தஞ்சை
கூடல் இலக்கிய வட்டம் 29.6.2019 நடத்திய விழாவில்..
எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில
“தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது
எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள்
கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக
நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை
தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.
காய்தல்உவத்தலின்றி நிகழ்தருணங்களை கடந்து ஓரளவுக்கேனும் முழுமொத்த
பார்வையோடு வாழ்வை அள்ளிக் கொண்டு விரிவாகும் இலக்கிய வகைமையை நாவல் என்று புரிந்துக் கொள்கிறேன்.
புதிதுபுதிதான வடிவ சாத்தியங்களை முயல்வதும் பிறிதொன்று அதை மிஞ்சுவதுமாக இருக்கும் இலக்கியச்சூழலில் நாவலை
அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்வதை தனிப்பட்ட வாசகரின் பொறுப்பாக கருதிக்
கொள்ளலாம்.
இலங்கை
முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த காலக்கட்டம். நித்திலா ராணுவத்தினரிடம் சரணடைந்து,
பிறகு, முகாமிலிருந்து விடுதலை செய்யப்படுகிறாள். அவளின் தமக்கையும் கணவர்
மத்யூஸும் ஃபிரான்சில் வசிக்கிறார்கள். அவர்களின் மூலம் அவளுக்கு புகைப்படமாக
வாகீசன் அறிமுகம். தம்பதிகளின் அழைப்பின்பேரில் தமக்கையின் வீட்டிற்கு வந்து
சேர்கிறாள் நித்திலா. அங்கு தமக்கைக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் சண்டை
தன்னை குறித்துதான் என்பதை அறிகிறாள். ஆனால் எதிர்வினையாற்றவியலாத நிலை. வாகீசன்
குறித்த நல்லுணர்வு அவளுக்குள் மலர்ந்திருக்க, தமக்கை வீட்டில் அதைபற்றிய பேச்சு
எடுக்கப்படாதது அவளுக்கு உறுத்தலாக தோன்றுகிறது. அவனை தேடி பிராஹா வருகிறாள்.
அரசாங்க கெடுபிடிக்குள் சிக்கிக் கொள்கிறாள். போர் முடிந்தபிறகு அகதிகளாக
அடைக்கலம் பெற்றவர்கள் சொந்தநாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற முனையில் அவள்
அரசாங்க காவலில் வைக்கப்படுகிறாள்.
அக்காவின்
கணவன் மத்யூஸ்க்கு நித்திலாவை கட்டிக் கொள்ள விருப்பம். வாகீசனின் புகைப்படத்தை
காட்டியே நித்திலாவை வரவழைக்கிறார். சாதி மதம் ஜோதிடம் சம்பிரதாயம் பிசகாது
உற்றமும் சுற்றமும் சூழ நடைபெறும் திருமணங்கள் கூட தனிமனித நியாயம் என்ற ஒன்றில்லாதபட்சத்தில்
ஏதோ ஓரிடத்தில் முறிந்துவிடுகிறது. ஆனால் இங்கு திருமணத்தை தவிர எல்லாமே
அந்தரத்தில் தொங்குகிறது. சம்பாத்தியம் இல்லாத, நித்திலா என்றொரு தங்கையை தவிர
வேறெந்த உறவும் இல்லாது, யார் காரணமாகயினும் குழந்தையும் பெற்றுத் தர வழியில்லாத
பெண் இயல்பாகவே பலவீனமான சூழலுக்குள் வந்து விடுகிறாள். அந்தவகையில் மாத்யூஸ்
அதிதீவிர வில்லனாகவெல்லாம் தோன்றவில்லை. ஏதோ ஒரு அடிப்படை நியாயம்
அவருக்குள்ளிருக்கிறது. அது நாய்க்குட்டியாய் அவர் கால்களை கட்டிக் கொள்வதால்தான்
எனக்கு ஒன்னட அக்கா மேல அத்தனை பாசம்
என்று அப்போதைக்கப்போது தன்னை நிறுவிக் கொள்கிறார். இதை தமக்கையும்
உணர்ந்திருந்ததனால்தான் எப்படியோ அவருடன் காலத்தை ஓட்டி விட முடியும் என்று
நம்புகிறாள். அதனாலேயே அவரை அதிகம் பகைத்துக் கொள்வதில்லை. யாருக்கும் பிரச்சனையின்றி
அறைக்குள் கரைந்து விட்டு, வெளியே இயல்பாகுவது வாழ்வதற்கான உத்தி. பார்க்கப்போனால்
மத்யூஸை விட தமக்கையே கெட்டிக்காரி.
தமக்கைக்கும்
அவள் கணவருக்குமான உறவை, சண்டை பிடித்துக் கொள்வது.. பிறகு தங்கச்சங்கிலி வாங்கி
தருவது, மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலுமாக நித்திலாவுடன் வெளியே வருவது, திருமணம்
குறித்து இரண்டு வருட ரகசிய டீல் போடுவது என மத்யூஸின் பாத்திரம் தெளிவாக நிறுவுகிறது.
ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்ப்பதற்காக
வருபவள் ஹரிணி. இந்திய அப்பாவுக்கும் ஃபிரெஞ்ச் தாய்க்கும் பிறந்தவள். தன் பணியை
தாண்டி நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் அவளுக்கு
உதவ வேண்டும் என்ற உணர்வை ஹரிணியிடம் உண்டாக்குகிறது. தாயின் மீது பந்தமற்று
இருந்த அவள் நித்திலாவுக்காக தாயிடமே உதவிக் கோரும் நிலை வரும்போது, தாயை குறித்து
கொண்டிருந்த இறுக்கங்களெல்லாம் கசிந்து, மனதளவில் நெகிழ்வது மகள் என்ற உணர்வில்
கூட இருக்கலாம். மனதின் இயல்பை அதுவறியாமல் அறியும் தருணங்கள் அவை.
இலைகளுக்கும்
பூங்கொத்துகளுக்கும் இடையில் சிதறிய கண்ணாடி துண்டுகளாய் வானம். கொத்துகொத்தாக
பாற்கட்டி நிறத்திலிருக்கும் மொட்டுகள்மீது அலையும் வண்டுகள். ராபின் குருவிகள்.
ஹாத்தோர்ன் பூக்களின் மணத்தை இருகை
குவித்து முகத்தில் வழியவிட்டுக் கொள்வதில் பரவசப்படும் மனம் காற்றாய் மிதக்க,
உடைகளை கழற்றி விட்டு சோபாவில் ஸ்பிரிங் போல குதுாகலித்து எழும் ரசனையானவளாக
அறிமுகமான ஹரிணி, பின் இறுக்கமாக ஆகி விடுவது சற்று முரணாக தோன்றுகிறது.
நித்திலாவும்
ஹரிணியும் பிரியும் தருணம் அழகானது. “ஊர்லேர்ந்த
வந்த நேரம் வாகீசன் அவ்ளோ முக்கியமெண்ரு படலை. இப்ப அவருக்காகதான் இங்க
வந்தனானென்று தெரியுது. ஈழம் கிடைச்சிடும்னு நாங்கள் நம்புவதும் அந்த
அடிப்படையில்தான். மத்தவங்களுக்குதான் விளங்கிக் கொள்ள கஷ்டமாயிருக்கும்..”
ஒரு முழுநீள கட்டுரை சொல்ல வேண்டியதை நாலைந்து வரிகளுக்குள் இலக்கியம் சொல்லி
விடுகிறது.
ஆனால்
நித்திலா உடைந்து அழும்போது ஹரிணி சொல்லும் சமாதானம் மிக மிக சம்பிரதாயமான
வார்த்தைகளாலானது. “அசடு.. அசடு.. இதென்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு..
எல்லாரும் ஒன்ன பாக்கிறாங்க.. நீ தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லா தெரியும்..“
என்பது போல நீள்கின்றன. அலுப்பே தெரியாமல் நீளும் பக்கங்களில் இது போன்ற
சம்பிரதாயங்கள் படிப்பதற்கு தடையூட்டுபவை.
வாகீசன்
புதுச்சேரியை சேர்ந்தவன். இளம் எழுத்தாளன். சமையல்கலையியில் கற்றவன்.
எப்படியெல்லாமோ கடன்பட்டு பிரான்சுக்கு வருகிறான். நிரந்தர குடியுரிமை இல்லாததால்
ஏற்படும் இன்னல்களின் காரணமாக வேலையை விட்டுவிடவும் முடியாது. பிரெஞ்ச்
குடியுரிமைக்காக அத்ரியானாவை திருமணம் செய்கிறான். லயிப்பே இல்லாத திருமணம். “இந்திய
திருமணத்தின் மீதான பிடிப்பு“ என்ற அத்ரியானாவின் மேம்போக்கான எண்ணம், லேசான
காற்றுக்கே ஆடிப்போய் அடிமண் தெரிய ஆரம்பித்து விடுகிறது. வாகீசனின் பயணம்
நித்திலாவில் இருக்கலாம். அல்லது பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரான அவர் மாமாவின்
சொத்தின் மீதும் அதற்கு கொசுறாக கிடைக்கும் அவர் மகளின் மீதும் இருக்கலாம். ஆனால் அவன்
அசாதாரணனன் அல்ல. குடியுரிமைக்காக மணந்துக் கொள்ளும் அத்ரியானாவிடம்
நாய்க்குட்டியாய் பம்ம வேண்டியிருக்கிறது என்பது மனதளவில் இடைஞ்சல். சராசரி கணவனாக மாற முயல்கிறான். அவனும்
அவளும் ஒருவருக்கொருவர் நாய்க்குட்டிகளாக்கிக் கொண்டாலும், இறுதியில் பாலனிடம்
மிஞ்சுவது அவனின் குற்றவுணர்வு என்னும் நாய்க்குட்டியே.
சாமி
வயதுகாலத்தில் பெண்ணொருத்தியின் ஒப்புக்குச்சப்பாணி கணவனிடமிருந்து அவனது இடத்தை
எடுத்துக் கொள்கிறவர். காலங்கள் நகர்ந்தபிறகு அந்த பெண்ணின் வாரிசுகளால்
வெளியேற்றப்படுகிறார். தற்கொலைக்கு துணியாமையால் மனம் சன்னியாசத்தை நாடுகிறது என்ற
சுயக்கணிப்போடு, ரயிலில் தனக்கு தோழனாக வாய்த்த ஐரோப்பியரோடு ரிஷிகேஷ் வருகிறார்.
தன்னை நோக்கி அவர் எழுப்பிக் கொள்ளும் கேள்விகளின் தொகுப்பாக அந்த நாய்க்குட்டி
அவரை தொடர்கிறது. ஐரோப்பியரின் இறப்புக்கு பின் அந்த ஆசிரமத்தின் பிராஹாவில்
இருக்கும் கிளைக்கு வருகிறார். ரிஷிகேஷ் அத்தியாயங்களில் இமையத்தையோ கங்கையோ
பெயரளவுக்கு மட்டுமே சித்தரித்து விட்டு நகர்ந்து விடுவது பெருத்த ஆச்சர்யம்தான்.
வெல்ட்டா நதியின் அளவுக்கு கூட கங்கை வர்ணிக்கப்படவில்லை.
இலங்கை,
புதுச்சேரி, கன்னியாக்குமரி, ரிஷிகேஷ், பிராஹா, ஸ்ட்ராஸ்பூர் என உலகமயமாக்கலின்
படிமம் போல கலவையான இடங்கள், கலவையான மாந்தர்கள். அவர்களை பிணைக்கும்மொழி ஏகதேசம்
தமிழ் என்றாலும் அந்தந்த இடத்திற்கேற்ப கூறுமொழியை அமைந்துள்ளது நிகழ்வுகள் எங்கு
நிகழ்கின்றனவோ அதற்கேற்ப நாவலை இலகுவாக வளைக்கிறது.
போலவே,
காட்சிவிவேரணைகளும்.
வெல்ட்டா நதியின் இருகரைகளைகளையும் இழுத்து பிடித்திருப்பது போல
சார்லஸ் பாலம். அதில் இருள் மெல்ல நிரம்பிக் காண்டிருக்கிறது. அவற்றின் மூன்றில்
ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று.
பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தை கடந்ததுமே இடதுபுறம் உணவு
விடுதிகள், நீரில் கால் நனைப்பது போல அமர்ந்துக் கொண்டு ஜோடிஜோடியாக உணவருந்து
மனிதர்கள் என்று கதை முழுக்க படிமமாகவே வரும் வெலட்டா நதியையும் சார்லஸ்
பாலத்தையும் விவரிக்கிறார் ஆசிரியர்.
நாவலின்
காலம் மொத்தமாக நான்காண்டுகள். 2013 ஏப்ரல் 6ல் தொடங்கி 47 அத்தியாயங்களை கடந்து அதேநாளிலேயே
முடிகிறது. முன்பின்னாக செல்வதில் பிரச்சனை ஏதுமில்லை. காட்சி விவரணைகளும் துடிப்பான
வார்த்தைகளும் நாவலை அது தொடங்கியதுமே தொடர வைத்து விடுகிறது. நாள் கிழமைகளோடு
தொடங்கும் அத்தியாயங்கள் ஏதோ ஒரு நியதியில் தரப்பட்டிருந்தால் டைரிக்குறிப்பு போல
தோன்றியிருக்கும். நாடு, நகரம் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்திருப்பதை சற்று
கவனித்து கடக்கவில்லையெனில், மீண்டும் ஒருமுறை வர நேரிடும். அனுபவங்கள்
நினைவுகளாகி இயல்பான மொழிக்குள் வந்து விழுகிறது. நிகழ்வுகள் எவ்வித
திட்டமிடலுமின்றி நிகழ்வுகளின் அடுக்குகளாக நகரும் இந்நாவலில் கதையென்று ஒன்றை
குறிப்பிட முடியாது. கூறுமொழியின் நுட்பம்
ஆர்வமாக பின்தொடர வைக்கிறது..
கட்டுக்கடங்காமல்
திமிறிக்கொண்டோடும்போக்கில் நாமும் விரையும்போது வார்த்தை சித்தரிப்புகள் நின்று
ரசிக்க வைக்கின்றன. நித்திலாவுக்கு அசோகவனத்தில் இருப்பதுபோலிருக்கிறது.
இவளுடைய அசோகவனம் பாரீசுக்கருகே உள்ளது. இவள் இலங்கையிலிருந்து வந்திருக்கிறாள்.
இது இதிகாச சீதைக்கும் இவளுக்குமான முரண். இராவணனுக்கு நாற்பத்தைந்து வயது.
தமக்கையின் கணவர் என்பதால் அத்தான் என்று அழைக்க வேண்டியிருக்கிறது. இவளுக்காக
வில்லை வளைக்கவோ, நவீன இராவணனுடன் யுத்தம் செய்யவோ யாருமில்லை. இதுவரை இராமனுக்கு
வாழ்க்கைப்படாததால் இராவணனை குறைசொல்லவும் யோசனையாக இருக்கிறது.
கிடைத்த
நாடுகளில் அடைக்கலம் புகும் அவலநிலையில் “ஊர் உலகத்தில என்ன நெனப்பாங்க..“ ஊர்
சனங்களுக்கு பதில் சொல்ல முடியில..“ இதுபோன்ற இயல்பு வாக்கியங்கள் இன்னும்
உயிர்ப்புடன் இருக்கிறதா என்பது சற்று நெருடலாக தோன்றுகிறது.
நாய்க்குட்டியை
வெவ்வேறாக கருதிக்கொள்ளலாம். நித்திலாவுக்கு அது தொலைந்து போன வாழ்க்கை. பாலனுக்கு
அது குற்றவுணர்வு. அத்ரியானாவை உபயோகித்து கொள்வதனால், நித்திலாவை உபயோகித்துக் கொள்ளாததால்,
பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரின் சொத்துகளை அனுபவிக்காததனால் ஏற்படும் குற்றவுணர்வு, தேடல்கள் ரிஷிகேஷிலோ
மற்றெதிலுமோ விட அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கையின் நெருடல்களின் குவியல்தான்
சாமியின் நாய்க்குட்டி. அதனால்தான் அவருக்கு யார் மீதும் விமர்சனமில்லை.
ஒரு புழுவின் முன்னேறும்பாதையை மறிக்கும்போது அது உடனே குச்சிக்கப்பால்
மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறது. அங்கும் தடை செய்துவிடும்போது வேறுவேறு
வழிகளில் முனைகிறது. உடலை இருகூறாக மடித்தும் கூட முற்றிலும் புதிதான வழியை
முயல்கிறது. இந்நாவலின் மாந்தர்களும் அத்தகைய வழிகளைதான் தேடுகிறார்கள். எத்தனை
வழிகள் அடைப்பட்டாலும் ஏதொன்றிலாவது அகப்பட்டுவிடாதா என்ற அவாவோடு. அவர்களுக்கான
ஆசை என்பது வாழ்வின் இலட்சியம் என்பதாகவெல்லாம் கிடையாது. எளிய ஆசைகள்தான். ஆனால்
அவற்றை பின்தொடரும் சாத்தியங்கள் கடினப்படும்போது ஆசைகளின் மீதான ஆசை குறைந்து
நிறைவேற்றும் எண்ணம் மட்டுமே பிரதானப்படுகிறது. ஆகவே அடைந்தபொழுதுகள் அதற்கான
ஆனந்தத்தை பெற்றுக் கொள்ள இயலாது போகிறது.
***
No comments:
Post a Comment