Search This Blog

Wednesday, 1 July 2020

ஓடிப்போகிறவள்


தோட்டத்து முள்ளங்கி ஒரு கொதிக்கே பச்சைத்தண்ணீராக வெந்திருந்தது. இரவுக்கும் சேர்ந்து குழம்பை கூட்டி வைத்திருந்தாள். பெருங்காயம் போட்டு தாளித்தபோதுசோறு வச்சிட்டீயாடீ..” என்றாள் கலாராணி. “எல்லாம் வச்சாச்சு..” பழக்கத்தில் வந்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டும்.. வடிச்சு வுட்டுருக்கேன்..“ என்றாள். திண்ணையில் படுத்துக்கிடந்த செல்வராசுஎம்மா.. செயந்தீம்மா..“ என்றான். “ம்ம்.. சொல்லு..” சோற்றை வடிப்பானையிலிருந்து நிமிர்த்திக் கொண்டே பேசினாள் ஜெயந்தி.

பாலிருந்தா டீ போட்டு கொண்டாய்யா.. வாயெல்லாம் வறண்டு போச்சு..” வேலைவெட்டி என்று பிரத்யேகமாக எதுவும் வைத்துக் கொள்வதில்லை. பரம்பரையாக ஒதுங்கிய ஐந்து ஏக்கரை இரண்டாக்கி அதையும் குத்தகைக்கு விட்டிருந்தான்.

ஜெயந்தி ஏற்கனவே கொடியடுப்பில் பாலை ஏற்றியிருந்தாள்.



இரு எடுத்தாரேன்..”

சோறு திங்கற நேரத்தில டீய குடிக்கிற..?” என்றபடியே டீயை நுரைப்பொங்க ஆற்றி தகப்பனிடம் ஒரு கிளாசும் தாயிடம் ஒன்றுமாக நீட்டினாள்.

சொல்லாமயே கொண்டாந்துட்டே..” என்றாள் கலாராணி.

பால் எக்சா இருந்துச்சு.. அதான்..“ பின்நேரத்தில் மிஞ்சிப்போனால் அம்மாவுக்கு அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாது. பின்நேரமென்பது மாலை ஐந்து மணி. விரல் கூட்டி எண்ணினாள். ஐந்து மணிக்கு ஆறு மணிநேரமிருந்தது. நாட்களை கடத்துவதை விட மணிநேரங்களை கடத்துவதுதான் கடினமானது.

நீ குடிக்கில தாயீ..” என்றான் காலி டம்ளரை நீட்டியபடி.

எனக்கு வேணாம்.. அதான் பயலுங்க வந்தவொடனே சாப்ட போறோமே..”  அவளையடுத்து பிறந்தவன் பத்தாவதும், பிறகு அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளுமாக கலாராணி வரிசையாக பிரசவித்துக் கொண்டிருந்தபோது ஜெயந்தியும் படிப்பை விட நேர்ந்தது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியை வீட்டுக்கே வந்து விட்டாள்.  மா.. டீச்சர் வந்திருக்காங்க..“ ஜெயந்தி ஓடி வந்தபோது எதற்கு வந்திருக்கிறாள் என்பதை கலாராணியும் என்ன சொல்ல போகிறாள் என்பதை டீச்சரும்  அறிந்திருந்தாலும் பேச்சு மட்டும் தொடர்ந்தது. ஜெயந்தி சட்டியில் வறுத்துக் கொண்டிருந்த புளியங்கொட்டையை தட்டி உரித்து வாயில் போட்டுக் கொண்டாள்.

வயக்காட்டிலும் டாஸ்மாக்கிலுமாக பெண்களும் ஆண்களும் பிரிந்திருக்க, சோடையாக நகர்ந்துக் கொண்டிருந்த அந்த மதியநேரத்தில் அவனும் தண்ணீர் எடுக்க வந்திருந்தான். ”நீங்க வைக்கறதுன்னா வைங்க..” குடத்தை நகர்த்திக் கொண்டான். கும்பல் சேர்வதற்குள் தண்ணீர் பிடித்து விடும் முனைப்போடு வந்தவளுக்கு இளைஞன் ஒருவனை குழாயடியில் பார்த்தது வியப்பாக இருந்தது. அவன் அயிலம்மாவின் கொழுந்தன் மகனாம். அயிலம்மா இவள் பிறப்பதற்கு முன்பே வெளியூரில் கட்டிப் போய் விட்டாள். ஆளுக்கு பதிலாக அவளை பற்றிய பேச்சுகள் மட்டும் ஊருக்குள் மூச்சுபோல ஏறி அடங்கும். பெரியம்மாவின் யாருமற்ற வீட்டிற்கு எதற்காகவோ வந்திருக்கிறான். ராஜா என்று பெயராம். ராசாவாகவே இருந்தான்.

இல்ல.. நீங்களே வையிங்க..“ என்றாள். மதிய நேரங்கள் அவர்களுக்கு பிடித்திருந்தன.

இந்துார்ல என்ன பண்றீங்க..?” அவள் பேச்சுக் கொடுத்தாள்.

ஒங்கள பாக்கதான் வந்தேன்..” அதை சொல்லுமளவுக்கு அவர்களிடம் அன்னியோன்யம் முளைத்திருந்தது.  வளர்த்தியாக இருந்தான். ஏதோ காரணத்தை சொல்லி விட்டு அவள் அப்பிராணிபோல ஊருக்குள் வரும் பேருந்துக்காக காத்திருந்தாள். அவனிடம் இருச்சக்கர வாகனமிருந்தது. அவன் அவளை அழைத்துக் கொள்வதற்காக நெடுஞ்சாலையில் விரைந்துக் கொண்டிருப்பான். அவனின் கிசுகிசுப்பான பேச்சும், அந்த அரையிருட்டு உணவக அறையும் அவளுக்கு அவனை திருமணம் செய்துக் கொண்டு படுக்கையறைக்குள் பேசிக் கொள்வதாகவே தோன்றியது. அவனின் முசுமுசுப்பான ரோமங்கள் நிறைந்த வலதுகை தட்டை அளாவி உணவைக் கூட்டுவதை இரசித்துக் கொண்டிருந்தாள். மேசை மீதிருந்த அவனது இடதுக்கையை தனது கைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டபோது, அவளை நோக்கி மென்மையாக சிரித்துக் கொண்டே நீரெடுத்து அருந்தியதை அவள் அத்தனைதுாரம் இரசிக்கவில்லை.

தங்களுக்கு மாமன்மகன்.. அத்தைமகன் என்று யாராவது..?“ அவன் விளையாட்டாக கேட்பதை விளையாட்டாககூட ஆமோதிப்பதற்கு  அவளுக்கு யாருமில்லை.

ஏனாம்..?” அவனுக்கென்றே அவளுக்குள் ஒரு தொனி உருவாகியிருந்தது. அதை அவன்தான் சொன்னான். “மொகமெல்லாம் சிணுங்கலா வச்சிக்கிட்டு கொஞ்சலா பேசற பாரு.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” அதன்பிறகு, அவள் தன் பேச்சுகளை கவனிக்கத் தொடங்கினாள். அம்மாவிடம் சற்று துடுக்கும்வெடுக்குமான தொனி. அப்பாவிடம் அலட்சியத்தொனி. தம்பிகளிடம் அதிகாரமும்  சில சமயங்களில் அன்பும் கலந்த தொனி.

அவ எம்மொறப்பொண்ணுன்னு எவனாது மொறச்சான்னு வையேன்.. நமக்கெல்லாம் அடி தாங்காதும்மா..”

முறைப்பதற்கெல்லாம் ஆளிருந்தால் ராஜேந்திரன் பிரச்சனைக்கே முறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஊரில் திருவிழா முடிந்திருந்தது. வேம்பு, இளம்பிறை, பூமயில், இவள் உட்பட இளம்பெண்கள் கொண்டாட்டமாக பக்கத்துார் தியேட்டருக்கு சென்றிருந்தனர். கூட்டமாக நின்றிருந்த இவர்களை கண்டதும் ஊர் பெயரை சொல்லிநீங்கள்ளாம் அந்துாரு பொண்ணுங்கதானே..“ என்றான். சினிமாக்காரனைபோல முடி வெட்டியிருந்தான். மாநிறமாக முகம். சாய்ந்துக் கொள்ள ஏதுவான பெரிய மார்பு. ஆண்கள் எல்லோருமே அழகுதான். நிமிர்ந்தபோது அவனது பார்வை தன்னை வெட்டியதை ஜெயந்தி குறுகுறுப்புடன் கவனித்தாள்.  அதற்காக அடுத்தநாளே அவன் கிளம்பி வந்து விடுவான் என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவில்லை.



பூமயிலும் அவளும் வேலை கலைந்து வந்துக் கொண்டிருந்தனர். அந்த வறண்ட ஓடையை கடந்தபோது அடம்பலற்ற கருவேலத்தின் பின்னிருந்து சிறு கல்லொன்று வந்து விழுந்தபோது திடுக்கிட்டுப்போனது. செல்லமாக விழுந்த கற்கள் யாரோ குறும்பு செய்கிறார்கள் என்று உணர்த்தியபோது அவளுக்குள் ஏதோ சிலிர்ப்பாக ஓடியது. யாருமற்ற தருணத்தில் தங்களுக்கு முன் அவன் குதித்து நின்றபோது தலைநிமிரவியலாத வெட்கம் வந்தது. படபடவென்று தாளிதம் பொறிந்து கருகலாக குழம்பில் மிதந்ததில், “சட்டிய அடுப்புல காய வச்சிட்டு என்னாத்தடீ பண்ணுன..?” என்றாள் கலாராணி. என்ன செய்தோம் என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. சமையலறையின் இரும்புகிராதியின் வழியே தற்செயலாகதான்  அவனை பார்த்தாள். எதையோ தொலைத்ததுபோல நடந்தான். வீட்டைத் தேடுகிறானா..? அல்லது அதையும் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை தேடுகிறானா..? உடையையும் தலைமுடியையும் படிய வைத்துக் கொண்டு வெளியே வந்தபோது அவன் வீட்டை கடந்திருந்தான்.  பாவீ.. இவ்ளோ துாரம் தேடீட்டு வந்துட்டியா..” செல்லமாக திட்டிக் கொண்டே தாளிதத்துக்காக சட்டியை அடுப்பில் ஏற்றினாள். உடம்பு முழுக்க ஓடிய அவன் கைகளை தடுத்து தடுத்து முன்னேற்றினாள். நேரில் பார்த்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் இறுகக்கட்டிக் கொண்டனர். அவனுக்கு முப்பதாவது இருக்கும். இருபதுக்கும் முப்பதுக்கும் அத்தனை வித்தியாசமில்லை.

ராஜேந்திரன் மீது மையல் கொண்டிருந்த நாட்களில் அவளை பெண் கேட்டு வந்தவனுக்கும் வயது முப்பதை கடந்திருந்தது. பெற்றோர் அதையே மறுப்புக்கு காரணமாக்கினர்.  ஒவ்வொரு வரனுக்கும் ஒவ்வொரு காரணம் என்றாலும் பதில் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனாலும் செல்வராசு மேலும்கீழுமாக எச்சில்கோடுகள் பாலம் கட்ட வாயை பிளந்து அழுவான். “ஒன்ன கட்டிக்குடுக்க முடியிலியேன்னுதான்டீ அந்தாளு வெதும்புறான்..” செல்வராசுவின் எல்லா செயலுக்கும் கலாராணியால் அர்த்தம் கொடுக்க முடியும்.

விஷயம் கேள்விப்பட்ட பிறகு எதையெதை அர்த்தப்படுத்திக் கொள்வது என்றே புரியவில்லை அவளுக்கு. பூமயில் காணாமல் போனபோது இவளிடம்தான் விசாரிப்புக்காக வந்திருந்தனர். அப்போது அவள் கோலமாவு மூட்டையை பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தாள். யாரோ செருப்பால் அடித்ததை போன்ற அவமானத்தில் குறுகி துப்பட்டாவுக்குள் அழுதாள். அவன் அணைத்துக் கொள்ள வந்தபோது அதை புறந்தள்ள முடியாமல் மேலும் அழுதாள். அது வறண்ட வயலில் மல்லாக்கொட்டை செடியை பிடுங்கியபோது நிலத்தில் விழுந்து, உடனே மறைந்தும் போனது. நிலத்துக்காரன் நாலு செடி ஆயங்குள்ளயும் நெளிக்கறே..“ என்று கத்தினான். எல்லாம் பழங்கதையாகி பூமயிலும் இப்போது நட்பாகிப் போனாள். ஊருக்கு வரும்போதெல்லாம் அவளை இழுத்து வைத்து பேசிக்கொண்டிருப்பாள்.

அது கொக்கிய கழத்தறவரக்கும் துாங்கறவகணக்கா கெடப்பேன்.. அதான் அதுக்கு புடிக்கும்..

ஏன் நீதான் கழட்டீட்டு கெடக்கறது..ராஜேந்திரன் அவளை ஏமாற்றியவன்.

பொட்டச்சிங்க உருவியுருவி பேசுணும்.. ஒண்ணுந்தெரியாதவளாட்டம் இருக்குணும்.. ஊருக்காட்டுக்கு போனான்னா எப்பய்யா வருவே ஏங்கியேங்கி அழுவுணும்.. அத்த வுட்டுட்டு வாய்யா.. வந்து படுய்யான்னு கெடந்தா பயப்புள்ள மெரண்டுற மாட்டான்..ஓங்கியடித்து சிரித்தாள். “இதெல்லாம் டாக்குடீசுடீ..

என்னா ப்ராக்குடீசோ..?

ராசாவும் அவளும் படுக்கையில் நெளிந்தபோது கலாராணி எதற்கோ அழைத்துக் கொண்டிருந்தாள். இடைவெளியின்றி நெருக்கி அவனை கவ்விக் கொண்டபோது அவன் சட்டென்று அவளை விலக்கினான். கொக்கியின் முனை அவன் உடலை அழுத்துவதாக எண்ணிக் கொண்டு ஒருகளித்து நகர்ந்து மீண்டும் அவனை இறுக்கிக் கொண்டாள். “ச்சே.. காதல்ன்னா இதொண்ணுதானா..?அவளின் தொய்ந்துக் கிடந்த முந்தானையை ஒழுங்குப்படுத்தி விட்டான். அவன் சொன்ன உணவின் பெயரை அவளால் உச்சரிக்க முடியவில்லைமஷ்ரூம் மஞ்சூரியன்..என்றபோது எச்சில் தெறித்தது.  ஏன்.. காதல்ல இது முக்கியமில்லையா..? அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள். அவனை இறுக்கிக் கொண்டபோது ஏதோ நெருடலிருந்தது.

ஐந்து மணிக்கு இன்னும் நான்கு மணி நேரமிருந்தது. ஐந்து மணிக்கு பூமயிலை போல ஓடிப்போக திட்டமிட்டிருந்தனர். வாட்டர்டேங்க் அருகே சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. தனது உடுப்புகளை இரண்டிரண்டாக ஏற்கனவே அவனிடம் சேர்ப்பித்திருந்தாள்.

காதலுஊதலுன்னு எம்புட்டு பேரு வச்சாலும் எல்லாங்கடேசில இதுக்குதேன்டீ..  பூமயிலுக்கு பிள்ளையுண்டாகி இருந்த பூரிப்பு வேறு.

தன்னை முத்தமிடுமாறு ஒருமுறை அவள் கேட்டபோது அவன் அடர்ந்த மீசைக்குள் புதைந்த உதடுகளால் மென்மையாக சிரித்தான்.

அன்னிக்கு ராவு பத்து மணியிருக்கும்.. வவுத்துப்புள்ளகாரியில்லையா..? செத்த அசந்தாப்பல வந்துடுச்சு.. அந்தாளு தவிச்ச தவிப்புல மயங்கனமேரியே கெடந்தேன்... தலையதுணிய ஒளுங்குப்பண்ணி படுக்க வக்கிது.. தண்ணீய கொண்டாந்து குடுக்குது.. ஒரே கூத்துதான் போ..அப்போதுதான் நடந்ததுபோல அனுபவித்து கிறங்கினாள் பூமயில்.


இருட்டுக்குள்ள ஒக்காந்து என்னாத்தடீ பண்றே..? கலாராணி மகளை தேடிக்கொண்டு வந்துவிட, என்னமோ பண்றேன்..என்றபடி எரிச்சலோடு வெளியே வந்தாள். சமையற்கட்டிலிருந்த குப்பையை அள்ளிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள். தோட்டத்து குப்பைகளை அதிக சத்தத்தோடு கூட்டித் தள்ளினாள். சூரியன் சாய்ந்துக் கொண்டே வந்தது. மணி நான்கிருக்கலாம்.

செத்த ஒக்காரேண்டீ.. இந்நேரத்துல என்னாத்துக்குடீ தோட்டத்த கூட்ற..?” கொல்லைக்கதவின் நிலைப்படியில் கையை தேக்கிக் கொண்டு கலாராணி கேட்டபோதுஏன் கத்தற இப்ப..என்றாள் நிமிராமலேயே. குவிந்த குப்பைகளுக்கு தீயிட்டாள். காய்ந்த சருகுகள் வெயிலில் படபடத்தன. படபடத்த மனம் இறுகி சமைந்திருந்தது. மணி ஐந்தை கடந்திருந்தது.

சிறுவர்கள் தெருவில் விளையாட எஞ்சியவர்கள் டியூஷன் வகுப்புக்கு சென்றிருந்தனர். பெண்கள் சமையல்வேலையை தொடக்கியிருந்தனர். கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஸந்தியா பிரவர்த்ததே.. நேரம் மாலை ஆறுமணி என்றது உள்ளுர் கோவில்கடிகாரம். அலுமினிய டேக்சாவில் உலைநீரை நிரப்பிக் கொண்டாள். கண்கள் தெருவிலிருந்தன. ராஜா பதற்றத்தோடு நடமாடுவதும் அவளை தேடுவதுமாக அலைந்தான். ராஜேந்திரன் கூட இப்படி அலைந்திருக்கிறான். ஆனால் அவளுக்காக அல்ல. உலையை அடுப்பில் ஏற்றி விறகை திணித்தாள்.

அரிசியை அளந்து நிதானாமாக அரிக்கன்சட்டியில் கொட்டினாள். உலை கொதிக்கத் தொடங்கியிருந்தது.

செயந்தீ.. மச்சு வூட்டாச்சி முருங்கக்கா பறிச்சுட்டு போன்னுச்சு.. வாச்சி வாச்சியா எளசா தொங்கீட்டு கெடக்கு.. ரெண்டு பறிச்சாந்து பெரட்டி வையீ.. ஒங்கப்பன் மணி ஏழாச்சுன்னா தட்ட துாக்கிடுவான்..என்ற கலாராணியை உற்று நோக்கினாள்.

களைந்த அரிசியை கீழே வைத்து விட்டு, சொருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டாள். தோட்டத்துவழியே கிளம்பி ராஜாவின் பார்வைபடும்படியாக நின்று, பிறகு வாட்டர்டேங்க் நோக்கி நடந்தாள்.

***

No comments:

Post a Comment