Search This Blog

Friday, 29 January 2021

தங்கநொடிகள்



வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடு கிழித்தாற் போன்றிருப்பதில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தது சர்வாடா கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளைத் தவிர்த்து சிறு மண்பரப்புகளைக் கூட தாவரங்கள் தவற விடவில்லை. காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. வங்கத்தின் மாரிக்கால மாதமொன்றில் தகரத்தாலான அந்த சிறிய வீட்டின் தாழ்வாத்தில் ஹுக்காவைப் புகைத்தப்படி நின்றிருந்தார் சந்தா. தாழ்வாரமும் உள்ளறையும் கொண்ட அச்சிறுவீடு ஈரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது. சுப்பையா மழையால் தளர்ந்திருந்த பாகல் கொடிக்கு முட்டுக்கொடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தான்.

அதிகாலையிலிருந்தே பிடித்துக்கொண்ட மழை இப்போதுதான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வந்து விடலாம். கணிக்க முடியாது. இங்கு எதைத்தான் கணிக்க முடிகிறது. நாட்டில் என்னென்னவோ புதிதாக நடந்துக் கொண்டிருக்கிறது. வீடு விவசாயம் என்றிருந்தவர்கள் இப்போது போராட்டம் ஊர்வலம் என்று மாறிக் கொண்டிருக்கிறார்கள். சந்தா ஹுக்காவை கூரையின் எரவாணத்தில் சொருகி வைத்துவிட்டு வெளியே வந்தார். சமையல் முடிந்திருந்தது. வேகவைத்த அரிசி சோற்றில் பிசைந்துக் கொள்ள சணல் தளிர்களைக் கீரையாக ஆக்கி வைத்திருந்தார். உறியில் தொங்கிக்கொண்டிருந்த பிரம்புக்கூடையில் அவித்த அல்லிக்கிழங்குகள் மீதம் கிடந்தன. தாழ்வாரத்திலிருந்தவாறு ஏதேனும் தலை தென்படுகிறதா என எட்டிப்பார்த்தார். வயலையொட்டிய பரந்தவெளியில் மண்ணில் பதிந்துக்கிடந்த சிறுசிறு மரத்திண்டுகளில் ஆட்கள் யாரையும் காணவில்லை. யாராவது வந்தால் தேவலாம் என்றிருந்தது. கூடி நாலைந்து நாட்களாகி விட்டது என்பதால் எல்லோருமே மழை தணிவதற்காகதான் காத்துக் கொண்டிருக்க வேண்டும். வந்து விடுவார்கள். இந்தக்கூடலை குட்டி மாநாடு என்று கூறிக் கொள்வார்கள் நக்கலாக. மாநாடு என்றால் கொள்கை ஒன்றாக இருக்க வேண்டுமே என்பார் சந்தா. ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து. 

கல்யாண முருங்கைமரம் மழையில் நனைந்து அபயம் என்பது போல கைகளை விரித்து வானைப் பார்த்தது. சுப்பையா பாகற்காய்களைப் பறித்து தாழ்வாரத்தில் வைத்தான். தரையில் ஊறிக்கிடந்த ஈரத்தை சணல் சாக்கால் ஒற்றி எடுத்தான். பாயும் படுக்கையும் பரண் மீதிருந்தாலும் அதிலும் குளிர் ஏறிக்கிடந்தது. இன்னும் அவனுக்கு குளிர் பழகவில்லை. வீடு வயலோடு ஒட்டிக்கிடப்பதால்தான் இவ்வளவு குளிர்கிறது என்பார் சந்தா. எது எப்படியோ இப்போது இருவருக்கும் மொழி பரிச்சயப்பட்டு வந்திருக்கிறது. 

“சந்தா… யோவ் சந்தா எப்படியிருக்க... மழையில ஊறிப்போயிட்டியா... இல்ல இன்னும் முழுசாதான் இருக்கியா... தான் சொன்னதற்கு தானே சிரித்துக் கொண்டு கான்ஞ் மரத்திண்டில் அமர்ந்துக் கொள்வதைக் கண்டதும் சந்தாவுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. 

“வா வா கான்ஞ்சு... வானம் வெளி வாங்கீடுச்சு. இன்னும் யாரையும் காணாமோன்னு நெனச்சேன்...  நல்லவேளையா வந்துட்டே 

“நல்லவேளை எப்போ வரப்போவுது. எல்லாமே கெட்டவேளைதான். ஒண்ணு கலவரம் போராட்டம்னு கொடிப்புடிக்கிறாங்க. இல்லேன்னா நடமாட முடியாதபடி கைது பண்ணிடுறாங்க. இதுல மழை வேற எல்லாரையும் முடக்கிப் போடுது... தலையில் தொங்க விட்டிருந்த படுதாவைக் கழற்றி ஓரமாக வைத்தார். கை வரை நீண்டிருக்கும் குளிராடை அணிந்திருந்தார். சந்தாவின் சிறுவயதுக் கூட்டாளி. மாடுலாடா கிராமத்தை சேர்ந்தவர். வழுக்கலான சேற்றுப்பாதையென்றாலும் ஊன்றியாவது நடந்து வந்து மாநாட்டில் கலந்துக்கொண்டு வாயார நான்கு வார்த்தை பேசினால்தான் பொழுதுபோவது போலிருக்கும் அவருக்கு.

அடைமழை தொடங்கீட்டா கேக்கவே வேணாம்... என்றபடியே அமர்ந்தார் பேலு. காலு வந்துக்கொண்டிருந்தான். அவன் இதே ஊரைச் சேர்ந்த இளைஞன். சந்தாவின் தம்பி மகன். அவன் தலையைக் கண்டதும். இந்த காந்தியிடம் என்ன இருக்கிறது என்று இளைஞர்கள் மயங்கிக் கெடக்கிறாங்கன்னு தெரியில.. இவரால் நாடு வீணாகிக் கொண்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் போராட்டம், கொந்தளிப்பு. இவரோட பெயர் உலகம் முழுவதும் பரவுவதற்கு நம்ம வீட்டுப் பிள்ளைகளை காவு வாங்கித் தொலையிறாரு..“ என்றார். காலு எதுவும் பேசாமல் அமர்ந்துக் கொண்டான்.  அதுவும் பகத்சிங் சுக்தேவ் ராஜ்குருவின் மரணத்தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு இளைஞர்கள் என்ன சிந்திக்கிறாங்கன்னே தெரியில என்றார் கோபமாக. பையில் இனிப்பு உருண்டைகள் எடுத்து வந்திருந்தார். அதை காலியாக இருந்த மரத்திண்டில் வைத்துவிட்டு சால்வையை உதறி உடலில் அழுத்தமாகச் சுற்றிக்கொண்டார். “மொதல்ல அவல்... மத்ததெல்லாம் அப்றம்தான் என்றபடியேசப்பியாஉறில அவல் இருக்கு... எடுத்துட்டு வர்றியா? என்று உரக்கக் கூவினார் சந்தா. 

சுப்பையாவுக்கு இருபது வயதிருக்கலாம். சிவந்த நிறமும் களையான முகமுமாக இருந்தான். அளவான உயரமும் அதற்கேற்ப பருமனுமாக நல்ல வாலிபக்கட்டான உடல். தோள்வரை அடர்ந்து தொங்கிய தலைமயிரைக் கொண்டையாக்கிச் சுற்றியிருந்தான். அவலை துணிச்சுருளோடு எடுத்துவந்து வைத்தபோது ஆளுக்கொரு பிடி அள்ளிக் கொண்டனர். இயந்திரத்தில் சுற்றிய பதமாக வறுக்கப்பட்ட அவல் மழைக்கு இதமாக இருந்தது. 

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன் சுப்பையா இங்கு வந்தபோதும் இப்படிதான் மழை பெய்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அது சைத்திர மாதம். அன்று சந்தாவுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. மண் பொதபொதப்பில் வயலில் விழுந்துவிட்ட கல்யாண முருங்கையை அப்புறப்படுத்த வேண்டும். மழையில் தளர்ந்திருந்த சணல்தட்டை வேலியை இழுத்துக்கட்ட வேண்டும். கனன்று கொண்டிருந்த அடுப்பில் தாழ்வாரத்தில் கிடந்த நாணல் குச்சிகளை உடைத்து வைத்து ஊதி நெருப்புண்டாக்கினார். அந்த வெதுவெதுப்பில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வெட்டி வைத்த கத்தரிக்காய்களை சட்டியிலிட்டு அடுப்பில் ஏற்றினார். பூனையவரைக்கொடி சாரலில் நனைந்து நடுங்கியது. சட்டியில் வதங்கிக் கொண்டிருந்த கத்தரிக்காயை எடுத்து நசுக்கிப்பார்த்து விட்டு அதில் கழுவி வைத்த மீன் துண்டங்களைச் சேர்த்து உப்பு மிளகாய் தூவி நாலைந்து இலைகளைப் பறித்து சட்டியின் காதைப் பிடித்துக்கொண்டு நன்கு பிரட்டி விட்டபோதுதான் துறையில் யாரோ ஒரு இளைஞன் நீரள்ளிப் பருகிக் கொண்டிருந்ததை பார்த்தார். புதியவன் போலும். யாராக இருந்தால் என்ன..? கோடை மழைக்கு இதம் கிடையாது. அடித்து நகர்த்தி விடும். பொழுது சாயும் நேரம் வேறு. கைகளை வாயோரம் குவித்து இளைஞனை நோக்கி ஓசையெழுப்பி தன்னிடம் வருமாறு சைகை செய்தார். காந்தி தண்டியில் உப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்து மக்களின் உணர்வுகளை நன்றாகத் தூண்டி விட்டுவிட்டார். நாட்டின் எல்லா பகுதிகளுமே கொந்தளித்துக் கிடக்கிறது. இக்கொந்தளிப்பில்தான் இவனும் கிளம்பியிருக்க வேண்டும். ஒரே பார்வையிலேயே அவனை சிநேகிக்கப் போதுமானவற்றை மனம் கற்பித்துக் கொண்டது. 

“நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. அவர் அகிம்சையை விரும்புபவர்...“ என்றான் நட்டு சிடுசிடுப்பாக. அவனுக்கு அவர்கள் வைத்திருந்த பட்டப்பெயரே சிடுமூஞ்சிதான். அது தெரிந்துபோனால் அதற்கும் சீறுவான் என்று சிரித்துக் கொள்வார்கள். நட்டு லுந்தினா கிராமத்தை சேர்ந்தவன். லுந்தினா கிராமத்தை அடுத்து நிலம் அடர்ந்து காடாகி விடும். கேமியான் கூட லுந்தினாவைச் சேர்ந்த ஆள்தான். பகத்சிங்கின் தீவிர பக்தன். இந்துஸ்தான் சோசிலிசக் குடியரசை இந்த பகுதியில் ஒருங்கிணைத்தவன். ஹரிஹர், சமியோன் போன்று நிறைய இளைஞர்கள் அவனுடன் இருந்தனர். காட்டுப்பகுதியில் சந்திப்பு நிகழ்வதாக பேசிக் கொள்வார்கள். ஆயுதங்கள் கூட வைத்திருந்தனர். ஹரிஹர் அதற்கான முழுப்பயிற்சி எடுத்திருந்தானாம். சமியோன் சிறந்த பேச்சுக்காரன். இளைஞர்களைத் திரட்டி பயி்ற்சியில் சேர்த்து விடுவான். இரண்டொரு கொள்ளை வழக்குகள் கூட அவன்மேல் உண்டு என்பார்கள். இப்போது இவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. 

மரத்திண்டுகள் நிரம்பத் தொடங்கியது. கருமேகங்கள் விலகி இலேசாக வெயிலடித்தது ஆறுதலாக இருந்தது. பிரம்பம்படல் மீது கம்பளிகளை விரித்துக் காய வைத்தான் சுப்பையா. செம்பருத்தையும் அரளியும் வெயிலைக் கண்டு சிநேகமாக சிரித்துக் கொண்டன. 

“நட்டு… அவர் அகிம்சாவாதி என்றால் அநியாயமாக பகத்சிங், சுக்தேவ் ராஜ்குருவின் உயிர் போவதை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அவருடைய கொள்கைக்கு எதிரானவர்கள் வாழ்வதையோ புகழ் பெறுவதையோ அவர் விரும்பறதில்ல.. என்றார் மால்ஜி். 

உங்கள் வாதத்துக்கே வருகிறேன். ஒருவேளை காந்திஜியின் பேச்சைக் கேட்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்குமே. இப்போது அவர் உங்களைப் போன்றவர்களால் பழியை அல்லவா சுமந்துக் கொண்டிருக்கிறார்..? நட்டுக்கு துணைக்கு வந்தான் பால்வா. காலு மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தான். 

காந்திக்கு அவருடைய அகிம்சையை கத்தி மீது ஏற்றிப் பார்க்கும் அனுபவம் இது. நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்ற வகையில் அவ்விளைஞர்கள் இப்போது நாயகர்களாகிட்டாங்க. விடுதலை உணர்வும் இளமை வேகமும் கொண்ட இளைஞர்கள் இயல்பாகவே பகத்சிங்கின் பாதையை தேர்ந்தெடுத்து விடலாம். அவர்களை இயல்பிலிருந்து விலக்கி அறத்தின் பாதைக்குள் மனதை திருப்பிவிடும் பெருவேலையை கைக்கொண்டிருக்கிறார் காந்தி. இவர்களின் அர்ப்பணிப்பு சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான அறவழிப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். இனி அவர் முன்னைவிட முனைப்பாக போராட வேண்டியிருக்கும்“ கான்ஞ் பேசும்போதே குளிரால் வார்த்தைகள் நடுங்கின. 

“ஆமா… அவர் போராட்டம்தான் தெரிகிறதே. லண்டனில் போய் தாழ்த்தப்பட்ட ஆளுங்களுக்கு தனித்தொகுதி கொடுக்கக்கூடாதுன்னு சொல்லீட்டு வந்துட்டாரே... 

“பேலு... இதுல ஒனக்கென்ன பிரச்சனை..?“ என்றார் சந்தா. தொடர்ந்து ஆனா துப்பாக்கி, வெடிக்குண்டுன்னு இருக்கற காலத்தில இவர் அறம், அகிம்சைன்னு எதையோ சொல்லி வெட்டியா காலத்தை நகர்த்திட்டு இருக்காரு... காலடியில் ஊறிய நத்தையைக் கெந்தி எடுத்து தூர வீசினார். 

“என்ன பெரிய அகிம்சை..? அந்த மூன்று பேரோட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்ற கருத்தில் பிடிவாதமாக நில்லுங்கன்னு காந்தியை அவரின் காங்கிரஸ் ஆட்கள் கூட வற்புறுத்தினாங்க. ஆனா அவர் எதையும் சட்டை பண்ணல. வாய்ப்பான நிலை கனிந்து வந்தபோதும் அதை வேண்டுமென்றே நழுவ விட்டுட்டாரு.  சிறையிலுள்ள சத்தியாகிரகிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவருக்கு லாகூர் சதிவழக்கு அவசரச்சட்டம் அநீதியாக தெரியலையா? அதன் வழியாக கொடூரமாக தண்டிக்கப்பட்ட அவ்வுயிர்களின் மதிப்பு இவரின் அகிம்சைக்குள் அடங்காதா? பூன்ஜி பேலுவுடன் சேர்ந்துக் கொண்டான். 

சணல் பயிர்கள் குளிர்காற்றில் வளைந்தாடின. மழை வந்துவிட்டால் பூமியின் நிறமே பசுமை என்றாகி விடுகிறது. துறையோரத்தில்  வியாபாரம் களைக்கட்டியிருந்தது. மக்கள் வியாபார படகுகளில் அன்னாசிப்பழம், சேம்பு, பூசணிக்காய், வாழைக்காய், கருப்பட்டி என பண்டங்களை விறுவிறுப்பாக ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தனர். பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் கொய்னா படகுகள் அசைந்து அசைந்து பயணித்தன. படகோட்டிகள் கை அசராமல் துடுப்பு வலித்தனர். நுங்குகள் அடங்கிய பிரம்புக்கூடைகளை படகில் ஆட்கள் பரபரப்பாக ஏற்றிக் கொண்டிருந்தனர். சுப்பையாவுக்கு துறையில் அமர்ந்து இவற்றையெல்லாம் வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். சலித்துப்போகும் அன்றாடங்களை அவன் அதிசயித்துப் பார்ப்பதை சந்தா கவனித்திருக்கிறார். தெற்கிலிருந்து வந்தவனாக இருக்க வேண்டும் என்பது அவர் கணிப்பு. 

என்ன... பூன்ஜி சொன்னதற்கு பதிலையே காணும்..? என்றார் பேலு . 

அவன் சொல்றதும் சரின்னுதான் தோணுது... என்றார் கான்ஞ். 

நான் பதில் சொல்றேன்... காந்திஜிக்கும் வைஸ்ராயுக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தை இரண்டு தனி மனிதர்களுக்கான பேச்சுவார்த்தை அல்ல. நாட்டின் நலனுக்கான உடன்படிக்கை செய்துக்கொள்கிற இடத்தில் தனி மனிதர்களைச் சார்ந்த கோரிக்கைகளை எழுப்புவது நியாயமா..? அல்லது காந்தியால்தான் அப்படிச் செய்ய முடியுமா?” 

நட்டா... என்ன சொல்றே நீ? பகத்சிங்கும் அவர் கூட்டாளிகளும் தனி மனிதர்களா? அவங்க தங்களோட குடும்பப் பிரச்சனைக்காகவா தூக்கிலேறினார்கள்..? சரிஉன் பேச்சுப்படியே வைத்துக் கொள்வோம். பர்டோலியில் வரிக்கொடா இயக்கத்தின் போது விவசாயிகளிடமிருந்து பறித்த நிலங்களைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று இர்வினிடம் உன் காந்தி கோரிக்கை வைத்தாரல்லவா..? அது தனி நபர்கள் சார்ந்த கோரிக்கைதானே? பர்டோலியை சேர்ந்த விவசாயிகள் பம்பாய் மாகாணத்தில் மட்டும்தானே உள்ளனர்? தேசம் முழுவதுக்குமான கோரிக்கையா அது? அவர்களிடம் பறித்த நிலத்தை திரும்பத்தர வேண்டும் என்று கோரியது நியாயமெனில், திரும்பத் தரவே இயலாத உயிரைப் பறிக்காதே என்று கூறுவதுதானே நியாயம்... இது பிரயோசனம் இல்லாத பேச்சுவார்த்தை... என்றார் கான்ஞ். 

சுப்பையாவுக்கு வெயிலைக் கண்டதும் வெளியே உடலை உலர்த்திக் கொள்ள வேண்டுமாய் தோன்றியது. கழியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அறுத்து வைத்த பாகலையும் புடலையையும் சிறு மூட்டையாக்கி கையில் எடுத்துக் கொண்டான். அதை ஊருக்குள்ளிருக்கும் சந்தாவின் தங்கை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பித்து விடுவான். சுப்பையா வந்த புதிதில் பேலு சந்தாவை அழைத்து அறிவுரை சொன்னார். “சந்தா... உனக்கு தனியாக இருக்க இப்போதெல்லாம் விருப்பமிருப்பதில்லை. அதனால்தான் யாரோ ஒருவனை உன்னோடு வைத்துக் கொண்டுள்ளாய்... காலம் கெட்டுக்கிடக்கிறது. இவன் நிச்சயமாக நம் வங்கத்தைச் சேர்ந்தவன் அல்ல…  பலுவின் தகப்பனாரிடம் மகள்களுக்கா பஞ்சம்..? உனக்கு தேவைப்படும் வயதில் வேண்டிய பெண்ணை விவாகம் செய்துக்கோ. உன் தனிமை தொலைஞ்சிடும். அதை விட்டுட்டு வம்பை விலைக்கு வாங்குவானேன்... கூடவே உன் தம்பி மகன் காலுவுக்கு இந்த விஷயத்தில் உன்மீது வருத்தம் வந்துவிடப் போகிறது.. 

ஒருவேளை தனக்கு பெண் துணை தேவைப்படுகிறதாஇருக்காது. பலுவோடு வாழ்ந்ததே போதும் போதுமென்ற நிறைவான வாழ்வுதான். காந்தி கிராமவாசிகளை காங்கிரசுக்குள் கொண்டு வருவதற்கேற்ப அங்கத்தினர் சந்தாதொகையை குறைத்து ஒருகோடி உறுப்பினர்களைச் சேர்க்க முடிவெடுத்திருந்த தருணம் அது. திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயரில் காந்தி நிதி திரட்டியபோது பலு கூட தன் தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்திருந்தாள். அதற்கு பின் வந்த இதே மாதிரியான மாரிக்காலத்தில் தீராத காய்ச்சல் நோயில் விழுந்து இறந்துப் போனாள். அவள் இறந்த பிறகு உலகமே நின்றுபோனதாய் தோன்றியது அவருக்கு. வீடோ அவளுடன் வாழ்ந்த நினைவுகளை மீளமீளக் கொண்டு வந்தது. ஒருகட்டத்தில் தாங்கவியலாது கிளம்பி வயலோடு வந்து விட்டார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது. இப்போது பலு கூட மனதின் ஆழத்தில் ஓடி மறைந்து விட்டிருந்தாள். இன்னொரு துணை என்ற எண்ணமெல்லாம் தோன்றவேயில்லை. சுப்பையாவைக் குறித்து அவருக்கு இதுவரை எந்த புகாரும் இல்லை. தனக்கென வேலைகளை ஒதுக்கிக்கொண்டு பொறுப்பாக நடந்துக் கொள்கிறான். அவருக்கொரு மகன் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பானோ..? 

அவர் நினைவுகளை இழுத்துக்கொண்டு வரும்போது விவாதம் சூடு பறக்க ஓடிக் கொண்டிருந்தது. 

எது பிரயோசனம் இல்லாத பேச்சு வார்த்தை..? காந்தி இர்வின் பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாமல் போயிருந்தால் நாடு இன்னும் நூறு மடங்கு கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் தெரிஞ்சுக்கோங்க.. என்றான் பால்வா. 

என்ன பெரிய கஷ்டம். இப்போது இல்லாத கஷ்டமா? உங்கள் காந்தி அந்நிய துணிக்கடைகள் முன்பும் மதுக்கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்னு உத்தரவு வாங்கிக்கிட்டாருல்ல. அதோடு நிறுத்திக்கட்டும். வேணுமானா கடல்ல கொஞ்சம் உப்பை அள்ளிக் கொள்ள சொல்லு.. ஆனால் இதனாலெல்லாம் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பீட்டு அலையாதீங்க.. முடித்து வைப்பதுபோல பேசினான் மால்ஜி. ஆனாலும் மாநாடு அத்தனை சீக்கிரம் முடிந்து விடாது. பேச்சுகள் உச்சம் கண்டு பின் தணிந்து கனிந்து பெரும்பாலும் சிரிப்போடுதான் கலையும். சில சந்தர்ப்பங்களில் சிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகி போகும். இப்படி பேசுவதற்காகவே வெளி கூட்டங்களுக்கு சென்று தகவல் திரட்டிக் கொள்வதும் உண்டு. 

சணல் வயல்களுக்குள் புகுந்து நீண்ட பாதையில் சுப்பையா நடந்துக் கொண்டிருந்தான். கையிலிருக்கும் கழியால் பாதையில் தட்டுப்பட்ட செத்தைகளையோ பூச்சிகளையோ விலக்கிவிட்டுக் கொண்டான். நெல்வயல்களிலும் சணல் வயல்களிலிருந்து நீர் இறங்கிக் கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் சேறு. அழுகிய செடிகள். நத்தைகள், படிந்து கிடந்த நீர்ப்பாசி என மழையின் கைங்கர்யங்களில் கால்களை புதைத்தும் இழுத்தும் நடந்தான்.  மழைக்காலங்களில் சிலசமயம் ஏரியும் வயலும் ஒன்றாகி வீடுகள் தீவுகளாகி விடுமாம். அக்காட்சியைக் கற்பனை செய்தபோது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் குளிர்தான் பிரச்சனை. மனிதர்கள் வீட்டுக்குள்ளிருந்துக் கொள்ளலாம். விலங்குகள்தான் பாவம் மழையினால் அவஸ்தைப்படும். அதனால்தான் எருமையோ பசுவோ ஒற்றையாக நின்றாலும் அதற்கென கொட்டில்கள் இருக்கின்றன போலும். வாத்துகள் கூட கூண்டுகளில் அடைப்பட்டிருந்தன. கிராமத்தை விட்டு விலகிச்சென்ற பாதை குறுகி தாவரங்களால் அடர்ந்திருந்தது. அதையடுத்திருந்த தனியார் பாக்குத்தோட்டத்தில் வைத்துதான் சினுவை முதன்முதலில் சந்திருந்தான். சினுவுக்கு பதினெட்டு வயதிருக்கலாம். வாளிப்பமான தேகத்தை புடவையால் மூடியிருந்தாள். இவனைக் கண்டதும் இன்னும் இழுத்து மூடிக் கொண்டாள். தன் வெற்றான நெற்றியைச் சுழித்து யார் என்பது போல பார்த்துவிட்டு விறுவிறுவென்று ஆட்கள் இருக்கும் திசை நோக்கி நடந்து மறைந்தபோதுதான் அவனுக்குள் முழுதாய் அமர்ந்துக் கொண்டாள். 

சுப்பையா இருந்திருந்தால் இந்நேரம் இடித்த அவலில் பாலுாற்றி கருப்பட்டி போட்டு நெய் தொட்டு உருண்டைகளாக்கி எடுத்து வைத்திருப்பான். அவர் அவனுக்காக எருமை ஒன்று வாங்கி கட்டியிருந்தார். தீனி வைக்கும் பொறுப்பு அவனுடையது. அதை அவிழ்த்து குளத்தங்கரையில் புல்லிருக்கும் பக்கம் அழைத்துச் செல்வான். அதற்குள் அவர் சாணத்தை அப்புறப்படுத்தி கொட்டிலை துாய்மையாக்கி வைத்திருப்பார். குளத்திலிருந்து நீரள்ளி சமைத்து முடித்த அடுப்பில் ஏற்றி வைத்து விட்டால் அந்த கனப்பிலேயே நீர் சூடாகி விடும். சுடுநீரை எடுத்து ஊற்றி ஆற அமர குளிப்பது அவனுக்கு பிடிக்கும். வெயில் கண்டுவிட்டால் தடியை எடுத்துக்கொண்டு காலாற நடந்துவிட்டு வருவான். 

“வெள்ளையனுக்கு எதிரா போராட எத்தனையோ விஷயம் இருக்கு. இவரு உப்பை எதுக்கு கையில எடுத்தாருன்னு தெரியில… ஆனா ஒண்ணுபீரங்கி துப்பாக்கி, அதிகாரம், ஆள்படைன்னு இருக்கற அரசாங்கத்தை வெறுங்கையில எதிர்த்து நிக்கறதுக்கெல்லாம் ஆன்மபலம் வேணும்.. என்றார் சந்தா. புடலைக்கொடியை மாடு எவ்வி கடித்துவிட முயன்றது. 

வரலாற்றை மறந்துட்டாலே பிரச்சனைதான். உப்பு ஒன்றுமில்லாத சமாச்சாரம் அல்ல. அது பிரிட்டிஷாருக்கு பெரும்பணம் சம்பாதித்துக் கொடுத்த பெருவணிகம். அதனால்தான் சுங்கச்சாவடிகள் அமைத்து உப்புக்கு வரி வசூல் செஞ்சாங்க. சாவடிகளை வேலிகளால் பிணைத்து மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிச்சாங்க. உப்புவேலிகளைத் தாண்டிச் செல்ல கடுமையான நடைமுறைகள் வேறு. சொந்த நிலத்துக்கோ உறவினரை பார்க்கவோ கூட செல்ல முடியாது. ஐந்து நிமிட நேரங்களில் நடக்க வேண்டிய தொலைவை ஐந்து மணிநேரமானலும் கடக்க முடியாது. இந்த கஷ்டங்களையெல்லாம் நாம ஏன் வாய்ச்சிருக்கு? சுதேசிகளான நாம் எல்லாத்தையும் மௌனமாக சுமக்க, விதேசிகள் உலகத்து சுகங்களையெல்லாம் தம் காலடிகளில் கொட்டிக் கொள்கிறார்கள். நம் கடலிலிருந்து வடிக்கப்பட்ட உப்பை நாம் உபயோகிக்கக் கூடாதாம். என்ன நியாயம் இது? இன்னைக்கு அரை நுாற்றாண்டுக்கு முன்னாடி நாம் எத்தனை பெரிய பஞ்சத்தை கடந்து வந்திருக்கிறோம்னு உங்களுக்கு தெரியுமில்லையா..? இந்த பஞ்சம் எப்படி ஏற்பட்டுச்சு? நம் நிலங்கள் விளைச்சலை தரலையா? அல்லது நாம்தான்  உழைக்க மறந்துப்போனோமோ…? இல்லை. துறைமுகங்களை நோக்கி சாலைகளை அமைத்துக் கொண்டு நாம் விளைவித்த உணவு தானியங்களை அவங்க நாடுகளுக்கு திருடிட்டு போனாங்க. நாமோ இங்கு பசியால் இறந்துக் கொண்டிருந்தோம். ஒண்ணு தெரியுமா..? இத்தனை கடுமையான பஞ்சத்திலும் கூட அவங்க உப்புவரியை குறைக்கவில்லை. மகாத்மா உப்பைத் தவிர்த்து வேறு எதை கையிலெடுத்திருந்தாலும் அது அத்தனை வலுவாக இருக்காது.. உணர்ந்துப் பாருங்க.. நட்டா இயல்பான சிடுசிடுப்பில் பேசினான். 

மீண்டுமொருமுறை கிடைத்த வாய்ப்பில் அவளிடமிருந்து கண்களை எடுக்கவே தோன்றவில்லை சுப்பையாவுக்கு. அவளோ அவனுக்கு முதுகைக் காட்டியபடி விறுவிறுவென்று நடந்து போய் கொண்டிருந்தாள். அவளேதான். சற்றே உயரம் குறைந்த அதே வாளிப்பமான உருவம். தளிர் போன்ற நடை. தனக்காகதான் வந்திருப்பாளோ..? முதுகில் விழிகள் வைத்து தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஆம். கவனிக்கிறாள். அவன் படபடப்பாக உணர்ந்தான். அந்த படபடப்பை அனுபவித்துக் கொண்டேயிருக்க வேண்டுமாய் தோன்றியது.  தோன்றியதை செயல்படுத்தும் ஆர்வம் எழுந்தது. அதற்கு இயற்கை கூட ஒத்துழைத்தது போல மழை அத்தனை தீவிரம் காட்டாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தது. 

அவரு நிலப்பிரவுகளுக்கா குந்தகம் செய்றாரு. அவரோட குறியெல்லாம் ஏழைகளோட ஒருவேளை சோத்துல கல்லெறிஞ்சு பார்க்கறதுலதானே இருக்கு.. அப்றம் வீட்டுக்கு நாலு பொம்பளைங்களை மூளியாக்கி உட்கார வைக்கிறது. பிரம்ம சமாஜம் சீர்த்திருத்தம் கொண்டுட்டு வர்லேன்னா இப்பவும் பொம்பளைங்கள நெருப்பில தள்ளிவிட்டு வேடிக்கைப் பாத்திருப்போம் பூன்ஜியின் வார்த்தைகளை சந்தாவும் ஆதரித்தார். பேலு பேஷ்பேஷ்என்றார் உற்சாகமாக. 

பிரம்ம சமாஜம் வெள்ளைக்காரனை எதிர்த்து பெருசா எதும் பண்ணீடல புரிஞ்சுக்கங்க... 

ஏதோ ஒண்ணு. இந்த மூடத்தனத்தையெல்லாம் ஒழிக்குணும்னு ஒங்க காந்தி சொல்லலையே நட்டா என்றார் கான்ஞ். 

அதுக்காக அவரை பழமைவாதின்னு சொல்லிடலாமா.? மதம் பண்பாடு இனம் இவற்றையெல்லாம் தன்னுடையது பிறருடையது என்றெல்லாம் அவர் பிரிச்சு பார்க்கறதில்லை. இந்தியாவை பெரிய சமரச வெளியாக்கி பார்க்கணும்கிறது அவரோட ஆசை... 

பால்வா… அவரே தன்னை சனாதனின்னுதானே சொல்லிக்கிறாருநீ ஏன் வக்காலத்து வாங்கற... 

பேலு அண்ணாசனாதனிங்கிறத நீங்க பழமைவாதம்னு பார்க்கிறீங்க. அவர் அகிம்சை சத்தியம் இதெல்லாத்தையும் உருவாக்கும் விழுமியங்கள் இந்து மதத்தில் இருக்குன்னு நம்புறார்னு நான் நம்பறேன்... 

நல்லா சொன்னே பால்வா. தலைவர் தன் கருத்தோடு தொண்டர்களின் நம்பிக்கையை ஒருங்குப்படுத்துற அற்புதமான தங்கநொடிகள் இவை... நெகிழ்ச்சியாக ஒலித்தது நட்டுவின் குரல். 

இதெல்லாம் காந்தி காந்தின்னு சொல்ற கூட்டத்தோட வறட்டுவாதம். அவர் பழமைவாதி. மதவாதி. அதைதான் பிரம்ம சமாஜம் களையணும்னு நினைத்தது 

பேலு அவர்களே. மதத்துக்காக மனிதனா..? மனிதனுக்காக மதமா..? பிரம்ம சமாஜம் உருவாக்க நினைத்தது நெகிழ்வுகள் இல்லாத நிறுவனப்படுத்தப்பட்ட மதத்தை. ஏன் தெரியமா..? அதுதான் பிரிட்டிஷார் விரும்பியது. உணர்ச்சிப்பூர்வமான மனிதனை நெகிழ்வற்ற எதுவும் வழிநடத்தவியலாதுஅதைப் புரிஞ்சுக்கங்க முதலில்.. 

நட்டா... மதம் என்பது சட்டம் போல நெகிழ்வில்லாம இருக்கணும். நீ இளைஞன். இதையெல்லாம் அறிந்துக்கொள்ளும் வயதும் பக்குவமும் இன்னும் வரல உனக்கு. மதம் நெகிழ்தன்மை கொண்டிருந்தால் காலமாற்றத்தில் அது தன் அடையாளத்தை இழந்து எடுப்பார் கைப்பிள்ளையாகி விடும்.. 

மீண்டும் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தபோது அது எதேச்சையானது என்று சுப்பையா சொல்லிக் கொண்டாலும் பாக்குத்தோப்பையொட்டி அவன் கால்கள் நடந்தது எதிர்ப்பார்ப்போடுதான் என்பதை பிறகு ஒப்புக்கொண்டான். அப்போது அவள் தன் குறுகுறுப்பான கண்களால் அவனை நிமிர்ந்துப் பார்க்கத் தொடங்கியிருந்தாள். இருவரும் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டபோதுதான் அவள் திருமணமானவள் என்பது தெரிந்தது. வினுபாடா கிராமத்தை சேர்ந்த கனுவா என்ற செல்வந்தரின் மகள் அவள். அவர்களின் கொட்டிலில் எருமைகளுக்கும் பசுக்களுக்கும் குறைவேயில்லை. நெசவுத்தறியின் ஓசையின்றி அவர்களால் உறங்க முடியதாம். ஏதோ ஒரு பேச்சில் சந்தா கூட சொல்லியிருந்தார், “கனுவா குடும்பத்துக்கு மேட்டு நிலத்தில இருக்கற பாக்குத்தோட்டம் ஒண்ணு போதும், எப்பவும் பஞ்சமே வராது. கனுவாவோட நான்கு மகன்கள்ல ஒருத்தன் தேசசேவை செய்யப்போயி தடியடி பட்டு இறந்துட்டான். அவரு பொண்ணு கூட விதவையாயிட்டா… என்று. 

சுப்பையா துறையோரமாக நடந்து சென்றான். சைத்ரமாதமென்றால் இங்கு பசுமை மறைந்து வயல்வெளிகள் சூனியமாகக் கிடக்குமாம். விதவைகளின் வாழ்க்கையைப் போல. விதவைப்பெண்கள் ஆயுளுக்கும் வீட்டு வேலைகளில் தம்மை ஆழ்த்திக் கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் வெந்த கீரையை சோற்றிலிட்டு விருந்தென எண்ணி மகிழலாம். மீன்களை பார்த்துக் கொள்ளவே அனுமதி. மனம் முழுவதும் வியாபித்த அவளின் நினைவுகள் நடையை விறுவிறுப்பாக்கின. இந்நேரம் அவள் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பாள். மழை விட்டதும் அவன் கிளம்பி வருவான் என்பதை அவள் அறிந்திருப்பாள். நேற்றைக்கு முந்தின தினம் வானம் வெளுத்து லேசாக வெயில் தலைக்காட்டியது. அப்போதே சென்றிருக்க வேண்டும். ஆனால் வாழைக்காய்களை வியாபாரப்படகில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய வேலை இருந்ததால் வரவியலாமல் போய்விட்டது. அவளை சமாதானப்படுத்த வேண்டும். நடைப்பாதையில் இலவம்பூக்கள் சிதறிக் கிடந்தன. சீத்தா மரங்கள் கனிகளால் தாழ்ந்திருந்தன. பிரம்பம் புதர்களில் குளவிக்கூடுகள் தென்பட்டன. இங்கு வந்த பிறகு பிரம்பம்பழம், பலீசப்பழம், கட்டாரிப்பழம் என உண்ணப் பழகிக் கொண்டாலும் சீத்தாப்பழமே அதிக விருப்பமாக இருந்தது. கனிந்த பழமொன்றை பறித்து எடுத்துக் கொண்டான். அவளோடு சேர்ந்து உண்டால் அது இன்னும் கூடுதல் சுவையாகி விடும். 

உன் பேச்சு உன்னோடு. நான் குறுக்கே வரவில்லை நட்டா. ஆனால் அவர் மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார். மிகவும் கண்டிப்புடன் நடந்துக் கொள்கிறார். நீ கூறுகிறாயே மதத்தில் நெகிழ்வு தன்மையிருக்க வேண்டுமென்று. அது மனிதனிடம் இருக்க வேண்டியதில்லையா? எப்போதும் குறிக்கோள் கொள்கை இலட்சியம் இவைதானா..? இவை மட்டும்தான் மனித வாழ்க்கையா..? இதை தவிர மகிழ்ச்சி இன்பம் இதெல்லாம் அவருக்கு தெரியாதா..? படபடப்பாகக் கேட்டார் கான்ஞ்.

அவள் கணவனை போராட்டம் ஒன்றில் கைது செய்து சிறையெடுத்திருந்தார்களாம். அவன் பிரிட்டிஷார் அடித்த அடியில் உடல்நலம் கெட்டு இறந்து விட்டதாக கூறினாள். சினுவுக்கு வங்கப்பெண்களுக்கே உரிய உருண்டையான முகம். இளமையின் எழில் உடலாக மலர்ந்திருந்ததுமாநிறத்துக்கும் சற்று மேலான நிறம். வாழைமரத்தை உரித்து உள்ளிருந்த தண்டுகளை கொண்டு செய்தனபோல வழவழப்பான கைகள். அதையெடுத்து தன் கையில் வைத்துக் கொண்டபோது எழுந்த சிறு மறுப்பு அவனை மேலும் முன்னேற வைத்தது. அவளை முதன்முதலில் பார்த்தபோது சிவப்புக்கரைப் போட்ட வெள்ளைப்புடவையின் கீழ் அன்னமென நடந்து சென்ற அவள் கால்களை இப்போது அவனால் தயக்கமின்றி காண முடியும். உடலெங்கும் ஓடிய சிலிர்ப்பை மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் தோன்றியது. கண்கள் கட்டுப்பாடை இழந்திருந்தன. உடல்கள் தன்னிலை மறக்க தோதுக்கொண்டன. அவர்கள் தோப்புக்குள் சென்று தங்களை மறைத்துக் கொண்டார்கள் 

ஒவ்வொரு சந்திப்பையும் ஒரே இடத்தில் நிகழ்த்த முடியாது என்பதால் அவர்கள் தங்களுக்கென நாலைந்து இடங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஒன்று தப்பினால் மற்றொன்று. ஆனால் தப்பும் கணங்கள் ஒவ்வொன்றும் தாபத்தால் கனத்திருக்கும். செத்தைகளை மெத்தையாக்கி அணைப்புக்குள் ஆழ்ந்த பிறகு தாபங்கொண்ட நொடிகள் புன்னகையை வரவழைக்கும். நெளிந்த உதடுகள் மீண்டும் தாபத்தோடு ஒட்டிக்கொள்ளும் தங்கநொடிகள் அவைஅதனை எண்ணும்போதே கால்கள் விரைவுக் கொண்டன. பாசியும் நீர்செடிகளும் காடாக வளர்ந்திருந்தன. அடர்ந்த புதர்களுக்கு நடுவேயிருந்த ஒற்றையடிப்பாதையில் வேகமாக நடந்தான். கொடிகளின் புதர்கள் பாதையில் பரவி கால்களில் சிக்கி வேகத்தை குறைத்தது. மருதமரம் கிளை விரித்துப் பரவியிருந்தது. குருகு மரத்தை கடந்ததும் மகிழமரம். அதனடியில் அமர்வதற்கேற்ப வசதி இருந்தது. அதுதான் அவர்களின் முதலாம் இடம். அவள் குருகு மரப்பொந்துகளில் குடியிருக்கும் பருந்துகளின் உதிர்ந்துக் கிடக்கும் இறக்கையால் உடலை தீண்டியது போன்ற கூசி நெகிழ்ந்து அவன் மடியில் சரிந்து விழுவாள். வண்ணாத்திப்பூச்சிகள் சூழ்ந்து குடைப்பிடிக்கும். ஓணான்கள் எட்டிப் பார்த்துவிட்டு ஒளிந்துக் கொள்ளும். பிரம்பம் புதர்களுக்கு பின்னிருந்த அடர்வற்ற வெளியில் அவள் இருந்தேயாக வேண்டும். ஏனெனில் இது அவர்கள் குறித்து வைத்திருந்த ஐந்தாவது இடம். 

மகிழ்ச்சி என்பது நம்மால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதில்தான் இருக்கு. எவ்வளவு பெற்றுக்கொள்ள முடியும்னு யோசிக்கறது சுயநலம். நமக்கு எது முக்கியம் என்ற தெளிவு வரவரைக்கும் நம்மால மகிழ்ச்சியாக இருக்கவும் முடியாது. பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவும் முடியாது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தாராம். தான் குற்றம் செய்ததை அவனும் ஒப்புக் கொண்டான். "நீ திருடுகிறாய் என்று உனக்கே தெரியும், அதற்கு என்ன தண்டனை என்றும் தெரியும், பிறகு ஏன் திருடினாய்?" என்றார். "நான் வாழ வேண்டும்" என்றானாம் அந்த மனிதன். அதில் தீர்மானமும் உறுதியும் இருந்தது. ஏன்..?" என்றாராம் காந்தி. இந்த ஏன் என்பதன் வழியாகத்தான் அவரோட மனம் செயல்படுது. ஏன் என்ற கேள்வியின் துரத்தல் ஓயும்வரைக்கும் அவரும் ஓயப்போவதில்லை. அவரோட இலட்சியம் சுயராஜ்ஜியம். அதில் நாட்டு மக்களுக்கு என்ன பொறுப்பு என்பதை கண்டிப்பின் வழியாதான் உணர வைக்கிறார் 

அவர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றம் அளித்துக் கொள்பவர்கள் அல்ல. அந்த நம்பிக்கைதான் அவனை சாலமரகிளைகளால் கவிழ்ந்திருந்த இருளை அவசர அவசரமாகக் கடக்க வைத்தது. அது அவர்களின் இரண்டாவது இடம். புல்லும் சருகும் மண்ணில் அமிழ்ந்துக்கிடந்தன. ஏதோ ஒரு பறவை ஹும் ஹும் என்று அனத்திக் கொண்டிருந்தது. அவனுடனிருக்கும்போது சினுவின் கிறங்கிய உதடுகள் கூட இப்படிதான் எதையோ அனத்திக் கொண்டிருக்கும். அது அவனை மேலும் போதையேற்றும். சொக்கிக்கிடக்கும் அவளது கண்களின் மீது உதடுகளை அழுத்தப் பதிப்பான். ஒருமுறை தொலைவில் எங்கோ மரமொன்றின் கிளை முறிந்து விழும் ஒலிக்கேட்டு அவள் பயந்து அலறி விட்டாள். “காடு உனக்கு புதிதா..? என்றான் காதருகில் குனிந்து. “இல்லைஇது எனக்கு புதிது. ஒவ்வொன்றும் அச்சம் தருகிறது...  “அப்படியானால் இப்பேரின்பம் அச்சத்திலிருந்துதான் பிறக்கிறதா..? என்றான். அவளுக்கு பதில் சொல்லும் உத்தேசமெல்லாம் இல்லை. பின்னும் சதுப்பில் சொருகி விரயமாகிக் கிடந்த கொய்னா படகின் மறைவுக்குச் சென்றான் அவசரமாக. அது அவர்களின் மூன்றாவது மறைவிடம். தாபத்தை விடுத்து சற்று நிதானத்தோடு பார்த்திருந்தால் அவ்விடத்தின் சதுப்பிற்குள் புதைந்துக்கிடந்த சினுவின் உடலை கவனித்திருப்பான். கூடவே சகதியில் மாட்டிக்கொண்டு அமிழ்ந்து போன பேலுவின் கட்டை செருப்பையும். கிட்டத்தட்ட நாலைந்து மாதங்களாக அவன் இதே தாபத்தோடும் வேகத்தோடும் தான் அவளைத் தேடுகிறான்.

                                Published in Thamizhini, E-Magazine                                                  (December 2021)

***

 

1 comment: