Search This Blog

Sunday, 9 August 2020

நீரோசை

 

ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்ல தொடங்கியது. நதியில் ததும்பிய நீர் சீரான தாளத்தில் க்ளக்.. க்ளக்.. என படகை அறைந்து எதையோ சொல்லிக் கொண்டே வந்தது. பரிசல்களும் சுற்றுலா படகுகளும் சோம்பேறித்தனமாக நகர, நான் அமர்ந்திருந்த பயணியர் படகு இரைச்சலையும் புகையையும் கக்கியபடி வேகமாக முன்னேறியது. முன்னேற்றம் என்பதே இலக்கு என்ற ஒன்றிருக்கும்போதுதான் அர்த்தப்படும். அதுவும் ஒரேமாதிரியான இலக்கு. பரிசலில் ஒற்றையாளாய் அமர்ந்து பயணிப்பவனுக்கும் எருமைப்பாலில் தயாரான இனிப்புபேடாவை மரத்தேக்கரண்டியில் அள்ளியுண்டபடி சுற்றுலா படகில் அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கும் ஒரேமாதிரியான நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. நான் பரிசலில் ஏறியிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன். துடுப்பு போடாமல் நீரின் சுழலோடு பரிசலில் சுற்றிசுழல்வதாக எண்ணிக் கொள்வதே பரவசமாக இருந்தது. மூங்கிலை வளைத்து கூடாரமாக்கி அதன் மீது பாய்கூரையிட்டு வெயிலை மறைத்த இயந்திரப்படகுகள் இரைச்சலும் புகையுமாக நீரை பீய்ச்சிக் கொண்டு பயணிகளோடு கங்கையை அளைந்தன.

சாரு மதராசி..?” என்று பேச்சை தொடங்கினான் அந்த படகோட்டி. படகில் ஏறும்வரை பணத்துக்காக என்னிடம் சண்டையிட்டவன்.  கேட்ட பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டதும் எல்லாமே மாறியிருந்தது. நீர்பரப்பின் மீது பறந்துக் கொண்டிருந்த சிற்றுயிர்களை பார்த்தபடியே ஆமோதிப்பாக தலையசைத்தேன். ஏதோ கேட்டதை எங்கோ பார்த்தபடி தவிர்த்தேன். நதி எழுப்பும் சிற்றலைகளைபோல பேசுவதில் தீராத விருப்பம் கொண்டவன்போலும். ஜெய் கங்கா ஜெய் கங்கா ஜெய் ஜெய் கங்கா அமிர்தவர்ஷினி கங்கா மாதா என்று பாடிக் கொண்டே வந்த பஜனைக்கூட்டத்தை கடந்தபோது ஏதோ ஒன்று உள்ளத்தை நெகிழ்த்த கையை தாழ்த்தி நீரை அள்ளினேன். எதிர்பார்த்ததை விட சில்லிப்பு. இமயமுடியிலிருந்த பனியை நீராக அள்ளிக் கொண்டு வந்து கடலில் சேர்த்து விடும் புனிதமான நீர்க்கோடு. அலை எழும்பல்களை தொட்டுக் கொண்டே வந்தபோது எங்கோ யாரோ செலுத்தியிருந்த பூசனைப்பூக்கள் கையில் தட்டுப்பட்டு நழுவியோடின. நீரில் எழும் குமிழிகள், அஸ்ஸியாற்றிலிருந்து வெளியேறிய இராசாயனக் கழிவுகளாக இருக்க வேண்டும்.

நீங்க தமிழ் ஆளா..?” என்றார் படகில் வந்தவர். ஆச்சர்யத்துடன் புருவம் துாக்கி ஆம் என்றேன். எங்கே…? என்றார். “திருச்சிஎன்றேன். “அங்க காவிரி.. இங்க கங்கை..” என்றார். அதற்குள் அந்த படகோட்டி ஏதோ சொல்ல இந்த இடத்தில ஆழம் அதிகமாக இருக்குங்கிறார்..” என்று மொழிப்பெயர்த்தார். இந்நேரம் மாமா இருந்திருந்தால் தம்பீ.. கைய தண்ணீல வைக்காதப்பா.. என்று  மாய்ந்திருப்பார். தான் கேள்விப்பட்ட விஷயங்களை தொடர்புபடுத்துவார். “முதலைங்க ஆளுங்கள உள்ள இழுத்துப் போட்டுடும்எட்டு வயசு பொம்பளப்புள்ள இப்டிதான் கைய தண்ணீல அளஞ்சுக்கிட்டே போயிருந்துருக்கு…” “எங்க மாமா…?” “கங்கைலதான்..” “மொதலை அந்தப்புள்ளையோட கைய எட்டிப்புடிச்சு கவ்விடுச்சுபரிசல்ல இருந்த பெத்தவங்க அய்யோ அய்யோன்னு அலறிக்கிட்டு இந்த பக்கம் இழுக்க, முதல அந்தப்புள்ளய தண்ணீல இழுக்ககடவுளே…”

அய்ய்ய்யோ.. அப்றம் என்னாச்சு…?” “என்னாவும்..? முதலைக்கு முன்னாடி பூஞ்ச மனுசனால என்ன பண்ண முடியும்.  மொத்த ஒடம்பையும் அது தண்ணிக்குள்ள இழுத்து போட்டுக்குச்சு.. கடைசில அந்தப்புள்ள வெரல்ல போட்டுருந்த அரைபவுனு மோதிரம் அவங்கம்மா கையில உருவிக்கிட்டு நின்னுடுச்சு…” என்பார்.

படகு மணிகர்ணிகா படித்துறையை நெருங்கிக் கொண்டிருந்தது. அணையா சிதைகளிலிருந்து சுழன்று எழுந்த புகையை கண்ட நொடியில் எழுந்த உணர்வுகளை சொற்களாக்கவியலாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். படகு நபர் என் முதுகை தட்டி அதெல்லாமே தங்கற விடுதிங்கதான்…” என்றார்.  என் முதுகுபையை பார்த்திருக்க வேண்டும். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் சிறிதும்பெரிதுமான பழமையான கட்டிடங்கள் ஏதேதோ  பெயர்பலகைகளை தாங்கி நின்றிருந்தன.  ராஜபுதன மன்னர்கள் கட்டிய சிவந்த அரண்மனைகள் நீரிலிருந்து புறப்பட்டன போல் எழுந்திருக்க, காவி வண்ணமிட்ட படிக்கட்டுகள் நீரில் முளைத்து நிலத்தில் பாவி நின்றன. படிக்கட்டுகளில் மக்கள் மிதப்பது போல் அலைந்தனர். பறவைகள் பயமேதுமின்றி நீரிலிருந்து கொத்திய மீன்களை படிகளில் வைத்து உண்டன. பரிசல்கள் வட்டவட்டமாக கரையொதுங்கியிருந்தன. பயணிகள், காலி படகுகளை நோக்கி முண்டினர். படகிலிருந்தவர்கள் கூச்சலும் இரைச்சலுமாக இறங்குவதற்கு தயாராகினர். நான் நீரையள்ளி முகத்தில் வழிய விட்டுக் கொண்டேன். என்னுடன் வந்தவர் நீத்தார் சடங்கு செய்ய வேண்டி குடும்பத்தோடு வந்திருக்க வேண்டும். கையோடு பூசைப்பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்து வந்திருந்தனர். அதுவரை படகோட்டியுடன் கதைத்துக் கொண்டு வந்தவர், கரையேறியதும் குடும்பத்தலைவராக மாறி கத்திக் கொண்டிருந்தார். அழகேசு மாமாவுக்கு கத்தவே தெரியாது. “தம்பீ..” என்பார் மென்மையாக. அக்காவின் இறப்புக்கு பிறகு மென்தன்மை இன்னும் கூடிப்போனது. நான் பையும்கையுமாக நின்றபோது நாசியில் அறைந்த பூவின் மணத்தை முன்பு எப்போதோ நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன். ஆம். அம்மாவின் சடலத்துக்கு தீமூட்டிய என்னை ஈரஉடலோடு சேர்த்து தன்னுடன் அணைத்துக் கொண்டபோது பிணத்தின் மாலைகளிலிருந்து எழுந்த செவந்திப்பூ வாசனை மாமாவிடம் தொற்றியிருந்தது. அப்போது நான் பதினோராவது வகுப்பிலிருந்தேன். கிளம்பும்போது அம்மாச்சி மாமாவை உசுப்பி விட, “தம்பிய நாங்க கூட்டீட்டு போறோம்.. என்றார் அப்பாவிடம். “அவன வுட்டா எனக்கு யாரிருக்கா..” என்றபோது அப்பா வழக்கம்போல குடித்திருந்தார். “அதான் பாட்டிலிருக்கே…” வார்த்தைகளை வாயசைவின்றி உச்சரித்துக் கொண்டார். ”பொங்கலுக்கு பொறந்த பொண்ணுக்கு படையல் போடுணும்..” என்றபடி மூன்று மாதங்கள் கழித்து எங்களை அழைப்பதற்காக மாமா வந்தபோது அப்பாவுக்கு திருமணமாகியிருந்தது.

படித்தறையில் மனிதர்களுக்கு இணையாக எருமைகளும் இருந்தன. அவை சிறிதும் பயமின்றி சனக்கூட்டத்துக்கு மத்தியில் ஊழ்கத்தில் ஆழ்ந்தவைபோல நின்றிருந்தன. கீழ்த்தாடையில் மட்டும் லேசான அசைவு. எப்போதாவது நாசித்துளைகளை துழாவுவதுபோல அவற்றின் வயலட் நிற நாக்கு எவ்வி மேலெழுந்து சுழலும். காசியின் குறுகிய சந்துகளிலிருந்து அவை பெருகி வந்திருக்கலாம். ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் என்று ஆழ்வார் பாடியதை போல அந்த குறுகலான சந்துப்பாதைகளில் அதிகபட்சம் ஒரு எறுமையுடன் ஒரு மனிதனும் ஒரு இருசக்கரவாகனமும் செல்ல முடியும். இரண்டு எருமைகள் சேர்ந்தாற்போல வந்துவிட்டால் வீடுகளின் வாசற்படிகளில்  ஏறிதான் கடக்க வேண்டும்.  காலத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவைபோல அவை மெல்லமெல்ல நடந்து சந்துகளை கடந்துக் கொண்டேயிருந்தன. எனக்குதான் எருமைகளை கடப்பதற்கு தயக்கமாக இருந்த்து. ஆனால் உருவுக்கு சம்பந்தமேயில்லாத சாத்வீகமான கண்கள். வெயிலில் பளபளக்கும் கரும்பங்கொல்லைகளின் அடர்பச்சைத்தாள்களை நினைவுறுத்தும் கண்கள். சிநேகம் கொள்ளவைப்பவை. பொறுமையானவை. 

இத்தனை பொறுமை கூடாது என்பார் அழகேசன்மாமா. ஆனால் அவருக்குதான் பொறுமை அதிகம் என்பாள் அம்மாச்சி. பார்க்கும்போதெல்லாம் கண்கலங்குவார். மகனுக்கு பெண் பார்த்து சலித்து போய்விட்டது என்பார். இறந்துபோன மகள் மீதான துக்கத்தை பெருமூச்சாக விடுத்து நீயாது காலகாலத்தில கல்யாணத்த பண்ணிடுப்பா…” என்பார். இடுப்பிலிருக்கும் முந்தானையை உதறிவிட்டு சொருகிக் கொள்ளும்போது அதிலிருந்து மாட்டுத்தொழுவ வாடையும் பால் வீச்சமும் எழும். சித்தியிடம் எழும் வாசம் நகரத்தனமானது. சித்தியின் சிவந்தநிறம் அவர் பெற்ற அகிலாவுக்கு கூட வாய்க்கவில்லை. அங்கிருந்து கிளம்பும் ஒவ்வொரு முறையும் அந்த பசப்பி என்ன சொல்றா..?” என்பார் அம்மாச்சி. அவர் இறந்து கிடந்தபோது கூட அப்படி கேட்பதாகவே எண்ணிக் கொண்டேன்.

நான் சிதை ஒன்றின் அருகே சென்றேன். வாட்டச்சாட்டமான உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருந்தது. அப்பாவும் இதுபோல ஓங்குதாங்கான வடிவு கொண்டவர்தான். குடி அவரை அழித்திருந்தது. அவர் இறந்தபோது பத்து வருட பணியாண்டுகள் மீதமிருந்தன. ஆனால் கூடாநட்போடு சேர்ந்து கையாடல் வரைக்கும்போயிருந்ததால் பணியிடத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இறப்புக்கான சலுகைகளும் பணப்பயன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிதைகள் எரிந்துக் கொண்டிருந்தன. அருகில் சம்சாவும் சூடான தேநீரும் விற்றுக் கொண்டிருந்தனர். குச்சி ஐஸின் குச்சிகளும் பாப்கார்ன் பைகளும் சிதறிக் கிடந்தன. நீர்கடன்கள் செய்த குப்பைகள் கால்களில் தட்டுப்பட்டன. என் கையை பற்றி யாரோ இழுக்க, திரும்பிப் பார்த்தேன். காவியுடை தரித்திருந்த சாமி ஒருவர். உடலெங்கும் திருநீறு பூசியிருந்தார். நீள்முடி சடைகளாக தொங்கியது. நெகிழித்தட்டில் வைத்து  விற்கப்பட்ட சுருள்சப்பாத்திகளை வாங்கி தருமாறு அதிகாரத்தோரணையில் கேட்டார். சிதையை பார்க்கும் ஆர்வத்தில் சட்டைப்பையிலிருந்த பணத்தை எடுத்து நீட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொன்னேன். அவர் பதில் கூறாமல் நகர்ந்துப் போய்விட்டார்.



மிக லேசான துாறல் விழ, அதற்கே உடல் நடுங்கியது. சிதையிலிருந்த உடலின் நடுப்பகுதி வெந்து உள்ளிருக்கும் நீர் கசிந்துவடிய அதை அனல் தன் நாக்குகளைக் கொண்டு ஆவேசமாக மடித்து உள்ளே தள்ளிக் கொண்டது. எரியூட்டி அந்த பிணத்தை அப்படியே இரண்டாக மடித்து போட்டு சிதையில் தள்ளி  விட்டுவிட்டு, அடுத்த பிணத்தை நோக்கி கவனத்தை திருப்பினார். அப்பாவின் நீர்கடனை முடித்து விட்டு வந்தபோது அழகேசு மாமா கண்டித்து சொன்னார். “தம்பிய நா கூட்டீட்டு போயி படிக்க வச்சிக்கிறேன்..” நான் கல்லுாரி காலத்திலிருந்தேன். அப்பாவின் வீடு பெரியதாகவும் மதிப்புக்கூடியதாகவும் இருந்த பழைய காலத்து வீடு. “நாளபின்ன வீடு வாசல்ன்னு எதுக்கும் வந்து நிக்கற வேலை வச்சுக்க கூடாது..” என்று சித்தியின் பிறந்த வீட்டில் நிபந்தனை விதிக்க, மாமா உடனே சம்மதம் என்றார். “சபையில வச்சு பேசியாச்சு.. ஒரு சொல்லு மீறமாட்டோம்…“ என்றார். கிளம்பிய நேரத்தில் சித்தி அழுதபோது நான் மாமாவின் பிடியிலிருந்து என் கையை விலக்கிக் கொண்டேன்.

மிதிவண்டியில் நெடுக்குவாட்டாக பிணத்தை கட்டிவைத்து எடுத்து வந்த கும்பல் ஒன்று பிணத்தை அவிழ்த்து சிதைக்கருகே வைத்தது. இந்த கோஷ்டியை நான் ஏற்கனவே சந்து ஒன்றுக்குள் வைத்து பார்த்திருந்தேன். பிணம் கட்டியிருந்த மிதிவண்டியை இருவர் பிடித்துக் கொள்ள மீதமானவர்கள் அங்கிருந்த தேநீர்கடையில் தேநீர் அருந்தினர். நான் நிகழ்வின் அசாதாரணத்தில் கட்டுண்டு நின்று விட்டேன். தேநீர் அருந்தியவர்கள் வண்டியை பிடித்துக் கொள்ள, மீதமிருவரும் தேநீர் கடைக்குள் நுழைந்தனர்.

அன்று மாமா பொறுமையிழந்து கத்தினார். “கெடந்து சாவுடாஎங்கக்கா சாவும்போதுகூட ஒங்கப்பனை நம்பல..  எம்புள்ளைய பாத்துக்கன்னு எங்கிட்டதான் கையடிச்சு சத்தியம் வாங்குச்சு. மூணு வருசம் தாங்குனாரா ஒங்கப்பன்..? தான் சொமக்க வேண்டியதை ஒந்தலையில எறக்கி வச்சிட்டு சொகமா போயி சேந்தாச்சு.. பாக்றேன்எல்லாத்தையும் கரையேத்திட்டு நீ எப்போ கரையேறுவேன்னு பாக்றேன்…”

அப்பா இருக்கும்போதும் மாமாவும் அவரும் அத்தனை ஒட்டுறவாக இருந்ததில்லை. விடுமுறைகளில் அம்மாச்சி வீட்டுக்கு தன் இருசக்கரவாகனத்தில் என்னை அழைத்து வரும்போது ரெண்டுநாள்ல வந்துருணும்…” என்று அதட்டலாக சொல்லி விட்டு கிளம்பி விடுவார். அங்கு தங்கியிருக்கும் இரண்டு நாட்களும் எனக்கு சாப்பாடு தடபுடலாக இருக்கும். தோட்டத்தில் சுற்றியலைந்த கோழி, கறிகளாக குழம்பில் மிதக்க அதை மாமாவே அள்ளியள்ளி இலையை நிரப்புவார். மூன்றாம்நாள் காலையில் டிவிஎஸ்50ல் காலை ஊன்றிக்கொண்டு நிற்கும் அப்பாவிடம் கொடுத்தனுப்புவதற்காக ஆட்டுக்காலை வாட்டுவதும் உப்புக்கண்டம் கோப்பதுமாக இருப்பார். ஆனால் அப்பா வரும் நேரத்தில் எங்காவது சென்று விடுவார். அப்பாவுக்கு நிற்கும்போதே கால்கள் நடுக்கும். குடி கொடுத்த பரிசு.

சிதைகளிலிருந்து எழுந்த புகை விண்ணை நோக்கி சுழன்றது. நீ கையளித்த உயிர்களை நாங்கள் திருப்பியளித்து விட்டோம். அதற்கு அக்னியே சாட்சி. கங்கையே சாட்சி. விண், தாம் எடுத்துக் கொள்ளும் உயிர்களை, வாரிசுக்காக பரிதவிக்கும் வேண்டுதல்களில் நிரப்பி விடுவதால்தான் சின்னஞ்சிறு உயிர்கள் பிறந்துக் கொண்டேயிருக்கின்றன போலும். சிதைக்கருகே கொண்டு வரப்பட்ட முதிர்ந்த பெண்ணுடல் குறுகி சிறுத்திருந்தது. எவ்வித உணர்வுமற்ற வெற்று முகம். சாவுக்காக காசியில் காத்திருந்து உயிரை விட்டிருக்க வேண்டும். இன்று கானேறுதல் என்ற ஒன்றில்லாதநிலையில் முதிர்ந்த வயதிலும் மனம் லௌகீகத்துக்குள் நுழைந்து இன்னும் இன்னுமென எதையோ விழைகிறது. தனக்கு கிடைத்தவைகளின் போதாமைகளை ஆராய்கிறது. வெறுப்பும் கசப்பும் ஏக்கமும் கொள்கிறது. வாழ்தலின் இன்பத்தை அனுபவிக்க எண்ணங்கொண்டு மாயையில் ஆழ்கிறது. அதுவெழுப்பும் வெறுமையில் சிக்கி விருப்பமின்றி இறந்து போதல் நிகழ்ந்து விடுகிறது. அது கல்யாண சாவாம். பிறந்து இருந்து வாழ்ந்து நிறைந்து அடங்கும் வழக்கமான நியதியில் வாழ்தலின்பத்தை எது அளிக்கிறது? ‘நிறைந்துஎன்ற இடத்தில் எழும் சிக்கல்கள் லௌகீகத்தால் தீர்த்து வைக்கவியலாது. இங்கு அலையும் கூட்டத்தில் அதை புறந்தள்ளியவர்கள் இருக்கக்கூடும்.

அத்தனை துாரம் கத்தி விட்டு போன அழகேசுமாமா, அப்பாவின் வாரிசுரிமை வேலையை எனக்கு பெற்று தரும் முயற்சியில் தீவிரமாக அலைந்து கொண்டிருந்தார். அப்பா தனக்கு இரண்டாவது திருமணம் நடந்ததை அதிகாரப்பூர்வமாக பதியவில்லை என்பது தெரியவந்தபோது மாமாவின் வேகம் இரண்டு மடங்காகி விட்டது. “இதொண்ணாவது விட்டு வச்சானே ஒங்கப்பன்..“ என்றார் ஆத்திரமாக. என்னை இழுத்துக் கொண்டு ஓடும் அவரை புதிதாக பார்த்தேன். நரைக்கத் தொடங்கும் வயது அவருக்கு. திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இருக்கவில்லை. தனக்கான துணையை ஆதரவை பக்கபலத்தை என்னிடம் தேடிக் கொண்டிருக்கிறாரோ…? அப்பாவின் மீதும் அவர் நண்பர்கள் மீதும் படிந்திருந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் வழியாக எப்படியோ தீர்க்கப்பட்டதும் பணப்பயன்கள் வருவதற்கான நேரம் கனியத்தொடங்கியது. “இந்த பணம் கெடைச்சதைபத்தி ஒங்க வீட்ல மூச்சு வுடாதே…” என்று சொல்லிவிட்டு போனார். அதை வங்கியின் நிலைவைப்பில் செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்தபோது வாசலில் அமர்ந்திருந்த சித்தியிடம் அதை சொல்லி விட்டேன். வங்கியின் நிலைவைப்பு உடைக்கப்பட்டு அந்த பணம் சித்தியின் பெயருக்கு மாற்றப்பட்டதை அறிந்ததும் மாமா பல்லைக்கடித்துக் கொண்டு நீ அந்த பொம்பளைய வச்சிருக்கடா.. என்று கத்தினார்.

சிதைகளுக்கருகே சாமியார்கள் கஞ்சா சிலும்பிகளுடன் குளிர்காய்ந்துக் கொண்டிருந்தனர். உடல்கள் எரிந்துக் கொண்டிருந்தன. உள்ளம் எங்கிருப்பினும் உடல் காலத்திற்குள் வந்தாக வேண்டும். கருத்துகளாக நிற்பவைகள், அனுபவமென்று மாறாதவை, எண்ணமென்று தோன்றாதவை, சொற்களென்று ஆகாதவை அனைத்தும் உடலிலிருந்து வெடித்து சிதறிக் கொண்டிருந்தன. நீர்க்கடன் செலுத்தியவர்கள் அன்னதானம் செய்ய அதை நானும் கைநீட்டிப் பெற்றுக் கொண்டேன். சாமியார்களுக்கு வெல்லம் நிறைந்த பைகளை ஒருவர் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்பாவின் அரசலுவலகத்திலிருந்து என் கல்விச்சான்றிதழ்களை கோரி கடிதம் வந்திருப்பதாக என்னை ரகசியமாக வெளியே அழைத்துச் சென்று சேதி சொன்னார் அழகேசு மாமா. வேலைக்கான உத்தரவை பெற்றுக்கொண்டபோது அவர் மகிழ்ந்திருப்பதை அவரின் உடலசைவுகளே காட்டின. வீட்டுக்கு சென்றபோது அம்மாச்சி நீர்த்துளிர்த்த கண்களோடு நல்லாருப்பாஒங்கம்மா இருந்தா அவ்ளோ சந்தோசப்பட்டுருப்பா…” என்றார். உட்கார்த்தி வைத்து பரிமாறினாள். நான் வீடு திரும்பியபோது சித்தி தட்டு எடுத்து வைத்தாள். சம்பளம் வந்ததும் மாதமாதம் அவளிடம் கொடுத்து விட சொன்னாள். “ஒன் சம்பளத்தை வாங்கி ஒனக்கே பிச்சை போடுறாளாக்கும்…” அம்மாச்சியும் மாமாவும் கோபம் கொண்டனர். ஆனால் பிச்சையெடுக்கும் இடத்திலெல்லாம் நான் இல்லை. வாரிசுரிமையில் கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொண்டு படிபடியாக இன்று அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். வேலைநிமித்தம் அனுப்பிய வடமாநில பயிற்சியில் உடல்நிலை சரியில்லை என்பதாக காரணம் கூறி காசிக்கு வந்தது எனக்கே ஆச்சர்யம்தான். ஆனால் இதேபோல முன்பொரு முறை சென்றிருக்கிறேன். அது நண்பனின் வீட்டுக்கு. அது கேரளத்திலிருந்தது. யானை கொட்டிலுடன் கூடிய பெரிய வீடு. எனக்கு அம்மாச்சியின் வீட்டுத்தொழுவத்தில் கட்டிக்கிடக்கும் பசுவின் நினைவு வந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானையை கண்ட பார்வைக்கு, பசு சிறு கொசுபோல தோன்றியது. மூன்று பாகன்கள் உடனிருந்தனர். உணவை பெரும் உருண்டையாக்கி அதன் வாயினுள் எறிந்த பூஞ்சையான பாகனின் சொல்லுக்கு அது நில்லென்றும் செல்லென்றுமாக கட்டுப்பட்டது. சங்கிலியை வெற்று சடங்கென்பதை அது உணர்ந்திருக்கலாம். அது அன்னமிடுபவருக்கு ஆற்றும் அறம். அல்லது அறிதலின் தருணமொன்று அதற்கு நிகழாமலிருக்கலாம்.



மழை சற்று வலுத்தாலும் யாரும் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. நான் வேகங்கொண்டவனைபோல ஒவ்வொரு சிதையாக சென்று பார்க்கத் தொடங்கினேன். எரிந்து முடித்த பிணமொன்றின் சாம்பல் மீது மழைநீர் இறங்கியதில் அதன் எலும்புகள் புடைத்து நின்றன. பால்தெளிப்பு சடங்கின்போது மாமாவின் எலும்புகளை பொறுக்கி வைத்திருந்தனர். வாரிசற்ற அவரின் சிதைக்கு நான்தான் தீயிட்டிருந்தேன். எனக்கு சட்டென்று அங்கிருந்து கிளம்பி விடும் எண்ணம் ஏற்பட்டது. ஏற்பட்ட கணத்திலேயே அது தீவிரப்பட நான் காலி படகொன்றில் ஏறி பேரம் ஏதுமின்றி அமர்ந்து பயணத்தை தொடங்கினேன்.

கங்கை வெண்ணிறமான உருளைக்கற்களுக்கு மேலே மாலையொளியின் கூசும் ஒளியலைவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தது.

***

 ஜுலை 2020 தமிழினியில் வெளியான சிறுகதை


No comments:

Post a Comment