Search This Blog

Friday, 19 July 2019

மஹ்ஷர்பெருவெளி - புனத்தில் குஞ்ஞப்துல்லா - வாசிப்பு அனுபவம்


அபூர்வமான தகவல்களும் தகவல் சார்ந்த புதுமைகளும் இல்லாவிடினும் அறிந்த விஷயங்களின் ஆழத்தை புதிய கோணங்களில் அணுகுவது ஒரு படைப்பின் மீதான ஆர்வத்தை உண்டாகி விடுகிறது. அடுத்து என்னவாக இருக்கும் என்ற ஆவலை தொடர்ச்சியாக அளிப்பதன் மூலம் வாசிப்பை சுவாரஸ்யமான தளத்திற்கு கொண்டு செல்லவும் முடியும். இறுகலானவற்றை மறுஆக்கம் செய்து இலகுவாக்கும்போது, வரலாறு என்று நம்முன்னே வைக்கப்படுபவை வேற்றுரு கொண்டு எழ வாய்ப்பு அமைகிறது. கம்யூனிசம் கேரளாவில் பரவியபோது பெருங்குடும்பங்களுக்கிடையே எழுந்த அச்சத்தையும் இந்நாவல் பதிவு செய்கிறது. எளிய, கொள்கைபிடிப்பு நிறைந்த, கோட்பாட்டாளர்களாக பொதுவுடமைவாதிகளை குறித்து வரையறுக்கப்பட்டிருக்கும் மனச்சித்திரங்கள், ஆரம்பக்காலத்தில் அணுகப்பட்ட விதத்தை நாவல் சொல்கிறது. வரலாற்றை இலக்கியத்தால் மட்டுமே முழுமையாக்க முடியும்.


பட்டு வியாபாரம் செய்வதற்காக யாக்கோபு, இஸ்மாயில், சக்காயி, சிமயோன் என்ற நான்கு சகோதரர்கள், ஏவலுக்கென மங்கோலியர்களையும் சைனாக்காரர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு கேரளம் வருகின்றனர்.

இஸ்மாயிலின் மனைவி ஏலியா. ஏலியாவின் தகப்பன் செய்குமுஹ்யுத்தின் நாட்டு வைத்தியர். காசுக்கு ஆசைப்படாத வைத்தியர். அதனாலேயே வறுமையிலிருக்கிறார். அவர்களின் வறுமையை ஏதுவாக்கி, உலகியல் இன்பங்களில் விருப்பமின்றி, கோடீஸ்வர வாழ்க்கை தன் கண்முன்னே வாழ வா என்றழைத்தபோதும் அதிலிருந்து விலகியிருக்கும் அவருக்கு ஏலியாவை மணம் செய்கிறார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு மொட்டையிடும் சடங்கிற்கு பிறந்து சிறிது நாட்களேயான இளங்கன்று பலியிடப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை. தன் மகனை இலைகளாலும் பூக்களாலும் நிரப்பப்பட்ட மூங்கில் கூடையில் வைத்து கிணற்றுக்கு இறக்கி விட எத்தனிப்பதை பார்த்து விட்டு குடும்பமே பதைத்து நடுங்குகிறது. ஏலியா உள்ளுக்கு கலவரமடைந்தாலும் அழகையையோ பதற்றத்தையோ வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை. அவளுடையே பிம்பமே அதுதான். இஸ்மாயில் வெளியேறிய பிறகான துயரத்தையும் ஆழத்துக்குள் புதைத்துக் கொண்டிருக்கலாம். தொண்ணுாற்றேழு வயது வரை அப்படியே வாழ்ந்து மடிகிறாள்.
சக்காயி, பர்துஷி பெண்ணொருத்தியை மணந்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறார். சிமயோன் பயந்த சுபாவம் கொண்டவர். ஆயினும், வியாபாரத்தின் நெளிவுசுளிவைகளை அறிந்தவர்.
இதில் யாக்கோவின் மனைவி கபரா ஏமன்காரி. யாக்கோபுக்கு பர்மாக்கார மனைவியும் உண்டு. அவ்வகையில் மூஸாமேன் என்ற மகனும் ஜுலியா என்ற மகளும் பிறக்கின்றனர். மூஸாமேனின் பெண்பித்து அவன் சொத்துகளை அழிக்கிறது. அழகில் குறைந்த ஜுலியாவை ஏலியாவின் அண்ணனும் நாட்டு வைத்தியர் செய்குமுஹ்யுத்தின் மகனுமான மாமோன் மணந்துக் கொள்கிறான். ஜுலியாவை தவிர பெருவணிகன் தாலியின் சகோதரியையும் மணந்துக் கொள்கிறான். ஜுலியாவின் இளைய மகன்தான் கதைச்சொல்லி. அவனுடைய மூத்த சகோதரனின் முரட்டு சுபாவமும் பெண்பித்தும் அவனது நாட்குறிப்பின் வழியே அறிந்துக் கொள்ளும்போது கதைச்சொல்லிக்கு அத்தனை ஆச்சர்யம் ஏற்படவில்லை. ஏனெனில், ஆண்களின் காமம் வெகுஎளிதாக தீர்க்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெண்களும் கிடைக்கும் இடைவெளிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். காமம் ஒரு குற்றமாக எங்கும் அணுகப்படவில்லை. அதிலும் ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி ஸாரா பார்ப்பவர்களிடமெல்லாம் படுக்கையை பகிர்ந்துக் கொள்வது குழந்தை பெறும்பொருட்டே என்று அர்த்தப்படுத்துவதும், அதை அவள் கணவன் கேப்ரியல் உணருவதுமான பாத்திரப்படைப்பை விளங்கிக் கொள்ள தெரியவில்லை.  
பொதுவுடமை கோட்பாடு அறிமுகமாகி பரவலாக்கப்படும்போது, பெருந்தனக்காரர்கள் நாசத்தின் குறியீடாகவே அதை அச்சத்தோடு அணுகுகிறார்கள். அரசாங்கத்தின் எதிர்ப்பும் அதை மீறி கூடும் கூட்டங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது. கதைச்சொல்லியின் அப்பா, தன் மகனுக்கு வந்து விட்ட “தீமை“ குறித்து விளக்குகிறார். கையாலாத இறுக்கம் அங்கே நிலவுகிறது. மருத்துவத்துக்கு கூட பணம் பெற்றுக் கொள்ளாதவரின் மகன் பணமே பிரதானமாக அலைகிறான். ஆசிரியராக வேலைப்பார்த்தபோதிருந்த கண்ணியமான நடத்தை, பணத்தை தேடி ரங்கூனுக்கு சென்ற பிறகும் தொடர்கிறது. பணத்தை தேடும் பயணத்தில் வெற்றிக்கான முடிச்சை அடையாளம் கண்டுக் கொண்ட பிறகு உயர் விழுமியங்கள் சராசரிக்குள் தொலைந்து விடுகிறது. இறுதியாக பெருவாழ்வு சரிந்து ஏதுமற்று நிற்கிறது. அல்லது பணமற்ற நாட்டு வைத்தியனின் மகன் அத்தனை பணசௌகரியங்களையும் அனுபவித்து  விட்டு மீண்டும் ஏதுமற்று போகிறான். அண்ணனின் நாட்குறிப்பில் அப்பாவை அவன் பூர்ஷுவா என்று எழுதியிருப்பதை கதைச்சொல்லி படிக்கிறான். அவன் இன்னுமொன்றும் எழுதியிருக்கிறான். 'எல்லாவற்றையும் காலம்தான் தீர்மானிக்கும்...'
மஹ்ஷர்பெருவெளி ஒரு பெரும்வாழ்வை ஆச்சர்யங்களின்றி சொல்லி முடிகிறது. கிட்டத்தட்ட வாழ்க்கையையே கதையாக்கப்பட்டிருப்பதால், யோசிப்பின்றி நகர்வது போல சம்பவங்கள் தொடர்கின்றன. காலங்கள் முன்பின்னுமாக காட்டப்பட்டாலும் பின்தொடர முடிகிறது. 
பழங்காலத்தில், பெண்கள் கொடிகளைக் கொண்டும் இலைதழைகளைக் கொண்டும் தங்களின் குலத்திற்கேற்ப அடையாளங்களை அணிகளாக அணிந்துக் கொண்டனர். இலைகளும் கொடிகளும் காலப்போக்கில் பொன்னும் வைரமுமாக மாறினாலும், அவை கலாச்சார அடையாளமாகவே இன்றும் தொடர்கிறது. கபராவுக்கு அணிகள் இன்றி வாழவே முடியாது என்று வரையறையை அவள் மனம் தனக்குதானே விதித்துக் கொள்கிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் கூட தனக்குதானே பாதையை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாதை குறித்து யாரும் யாருக்கும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. ஒருவகையில் சுதந்திரமாக தோன்றினாலும், உண்மையில் அவை சுதந்திரம் கோருபவையாகவே தோன்றுகிறது.


No comments:

Post a Comment