Search This Blog

Monday, 1 April 2019

மின்னல்

குறி மே 2019 இதழில் வெளியான கதை


மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. யாருக்கு வேண்டும் இந்த மழை..?  போய் கிராமத்தில் கொட்ட வேண்டியதுதானே..? விவசாயமாவது செழிக்கும். ஆனால் மழைக்கு கிராமம், நகரம் என்று வரையறை ஏதேனும் உள்ளதா என்ன..? அல்லது எல்லாமே வரையறைக்குள்தான் நடக்கிறதா..? நினைவுகளின் அழுத்தத்தில்  உடலில் பாரம் ஏறியது போலிருந்தது. அதற்காக இப்படியே படுத்திருக்கவும் முடியாது. கசகசப்பான ஈரம் உடலில் குளிராக ஏறிக் கொண்டிருந்தது. சுவரின் காரைப்பெயர்ந்த பொத்தலில் கையை நுழைத்து, அதன் விசையில் உடலை எழுப்பிக் கொண்டான் அவன்.

மழை பிடித்தபிடியாய் வெளியே கொட்டிக் கொண்டிருந்தது.  சூரியன் மீதமிருந்த பொழுதொன்றில் இந்த பாழடைந்த வீட்டை கண்டுப்பிடித்திருந்தான். அவன் படுத்திருந்த இடம் பட்டாசாலையாக இருந்திருக்கக்கூடும். எப்போதோ வீடாக இருந்திருக்கும். யாருடையது என்பதோ யார் இருந்திருப்பார்கள் என்பது குறித்தோ அவனுக்கு தெரியவில்லை. அவன் இங்கிருப்பதும் யாருக்கும் தெரியாது. சொல்லப்போனால் அதை தெரிந்துக் கொள்ளுமளவுக்கு யாருமில்லை அவனுக்கு. கால்களை குறுக்கி கைகளால் அணைத்து, அதில் தலையை கவிழ்த்திருந்தான். தொடர்மழையில் நாளும் பொழுதும் தப்பியிருந்தது. பூமியே அந்தகாரத்துக்குள் நுழைந்துக் கொண்டதில் இரவா, நள்ளிரவா விடியலை நோக்கிய பொழுதா என்றெல்லாம் அவனால் கணிக்கவியலாது. 


மின்னலொன்று தெறிப்பாய் வந்து விழுந்தது. மின்னல் வானத்தின் சிரிப்பு. உதட்டை ஓர் ஓரமாய் இழுத்துக் கொண்டு சிரிக்கும் அதன் இளக்காரத்தை காண விரும்பாது கண்களை இறுக மூடிக் கொண்டான். இருப்பினும், சிரிப்பின்வழியே வழியும் குரூரம் நீராக பெருகி ஓடிக்கொண்டிருப்பதை அவன் அறிவான். அவ்வோட்டம் துாசி அழுக்குகளை அடியோடு கிளறி தன்னோடு இழுத்துக் செல்லும் வல்லமைப் படைத்தது. வானம் வெற்றி பெருமிதத்தில் புரண்டுப் படுக்க, அவனுக்கு அது பசித்த வயிற்றின் பேரோசை போலிருந்தது. காற்றுக்கு தடுப்பான்கள் எதுமில்லை. குளிர் பற்களைக் கட்டியது.

மீனாளுக்கும் அன்று குளிராகதானிருந்திருக்கும். அதுவும் இது போன்றதொரு மழை இரவுதான். தளர்ந்த உடலோடு வாசலில் நின்றிருந்த மீனாளை ரங்கநாயகிதான் முதலில் பார்த்தாள். ரங்கநாயகிக்கு கரளைகரளையான உடல். கருத்த நிறம். அவளுடலுக்கு அதுதான் தோதான நிறம். உலகசுகங்கள் அனைத்தையும் உடலாக கொண்டவள். எங்கு மீட்டினாலும் சுகராகம் எழும்பும்.

”அய்யோ.. அவ இன்னும் இங்கதான் நின்னுட்டுருக்கா பாருங்களேன்..” அபஸ்வரமாக கத்தியபோது விடியற்காலை ஐந்திருக்கலாம். மழை இருளை கவ்விக் கொண்டு அந்த விடியலை நள்ளிரவு போல காட்டியது. அவன் அப்போதுதான் கண்ணயர தொடங்கியிருந்தான். விடியும்வரை மீனாள் அங்கேயே நின்றிருப்பாளாக இருக்கும். தாய்வீடும் நிரந்தமாக மூடிக் கொண்ட நிலையில் அவளுக்கு போக்கிடம் இருந்திருக்க முடியாது.

பசி வயிற்றை கவ்வி இழுத்தது அவனுக்கு. கிடைத்த நாலைந்து இட்லிகளை ஒரேடியாக உண்டு விடாமல் இரவுக்கென்று ஒதுக்கி வைத்திருந்தான். வருவாய் ஈட்டிய காலத்தில் அந்திமத்திற்கென்று அவன் எதையுமே ஒதுக்கிக் கொண்டதில்லை. சாம்பார்படாது ஒதுக்கி வைத்த இட்லிகளுக்கு தொட்டுக்கொள்ள சர்க்கரைத் தேவைப்படும். டீக்கடையில் அதற்கே ஒருமணி நேரத்துக்கு மேல் காத்துக் கிடந்தான். அவசரத்தையோ பசியையோ முகத்தில் காட்டக் கூடாது.

மீனாளுக்கும் அதே உத்தரவுதான். எதையும் வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது. ரங்கநாயகியை அழைத்து வந்தபோது ஆத்திரம் தாளாது மீனாள் கதறிய நேரத்திலிருந்து அந்த உத்தரவு அமலாகி இருந்தது. அவள் கிரீச்சிட்டு அழுவது அவனுக்கு நாரசமாய் இருந்தது. தகரத்தில் கீறுவதுபோன்ற இந்தக்குரலை அவன் ஏற்கனவே கேட்டிருக்கிறான். மீனாள் அவனுடன் கிளம்பி வந்தபோது மீனாளின் தாயார் இதே குரலில்தான் கதறினாள்.

அது முற்றமாக இருந்திருக்க வேண்டும். முற்றத்தில் பெருகி ஓடிய மழை நீரில் சிறுநீர் கழித்தான். மின்னல் இருளின் அடர்த்தியை கூட்டிக் கொண்டேயிருந்தது. விடியலுக்கு இப்போது வாய்ப்பே இல்லை. ரங்கநாயகி வந்த பிறகு இரவுகள் வெகுசீக்கிரமாக முடிந்துக் கொண்டிருந்தன. ரங்கநாயகிக்கு இரவுகளை வசப்படுத்துவதில் அதீத ஆர்வமிருந்தது. ஒருவருக்குள் ஒருவரை தேடிச் செல்லும் நுணுக்கமான தருணங்களை சுமந்திருந்த இரவுகள் பொறுமையற்றவை. விடியலை நோக்கி ஆளாய் பறப்பவை. பகல்களும் சாதாரணப்பட்டவையல்ல. இரவுகளை நோக்கி தகித்து தவித்து மிக மெல்லவே நகர்ந்துச் செல்லும். உயிர்கள் ஒன்றுக்குள் ஒன்று அடங்கிக் கொள்ளும் பேரின்ப பெருவெளியில் மகள் கூட துாரத்து உறவாகிப் போனாள். மகள் இருந்திருந்தால் இந்நேரம் திருமணமாகியிருக்கலாம். பிள்ளைகள் கூட இருக்கலாம். அல்லது இவனுக்கும் ரங்கநாயகிக்கும் போல குழந்தைகள் இல்லாமலும் இருக்கலாம்.



மழையின் ஒலி உரத்துக் கேட்டது. தலையை கவிழ்த்தபடி உறக்கமா விழிப்பா என்றறியாத நிலையில் ஆழ்ந்திருந்தான். தலையிலிருந்து கால்வரை கிள்ளியெடுக்க சதையில்லாத தோற்றம் மீனாளுக்கு. கொத்தனாரிலிருந்து கட்டட மேஸ்திரியாக அந்தஸ்தை உயர்த்திக் கொண்டதில், அவளின் மஞ்சள்கயிற்றை தாலிச்செயினாக்கியிருந்தான். தினப்படிக்கு ஒன்று.. கல்யாணம்காட்சிக்கொன்று என இரண்டு தோடுகளை அவளே வாங்கிக் கொண்டாள். மகளுக்காக வாங்கியிருந்த சின்ன செயினை அவள்தான் பயன்படுத்திக் கொள்கிறாள். இரண்டு வாத்துகள் மேலும் கீழுமாக கொத்திக்கொள்ள, நடுவில் சிவப்புகல் பதிக்கப்பட்டிருக்கும். அந்த செயினை தவிர்த்து மீதமெல்லாம் ரங்கநாயகிக்கு கைமாற்றி விட்டிருந்தான்.

”வெளிய போ சொல்லுடா அவள..”  அம்மா ஆவேசமாக கத்தினாள். லாரியில் அடிப்பட்டு கிடந்தபோது மொத்த ஆவேசமும் அடங்கி நசுங்கிப் போயிருந்தாள். வலதுகை கூழாகிக் கிடந்தது.  

ஒரு அழுகையில்லை. கண்ணீரில்லை. நட்டு வைத்த போத்து போல நெட்டநெடுக நின்றிருந்தாள் மீனாள். உருண்டையாக திரண்டிருந்த கண்களால் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். சிவப்புக்கல் செயின் கழுத்தில் ஏறுமாறாக கிடந்தது.

”நா ஏன் போவுணும்..?” அழுத்தமாக பேசினாள். மீனாளின் வயிற்றில் பிறந்த நான்கு வயது சிறுமி உள்ளே உறங்கிக் கொண்டிருந்தது. அப்பாயியும், அவள் இடுப்பும் போதுமானது அதற்கு.

”எனக்கு புடிக்கல..” அழுந்தந்திருத்தமாக சொன்னான்.

”அவன்தான் புடிக்கலேன்னு சொல்றானில்ல.. இதென்ன சத்திரமா சாவடியா எல்லாத்துக்கு சோறாக்கிப்போட..?” நசுங்கிப் போன அம்மாவுக்கு அன்று அத்தனை ஆவேசமிருந்தது. வாய்க்கு வாய் தன்னிடம் வாயாடுபவளை வாயடைக்கச் செய்யும் வேகமிருந்தது.



மழை தீவிரம் குறைந்து துாறலாக மாறியிருந்தது. அவனுக்கு தெரிந்து மழை மதியத்திலிருந்து விடாமல் வீசிக்கொண்டுதானிருந்தது. அவன் அப்போது டீக்கடையில் இருந்தான். கையோடு எடுத்து வந்த சர்க்கரையை இட்லியில் தடவி வைத்து விட்டால் தேவலாம். வெள்ளமாய் கொட்டிக் கொண்டிருந்த மழைக்கும் இட்லிக்கும் யாதொரு தொடர்பும் இல்லாததுபோல இட்லி காய்ந்துக் கிடந்தது. அவன் வாழ்க்கையில் நிறைய பெண்கள் பரிமாறியிருக்கிறார்கள். அம்மாவுக்கு பிறகு மீனாள். அப்பாவின் கொத்தனார் தொழில் அவனுக்கு வசப்பட்டு வர, பரிமாறும் சித்தாள் பெண்கள் மாறிக்கொண்டேயிருந்தனர். ஆனாலும் மீனாள் பரிமாறுவதும் அவனுக்கு பிடித்திருந்தது. கடைசியாக ரங்கநாயகி வந்தாள். அத்தைமகள்தான். வேறொருவனுடன் முடிந்த திருமணத்தை முறிந்திருந்தவளை பார்ப்பதற்காக போகவர இருந்தபோதுதான் அவளுடன் பழக்கமேற்பட்டது.

மேலே கூரைகளற்ற திண்ணை அது. மீனாள் தெப்பமாக நனைந்திருந்தாள். “போவ முடியாது..” தலையை அழுத்தந்திருத்தமாக அசைத்தாள். அவளுடைய விறைப்பம் பதற்றமின்மையும் கோபத்தை கிளறி விட்டிருக்கலாம். அம்மாவும் ரங்கநாயகியும் அவனும் ஒரே நேரத்தில் கிளர்ந்தெழுந்தபோது அவள் மகளை நோக்கி கையை நீட்டினாள். அது பாட்டியின் முந்தானைக்குள் ஒளிந்துக் கொண்டது.

“போக்கிடமத்தவள போவ சொன்னா எங்கேன்னு போவன்..” வாசற்படியில் தலையைக் கவிழ்த்து அமர்ந்தவளை எட்டி உதைத்தான் அவன்.

”போக்கத்தவன்னா நீதான்டீ அனுசரிச்சிருக்குணும்.. அவன முந்திக்குள்ள முடிஞ்சு வச்சிட்டு காரீயம் சாதிச்சவதான நீ..” அம்மா எடுத்து எடுத்துக் கொடுத்தது ரங்கநாயகிக்கும் வசதிதான்.

”எம்மாமேன் சம்பாதிச்சு போட்ட சங்கிலிய அவுத்து வச்சிட்டுப் போடீ..” என்றாள்.

”மவ சங்கிலிய வாங்கி கழுத்துல போட்டுட்டு மினுக்கலேன்னு அடிக்குதாக்கும்.. த்துா.. இதெல்லாம் ஒரு பொளப்பு..” வலதுகையால் சங்கிலியை இழுத்தாள் அம்மா. நெஞ்சோடு அமுக்கிக் கொண்டபோது இடையிலிருந்த சிவப்புக்கல் மீனாளின் விரல்களுக்கிடையில் பளபளத்தது.

”எம்மா.. அந்த சனியன வுட்டுத் தொலம்மா.. ஒழியிட்டும்..” என்றான் இவன். அவன் அப்படி சொன்னதற்கு பின் ஏதோரு விஷேட காரணமும் இல்லை என்றாலும்,  இந்த வார்த்தைகளை அவனை விட்டு அகலும்வரை ரங்கநாயகி அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தாள். பணத்தை கண்டதும் எழுந்த பேராவல் ஆடம்பரங்களாக மாறியதை உணர தொடங்கியபோது எல்லாமே நழுவியிருந்தது. பிறகு படிபடியாக தொழிலில் இறங்குமுகம்தான். குடிப்பழக்கம் வேறு உடலில் இடைவிடாத நடுக்கத்தை ஏற்படுத்தியது.




அவளும் நடுங்கிக் கொண்டேதான் நின்றிருந்தாள். அவள் முரண்டு பிடிக்க பிடிக்க அவளை வெளியே தள்ளியே ஆக வேண்டும் என்று வெறி எழுந்தது அவனுக்கு. மீனாளுக்கு அவன் மீது எதிர்பார்ப்பு அதிகம். அவனுக்கு ஏறாத படிப்பு, கல்லுாரி முதலாமாண்டு வரை அவளுக்கு சாத்தியப்பட்டிருந்தது. வேலைக்கு செல்ல கூட விரும்பினாள். அவனோடு ஊரை சுற்றுவதும் அவனைக் கட்டிக் கொண்டு கிடப்பதும் அவளுக்கு பிடித்திருந்தது. மெலிந்த உடல் அவளுடையது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது உடலை விட தொண்டை பெரியதாகி விடும். பிறந்த வீடு சேர்த்துக் கொள்ளாது என்பது தெரிந்ததாலோ என்னமோ அதை பற்றி அதிகம் பேசிக் கொள்ள மாட்டாள். எல்லாமே ரங்கநாயகியை அழைத்து வரும்வரைதான்.

உடலில் ஏதோ பூச்சி ஊற வெடுக்கென்று உதறி விட்டு அடுத்த அறையை நோக்கி  இருட்டில் அனுமானமாய் நகர்ந்தான். மீனாள் பிறந்தகத்திற்குதான் சென்றிருக்க வேண்டும் என்ற  அனுமானம் அவனுக்கிருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க பெண் சாவு என்று எங்கும் எதிலும் கேள்விப்படவில்லை. செய்திதாள் படிக்கும் வழக்கமெல்லாம் அவனுக்கு கிடையாது. எந்த போலிஸ்காரரும் அவனை அழைத்து எதையும் அடையாளம் காட்ட சொல்லவில்லை. அவளை தேடுவதுக் குறித்து அவனுக்கு அப்போது எதுவுமே தோன்றியதில்லை. ரங்கநாயகிக்கு இவனை தவிர்த்து மற்ற இருவரும் பாரமாகிப் போனது அப்போதுதான். கட்டட வேலையை சாக்கிட்டு அவனை பிறந்த ஊர் பக்கம்  அழைத்துக் கொண்டாள். மேஸ்திரி பொறுப்பிலிருந்தவனுக்கு புதிய ஊரில் ஆட்களை சரிக்கட்டி அழைத்துச் செல்ல மிகுந்த பிரயாசை தேவைப்பட்டது. மேஸ்திரியிலிருந்து கொத்தனாராகி போனான். இம்சையாகிப்போன மனம் வேலை நேரத்தில் அதிகபடியான தொந்தரவுத் தந்தது. அந்த நேரத்தில்தான் அம்மா இறந்துப் போனாள். முகம் என்ற ஒன்றே தெரியாமல் உடலையே முகமாக்கி எரியூட்டினான். அடிக்கடி உடம்புக்கு முடியாமல் படுத்துக் கொள்ளும் அவனிடம் ரங்கநாயகிக்கு எல்லாமே புளித்திருந்தது.

அவன் கெஞ்சத் தொடங்கினான்.

“அந்த செயின வாங்கியாந்து எங்கழுத்தில போடு.. பொறவு பாக்கலாம்..” என்றாள்.

சிதிலப்பட்டு கிடந்தாலும் அந்த வீடு வாழ்ந்து கெட்ட வீடாக தெரியவில்லை. இரட்டைகட்டு வீடு. பட்டாசாலையும் இரண்டு பெரிய அறைகளும்  கூடவே, பத்தாயத்துக்கொன்றும் சமைப்பதற்கென்றுமாக விசாலமாக கட்டியிருந்தனர். உள்ளறைக்கு போன்றிருந்த இடத்திற்கு உத்தேசமாக சென்றான். அங்கிருந்த மாடத்தில்தான் இட்லி பொட்டலமிருந்தது. வெளிக்காகிதம் நீரில் ஊறியிருந்தது. அதை உரித்து விட்டு, இலைக்குள்ளிருந்த இட்லியை விரலால் தடவி எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். சர்க்கரை சொதசொதத்து இட்லியில் நெகிழ்ந்தோடிக் கிடந்ததில், இட்லி இனித்தது. மழைநீரில் உத்தேசமாக கையை நீட்டி கழுவிக் கொண்டான். பிறகு இருகைகளையும் குவித்து, அதில் நீரை நிரப்பி பருகினான். நீர் குளிராக உள்ளிறங்கியது.

மீனாளை நெட்டித்தள்ளிக் கொண்டே வந்தபோது கண்களில் கெஞ்சலை தேக்கிக் கொண்டு அவனை பார்த்தாள். “நா ஒரு ஓரமா இருந்துக்கறனே..” என்று அழுதாள்.

மீனாளின் வீடு பெரியதாகதானிருந்தது. அவர்கள் திருமணத்தின்போது ஊளையிட்டு அழுத அம்மா இறந்துப் போயிருந்தாள். பிள்ளைக்குட்டிகளோடு குடும்பத்தை பெருக்கியிருந்த தம்பிகள் இருவரும் அவனை முறைத்தனர். அப்பா மட்டும் “மீனாளு நல்லாருக்கா..“ என்றார்.

விடிவதற்காக காத்திருக்க தொடங்கினான். எங்காவது ஈரமற்ற இடம் இருந்தால், உடலை நெகிழ்த்தி உறங்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அதுவும் ஆபத்துதான். ஊறிக்கொண்டேயிருக்கும் அட்டைகள் உடலில் ஏறிக் கொள்ளும். இருட்டும்வரை அட்டைகளை தள்ளி விடுவதையே வேலையாக செய்துக் கொண்டிருந்தான். மேல்புறம் கருத்து பட்டையாக தெரிந்த அட்டைகள் இவன் தள்ளியதும் உடலை குறுக்கி தரையோடு ஒட்டிக் கொண்டு நகர மறுத்தன. கூரையில் தொங்கிய குச்சியை உடைத்து குத்தி நகர்த்தியபோது மெத்தென்றிருக்கும் உட்புற வெள்ளையை காட்டியபடி அவை மேலுக்கு கீழாய் திரும்பின. மெத்தென்ற பெண்களின் உடல்கள் தொட தொட மெருகேறிக் கொண்டேயிருப்பவை.


எழுந்து வெளியே வந்தபோதுதான் அந்த மின்னலை பார்த்தான். உலகம் மொத்தத்தையும் இருளுக்குள் ஆழ்த்தும் வெறி அதற்கிருந்தது. மின்னல் சிவப்பாக ஒளிர்வதை இப்போதுதான் பார்க்கிறான். ஒருவேளை பொழுது விடிந்து கீழ்வானம் சிவந்துக் கிடக்கிறதோ என தடுமாறினான். அப்படியாகவும் தோன்றவில்லை. ஏனெனில், அந்த செவ்வொளியின் இருபுறமும் இரண்டு வாத்துகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு நின்றன.

மீனாள் கூட அங்குதான் நின்றிருந்தாள்.

***


No comments:

Post a Comment