Search This Blog

Monday, 10 August 2020

ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவல் குறித்து.

 

இலக்கியப்படைப்பென்பது வாழ்வை கண் முன்பாக வைப்பதல்ல. அதன் அடிப்படைகளை ஆராய்ந்து அதன் போக்கோடு சென்று திரண்டவைகளை திரட்டி நேர்மையாக முன்னிறுத்துவதே என்பதை சொல்லும் சித்திரமே விஷ்ணுபுரம்.

அரசியல் மற்றும் அதிகார ஆசைக்கொண்டோரின் தந்திரத்தால் உருவாகிறது விஷ்ணுபுரம் என்னும் நகரம். இரும்புதாது கலந்த பாறைகளின் வழியே ஊறி வரும் சோனா ஆற்றின் அக்னி நிறத்தையொத்த அக்னிதத்தன் என்ற வேதபண்டிதன் வடக்கிலிருந்து அங்கு வந்து சேர்கிறான். சித்திரபீடசபை என்ற ஞானசபையில்  அக்னிதத்தன் விவாதம் புரிந்து வென்றதில் அங்கு வைதீகம் ஆட்சியாகிறது. அப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் விஷ்ணுபுரத்தை பொறுத்தவரை மன்னர் என்பவரெல்லாம் இந்திய குடியரசின் ஜனாதிபதியை போன்றவர்தாம். அங்கிருக்கும் சிலையை விஷ்ணுவாக மாற்றி பிரம்மாண்ட கோபுரங்களையும் சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறது வைதீகம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவிலிருந்து தொடங்கி எல்லாமே பிரம்மாண்டம்தான். விஷ்ணுவின் சிலை அறுநுாறு கோல் நீளம் கொண்டு முகவாசல், உந்திவாசல், பாதவாசல் என்று மூன்று வாசல்களை கொண்ட கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்திருக்கிறது. அப்பிரம்மாண்ட கருவறையின் திறக்கப்படும் வாசல்களுக்கேற்ப அங்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பாதவாசல் திறக்கப்பட்டு சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறும்  ஸ்ரீபாத திருவிழா காலம்தான் நாவலின் முதற்பாகம்.

வைதீகர்கள் செழிப்பின் பிரம்மாண்டத்தில் திளைக்க, மறுபுறம் வாழ்வதற்கே போராடும் சாதாரணர்களை கொண்ட ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகமாக விஷ்ணுபுரத்தை வைதீகம் வளர்த்தெடுக்கிறது. அது சிற்பங்களாலும் காவியங்களாலும் நிரம்பியிருக்கிறது. திருவடி, பீதாம்பரம், சங்கர்ஷணன், அவன் மனைவி லட்சுமி, அநிருத்தன், சுதா, பிங்கலன், சோமன், வீரநாராயணர், அவரது பேத்தி சித்திரை, லலிதாங்கி, மாணிக்கம்மா, நரசிங்கபெருமாள், பத்மாட்சி, சாருகேசி, வைஜயந்தி சித்திரை என அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதாபாத்திரங்கள் அதனதன் தன்மைகளோடு அறிமுகமாகி வருகின்றனர். கூடவே, எதையோ கண்டடையும்பொருட்டு திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான மக்களும் வருகின்றனர். சூரியதத்தர் தனது நியாயத்திலும் பிங்கலன் மனித உணர்வுகளிலும், சங்கர்ஷணன் தன் வித்யாகர்வத்திலும் அக்னிதத்தன் தத்துவத்தின் போதத்திலும் ஞானமார்க்கத்தை அடைய முனைகிறார்கள். ஞானம் என்பதை அறியாதவருக்கு விஷ்ணுபுரம்  ஏதுமற்ற ஒன்று. மகன் அநிருத்தனின் இறப்பை சங்கர்ஷணன் உள்ளார்ந்து படிபடியாக உணர்கிறான். தானே அவன் என்று கண்டுக்கொள்ளும் தருணங்களில் அடக்கவியலாத துக்கம் கொள்கிறான். மனைவியின் கண்களை சந்திக்க அச்சம் கொண்டு குற்றவுணர்வோடு அலைகிறான். லட்சுமி மகனை பிங்கலனில் மீட்டெடுக்கிறாள். பிங்கலன் வைதீகத்தில் நம்பிக்கை இழந்து, சாருகேசி என்ற கணிகையிடம் மனமிழந்து போகத்துக்கும் ஞானத்தேடலுக்குமிடையே அலைகழிக்கப்படுகிறான். அவன் தொன்மமாக மூன்றாம்பாகத்தில் வரும்போது அவன் வழிவருபவர்களால்சுலபஞான வழியின் குருவாக அடையாளப்படுகிறான்.  சிற்பக்கலையின் உச்சம் கல்லிருக்கும் தெய்வாம்சத்தை தட்டி எழுப்புவது என்கிறார் சிற்பி ஒருவர். மனிதன் வடிக்கும் கலைவடிவின் மேல்பூச்சே தெய்வீகம் என்கிறார் மற்றொருவர். அவரவர், அவரவர் தேடல்களின் வழியாக ஏதோ ஒன்றை கண்டடைந்துக் கொள்கிறார்கள்.

படிமங்கள், தத்துவங்கள், தர்க்கங்கள், சாஸ்திரங்களை வெகுவாக உள்ளடக்கியது இரண்டாம் பாகம். அஜிதர், அக்னிதத்தரின் வழிவந்தவரான பவதத்தரை வாதத்தில் வெல்ல, விஷ்ணுபுரத்தில் பௌத்தம் ஆட்சியாகிறது. பவத்த்தரின் இறுதி மனநிலை அதன் நெகிழ்தன்மையில் வழுக்கி வழிந்து விடுகிறது. அதை ஏற்கவியலாத வைதீகம் அவரை கொன்று விடுகிறது. அவரின் வழிதோன்றலான சித்தன், அங்கு நடக்கும் விவாதசபையில் தன் சீடனான சிறுவனை (காஸ்யபன்) மடியிலிருத்திக் கொண்டு விவாத அரங்கில் பார்வையாளராக பங்கேற்கிறான். அஜிதன் கிருஷ்ணபட்சி பரீட்சையில் வெல்கிறான். ஆனால் தன் மீது விழுந்த சித்தனின் பரிதாப்பார்வை அவனை தோற்கடிக்கிறது. தலைமை வந்து சேர அதனை ஏற்க விரும்பாது வெளியேற எண்ணுகிறான். அவனிடம் சந்திரகீர்த்தி பவதத்தரின் மரணசேதியை கூறுகிறான். அதை வெகு சாதாரணமாக காதில் வாங்கி கொண்டவன், தனக்கு கொலைக்குறி வைக்கப்பட்டது என்ற சேதியை கேள்வியுறும்போது பதற்றமுறுகிறான். அதனை வெளிக்காட்டாது மறைத்துக் கொண்டாலும் அப்பதற்றம் அஜிதனுக்கு தன்நிலை குறித்த துணுக்குறலை உண்டாக்குகிறது. சந்திரகீர்த்தி, தாந்திரீக பௌத்தர்களின் துணையோடு மகாஅஜிதரை முகமாக கொண்டு ஆளத்தொடங்குகிறார். பிராமணர்கள் முக்கியத்துவம் இழக்கின்றனர். வைதீகம், அங்கு சொல்லென்று இருக்கும்போது மேடும்பள்ளமுமாக இருக்கும் சமூகத்தில் இப்போது நல்மாற்றம் ஏற்படுகிறது.

மகாஅஜிதரை சந்திக்க வரும் நரோபா அவரின் இறுதிக்கட்டத்தில் உடனிருக்க நேரிடுகிறது. அதை சந்திரகீர்த்தியிடம் தெரிவிக்க, அவரோ அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்கிறார். தோலுரிக்கப்பட்ட அதிகாரத்தை வெறுத்து விலகி வெளியேறி விடுகிறார் நரோபா.  புனிதர்கள் என்போர் சாதாரண மக்களுக்குதான் வணங்கத்தக்கவர்கள். அதிகார மையத்தில் புனிதபிம்பங்கள் சுத்தமாக தோலுரிக்கப்பட்டு உண்மை வெளுக்கிறது. பரிசார்கர்கள் உட்பட அணுக்கமானவர்கள் கூட அலட்சியம் காட்டுகின்றனர். உண்மை, நிர்வாணம், தனிமை, வெறுமை இவைதான் நாவலின் மையமும்.  இறுதியில் ஒரு மாபெரும் பிரளயத்துடன்  நாவல் நிறைவடைகிறது.

நாம் அறியாத உலகொன்று அறிமுகப்படுத்தப்படும்போது வார்த்தைகளே காட்சியமைப்புகளை உருவாக்க வேண்டும். விவேரணைகளை தவறவிடுதல் என்பது காட்சிகளை தவற விடுவது போலாகிவிடும். அது ஞானமய உலகு. ஞானமெல்லாம் மற்றவர்க்குதான். அதிகாரம் என்பதே வேறு. அவ்வுலகில் மனிதனின் அத்தனை கீழமை குணங்களும் உண்டு. அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறையாக எந்த குருவுமின்றி மனிதகுலம் அடைந்த “உயர்ஞானம்“ அது. சிற்பக்கலையும் கட்டிடக்கலை குறித்த தகவல்கள் நாவலில் விரவிக்கிடக்கின்றன. போலவே இந்துமத பௌத்தமத தத்துவங்களும். நல்வாய்ப்பாக, கடினமான அல்லது அறிமுகமற்ற சூழலுக்கு நாவலின் மொழி நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. வாசிப்பின்போது எங்காவது எதையாவது தவற விட்டுவிட்டோமா என்று புரியாது திகைத்து நிற்கும் இடங்களுண்டு. ஆனால் அவற்றுக்கான விளக்கம் வேறு ஒரு அத்தியாயத்திலோ பாகத்திலோ அளிக்கப்பட்டு விடுகிறது. கவனமளித்து வாசிக்கும்போது நாவல் முழுமையான பிரம்மாண்டமான நல்லதொரு திரைப்படம் பார்த்ததுபோன்ற அனுபவம் அளிக்கிறது. அலையவிடும் எண்ணப்போக்கு கொண்டு அணுகும்போது விரிந்த கரத்திலிருந்து வழியும் நெய்யென வழிந்தோடி விடுகிறது.

மொத்தத்தில், விஷ்ணுபுரம் தமிழில் மிக முக்கியமான சாதனை, அதை வெண்முரசில் அவரே கடந்து விட்டார் எனினும்.

***

 

 

No comments:

Post a Comment