ரமேஷ்சந்திரன் முடிந்தவரை நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரி. அவனின் மனைவி சுகன்யா. மகள் ப்ரியாவின் திடீர் இறப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அவன் அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அங்கு கோஷ் என்ற முதுநிலை பொறியாளரின் கடத்தலும், நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பெருஊழல் ஒன்றும், ரமேஷை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தான் கண்ட, கடந்த உண்மைகளை விபத்தில் அகப்பட்டு மருத்துவஓய்விலிருக்கும்போது புனைவாக்குகிறான்.
சாமானியனை பொறுத்தவரை சட்டம் என்பது வளைக்கவோ மாற்றவோ இயலாதது. கீழ்படிதலைதவிர வேறெதற்கும் உட்படாதது. ஆனால் அதிகாரமட்டத்தில் அது தன்போக்குக்கு வளைந்தும் நெளிந்தும் கலங்கிய நதியாக ஓடுகிறது. அங்கு நிலவும் அதிகாரபடிநிலையமைப்பை கருப்புஅங்கதத்தின் வழியே நாவல் அள்ளி வைக்கும்போது, சற்று பயமேற்படுகிறது. நாம் எவ்வகையில் ஆளப்படுகிறோம் என்பதும், ஆளப்படும் மக்களுக்கும் அதிகாரமையத்திற்குமான இடைவெளி கடக்கவியலாத பெருவெளி என்பதும் புரிகிறது. இப்பெருவெளி குறைந்துவிடாமலும் செல்வமும் அதிகாரமும் தம்மிடமிருந்து விலகி விடாமலும் பார்த்துக் கொள்வதும்தான் அதிகாரமட்டத்தின் தலையாய பிரச்சனை. மற்றபடி மக்கள் பிரச்சனைகளிலிருந்து அது அந்நியப்பட்டே கிடக்கிறது என்பதை இந்நாவல் கூறுகிறது. காந்தி இதில் மையமாகவும் மர்மமாகவும் உடன் வருகிறார்.
வாசிப்புக்குகந்த எழுத்து நடையும், அந்நியமான சூழலும் படிப்பதற்கான ஆவலை துாண்டுகிறது.. ஆனால் உணர்ச்சிகளின் மீது அவை கட்டமைக்கப்படாததுபோல தோன்றுகிறது. உதாரணமாக ப்ரியாவின் மரணம் குறித்து ரமேஷ் உணரும் தருணங்கள் நாவல் அவ்வப்போது தொட்டுக் கொண்டாலும் அவை எந்த உள்ளார்ந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. அயல்நாட்டு மொழிப்பெயர்ப்புகளில் கூட கிடைத்துவிடும் ஒரு ஒட்டுதல்தன்மை இங்கு ஏற்படாதது, ஆழமற்று செல்வதால்கூட இருக்கலாம்.
அறம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை நீட்டியும் குறுக்கியுமாக தனிமனித நியாயங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம் நாம். இது எக்காலத்துக்கும் பொருந்துமென்றாலும் நவீனங்களின் வளர்ச்சி “அறக்கூறுகளை“ முகமறியாதவர்களிடம் கூட சென்று சேர்த்து விடுகிறது. பொதுவாக இவற்றை கண்டும் காணாமலும் விட்டு விடுகிறோம். தங்களை பாதிக்காதவரை அல்லது தங்களுக்கும் சிறிது ஈயப்படும் வரை எப்படியோ போகட்டும் என்று கையலாதவகையில் ஒதுங்கிக் கொள்கிறோம். சில சமயங்களில் நம் எல்லைக்குட்பட்டு கொதித்து அடங்கி, சமூகவலைத்தளங்களில் லட்சியவாதம் பேசுகிறோம். சிலர் மட்டும் இவற்றை போராட்டங்களாக கையிலெடுக்க துணிகின்றனர். சிலர் நாவல்கள் எழுதி தீர்த்துக் கொள்கின்றனர், கலங்கியநதியை போல.
No comments:
Post a Comment