கடினமான இலக்குகளை
நிர்ணயித்துக் கொண்டு, அதனை அடிப்படையிலிருந்தே அணுகுவதன் வழியாக கட்சியை
பலப்படுத்துவதும், எதிரணியை தோற்கடிக்க செய்யும் உள்ளடி வேலைகளை மேற்கொள்ளுவதும்,
தமக்கு எதிராக வலுவான கூட்டணி அமையவிடாமல் பார்த்துக் கொள்வதுமான தெளிவான உத்திகளை
கையாண்டு, இன்று பிரம்மாண்டமான அறுவடையை பாரதிய ஜனதா கட்சி
அள்ளியெடுத்திருக்கிறது. இவையேதுகளிலும் அக்கறை செலுத்தாமலிருந்ததே காங்கிரஸின்
பலமின்மைக்கு காரணமாக வைக்கலாம். புரையோடிபோன விஷயங்களை அது தொடுவதேயில்லை. மாபெரும்
தேசத்தின் தேர்தல் அரசியலை அது மேம்போக்கான விஷயமாகவே, எதிர்க் கொண்டது போல
தோன்றுகிறது. எதிர்கருத்தாளர்களை மாநிலம்தோறும் இணைக்கத் தவறியதும், ராகுலின்
மீதிருந்த “பப்பு“ இமேஜை அவரே மாற்ற இயலாததுபோல நடந்துக் கொண்டதும், கட்சியின்
மீதான நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியிருக்கலாம். தமிழக அளவில் பலம் பெற்றிருந்தாலும், இந்திய
அளவில் இடதுசாரிகள் பலமிழந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிகள்
அதிஅவசரமாக அவசியப்படுகிறார்கள். ஏனெனில் முதலாளித்துவம் எளிய மக்களுக்கானதல்ல.
அதன் இறுதி என்பது உயிர்ப்பின் கடைசித்துளி வரை உறிஞ்சிக் கொள்வதே. அதை கருத்திற்கொண்டு இடதுசாரிகள் காலத்திற்கேற்ப
நெகிழ்வுகளோடு களமாடுவதே சிறப்பு.
தமிழகத்தை பொறுத்தவரை முக்கியமான
இரண்டு தலைக்கட்டுகள் இல்லாத முதல் களம் இது. ஸ்டாலின் இறங்கி அடித்திருக்கிறார் என்றுதான்
சொல்ல வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் மட்டுமே பெற்றிருந்த திமுக,
தேர்தல்களுக்கான இடைவெளியில் மக்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதில் காவிரி உரிமை
மீட்புப் பயணம் முக்கியமானது. ஸ்டாலின், முடிந்தவரை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக
பேசுகிறார். கருத்தியலின் அடிப்படையில், பிற கட்சியினருடனான அவரின் அணுகுமுறை தமிழக
அரசியல் சூழலில் நல்லதொரு முன்னெடுப்பு. கலைஞரின் மகன் என்று இயல்பாகவே அமைந்த நல்வாய்ப்பை,
தெளிவாக மீட்டெடுத்துக் கொண்டதற்கு, அவரை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. மத்திய
மாநில எதிரி(ஆளும்) கட்சிகளின் மீதான வெறுப்பும் இங்கு ஓட்டுகளாக மாறியுள்ளன. சமான்யமான,
ஓரளவு அரசியல் அறிவுக் கொண்டவர், தமிழக தேர்தல் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறாரோ அதுவாகவே முடிவுகளும் வந்துள்ளது ஆச்சர்யமான ஒற்றுமை. அதேநேரம்,
எதையும் யாரும் வெற்றிக்களிப்புடனோ அல்லது தோல்வி மனப்பான்மையுடனோ அணுகிவிட முடியாதளவுக்கு
முடிவுகள் ஒருவித அமைதியை கடத்துவதும் உண்மை.
கணையாழி ஜுன் 2019ல் வெளியானது.
No comments:
Post a Comment