை ஒத்திருந்தது. அவனை கோபமாக ஏறிட்டபோதுதான் அவனுக்கு கண்களில்லாததை கவனித்தாள்.
அவ்விடம் வெற்றுக் குழிகளாக இருந்தன. வற்றியக் கன்னம். அதில் ஒட்ட வைத்ததுப் போன்ற
தாடி. முகத்தோடு காது சேருமிடத்தில் பிளவு இல்லை. சிங்காரத்தின் காதை போல கீழ்காது
முகத்தோடு ஒட்டிக் கிடந்தது.
புசூருவை முகத்தோடு சேர்த்து அணைத்துக்
கொண்டாள். அன்றைய சாயங்கால பொழுதின் நீண்ட நிழல்கள் பூமியில் படிய புசூருவும் அவளும்
நடந்துக் கொண்டிருந்தனர். குடிசையின் தொங்கல்களும் மெலிந்த வேம்பும் மறைந்துக் கொண்டேயிருந்தது.
பிறகெப்போதும் ஓடையில் நீர் தேங்கவேயில்லை.
***
No comments:
Post a Comment