Search This Blog

Sunday, 9 June 2019

படித்துறை

ஜுன் 2019 பதாகையில் வெளியான சிறுகதை


அது ஒரு படித்துறை. மண்டபத்தோடு கூடிய படித்துறை. அதில் படிகளும் மிகுந்திருந்தன. இத்தனை ஜபர்தஸ்துகள் இருந்தாலும் நதி என்னவோ நீரற்றுதான் இருந்தது. அவன் படியில் ஒரு காலும் நதியில் ஒருகாலுமாக கடைசி படிகளில் அமர்ந்திருந்தான். காற்று அளைந்தளைந்து நதியின் வடிவத்தை மணல் வரிகளாக மாற்றியிருந்தது. நீர் மிகுந்து ஓடும் காலம் என்ற ஒன்றிருந்தபோது நதி அத்தனை படிகளையும் கடந்து மண்டபத்தை எட்டிப் பார்த்து விடும்.  அமாவாசை, நீத்தோர் சடங்கு நேரங்களில் ஊற்று பறிக்கும்போது நீர் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் சமீபமாக இறந்தோரின் நல்லுாழ் என்ற சம்பிரதாயமாக மாறியிருந்தது. ஆனால் தர்ப்பணத்துக்கோ மற்றெதற்கோ, முன்னெச்சரிக்கையாக குடத்தில் நீரை எடுத்து வந்து விடுகின்றனர், நல்லோர் என்று கருதப்படுவோரின் உறவினர் உட்பட.


”டப டப டபன்ன இத்தனை படி எறங்கி வர்றதுக்காது ஆத்துல கொஞ்சம் தண்ணி இருந்திருக்கலாம்..” என்றாள் அவள். பேச்சொலி கேட்டு திரும்பியவன் அவளை கண்டதும் “வாங்க..“ என்றான்.

நேற்று முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்ட நிலா இன்று தயக்கத்தோடு கீற்றாக வெளிப்பட்டிருந்தது. நதியில் முளைத்திருந்த நாணல்கள் கரும்பேய்களாய் காற்றிலாடின. நகர் அடங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்த பிரதான சாலையின் போக்குவரத்துகள் வெளிச்சப்புள்ளிகளாக நகர்ந்தன. நேற்றைய தர்ப்பணத்தின் மிச்சங்கள் படியொதுங்கிக் கிடந்தன. சற்றுத் தள்ளிக் கிடந்தது நரகலாக இருக்கலாம். அவள் குப்பையை நகர்த்துவது போன்ற பாவனை செய்து விட்டு அமர்ந்துக் கொண்டாள்.

”துாங்கிருப்பீங்கன்னு நெனச்சன்..” என்றாள்.

”அதான் நீங்க வந்துட்டீங்களே.. எங்க துாங்கறது.. அய்யய்யோ.. சும்மா வெளாண்டேன்.. இன்னும் துாக்கம் வர்ல..”

”சரி.. விடுங்க.. சாப்டாச்சா..”

”நேத்து நெறய தர்ப்பணம்..”  இன்று காற்றை உண்டவனாக சிரித்தான்.

பொத்தலும் காரையுமாக பராமரிக்கப்படாத அந்த பெரிய மண்டபத்தின் தரையில் பத்தரை மணியே நடுசாமம் போல சிலர் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். அவள் திரும்பியபோது போர்வைக்குள் இருவர் முண்டிக் கொண்டிருந்தனர். அவள் பார்த்ததை அவனும் கவனித்திருக்கக்கூடும். அவள் நிமிர்ந்தபோது அவன் எங்கோ பார்ப்பதாக காட்டிக் கொண்டான். சிறுநடை துாரத்திலிருந்தது அவள் பணிசெய்யும் உணவகம். தங்கலும் அங்குதான். மதியம் இரண்டு மணிநேர ஓய்வுக்கு பிறகு தொற்றிக் கொள்ளும் பரபரப்பு கட்டுக்குள் வர இரவு பத்தாகி விடும்.

”இங்கதான் இருப்பேன்னு கண்டுப்புடிச்சுட்டீங்களே..”

”பெரிய அதிசயமெல்லாம் ஒண்ணுல்லயே..” என்றாள்.

அவனை சென்னை மின்சாரரயிலில் வைத்து அறிமுகம். அப்போது அவள் சர்வருக்கான ஓவர்க்கோட்டில் இருந்தாள். அது மெரூன்நிற ஓவர்கோட். கோட்டின் நீளம் வரை அழுக்குப்படியாமலும் மீதப்பகுதி அழுக்கும் ஈரமுமாகவும் இருந்தது. காலோடு ஒட்டிக் கிடந்த ஈரநைப்பான பேண்ட்டை லேசாக துாக்கி விட்டிருந்தாள். அன்று ரயிலில் கூட்டம் அதிகமில்லை. இறங்கியவர்கள் போக அவனும் அவளுமே மிஞ்சியிருந்தனர்.  ரயில் ஏனோ நின்றிருந்தது.

”என்னாச்சு..?” பார்வையை அப்போதுதான் ரயிலுக்குள் செலுத்தியிருந்தாள். வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

“தெர்ல..“ உதட்டை பிதுக்கினான். அவள் கழுத்திலிருந்த அடையாள அட்டையை சுட்டிக்காட்டினான்.

அப்போதுதான் கவனித்தவளாக அட்டையை கழற்றி எடுத்து உள்ளே வைத்தாள். சுமாரான தோற்றம் கொண்டிருந்தாள். மிகசமீபமாக முப்பதைக் கடந்திருக்கலாம். முகத்தில் பறந்து விழுந்த முடியை காதுக்கு பின் சொருகிக் கொள்வதை ஒரு வேலையாக செய்துக் கொண்டிருந்தாள். பிறகு கால்களுக்கிடையே வைத்திருந்த பிளாஸ்டிக் பேக்கை உருவி அதன் ஓர ஜிப்பை திறந்து அதிலிருந்து கிளிப்பை எடுத்து முடியை அடக்கிக் கொண்டாள். ஏற்கனவே தலையில் வெளிர் மஞ்சள் நிற கிளிப்புகள் இருந்தன. அணிந்திருந்த சுடிதாருக்கு பொருத்தமான கலராக எண்ணியிருக்கலாம். தோடு கூட வெளிர்மஞ்சள் நிறம்தான். மஞ்சளும் நீலநிறமுமாக வளையல்கள் அணிந்திருந்தாள்.

ரயில் கிளம்பியதும் வெயில் குறைந்து விட்டது போலிருந்தது. அவள் இறங்கிய பிறகும் அவன் ஒருவனுக்காக ஓடுவது போல ரயில் ஓடிக் கொண்டிருந்தது.

மண்டபத்தில் யாரோ படுப்பதற்காக துணியை உதறிப்போட அருகிலிருந்த பெண்மணி எரிந்து விழுந்தாள். “இவங்களுக்கு எல்லாமே அக்கப்போருதான்..” என்றான். இருளில் யாரோ இரும, அதற்கும் கோபக்குரல் எழுந்தது. உறங்கிக் கொண்டிருந்த நாயொன்று தலையை அண்ணாந்து பார்த்து விட்டு மீண்டும் சாய்த்துக் கொண்டது. கொசுக்கள் இரவைக் கொண்டாடி களித்தன.



கையோடு எடுத்து வந்திருந்த பரோட்டா பொட்டலத்தை நீட்டினாள். “தாங்ஸ்..“ என்று வாங்கிக் கொண்டான்.

”இன்னைக்கு ஓட்டல்ல கும்பல் அதிகம் போலருக்கு..” என்றான்.

”கோயில்ல விசேஷம்ன்னாலே இங்க கும்பல் சேர்ந்திடும்..”

”ஒங்கம்மாவுக்கு ஒடம்பு பரவால்லயா..?” என்றான். அவள் அம்மாவுக்கு ஏதோ தீராத உடம்பு. சென்னையில் தோதுப்படாது என்று சொந்த ஊருக்கு வந்து விட, இவள் ஸ்ரீரங்கத்தில் உணவகம் ஒன்றில் பரிமாறுநராக வேலைக்கு சேர்ந்துக் கொண்டாள். தெரிந்த வேலை அதுவாகதானிருக்க வேண்டும்.

”அது கட்டையோடதான் போவும்..” என்றாள் அசிரத்தையாக. அவளுக்கு தம்பியும் தம்பிக்கு மனைவியும் உண்டு.

“பெரியவரு ஒத்தரு.. நெருக்கி எம்பதிருக்கும்.. நாலஞ்சு மகனுங்க.. எல்லாமே பெரியாளுங்க.. ஒத்தரு செரைக்கும்போதே செல்போன்ல முகம் பாத்துக்கிறாரு.. இன்னொத்தரு அய்யய்யோ.. ரொம்ப எடுக்காதீங்கன்னு பதைக்கிறாரு.. ஒத்தரு காதுல ஒட்டவச்ச போனை எடுக்கவேயில்ல.. ஒத்தரு பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு பம்முறாரு..”

”வயசானவர்தான.. சும்மா அழுதுக்கிட்டு இருக்க முடியுமா..?”

”கரெக்ட்தான்.. நா அதை நெனக்கல.. அடுத்தது நாந்தான்னு நம்ப யாருக்கும் தோணுறதில்ல பாருங்களேன்.. அதுதான் வாழ்றதோட சூட்சுமம்னு நெனக்கிறேன்.. இத்தனைக்கும் ஒடம்புக்கும் மண்ணுக்குந்தான் நெரந்தர உறவு.. அதையே மறந்துப்போற அளவுக்கு லௌகீகம் முழுங்கீடுது நம்பள.. என்னையும் சேர்த்துதான்..”

சாப்பிட்ட கையை கழுவிக் கொண்டான். ”ஒங்களுக்குன்னு ஒரு வாசம் இருக்குங்க..” என்றான்.

அவளுக்கு தன்னிடமிருந்து வாசம் கிளம்புகிறதா என்பதில் ஐயம் இருந்தது. நம்பிக்கைதானே எல்லாம்.

”நீங்க அதுலயே பொழங்கீட்டு இருக்கறதால வாசம் புரியில.. கடசியா சாப்ட கஸ்டமர் சப்பாத்திதானே ஆர்டர் பண்ணியிருந்தாரு..”

”ஆமா.. அவ்ளோ நீள மூக்கா..”

“அப்டில்லாம் இல்ல.. எப்பவோ சாப்ட நெனப்பு..” அவன் பெற்றோர்கள் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்தவன். படிப்பதிலோ படிக்க வைப்பதிலோ பிரச்சனையில்லை என்று சொல்லியிருந்தான்.

பிறகொருநாள் அதே மின்சார ரயிலில் பேசிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டபோதுதான் ரயிலடிகளில் ஏதேதோ அவசரங்களில் அவசரமாக விழிகளில் அகப்பட்டு நகர்ந்த தருணங்கள் அவர்களின் நினைவுக்கு வந்தன. “அன்னைக்கு கோட்டோட வந்துட்டீங்கதானே..” நினைவுறுத்துவது போல கேட்டான்.

”ஆமா.. ரயில்ல ஏறுனதுக்கப்பறந்தான் கவனிச்சன்..” அவளுக்கும் நினைவிருந்தது.

ரயிலில் கும்பல் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க, நெரிசல் குறைவதாய் தெரியவில்லை. அவர்களுக்கு கழிவறையோரமாக நின்றுக் கொள்ள இடம் கிடைத்தது.  

“நீங்க எங்க எறங்கணும்..?” என்றாள்.

அவனுக்கு அதுகுறித்த திட்டம் ஏதுமில்லை. இலக்கில்லாத பயணங்கள் அவனுக்கு பிடித்திருந்தன. ரயில்கள் சற்று சுவாரஸ்யம் கூடியவை. ரயிலடிகள் உறங்குவதற்கு இடம் தருபவை. ஆனாலும் தான் சேருமிடத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அவன் ரயில்களுக்கு கூட வழங்கியிருக்கவில்லை.

”எறங்கணும்..“ விட்டேத்தியாக சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். நல்ல உயரம்.  அவளை விட இரண்டொரு வயது பெரியவனாக இருக்கலாம். அசட்டையாக உடுத்தியிருந்தாலும் படித்தவன் போலிருந்தான். ”லயோலால பி.காம் டிஸ்கன்டின்யூட்.. அவங்களால வச்சிக்க முடியில.. டிசி குடுத்துட்டாங்க..” என்றான். 

”நாங்கூட பத்தாங்கிளாசு வரைக்கும் போனேன்.. ஜாதி சர்டிட்டு இல்லாம பரிச்ச எழுத முடியில..” அவர்கள் குடியிருப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாம். பிறகு நடைப்பாதைக்கு வந்து விட்டதாக சொன்னாள். 

”அதும் நல்லதுதான்.. நாலு பக்கமும் சன்னல்.. நடுவுல கதவு.. மூச்சு முட்டிப் போயிடும்…” என்றான்.

பிறகு அவளை ஸ்ரீரங்கத்தில் வைத்து பார்த்த போது ”நீங்கதானா.. நம்பவே முடியில..” என்றான் ஆச்சர்யத்தோடு. அன்று சென்னையில் அவனை தன் வீ்ட்டுப்பக்கம் பார்த்தபோது அவளுக்கும் அதே ஆச்சர்யம்தான் ஏற்பட்டது. ஒருகணம் தன்னைதான் தேடி வந்து விட்டானோ என்று கூட நினைத்தாள்.

”தண்டவாளத்தையொட்டியே நடந்தா ஒங்க வீடு வரும்னு தெரியாம போச்சே..” என்று சிரித்தான்.

”வீட்டுக்கு வாங்களேன்..” என்றாள்.

”இன்னைக்கு லீவா ஒங்களுக்கு..?” என்றான்.

”மாசம் ஒருநா ஆஃப் குடுப்பாங்க..  நாலு மாசமா நான் எடுத்துக்கவேயில்ல.. அதான் நாலு நாளு சேர்ந்தாப்பல லீவு கிடைச்சுச்சு..”


அவள் பாக்கெட்மாவும் இட்லிப்பொடியும் வரும்வழியிலேயே வாங்கிக் கொண்டாள். வரிசையாக இருந்த ஆறேழு வீடுகளில் ஒன்றில் குடியிருந்தாள். இரண்டொரு வயதானவர்களை தவிர்த்து ஆட்கள் அதிகமில்லாத மதிய நேரம். பத்துக்கு பத்து என்ற அளவில் இருந்த முன்னறையில் தொலைக்காட்சி பெட்டி, கயிற்றுக்கட்டில், கொடிக்கயிறு முழுக்க தொங்கும் துணிகளோடு ஒரு ஸ்டூலும் இருந்தது. அவன் அதில் அமர்ந்திருந்தான். பூனையொன்று அங்குமிங்கும் அலைந்தது.

முன்னறையில் பாதி இருந்தது சமையலறை. ஒன்றுக்கொன்று தடுப்பில்லாத நேரான அறைகள். அவள் படபடப்பாக தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். தட்டில் மூன்றாவது விழுந்ததும் போதும் என்றான். தோசை பிய்ந்து போயிருப்பதால் இன்னும் ஒன்று எடுத்து வரவா என்றாள். அவன் மறுத்து விட பலகையில் அடுக்கியிருந்த டம்ளரில் ஒன்றை  எடுத்து கழுவினாள். ஃப்ளாஸ்கில் வாங்கி வந்த டீயை டம்ளரில் ஊற்றும்போது அது மேலும்கீழுமாக சிதறியது.

மெரூன் நிற ஓவர்கோட் போல இந்த நைட்டியும் அவளுக்கு நல்ல பொருத்தம்தான். மேலேறிக் கிடந்த நைட்டிக்கு கீழ் மணிமணியாய் கொலுசு அணிந்திருந்தாள். அவள் டீயோடு திரும்பியபோது அவன் பார்வையை பறித்தெடுத்து, தொலைக்காட்சியிடம் அளித்தான்.

“இந்தாங்க டீ..”

“நீங்க சாப்டல..?”

”ம்ம்.. சாப்டுணும்..”

துளிதுளியாக பருகும் பழக்கம் அவனுக்கிருந்தது. பேசுவதற்கு ஏதுமற்றிருப்பது போல நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அங்குமிங்குமாக அலைந்து விட்டு ஒருவழியாக தன்னிடத்துக்கு வந்தது பூனை. அவள் எழுந்து கதவை ஒருக்களித்தாற்போல மூடினாள். ”இந்த நேரத்துக்கு ரயிலு கிராசாவும்.. சத்தம் பெருசா கேக்கும்..“  என்றாள்.

அவன் எழுந்துக் கொண்டு, அந்த ஸ்டூலில் காலி டம்ளரை வைத்தான். சுவரோரமாக சார்த்தி வைத்திருந்த துணிப்பையை தோளில் மாட்டிக் கொண்டபோது  “கௌம்பியாச்சா..?” என்றாள்.

அவள் படியிலிருந்து எழுந்துக் கொண்டபோது அவனும் அதையே கேட்டான்.. ”கௌம்பீட்டீங்களா.. எனக்கு துாக்கம் வர்ல..” என்றான்.

“மணி பதினொண்ணாச்சு.. இதே ரொம்ப லேட்டு. என் ரூம்காரப்புள்ளைக்கிட்ட ரகசியமா சொல்லீட்டு வந்தேன்..” என்றதற்கு பிறகு இன்றுதான் அவளை பார்க்க முடிந்தது. அதுவும் வழக்கத்தில் இல்லாத மதிய நேரத்தில்.

”எங்கம்மா போய் சேர்ந்துடுச்சாம்..” என்றாள்.

”சாரி..” என்றான். அவள் கைகளில் இரண்டும் தோளில் ஒன்றுமாக சுமந்திருந்தாள்.

”திரும்பி வர்ற நாளாவுமோ..?” என்றான்.

”இல்ல.. நா வர்ல.. தம்பி டிப்பன் கடை வச்சிருக்கான். புருசனும் பொண்டாட்டீயும் எம்புட்டு வேலதான் பாக்குங்க.. நா இருந்தாதான் சரியாருக்கும்..”

”அப்ப இங்க வர மாட்டீங்களா..?”

”எங்கிருந்தா என்னா.. எல்லாம் ஒண்ணுதான்.. இங்க இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி, நாண், ஊத்தப்பம், கோதுமை ரோட்டி.. சட்னி.. சாம்பார்.. பீஸ் மசாலா.. சென்னா மசாலான்னு ஒப்பிக்கணும்.. அங்க டிப்பன்க்கடை பாத்தரத்த வௌக்கிக் கமுக்கணும்..”

கையிலிருந்த வெஜிடபிள் பிரியாணி பார்சலை அவனிடம் நீட்டினாள்.

”இல்ல வேணாம்.  வயிறு சரியில்ல..”

அவள் அதை அவனிடம் வைத்து விட்டு ”சரி.. பாப்போம்.. வர்றேன்..” என்றாள்.

அவன் அங்கேயே அமர்ந்துக் கொண்டான்.  தொலைவில் அவள் நடந்து போவது தெரிந்தது. பிரியாணி வாசம் பசியை கிளப்பியது. உண்டபோது உணவு பிடிக்காமல் போனது. எழுந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தான்.  அப்போதும் அவள் அங்கேயே நின்றிருந்தாள்.

”இன்னும் பஸ் வர்ல..?”

”வந்துரும்..” சொன்ன நேரத்தில் பேருந்து வந்தது. கூட்டத்தோடு அவளும் நெருக்கியடித்து ஏறிக் கொண்டாள். ஓட்டுநர் இன்ஜினை அணைக்காமல், காலி தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டி டீக்கடைக்காரிடம் நீர் நிரப்புவதற்காக கொடுக்க சொன்னார். அவன் அவசரமாக கொடுத்து விட்டு அதை விட அவசரமாக வந்தான். நல்லவேளையாக ஜன்னலோரத்தில் அவளுக்கு இடம் கிடைத்திருந்தது.

“ஒங்க தம்பீ எந்துாரு..?” என்றான்.

ஏதோ சொன்னாள். இரைச்சலில் கேட்கவில்லை.

பேருந்து நகர்ந்து போயிருந்தது. 

***


No comments:

Post a Comment